Wednesday, April 26, 2017

53. பிரம்மநந்தீஸ்வரர் - சோழர்கால ஆலயம்



தமிழர் வரலாற்றில் புகழ் மிக்க காலகட்டமாகத் திகழ்வது சோழர்காலமாகும். முற்காலச் சோழர்கள் என்று எடுத்துக் கொண்டால், சோழ மன்னன் கரிகால்வளவன் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது எனலாம். அதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜயாலய சோழனின் எழுச்சி கி.பி.850 தொடங்கியது முதல், சோழ சாம்ராஜ்ஜியத்தின் புதியதொரு வீச்சுடன் கூடிய ஆட்சி தொடங்கியது. அவனை அடுத்து ஆண்ட பராந்தகசோழன் முதல் படிப்படியாக  சோழர் ஆட்சி என்பது விரிவடைந்து கொண்டே வந்தது.

பிற்காலச் சோழர்களில் புகழ்மிக்கவர்களாகத் திகழ்பவர்கள் முதலாம் ராஜராஜன், அவரது மகனான ராஜேந்திர சோழன், அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தைக் குறிப்பிடலாம். இக்காலகட்டங்களில் தமிழக ஆட்சி முறை உயர்ந்த ஆட்சித்தன்மையுடன் திகழ்ந்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழர்கால ஆய்வுக்கு மிக முக்கிய நூற்களாக இன்றும் விளங்குகின்ற நூல்களை வழங்கிய  தி.வை.சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்களது நூல்கள் இன்றும் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படும் நூல்களாகத் திகழ்கின்றன.  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்து விட்டு ராஜராஜனின் மேல் மையல் கொண்டு வியந்தவர்கள்,  இந்தச் சோழர்கால ஆய்வு நூற்களையும் படிக்கும் போது சோழர் வரலாற்றினையும் அதன் படிமங்களாக இன்றும் நமக்குக் கிடைக்கும் கட்டிடங்களையும் கல்வெட்டுக்குக்களையும் அறிந்து கொள்ள இந்த வாசிப்பு உதவும்.

சோழர்கள் காலத்தில்  நாட்டின் ஆட்சிமுறையில் சீர்மை ஏற்பட்டது. கோயில் கட்டிடக் கலை வளம் பெற்றது. உள்ளூர் ஆட்சி முறை சீர்படுத்தப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் சாலைகள் சீராக உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், சமயம் எனப் பல துறை வளர்ச்சியை இக்காலகட்டத்தில் தமிழகம் அனுபவித்தது எனலாம்.

சோழர்கள் மட்டுமன்றி, பாண்டியர்கள் பற்றிய வரலாற்றினையும் பல்லவர்கள பற்றிய வரலாற்றையும் அதன் பின்னர் ஆட்சி செய்த நாயக்கர்கள் பற்றியும் நாம்  கோயிற்கல்வெட்டுக்களிலிருந்துதான் கண்டறிகின்றோம். பெருமளவில் இந்திய தொல்லியல் துறையினால் கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டு படியெடுப்பு, அவற்றின் பதிப்பு ஆகியவை, கோயில் கற்சுவற்றில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ச்சியாளர்கள் பார்த்து வாசித்து அதனை வெளிப்படுத்த உதவியது. அப்படி ஆய்வாளர்களால் படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட கல்வெட்டு படிமங்கள் இன்று நமக்கு ஆய்வுக்கு கிடைக்கின்ற அரிய சான்றுகளாக இருக்கின்றன. நூற்களில் நாம் காண்கின்ற கல்வெட்டுக்கள் கூட கடந்த சில ஆண்டுகளில் ஆலயப்புணரமைப்பு, சாலை புணரமைப்பு என்ற பெயர்களில் நாசம் செய்யப்பட்டு இல்லாமல் போய்விட்டன என்பது வேதனையே.

சோழ மன்னன் ராஜராஜன் அரியணை ஏறியது முதல் சோழர்களின் பொற்காலம் என்று தான் சொல்லலாம். அக்காலகட்டத்தில் பல கற்றளிகள் உருவாக்கப்பட்டன. செங்கற்களால் இதற்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்கள் பலவற்றைக் கற்றளியாக மாற்றும் பணியை ராஜராஜனின் சிற்றன்னையார் செம்பியன் மாதேவியார் மிகச் சிறப்புடன் செய்து முடித்தார். இவரது கோயில் திருப்பணிகள் எண்ணற்றவை. இவர் சோழ மன்னராக சில காலம் பதவி வகித்த கண்டராதித்த சோழனின் மனைவியாவார். மிகுந்த சிவபக்தியுடன் திகழ்ந்தவர் செம்பியன் மாதேவியார். கி.பி.1001 வரை வாழ்ந்த இவர் பல சிவன் கோயில்களைப் புணரமைத்ததோடு மேலும் சில கோயில்களையும்  கட்டினார் என்பதை கல்வெட்டுக்கள் வழி அறிகின்றோம்.

இந்தச் செம்பியன் மாதேவியாரின் பள்ளிப் படை கோயில் கும்பகோணத்தில் இருப்பதை அறிந்து அங்குச் சென்று அதனைப் பற்றிய நேரடித் தகவல்களைப் பதியவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. பள்ளிப்படை கோயில் என்றால் என்ன என்ற எண்ணம் சிலருக்கு எழலாம். அரச குலத்தவர் இறந்த பின்னர் அவரது உடலை கிரியைகள் சில செய்து உட்கார்ந்த  நிலையில் அவரது உடலை மண்ணில் வைத்துப்  புதைத்து பின் அந்தச் சமாதி மேல் ஒரு சிவலிங்கத்தை வைத்து வழிபடும் வகையில் செய்திருப்பர்.  இதுவே பள்ளிப்படை கோயில் என அழைக்கப்படுவது.

ஆக, இந்தப்பள்ளிப்படைக் கோயிலின் பதிவையும்  2013ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் நான் மேற்கொண்ட சோழர்கால கோயில்கள் ஆய்வின் போது செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டிருந்தேன்.  என்னுடன் தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து கொள்ள, நாங்கள் செம்பியன் மாதேவி பள்ளிப் படை கோயிலைத் தேடிக்கொண்டு கும்பகோணத்தின் சாலைகளில் சென்றோம்.

காடுகளுக்குள்ளும், சிற்றூர்களிலும் தேடிக் கொண்டு எங்களை அழைத்து வந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இப்பள்ளிப் படைக் கோயிலைக் காண முடியாத நிலையில் ஒரு சாலையின் மூலையில் இரண்டு மோட்டார் வண்டிகளை நிறுத்தி விட்டு 4 பேர் நின்றிருக்க, அவர்களை விசாரித்தோம். அவர்களும் வாருங்கள் அழைத்துப் போகிறோம், என்று சொல்லி ஏறக்குறைய 500 மீட்டர் தூரம் மரங்களுக்கு இடையே நடந்து  ஒரு பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று ஒரு கோயிலைக் காட்டினர்.

அது செம்பியன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் அல்ல. மாறாக கற்றளியாக மாற்றப்படாத ஒரு செங்கற்றளி கோயில்.

10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் அது என்பதும் அங்கிருந்த ராஜராஜனின் கல்வெட்டுப் பகுதி பாறையும் இக்கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள உடன் எங்களுக்கு உதவியது. கோயிலைச் சுற்றி அருமையான 10ம், 11ம் நூற்றாண்டு நாகக்கண்ணி, லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய தெய்வ வடிவங்களின் சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர், அதாவது சிவலிங்க வடிவம் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். நாங்கள் சென்ற சமயத்தில்  புணரமைப்பு பணிகள் ஏதும் நடைபெற வில்லை. ஆனால் கோயிலைப் பார்த்துக் கொண்டு இரண்டு வயதான மனிதர்கள் அருகில் சில பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டுச்சிறுமி நான் வீடியோ கருவி கொண்டு பதிவாக்கம் செய்து கொண்டிருப்பதை என் கூடவே வந்து நின்று பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். இந்தக் கோயிலைப்பற்றிய பதிவினை அதே ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையில் வெளியீடு செய்தோம்.  அப்பதிவினை இங்கே காணலாம். http://video-thf.blogspot.de/2013/12/2014_7.html

இப்படி ஆங்காங்கே தமிழகத்தின் பல பகுதிகளில் கவனிப்பற்று கிடக்கும் கலைப்பொக்கிஷங்கள் பல.

அழகான கிராமப்புற சூழலில் காய்கறி தோட்டங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. விரைவாக பராமரிப்பும் பாதுகாப்பும் புணரமைப்பும் தேவைப்படும் ஒரு கோயில் இது. தமிழக தொல்லியல் துறை அல்லது தமிழக பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களின் பாதுகாப்பு உடன் தேவைப்படும் ஒரு ஆலயம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை.

Wednesday, April 12, 2017

52. தன்னிகரற்ற தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார்



தனிநாயகம் அடிகளார் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர். உலக அரங்கில் தமிழுக்கு இடம் பெற்றுத் தந்த ஒப்பற்ற தமிழ்த் தொண்டர் இவர். 20ம் நூற்றாண்டில் இவரைப் போல உலகளாவிய தமிழ்ப்பணி புரிந்தவர் வேறொருவருமில்லை எனத் துணிவுடன் கூறலாம்.

இத்தகைய பெரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞரை தமிழுலகம் எளிதாக மறந்து வருவதைக் காண்கின்றோம். தனிநாயகம் என்றாலே உலகளாவிய தமிழ் மாநாடுகள் தாம் நம் மனதில் நிழலாடுகின்றன.

ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் ஆய்ந்தறிந்து தமிழில் முதன் முதலாக வெளிவந்த கார்திலா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற அரியத் தமிழ் நூற்களைத் தமிழுலகத்துத் தந்தவர் அவர்.

இத்தகைய சிறப்பு மிக்க தனிநாயக அடிகளாரின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2000 பக்கங்களில் வெளிக்கொணர்ந்த வரலாற்றுப் பெருமை அருட்தந்தை அமுதன் அடிகளுக்கு உண்டு.

அமுதன் அடிகளை முதன் முதலில் 2015ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 9வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் தான் நான் சந்தித்தேன். பிரான்சில் வசிக்கும் நண்பர் திரு.சாம் விஜய் எனக்கு அமுதன் அடிகளை அறிமுகப்படுத்தி வைத்து, தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்து வருபவர் இவர் என்றும் அவர் பெயராலேயே ஒரு கல்லூரியை அமைத்து வருபவர் என்றும் விவரித்தார். அன்று அந்த நிகழ்வில் என்னால் அமுதன் அடிகளாருடன் விரிவாக நேரம் ஒதுக்கி உரையாடி தனிநாயகம் அடிகள் பற்றி பேச வாய்ப்பு அமையவில்லை. ஆயினும் தமிழகம் செல்லும் போது அவரை நேரில் சந்தித்து தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு ஆற்றிய தனிநாயகம் அடிகள் பற்றிய வரலாற்றுப் பதிவு ஒன்றினைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகுந்தது.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தின் திருச்சி பகுதியில் இரண்டு நாட்களை ஒதுக்கி அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். திருச்சி தூயவளனார் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் திரு.சூசை அவர்கள் எனக்கு இந்தப்பணியில் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறக்க இயலாது. இந்த வரலாற்றுப் பதிவு முயற்சியில் அமுதன் அடிகளாரை நேரில் சந்தித்து உரையாடி தனிநாயகம் அடிகளாரின் சிறப்புக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திரு.சூசை மற்றும் முனைவர்.வீரமணி நான் மூவருமாக மதிய வேளையில் அமுதன் அடிகளார் நடத்தி வரும் தனி நாயகம் அடிகளார் கல்லூரிக்குச் சென்று அங்கு அவர் அளித்த விரிவான பேட்டியைப் பதிவு செய்தோம். அது கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவாக வெளியீடு கண்டது.

தனிநாயகம் அடிகளார் யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவர் 2.8.1913ம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சேவியர் நிக்கொலஸ் என்பதாகும். சேவியர் இறைப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பெற்றோரின் விருப்பம் இருந்தது. ஆனால் சேவியருக்கு அத்துறையில் நாட்டம் ஏற்படவில்லை. தனது பள்ளி இறுதி ஆண்டில் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு என்னும் நூலை தன் பதினைந்தாம் வயதில் படித்ததால் அவருக்குச் சமைய சேவையிலும் கல்விச்சேவையிலும் நாட்டம் ஏற்பட்டது என அவரே குறிப்பிடுகின்றார்.

இளமையில் உயர்நிலைப்பள்ளியில் அவர் தமிழ் மொழியில் பயின்றாலும் அவருக்கு நாட்டம் ஆங்கில மொழியின் பால் அதிகமாக இருந்தது. அதற்காக அவர் அதிக முயற்சிகள் மேற்கொண்டு ஆங்கிலம் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். கொழும்பு புனித பெர்நார்து கல்லூரியில் மெய்யியற் கல்வியைப் படித்தார். 1934ம் ஆண்டு இவர் ஐரோப்பாவில் உள்ள ரோம் நகரின் உர்பன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து அங்குக் கல்வி கற்கச் சென்றார். அங்கு சமயக் கல்வி கற்ற அவர் ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம் ஆகிய மொழிகளையும் பயின்றார்.

தமிழகம் வந்த சேவியர் நெல்லை மாவட்டத்தின் வடக்கன்குளம் எனும் ஊரில் உள்ள புனித தெரசாள் உயர்நிலைப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக 1941ம் ஆண்டில் பதவி ஏற்றுக் கொண்டார். அங்கு ஒரு பண்டிதரிடம் தமிழை நன்கு கற்றுக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில் தனது பெயரை தனிநாயகம் அடிகள் என மாற்றிக் கொண்டார். பின்னர் 1945ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வினைத்தொடங்கினார். 1948ம் ஆண்டில் தூத்துக்குடியில் இவர் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். தமது நூல்களான தேம்பாவணி ஆராய்ச்சி, திருக்காவலூர்க் கோவில், இயேசுநாதர், பத்துப்பாட்டு ஆங்கில மொழி பெயர்ப்பு, திராவிடர் வரலாறு ஆகிய தனது நூல்களை இந்த அமைப்பின் வழி வெளியிட்டார்.

1949 முதல் இவரது உலகளாவிய பயணங்கள் தொடங்கின. அன்றைய மலேயா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பனாமா, எக்குவாடோர், பெரு, சிலி, அர்ஜெண்டீனா, உருகுவே, பிரேசில், மெக்சிக்கோ, ட்ரினிடாட், ஜமைக்கா, மார்த்தினீக், ஆப்பிரிக்க நாடுகள், இத்தாலி, பாலஸ்தீனம், எகிப்து என தொடர்ச்சியாகப் பல நாடுகளுக்கு இவர் பயணம் செய்தார். அங்கெல்லாம் தான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் கலை, பண்பாடு, வரலாறு பற்றியும் உரையாற்றினார். அமெரிக்காவில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார் என்பதை அறியும் போது அவரது ஆக்கமும் ஊக்கமும் வியப்பினை நமக்களிக்கின்றது.

தாய்லாந்துக்குச் சென்றிருந்த அடிகளார் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். அங்கு முடிசூட்டு விழாவில் இடம்பெற்ற ஒரு பாடல் தமிழில் அமைந்த திருவெம்பாவை தான் என்பதை அறிந்து அதனை அரச குருவிடம் குறிப்பிட்டார் அடிகளார். தமிழ் இன்றளவும் அரச சம்பிரதாயங்களில் இடம்பெறுவதை நோக்கும் போது தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள நீண்ட நெடிய உறவினை ஆராய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது போலவே அடிகளாருக்கும் தோன்றியது. பல்லவர்கால, சோழர்கால சிற்பங்களும் கட்டட அமைப்புக்களும் தாய்லாந்தில் பரவி இருப்பதைத் தமது தேடலில் உணர்ந்தார். இதே போல கம்போடியா சென்று அங்கு அங்கோர்வாட் கோயிலை ஆராய்ச்சி செய்து தனது கருத்துக்களை எழுதினார் அடிகளார்.

தனிநாயகம் அடிகளாரின் பயணங்கள் தொடர்ந்தன. அவரது தேடலும் தொடர்ந்தது.

உலகின் பல நாடுகளில் பணியாற்றும் பல தமிழறிஞர்களை ஒன்றிணைக்க வேண்டும், ஆராய்ச்சிகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என அவர் எண்ணினார். 1952ம் ஆண்டில் Tamil culture என்ற ஒரு இதழை அவர் தொடங்கினார்.

1964ம் ஆண்டு இந்தியாவில் டில்லி நகரில் நடைபெற்ற கீழைத்தேச அறிஞர்களின் மாநாட்டின் போது உலகத் தமிழ்ராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவில் முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை ஒன்று கூட்டும் முயற்சியில் தனிநாயகம் அடிகளார் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கு அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாண்புமிகு துன் வி.தி.சம்பந்தன் அவர்கள் மாநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடிகளார் துணை தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள, திரு. வி.செல்வநாயகம் பொதுச் செயலாளராக நியமனம் பெற்றார்.

அடிகளார், டான்ஸ்ரீ.மாணிக்கவாசகம், திரு.வி.செல்வநாயகம் ஆகியோர் பெருமுயற்சியால் மாநாட்டுக்கான செலவுத்தொகை திரட்டப்பட்டது. பலரது ஒத்துழைப்புடன் இதுவரை வரலாறு காணாத மாநாடு மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 முதல் 23ம் தேதி வரை சிறப்புடன் நடைபெற்றது. 132 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உலகின் 21 நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றிய அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் தனிநாயகம் அடிகளாரின் பன்மொழிப்புலமையையும், அவரது தலைமைப்பண்பையும் பாராட்டிப் பேசியதோடு மலேசியாவில் தமிழ் சிறப்புற வளர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டியும், தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் தமது உரையில் அன்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்த மாநாடு முடிந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் ஈடுபட்டு அதனையும் சிறப்புடன் செய்து முடித்தனர் மாநாட்டுச் செயலவை குழுவினர் . இன்று வரை தமிழுக்காக அகில உலக அளவில் நடைபெற்ற மிகச் சிறந்த மாநாடு என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாக இது கருதப்படுகின்றது என்பது தனிநாயகம் அடிகளாரின் முயற்சிக்கு ஒரு மணிமகுடம் அல்லவா?

தனிநாயகம் அடிகளாரின் தொண்டு எனச் சிறப்பித்துச் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன. அதில் மிகச் சிறப்பானதாக நான் கருதுவது ஐரோப்பிய நாடுகளுக்கானத் தனது பயணங்களில் அங்குள்ள தமிழ் நூல்களையெல்லாம் தேடிச்சென்று பார்த்து அவற்றைப் பற்றிய குறிப்புக்களை எழுதி தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அவர் அளித்தமையே எனலாம்.

பாரிஸ் தேசிய நூலகத்தில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேலான தமிழ் நூற்களைத் தாம் பார்த்ததாகவும், அவற்றுள் சில இந்தியாவில் கூட கிடைக்காதவை என்றும் அடிகளார் தமது குறிப்புக்களில் தந்துள்ளார். வாட்டிக்கன் நூலகத்தில் Flos Sanctorum என்ற பெயர் கொண்ட திருத்தொண்டர் திருமலர் என்ற நூலை இவர் கண்டெடுத்தார். அதுபோலவே கி.பி.17ம் நூற்றாண்டில் அந்தாம் தொப்ரோயென்சா அடிகளார் தொகுத்த தமிழ் போர்த்துக்கீசிய அகராதியையும் அடிகளார் இதே நூலகத்தில் கண்டெடுத்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்த நூலை அடிகளார் மீண்டும் பதிப்பித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துகலுக்கான தனது பயணத்தின் போது லிஸ்பன் நகர நூலகத்தில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 15ம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளாரால் எழுதப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளையும், 1554ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கார்திலா என்ற நூலையும் அவர் கண்டார். தனி நாயகம் அடிகளாரின் முயற்சிகள் இல்லாவிட்டால் இந்த செய்திகளைத் தமிழ் உலகம் அறிந்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்வியே!

இப்படிப் பல வகையில் தமிழுக்குத் தொண்டாற்றிய தனி நாயகம் அடிகளாரைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கின்றோமா என்பது ஐயமே.

இவரை தமிழுலகம் போற்றிப்புகழ வேண்டாமா?

தமிழ்ப்பாட நூல்களில் இவரைப்பற்றிய குறிப்புக்களை இணைக்க வேண்டாமா?

அறிஞர் பெருமக்கள் இவரது தமிழ்த்தொண்டு பற்றி இக்கால இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது வேண்டாமா?

அவர் விட்டுச் சென்ற பணிகளைத்தான் தொடர வேண்டாமா?

இப்படிப் பல கேள்விகள் நம் முன்னே நிற்கின்றன. இதற்கு ஒரு ஆரம்பமாக அமுதன் அடிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருக்கும் பல வரலாற்று விபரங்கள் அடங்கிய ஒரு மணி நேர விழியப் பதிவை தமிழ் அன்பர்கள் பார்த்து கேட்டுப் பயனுற வேண்டும் என்பதே எமது அவா. இந்தப் பதிவு https://www.youtube.com/watch?v=h2LIJmysyNo&feature=youtu.be என்ற வலைப்பக்கத்தில் உள்ளது. கேட்டுப் பார்த்து பயன் பெறுவதோடு தனி நாயகம் அடிகளாரின் தமிழ்த்தொண்டினை நாமும் தொடர்வோமே!

Wednesday, April 5, 2017

51. பேராசிரியர்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி



19ம் நூற்றாண்டு தொடங்கி தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வரும் முயற்சிகள், பல தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய முயற்சியில் தமிழகத்தின் தமிழ் அறிஞர்களும், தமிழகத்தில் காலணித்துவ ஆட்சியின் போது பணியாற்றிய ஆங்கிலேய அறிஞர்களில் சிலரும், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தமிழறிஞர்களும் ஈடுபட்டனர். அத்தகைய பதிப்பாசிரியர்கள் வரிசையில் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, எல்லிஸ் (F.W.Ellis), உ.வே.சாமிநாதையர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, அருட்பிரகாச வள்ளலார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோருடன், பேராசிரியர்.வையாபுரிப்பிள்ளை அவர்களும் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர். 

ஓலைச்சுவடி வடிவில் இருக்கும் ஒரு நூலை அச்சு வடிவில் பதிப்பிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஓலைச்சுவடி நூல்கள் வழி வழியாகப் பலரால் படியெடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் புதிதாகப் எழுதப்படுபவை. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால், பனை ஓலையில் தயாரிக்கப்படும் சுவடி நூல்கள் நீண்ட காலம் இருப்பது சாத்தியமல்ல. அதிக வெப்பமான புறச் சூழல், தூசிகள் படிதல், போன்றவை ஓலைச்சுவடிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதோடு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி பாதுகாக்கப்பட்டும் பல ஓலைச்சுவடிகளைப் புழுக்கள் ஓட்டையிட்டு துளைத்து நாசம் செய்துவிடுவதும் பெரும்பாலும் நடப்பதுதான். இதனால் தக்க காலத்திற்குப் பின்னர், அந்தச் சுவடியை வைத்திருப்போர், சுவடி எழுதத்தெரிந்திருந்தால் தாமே அதனைப் பார்த்து வரிக்கு வரி அதனைப் படியெடுத்து மீண்டும் புது சுவடி நூலில் எழுதி வைத்து விடுவர். அல்லது சுவடி வாசிக்கவும் எழுத்தாணி கொண்டு எழுதவும் தெரிந்தவரைக் கொண்டு சுவடி நூலைப் படி எடுக்கச் செய்வர். இந்த வகையில் தான் பல நூற்றாண்டுகளாக நூல்கள் நமக்குப் பாதுகாக்கப்பட்டு கிடைத்தன. ஆயினும் அப்படிப் படியெடுக்கும் போது நூல்களை எழுதுவோர் அதில் தெரிந்தோ தெரியாமலோ பல மாற்றங்களைச் செய்திருக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. ஆக ஓலைச்சுவடி நூலை அச்சுப்பதிப்பாக்கம் செய்ய முனையும் ஒவ்வொருவருக்கும் பாடபேத ஆராய்ச்சி என்பதுதான் மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும். 

ஒரே தலைப்பிலான நூலாக இருந்தாலும், அது பலரிடம் இருக்கும் பட்சத்தில் அவற்றையெல்லாம் பெற்று ஒவ்வொரு சுவடியையும் வாசித்து ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்வாறு மாறுபடுகின்றது என அறிந்து அதில் எது சரியானது, எது தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது, என அறிந்து எழுதுவது தான் அச்சுப்பதிப்பில் முக்கியப் பணியாக அமைவது. பதிப்புப்பணியில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் எல்லோருமே இந்தச் சிரமத்தை அனுபவித்துத்தான் சுவடி நூற்களை அச்சுப்பதிப்பாக்கம் செய்தனர். அந்த வகையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் ஒருவர். 

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அங்குச் சிக்க நாகையன் கிராமத்தில் சரவணப் பெருமாள் பிள்ளை என்பாருக்கும் பாப்பம்மாள் என்பாருக்கும் 12.10.1891ம் ஆண்டில் பிறந்தார். பள்ளிக் கல்வி முடித்து, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படித்து பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ படித்தார். பின்னர் திருவனந்தபுரம் மகாராஜா சட்டக் கல்லூரியில் பி.எல் படிப்பை முடித்து திருவனந்தபுரத்திலேயே உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சட்டம் பயின்று தொழிலாற்றினாலும் அவரது ஈடுபாடு தமிழ் மொழி சார்ந்ததாகவே இருந்தது. 

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேரகராதித் துறையில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க அங்குப் பதிப்பாசிரியராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவே அகராதி தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட அவருக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். அகராதி உருவாக்கப்பணியில் இருந்த சமயத்தில் அகராதிக்கு உறுதுணையாக இருந்த நிகண்டு நூல்கள், மற்றும் இதுவரை வெளிவராத சுவடி நூல்கள் எனத் தேடி அவற்றை ஆய்வு செய்து பதிப்புக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். இக்காலத்தில் இருபது நூல்கள் திரு.வையாபுரிப்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 

அகராதிப்பணி முடிவுற்ற பின்னர் திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழக தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பத்து ஆண்டுகள் இங்கே பணியாற்றி பின் பணி ஓய்வு பெற்றார். இவரது அகராதிப் பணியைப் பாராட்டி 1938ம் ஆண்டில் ராவ்சாகிப் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

பணி ஓய்வுக்குப் பின்னரும் இவரது பதிப்புப்பணிகளும் தமிழாராய்ச்சிப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அவர் திருவனந்தபுரம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. 

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மு.இராகவையங்கார் 1951ல் பதவி ஓய்வு பெற்ற பின் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் திரு.வையாபுரிப்பிள்ளை என இவரைப் பலகலைக்கழகம் அழைத்தது. மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்து சேவையாற்றினார். அங்கிருந்த போதும் தொய்வின்றி தமது நூல் பதிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் திரு.வையாபுரிப்பிள்ளை. 

திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் ஓலைச்சுவடிகளைத் தேடி, பாடபேதம் ஆய்ந்து, அச்சு வடிவில் பதிப்பித்துள்ள நூல்களின் பட்டியல். 

1.மனோண்மணியம், 1922. 
2.துகில்விடு தூது, 1929. 
3.நாமதீப நிகண்டு, 1930. 
4.அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931. 
5.களவியற்காரிகை, 1931. 
6.கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932. 
7.குருகூர் பள்ளு, 1932. 
8.திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932. 
9.தினகர வெண்பா, 1932. 
10.நெல்விடு தூது, 1933. 
11.தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்்பூரணம்), 1933. 
12.திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933. 
13.திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933. 
14.கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933. 
15.பூகோள விலாசம், 1933. 
16.திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933. 
17.மூப்பொந்தொட்டி உலா, 1934. 
18.பொதிகை நிகண்டு, 1934. 
19.இராஜராஜதேவர் உலா, 1934. 
20.தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934. 
21.இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934. 
22.மதுரைக் கோவை, 1934. 
23.தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936. 
24.புறத்திரட்டு, 1938. 
25.கயாதாரம், 1939. 
26.சங்க இலக்கியபத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்), 1940. 
27.சீவக சிந்தாமணி, 1941. 
28.சாத்தூர் நொண்டி நாடகம், 1941. 
29.நவநீதப் பாட்டியல்-உரையுடன், 1943. 
30.திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943. 
31.நான்மணிக்கடிகை, 1944. 
32.இன்னா நாற்பது, 1944. 
33.திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944. 
34.இனியவை நாற்பது, 1949.. 
35.இராமப்பய்யன் அம்மானை, 1950. 
36.முதலாயிரம், 1955. 
37.திருவாய்மொழி. 
38.கொண்டல் விடு தூது. 

திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமது வெவ்வேறு பணிகளினூடே எழுதி வெளியிட்ட நூல்களின் பட்டியல். 

1930 - ஆராய்ச்சி உரை தொகுப்பு, ஆசிரியர் வெளியீடு. 
1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு. 
1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras. 
1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம். 
1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம். 
1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி. 
1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு. 
1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம். 
1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம். 
1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம். 
1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம். 
1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம். 
1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம் 
1956 - History of Tamil Language & Literature, NCBH 
1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம். 
1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம். 
1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம். 
1958 - ராஜி 
1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம் 
1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம். 
1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம் 

மீண்டும் சென்னைக்குத் திரும்பிய திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமது இறுதிக் காலத்திலும் தமிழாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மர்ரே எஸ் ராஜம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திவ்யப் பிரபந்தத்திற்கு மக்கள் பதிப்பினை வெளியிடும் பணியில் தான் தன் இறுதி நாட்களை அவர் செல்விட்டுவந்தார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் 17.2.1956ம் ஆண்டு தமது அறுபத்து ஐந்தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார். 

திரு.வையாபுரிப்பிள்ளை தமது ஆய்விற்காகச் சேர்த்து வைத்த அவரது இல்ல நூலகத்து நூல்கள் அவர் காலத்துக்குப்பின் கல்கத்தாவிலுள்ள தேசிய நூலகத்திற்கு அவரது குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நூலகத்தில் இன்று கிடைக்கின்ற தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பேராசிரியர் திரு.வையாபுரிப்பிள்ளை அவர்களின் சேகரிப்புக்கள் தாம். 


சீவக சிந்தாமணி பதிப்பின் போது ஏனைய பதிப்புக்களில் விடுபட்டவற்றை திருத்தம் செய்து மீண்டும் பதிப்பித்தார். இந்த நூலில் முகவுரையில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார். 
”ஆராய்ச்சிக்கு முடிவில்லை. முயற்சி மிகுந்தோரும் பிரதிகளின் உதவி பல்குந்தோறும் திருத்தங்கள் ஏற்பட்டுக் கொண்டிருத்தல் இயல்புதான். தமிழ்க்கல்வி மேன்மேலும் பரவ வேண்டுமாயின் பிழைகளைப் பிழையென உணர்தல் வேண்டும். அவற்றைப் பொதிந்து வைத்தலைக் காட்டினும் தமிழன்னைக்குச் செய்யும் பெருந்தீங்கு ஒன்றுமில்லை.” 
​என்று குறிப்பிடுகின்றார். ​இன்றும் தமிழாய்வில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு ஆலோசனையாகவே இந்தக்கருத்து அமைகின்றது. 
திரு.வையாபுரிப்பிள்ளையின் பேத்தி டாக்டர். இராதா செல்லப்பன் அவர்கள் ஒரு தமிழறிஞர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். தமது தாத்தாவின் தமிழ்ப்பணிகளை விவரிக்கும் வகையில் வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி என்ற நூலினை எழுதியிருக்கின்றார். 2206ம் ஆண்டில் என்னை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்ற இவர்கள் அழைத்திருந்த வேளையில் இவரது அறிமுகம் எனக்குக் கிட்டியது. இவரது தாத்தா பேராசிரியர்.திரு.வையாபுரிப்பிள்ளை என்பதை அறிந்து மகிழ்ந்து அவர் ஆய்வுகள் தொடர்பாக பல செய்திகள் பேசி மகிழ்ந்தோம். அத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பிரத்தியேகமாகத் தமது தாத்தாவின் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்புப்பணி பற்றியும் விளக்கி தகவல்கள் பகிர்ந்து கொண்டார். இந்தத் தகவல்கள் ஒலிப்பதிவு கோப்புக்களாகத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஒலிக்கோப்புக்களைக் கேட்க விழைவோர் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் http://www.tamilheritage.org/manulogy/radha/vaiya.html பக்கத்தில் இந்தப் பதிவுகளை கேட்டும் வாசித்தும் பயன்பெறலாம். ​

Wednesday, March 22, 2017

50. தென்பரங்குன்றம் தர்கா



பள்ளிவாசல்கள் மலேசியாவின் எல்லா பெரிய நகரங்களிலும், சிறு நகர்களிலும், கிராமங்களிலும் இருக்கின்றன. ஆனால் தர்கா என்ற வகையில் அமைந்த இஸ்லாமிய சமூகத்தினர் தொழுகைச் செய்யும் ஒரு வழிபாட்டு மையம் மலேசியாவில் நான் அறிந்து இது வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவ்வப்போது தமிழகத்தைப் பற்றிய வழிபாட்டு விசயங்களை வாசிக்க நேரிடும் போது தர்கா எனும் சொல் இஸ்லாமியர்களின் வழிபாட்டு அம்சங்களோடு இணைந்த வகையில் வருவதைப் பற்றி நான் கேள்விப்படுவதுண்டு. இந்தத் தர்கா என்பது என்ன என நான் தேடத்தொடங்கிய போது சுவாரசியமான பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்கள் இருக்கின்றன. இம்முறை மதுரைக்குச் சென்றிருந்த போது அங்கு மதுரை மைய நகருக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் இரண்டு தர்காக்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் ஒன்றுதான் மதுரையில் திருப்பரங்குன்றம் பகுதியின் பின் புறத்தில் அமைந்திருக்கும் தென்பரங்குன்றம் தர்கா.

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் என்ற ஊரில் உள்ள குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது. அதாவது தென்பரங்குன்றம் உமையாண்டவர் கோயிலுக்கு ஏறக்குறைய 1 கி.மீ. தூரத்தில் மலையின் மேல் அமைந்திருக்கும் முருகன் கோயிலுக்குp பக்கத்தில் அந்தக் குன்றின் அருகாமையில், ஆனால் சற்றே உயரமான குன்றுப் பகுதியில் இந்தத் தர்கா அமைந்திருக்கின்றது.

தென்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் செல்வதற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லவேண்டும். ஏறக்குறைய முந்நூற்று ஐம்பது படிகளாவது இருக்கலாம். இப்படி படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு பாதை விரிவதைக் காணலாம். அந்த விரிந்து செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே சமமான ஒரு தரைப்பகுதி இருப்பதையும், அதன் அருகிலேயே ஒரு சுனை ஒன்று நீருடன் காட்சி அளிப்பதையும் காணலாம். அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் இரண்டு சமாதிகள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சமாதி இருக்கும் இடத்திலிருந்து மேலே செல்வதற்கென்று கற்படிகளோ அல்லது வாகனம் செல்லும் சாலையோ இல்லை. ஆனால் மரங்கள் நிறைந்த அப்பகுதியில் மேலே மனிதர்கள் செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பதைக் காண முடியும். அந்த ஒற்றையடிப்பாதையில் ஏறி படிப்படியாக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் நடந்தால் மேலே இருக்கின்ற தர்காவைக் காணமுடியும்.

நான் சென்றது மதிய நேரம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மரங்களுக்கிடையே நடப்பது இதமாக இருந்தது. மேலே நான் வந்து சேர்ந்த போது மணி ஏறக்குறைய முற்பகல் பன்னிரெண்டு இருக்கும். நான் உள்ளே நுழையும் போது குடும்பங்களாக ஆணும் பெண்ணுமாக இஸ்லாமிய மக்கள் வழிபாடு முடித்து வந்து கொண்டும் தர்காவிற்குள் சென்று கொண்டும் இருந்தனர். வாசலில் சில வயதான பெரியோர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தன் பக்கத்தில் மயிலிறகு கட்டு ஒன்றினையும் வைத்திருந்தார். தர்காவிற்கு வருபவர்களுக்கு மந்திரித்து அவர்களுக்குப் புனித நீரைக் கொடுப்பது மற்றும் மயிலிறகுக் கட்டினால் அவர்களின் தலையின் மேல் வைத்து எடுத்து  ஓதிப் பிரார்த்திப்பது என்பது போன்ற சடங்குகளைச் செய்பவர் இவர். நான் உள்ளே வந்து என்னை அறிமுகம் செய்து கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி சிறிது சொல்லி இந்தத் தர்காவைப்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தேன். அங்கிருந்தோர் என்னைத் தர்காவின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று ஒவ்வொரு முக்கிய இடத்திலும் அதன் சிறப்பினை விளக்கி எனக்குத் தகவல் அளித்தனர். இதனை வீடியோ பதிவாக்கியிருக்கின்றேன். விரைவில் அது தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவாக வெளிவரும்.

இந்தத் தர்காவைப்பற்றிய சில தகவல்கள் அங்கே எனக்குக் கிடைத்தன. சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இதன் பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இங்குள்ள ஐதீகத்தின் படி, இந்தச் சுல்தான் தன் வயோதிக வயதில் இந்தக் குன்று இருக்கும் பகுதியில் மறைந்தார் என நம்புகின்றனர்.

சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் அவர்களின் சமாதி இந்தத் தர்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பின்புறமாக இந்தச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை கோயில் போன்ற அமைப்பு உள்ளே இருக்கின்றது. அந்தச் சமாதியின் மேல் பக்கம் பச்சை நிறத்திலான துணி போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சமாதிக்கு முன் புறத்தில் மேலும் ஒரு சமாதி ஒன்றும் உள்ளது. இது சுல்தானுடன் வந்த மந்திரியின் சமாதி. இந்தச் சமாதிக்கு முன்னர் மிக வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வெண்கல குத்து விளக்குகளை வரிசையாக வைத்திருக்கின்றனர். இந்தச் சமாதி பிரத்தியேகமாக ஒரு இரும்புக் கம்பி போட்டு பாதுகாக்கப் படுகின்றது. சுல்தான் மட்டுமல்லாது இந்த மந்திரியும் மருத்துவத்தில் திறமை பெற்றவராக இருந்திருக்கின்றார். அவர்கள் வந்து சேர்ந்த இப்பகுதியில், காடுகளில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களுக்கு உதவும் சேவையை இவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மந்திரியின் பெயர் லுக்மான் ஹகீம் என்பது. அரபு மொழியில் ஹகீம் என்பதன் பொருள் மருத்துவர் என்று எனக்கு இங்குத் தகவல் அளித்த பெரியவர் ஒருவர் விளக்கம் கூறினார்.

இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைத் தமிழகத்தில் பரப்புவதற்காக வந்தாலும் பின்னர் மருத்துவத்துறையிலேயே தங்கள் செயல்பாடுகளை விரிவாக்கிக் கொண்டு இந்தத் தென்பரங்குன்றம் மலைப்பகுதியிலேயே வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். பின்னர் இவர்களது மறைவுக்குப் பின்னர் இவர்களது அடியார்கள் சமாதிகள் அமைந்து சுல்தான் நினைவாக இந்தத் தர்காவை எழுப்பியிருக்கின்றனர். ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்தத் தர்கா கருதப்படுகின்றது.

நான் இந்தத் தர்காவினுள் இருந்த சமயத்தில் எனக்கு மந்திரித்து, மயிலிறகால் என்னை ஆசீர்வதித்து புனித நீரை ஒரு பெரியவர் வணங்கினார். அவர் மந்திரிக்கும் போது அரபுமொழியில் மிக மெதுவாக சில வாசகங்களை ஓதுவதைக் கேட்க முடிந்தது. நான் உள்ளே இருக்கும் சமயத்தில் ஒரு பெண்மணியும் அங்கே சுல்தானின் சமாதிக்கு முன் அமர்ந்து அருள் வந்த பெண்மணி போல ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி நான் அங்கிருந்த இஸ்லாமியப் பெரியவரிடம் வினவிய போது இப்படி அடிக்கடி பலர் வருவது வழக்கம் என்றும் தமது உடல் பிரச்சனைகள் மற்றும் உளப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக இத்தகைய சடங்குகளை அவர்கள் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தர்காவில் பதிவினை முடித்து விட்டு அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு வந்த வழியிலேயே திரும்பினேன்.

தென்பரங்குன்றம் பகுதி இன்றும் கூட வளமான ஒரு வனப்பகுதியாக இருக்கின்றது. பெரும்பாலும் திருப்பரங்குன்றம் மலையைப் பற்றியும் அங்குள்ள முருகன் கோயிலைப் பற்றியும் அறிந்திருக்கும் நம்மில் பலருக்குத் தென்பரங்குன்றம் மலையைப் பற்றி அறிமுகம் இருந்திருக்காது.

நான் கடந்த ஆண்டு (2016) டிசம்பர் குடைவரைக்கோயில்களைப் பற்றிய பதிவினைச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு இங்குச் சென்றிருந்தேன். உமையாண்டவர் கோயில் பற்றி நான் முன்னரே அறிந்திருந்தமையால் அக்கோயிலைப் பற்றிய ஒரு பதிவினைச் செய்து விட்டு கீழே இறங்கி வரும் போது அங்கே காட்டின் உள்ளே மூலைக்கு மூலை நாகர் வழிபாடு, வராகி அம்மன், முனியாண்டி சாமி, கன்னிமார் கோயில், பஞ்ச லிங்க ஆலயம் மற்றும் பெயர் அறியா சில தெய்வ வடிவங்கள் அங்கே மரங்களுக்குக் கீழே வைக்கப்பட்டு அவை மக்கள் வழிபடும் குலதெய்வ வழிபாடுகளாக இருப்பதைக் கண்ணுற்றேன். இதனை அடுத்து, மலையின் மேல் உள்ள முருகன் கோயிலில் பதிவை முடித்து வரும் வழியில் ஏதேச்சையாக இந்தத் தர்காவை தூரத்திலிருந்து பார்த்த போது இங்கேயும் சென்று பார்த்துவருவோம் என அங்கு சென்று பார்த்ததனால் இப்படி ஒரு அருமையான வரலாறு ஒன்று இங்கே இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

முருகனை வழிபடும் தமிழ் மக்கள் வந்து செல்லும் அதே படிகளில் மேலே ஏறி மற்றொரு பாதையை எடுத்துச் சென்ற போது அங்கே நுணுக்கமான இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட ஒரு தர்கா இருப்பதைக் கண்டு பதிவு செய்யவும் முடிந்தது.

இந்தத் தர்காவில் சமாதி அடைந்திருக்கும் சுல்தானின் வரலாற்றை அங்கு நான் சந்தித்த இஸ்லாமியப் பெரியவர் சொல்லி நான் கேட்டறிந்த போது அந்த அரேபிய சுல்தானின் நீண்ட தூர பயணமும், பின்னர் தமிழகத்தில் வந்து அவர் தன் குழுவினருடன் வாழ்ந்த விசயங்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. நிச்சயமாகத் தமிழ் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டு தான் உள்ளூர் மக்களுடன் சுல்தானும் அவரது குழுவினரும் பேசியிருப்பார்கள், இங்கே வாழ்ந்திருப்பார்கள். எண்ணூறு வருடத்திற்கு முந்தைய இந்தச் செய்திகளை எண்ணிப்பார்க்கும் போதே வியப்பு மேலிடுகின்றது.

இப்படி எத்தனை எத்தனையோ .. அறியப்படாத வரலாறுகள்.. மக்களால் அறியப்பட வேண்டிய நிலையில் இருப்பதை எனது ஒவ்வொரு தேடலிலும் உணர்கின்றேன். 

Wednesday, March 15, 2017

49. வைரமுத்துவின் கருவாச்சி காவியம்




கதைகளை எழுதுவது போல வரலாற்றினைச் சொல்ல முடியுமா?

வரலாறு சொல்ல  ஆய்ந்து எழுதுவது அவசியம். பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் தமிழர் தொண்மை, தமிழர் பண்பாடு பற்றிய தேடல், தமிழ் நிலத்தின் பண்டைய வழிபாட்டுக்கூறுகள், தமிழர் சடங்கு முறைகள் என்பன பற்றிய தேடல் கூர்மை அடைந்து வருவதைக் காண்கின்றேன். தன்னார்வலர்கள் பலர், அவர்கள் துறை வெவ்வேறாக இருப்பினும் கூட, அவர்கள்  தங்கள் வேர்களை அறியும் பொருட்டு தமிழக வரலாற்றை தேடுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை வரவேற்பதும் பாராட்டுவதும் மேலும் உற்சாகத்தை அவர்களுக்கு நிச்சயம் வழங்கும். இந்த உற்சாகம் தரும் களிப்பில் மேலும் ஈடுபாட்டுடன் தன்னார்வலர்கள் சீரிய முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர்.

எனது கடந்த 17 வருட தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்று களப்பணிகள் மற்றும் வெளியீடுகளின் போது என்னைப் பாராட்டி உற்சாகமளிக்கும் பலரையும் நான் மனதில் நினைவு வைத்திருப்பதுண்டு. சில சம்பவங்கள் மனதில் நீங்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தி அந்த நினைவுகள் மனதில் தங்கி விடுவதும் உண்டு. அப்படித்தான் ஒருமுறை இணையத்தில் உள்ள குழுமங்களில் தமிழர்கள் மத்தியில் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” நூலை பரவலாக பேசவைத்த பொன்னியின் செல்வன் குழுமத்தலைவர் திரு.சுந்தர் பரத்வாஜ் ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்தார். அவர் நண்பர்கள் முனைவர்.குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் முனைவர் பேராசிரியர் ராசவேலு இருவரையும் நேரில் அறிமுகப்படுத்தி, என்னை மூவருமாக கௌரவித்து ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கினர். இது சென்னையில் எதிர்பாராமல் நிகழ்ந்தது.

இதே போலத்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடனான எனது சந்திப்பு நிகழ்ந்தது. அவரது இல்லத்தில் அவருடன் நானும் நண்பர் சுந்தரும் உரையாடச் சென்றிருந்தோம். நான் சொல்லச் சொல்ல தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து வியந்தார். இப்பணிகளுக்காக நான் சென்றிருந்த ஊர்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை நான் விவரிக்க அவற்றை ஆர்வத்துடன் கேட்டு தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியைப் பாராட்டியதோடு எங்களுக்கு ஒரு உணவு விடுதியில் விருந்தளித்தும்  சிறப்பித்தார். இதில் மேலும் என்னை குதூகலப்படுத்திய ஒரு விசயமும் நிகழ்ந்தது. அவரது எழுத்துப் படைப்புக்களில் பத்து நூற்களைக் கொண்டு வந்து எனக்கு அவற்றை பரிசாக அளித்தார். அது மிக இனிமையான ஒரு நிகழ்வாக என் மனதில் நிறைந்திருக்கின்றது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எனக்களித்த அவரது நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பானவையே.

  1. இதுவரை நான்
  2. சிகரங்களை நோக்கி
  3. பாற்கடல்
  4. வைகறை மேகங்கள்
  5. வடுகபட்டி முதல் வால்கா வரை
  6. மௌனத்தின் சப்தங்கள்
  7. இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  8. கருவாச்சி காவியம்
  9. கள்ளிக்காட்டு இதிகாசம்
  10. வைரமுத்து கவிதைகள்

..இந்தப் பத்தும் என் வீட்டு புத்தக அலமாரியில் இடம் பிடித்திருக்கின்றன.

அவ்வருடம் சென்னையிலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் போது லுஃப்தான்சா விமானத்தில் கருவாச்சி காவியம் நூலைத்தான் வாசித்துக் கொண்டே வந்தேன். அந்தப் பத்து மணி நேரங்களும் வானில் பறக்கின்றோம் என்பதை மறந்து  இந்த நூல்  தமிழகத்தின் தேனி பகுதிக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது.

இந்த நூலின் பாயிரத்தில் வைரமுத்து இப்படி எழுதுகின்றார்.
"டைக்ரிஸ் யூப்ரடிஸ் நதிக்கரைகளிலும், நைல்நதி தீரத்திலும், சிந்து சமவெளி ஆழத்திலும் வாழப்பட்ட மனித வாழ்க்கையைத் துழாவு துழாவென்று துளையிட்டுத் துருவுகின்ற ஆய்வாளர்கள் வையை ஆற்றங்கரையில் வாழப்பட்ட வாழ்க்கையை ஆவணப்படுத்தியதுண்டா? அப்படிப்பட்ட பண்பாட்டு ஆவணத்தின் கலை வடிவம்தான் கருவாச்சி காவியம் "

இப்படித்தான், எங்கெங்கோ உள்ள நாகரிகத்தையும் வரலாற்றுச் செழுமைகளையும், அங்கு உள்ள பண்பாட்டு மாண்புகளையும் பேசும் நம்மில் பலருக்கு நமது ஊரின் சிறப்பு அறியாதிருக்கின்றோம். நமது ஊரின் வரலாற்று சிறப்புக்களை அறிந்தோமா என்பது ஒரு புறமிருக்க, நம்மோடு வாழும் சக மக்களின் வாழ்வியல் கூறுகளை மதிக்கும் மனோ நிலையை வளர்த்திருக்கின்றோமா என்பதே ஒரு கேள்வி தானே!

வைரமுத்து அதே பகுதியில்  மேலும் சொல்கின்றார்.
"ஒரே பண்பாடு ஒரே நாகரிகம் மானுடப்பரப்பில் இதுவரை இல்லை. பூமிக்கெல்லாம் ஒரே பகலைச் சூரியன்கூடக் கொண்டுவர முடியவில்லை. கலாசாரக் கூறுகள் இனத்துக்கு இனம் மட்டுமல்ல இடத்துக்கு இடம்கூட வேறுபடுகின்றன."

உண்மைதான்.  உலக நாகரிகங்களைப் பார்க்கும் போது எத்தனை எத்தனை முயற்சிகளை மனிதர்கள் மேற்கொள்கின்றன. எவ்வகை வேறுபாடுகளுடன் அந்தந்த நாகரிகங்கள் உருவாகி நின்று நிலைத்து பின் சிலகாலங்களுக்குப் பின் மடிந்தன, மறைந்தன என்பதை அகழ்வாய்வுகளும் ஆவணங்களும் அறிக்கைகளும் நமக்குக் காட்டுகின்றன.

தொடர்ச்சியாக .." பண்பாட்டு அடையாளங்களும் ஆவணங்களும் மெல்ல  மெல்லத் திரிந்தோ அழிந்தோ வருகின்றன. விரைந்த நகர்மயமும் பூமியில் விழும் எரிகல் வேகத்தில் நிகழும் உலகமயமாதலும் பழைய பண்பாட்டு அடையாளங்களைச் சுவடே இல்லாமல் துடைத்தெறியப் போகின்றன. அந்த அழிமானங்களுக்கிடையில் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பும் படைப்புக்களுண்டு" என்றும் வைரமுத்து வலியுறுத்துகின்றார்.

ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த மன்னர்களோ தங்கள் செய்திகளையெல்லாம் கல்வெட்டுக்களாகக் கோயில் சுவர்களில் எழுதிவிட்டும், செப்புப் பட்டயங்களில் எழுதுவித்தும் அவர்கள் புகழை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைத்துப் பார்க்கும் வழியைச் செய்து வைத்துச்சென்றிருக்கின்ரனர். கல்வி கற்ற சான்றோரோ இலக்கியங்களையும் நீதிகளையும் பனை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துச் சென்றனர். சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையைக் கூறும் வரலாற்றினை யார் எழுதினர்? சாமானிய மக்களின் வாழ்வும், தாழ்வும்,  வலியும், இன்பமும் முக்கியத்துவம் பெறாமலே எழுத்து வடிவம் பெறாமலேயே சென்றன என்பதை நினைத்துப் பார்க்கும் போது நாம் இழந்தவை தான் எத்தனை எத்தனையோ என மனம் பதைக்கின்றது.

இப்படி   சிற்றூர்களின் சின்னச் சின்ன கிராமங்களில் படிந்திருக்கும் பண்பாட்டு செழுமைகளையெல்லாம் ஆவணப்படுத்தி பாதுகாப்பதும் எழுத்தாளர்களின் கடமை என்பதை தனது கருவாச்சி காவியத்தின் பாயிரத்தில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குறிய ஒரு விசயமாக நான் காண்கின்றேன்.

அன்று விமானப்பயணத்தில் கருவாச்சி காவியத்தை முழுமையாக வாசித்து முடித்தேன். மதுரையின் ஒரு சிறு கிராமத்தில் நான் இந்த கருவாச்சி காவியத்தினூடாக வலம் வந்தேன். இயல்பாக மக்களின் பேச்சு. கிராமத்து வழக்குகள், பஞ்சாயத்து, கல்யாணம், சண்டைகள், பொறாமை, ஏமாற்றம், வஞ்சம், துன்பம், சின்ன சின்ன சந்தோஷங்கள், ஆடுகள், மாடுகள், கருவேலம் முட்கள், மனிதர்கள், கிழவர்கள், கிழவிகள், பிறப்பு, இறப்பு என முழுமையாக என் மனம் அந்த நூலுக்குள் ஒன்றிப்போயிருந்தது. படித்து முடித்தபோது கணத்த மனத்துடன் கருவாச்சியை நினைத்தவாறே சில நிமிடங்கள் என்னை மறந்திருந்தேன்.

இந்த நூலில் மக்கள் பேசும் நாட்டார் வழக்கிலேயே தன்  எழுத்தின் ஊடாக மனக்கண்ணில் முழு நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் வைரமுத்து என்று சொன்னால் அது பொருந்தும். மக்கள் வாழ்க்கை தானே இலக்கியம் உருவாக ஆதாரமாகின்றது!
இராஜவம்சத்து கதைகள் மட்டும் தான் இலக்கியம் என்ற அதிகாரத்தைப் பெற வேண்டுமா?
கிராமத்து கருவாச்சிகளின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இலக்கியத்தன்மை இருக்கக்கூடாதா என்ன ? என்ற கேள்வியை நம் முன்னே எழுப்புகின்றது இந்தக் காவியம்.

வைரமுத்துவின் பல பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். அவரது கவிதைகளில் சில வாசிக்கும் போது மனதில் பளிச்சென்று ஒரு மின்னலை தோற்றுவிப்பதை அனுபவிப்பதுண்டு. அப்படி சில கவிதைகளை அவரது கவிதை தொகுப்பு நூலில் உள்ளன.

இலையுதிர் காலமும்
வசந்தமும் இங்கே
கிளைகளுக்குத்தான்
வேர்களுக்கல்லவே

நான்கே வரிகளில் சிந்தனைக்கு விருந்து இந்தக் கவிதை

பறவைக்கும் விலங்குக்கும்
மரம் தரும் உத்தரவாதம்
மனிதர் நாம் தருவோமா?

கொள்கை பிடிப்பற்ற மனிதர்களோடு ஒப்பிடும் போது மரங்கள் சிறப்பல்லவா?

தற்கொலையை நாடிச் செல்லும் ஒரு இளைஞனைப் பார்த்து இப்படிச் சொல்கின்றார்.

தம்பீ

சாவைச்
சாவு தீர்மாணிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி

புரிந்து கொள்

சுடும்வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும் மனிதன்

நீ மனிதன்.


வைர வரிகள் அல்லவா? கவிப்பேரரசு வைரமுத்துவுடன் நிகழ்ந்த அச்சந்திப்பும் உரையாடலும் எனது தமிழ் மரபு அறக்கட்டளை பயணங்களில் நட்சத்திரப்பூப்போல மிளிரும் இனிய அனுபவங்களாக அமைகின்றன!

Wednesday, March 8, 2017

48. வீரவிளையாட்டு - தமிழகத்திலும் ஸ்பெயினிலும் எப்படி மாறுபடுகின்றன



வாசித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ, ஏனைய பொது ஊடகங்களில் பார்த்தோ தெரிந்து கொள்வதை விட நேரடியாகப் பெறும் அனுபவங்கள் தரும் பாதிப்பு மிக ஆழமானதாக அமைந்து விடும். இவ்வகை அனுபங்கள் பல நாட்கள், வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என மனதை விட்டு அகலாமலும் அமைந்து விடும். எனக்கு மனதைக் கவரும் ஏதாவதொரு விஷயம் ஒன்றைப் பற்றி நான் கேள்விப் பட்டால் என் மனம் அதனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். ஆவல் ஒரு புறமிருக்க அதனை நேரடியாகப் பார்த்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணம் தோன்றி ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கும். தக்க வேளை அமையும் போது இவ்விதம் அமைந்த தேடல்களை நான் சென்று பார்த்தோ, நேரடியாக உணர்ந்தோ இவ்வனுபங்களைப் பெற்று அவற்றைப் பற்றி சிந்திப்பதை வாய்ப்பமையும் போதெல்லாம் ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றேன்.

ஜல்லிக்கட்டு, காளை விரட்டு, மஞ்சி விரட்டு போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அண்மைய ஜல்லிக்கட்டுக்கான மக்கள் போராட்டம் காளை அடக்குதல் எனும் விளையாட்டு தமிழர் பாரம்பரியத்தில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பதை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்தது. என் இளம் பிராயத்து மலேசிய வாழ்வில் ஒரு முறை இவ்வகை காளை விரட்டு போட்டி ஒன்றைப் பார்த்த ஞாபகம் மனதில் நிழலாடுகின்றது. காளை மாட்டை நன்கு குளிப்பாட்டி கொம்பிற்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணி கட்டி, கொம்புகளில் பூக்களைச் சுற்றி அழைத்து வந்து பின்னர் இளைஞர்கள் அந்தக் காளை மாட்டை விரட்டிப் பிடிப்பது போன்ற வீர விளையாட்டைத் தைப்பொங்கல் காலத்தில் நிகழும் சில பாரம்பரிய நிகழ்வுகளில் பார்த்திருக்கின்றேன்.

தமிழர் வாழ்வியலில் அதிலும் விவசாயிகளின் வாழ்வில் பசுவும் காளையும் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. வீட்டு விலங்குகளான இவை குடும்பத்தாரோடு அன்னியோன்னியமாக ஒன்றித்து வாழ்வதை இன்றும் கூட கிராமங்களில் காண்கின்றோம். சிறு பெண்கள் கூடப் பெரிய காளை மாட்டினை இழுத்துக் கொண்டு செல்லும் இனிய காட்சிகள் தமிழக கிராமங்களில் இயல்பானதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட கொடூரமான காளை விரட்டும் வீர விளையாட்டினை ஸ்பெயினில் இன்றும் காண்கின்றோம்.

ஐரோப்பிய சூழலில் பால், பாலைக்கொண்டு தயாரிக்கப்படும், சீஸ், பட்டர்மில்க், தயிர் வகைகள் பயன்பாடு என்பது மிக ஏராளம். தற்கால சூழலில் ஐரோப்பிய மக்களின் அன்றாட உணவுத் தேவையில் பால், பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இல்லாத ஒரு நிலையை மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்குப் பால் மக்கள் வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. இதனால் மாடுகள் இங்கே மிகப் பிரபலமான விவசாயிகளின் வளர்ப்பு மிருகங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது.

இப்படி அடிப்படை உணவுத் தேவைக்கு ஆதாரமாக அமையும் மாடுகள் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிகழ்கின்றன. சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ரோமானியா, டென்மார்க், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சில நாடுகளிலும் ஏதாவது ஒரு வகையில் பசு மாடுகளையோ அல்லது காளை மாடுகளையோ முக்கியப்படுத்தும் ஏதாவது ஒரு திருவிழா வருஷத்தில் ஒரு முறையாவது இடம்பெறுவதுண்டு. இவ்வகைத் திருவிழாக்களின் போது பாரம்பரிய உடையணிந்து மக்கள் இத்திருவிழாக்களில் கலந்து கொள்வதும், கேளிக்கை விஷயங்கள் இடம்பெறுவதும் வாடிக்கை.

மற்ற நாடுகளிலிருந்து வித்தியாசமாக ஸ்பெயின் நாட்டில் காளை மாடுகள் சம்பந்தப்பட்ட வீர விளையாட்டினைப் பார்க்கலாம். Corrida de Torros (கொரிடா டி டோரோஸ்) என ஷ்பேனிஷ் மொழியில் அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு மிக கொடூரமான ஒரு விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இப்பாரம்பரிய விளையாட்டு ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் குறிப்பிட்ட சில நாட்களிலோ திருவிழாக்களின் போதோ நடைபெறுகின்றன.

இந்தப் பாரம்பரிய வீர விளையாட்டைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேச்சையாக நான் அறிந்திருந்த போதிலும் 2012ம் ஆண்டில் எனக்கு இந்த விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. பல மாதங்களாக ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட் நகரில் எனக்குப் பணி நிமித்தம் ஒவ்வொரு வாரமும் இருக்கின்ற சூழல் அமைந்தது. 13 -19 மே மாதம் மட்ரிட்டின் (ஸ்பெயின் தலைநகர்) சிறப்பு திருவிழா காலம். இதற்காக ஏற்பாடாகி ஒவ்வொரு நாளும் கலைவிழாக்கள், நடனம், நாடகம், பாரம்பரிய விளையாட்டு, வான வேடிக்கை எனப் பல விஷயங்கள் நடந்தன. அதில் கொரிடா டி டோரெஸ் காளை அடக்கல் போட்டியும் நிகழ்ந்தது. இது பாரம்பரிய விளையாட்டுக்களில் தலையாய ஒன்றானதாகவும் மிக உயர்வான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு விளையாட்டாகவும் ஷ்பேனிஷ் மக்களால் கருதப்படும் விளையாட்டு.கொரிடா டி டோரெஸ் நடைபெற்ற ப்லாஸா டி டொரெஸ் மண்டபம் ஸ்டேடியம் போன்ற அமைப்பில் அமைந்தது. அலுவலகப் பணி முடிந்து நிகழ்ச்சிக்கு என் ஷ்பேனிஷ் நண்பர்களுடன் சென்றிருந்தேன். 14 யூரோவிலிருந்து 1,200 யூரோ வரை டிக்கெட்கள் விற்பனைக்கு இருந்தன. அன்று இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கையிலே ஏறக்குறைய 20,000 பேர் இங்கு இவ்விளையாட்டைப் பார்க்க வந்திருந்தனர் என்பது தெரிந்தது.

இது விளையாட்டல்ல.. விபரீதம் என்பதை உள்ளே சென்று நண்பர்கள் விளக்க ஆரம்பித்ததும் தான் தெரிந்து கொண்டேன்.காளை மாட்டை அடக்கித் தள்ளுவது இந்த விளையாட்டின் நோக்கமல்ல. மாறாக அக்காளை மாட்டைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராடி கொல்வது தான் நோக்கம். ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக என வர ஒவ்வொன்றையும் அடக்கி அதைக் கொல்பவர்கள் வீரர்களாகக் கருதப்படுகின்றனர். நம் தமிழர் பாரம்பரியத்தில் உள்ள ஜல்லிக்கட்டிற்கும் இந்த விளையாட்டிற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது, பாருங்கள்!

காளை மாடு முதலில் வரும் போது அது ஓடிவரும் வேகம், அதன் தலையைத் திருப்பிப் பார்க்கும் விதம் இதனை வைத்தே இது வீரம் மிகுந்த அல்லது வீரம் குறைந்த மாடு என்று மக்கள் புரிந்து கொள்கின்றனர். வீரம் குறைந்த மாடு என்றால் ஷ்பேனிஷ் மக்கள் விசில் அடித்தும் கூக்குரலிட்டும் கேலி செய்கின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.முதலில் வரும் காளை அதனை எதிர்த்து போராட நிற்கும் 5 பேரை பார்த்து மோதத்தொடங்குகின்றது. இந்த மோதுதலின் போதே இந்தக் காளை வீரம் நிறைந்ததா, அல்லது மிகச் சாதுரியமானதா, அதன் போரிடும் தன்மை என்ன என்பதை இந்த 5 விளையாட்டாளர்களும் பார்த்து அறிந்து கொள்கின்றனர். சிறிது நேரம் இந்த மோதல் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 5ம் நிமிடத்தில் 2 பிக்காடோரஸ் (Picadores இவர்கள் இரும்புக் கவசத்தால் சுற்றிலும் கவசம் அணியப்பட்ட குதிரையில் அமர்ந்து வருபவர்கள்) மைதானத்திற்கு உள்ளே நுழைந்து காளையை அடக்க வருவர். ஒருவர் தூரத்திலேயே நின்று கொள்ள ஒருவர் மாத்திரம் இந்தப் போராட்டத்திற்கு தயாராவார்.

இதுவே இந்தக் காளையைக் கொல்லும் போராட்டத்தின் முதல் பகுதி. இதனை ஷ்பேனிஷ் மொழியில் Tercio de Varas என்று அழைக்கின்றனர். Tercio என்பதன் பொருள் இறப்பு என்பது. ஆகக் காளைமாட்டின் மீதான தாக்குதலின் முதலாம் பகுதி இது எனலாம்.
பிக்காடோரெஸ் குதிரையின் மேலமர்ந்து இடது கையில் குதிரையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள ஈட்டியால் தன்னை நோக்கித் தாக்க வரும் காளைமாட்டினை ஒரே தாக்குதலில் நடுமுதுகில் குத்தித் தாக்குவார். இந்தத் தாக்குதலைச் செய்ய மிகுந்த பலம் தேவை. இதனை எதிர்த்து காளைமாடு உடனே குதிரையை முட்டி பிக்காடோரெஸை தொடர்ந்து தாக்கும். இது மிகப் பயங்கரமான ஒரு நிலை. சுற்றிலும் இரும்புக் கவசம் போடப்பட்டும் கண்கள் மூடப்பட்டும் குதிரை இருப்பதால் அதற்குச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது. ஆனால் பிகோடோரெஸ் லாவகமாக இந்தத் தாக்குதலைச் சமாளித்து மாட்டை பலம் இழக்கச் செய்து விடுவார். இத்துடன் இவரது பணி முடிய இவர் வெளியே சென்று விடுவார். தனித்திருக்கும் காளை மாடு தன்னைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்ள முனைந்தாலும் கூட ஈட்டித் தாக்கியதால் இரத்தம் முதுகிலிருந்து வழிய அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

இரண்டாவது கட்டமாக மூன்று பண்டரிலாஸ் இக்காளையைத் தாக்க வேண்டும். இதற்கு Tercio de Banderillas என்று பெயர்.  கைகளில் மறைக்கும் துணி இல்லாமல் இரண்டு கூர்மையான ஈட்டியைத் தாங்கிக் கொண்டு ஓடிவந்து தக்க சமயத்தில் ஒருவர் பின் ஒருவராகக் காளையின் முதுகில் ஈட்டியைப் பாச்சி அதனை நோகச் செய்வர். இது காளையின் தோள் பகுதி கழுத்துப் பகுதிகளை வலிமை இழக்கச் செய்து விடும். இந்த நேரத்தில் காளை எதிர் தாக்குதல் நடத்தினால் நேருக்கு நேர் இருக்கும் பண்டரிலாஸ் நிச்சயமாகக் கொம்பில் முட்டி இறக்க நேரிடும். இது அவ்வளவு பயங்கரமான ஒரு தருணம்.

மூன்றாம் பகுதி Tercio de Muerte எனப்படுவது. இதன் பொருள் இறப்பின் மூன்றாவது பகுதி எனக் கொள்ளலாம்.இந்தப்பகுதியின் போது அக்காளையுடன் ஒரே ஒரு மெட்டடோர் (இவர் தான் தானே ஒரு காளையைக் கொல்வதாக உறுதி எடுத்துக் கொண்டு சபையை வணங்கி அவர்களின் கைதட்டல் ஆரவாரத்தை ஏற்றுக் கொண்டு போட்டியிட வருவார். காளையைக் கொல்லும் வரை இவரே ஒருவராகப் போராட வேண்டும். காளையை அடக்கச் சிவப்பு நிறத்துணியை அதன் கண்முன்னே காட்டி அழகிய நடையில் அதனை தாக்கச் செய்வார் இந்த மெட்டாடார். உண்மையில் காளைமாடு வர்ணங்களைக் கண்டு எதிர்ப்பதில்லை. மாறாக அசைவுகளே மாட்டின் எதிர்த்துத் தாக்கும் தன்மைக்குக் காரணமாகின்றன. ஆனால் இன்றும் பலர் சிவப்பு வர்ணங்களைக் கண்டால் காளை மாடு ஆத்திரம் கொண்டு தாக்கும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் மெட்டாடார் காளைமாடு இருவருமே காயங்களுக்குள்ளாவர்.

இந்த மெட்டாடார் ஏறக்குறை 10 நிமிடங்கள் வெவ்வேறு வகையில் காளையை எதிர்த்துப் போராடி, தனக்கு அடங்கச் செய்து பின்னர் தக்க சமயம் வருகையிலே ஒரு கூர்மையான நீளமான வாளால் அக்காளை மாட்டை முதுகில் குத்துவார். ஒரு அனுபவம் நிறைந்த வீரர் என்றால் முதல் தாக்குதலிலேயே அந்த வாள் முதுகில் பாய்ந்து நேராக இருதயத்தைத் தாக்கி மாட்டினை விழச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர் மிகச் சிறந்த வீரராகக் கருதப்பட்டு பார்வையாளர்களால் கூக்குரலிடப்பட்டும் விசில் அடித்தும் பாராட்டப்படுவார்.
கீழே அயர்ந்து விழும் காளை உயிரை விட ஒரு 4 குதிரைகள் பூட்டிய வண்டி மைதானத்திற்குள் நுழையும். பார்வையாளர்கள். காளையை அடக்கிய மெட்டாடோர் மிகச் சிறப்பாக போராடியிருக்கின்றார் என நினைத்தால் வெள்ளை நிறக் கைத்துண்டால் விசிறிக் கூவ நிகழ்ச்சிக்குப் பிரத்தியேகமாக வந்திருக்கும் ஆளுநர் அதனை ஏற்று அந்த மெட்டாடோரின் புகழை மேலும் பெரிதாக்க இறந்த அந்த மாட்டின் ஒரு காதையும் அதன் வாலையும் அந்த மைதானத்திலேயே வெட்டித் தர அனுமதி அளிப்பார். இது மிகப் பெரிய ஒரு சம்பிரதாயமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய பரிசு பெற்றவர்கள் மிகச் சிறந்த மெட்டாடோர்களாக மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றனர்.ஆக மொத்தம் 25 நிமிடத்திற்குள் ஒரு காளையை அடக்கிக் கொன்று விடுகின்றனர். இவ்வகையில் ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் அடக்கிக் கொல்லப்படுகின்றன. இந்த கொரிடா டி டோரோஸ் காளை மாடுகளைத் துன்புறுத்தும் ஒரு கொடூரமான விளையாட்டு என்ற அடிப்படையில் பல அமைப்புக்கள் இந்த விளையாட்டிற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஸ்பெயினிலேயே பல பகுதிகளில் இவ்விளையாட்டு நடத்தப்படுவதில்லை. உதாரணமாக கட்டலானியா பகுதிகளில் இது 2011ம் ஆண்டிலிருந்து தடைசெய்யப்பட்ட விளையாட்டாகிவிட்டது.


தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு இளைஞர்களின் வீரத்தையும் காளையின் வீரத்தையும் எடை போடுவதாகத்தான் அமைகின்றதே தவிர காளை மாட்டினை துன்புறுத்தும் ஒரு நிகழ்வல்ல. நமது வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தொடர்ந்து சிறப்பாக நடைபெறவேண்டும். தமிழர் மரபின் வீர விளையாட்டுக்களின் ஒரு அங்கம் தான் ஜல்லிக்கட்டு என்பதைப் புரிந்து ஆதரிப்போம்!. 

Wednesday, March 1, 2017

47. நடுகற்கள்




நடுகற்களா?
என்ன அவை?
என்ற கேள்வி மலேசிய சூழலில் பலருக்கும் எழலாம். தமிழக நிலப்பரப்பில் இன்றும் கிடைக்கின்ற புராதனச் சின்னங்களில் ஒன்று தான் நடுகற்கள் எனப்படுபவை.

பண்டைய தமிழர் வரலாற்றில் வீரச்செயல் புரிந்தோரை மக்கள் காலந்தொரும் நினைத்திருக்கும் வகையில் அவர்கள் செயலைப் பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் அவ்வீரனது சிற்பத்தைக் கல்லில் செதுக்கி வைப்பார்கள். இன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இவை காணக்கிடைக்கின்றன. பரவலாக ஆங்காங்கே இவை நமக்குத் தென்பட்டாலும், இந்த நடுகற்கள் அனைத்தும் ஒரே தன்மையானவை அல்ல. பெரும்பாலானவை ஒரு வீரன் தன் ஒரு கையில் வாள் ஒன்றினை ஏந்தியவாறு நிற்பது போலவோ அல்லது ஒரு கையில் வாளினை ஏந்தி தன் மறு கையால் தன் தலையை உயரப் பிடித்து தன் கையாலேயே தன்னைப் பலிகொடுத்துக் கொள்ளும் காட்சியாகவோ அல்லது வீரனுடன் புலி ஒன்று இருப்பது போலவும் அதனை அவர் தாக்குவது போலவோ, அல்லது ஒரு குதிரையை வீரன் குத்துவது போலவோ அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில நடுகற்களில் வீரனுடன் பெண் ஒருத்தியின் சிற்பமும் இணைக்கப்பட்டிருக்கும். சில நடுகற்களில் வீரனின் தலைப்பகுதியின் இரு பக்கங்களிலும் தேவதைகள் மலர் தூவுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கிக்கும்.

பெரும்பாலான நடுகற்களில் உருவங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆயினும் சில நடுகற்கள் எழுத்துக்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் காணப்படுகின்ற எழுத்துக்கள் அவ்வீரனது பெயரைக் குறிப்பிடுவதாக அமைகின்றன.

இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கொங்குமண்டலத்திலும் நாம் பரவலாக காணக்கூடிய வகையில் கிடைக்கின்ற நடுகற்களில் பல, ஒரு அரசனுக்காகப் போர் நிமித்தம் தன் உயிரைத் தானே பலிகொடுத்துக் கொண்ட வீரனுக்காக அமைக்கப்பட்ட நடுகற்களாகவே இருப்பதைக் காணலாம். தன்னைத் தன் அரசனின் வெற்றிக்காக மாய்த்துக் கொள்ளும் வீரன், கொற்றவை அல்லது காளி தெய்வத்தின் முன் தன் தலையைத் தானே தூக்கிப் பிடித்து தன் மற்றொரு கையில் ஒரு வாளை ஏந்தி தன் தலையை வெட்டி தன் தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு தன்னைப் பலி கொடுத்துக் கொள்வான். இத்தகைய நடுகற்கள் தலைபலி நடுகற்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை நவகண்டம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இன்று நடுகல்லுக்கும் தெய்வச் சிற்பங்களுக்கும் வித்தியாசம் தெரியாது பலர் இருக்கின்றனர். நடுகற்களை ஏதாவது ஒரு வகையில் ஒரு வீரச்செயல் புரிந்த மனிதர்களுக்கான நினைவுச்சின்னம் என அறியாது, சிற்பத்தின் உருவத்தைக் கூட ஆராயாமல் இவற்றை வேடனாக வருகின்ற முருகன் சிலை என நினைத்துச் சிலரும், ஆஞ்சநேயர் என சிலரும், கருப்பண்ணசாமி என சிலரும் பெயர் வைத்து அழைத்து வழிபடுகின்றனர். நடுகற்கள் என்பவை யாது எனத் தெளிவு பிறந்தால் இத்தகைய சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்காது.

இறந்தோருக்காக நடுகல் அமைக்கும் முறை பண்டைய தமிழர் மரபில் இடம் பெறும் ஒன்று. ஒரு நடுகல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை தொல்காப்பியம் வரையறை செய்திருக்கின்றது.

வெவ்வேறு விதமான நடுகற்கள் பண்டைய தமிழகத்தில் வழிபாட்டில் இருந்தன. சில இன்னமும் வழிபாட்டில் தொடரப்படுகின்றன. அப்படிக் காணக்கிடைக்கின்ற வெவ்வேறு விதங்களில் அமைந்த நடுகற்களைப் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்வதும் நமக்குச் சுவாரசியமான அனுபவமாகத்தானே அமையும்.

எனது ஒவ்வொரு ஆண்டு தமிழகத்துக்கான வரலாற்றுப் பயணங்களிலும் நான் தேடிச்செல்லும் இடங்களில் ஆங்காங்கே மாறுபட்ட நடுகற்களைப் பார்த்ததுண்டு.

மிகச் சாதாரணமாக உருவங்கள் யாதுமன்றி நெடிய கல் ஒன்று மட்டும் வைக்கப்பட்டு அதுவே வழிபாடு பொருளாக இருக்கும். இதுவும் ஒருவகை நடுகல் தான்.

நடுகற்களில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவருக்காக எழுப்பப்படுவதை "புலி குத்திக் கல்" என வகைப்படுத்தி அழைக்கின்றார்கள். அண்மையில் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் எனும் சிற்றூரின் அருகே ஏறக்குறைய 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்படும் புலிக்குத்திக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கிராமத்தில் சேதங்களை ஏற்படுத்திய புலியுடன் சண்டையிட்டு மரணமடைந்து விட்ட வீரனுக்காக அவனது தாயார் எழுப்பிய கல்வெட்டு இது. இந்த நடுகல்லில் மேலும் சிறப்பாக மேற்பகுதியில் 3 வரிகளில் ஒரு செய்தி கல்வெட்டாகப் பதியப்பட்டிருக்கின்றது. “கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்பது தான் அச்செய்தி. பெரும்பாலான நடுகற்கள் கல்வெட்டுக்கள் இல்லாமலேயே அமைந்து விடுகின்றன. அதனால் இது யாருக்கு யாரால் எழுப்பப்பட்டது எனக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகின்றது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட நடுகல்லில் எழுத்துக்கள் மிகத் தெளிவாக அமைந்திருப்பதனால் இதனை உருவாக்கியவரின் பெயரையும் எதனால் இது எழுப்பப்பட்டது என்ற காரணத்தையும் 700 ஆண்டுகளுக்குப் பின்னரும் நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இதே போல கரூர் அருங்காட்சியகத்திலும் ஒரு புலிக்குத்திக் கல் ஒன்றினை நான் எனது அண்மைய பயணத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. பெண்ணையாற்றின் கரையில் ஆங்காங்கே கிடைக்கின்ற நடுகற்களில் புலிக்குத்தி நடுகல் ஒன்றும் இருக்கின்றது. இதனை எனது 2012ம் ஆண்டு பயணத்தில் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தேன்.

நடுகல்லில் மற்றொரு வகையும் உண்டு. கரூர் அருங்காட்சியகத்தில் இருக்கின்ற ஒரு நடுகல் வீரன் ஒருவன் தன் கையில் ஒரு வாளைப் பிடித்து குதிரையைத் தாக்குவது போல அமைந்திருக்கின்றது. இதனை "குதிரைக் குத்தப்பட்டான் கல்" என அழைக்கின்றனர். ஒரு போரில் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையைத் தீர்க்க குதிரையை வாள் கொண்டு தாக்கிய வீரன் இறந்து போய்விடுகின்ற நிலையில் அவன் நினைவாக எழுப்பப்படுவது தான் இந்த வகை நடுகல்.

2012ம் ஆண்டு நான் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது பெண்ணையாற்று நதிக்கரையோரம் அமைந்திருக்கும் பெண்ணேஸ்வரர் சிவாலயத்திற்குச் சென்றிருந்தேன். இக்கோயிலின் வாசலிலேயே சில நடுகற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வெளியே சாலையின் இரு புறமும் நடுகற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்துக் கொண்டே வந்தோம். சாலையின் வலது புறத்தில் உள்ள அடர்ந்த புதர் பகுதிகளில் பராமரிப்பு அற்ற நிலையில் ஆங்காங்கே நடுகற்கள் புதர்ச்செடிகளால் மூடிய படி கிடந்தன. அப்படி புதர் மூடிய ஒரு நடுகல்லைச் சென்று பார்த்து புகைப்படம் எடுப்போம் என நாங்கள் அருகில் சென்று சிறு கொடிகளையும் செடிகளையும் இழுத்து அப்புறப்படுத்தி அந்த நடுகல்லைப் பார்வையிட்டோம். அது ஒரு வீரன் வாளுடன் நின்ற வடிவில் அமைக்கப்பட்ட ஒரு நடுகல். கிராம மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மரணம் எய்திய அந்த வீரன் தெய்வமாக வழிபடப்படுவதைக் காட்டும் ஒரு நடுகல் தான் அது. இந்த அழகிய நடுகல் புதர் மண்டி பாதுகாப்பற்ற நிலையில் காட்டுக்குள் கிடப்பது தான் கொடுமை. இத்தகைய புராதனச் சின்னங்களை மீட்டெடுத்துப் பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியமல்லவா?

அதே சாலையில் நாங்கள் மேலும் பயணித்தபோது சிறு ஓடை ஒன்றின் அருகே மக்கள் வழிபாட்டில் இன்றும் இருக்கும் ஒரு நடுகல்லைப் பார்வையிட்டோம். அதில் ஒரு வீரனோடு அவன் மனைவியும் இணைந்து செல்வது போலச் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. அப்பெண்ணின் கையில் ஒரு பானை இருப்பது போலவும் வீரனின் கையில் அவன் வாள் ஏந்தி நடப்பது போலவும் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. வழிபாட்டில் இடம்பெறுவதால் மஞ்சள் சந்தனம் குங்குமம் என அலங்கரிக்கப்பட்டு நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

பெண்ணையற்றுக் கரை நடுகற்களுக்குப் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது போல கொங்கு மண்டலத்தின் கரூர், சேலம் போன்ற பகுதியிலும் பல இடங்களில் நடுகற்கள் கிடைப்பதைக் காணலாம்.

கொங்குமண்டலத்தின் அந்தியூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் மிகப்பிரசித்தி பெற்ற ஒரு கோயில். இங்கே கோயிலின் பின் பக்க கொல்லைப்புறத்தில் நவகண்டம் ஒன்றினை தற்செயலாக நான் காண நேர்ந்தது. கோயிலின் பழமையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கோயில் குருக்கள் ஒரு நவகண்டம் ஒன்று கொல்லைப்புறத்தில் இருப்பதாகக் குறிப்பிட, உடனே அதை தேடிச் சென்றேன். கோயில் அலுவலகத்தில் விசாரித்த பின்னர் அவர்களும் அதனை எடுஹ்ட்து காண்பிக்க முன் வந்ததால் கொல்லைப்புரம் சென்று மண்ணிற்குள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அண்டஹ் நவகல்லை திருப்பிப் பார்ஹ்ட்த போது வியந்தோம்.

மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு நவகண்டம் வகையிலான ஒரு நடுகல் அது. வீரனின் கையில் வாளுடன் தன்னை பலியிட்டுக் கொள்ளும் நிலையில் தன் மற்றொரு கையால் தலையைப் பிடித்தவாறு அமைக்கப்பட்ட சிற்பட்துடன் இந்த நடுகல் காட்சியளிக்கின்றது. இந்த நடுகல்லைப் பாதுகாக்கும் முயற்சியில் தற்சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு பாதுகாவலர் குழு ஈடுபட்டுள்ளது.

இதே போல தமிழகத்தின் பல சிற்றூர்களில் பொதுமக்கள் கண்டுபிடிக்கும் நவகண்டங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின. வயல்களில் புதையுண்டு பாதிப்பகுதி மட்டுமே தெரியும் வகையில் உள்ள நவகண்டங்களைப் பார்த்தவர்கள்புகைப்படங்கள் எடுத்துப் பகிர்ந்து கொள்கின்றனர். சாலை ஓரத்தில் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போன நடுகற்களும் கிடைக்கின்றன. இவை தமிழர் புராதனச் சின்னங்கள். இத்தகை புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் சீறிய முறையில் மேற்கொள்ளப்படும் போது விடுபட்டுப் போன பல வரலாற்றுச் செய்திகளை நாம் மீட்டெடுக்க வாய்ப்பு கிடைக்கும்!