தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை இன்றும் நமக்கு காட்டுவனவாக அமைந்திருக்கும் கோயில்கள் பல. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக அமைந்திருப்பவை மகாபலிபுரத்து குடைவரைக் கோயில்களும் காஞ்சிபுரத்து ஸ்ரீ கைலாசநாதர் கோயிலும். இது மட்டுமன்றி விழுப்புரம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகியவற்றுடன் பனைமலை தாளபுரீஸ்வரர் ஆலயமும் பல்லவ மன்னர்களின் கோயிற்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவை.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப்புராதனச் சிறப்பு மிக்க இடங்களின் பதிவுகளைச் செய்யத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுயினர் சென்றிருந்தோம். அந்தப் பட்டியலில் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தின் பெயரையும் இணைத்திருந்தேன். இந்தக் கோயில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கோவில்களும் கலைகளும் நீர் மேலாண்மையும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்ச்சியுர்றமைக்குச் சான்றாகத் திகழ்பவை.
செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்றது "பனைமலை". இது விவசாய நிலப்பகுதி நிறைந்த ஊர் என்றாலும் பாறைக்குன்றுகள் நிறைந்த ஒரு பகுதி. இங்குள்ள மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்று பெரிய ஏரி அமைந்துள்ளது. இது இரண்டாம் நரசிம்மன் அல்லது ராசசிம்மன் என அழைக்கப்படும் பல்லவ மன்னனால் அமைக்கப்பட்டது. இந்தக் கற்பாறை மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே இன்றும் காட்சியளிக்கின்றது பனைமலை.
வயல்பகுதியைக் கடந்து ஏரிப்பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் பெரிய பாரைக்குன்று இருக்கும்பகுதியில் கற்பாறைமலைமேல் அமைந்திருப்பதுதான் தாளகிரீஸ்வரர் ஆலயம். இது பல்லவர் கால கட்டுமானக் கலைக்குச் சிறப்பைப் சேர்க்கும் ஆலயங்களின் வரிசையில் தனி இடம் பெறும் ஒரு கோயில். ஆலயத்திற்குச் செல்லுமுன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் முதலில் நமக்குத் தெரிவது ஒரு பிள்ளையார் கோயில். பாறையை முற்றிலுமாக குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இது. ஆயினும் முன்பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களும் உள்ளன இதன் உள்ளே பெரிய பிள்ளையார் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் பாறைசுவற்றில் மூஞ்சுறு வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தொடங்கி மேல் நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். செங்குத்தான மலையில் ஏறுவதற்குப் பாறைகளையே படிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு சுரங்கப்பாதையின் வாயில் பகுதி தெரிகின்றது. இச்சுரங்கப்பாதை மேலே இருக்கும் கோயில்வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை தற்சமயம் புதர்கள் மண்டிக்கிடப்பதால் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றது.
படிகளைக் கடந்து செல்லும் போது பாறைகளுக்கிடையே குடைந்து சுனைகள் இருப்பதைக் காண முடிகின்றது. பெரிய குளங்களும் பாறைகளுக்கு இடையில் இருக்கின்றன. நீர் தேங்கி இருக்கும் குளங்களில் அல்லியும் தாமரைச்செடிகளும் நிறைந்திருக்கின்றன.
இந்தக் கோயிலை முதலில் பார்ப்பவர்கள் இது வெவ்வேறு காலத்து கட்டுமானங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கும் நிலையைக் காணலாம். இந்தக் கோயிலில் உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் ஏனைய இடங்களில் பல்லவர்களுக்குப் பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் கோயில் கட்டுமானப் பகுதியில் சீரமைப்பிற்காக மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். ஆங்காங்கே ஆலயத்தில் சுதைப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பல இடங்கள் உடைந்த நிலையில் இருக்கின்றன . இக்காரணங்களினால் மாறுபட்ட கட்டிட அமைப்புக்களை இடைக்கிடையே இருப்பதைக் காண முடிகின்றது.
கோவிலைச் சுற்றியும் எல்லாப் பகுதிகளிலும் ராஜசிம்ம பல்லவனுடைய காலத்து நிகழ்வுகளைக் கூறும் நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம். இவற்றில் பல நன்கு வாசிக்கக் கூடிய வகையிலேயே இருக்கின்றன. இன்றும் வாசிக்கக்கூடிய வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கருவறையின் தெற்குப் பக்க படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தத் தமிழ்க் கல்வெட்டுகள் பிற்காலத்தைவை.
தமிழகத்தின் காஞ்சிபுரம் அதன் கோயில்களுக்குப் புகழ்பெற்ற ஒரு நகரம். இங்குள்ள காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் ராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில். பல்லவ மன்னர்கள் இசை, நடனம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் எனக் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.
இந்தக் கோயிலின் விமானத்தின் உட்புறமோ, கருவறையிலோ இன்று ஓவியங்கள் எவையும் முழுமையாகக் காண முடியவில்லை. எனினும், விமானத்தைச் சுற்றி வரும் போது, கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஒரு சன்னிதியில் மட்டும் உள்ள ஓவியம் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தச் சன்னிதி உயரமாக ஏறக்குறையத் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியின் உள்ளே சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்கள்.
ஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகின்றன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது. சன்னிதிக்கு உள்ளே மறைவாக இந்த ஓவியம் இருப்பதால் தான் இன்றளவும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் முற்றிலும் சிதைவுறாமல் தப்பியுள்ளது எனக் கூறலாம். உமையம்மை தனது ஒரு காலை சிறிய மேடை மேல் நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி ஒயிலாக நின்ற கோலத்தில் இந்த ஓவியத்தில் காட்சி தருகின்றார். தெய்வீக எழில் நிறைந்த இந்த ஓவியம் இந்திய ஓவியக் கலைக்குச் சிறப்பைச் சேர்ப்பது.
இந்த ஆலயத்தின் வாயில் பகுதியிலிருந்து நோக்கினால் சிவலிங்க வடிவத்தை உமை பார்ப்பது போல் இக்காட்சி தோன்றும். இதே சன்னிதியின் மேற்பரப்பில் ஓவியங்கள் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளன.
மலைப்பகுதியிலிருந்து கீழிரங்கும் பகுதியில் கீழே நாட்டார் வழிபாட்டுத் தெய்வ வடிவங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர். சப்த கண்ணிகளின் உருவங்கள் கற்களால் அமைக்கப்பட்ட வகையில் காட்சியளிக்கின்றன. இதன் அருகில் உள்ள ஒரு குகையில் துர்க்கை அம்மனின் கருங்கற்சிலை ஒன்றும் உள்ளது.
இந்தக் கோயிலையும் அதன் சூழலையும், பல்லவ மன்னன் ராசசிம்மப்பல்லவன் உருவாக்கிய இந்த ஆலயத்தில் இருக்கும் உமை அம்மை ஓவியத்தைப் பற்றியும் விளக்கும் விழியப் பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப் பிரிவில் காணலாம்.
பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய புராதனச் சின்னம். தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் கோயிலாக இக்கோயில் உள்ளது. ஆயினும், இங்குள்ள ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.