உலகின் பல நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு நாடும் ஒரு வகையில் என் மனதைக் கவர்வதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருக்கும். ஆனால் வஞ்சகம் வைக்காமல் இயற்கை தன் எழிலை வாரி வழங்கியிருக்கும் ஒரு நாடு இலங்கை. அந்த இயற்கை அழகோடு சேர்ந்து, இலங்கையை ஆண்ட பேரரசுகளும், இலங்கையைக் கைப்பற்றிய பேரரசுகளும் கட்டி எழுப்பி, அதன் பின் விட்டுச் சென்ற கட்டுமானங்களின் தடயங்கள் இணைந்து இலங்கை இன்று உலகின் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள் நிறைந்த ஒரு நாடாகவே நமக்குத் திகழ்கின்றது.
உலக வரைப்பட உருவாக்கத்தில் மேலை நாட்டார் கடந்த ஏறக்குறைய ஆறேழு நூற்றாண்டுகளில் தீவிர நாட்டம் செலுத்தினர். இதற்கு முக்கியக் காரணமாக அமைவது அவர்களது ஏனைய நாடுகளுடனான வணிகப்போக்குவரத்து. ஐரோப்பிய நாடுகளும், ஸ்கேண்டிநேவிய நாடுகளும் கடல் வழி வணிகத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தாங்கள் செல்லும் நாடுகள், புதிதாக தங்கள் பயணத்தில் அவர்கள் கண்டுபிடிக்கும் நாடுகள் மற்றும் தீவுகளின் வரைப்படங்களைத் தயாரிப்பதில் பெறும் முனைப்பு காட்டினர். அத்தகைய முயற்சியில் இலங்கைத் தீவு பற்றிய வரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அவை இன்று நமக்கு அன்றைய இலங்கைத் தொடர்பான செய்திகளை வழங்கும் முக்கிய ஆவணங்களாகத் திகழ்வதோடு, அக்கால இலங்கையின் அமைப்பினை நமக்குக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகின்றன.
கி.பி.17ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவின் பெரும்பகுதி போர்த்துக்கீசியர்களாலும் உள்ளூர் இலங்கை மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது. போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தை எதிர்க்க உள்ளூர் இலங்கை மன்னர்கள் வணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்களின் உதவியை நாடினர். கி.பி.1638ம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் மன்னன் 2ம் ராஜசிங்கனுக்கும் டச்சு அரசு பிரதிநிதிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. டச்சு அரசின் தாக்கம் இதன்வழி இலங்கையில் காலூன்றத் தொடங்கியது. ஆனால் மன்னன் 2ம் ராஜசிங்கன் அதே வேளையில் பிரஞ்சுக்காரர்கள் உதவியையும் நாடியதோடு திரிகோணமலை துறைமுகத்தையும் அவர்களுக்கு வழங்கினார். இது டச்சுக்காரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இப்பகுதியைத் தாக்கி திரிகோணமலையை டச்சுக்காரர்கள் கைப்பற்றி தம் வசம் வைத்துக் கொண்டனர்.
படிப்படியாக இலங்கைத் தீவு Dutch Ceylon என்ற பெயரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் கி.பி.1640 முதல் 1796 வரை இருந்தது. கடற்கரையோர பகுதிகளை இக்காலகட்டத்தில் டச்சுப்படை கைப்பற்றியிருந்தது. ஆனால் கண்டியைக் கைப்பற்ற இயலவில்லை. 1638ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. டச்சுக்காரர்கள் தமிழர் வசம் இருந்த பகுதிகள் அனைத்தையும் தம் வசம் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர்.
இக்காலகட்டத்தில் தமிழகத்தின் தஞ்சையில் இருந்து இலங்கையின் மத்தியப் பகுதிக்குத் தோட்டங்களில் பணிபுரிய கூலித் தொழிலாளர்களாக தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஆரம்பத்தில் இலவங்கப்பட்டை தோட்டங்கள், புகையிலைத் தோட்டங்களில் பயிர்த்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்காலகட்டத்தில் இலங்கையில் டச்சு கடற்கரையோர அரசு (Dutch Coromandel) இயங்கிக் கொண்டிருந்தது. இதன் தலைமையகம் தமிழகத்தின் பழவேற்காடு பகுதியில் அமைந்திருந்தது. இதன் வழி தங்கள் காலணித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் தேவைப்படும் மனிதவளத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாட்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் தலைமையகம் செயல்பட்டது என்றும் அறியமுடிகின்றது.
Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இந்த இலங்கைத் தீவின் நில வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. Insel Zeilan என்பது டச்சு மொழிச் சொல். ஆக, இலங்கைத் தீவு டச்சுக்காலணித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த வரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த வரைப்படத்தின் அசல், காகிதத்தில் அச்சுப்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைப்படத்தில் மன்னார், கண்டி, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற பெயர்களை அடையாளம் காண முடிகின்றது.
Insel Zeilan என்று இலங்கைப் பற்றிய பெயர் குறிப்பு ஜெர்மானிய டோய்ச் மொழியில் வெளிவந்த ஆயிரத்து ஒர் இரவுகள் (Tausand und eine nacht) என்ற சிந்துபாத் கதையிலும், கி.பி 1755ல் வெளிவந்த ஜெர்மானிய டோய்ச் மொழி வர்த்தகம் தொடர்பான லைப்ஸிக் நகரில் அச்சிடப்பட்ட ஒரு நூலிலும் மேலும் சில 18ம், 19ம் நூற்றாண்டு நூல்களிலும் நாம் காண்கிறோம். அந்த அளவிற்கு ஐரோப்பாவின் வணிக மற்றும் இலக்கிய வட்டாரத்தில் பரிச்சயம் பெற்ற பெயராகவே இது இருந்திருக்கின்றது.
இந்த வரைப்படத்தை ஏலத்தில் வாங்கியவர் நோர்வே நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழரான திரு.வேலழகன். இந்த வரைப்படம் இலங்கைத் தீவின் முழுமையையும் குறிப்பதாக இதில் காட்டப்படவில்லை. குறிப்பாக இலங்கையின் தென்பகுதி இந்த வரைப்படத்தில் தென்படவில்லை. ஆக, ஆரம்பகால ஆசிய நிலப்பகுதிகளின் வரைப்பட முயற்சியாக இருக்கலாம் என நாம் ஒரு வகையில் ஊகிக்கலாம். அத்துடன் டச்சு காலணித்துவ காலகட்டத்தையும் அச்சு இயந்திரங்கள் பரவாலாக செயல்படத்தொடங்கிய நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டால், இது ஏறக்குறைய கி.பி 17ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது.
இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. யாழ்ப்பாண தீபகற்பத்திற்குத் தெற்கே, இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது இக்கோட்டை. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பின் அதன் தொடர்ச்சியிலும் ஆட்சி புரிந்த டச்சுக்காரர்கள் இக்கோட்டையை மேலும் விரிவாக்கி தற்போது நாம் காணும் நட்சத்திர வடிவத்துடன் இக்கோட்டையை அமைத்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்னர் இலங்கை தீவை ஆண்ட பிரித்தானியர் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அடிப்படை தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை . ஆகவே இக்கோட்டை டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு ஈராயிரத்திற்கும் முற்பட்ட காலகட்டத்திலேயே ரோமானியருடனும், இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளுடனும், ஏனைய கிழக்காசிய நாடுகளுடனும் வணிகப் போக்குவரத்துக்கள் இருந்தமையும், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதி செய்கின்றன. பழமையான கற்கோவில்கள் இங்கு இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கின்றன. பிற்கால ஐரோப்பியர் வருகையின் போது அவை சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பது இந்த யாழ்ப்பாணக் கோட்டை உள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி தெரிய வருகின்றது.
தமிழகத்தை ஆண்ட சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சி காலத்தில் கைப்பிற்றினான். அப்போது இலங்கையின் இன்றைய பொலநருவை உட்பட பல பகுதிகளில் அவனால் சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன், இங்குக் கட்டப்பட்ட கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது.
இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, இப்பகுதி சோழமன்னர் ஆட்சிகாலத்தில், அதாவது கி.பி 9, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஒரு வணிகப் பெறுநகரமாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக அமைகிறது. இக்கோட்டை அமைந்திருக்கும் பகுதி ஐந்நூற்றுவன் வளவு என அழைக்கப்படுகின்றது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுக்களின் பெயர்களையும் நகரங்களின் பெயரையும் ஒத்த வகையில் இது அமைந்திருப்பதையும் காணவேண்டியுள்ளது. இது இப்பகுதி ஒரு வணிகப்பெருநகரமாக அக்காலகட்டத்தில் திகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.
டச்சுக்காரர்கள் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறும் கோட்டையைக் கட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய கற்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்ற வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அருகில் உள்ள வேலனை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டன என்ற செய்திகளை அறியமுடிகின்றது.
இத் தீவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து முருகக் கற்களைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் 3 பணம் வழங்கப்பட்டது என்றும், கடலிலிருந்து கற்களைச் சேகரித்து தோணி ஏற்றுவதற்கு தோணி ஒன்றுக்கு அரைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.
டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது இக்கோட்டைக்குள் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. கி.பி1730ல் கட்டிமுடிக்கப்பட்ட இத்தேவாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. தற்சமயம் இந்தத் தேவாலயம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தின் முழுமையான வடிவமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாத அளவில் ஆலயம் முற்றாக அழிந்து கல் மேடாகக் காட்சியளிக்கிறது.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற போரில் இந்த யாழ்ப்பாணக் கோட்டை பெரிய பாதிப்பை சந்தித்தது. போருக்குப் பின் இன்று இக்கோட்டையின் சில பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் கோட்டை உள்ள இப்பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களும் பழமையான சிவாலயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் தூண்கள், கட்டிடத்தின் பாகங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
இக்கோட்டைப்பகுதியில் மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுமானால் இப்பகுதியின் பண்டைய நாகரிகமும் வணிகச் சிறப்பும் மேலும் ஆய்வுலகத்தினால் வெளிக்கொண்டரப்படலாம்.
தங்கள் பயண அனுபவங்கள் & ஆய்வுகளின் விரிவான, விளக்கமான, அருமை கட்டுரை.., உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDelete