Thursday, February 28, 2019

97. யாழ்ப்பாணத்து மண் வாசனை

கடந்த 2018ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் செயல்பாடுகளில் மேலும் ஒரு வளர்ச்சியைச் சந்தித்த ஆண்டு எனத் தயங்காது குறிப்பிடலாம். அதற்கு முக்கியக் காரணம் 29.10.2018 அன்று இலங்கையின் யாழ் நகரில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருந்த  வரலாற்று ஆய்வுப் பயிலரங்க  நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று, இலங்கையின் வடக்கு, கிழக்கு, மத்திய மலையகப் பகுதி, தென்னிலங்கை ஆகிய பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகத்தைச் சார்ந்தோரும், கல்வித்துறையைச் சார்ந்தோரும், வரலாற்று மற்றும் சமூக ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர்களுமாக இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை செயல்படத் தொடங்கியிருக்கின்றது.கொழும்பில் தொடங்கியது எங்கள் பயணம். விமான நிலையத்திலிருந்து கொழும்பு மைய நகரம் நோக்கி டாக்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எல்லா கட்டிடங்களிலும், பேருந்துகளிலும், சாலைகளிலும் மூன்று மொழிகளில், அதாவது சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகைகளும் குறிப்புகளும் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.  நாங்கள் பயணித்து வந்த டாக்சி ஓட்டுநர் ஒரு சிங்களவர். அவரிடம் மக்களுக்கிடையே நிலவும் சூழலைப் பற்றி பேச்சுக் கொடுத்து விசாரித்துக் கொண்டே வந்தோம். 'இலங்கையில் சிங்களவர் -தமிழர் என்ற பிரிவு இருந்தாலும் ஒருவருக்கொருவர் எதிரிகள் போல பார்ப்பது கிடையாது என்றும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தங்கள் சுயநலத்துக்காகப் பிரிவினையைத் தொடர்கின்றனர்',  என அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பெயர் மகேந்திரன். தமிழ்ப் பெயர் போல இருக்கின்றதே என நான் வினவ, 'இங்குப் பெயர்களில் பெரிதாக வேறுபாட்டைக் காணமாட்டீர்கள்' என கூறி சிரித்துக் கொண்டார்.

 கொழும்பு நகரில் சில மணி நேரங்கள் இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு அன்று அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கொழும்பு நகரில் கொழும்பு-6 பகுதியில் செயல்பட்டு வரும் கொழும்பு தமிழ்ச்சங்க அலுவலக கட்டிடத்திற்குச் சென்றிருந்தோம். பெரிய வளாகத்தில் ஒரு நூலகம் மற்றும் ஒரு பெரிய மண்டபம் ஆகியவற்றோடு, மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது. நூலகத்தில் அரிய பல தமிழ் நூல்கள் இருக்கின்றன. வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய ஐம்பெருங்காப்பியங்களும் இந்த நூலகத்தின் சேகரத்தில் உள்ளன.  புதிய வெளியீடுகளும் உள்ளன. சஞ்சிகைகள், புகைப்படங்கள் போன்ற வகை ஆவணங்களும் இங்குள்ளன. நாங்கள் சென்றிருந்த வேளையில் தமிழ்ச்சங்கத்தின் ஒரு பகுதியில் இசை வகுப்பும் ஒரு பகுதியில் நாட்டிய வகுப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மாலை தமிழ்ச்சங்கத்தில் பட்டிமன்றம் ஒன்றும் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் பங்கு பெற்றுப் பேசிய எட்டு பேச்சாளர்களும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களின் பேச்சுத் திறனும் சிந்தனைத் திறனும், மொழி ஆளுமையும் கேட்போரை வியக்க வைக்கும் வகையிலமைந்திருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். சமகால அரசியல் சூழலை அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துக்கள் வழி வெளிப்படுத்தும் வகையில் இவர்கள் திறமையோடு பேசியது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

அன்று இரவே பேருந்து பயணத்தின் வழி யாழ்ப்பாணம் நகரை வந்தடைந்தோம்.    யாழ்ப்பாணம் நகரை எங்கள் பேருந்து வந்தடையும் போது அதிகாலை ஐந்து மணி ஆகியிருந்தது. பேருந்தை விட்டு வெளியே வந்து தமிழ்க்காற்றை சுவாசித்த தருணங்கள் மனதை விட்டு நீங்காத தருணங்கள்.  பேருந்திலிருந்து வெளியே வந்து அந்த அதிகாலை வெளிச்சத்தில் சாலையின் இரு புரமும் நோக்கியபோது முற்றிலும் தமிழில் ஒரு நகர் இருப்பதைப் பார்த்த அந்த நொடிகளில் எங்கள் மனம் அடைந்த பேருவகையை விவரிக்க வார்த்தையில்லை.  அன்று காலையே நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்று நடைசார்த்தியிருந்தமையால் வெளியே இருந்தவாறு தரிசித்து விட்டு, தின்னவேலி (திருநெல்வேலி) பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம். யாழ்ப்பாண நகரின் சாலைகளின் இருபுறமும் செழித்து வளர்ந்திருந்த முருங்கை, தென்னை மரங்களின் பசுமையை ரசித்தவாறே உரும்பிராய் பகுதிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டோம். அன்றைய நாளில் செய்யவேண்டிய வரலாற்றுப் பதிவுகளுக்கான நீண்ட பட்டியல் இருந்தது.

27.10.2018 அன்று காலை தொடங்கி இரவு வரை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளையும் ஆய்வுகளையும் எமது குழு மேற்கொண்டது. அதில் குறிப்பிடத்தக்கனவாக
-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்றுத் தொல்லியல் துறை ஆய்வுகள் பற்றிய தகவல்கள். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் சந்திப்பு மற்றும் பல்கலைக்கழக வரலாறு தொடர்பான பதிவுகள்.
-யாழ்ப்பாண தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று அங்குச் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரும்பொருள்களைப் பார்வையிட்டு ஆராய்தல்
-புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ள யாழ் நூலகத்திற்குச் சென்று பார்வையிடல்
-டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படும் யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்று வரலாற்றுப் பதிவு மேற்கொள்ளுதல்
-நல்லூர் கந்தசாமி கோயிலில் வழிபாடு
-108 சிவலிங்க வடிவங்கள் சூழ தட்சிணாமூர்த்தி சிலை கருவறையில் அமைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட கோயிலான சிவபூமி திருவாசக அரண்மணை கோயில்
-யமுனா ஏரி
-சங்கிலியான் அரண்மனை
-சங்கிலியான் குளம்
-சங்கிலியான் மனை
-மந்திரி மனை
ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் செய்து வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைக்கப்பட்டு வருகின்றன.

மறு நாள் 28.10.2018 (ஞாயிறு) காலையே எங்களது வரலாற்றுப் பதிவு நடவடிக்கைகள் தொடங்கின.

முதலில் நாங்கள் யாழ்ப்பாணத்தின் பௌத்த சுவடுகள் இன்றும் நிலைத்திருக்கும்  வரலாற்றுப் பகுதியான  கந்தரோடைக்குச் சென்றோம். இது தமிழ் பௌத்தம் நிலைபெற்றிருந்த பகுதியாக அறியப்படும் தொல் பழங்கால மனிதர்கள் வாழ்விடமாகும். அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு ஆய்வுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு பகுதி இது. இப்பகுதியில் தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் நடமாட்டம் இருக்கின்றது. நாங்கள்  சென்றிருந்த சமயத்தில் இரண்டு இராணுவத்தினர் வருவோர் போவோரிடம் சிங்கள மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். எங்களிடமும் வந்து பேசினர். இப்பகுதியை விரிவாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுடன் வந்திருந்த  பேராசிரியர்.புஷ்பரட்ணம் அவர்களிடம்  சிங்களத்தில் கூறிச் சென்றனர். பேருந்துகளில் சிங்களவர்கள் வந்து இப்பகுதியைப் பார்த்துச் செல்கின்றனர்.

கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து சென்றோம். தற்சமயம் சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகள் தென்படுகின்றன. இவை இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகள் என ஒருவர் குறிப்பிட்டார். வீடுகளின் தரம் மிக எளிமையானதாக உள்ளது. பத்து ஆண்டுகளாவது இவை தாங்குமா என்பதே சந்தேகம் எனும் வகையில் இவ்வீடுகள் இன்றே  காட்சியளிக்கின்றன.

அடுத்து எங்கள் பயணத்தில் அமைந்தது கீரிமலை சிவாலயம். இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழம் கோயில் என அறியப்படுவது. போரில் மிகுந்த சேதம் அடைந்த இக்கோயில், கடந்த ஆண்டு முழுமையாக புதிதாக கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது இவ்வாலயம். கோயிலின் உள்ளே சிவபுராணக் காட்சிகள் சுவர்களில் ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு அருகாமையிலேயே இருப்பது மாவட்டபுரம் கந்தசாமி கோயில். இது கீரிமலை கோயில் அருகிலேயே இருக்கும் ஒரு சிவாலயம். போரினால் மிகுந்த சேதம் அடைந்த சிவாலயங்களில் ஒன்று இது. தற்சமயம் இக்கோயில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் செயல்படும் துர்க்கையம்மன் கோயிலுக்கும் வரும் வழியில் சென்று வழிபட்டோம். இங்கு போரின் போது ஏற்பட்ட பாதிப்புகளினால்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இயங்கி வருகின்றது. சைவ ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இவ்வளாகத்திலேயே  உள்ளது. துர்க்கைக்கான அர்ச்சனையாக இங்கு மனநலம் பாதிக்கபப்ட்ட பெண்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கான போற்றி பாடல் இங்கு வழிபாட்டில் ஓதப்படுகின்றது.

அன்று மதியம் குரும்பையூர் (குரும்பசிட்டி) கிராமத்தில் ஏற்பாடாகியிருந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தினவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் குழுவினர் கலந்து கொண்டோம். முற்றிலும் அழிக்கப்பட்ட, 30 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமம் தான் குரும்பசிட்டி. இங்குத் தற்சமயம் புது குடியேற்றம் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் ஏற்பாடாகியுள்ளது. அன்றைய நிகழ்வில்  குழந்தைகளின் நலனுக்காக பெரும் சேவையாற்றும் ஆசிரியை வலன்ரீனா, பள்ளி அதிபர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம். அத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் சார்பாக இப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக இலங்கை ரூபாய் ஐம்பதாயிரம் நன்கொடையை வழங்கினோம். அன்றைய நாளின் மாலை வேளையில் திருமறை கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் பன்மொழிப்புலவர் பாதிரியார் மரியசேவியர் அவர்களையும் அவரது அமைப்பின் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம். அப்போது இந்தக் கலை அமைப்பின் செயல்பாடுகள் குறித்த பேட்டி ஒன்றும் பதிவாக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் தெருக்களில் தமிழகத்தில் காண்பது போல ஆட்டோக்களைக் காணலாம். இங்கே பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு, ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் என பல வர்ணங்களிலான ஆட்டோ வாகனங்கள் சாலைகளில் இயங்குகின்றன.

யாழ்ப்பாணப் பயணத்தின்  முத்தாய்ப்பாய் 29.10.2018 அன்று  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அமைப்பாக்க நிகழ்வும் தொடக்கவிழாவும், வரலாற்றுப் பயிலரங்கும் நடைபெற்றது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 200 ஆய்வாளர்களும் மாணவர்களும் இந்தப் பயிலரங்கில்  பங்கு கொண்டனர். இதே நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக்  கிளை தொடக்கி வைக்கப்பட்டது.

அன்று மதியம் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழுவினர் கலந்து கொண்டோம். 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இது. 1995 முதல் 2002 வரை இராணுவக்கட்டுப்பாட்டில் இக்கல்லூரியின் வளாகம் இருந்தாலும், கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு இன்று வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. பெருமளவில் மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு ஆசிரியர் பயிற்சி மேற்கொள்வதை அறிந்து கொண்டோம். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட எங்களைப் பயிற்சி ஆசிரியர்கள் கோலாட்டம் ஆடி  மகிழ்வித்து அழைத்துச் சென்றனர்.

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா..!
என்ற பாடலையும் மேலும் பல தமிழிசைப்பாடல்களையும் இயற்றிய வீரமணி ஐயர் ஆசிரியராகப்பணிபுரிந்த கல்லூரி என்பது  இதன் தனிச்சிறப்பு. அன்றைய நிகழ்வில் பயிற்சி ஆசிரியர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. பின்னர் யாழ்ப்பாணக் குடாபகுதியில் அமைந்திருக்கும் மாதகல் பகுதிக்குச் சென்று ஆய்வு செட்ய்ஹோம். இதுவே கி.மு3ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு  அசோகச் சக்கரவர்த்தியின் திருமகளான சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அறியப்படுகின்றது.

எங்கள் யாழ்ப்பாண பயணத்தின் இறுதி நாளில் இலங்கைக்கான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு விக்ணேஸ்வரன் அவர்களுடன் ஒரு சந்தித்து ஏற்பாடாகியிருந்து. இலங்கையின்  தற்கால அரசியல் நிலைத்தன்மை, தமிழர்களின் அரசியல் புரிதல், மற்றும் செயல்பாடுகள் பற்றியும் இந்தச் சந்திப்பில் உரையாடினோம்.

வரலாறு, சமூகம், அரசியல், கலை என பல்வகை பரிமாணங்களில் யாழ்ப்பாணத்தை உள்வாங்கிக் கொள்ள இந்த குறுகியகால யாழ்ப்பாணப்பயணம் உதவியது. நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் தனித்துவம் வாய்ந்ததோர் மாகாணம். இங்கு ஊருக்கு ஒரு நூலகம் என இருப்பதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தேன். கல்விக்குக் கோயில் எழுப்பி வழிபட்ட தமிழர்களுக்குச் சொந்தமான நிலம் தான் யாழ்ப்பாணம் அந்த நிலத்தில் இருந்த நான்கு நாட்களும் தூய தமிழ் மண்வாசனை எங்கள் மனதை நிறைத்தது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை மரபுரிமை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் செய்திகளையும்  http://www.srilanka.tamilheritage.org/  என்ற வலைப்பக்கத்தில் காணலாம்.Thursday, February 21, 2019

96. இலங்கைத் தீவின் ஐரோப்பிய சுவடுகள்உலகின் பல நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு நாடும் ஒரு வகையில் என் மனதைக் கவர்வதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருக்கும். ஆனால் வஞ்சகம் வைக்காமல் இயற்கை தன் எழிலை வாரி வழங்கியிருக்கும் ஒரு நாடு இலங்கை. அந்த இயற்கை அழகோடு சேர்ந்து,  இலங்கையை ஆண்ட பேரரசுகளும், இலங்கையைக் கைப்பற்றிய பேரரசுகளும் கட்டி எழுப்பி, அதன் பின் விட்டுச் சென்ற கட்டுமானங்களின் தடயங்கள் இணைந்து இலங்கை இன்று  உலகின் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள் நிறைந்த ஒரு நாடாகவே நமக்குத் திகழ்கின்றது.

உலக வரைப்பட உருவாக்கத்தில் மேலை நாட்டார் கடந்த ஏறக்குறைய ஆறேழு நூற்றாண்டுகளில் தீவிர நாட்டம் செலுத்தினர். இதற்கு முக்கியக் காரணமாக அமைவது அவர்களது ஏனைய நாடுகளுடனான வணிகப்போக்குவரத்து. ஐரோப்பிய நாடுகளும், ஸ்கேண்டிநேவிய நாடுகளும்   கடல் வழி வணிகத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தாங்கள் செல்லும் நாடுகள், புதிதாக தங்கள் பயணத்தில் அவர்கள் கண்டுபிடிக்கும் நாடுகள் மற்றும் தீவுகளின் வரைப்படங்களைத் தயாரிப்பதில் பெறும் முனைப்பு காட்டினர். அத்தகைய முயற்சியில் இலங்கைத் தீவு பற்றிய வரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அவை இன்று நமக்கு அன்றைய இலங்கைத் தொடர்பான செய்திகளை வழங்கும் முக்கிய ஆவணங்களாகத் திகழ்வதோடு, அக்கால இலங்கையின் அமைப்பினை நமக்குக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகின்றன.  

கி.பி.17ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவின் பெரும்பகுதி போர்த்துக்கீசியர்களாலும் உள்ளூர் இலங்கை மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது. போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தை எதிர்க்க உள்ளூர் இலங்கை மன்னர்கள் வணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்களின் உதவியை நாடினர். கி.பி.1638ம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் மன்னன் 2ம் ராஜசிங்கனுக்கும் டச்சு அரசு பிரதிநிதிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. டச்சு அரசின் தாக்கம் இதன்வழி இலங்கையில் காலூன்றத் தொடங்கியது. ஆனால் மன்னன் 2ம் ராஜசிங்கன் அதே வேளையில் பிரஞ்சுக்காரர்கள் உதவியையும் நாடியதோடு திரிகோணமலை துறைமுகத்தையும் அவர்களுக்கு வழங்கினார். இது டச்சுக்காரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இப்பகுதியைத் தாக்கி திரிகோணமலையை டச்சுக்காரர்கள் கைப்பற்றி தம் வசம் வைத்துக் கொண்டனர்.

படிப்படியாக இலங்கைத் தீவு Dutch Ceylon என்ற பெயரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் கி.பி.1640 முதல் 1796 வரை இருந்தது. கடற்கரையோர பகுதிகளை இக்காலகட்டத்தில் டச்சுப்படை கைப்பற்றியிருந்தது. ஆனால் கண்டியைக் கைப்பற்ற இயலவில்லை. 1638ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. டச்சுக்காரர்கள் தமிழர் வசம் இருந்த பகுதிகள் அனைத்தையும் தம் வசம் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர்.

இக்காலகட்டத்தில் தமிழகத்தின் தஞ்சையில் இருந்து இலங்கையின் மத்தியப் பகுதிக்குத் தோட்டங்களில் பணிபுரிய கூலித் தொழிலாளர்களாக தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஆரம்பத்தில் இலவங்கப்பட்டை தோட்டங்கள், புகையிலைத் தோட்டங்களில் பயிர்த்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்காலகட்டத்தில் இலங்கையில் டச்சு கடற்கரையோர அரசு (Dutch Coromandel) இயங்கிக் கொண்டிருந்தது. இதன் தலைமையகம் தமிழகத்தின் பழவேற்காடு பகுதியில் அமைந்திருந்தது. இதன் வழி தங்கள் காலணித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் தேவைப்படும் மனிதவளத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாட்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் தலைமையகம் செயல்பட்டது என்றும் அறியமுடிகின்றது.

Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இந்த இலங்கைத் தீவின் நில  வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. Insel Zeilan என்பது டச்சு மொழிச் சொல். ஆக, இலங்கைத் தீவு டச்சுக்காலணித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த வரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த வரைப்படத்தின் அசல், காகிதத்தில் அச்சுப்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைப்படத்தில் மன்னார், கண்டி, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற பெயர்களை அடையாளம் காண முடிகின்றது.

Insel Zeilan என்று இலங்கைப் பற்றிய பெயர் குறிப்பு ஜெர்மானிய டோய்ச் மொழியில் வெளிவந்த ஆயிரத்து ஒர் இரவுகள் (Tausand und eine nacht) என்ற சிந்துபாத் கதையிலும், கி.பி 1755ல் வெளிவந்த ஜெர்மானிய டோய்ச் மொழி வர்த்தகம் தொடர்பான லைப்ஸிக் நகரில் அச்சிடப்பட்ட ஒரு நூலிலும் மேலும் சில 18ம், 19ம் நூற்றாண்டு நூல்களிலும் நாம் காண்கிறோம். அந்த அளவிற்கு ஐரோப்பாவின் வணிக மற்றும் இலக்கிய வட்டாரத்தில் பரிச்சயம் பெற்ற பெயராகவே இது இருந்திருக்கின்றது.

இந்த வரைப்படத்தை ஏலத்தில் வாங்கியவர் நோர்வே நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழரான திரு.வேலழகன்.  இந்த வரைப்படம் இலங்கைத் தீவின் முழுமையையும் குறிப்பதாக இதில் காட்டப்படவில்லை. குறிப்பாக இலங்கையின் தென்பகுதி இந்த வரைப்படத்தில் தென்படவில்லை. ஆக, ஆரம்பகால ஆசிய நிலப்பகுதிகளின் வரைப்பட முயற்சியாக இருக்கலாம் என நாம் ஒரு வகையில் ஊகிக்கலாம். அத்துடன் டச்சு காலணித்துவ காலகட்டத்தையும் அச்சு இயந்திரங்கள் பரவாலாக செயல்படத்தொடங்கிய நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டால், இது ஏறக்குறைய கி.பி 17ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. 

இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. யாழ்ப்பாண தீபகற்பத்திற்குத் தெற்கே, இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது இக்கோட்டை. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பின் அதன் தொடர்ச்சியிலும் ஆட்சி புரிந்த டச்சுக்காரர்கள் இக்கோட்டையை மேலும் விரிவாக்கி தற்போது நாம் காணும் நட்சத்திர வடிவத்துடன் இக்கோட்டையை அமைத்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்னர் இலங்கை தீவை ஆண்ட பிரித்தானியர் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அடிப்படை தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை . ஆகவே இக்கோட்டை டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு ஈராயிரத்திற்கும் முற்பட்ட காலகட்டத்திலேயே ரோமானியருடனும், இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளுடனும், ஏனைய கிழக்காசிய நாடுகளுடனும் வணிகப் போக்குவரத்துக்கள் இருந்தமையும், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதி செய்கின்றன. பழமையான கற்கோவில்கள் இங்கு இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கின்றன. பிற்கால ஐரோப்பியர் வருகையின் போது அவை சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பது இந்த யாழ்ப்பாணக் கோட்டை உள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி தெரிய வருகின்றது.

தமிழகத்தை ஆண்ட சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சி காலத்தில் கைப்பிற்றினான். அப்போது இலங்கையின் இன்றைய பொலநருவை உட்பட பல பகுதிகளில் அவனால் சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன், இங்குக் கட்டப்பட்ட கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது.

இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, இப்பகுதி சோழமன்னர் ஆட்சிகாலத்தில், அதாவது கி.பி 9, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஒரு வணிகப் பெறுநகரமாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக அமைகிறது. இக்கோட்டை அமைந்திருக்கும் பகுதி ஐந்நூற்றுவன் வளவு என அழைக்கப்படுகின்றது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுக்களின் பெயர்களையும் நகரங்களின் பெயரையும் ஒத்த வகையில் இது அமைந்திருப்பதையும் காணவேண்டியுள்ளது. இது இப்பகுதி ஒரு வணிகப்பெருநகரமாக அக்காலகட்டத்தில் திகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.
டச்சுக்காரர்கள் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறும் கோட்டையைக் கட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய கற்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்ற வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அருகில் உள்ள வேலனை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டன என்ற செய்திகளை அறியமுடிகின்றது.

இத் தீவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து முருகக் கற்களைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் 3 பணம் வழங்கப்பட்டது என்றும், கடலிலிருந்து கற்களைச் சேகரித்து தோணி ஏற்றுவதற்கு தோணி ஒன்றுக்கு அரைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.
டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது இக்கோட்டைக்குள் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. கி.பி1730ல் கட்டிமுடிக்கப்பட்ட இத்தேவாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. தற்சமயம் இந்தத் தேவாலயம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தின் முழுமையான வடிவமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாத அளவில் ஆலயம் முற்றாக அழிந்து கல் மேடாகக் காட்சியளிக்கிறது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற போரில் இந்த யாழ்ப்பாணக் கோட்டை பெரிய பாதிப்பை சந்தித்தது. போருக்குப் பின் இன்று இக்கோட்டையின் சில பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் கோட்டை உள்ள இப்பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களும் பழமையான சிவாலயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் தூண்கள், கட்டிடத்தின் பாகங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.இக்கோட்டைப்பகுதியில் மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுமானால் இப்பகுதியின் பண்டைய நாகரிகமும் வணிகச் சிறப்பும் மேலும் ஆய்வுலகத்தினால் வெளிக்கொண்டரப்படலாம்.