பள்ளிப்படை கோயில் என்பது, இறந்து போன அரசகுடும்பத்தினரில், குறிப்பாக அரசன் அல்லது அரசிக்கு அமைக்கப்பட்ட சமாதி கோயில் எனச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக சிவதீட்சை பெற்றவராக அந்த அரச குடும்பத்தவர் இருக்க வேண்டியதும் மிக அவசியம். இறந்தவரின் உடலைச் சுத்தம் செய்து, புதைக்கப்பட உள்ள இடத்தில் ஒரு பள்ளத்தினை அமைத்து, பின்னர் அந்த உடலை கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் அமர வைத்து, உட்கார்ந்த வகையில் அந்த உடலுக்கு இறைவடிவங்களுக்குச் செய்வது போன்ற எல்லா வகை அபிஷேகங்களையும் செய்து, படையல்களைத் தயாரித்து அவற்றை அந்த உடலுக்குக் கொடுப்பதாக பாவித்து அந்த உடலை அந்த உட்கார்ந்த நிலையில் அப்படியே மண்ணை மூடிப் புதைத்து, அதன் மேல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வர். ஒரு சில இடங்களில் இதற்குப் பதிலாக இறந்த உடலின் சமாதி மேல் அரசமரத்தினை நட்டு அதன் பக்கத்தில் சமாதியை வைப்பதும் வழக்கம்.
அப்படி ஒரு கோயிலைப்பற்றியது தான் இன்றைய பதிவு.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் கால கோயில்களைக் காணும் ஒரு முயற்சியாக டாக்டர். பத்மாவதி, இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன், நான் ஆகியோர் சென்றிருந்த போது குறிப்பிடத்தக்க சில இடங்களைக் காண வேண்டும் என ஒரு பட்டியல் போட்டுக் கொண்டு கும்பகோணம் பகுதியிலும் அதன் சுற்றுப்புற நகரங்களிலும் கிராமங்களிலும் தேடிச் சென்றோம். பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி கோயில் எங்கள் பட்டியலில் இருந்தது. முதலில் கோயிலை சரியாகக் கண்டுபிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், உள்ளூர் மக்கள் வந்து வழி காட்டியதால் இந்தக் கோயிலை கண்டுபிடித்துப் பார்க்க முடிந்தது.
இந்த சோழர்காலக் கோயில் இன்று இருக்கும் வடிவில் இன்றைக்கு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரை இல்லை. 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் இக்கோயில் அறியப்பட்டு, முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம். பழுவேட்டறையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவி மாவேந்தன் ராஜராஜ சோழனின் துணைவியர்களில் ஒருவர். கடாரம் வென்ற ராஜேந்திர சோழனின் சிற்றன்னை தான் இந்தக் கோயிலின் நாயகி பஞ்சவன் மாதேவியார். தன் சிற்றன்னை நினைவாகப் பேரரசன் ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் இது.
பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்துக் கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
தமிழகத் தொல்லியல் துறை இக்கோயிலைக் கண்டறிந்தபோது இக்கோயிலைச் சுத்தம் செய்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டியது பெரிய காரியமாக இருந்திருக்கின்றது. இந்தப் பெரும் பணியை குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இவர்கள் கோயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பதை என்னுடன் பயணத்தில் இணிஅந்து கொண்ட டாக்டர்.பத்மாவதி சுவாரசியத்துடன் விளக்கினார்.
கோயில் மண்புதற் சூழ்ந்து காடுகள் நிறைந்து இப்பகுதி இருந்திருக்கின்றது. ஒரு குழு கோபுரப் பகுதியைச் சுத்தம் செய்து மரம் செடி கொடிகளையெல்லாம் வெட்டியெடுத்திருக்கின்றார்கள். இன்னொரு குழு கோயில் சுற்றுப் புரத்தில் மண்டிக் கிடந்த காடுகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றாரகள். டாக்டர்.பத்மாவும் சிலரும் கோயிலுக்குள் கிடந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தி சிலைகளைச் சுத்தப்படுத்தி பிரகாரப்பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள். அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயில் முழுமையையும் தூய்மைப் படுத்தி கோயிலை வழிபாட்டுக்கு உகந்த வகையில் புத்துயிர் கொடுத்திருக்கின்றார்கள்.
பின்னர் இக்கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பு அவ்வூர் மக்களுக்கே என அமைத்துக் கொடுத்து விட்டு வந்திருக்கின்றனர். தற்சமயம் கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது வர்ணங்களுடன் கோபுரம் காட்சியளிக்கின்றது.
இந்தக் கோயிலுக்கு அதிக அளவு மக்கள் வந்து போவதாக அறியமுடியவில்லை.ஆயினும் தொடர்ந்து ஊர் மக்கள் கோயிலைப் பராமரித்து வருகின்றரகள். நாங்கள் சென்றதை அறிந்து கோயிலில் பூசை செய்யும் ஒருவர் வந்து இரும்புக் கதவுகளைத் திறந்து விட்டு எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளூர் மக்கள் சிலரும் நாங்கள் என்ன செய்கின்றோம் என்படஹி அறிந்து கொள்ள ஆவலௌடன் வந்து நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் கோயிலுக்குள் செல்லும் போது வௌவால்கள் கடந்து பறந்து சென்றன. கோயிலின் வெளிப்பகுதியைச் சுர்றிப்பார்த்தேன். சுற்றுப்புறச் சுவர் அனைத்திலும் மிகத் தெளிவான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்டு விட்டன என்ற நல்ல செய்தியை டாக்டர்.பத்மாவதி தெரிவித்தபோது மனமகிழ்ந்தேன்
இந்தப் பஞ்சவன் மாதேவி கோயிலில் சமாதியின் மேலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடியில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிவதீட்சை பெற்றோர் உடலை தீக்கு இரையாக்கக்கூடாது என்பது சைவ மரபு. அப்படி சிவதீட்சை பெற்ற ஒருவரது உடலை எரித்தால் அது சிவபெருமானின் உடலை தீக்கு இரையாக்குவதற்குச் சமம் என்ற நம்பிக்கை சைவ மரபில் உண்டு. அப்படிச் செய்யும் போது அது நாட்டில் நோய்,பஞ்சம், வறுமை போன்ற கெட்ட பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்கும் என்பது இந்த நம்பிக்கையில் அடங்குகின்றது. பொதுவாக சிவதீட்சை பெற்று இறந்தவரின் சமாதி என்பது சிவன்கோவிலுக்குச் சமம் என்ற கருத்தும் இருப்பதால் சிவன்கோவிலில் செய்யப்படும் அனைத்துப் பூஜைகளும் இவ்வகை கோயில்களிலும் செய்யப்பட வேண்டும் என்பது நியதியாக இருக்கின்றது. அந்த வகையான ஒரு அமைப்பாகக் கட்டப்பட்ட கோயில் தான் இது.
பஞ்சவன் மாதேவியார் பழுவேட்டறையர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த வகை கலை நுணுக்கத்துடன் கூடிய சிற்ப வகை அமைப்பு இந்தப் பள்ளிப்படை கோயில் அமைப்பில் தெரிகின்றது. பழுவேட்டறையர் வகை சிற்ப அமைப்பில் செதுக்கப்பட்ட நந்தி, அதாவது நந்தியின்கழுத்தில் வரிசை வரிசையாக மணிகள் கோர்க்கப்பட்ட ஆரம் இருப்பது போல கழுத்து மாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. நந்தியின் கொம்பு பகுதி குறுகியதாகவும் அந்தக் கொம்பைச் சுற்றி அழகிய கல்ஆரங்கள் இரண்டு கொம்பு பகுதிகளிலும் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றது. நெற்றியில் அழகிய நெற்றிச் சுட்டியுடன் இந்த நந்தி காட்சியளிக்கின்றது.
கோயிலின் கருவறைக்குள் சிவலிங்கம் சமாதிமேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. வெளியே கருவறையைச் சுற்றிய பகுதியில் இரண்டு துவார பாலகர்கள் உள்ளனர். இவர்கள் வித்தியாசமான வகையில் அமைக்கப்பட்ட வகையில் ஒரு கால் இன்னொரு காலில் குத்திட்டவாறு நிற்கும் அமைப்பில் நடன அடவினை வெளிக்காட்டுவது போல இச்சிற்பங்கள் உள்ளன.
இந்த வகையான இறந்தோருக்கான பிரத்தியேக சமாதி அமைப்பு முறையும் வழிபாடும் சைவ சமத்தில் எந்தப் பிரிவில் இருந்தது என தொல்லியல் துறை ஆய்வறிஞர் டாக்டர்.பத்மாவதி அவர்களை நான் வினவியபோது சைவ சமத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன என்றும், காளாமுகம், பாசுபதம், கபாலிகம் என்பவையே அவை என்றும், இந்த வகை சடங்குகள் காளாமுக, பாசுபத சைவப் பிரிவுகளில் அடங்குவது எனவும் விரிவாக விளக்கினார். அதுமட்டுமன்றி எங்கெல்லாம் பள்ளிப்படை கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஒரு மடம் அக்கோயிலோடு இணைந்ததாக இருந்திருக்கும் என்றும், அங்கே லகுளீசப் பண்டிதர் என்றழைக்கப்படும் ஒரு சிவனடியார் ஒருவர் மடத்தில் இயங்கியிருப்பார் என்றும் கூடுதல் தகவல்களை வழங்கினார்கள்.
இந்தப் பயணத்தின் போது செய்யப்பட்ட விழியப்பதிவும் புகைப்படங்களும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தின் வரலாற்றுப் பகுதியில் சோழநாட்டுக் கோயில்கள் என்ற பகுதியில் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழர் நம் வரலாற்றில் எத்தனையோ வகை வழிபாட்டு முறைகள் உள்ளன,. அதில் இந்தப் பள்ளிப்படை கோயில் அமைப்பும் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.