Wednesday, April 5, 2017

51. பேராசிரியர்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி19ம் நூற்றாண்டு தொடங்கி தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வரும் முயற்சிகள், பல தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய முயற்சியில் தமிழகத்தின் தமிழ் அறிஞர்களும், தமிழகத்தில் காலணித்துவ ஆட்சியின் போது பணியாற்றிய ஆங்கிலேய அறிஞர்களில் சிலரும், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தமிழறிஞர்களும் ஈடுபட்டனர். அத்தகைய பதிப்பாசிரியர்கள் வரிசையில் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, எல்லிஸ் (F.W.Ellis), உ.வே.சாமிநாதையர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, அருட்பிரகாச வள்ளலார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோருடன், பேராசிரியர்.வையாபுரிப்பிள்ளை அவர்களும் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர். 

ஓலைச்சுவடி வடிவில் இருக்கும் ஒரு நூலை அச்சு வடிவில் பதிப்பிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஓலைச்சுவடி நூல்கள் வழி வழியாகப் பலரால் படியெடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் புதிதாகப் எழுதப்படுபவை. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால், பனை ஓலையில் தயாரிக்கப்படும் சுவடி நூல்கள் நீண்ட காலம் இருப்பது சாத்தியமல்ல. அதிக வெப்பமான புறச் சூழல், தூசிகள் படிதல், போன்றவை ஓலைச்சுவடிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதோடு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி பாதுகாக்கப்பட்டும் பல ஓலைச்சுவடிகளைப் புழுக்கள் ஓட்டையிட்டு துளைத்து நாசம் செய்துவிடுவதும் பெரும்பாலும் நடப்பதுதான். இதனால் தக்க காலத்திற்குப் பின்னர், அந்தச் சுவடியை வைத்திருப்போர், சுவடி எழுதத்தெரிந்திருந்தால் தாமே அதனைப் பார்த்து வரிக்கு வரி அதனைப் படியெடுத்து மீண்டும் புது சுவடி நூலில் எழுதி வைத்து விடுவர். அல்லது சுவடி வாசிக்கவும் எழுத்தாணி கொண்டு எழுதவும் தெரிந்தவரைக் கொண்டு சுவடி நூலைப் படி எடுக்கச் செய்வர். இந்த வகையில் தான் பல நூற்றாண்டுகளாக நூல்கள் நமக்குப் பாதுகாக்கப்பட்டு கிடைத்தன. ஆயினும் அப்படிப் படியெடுக்கும் போது நூல்களை எழுதுவோர் அதில் தெரிந்தோ தெரியாமலோ பல மாற்றங்களைச் செய்திருக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. ஆக ஓலைச்சுவடி நூலை அச்சுப்பதிப்பாக்கம் செய்ய முனையும் ஒவ்வொருவருக்கும் பாடபேத ஆராய்ச்சி என்பதுதான் மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும். 

ஒரே தலைப்பிலான நூலாக இருந்தாலும், அது பலரிடம் இருக்கும் பட்சத்தில் அவற்றையெல்லாம் பெற்று ஒவ்வொரு சுவடியையும் வாசித்து ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்வாறு மாறுபடுகின்றது என அறிந்து அதில் எது சரியானது, எது தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது, என அறிந்து எழுதுவது தான் அச்சுப்பதிப்பில் முக்கியப் பணியாக அமைவது. பதிப்புப்பணியில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் எல்லோருமே இந்தச் சிரமத்தை அனுபவித்துத்தான் சுவடி நூற்களை அச்சுப்பதிப்பாக்கம் செய்தனர். அந்த வகையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் ஒருவர். 

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அங்குச் சிக்க நாகையன் கிராமத்தில் சரவணப் பெருமாள் பிள்ளை என்பாருக்கும் பாப்பம்மாள் என்பாருக்கும் 12.10.1891ம் ஆண்டில் பிறந்தார். பள்ளிக் கல்வி முடித்து, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படித்து பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ படித்தார். பின்னர் திருவனந்தபுரம் மகாராஜா சட்டக் கல்லூரியில் பி.எல் படிப்பை முடித்து திருவனந்தபுரத்திலேயே உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சட்டம் பயின்று தொழிலாற்றினாலும் அவரது ஈடுபாடு தமிழ் மொழி சார்ந்ததாகவே இருந்தது. 

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேரகராதித் துறையில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க அங்குப் பதிப்பாசிரியராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவே அகராதி தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட அவருக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். அகராதி உருவாக்கப்பணியில் இருந்த சமயத்தில் அகராதிக்கு உறுதுணையாக இருந்த நிகண்டு நூல்கள், மற்றும் இதுவரை வெளிவராத சுவடி நூல்கள் எனத் தேடி அவற்றை ஆய்வு செய்து பதிப்புக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். இக்காலத்தில் இருபது நூல்கள் திரு.வையாபுரிப்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 

அகராதிப்பணி முடிவுற்ற பின்னர் திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழக தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பத்து ஆண்டுகள் இங்கே பணியாற்றி பின் பணி ஓய்வு பெற்றார். இவரது அகராதிப் பணியைப் பாராட்டி 1938ம் ஆண்டில் ராவ்சாகிப் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

பணி ஓய்வுக்குப் பின்னரும் இவரது பதிப்புப்பணிகளும் தமிழாராய்ச்சிப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அவர் திருவனந்தபுரம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. 

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மு.இராகவையங்கார் 1951ல் பதவி ஓய்வு பெற்ற பின் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் திரு.வையாபுரிப்பிள்ளை என இவரைப் பலகலைக்கழகம் அழைத்தது. மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்து சேவையாற்றினார். அங்கிருந்த போதும் தொய்வின்றி தமது நூல் பதிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் திரு.வையாபுரிப்பிள்ளை. 

திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் ஓலைச்சுவடிகளைத் தேடி, பாடபேதம் ஆய்ந்து, அச்சு வடிவில் பதிப்பித்துள்ள நூல்களின் பட்டியல். 

1.மனோண்மணியம், 1922. 
2.துகில்விடு தூது, 1929. 
3.நாமதீப நிகண்டு, 1930. 
4.அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931. 
5.களவியற்காரிகை, 1931. 
6.கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932. 
7.குருகூர் பள்ளு, 1932. 
8.திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932. 
9.தினகர வெண்பா, 1932. 
10.நெல்விடு தூது, 1933. 
11.தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்்பூரணம்), 1933. 
12.திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933. 
13.திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933. 
14.கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933. 
15.பூகோள விலாசம், 1933. 
16.திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933. 
17.மூப்பொந்தொட்டி உலா, 1934. 
18.பொதிகை நிகண்டு, 1934. 
19.இராஜராஜதேவர் உலா, 1934. 
20.தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934. 
21.இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934. 
22.மதுரைக் கோவை, 1934. 
23.தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936. 
24.புறத்திரட்டு, 1938. 
25.கயாதாரம், 1939. 
26.சங்க இலக்கியபத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்), 1940. 
27.சீவக சிந்தாமணி, 1941. 
28.சாத்தூர் நொண்டி நாடகம், 1941. 
29.நவநீதப் பாட்டியல்-உரையுடன், 1943. 
30.திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943. 
31.நான்மணிக்கடிகை, 1944. 
32.இன்னா நாற்பது, 1944. 
33.திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944. 
34.இனியவை நாற்பது, 1949.. 
35.இராமப்பய்யன் அம்மானை, 1950. 
36.முதலாயிரம், 1955. 
37.திருவாய்மொழி. 
38.கொண்டல் விடு தூது. 

திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமது வெவ்வேறு பணிகளினூடே எழுதி வெளியிட்ட நூல்களின் பட்டியல். 

1930 - ஆராய்ச்சி உரை தொகுப்பு, ஆசிரியர் வெளியீடு. 
1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு. 
1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras. 
1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம். 
1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம். 
1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி. 
1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு. 
1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம். 
1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம். 
1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம். 
1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம். 
1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம். 
1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம் 
1956 - History of Tamil Language & Literature, NCBH 
1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம். 
1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம். 
1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம். 
1958 - ராஜி 
1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம் 
1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம். 
1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம் 

மீண்டும் சென்னைக்குத் திரும்பிய திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமது இறுதிக் காலத்திலும் தமிழாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மர்ரே எஸ் ராஜம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திவ்யப் பிரபந்தத்திற்கு மக்கள் பதிப்பினை வெளியிடும் பணியில் தான் தன் இறுதி நாட்களை அவர் செல்விட்டுவந்தார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் திரு.வையாபுரிப்பிள்ளையவர்கள் 17.2.1956ம் ஆண்டு தமது அறுபத்து ஐந்தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார். 

திரு.வையாபுரிப்பிள்ளை தமது ஆய்விற்காகச் சேர்த்து வைத்த அவரது இல்ல நூலகத்து நூல்கள் அவர் காலத்துக்குப்பின் கல்கத்தாவிலுள்ள தேசிய நூலகத்திற்கு அவரது குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நூலகத்தில் இன்று கிடைக்கின்ற தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பேராசிரியர் திரு.வையாபுரிப்பிள்ளை அவர்களின் சேகரிப்புக்கள் தாம். 


சீவக சிந்தாமணி பதிப்பின் போது ஏனைய பதிப்புக்களில் விடுபட்டவற்றை திருத்தம் செய்து மீண்டும் பதிப்பித்தார். இந்த நூலில் முகவுரையில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார். 
”ஆராய்ச்சிக்கு முடிவில்லை. முயற்சி மிகுந்தோரும் பிரதிகளின் உதவி பல்குந்தோறும் திருத்தங்கள் ஏற்பட்டுக் கொண்டிருத்தல் இயல்புதான். தமிழ்க்கல்வி மேன்மேலும் பரவ வேண்டுமாயின் பிழைகளைப் பிழையென உணர்தல் வேண்டும். அவற்றைப் பொதிந்து வைத்தலைக் காட்டினும் தமிழன்னைக்குச் செய்யும் பெருந்தீங்கு ஒன்றுமில்லை.” 
​என்று குறிப்பிடுகின்றார். ​இன்றும் தமிழாய்வில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு ஆலோசனையாகவே இந்தக்கருத்து அமைகின்றது. 
திரு.வையாபுரிப்பிள்ளையின் பேத்தி டாக்டர். இராதா செல்லப்பன் அவர்கள் ஒரு தமிழறிஞர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். தமது தாத்தாவின் தமிழ்ப்பணிகளை விவரிக்கும் வகையில் வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி என்ற நூலினை எழுதியிருக்கின்றார். 2206ம் ஆண்டில் என்னை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்ற இவர்கள் அழைத்திருந்த வேளையில் இவரது அறிமுகம் எனக்குக் கிட்டியது. இவரது தாத்தா பேராசிரியர்.திரு.வையாபுரிப்பிள்ளை என்பதை அறிந்து மகிழ்ந்து அவர் ஆய்வுகள் தொடர்பாக பல செய்திகள் பேசி மகிழ்ந்தோம். அத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பிரத்தியேகமாகத் தமது தாத்தாவின் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்புப்பணி பற்றியும் விளக்கி தகவல்கள் பகிர்ந்து கொண்டார். இந்தத் தகவல்கள் ஒலிப்பதிவு கோப்புக்களாகத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஒலிக்கோப்புக்களைக் கேட்க விழைவோர் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் http://www.tamilheritage.org/manulogy/radha/vaiya.html பக்கத்தில் இந்தப் பதிவுகளை கேட்டும் வாசித்தும் பயன்பெறலாம். ​

1 comment: