Wednesday, March 15, 2017

49. வைரமுத்துவின் கருவாச்சி காவியம்




கதைகளை எழுதுவது போல வரலாற்றினைச் சொல்ல முடியுமா?

வரலாறு சொல்ல  ஆய்ந்து எழுதுவது அவசியம். பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் தமிழர் தொண்மை, தமிழர் பண்பாடு பற்றிய தேடல், தமிழ் நிலத்தின் பண்டைய வழிபாட்டுக்கூறுகள், தமிழர் சடங்கு முறைகள் என்பன பற்றிய தேடல் கூர்மை அடைந்து வருவதைக் காண்கின்றேன். தன்னார்வலர்கள் பலர், அவர்கள் துறை வெவ்வேறாக இருப்பினும் கூட, அவர்கள்  தங்கள் வேர்களை அறியும் பொருட்டு தமிழக வரலாற்றை தேடுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை வரவேற்பதும் பாராட்டுவதும் மேலும் உற்சாகத்தை அவர்களுக்கு நிச்சயம் வழங்கும். இந்த உற்சாகம் தரும் களிப்பில் மேலும் ஈடுபாட்டுடன் தன்னார்வலர்கள் சீரிய முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர்.

எனது கடந்த 17 வருட தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்று களப்பணிகள் மற்றும் வெளியீடுகளின் போது என்னைப் பாராட்டி உற்சாகமளிக்கும் பலரையும் நான் மனதில் நினைவு வைத்திருப்பதுண்டு. சில சம்பவங்கள் மனதில் நீங்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தி அந்த நினைவுகள் மனதில் தங்கி விடுவதும் உண்டு. அப்படித்தான் ஒருமுறை இணையத்தில் உள்ள குழுமங்களில் தமிழர்கள் மத்தியில் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” நூலை பரவலாக பேசவைத்த பொன்னியின் செல்வன் குழுமத்தலைவர் திரு.சுந்தர் பரத்வாஜ் ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்தார். அவர் நண்பர்கள் முனைவர்.குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் முனைவர் பேராசிரியர் ராசவேலு இருவரையும் நேரில் அறிமுகப்படுத்தி, என்னை மூவருமாக கௌரவித்து ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கினர். இது சென்னையில் எதிர்பாராமல் நிகழ்ந்தது.

இதே போலத்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடனான எனது சந்திப்பு நிகழ்ந்தது. அவரது இல்லத்தில் அவருடன் நானும் நண்பர் சுந்தரும் உரையாடச் சென்றிருந்தோம். நான் சொல்லச் சொல்ல தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து வியந்தார். இப்பணிகளுக்காக நான் சென்றிருந்த ஊர்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை நான் விவரிக்க அவற்றை ஆர்வத்துடன் கேட்டு தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியைப் பாராட்டியதோடு எங்களுக்கு ஒரு உணவு விடுதியில் விருந்தளித்தும்  சிறப்பித்தார். இதில் மேலும் என்னை குதூகலப்படுத்திய ஒரு விசயமும் நிகழ்ந்தது. அவரது எழுத்துப் படைப்புக்களில் பத்து நூற்களைக் கொண்டு வந்து எனக்கு அவற்றை பரிசாக அளித்தார். அது மிக இனிமையான ஒரு நிகழ்வாக என் மனதில் நிறைந்திருக்கின்றது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எனக்களித்த அவரது நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பானவையே.

  1. இதுவரை நான்
  2. சிகரங்களை நோக்கி
  3. பாற்கடல்
  4. வைகறை மேகங்கள்
  5. வடுகபட்டி முதல் வால்கா வரை
  6. மௌனத்தின் சப்தங்கள்
  7. இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  8. கருவாச்சி காவியம்
  9. கள்ளிக்காட்டு இதிகாசம்
  10. வைரமுத்து கவிதைகள்

..இந்தப் பத்தும் என் வீட்டு புத்தக அலமாரியில் இடம் பிடித்திருக்கின்றன.

அவ்வருடம் சென்னையிலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் போது லுஃப்தான்சா விமானத்தில் கருவாச்சி காவியம் நூலைத்தான் வாசித்துக் கொண்டே வந்தேன். அந்தப் பத்து மணி நேரங்களும் வானில் பறக்கின்றோம் என்பதை மறந்து  இந்த நூல்  தமிழகத்தின் தேனி பகுதிக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது.

இந்த நூலின் பாயிரத்தில் வைரமுத்து இப்படி எழுதுகின்றார்.
"டைக்ரிஸ் யூப்ரடிஸ் நதிக்கரைகளிலும், நைல்நதி தீரத்திலும், சிந்து சமவெளி ஆழத்திலும் வாழப்பட்ட மனித வாழ்க்கையைத் துழாவு துழாவென்று துளையிட்டுத் துருவுகின்ற ஆய்வாளர்கள் வையை ஆற்றங்கரையில் வாழப்பட்ட வாழ்க்கையை ஆவணப்படுத்தியதுண்டா? அப்படிப்பட்ட பண்பாட்டு ஆவணத்தின் கலை வடிவம்தான் கருவாச்சி காவியம் "

இப்படித்தான், எங்கெங்கோ உள்ள நாகரிகத்தையும் வரலாற்றுச் செழுமைகளையும், அங்கு உள்ள பண்பாட்டு மாண்புகளையும் பேசும் நம்மில் பலருக்கு நமது ஊரின் சிறப்பு அறியாதிருக்கின்றோம். நமது ஊரின் வரலாற்று சிறப்புக்களை அறிந்தோமா என்பது ஒரு புறமிருக்க, நம்மோடு வாழும் சக மக்களின் வாழ்வியல் கூறுகளை மதிக்கும் மனோ நிலையை வளர்த்திருக்கின்றோமா என்பதே ஒரு கேள்வி தானே!

வைரமுத்து அதே பகுதியில்  மேலும் சொல்கின்றார்.
"ஒரே பண்பாடு ஒரே நாகரிகம் மானுடப்பரப்பில் இதுவரை இல்லை. பூமிக்கெல்லாம் ஒரே பகலைச் சூரியன்கூடக் கொண்டுவர முடியவில்லை. கலாசாரக் கூறுகள் இனத்துக்கு இனம் மட்டுமல்ல இடத்துக்கு இடம்கூட வேறுபடுகின்றன."

உண்மைதான்.  உலக நாகரிகங்களைப் பார்க்கும் போது எத்தனை எத்தனை முயற்சிகளை மனிதர்கள் மேற்கொள்கின்றன. எவ்வகை வேறுபாடுகளுடன் அந்தந்த நாகரிகங்கள் உருவாகி நின்று நிலைத்து பின் சிலகாலங்களுக்குப் பின் மடிந்தன, மறைந்தன என்பதை அகழ்வாய்வுகளும் ஆவணங்களும் அறிக்கைகளும் நமக்குக் காட்டுகின்றன.

தொடர்ச்சியாக .." பண்பாட்டு அடையாளங்களும் ஆவணங்களும் மெல்ல  மெல்லத் திரிந்தோ அழிந்தோ வருகின்றன. விரைந்த நகர்மயமும் பூமியில் விழும் எரிகல் வேகத்தில் நிகழும் உலகமயமாதலும் பழைய பண்பாட்டு அடையாளங்களைச் சுவடே இல்லாமல் துடைத்தெறியப் போகின்றன. அந்த அழிமானங்களுக்கிடையில் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பும் படைப்புக்களுண்டு" என்றும் வைரமுத்து வலியுறுத்துகின்றார்.

ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த மன்னர்களோ தங்கள் செய்திகளையெல்லாம் கல்வெட்டுக்களாகக் கோயில் சுவர்களில் எழுதிவிட்டும், செப்புப் பட்டயங்களில் எழுதுவித்தும் அவர்கள் புகழை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைத்துப் பார்க்கும் வழியைச் செய்து வைத்துச்சென்றிருக்கின்ரனர். கல்வி கற்ற சான்றோரோ இலக்கியங்களையும் நீதிகளையும் பனை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துச் சென்றனர். சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையைக் கூறும் வரலாற்றினை யார் எழுதினர்? சாமானிய மக்களின் வாழ்வும், தாழ்வும்,  வலியும், இன்பமும் முக்கியத்துவம் பெறாமலே எழுத்து வடிவம் பெறாமலேயே சென்றன என்பதை நினைத்துப் பார்க்கும் போது நாம் இழந்தவை தான் எத்தனை எத்தனையோ என மனம் பதைக்கின்றது.

இப்படி   சிற்றூர்களின் சின்னச் சின்ன கிராமங்களில் படிந்திருக்கும் பண்பாட்டு செழுமைகளையெல்லாம் ஆவணப்படுத்தி பாதுகாப்பதும் எழுத்தாளர்களின் கடமை என்பதை தனது கருவாச்சி காவியத்தின் பாயிரத்தில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குறிய ஒரு விசயமாக நான் காண்கின்றேன்.

அன்று விமானப்பயணத்தில் கருவாச்சி காவியத்தை முழுமையாக வாசித்து முடித்தேன். மதுரையின் ஒரு சிறு கிராமத்தில் நான் இந்த கருவாச்சி காவியத்தினூடாக வலம் வந்தேன். இயல்பாக மக்களின் பேச்சு. கிராமத்து வழக்குகள், பஞ்சாயத்து, கல்யாணம், சண்டைகள், பொறாமை, ஏமாற்றம், வஞ்சம், துன்பம், சின்ன சின்ன சந்தோஷங்கள், ஆடுகள், மாடுகள், கருவேலம் முட்கள், மனிதர்கள், கிழவர்கள், கிழவிகள், பிறப்பு, இறப்பு என முழுமையாக என் மனம் அந்த நூலுக்குள் ஒன்றிப்போயிருந்தது. படித்து முடித்தபோது கணத்த மனத்துடன் கருவாச்சியை நினைத்தவாறே சில நிமிடங்கள் என்னை மறந்திருந்தேன்.

இந்த நூலில் மக்கள் பேசும் நாட்டார் வழக்கிலேயே தன்  எழுத்தின் ஊடாக மனக்கண்ணில் முழு நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் வைரமுத்து என்று சொன்னால் அது பொருந்தும். மக்கள் வாழ்க்கை தானே இலக்கியம் உருவாக ஆதாரமாகின்றது!
இராஜவம்சத்து கதைகள் மட்டும் தான் இலக்கியம் என்ற அதிகாரத்தைப் பெற வேண்டுமா?
கிராமத்து கருவாச்சிகளின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இலக்கியத்தன்மை இருக்கக்கூடாதா என்ன ? என்ற கேள்வியை நம் முன்னே எழுப்புகின்றது இந்தக் காவியம்.

வைரமுத்துவின் பல பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். அவரது கவிதைகளில் சில வாசிக்கும் போது மனதில் பளிச்சென்று ஒரு மின்னலை தோற்றுவிப்பதை அனுபவிப்பதுண்டு. அப்படி சில கவிதைகளை அவரது கவிதை தொகுப்பு நூலில் உள்ளன.

இலையுதிர் காலமும்
வசந்தமும் இங்கே
கிளைகளுக்குத்தான்
வேர்களுக்கல்லவே

நான்கே வரிகளில் சிந்தனைக்கு விருந்து இந்தக் கவிதை

பறவைக்கும் விலங்குக்கும்
மரம் தரும் உத்தரவாதம்
மனிதர் நாம் தருவோமா?

கொள்கை பிடிப்பற்ற மனிதர்களோடு ஒப்பிடும் போது மரங்கள் சிறப்பல்லவா?

தற்கொலையை நாடிச் செல்லும் ஒரு இளைஞனைப் பார்த்து இப்படிச் சொல்கின்றார்.

தம்பீ

சாவைச்
சாவு தீர்மாணிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி

புரிந்து கொள்

சுடும்வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும் மனிதன்

நீ மனிதன்.


வைர வரிகள் அல்லவா? கவிப்பேரரசு வைரமுத்துவுடன் நிகழ்ந்த அச்சந்திப்பும் உரையாடலும் எனது தமிழ் மரபு அறக்கட்டளை பயணங்களில் நட்சத்திரப்பூப்போல மிளிரும் இனிய அனுபவங்களாக அமைகின்றன!

1 comment:

  1. ...வைரமுத்துவின் வரிகளைப் போலவே தங்கள் கட்டுரை வரிகளும் வைரவரிகள் என்பேன்...

    ReplyDelete