Thursday, February 28, 2019

97. யாழ்ப்பாணத்து மண் வாசனை

கடந்த 2018ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் செயல்பாடுகளில் மேலும் ஒரு வளர்ச்சியைச் சந்தித்த ஆண்டு எனத் தயங்காது குறிப்பிடலாம். அதற்கு முக்கியக் காரணம் 29.10.2018 அன்று இலங்கையின் யாழ் நகரில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருந்த  வரலாற்று ஆய்வுப் பயிலரங்க  நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று, இலங்கையின் வடக்கு, கிழக்கு, மத்திய மலையகப் பகுதி, தென்னிலங்கை ஆகிய பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகத்தைச் சார்ந்தோரும், கல்வித்துறையைச் சார்ந்தோரும், வரலாற்று மற்றும் சமூக ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர்களுமாக இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை செயல்படத் தொடங்கியிருக்கின்றது.கொழும்பில் தொடங்கியது எங்கள் பயணம். விமான நிலையத்திலிருந்து கொழும்பு மைய நகரம் நோக்கி டாக்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எல்லா கட்டிடங்களிலும், பேருந்துகளிலும், சாலைகளிலும் மூன்று மொழிகளில், அதாவது சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகைகளும் குறிப்புகளும் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.  நாங்கள் பயணித்து வந்த டாக்சி ஓட்டுநர் ஒரு சிங்களவர். அவரிடம் மக்களுக்கிடையே நிலவும் சூழலைப் பற்றி பேச்சுக் கொடுத்து விசாரித்துக் கொண்டே வந்தோம். 'இலங்கையில் சிங்களவர் -தமிழர் என்ற பிரிவு இருந்தாலும் ஒருவருக்கொருவர் எதிரிகள் போல பார்ப்பது கிடையாது என்றும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தங்கள் சுயநலத்துக்காகப் பிரிவினையைத் தொடர்கின்றனர்',  என அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பெயர் மகேந்திரன். தமிழ்ப் பெயர் போல இருக்கின்றதே என நான் வினவ, 'இங்குப் பெயர்களில் பெரிதாக வேறுபாட்டைக் காணமாட்டீர்கள்' என கூறி சிரித்துக் கொண்டார்.

 கொழும்பு நகரில் சில மணி நேரங்கள் இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு அன்று அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கொழும்பு நகரில் கொழும்பு-6 பகுதியில் செயல்பட்டு வரும் கொழும்பு தமிழ்ச்சங்க அலுவலக கட்டிடத்திற்குச் சென்றிருந்தோம். பெரிய வளாகத்தில் ஒரு நூலகம் மற்றும் ஒரு பெரிய மண்டபம் ஆகியவற்றோடு, மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது. நூலகத்தில் அரிய பல தமிழ் நூல்கள் இருக்கின்றன. வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய ஐம்பெருங்காப்பியங்களும் இந்த நூலகத்தின் சேகரத்தில் உள்ளன.  புதிய வெளியீடுகளும் உள்ளன. சஞ்சிகைகள், புகைப்படங்கள் போன்ற வகை ஆவணங்களும் இங்குள்ளன. நாங்கள் சென்றிருந்த வேளையில் தமிழ்ச்சங்கத்தின் ஒரு பகுதியில் இசை வகுப்பும் ஒரு பகுதியில் நாட்டிய வகுப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மாலை தமிழ்ச்சங்கத்தில் பட்டிமன்றம் ஒன்றும் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் பங்கு பெற்றுப் பேசிய எட்டு பேச்சாளர்களும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களின் பேச்சுத் திறனும் சிந்தனைத் திறனும், மொழி ஆளுமையும் கேட்போரை வியக்க வைக்கும் வகையிலமைந்திருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். சமகால அரசியல் சூழலை அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துக்கள் வழி வெளிப்படுத்தும் வகையில் இவர்கள் திறமையோடு பேசியது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

அன்று இரவே பேருந்து பயணத்தின் வழி யாழ்ப்பாணம் நகரை வந்தடைந்தோம்.    யாழ்ப்பாணம் நகரை எங்கள் பேருந்து வந்தடையும் போது அதிகாலை ஐந்து மணி ஆகியிருந்தது. பேருந்தை விட்டு வெளியே வந்து தமிழ்க்காற்றை சுவாசித்த தருணங்கள் மனதை விட்டு நீங்காத தருணங்கள்.  பேருந்திலிருந்து வெளியே வந்து அந்த அதிகாலை வெளிச்சத்தில் சாலையின் இரு புரமும் நோக்கியபோது முற்றிலும் தமிழில் ஒரு நகர் இருப்பதைப் பார்த்த அந்த நொடிகளில் எங்கள் மனம் அடைந்த பேருவகையை விவரிக்க வார்த்தையில்லை.  அன்று காலையே நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்று நடைசார்த்தியிருந்தமையால் வெளியே இருந்தவாறு தரிசித்து விட்டு, தின்னவேலி (திருநெல்வேலி) பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம். யாழ்ப்பாண நகரின் சாலைகளின் இருபுறமும் செழித்து வளர்ந்திருந்த முருங்கை, தென்னை மரங்களின் பசுமையை ரசித்தவாறே உரும்பிராய் பகுதிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டோம். அன்றைய நாளில் செய்யவேண்டிய வரலாற்றுப் பதிவுகளுக்கான நீண்ட பட்டியல் இருந்தது.

27.10.2018 அன்று காலை தொடங்கி இரவு வரை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளையும் ஆய்வுகளையும் எமது குழு மேற்கொண்டது. அதில் குறிப்பிடத்தக்கனவாக
-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்றுத் தொல்லியல் துறை ஆய்வுகள் பற்றிய தகவல்கள். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் சந்திப்பு மற்றும் பல்கலைக்கழக வரலாறு தொடர்பான பதிவுகள்.
-யாழ்ப்பாண தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று அங்குச் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரும்பொருள்களைப் பார்வையிட்டு ஆராய்தல்
-புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ள யாழ் நூலகத்திற்குச் சென்று பார்வையிடல்
-டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படும் யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்று வரலாற்றுப் பதிவு மேற்கொள்ளுதல்
-நல்லூர் கந்தசாமி கோயிலில் வழிபாடு
-108 சிவலிங்க வடிவங்கள் சூழ தட்சிணாமூர்த்தி சிலை கருவறையில் அமைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட கோயிலான சிவபூமி திருவாசக அரண்மணை கோயில்
-யமுனா ஏரி
-சங்கிலியான் அரண்மனை
-சங்கிலியான் குளம்
-சங்கிலியான் மனை
-மந்திரி மனை
ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் செய்து வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைக்கப்பட்டு வருகின்றன.

மறு நாள் 28.10.2018 (ஞாயிறு) காலையே எங்களது வரலாற்றுப் பதிவு நடவடிக்கைகள் தொடங்கின.

முதலில் நாங்கள் யாழ்ப்பாணத்தின் பௌத்த சுவடுகள் இன்றும் நிலைத்திருக்கும்  வரலாற்றுப் பகுதியான  கந்தரோடைக்குச் சென்றோம். இது தமிழ் பௌத்தம் நிலைபெற்றிருந்த பகுதியாக அறியப்படும் தொல் பழங்கால மனிதர்கள் வாழ்விடமாகும். அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு ஆய்வுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு பகுதி இது. இப்பகுதியில் தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் நடமாட்டம் இருக்கின்றது. நாங்கள்  சென்றிருந்த சமயத்தில் இரண்டு இராணுவத்தினர் வருவோர் போவோரிடம் சிங்கள மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். எங்களிடமும் வந்து பேசினர். இப்பகுதியை விரிவாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுடன் வந்திருந்த  பேராசிரியர்.புஷ்பரட்ணம் அவர்களிடம்  சிங்களத்தில் கூறிச் சென்றனர். பேருந்துகளில் சிங்களவர்கள் வந்து இப்பகுதியைப் பார்த்துச் செல்கின்றனர்.

கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து சென்றோம். தற்சமயம் சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகள் தென்படுகின்றன. இவை இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகள் என ஒருவர் குறிப்பிட்டார். வீடுகளின் தரம் மிக எளிமையானதாக உள்ளது. பத்து ஆண்டுகளாவது இவை தாங்குமா என்பதே சந்தேகம் எனும் வகையில் இவ்வீடுகள் இன்றே  காட்சியளிக்கின்றன.

அடுத்து எங்கள் பயணத்தில் அமைந்தது கீரிமலை சிவாலயம். இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழம் கோயில் என அறியப்படுவது. போரில் மிகுந்த சேதம் அடைந்த இக்கோயில், கடந்த ஆண்டு முழுமையாக புதிதாக கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது இவ்வாலயம். கோயிலின் உள்ளே சிவபுராணக் காட்சிகள் சுவர்களில் ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு அருகாமையிலேயே இருப்பது மாவட்டபுரம் கந்தசாமி கோயில். இது கீரிமலை கோயில் அருகிலேயே இருக்கும் ஒரு சிவாலயம். போரினால் மிகுந்த சேதம் அடைந்த சிவாலயங்களில் ஒன்று இது. தற்சமயம் இக்கோயில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் செயல்படும் துர்க்கையம்மன் கோயிலுக்கும் வரும் வழியில் சென்று வழிபட்டோம். இங்கு போரின் போது ஏற்பட்ட பாதிப்புகளினால்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இயங்கி வருகின்றது. சைவ ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இவ்வளாகத்திலேயே  உள்ளது. துர்க்கைக்கான அர்ச்சனையாக இங்கு மனநலம் பாதிக்கபப்ட்ட பெண்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கான போற்றி பாடல் இங்கு வழிபாட்டில் ஓதப்படுகின்றது.

அன்று மதியம் குரும்பையூர் (குரும்பசிட்டி) கிராமத்தில் ஏற்பாடாகியிருந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தினவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் குழுவினர் கலந்து கொண்டோம். முற்றிலும் அழிக்கப்பட்ட, 30 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமம் தான் குரும்பசிட்டி. இங்குத் தற்சமயம் புது குடியேற்றம் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் ஏற்பாடாகியுள்ளது. அன்றைய நிகழ்வில்  குழந்தைகளின் நலனுக்காக பெரும் சேவையாற்றும் ஆசிரியை வலன்ரீனா, பள்ளி அதிபர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம். அத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் சார்பாக இப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக இலங்கை ரூபாய் ஐம்பதாயிரம் நன்கொடையை வழங்கினோம். அன்றைய நாளின் மாலை வேளையில் திருமறை கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் பன்மொழிப்புலவர் பாதிரியார் மரியசேவியர் அவர்களையும் அவரது அமைப்பின் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம். அப்போது இந்தக் கலை அமைப்பின் செயல்பாடுகள் குறித்த பேட்டி ஒன்றும் பதிவாக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் தெருக்களில் தமிழகத்தில் காண்பது போல ஆட்டோக்களைக் காணலாம். இங்கே பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு, ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் என பல வர்ணங்களிலான ஆட்டோ வாகனங்கள் சாலைகளில் இயங்குகின்றன.

யாழ்ப்பாணப் பயணத்தின்  முத்தாய்ப்பாய் 29.10.2018 அன்று  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அமைப்பாக்க நிகழ்வும் தொடக்கவிழாவும், வரலாற்றுப் பயிலரங்கும் நடைபெற்றது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 200 ஆய்வாளர்களும் மாணவர்களும் இந்தப் பயிலரங்கில்  பங்கு கொண்டனர். இதே நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக்  கிளை தொடக்கி வைக்கப்பட்டது.

அன்று மதியம் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழுவினர் கலந்து கொண்டோம். 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இது. 1995 முதல் 2002 வரை இராணுவக்கட்டுப்பாட்டில் இக்கல்லூரியின் வளாகம் இருந்தாலும், கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு இன்று வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. பெருமளவில் மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு ஆசிரியர் பயிற்சி மேற்கொள்வதை அறிந்து கொண்டோம். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட எங்களைப் பயிற்சி ஆசிரியர்கள் கோலாட்டம் ஆடி  மகிழ்வித்து அழைத்துச் சென்றனர்.

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா..!
என்ற பாடலையும் மேலும் பல தமிழிசைப்பாடல்களையும் இயற்றிய வீரமணி ஐயர் ஆசிரியராகப்பணிபுரிந்த கல்லூரி என்பது  இதன் தனிச்சிறப்பு. அன்றைய நிகழ்வில் பயிற்சி ஆசிரியர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. பின்னர் யாழ்ப்பாணக் குடாபகுதியில் அமைந்திருக்கும் மாதகல் பகுதிக்குச் சென்று ஆய்வு செட்ய்ஹோம். இதுவே கி.மு3ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு  அசோகச் சக்கரவர்த்தியின் திருமகளான சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அறியப்படுகின்றது.

எங்கள் யாழ்ப்பாண பயணத்தின் இறுதி நாளில் இலங்கைக்கான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு விக்ணேஸ்வரன் அவர்களுடன் ஒரு சந்தித்து ஏற்பாடாகியிருந்து. இலங்கையின்  தற்கால அரசியல் நிலைத்தன்மை, தமிழர்களின் அரசியல் புரிதல், மற்றும் செயல்பாடுகள் பற்றியும் இந்தச் சந்திப்பில் உரையாடினோம்.

வரலாறு, சமூகம், அரசியல், கலை என பல்வகை பரிமாணங்களில் யாழ்ப்பாணத்தை உள்வாங்கிக் கொள்ள இந்த குறுகியகால யாழ்ப்பாணப்பயணம் உதவியது. நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் தனித்துவம் வாய்ந்ததோர் மாகாணம். இங்கு ஊருக்கு ஒரு நூலகம் என இருப்பதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தேன். கல்விக்குக் கோயில் எழுப்பி வழிபட்ட தமிழர்களுக்குச் சொந்தமான நிலம் தான் யாழ்ப்பாணம் அந்த நிலத்தில் இருந்த நான்கு நாட்களும் தூய தமிழ் மண்வாசனை எங்கள் மனதை நிறைத்தது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை மரபுரிமை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் செய்திகளையும்  http://www.srilanka.tamilheritage.org/  என்ற வலைப்பக்கத்தில் காணலாம்.No comments:

Post a Comment