Thursday, July 20, 2017

64. ராஜராஜன் கட்டிய திருவாலீஸ்வரம்அமரர் கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலைப் பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் வாசித்திருக்கலாம். இப்புதினத்தை வாசித்து அதன் கதாநாயகனான அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். அருள்மொழிவர்மன் என்பது ராஜராஜனுக்கு உள்ள மற்றுமொரு பெயர். 

பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக் கோயிலை மாமன்னன் ராஜராஜன் கட்டுவதற்கு முன்னர் அவன் மேலும் சில கோயில்களைத் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் கட்டியுள்ளான். ராஜராஜன் கட்டிய கோயில்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அதன் உட்பொருளாக இருப்பது, சிறந்த சிற்பிகளைக் கொண்டும் தனது போரில் தோல்வியுற்று அடிமைகளாக்கப்பட்டோரை வேலை வாங்கியும் கட்டுவிக்கப்பட்டக் கோயில் என்பதே பொருந்தும். ராஜராஜன் பல கோயில்களை கட்டுவித்ஹ்டிருந்தாலும் அவனது ஆட்சிக் கால தொடக்கத்தில் அவன் எழுப்பிய முதல் கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனா நதியின் தென்கரையில் அமைந்திருக்கின்றது திருவாலீஸ்வரம். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லினால் எழுப்பப்பட்ட இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் மாதிரியாக அமைக்கப்பட்ட கோயில் என்பதுடன் இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் ராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது. 

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நில நீர் மேலாண்மையா என நாம் வியக்கத்தக்க வகையில் தனித்தனியாக அவற்றை முறைமைப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தான் ராஜராஜன். ராஜராஜனுக்கு முன்னர் பல்லவ மன்னர்கள் காலத்திலும் மிக விரிவான நீர் வள மேலாண்மை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே . தன் நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டுமென்றால் மக்களின் அடிப்படையான தேவைகளான உழவு, உணவு, வாழ்க்கை நிலை ஆகியவற்றை மேம்படுத்தினால் நாட்டில் பஞ்சமும் வறுமையும் இருக்காது. மக்கள் மன நிறைவுடன் இருந்தால் அது அரசுக்கு நன்மையல்லவா? உள்ளூரில் மக்கள் மன நிறைவுடன் வாழும் போது அங்குச் செல்வமும் கலைகளும் செழிக்கும். மன்னரின் ஆட்சியும் விரிவாகும். இப்படி மக்களின் மன ஓட்டத்தையும் அவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு ஆட்சி செய்ததால் தான் ராஜராஜன் இன்று ஆசிய நாடுகளில் புகழ்மிக்க ஆட்சி செலுத்திய மன்னர்களில் ஒருவராக இன்றளவும் பேசப்படுகின்றார். 


ராஜராஜ சோழன், தான் இளவரசராக இருந்த காலம் தொட்டு நெடுங்காலம் பல போர்களில் பங்கெடுத்து அரசாட்சி பற்றிய பயிற்சி பெற்று அரியணையில் ஏறியவன். மன்னன் இரண்டாம் சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசியான வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். சோழர் வரலாற்றில் ராஜராஜன் அரியணையில் ஏறிய நாள் முதல் அடுத்த 100 ஆண்டுகள் என்பவை சோழ மன்னர் பரம்பரையினரின் பொற்காலம் என வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமது சோழர்கள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ராஜராஜனின் முதலாம் மகன் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில், சோழ ராஜ்ஜியத்தை இலங்கை மட்டுமன்றி சுவர்ணபூமியாகிய கடாரத்தையும் கைப்பற்றி சோழர்களின் ராஜ்ஜியத்தை விரிவாக்கினான். 

ராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன் என்பது இவனுக்கு அமைந்த தனிச்சிறப்பு. இவனது போர் பற்றிய வெற்றிச் செய்திகளை தெளிவாகக் கூறும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு ஆகும். 

பாண்டிய மன்னர்களும். பல்லவ மன்னர்களும் தாம் பிறருக்கு அளித்த தானங்களைப் பற்றிய ஆவணக்குறிப்புக்களைச் செப்பேடுகளில் பொறித்தனர். அதில் தமது முன்னோர் வரலாற்றினையும் எழுத வைத்தனர். அந்த வகையில் சோழப்பாரம்பரியத்தில், தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து அதனை விளக்கும் மெய்க்கீர்த்திகளைத் தமிழில், தான் சொல்லவிரும்பும் செய்திக்கு முன் தொடக்கத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவன் ராஜராஜன். ராஜராஜனின் அதே முறையையே ஏனைய பிற சோழ மன்னர்களும் தமது கல்வெட்டுக்களில் பின்பற்றினர் என்பதை இன்று நாம் தமிழகத்து சோழர் காலத்து ஆலயங்களைக் காணும் போது அறியலாம்/. இந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்றுச் செய்திகளையும் அக்காலத்தில் அம்மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த போர் பற்றிய செய்தியையும் உட்படுத்திய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவையே இன்று இம்மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை ஆராய்ந்து அறிய உதவுவனவாக உள்ளன. 

ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த படைபெடுப்பு போர் நிகழ்வுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஈழத்தைக் கைப்பற்றிய ராஜராஜன் சிவனுக்கு அங்கு ஒரு கற்றளியை அமைத்தான். பொலன்னறுவை நகரில் இன்றும் இக்கோயில் இருக்கின்றது. ராஜராஜனின் அரசியல் நிர்வாகத்திறன் இன்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. 

நிலவரியை ஏற்படுத்தி, அதற்காக நாடெங்கிலும் நிலங்களை அளந்து , நிலத்திற்கேற்ப வரி அமைத்து நிர்வாகத்தை நடத்தினான். நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை மேற்பார்வைக்காக அமைத்து கிராம சபைகளை அமைத்தான், தனது நிலப்படையையும், கடற்படையையும் வலுவாக்கினான். 

இப்படிச் சிறப்பாக ஆட்சி செய்த ராஜராஜன் கட்டிய திருவாலீஸ்வரம் கோயிலின் விழியப் பதிவினை கடந்த வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு செய்தோம். அந்த விழியக் காட்சிப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே காணலாம் http://tamilheritagefoundation.blogspot.de/2017/07/2017_15.html​. 

இப்பதிவில் என்னுடன் இணைந்து கொண்ட ஆய்வறிஞர்கள் இருவரும் தமிழகத்தில் அவர் தம் துறைகளில் புகழ்பெற்றவர்கள். இக்கோயிலின் சிற்பக்கலை உருவாக்கத்தைப் பற்றி விவரிக்கும் பேராசிரியர் ஓவியர் சந்ரு ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்ப கண்காட்சியில் உலக அளவில் 2ம் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றவர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான கண்காட்சியில் தம் கலைத்திறனுக்காக முதல் இடத்தைப் பிடித்தார். 
எழுத்தாளர், கவிஞர், ஓவியர் சிற்பி, பேராசிரியர் எனப் பன்முகப்புலமை கொண்ட இவர் இந்தியா முழுதும் பயணித்து கோயில்கள், கலைக்கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பெருமைக்குரியவராவார். 

இந்தப் பதிவில் ராஜராஜனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை நமக்காக மிக விரிவாக விளக்கும் தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டியல் அறிஞர் டாக்டர். பத்மாவதி அவர்கள் நீண்டகால ஆய்வுலக அனுபவம் பெற்றவர். தமிழகத்தின் ஏறக்குறைய எல்லா பழம் கோயில்களையும் பார்த்து அதன் கல்வெட்டுக்களை வாசித்து ஆய்வு செய்தவர் என்ற சிறப்புக்குரியவர். இப்பதிவில் இவர் வழங்கும் செய்திகள் இவரது விரிவான ஆய்வுத்துறை அனுபவத்தை வெளிப்படுத்துவதை இந்த வீடியோ காட்சியைக் காண்பவர்கள் உணரலாம். 

தமிழகத்து வரலாற்றுப் பதிவு, அதிலும் சிற்பக்கலை பற்றிய ஒரு பதிவு தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக அமைய வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பமாக இருந்தது. இந்த என் விருப்பத்தை நான் தமிழகம் செல்வதற்கு முன்னரே தமிழக நண்பர் திரு.சன்னா அவர்களுக்குத் தெரிவித்த போது பேரா. ஓவியர் சந்ரு தான் இதற்கு மிகப் பொருத்தமானவர் என்று கூறி எனக்கு அவரை அறிமுகமும் செய்து வைத்தார். தமிழகம் வந்து விடுங்கள். நான் ஒரு நாள் உங்களோடு இருந்து பதிவுகளைச் செய்வதில் உதவுகிறேன்” எனக் கூறியிருந்தார் ஓவியர் சந்ரு. நான் மலேசியாவில் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்வுகளை முடித்து தமிழகம் வந்ததுமே தொலைப்பேசி வழியாக அவருடன் உரையாடி தேதிகளை உறுதி செய்து கொண்டேன். 

அம்பாசமுத்திரம் செல்வதற்கு எனக்கு மிக அதிகமாக உதவியவர் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கருணாகரன் தான். அவர் வீட்டில், அதாவது முன்னர் ஆஷ் துரை இருந்தாரே அந்த மாளிகையில் தான் காலையில் எனக்குக் காலை உணவு வழங்குவதாக ஏற்பாடாகியிருந்தது. அவர் மனைவியின் அன்பு உபசரிப்பில் உண்மையிலேயே அதிகமாகச் சாப்பிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இருவரது நல்ல விருந்துபசரிப்பில் மகிழ்ந்தேன். அது முடித்து புறப்படுகையில் வழியில் டாக்டர். பத்மாவை அவரது உறவினர் இல்லத்தில் ஏற்றிக் கொண்டு ஓவியர் சந்ருவின் இல்லம் சென்றோம். 

ஆனால் அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது அப்போதுதான் தெரிந்தது. அது ஒரு வகை சித்த மருத்துவக்கூடம். மருத்துவமனையில் அனுமதி வாங்கிக்கொண்டு எங்களுடன் வந்து விட்டார். முதலில் அவர் வீட்டிற்குச் சென்றோம். அங்கே சென்றதும் தான் தெரிந்தது. வீட்டோடு இணைத்த வகையில் ஒரு சிற்பக் கல்லூரியையும் கட்டி நடத்திக்கொண்டிருக்கின்றார். சிற்பங்களை அங்கேயே செய்வது, வகுப்பு நடத்துவது என நிகழ்வுகள் நடக்கின்றன. 

அங்குப் போகும் போது தான் தெரிந்தது அம்பாசமுத்திரம் சாதாரண ஒரு ஊர் அல்ல. காலடி வைத்தாலே மனதில் அமைதியும் சாந்தமும் வந்து விடுகின்றது. இயற்கை எழில் அப்படி நிறைந்து கிடக்கின்றது இந்த ஊரில். கோயிலை நாங்கள் மூவரும் அடையும் முன்னரே அரசு ஊழியர்கள் சிலர் எங்களுக்கு உதவ அங்கு வந்தனர். முழு பதிவு முடியும் வரை எங்களுடன் இருந்து எங்களுக்கு மதிய உணவையும் ஏற்பாடு செய்து கொடுத்து எங்களைச் சாப்பிட வைத்து பின் அவர்கள் சென்றனர். இந்த அனைவரின் உதவியோடும் தான் திருவாலீஸ்வரம் கோயில் பற்றிய வரலாற்றுப் இந்த வரலாற்றுப் பதிவு சாத்தியமாகியது. 

தமிழகத்தின் நெல்லைக்கு மலேசிய அன்பர்கள் பலர் சென்றிருக்கலாம். நெல்லையிலிருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குள் அடைந்து விடலாம் அம்பாசமுத்திரம் என்ற இந்தச் சிற்றூரை. இந்த ஊர் மட்டுமல்ல. இதன் அருகாமையில் இருக்கும் ஏனைய சிற்றூர்களும் வரலாற்று ஆர்வார்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய வகையிலான அருமையான கோவில்களும் சின்னங்கள் நிறைந்தவை பசுமையும் குளுமையும் இந்த ஊர்களுக்கு அமைந்திருக்கும் இயற்கை அன்னையின் கொடை. சென்று பார்த்து வாருங்களேன்!நெல்லையில் அல்வாவை சுவைத்தவாறு கோயில்கலின் வரலாற்றையும் அறிந்து வருவது சிவையான அனுபவமாக நிச்சயம் அமையும். 

Wednesday, July 5, 2017

62. மாணவர் மரபு மையம்மலேசிய சூழலில் தமிழரின் தொண்மையான வரலாற்றினைப் பாடபுத்தகங்களின் வழியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்றைய இளைய தலைமுறைக்குக் கிடைக்கின்றதா என்றால் அது கேள்வியே. பாட நூல்களில் நாம் வாசிக்கின்ற தகவல்கள் மலேசியாவிற்கான தமிழ் மக்களின் புலம் பெயர்வுகள் தொடர்பான சில குறிப்பிட்ட வரலாற்றுச் செய்திகளைச் சிறிதளவு மேம்போக்காகச் சொன்னாலும் கூட, அவை முழுமையானதாகக் கிடைக்கின்ற சூழல் இல்லை. தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாக கடந்த 200 ஆண்டுகளில் மலேசிய தீபகற்பத்திற்கு வந்தவர்கள் என்ற தகவலே பெருவாரியாக மக்கள் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி தமிழ் இலக்கியம், எழுத்து நடவடிக்கைகள், சமூகச் சேவைகளில் நாட்டம் கொண்டிருப்போர் ஆகியோருக்கும் கூட தமிழ் மக்களுக்கும் மலேசியாவிற்குமானத் தொடர்பின் பழமை என்பது தெரியாத நிலையே இன்றும் இருக்கின்றது. அதிகப்படியாகப் போனால் கெடா மாநிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதி பௌத்த, இந்து சமயக் கோவில்கள் பற்றி சிறிது தகவல்களும் ராஜேந்திர சோழனின் படைகள் இங்கே வந்தன, இப்பகுதியைக் கைப்பற்றி சோழ அரசு இருந்தது என்ற செய்தி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இதற்கும் மேல் பன்னெடுங்காலமாக தமிழர்களின் மலேசியாவிற்கான வருகை பற்றிய செய்திகளை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்குப் பள்ளிக்கூட நூல்கள் போதாது. ஏனெனில் அவற்றில் வழங்கப்பட்டிருக்கும் செய்திகள் பெரும்பாலும் தமிழர்களின் மலேசியாவிற்கான தொடர்பை மிகக் குறைத்து எடைபோடும் வகையிலும் முக்கியத்துவம் குறைக்கப்பட்ட நிலையிலுமே மட்டுமே காட்டக் கூடியதாக இருக்கின்றன.

ஆக, இந்தச் சூழலில் மலேசியாவைப் பொறுத்தவரையில் அங்குபாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தகவல்கள் மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள விழைவோருக்கு உதவும் நிலையில் இல்லை என்பது வெளிப்படை. இருக்கின்ற ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால் மலாயா பல்கலைக்கழக் நூலகத்தில் உள்ள நூல்கள் தாம்.

மலாயா பல்கலைக்கழகத்து நூலகம் மிகப் பழமையானது. பல்லாண்டுகளின் சேகரிப்புக்கள் இந்த நூலகத்தில் உள்ளன. மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவர்களே கூட இங்குள்ள தமிழ் மற்றும் தமிழ் மொழி, தமிழர் சார்ந்த  நூல்களைச் சென்று பார்த்திருப்பார்களா என்பது ஐயமே. இங்குள்ள பல நூல்கள் மலேசியாவில் தமிழர் வரலாறு தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நூல்களையும் இங்குள்ள பழமையான சஞ்சிகைகளையும் ஆராய முற்படும் போது விடுபட்டுப் போன பல தகவல்களை நாம் தேடியெடுக்க முடியும்.

மாணவர்களுக்குக் கல்வி கற்கும் காலத்திலேயே நாம் நமது  தமிழர் பண்டைய வரலாறு தொடர்பாக அளிக்கின்ற செய்திகள் அவர்கள் மனதில் தேடுதலை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில், தமிழ் மரபு அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் பல பள்ளிகள், மற்றும் உயர்கல்விக்கூடங்களில் தமிழர் இன, பண்பாட்டு, வாழ்வியல் தொடர்பான  செய்திகளை சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் வழியாக பகிர்ந்து கொள்கின்றோம். மாணவர்களையும் அவ்வகை முயற்சிகளில் ஈடுபடுத்துகின்றோம். தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு துணை முயற்சியாக மாணவர் மரபு மையம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி மாணவர்கள்  இவ்வமைப்பின் வழி தமிழர் வரலாறு தொடர்பான தேடல்களை மேற்கொண்டு ஆய்வுகளைச் செய்து தகவல்களைப் பெற செய்து வருகின்றோம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் என்ற இந்த அமைப்பினை முதன் முதலில்  தமிழகத்தின் குமாரபளையத்தில் இருக்கும் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியின் தான் அமைத்தோம். இந்த மாணவர் மரபு மையத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகள் பெருமைப்படத்தக்கவை.

2013ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் இருக்கும் திருமதி பவளசங்கரி அவர்கள் இந்த எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் செவாலியர் டாக்டர்.மதிவாணன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்கல்லூரியில் என்னை ஒரு வரலாற்றுக் கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்து உரையாற்ற அழைத்திருந்தனர். அந்த சந்திப்பின் போது தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகளாவிய செயற்பாடுகளை விவரித்து பேசிக் கொண்டிருந்தோம். கல்லூரியில் மாணவர்களுக்கு வரலாறு தொடர்பான செய்திகளைப் பகிரும் வகையில் ஏதேனும் தொடர் முயற்சிகளைச் செய்யலாமே என நான் முன்வைத்த கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்து அக்கல்லூரியின் முதல்வரையும் தமிழ்ப்பேராசிரியர்கள் டாக்டர்.மஞ்சுளா, டாக்டர்.சங்கரராம பாரதி ஆகிய இருவரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து இவர்கள் தொடர்பில் இருந்து செயலாற்றுவர் என நம்பிக்கையுடன் சொல்லிச் சென்றார்..

அடுத்த ஆண்டில் தமிழ்  மரபு அறக்கட்டளையின்  மாணவர் மரபு மையம் இங்கு தொடங்கப்பட்டது. அதனை அடுத்து 2015ம் ஆண்டு ஒரு மாபெரும் தமிழர் மரபு கண்காட்சியை கல்லூரி முதல்வர். டாகடர்.ராமசாமி,  தமிழ்ப்பேராசிரியர்கள் டாக்டர்.மஞ்சுளா, டாக்டர்.சங்கரராம பாரதி ஆகியோர் மாணவர்களின் பக்க துணையோடு ஏற்பாடு செய்திருந்தனர். இக்கண்காட்சியில் தமிழர் வாழ்வியலில் அங்கம் வகிக்கும் பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு விசயங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழர் வீர விளையாட்டுக்கள் பற்றிய செய்திகள், தமிழர் விவசாய மேம்பாடு, தானியங்கள், பயிர்கள் தொடபான காட்சிப்பொருட்கள், தமிழர் இசை, கலை, கூத்து தொடர்பான செய்திகளின் காட்சிப்பொருட்கள், தமிழர் உணவு, கிராமிய உணவு வகைகள், தமிழர் உடை , உடை அணியும் முறை, பருத்தி, வழிபாட்டு அம்சங்கள், கிராமப்புரங்களின் காட்சி என வகை வகையாக ஒரு வளாகம் முழுக்க கண்காட்சிப் பொருட்கள் நிறைந்திருந்தன.

2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இரு நாள் கருத்தரங்கம் ஒன்றினையும் இதே கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தோம். கல்லூரியில் தொடக்கப்பட்ட மாணவர் மரபு மையம் மற்றும் அதன் பொறுப்பாளர்கள், இந்த கருத்தரங்கம் ஆய்வாளர்களுக்குப் பயன் தரும் கருத்தரங்க நிகழ்வாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டனர். தமிழக கிராமப்புர தெய்வ வழிபாடு என்ற கருப்பொருளுடன் இக்கருத்தரங்கினை முன்னெடுத்தோம். தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 120 கட்டுரைகளுடன் இரு தொகுப்புக்களாக ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை தொகுப்பு வெளிவர கடுமையான உழைப்பினை நல்கிய தமிழ்ப்பேராசிரியர்கள் டாக்டர்.மஞ்சுளா, டாக்டர்.சஙகரராமபாரதி இருவருமே பாராட்டுதலுக்குறியவர்கள். இந்த ஆய்வுத் தொகுப்பு தமிழக நிலப்பரப்பில் உள்ள பல்வகையான வழிபாட்டுக் கூறுகளை விளக்கும் செய்திகளைக் கொண்டிருக்கின்ற கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றது என்பது பெருமையே. இந்தக் கருத்தரங்கில் இக்கல்லூரி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்துச் சிறப்பித்து இக்கருத்தரங்கை மிகத் தரம்மிக்க ஒரு கருத்தரங்காக செயல்படுத்திக்காட்டினர்.

2017ம் ஆண்டில் இதனை மேலும் விரிவாக்கி ஒரு நாள் கருத்தரங்கத்தையும் உள்ளடக்கி இரண்டு நாட்கள் பெரு விழாவாக எஸ்.எஸ்.எம். கல்லூரி வளாகத்திலேயே முதல் நாள் கண்காட்சியும் மறுநாள் ஆய்வுக் கருத்தரங்கமும் என்ற வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தோம்.  நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அளவில் தேர்வுசெய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய  கருந்தரங்க ஆய்வுக்கோப்பும் அன்று வெளியிடப்பட்டது  ஒரு பெருமை தரும் நிகழ்வு.

தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கல்லூரியில் மாணவர்கள் கல்வி கற்பதோடு தமது வரலாற்றினையும் அறிந்திருக்க வேண்டும் என்ற பெரும் ஆவலுடன் செயல்படுபவர் தான்  டாக்டர். செவாலியர் மதிவாணன் அவர்கள். கண்காட்சி ஏற்பாடு செய்யும் மானவர்கள் தாங்கள் காட்சிப்படுத்தும் பொருட்களின் வரலாற்றுப் பின்னனியை அறிந்து வந்து கண்காட்சிக்கு வருவோருக்கு விளக்கம் தரவேண்டும் என்பதையும் மிக முக்கிய அம்சமாக செயல்படுத்தி வருவது மிகுந்த பாராட்டுதலுக்குறியது. கல்லூரி மாணவர்களை ஒரு தந்தையைப் போல அரவணைத்து அவர்களுக்குப் பல்வேறு பொது அறிவு சார்ந்த செய்திகளை வழங்கி செல்வதிலும் இவர் சிறந்த வழிகாட்டியாகத்திகழ்கின்றர என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இத்தகைய உயரிய உள்ளத்துடன் செயல்படும் இக்கல்லூரியின் தலைவருக்கும் அதன் ஆசிரியப்பெருமக்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை மன்மார்ந்த நல்வாழ்த்துக்களைப் பதிகின்றோம்.

இளமையில் கல்வி கற்கும் போதே பொது அறிவினை விசாலப்படுத்தும் செய்திகளையும் மாணவர்கள் பெறும் வகையில் கல்வி நிறுவனங்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று ஒரு வேலையில் சேர்வது மட்டுமே மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. மாறாக தனது வேர்களை அறிந்து, தனது வாழ்வியல் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து வாழும் போது தான் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல், மொழி ஆகியனவற்றில் ஆழமான ஈடுபாடு ஏற்படும். வரலாறு தெரியாத மனிதர்களின் செயல்களால்தான் எண்ணற்ற கலைச்சிற்பங்களும் புராதனச் சின்னங்களும் பாதுகாப்பின்றி அழிக்கப்படுகின்றன.  இது மாற  வேண்டும்!