Wednesday, June 22, 2016

19. அமுதகவி உமறுப்புலவர் சமாதி



தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அரிய தமிழ் நூற்களை நாம் வலைப்பக்கத்தில்  இணைத்துக் கொண்டே வருகின்றோம். நமது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றுள்ளது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும் உரைநடையுமாக அமைந்த இந்த நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கத்திற்காக வழங்கியிருந்தார் திருமதி சீத்தாலட்சுமி அவர்கள். தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற போது அவர் தமது வாசிப்புக்காக எடுத்துச் சென்ற நூல்களில் இதுவும் ஒன்று. தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்களின் போது இந்த நூலைப் பற்றி அவர் மின் தமிழ் மடலாடற் குழுமத்தில் தெரிவிக்கவும் இதனையும் மின்னாக்கம் செய்து பொது மக்கள் வாசிப்பிற்கு வழங்க வேண்டும் என நானும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்களும் திட்டமிட்டோம். 

நூலை நான் மின்னக்கம் செய்து தருகின்றேன். எனது இல்ல முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று திருமதி.சீத்தாலட்சுமி அவர்களைக் கேட்ட உடன் எனக்குத் தபாலில் இந்த நூலை அனுப்பி வைத்தார்கள். இந்த நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு 10.10.2009 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைக்கப்பட்ட செய்தியை மின்தமிழில் அறிவித்திருந்தேன். மின்னூலாக்கத்திற்குப் பின்னர் இந்த நூலை உமறுப் புலவர் சமாதியை மேற்பார்வை செய்து வருபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது திருமதி.சீத்தாலட்சுமி அவர்களின் விருப்பம். எனது எட்டயபுரத்துக்கான பயணம் 2009ம் ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில் என உறுதியானவுடன் நானே நேரடியாக அங்கே செல்லும் போது அவர்களிடம் ஒப்படைத்து விடுவதாக உறுதி கூறியிருந்தேன். 

2009ம் ஆண்டு தமிழகத்தின் எட்டயபுரம் செல்லவேண்டும். அந்தக் கிராமத்தின் அனைத்து வரலாற்று விசயங்களையும் சேகரித்து தொகுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதனை மனதில் கொண்டு 2009ம் ஆண்டு டிசம்பரில் ஓரிரு நாட்கள் எட்டயபுரம் சிற்றூரில் இருந்தேன். 

எட்டயபுரத்தில் சில மணி நேரங்கள் ஜமீன்தாரின் அரண்மனையைச் சுற்றிப் பார்த்து பதிவுகள் செய்து கொண்ட பின்னர் நேராக அமுதகவி உமறுப் புலவர் சமாதி இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டேன். என்னுடன்  மதுரையிலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்களும் இணைந்து கொண்டனர். இந்த இடம் அரண்மனையிலிருந்து வெகு தூரமில்லை. சில குறுக்கு பாதைகளில் சென்று ஐந்தே நிமிடத்தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபத்தை வந்தடைந்தோம். எனது கற்பனையில் இது ஒரு இல்லம் போல இருக்கும் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக இந்த உமறுப்புலவர் மணிமண்டபம் ஒரு பள்ளி வாசல் போலவே அமைந்திருக்கின்றது. மணிமண்டபத்தில் உள்ளோருக்கு நாங்கள் முன் அறிவிப்பு ஏதும் தெரிவித்து விட்டு வரவில்லை. ஆனாலும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்கள் கொடுத்து நான் மின்னாக்கம் செய்து முடித்த நூலின் அசல் பிரதியை உமறுப்புலவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. 

உமறுப் புலவர் 1642ம் ஆண்டு பிறந்தவர். எட்டயபுரத்து அரண்மனை சமஸ்தானக் கவிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது நூலாகிய சீறாப்புராணம் இலக்கிய கவித்துவச் சிறப்புடன் நோக்கப்படும் ஒரு நூல். உமறுப் புலவர் தமது இளம் வயதிலேயே தமது கவித்திறமையால் எல்லோரையும் கவர்ந்தவர். இவரது ஆசிரியரான கடிகை முத்துப் புலவரும் சமஸ்தானப் புலவர்களில் ஒருவரே. மத வேறுபாடுகள் இல்லாமல் அந்தக் காலகட்டத்தில் அரண்மனையில் புலவர்கள் சிறப்புச் செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இவரும் ஒரு சான்று. உமறுப் புலவர் 1703ம் ஆண்டு மறைந்ததாக நூல் குறிப்பு உள்ளது. 

சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு மணிமண்டபத்திற்குள் நுழைந்தோம். அழகான வடிமவமைப்பில் அமைந்த கட்டிடம். 
நாங்கள் சென்ற சமயத்தில் சிலர் அங்கிருந்தனர். 

உமறுப் புலவர் சமாதி, முதலில் பிச்சை என்பவரால் 1912ம் ஆண்டு நினைவுச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் 2007ம் ஆண்டு இப்போதிருக்கும் இந்தப் புதிய மணி மண்டபம் கட்டப்பட்டு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உமறுப் புலவர் சரிதை நூலை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்குள்ளே நுழைந்தோம். பச்சை நிறத்திலான துணியைக் கொண்டு சமாதியை அலங்கரித்திருக்கின்றனர். தினம் அங்கு மக்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர் என்பதை சூழலைப் பார்க்கும் போது அறியமுடிந்தது. 

மணிமண்டபத்தின் உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு பேரிடம் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் குறிப்பிட்டேன். உமறுப்புலவரின் சரிதத்தை அங்கே மணிமண்டபத்தில் வைக்க வேண்டும் என்ற திருமதி.சீத்தாலட்சுமிய் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்து இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இடம்பெற நான் ஏற்பாடு செய்டிருப்பதையும் தெரிவித்த போது அவர்கள் இருவரும் அகமகிழ்ந்தார்கள். அங்கிருந்தவரில் ஒருவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளரை அழைத்து வர அவரிடமே அந்த நூலை வழங்கினேன். 

இந்த உமறுப்புலவர் நினைவு மண்டபத்திற்கு பொது மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மந்திரிக்க வருகின்றனர் என்ற விபரத்தையும் தெரிந்து கொண்டேன். குழந்தைகள் உடல் வருத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் உமறுப் புலவரின் சமாதி உள்ள இந்த மணிமண்டபத்திற்கு குழந்தைகளைப் பெற்றோர்கள் அழைனத்து வருவார்களாம். இங்கு வந்து மந்திரித்துச் சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு இருக்கின்றது. இப்படி வரும் குழந்தைகள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பூஜைக்கு வைத்துள்ள தண்ணீரைத் தெளித்து விட்டால் நோய் குணமாகும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாக இருக்கின்றது. 

இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்துக்களும் கிறித்துவர்களும் கூடத் தயக்கமின்றி சர்வ சாதாரணமாக தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றார்கள். சிலர் பிரச்சனைகள் நீங்கியதன் ஞாபகார்த்தமாக தங்கள் குழந்தைகளுக்குக்கும் உமர் என்று பெயர் வைப்பதும் இங்கு வழக்கத்தில் இருக்கின்றது என்பதை இந்த இஸ்லாமிய நண்பர் திரு. அகமது ஜலால் அவர்களிடம் பேசிய போது அறிய முடிந்தது. 

அந்த மண்டபத்தை முழுதுமாகச் சுற்றிக் காண்பித்து அங்கு வந்து செல்வோர் பற்றியும் தொழுகை நடைபெறுவது பற்றியும் எங்களிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர் இந்த இஸ்லாமிய நண்பர்கள். 

வேறுபட்ட மதங்களைப் பேணுவோராக இருந்தாலும் எட்டயபுர கிராம மக்கள் மத வேறுபாடின்றி எல்லோரும் நட்புடனும் அன்புடனும் பழகும் சூழலை அங்கு நேரில் பார்த்து மகிழ்ந்தேன். மத நல்லிணக்கம் அமைதியான வாழ்க்கைச் சூழலை மக்களுக்கு வழங்கக்கூடிய நல்ல பண்பு இதனை மதித்துப் போற்றி வளர்ப்பது சமூக மேம்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கும்! 

Friday, June 17, 2016

18. கோவிலூர் வேதாந்த மடம்

மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.


இவ்வாரக் கட்டுரையில் தமிழகத்தில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் வேதாந்த மடம் பற்றியும் அதன் வரலாற்றின் சில தகவல்களையும் மடத்தின் செயல்பாடுகளையும் விவரிக்கின்றேன்.


Thursday, June 9, 2016

17. திருமலை சிகாமணி




பண்டைய தமிழர் நிலப்பரப்பில் இருந்த இயல்பான வழிபாடுகளானவை குலதெய்வ வழிபாடு, இயற்கை தெய்வ வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு, இயற்கையாகிய காடு-மலை-தாவரங்கள்-மழை-நெருப்பு ஆகியவற்றைப் போற்றும் வழிபாடு என அமைந்திருந்தன. இவை மனிதர்களும் தெய்வங்களும் நெருக்கமான உறவினைக் கொண்டிருக்கும் வகையில் அமைந்த வழிபாடுகள். இந்த வழிபாட்டு முறையில் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்களாக பலம் பொருந்திய ஒருவர் தேவை என்ற கருத்திற்கு இடமில்லை. ஆண் பெண் இருவருமே பூசாரிகளாக இருக்கத் தகுதி படைத்தோராகவே பண்டைய தமிழ்ச்சமூகத்தின் நிலை இருந்தது. இந்த இயல்பான தெய்வ வழிபாடு மக்களை இணைத்தது. அவர்கள் அஞ்சுகின்ற சக்திகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்து நன்மை அளிக்கும் ஒரு சமூகப்பண்பாக இது அமைந்திருந்தது. 

இது சாதிப்பிரிவினை அற்ற மிக இயல்பான திணை, அதாவது, நிலப்பகுதி அடிப்படையில் அமைந்த மனித வாழ்க்கையும் அதற்குரிய தெய்வ வழிபாடுகளும் என்ற வகையில் அமைந்த ஒரு சமூக நிலை. 

இந்த வழிபாட்டு முறையில் மிகப்பெரிய மாற்றம் என்பது தமிழக நிலப்பரப்பிற்கு ஆரியர்களின் வேத நெறி அறிமுகப்படுத்தப்பட்டபோது நிகழ்ந்தது. அது வர்ண பேதங்களை, அதாவது மனு தர்மம் எனும் வேத சாத்திர நூலில் குறிக்கப்படும் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டும் மனிதருக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு கொள்கை. ஆரிய வேத தத்துவக்கருத்துக்களின் தாக்கம் அரசுகளை ஈர்த்த போது வேத சாத்திரங்கள் அதிலும் குறிப்பாக மனு தர்மம் சொல்லும் பிரிவினையை அரசியல் அமைப்புப்படி சட்டமாக்கி நடைமுறைப்படுத்தி அதனை விரிவாக்கின அன்றைய அரசுகள். வேத முனிவர்கள் செய்கின்ற வேள்விகளில் உயிர்ப்பலி கொடுக்கும் நடைமுறை வழக்கில் இருந்தது. உயிரினங்களை தாங்கள் செய்கின்ற யாகங்களில் பலி கொடுத்து மேல் உலகத்தில் இருக்கும் தேவர்களை மகிழ வைத்து தங்கள் விருப்பங்களை வரமாகப் பெறலாம் என்ற நம்பிக்கையை வைதீக சமயம் விரிவாக்கியிருந்தது. அதுமட்டுமன்றி ஞானக் கல்வி வாய்ப்புக்கள் என்பன குறிப்பிட்ட குலத்தோருக்கு மட்டுமே உரியது என்றும் ஏனையோர் தொழில் கல்வி செய்து வாழ்வதே குல தர்மம் என்ற கொள்கையையும் விரிவு படுத்தியிருந்தது வைதீக மதம். 

இதற்கு ஒரு மாற்றாகச் சமணமும் பௌத்தமும் விளங்கின. இறைவனை அடைய எல்லோரும் தவம் செய்யலாம்; நல்ல நெறிகளை ஒழுகினால் மோட்சம் பெறலாம்; கல்வி என்பது எல்லோருக்கும் சமமானது;. என்ற கருத்துக்களைச் சமணமும் பௌத்தமும் முன்வைத்தன. இதில் மேலும் விரிவாக அகிம்சை கோட்பாட்டை வலியுறுத்தும் பண்பைக் கொண்டிருந்தது சமணம். எந்த உயினங்களையும் வதைத்தல் கூடாது என்பதை மிக முக்கியக் கோட்பாடாக சமண சமயம் முன்வைத்தது. மக்கள் மத்தியில் அறத்தை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற சிந்தனையையும் எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கையையும் வைதீக மதம் சூழ்ந்திருந்த தமிழக நிலப்பரப்பில் சமணம் முன்வைத்துப் பரவலாக பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வளர்ந்தது. 

சமணம் இன்றைய தமிழகம் என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதியில் கி.மு 5ம் நூற்றாண்டு வாக்கிலிருந்து வழக்கில் இருந்து வந்தமையை இன்று நமக்குக் கிடைக்கின்ற பல சான்றுகளிலிருந்து அறிகின்றோம். பொதுவாக பண்டைய தமிழி (பிராமி) எழுத்தால் அமைந்த கல்வெட்டுக்கள் இருக்கின்ற பகுதிகளான மாங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, ஆனைமலை, அறச்சலூர் போன்ற பகுதிகள் தமிழகத்தில் சமணத்தின் தொன்மையை உறுதி செய்வதாக இங்குள்ள கல்வெட்டுக்களும், சமணர் கற்படுக்கைகளும் அமைகின்றன. 

சமண சமயம் இந்தியாவில் மட்டுமே தோன்றி வளர்ந்து இன்றளவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களால் ஒழுகப்படும் ஒரு சமயம். தமிழகத்தில் கி.பி 7ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய சைவ வைணவ சமயங்கள் பெருமளவில் மன்னர்களின் ஆதரவைப் பெற்று வளர்ந்த போது சமணமும் பௌத்தமும் அதன் புகழை இழக்கத் தொடங்கின. அதன் பின்னர் மீண்டும் அச்சணந்தி முனிவரின் முயற்சிகளினால் கி.பி 9ம் நூற்றாண்டு முதல் மீண்டும் சமணம் அதன் சிறப்பைப் பெறத் தொடங்கியது. பிற்காலச் சோழ மன்னர்கள் ஆட்சியின் போது சைவ வைணவ சமயத்தோடு சமணமும் மன்னர்களின் ஆதரவைப் பெற்ற சமயமாகவே திகழ்ந்தது. அதிலும் குறிப்பாக மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் சமய வெறி அற்ற, எல்லா சமயத்தோரையும் ஆதரிக்கும் பொது நலச்சிந்தனை பரவியிருந்ததால் சமணமும் புத்துயிர் பெற்று வளர்ச்சி பெற ஆரம்பித்தது. 

மாமன்னன் ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார் சமண சமயத்தில் பற்று கொண்டவராக இருந்தார். தமிழகத்தின் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள திருமலை மற்றும் கரந்தை போன்ற பகுதிகளில் குந்தவை நாச்சியார் கட்டிய சமண ஆலயங்கள் இன்றும் சிறப்புடன் காட்சியளிக்கின்றன. 

அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கோயில் தான் சிகாமணி நாதர் சமணக்கோயில். இந்தக் கோயில் இருக்கும் இடம் எழில் நிறைந்த ஒரு பகுதி. தமிழகத்தின் போற்றத்தக்க வகையில் அமைந்த சமண சின்னங்கள் உள்ள ஒரு பகுதியாக இந்தக் கோயில் இருக்கும் திருமலை என்னும் ஊரைச் சொல்லலாம்.. திருமலை திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருமலை என்றாலே பொதுவாக பலரும் இது திருப்பதி வெங்கடாசலபதி இருக்கும் திருமலையோ என யோசிக்கலாம். இங்குக் குறிப்பிடப்படும் திருமலை ஆந்திரப்பிரதேசத்தில் இருக்கும் திருமலை அல்ல. இது தமிழகத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான். திருமலை என்ற இந்த ஊரில் வைகாவூர் என்னும் கிராமத்தில் தான் இந்தச் சிகாமணி நாதர் கோயில் இருக்கின்றது, 

இந்தக் கிராமத்திற்கு நான் 2014ம் ஆண்டில் சென்றிருந்தேன். அங்கிருக்கும் சமண மடத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அருகாமையில் இருக்கும் சமண சமயச் சின்னங்களைப் பார்வையிட்டும் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீ தவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளைப் பேட்டிகண்டேன். அந்த விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் சமண சமய வரலாறு உள்ள பகுதியில் இடம்பெறுகின்றது. 

இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதி பாறைகள் நிறைந்த ஒரு மலைப்பகுதி. மலையின் கீழடிவாரத்தில் ராஜராஜன் தன் தேவியருடன் இருக்கும் வகையில் அமைந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் கடந்து சென்றால் பாறைகளுக்கு மேலே செல்ல அமைக்கப்பட்டுள்ள மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் பிரம்மாண்டமான வடிவில் உள்ள ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தை அங்குக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். தீர்த்தங்கரர் நேமிநாதரின் சிறப்புப் பெயரே சிகாமணிநாதர் என்பதாகும். இச்சிற்பம் சோழ இளவரசியார் குந்தவை பிராட்டியாரால் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின்னர் கட்டப்பட்டது. 

இந்தியாவிலேயே மிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் என்ற சிறப்பைக் கொண்டது இந்தச் சோழர் காலத்துச் சிற்பம். மாமன்னன் ராஜராஜனின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் அவருக்குப் பல பெயர்கள் உண்டு. மும்முடிச் சோழன், ஜனநாதன், அருண்மொழி, சத்திரிய சிகாமணி ஆகியவை அவற்றுள் அடங்கும். திருமலையில் செதுக்கப்பட்ட இந்த நேமிநாதரின் சிற்பத்தை தனது சகோதரன் மாமன்னன் ராஜரானின் மறைவுக்குப் பின்னால் கட்டியதால் ராஜரானின் நினைவாக 'சிகாமணி' என்று பெயரிட்டிருக்கலாம் என "திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு" என்ற நூலில் அதன் ஆசிரியர் ஆர்.விஜயன் குறிப்பிடுகின்றார். 

இச்சிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்திற்கு பூஜையும் செய்யப்படுகின்றது. இந்த மலை இருக்கும் பகுதியில் மேலே செல்லச் செல்ல மேலும் பல சமண சின்னங்கள் இருப்பதைக் காணலாம். 

இந்தச் சிற்பம் அமைந்திருக்கும் சூழலும் இதன் அமைப்பும் இங்கு வருவோர் மனதில் ஆழ்ந்த தியானத்தை ஏற்படுத்டும் வல்லமை கொண்டவை. இத்தகைய சிறந்த கலைப்படைப்புக்கள் தமிழர் வரலாற்றின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பவையாக அமைந்திருக்கின்றன. 

சமண நெறி என்றோ இருந்து என்றோ மறைந்தது எனவும், அதன் வரலாற்று அம்சங்களை முழு பரிமாணத்தோடு அறியாது ஒரு பகை சமயம் போலவும் கருதுவோரும் உள்ளனர். சமண சமயம் தமிழ் மொழிக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் கலைக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். அவற்றை அறிந்து கொள்ள முனையும் போது தமிழர் வரலாற்றைப் பற்றிய விரிவான தகவல்களை நாம் பெற முடியும்.

Thursday, June 2, 2016

16. டென்மார்க்கில் தமிழ் ஒலைச்சுவடிகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 
சொல்லடி, சிவசக்தி ! எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டனவா? அனைத்தும் நூற்களாக அச்சிடப்பட்டு வெளிவந்து விட்டனவா? என்றால் அதற்கு பதில், ”இல்லை” என்பது தான்!






தமிழ் நிலம் பல நூறு ஆண்டுகளாய் கிளைத்தெழுந்த அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த ஒரு தாய் நிலம். இங்கே அறிவுக் களஞ்சியங்கள் காலம்தோறும் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்பட்டும் பரவலாக்கப்பட்டும் வந்துள்ளது. 

அச்சு பதிப்பு முறை தமிழகத்தில் அறிமுகமாகும் வரை தமிழர் தம் வாழ்வியலில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களும் ஆவணங்களும் பல்வேறு வகைப்பட்ட குறிப்புக்களும் பணை ஓலைச் சுவடிகளிலும், கோயில்களில் கல்வெட்டுக்களாகவும் தான் எழுதப்பட்டும் பொறிக்கப்பட்டும் இருந்தன. அச்சு இயந்திரங்கள் தமிழக நிலப்பரப்பில் அறிமுகமாகும் வரை இலக்கியங்கள் என்பது மட்டுமன்றி வணிகம், கலைகள், இலக்கியம், பக்தி பனுவல்கள், பல்வேறு வகைப்பட்ட சாத்திரங்கள், ஓவியங்கள், சிற்பக் கலை நுணுக்கங்கள், மனிதர்களுக்கான மருத்துவக் குறிப்புக்கள், விலங்குகளுக்கான மருத்துவக் குறிப்புக்கள், வான சாஸ்திரம், கலைகள் என பலதரப்பட்ட தகவல்கள் அனைத்துமே பனை ஓலை நூல்களில் வழிவழியாக படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. அதே வேளை, பண்டைய அரசுகளின் அதிகாரப்பூர்வ  செய்திகளும், போர் செய்திகளும், நன்கொடைகளும் கோயில்களில் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டு இன்றும் வாசிக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன.  

அச்சு இயந்திரங்களின் அறிமுகம், அதன் தொடர்ச்சியாக தாட்களின் அறிமுகம் என தமிழ் சமூகம் கல்விப் புரட்சியை நோக்கி முன்னேற்றம் கண்ட வேளையில் குறிப்பிடத்தக்க ஆவணப்பாதுகாப்பு முயற்சிகள் நடந்தன. முதம் முயற்சிகள் 16ம் நூற்றாண்டிலே தொடங்கினாலும் விரிவான முயற்சிகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி நடைபெற ஆரம்பித்தது எனலாம்.  

இவ்வகை முயற்சிகளே நமது பண்டைய இலக்கிய வளங்களில் சில இன்று நமக்கு அச்சு வடிவிலும் இணையத்திலும் கிடைக்க அடிப்படை காரணங்களாக அமைகின்றன. இலக்கியங்கள், வரலாற்றுத் தகவல்கள், தமிழக நிலப்பரப்பில் வாழும் பழங்குடி மக்கள், இனக்குழுக்கள், சடங்கு முறைகள் என்பன போன்ற பல தகவல்கள் இப்படி கடந்த நான்கு நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.
தாள் அச்சு இயந்திரங்கள் தமிழகத்தில் அறிமுகமாவதற்கு முன்னர் பண்டைய தமிழர்களின் ஞானக் கருவூலங்கள் கல்வெட்டுக்களிலும் சுவடி நூல்களிலும் மட்டுமே எழுதப்படுவது வழக்கமாக இருந்தது. சில சிறு குறிப்புக்கள் பாறைகளிலும் மண்பாண்டங்களிலும் கீறி வைக்கப்பட்டமையயும் தொல்லியல் ஆய்வுகளும், அகழ்வாய்வுகளும் வெளிப்படுத்துவதை நாம் அறிய வருகின்றோம். 

லூத்தரன் பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகை என்பது டேனீஷ் வருகையோடு தொடர்புடையது. லூத்தரன் பாதிரிமார்கள் என்போர் அடிப்படையில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். 16ம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் சிந்தனைப் புரட்சியை ஐரோப்பிய சூழலில் உருவாக்கினார் மார்ட்டின் லூதர். இவர் ஜெர்மனியைச் சார்ந்தவர். அன்றைய வாட்டிக்கன் சமய  ஆளுமையைக்கு எதிர்குரலாக அமைந்தது மார்ட்டின் லூதரின் கருத்துக்கள். இவையே லூத்தரன் சமய நெறியாக உருவாக்கம் கண்டன. இன்று ப்ராட்டஸ்டன் மதம் என்ற பெயரால் இது அழைக்கப்படுகின்றது. மார்ட்டின் லூதரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு சமய சீர்திருத்தத்தை வரவேற்ற பொதுமக்கள் இந்த புதிய சமயத்தை ஜெர்மனியில் விரிவாக வரவேற்றனர். டென்மார்க் அரசு இந்த சமயத்திற்கு பெறும் ஆதரவும் அளித்து அதனை பரப்பும் முயற்சியில் பெரும் பங்கு வகித்தது என்பது மிக முக்கியமானது.

1612ம் ஆண்டில் டென்மார்க் அரசின் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, தமிழகத்தின் தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் அனுமதியோடு பெற்ரனர். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு இந்த உடன்பாடு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகத்தோடு மதம் பரப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் வகையில் ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்கள் தமிழகத்தின் தரங்கம்பாடி வந்தனர். அவர்களில் சீகன்பால்க், ஷூல்ட்ஷெ, க்ருண்ட்லர், ரைனூஸ் போன்றோர் தமிழில் நூல்களை எழுதி ஐரோப்பிய பாதிரிமார்களும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் ஒரு மொழியாகக் கற்க வகைசெய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இவர்களது நூல்கள் மட்டுமன்றி தமிழகத்தில் இவர்கள் இருந்த காலத்தில் எழுதப்பட்ட இவர்களது நாட்குறிப்புக்கள், கடிதங்கள் ஆகியன தமிழில் எழுதப்பட்டவை. உதாரணமாக டேனிஷ் உயரதிகாரியால் சிறைபடுத்தப்பட்ட சீகன்பால்க் ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் நாட்குறிப்புக்களை பனை ஓலைச் சுவடிகளில் எழுதியிருக்கின்றார். இன்னொரு பாதிரியாரான க்ருன்ட்லர், தான் கண்டறிந்த உள்ளூர் மூலிகைகள் பற்றி பனை ஓலைச் சுவடிகளில் எழுதி தொகுத்து வந்ததோடு அவற்றை டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் நூலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துக் குறிப்புக்களாக உள்ள ஆவணங்கள் 17, 18, 19, 20ம் நூற்றாண்டின் தமிழக மக்களின் சமூக, வாழ்வியல், சமய, வரலாற்று, அரசாட்சி, மருத்துவம், ஆய்வு என பல்வகைப்படுவன. லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து பனை ஓலைச்சுவடி ஆவணங்கள் இன்று டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் அரச நூலகத்திலும் ஜெர்மனியின் ஹாலே ஃப்ராங்கன் ஆய்வகத்திலும் பாதுகாக்கப்படுகின்றன.  இப்படி பாதுகாக்கப்படும் கையெழுத்து பனை ஓலைச்சுவடி ஆவணங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு பொது மக்கள் வாசிப்பிற்கு கிடைக்கும் போது 15ம் நூற்றாண்டு தொடங்கி 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான சமூக வரலாற்று விஷயங்கள் மிகப் பல விரிவான ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அக்கால சூழலின் சமூகவிஷயங்களை அறிந்து கொள்ள பல சான்றுகளை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும் என்ற எண்ணம் எனக்கு உருவானது.

முதன் முதலில் லூத்தரன் பாதிரிமார்களின் தமிழகத்திற்கான வருகை, பின்னர் அது தொடர்பில் படிப்படியாக நிகழ்ந்த செயல்பாடுகள் ஆகியனபற்றிய அறிமுகம் எனக்கு டாக்டர்.மோகனவேலு அவர்கள் எழுதிய German Tamilology  என்ற நூலின் வழி கிடைத்தது.  அப்பாதிரிமார்கள் எழுதிய தமிழ் ஓலைச்சுவடிகளைப் பார்க்க வேண்டும், வாசிக்க வேண்டும்;  அதுமட்டுமன்றி அவற்றைக் கணினி தொழில்நுட்பம் கொண்டு மின்னாக்கம் செய்து தமிழ் மொழியிலும் தமிழக வரலாற்றிலும் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும், அது தொடர்பிலான ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகரித்துக் கொண்டே வந்தது. 

நான் அறிந்து கொண்ட செய்திகளை கட்டுரையாக ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 2014ம் ஆண்டு வாசித்துப் படைத்தேன். தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத்தமிராய்ச்சி மாநாட்டில்  இது தொடர்பான ஒரு கட்டுரையை நான் வாசித்தேன். 2015ம் ஆண்டு திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச்சங்க கருத்தரங்கிலும் ஒரு கட்டுரை இது தொடர்பில் வாசித்தளித்தேன். இதன் வழி ஐரோப்பிய லூத்தரன்பாதிரிமார்களின் தமிழ் முயற்சிகள் பற்றிய செய்திகள் தமிழ் வரலாற்று ஆர்வலகர்களிடையே ஓரளவு கொண்டு செல்ல முடிந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பாவில் டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனிலும், ஹெர்மனியின் ஹாலேயிலும் பாதுகாக்கும் இந்த ஆவணங்களை கணினி தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மின்னாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குத் தொடர்ச்சியாக இருந்தமையால், கோப்பன்ஹாகன் அரச நூலகத்தின் அரிய கையெழுத்து சுவடிகள் துறையின் பொறுப்பாளர் டாக்டர்.பெண்ட் அவர்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு அதற்குத் தேவையான அதிகாரப்பூர்வ ஏற்பாடுகளைச் செய்த பின்னர், கோப்பன்ஹாகன் அரச நூலகம் எனக்கு அங்கே வருகை தந்து நேரடியாக இவற்றை நான் மின்னாக்கம் செய்ய அனுமதி அளித்தனர். இது என்னுடைய இந்தத் தீவிர முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி.  அதோடு டென்மார்க்கில் வாழும் கோப்பன்ஹாகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். ராமானுஜம் அவர்களின் தொடர்பும்  நட்பும்  ஏற்பட்டதால் மேலும் சில தகவல்களும் எனக்குக் கிடைத்தன. அவர் ஏற்கனவே நூலகத்தின் பட்டியலிலிருந்து எடுத்து பட்டியலிட்டிருந்த தமிழ் ஓலைச்சுவடிகளின் பட்டியல் ஒன்றினை எனக்கு அனுப்பி வைத்தார். 

இந்த முன்னேற்பாடுகளுடன் எனது டென்மார்க்கிற்கான பயணத்தை நான் திட்டமிடலானேன். 2016, மே மாதம் 26ம் தேதி கோப்பன்ஹாகனுக்கு ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டேன்.அன்றே கோப்பன்ஹாகன் அரச நூலகம் சென்று என்னை நூலகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த அரிய தமிழ்ச்சுவடிகளின் மின்னாக்கப்பணியைத் தொடங்கினேன். மூன்று நாட்கள் இடைவிடா மின்னாக்கப்பணியில் ஈடுபட்டிருந்தேன். காலை 9மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை என என் மின்னாக்கப்பணி நடைபெற்றது. இந்த முயற்சியில் முப்பத்தெட்டு தமிழ் பனை ஓலைச்சுவடிகளை, அதாவது ஏறக்குறைய 1200 பனை ஓலைப்பக்கங்கள் கொண்ட தமிழ் ஆவணங்களை மின்னக்கம் செய்து முடித்துள்ளேன்.

நாம் ஏற்கனவே நன்கறிந்த சில கதைகள், ஒரு நிகண்டு, இரண்டு மருத்துவ ஓலைச்சுவடிகள் இவற்றுள் அடங்கும்.  இதுவரை வெளியிடப்படாத சீகன்பால்கின் கையெழுத்து ஆவணங்கள், தமிழிலும் தெலுங்கிலும் என இரு மொழிகளில் அமைந்த ஷூல்ட்ஷேவின் சமய போதனை நூல், சீகன்பால்கின் டைரி, சீகன்பால்கின் உதவியாளர்களின் டைரிகள் என பல புதிய ஆவணங்கள் இந்த மின்னாக்கத்தில் உள்ளன.  இந்த மின்னாக்கப்படிமங்கள் படிப்படியாக நூல் வடிவம் பெறும் வகையிலும், ஆக்கப்பூர்வமான  தொடர் ஆய்வுகள் தொடங்கும் வகையிலும் எமது அடுத்தக் கட்ட செயல் பாடுகள் அமையும். 

இந்த முயற்சியில், தரங்கம் பாடியில் டென்மார்க் அரசின் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியிடம் சிறு பகுதியைப் பெற ரூ3111 ஆண்டுக்கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு  உரிமை அளித்த, அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் கையெழுத்து பொறிக்கப்பட்ட தங்க ஆவணத்தை நேரில் பார்த்து அதனை ஆவணப்படுத்தியது என் வாழிவில் ஒரு மறக்க முடியாத அனுபவம்.  இந்த பத்திரம் தங்கத்தினால் ஆனது. வேறு எந்த உலோகமும் கலக்காதது. பனை ஓலைச்சுவடி போன்ற வடிவத்திலேயே அமைக்கப்பட்டது. இதில் ரூ 3111 ஆண்டுக்கட்டணத்திற்கு தரங்கம்பாடியின் ஒரு பகுதியை டேனீஷ் அரசு பெற்றுக் கொண்டமை தமிழில் எழுதப்பட்டுள்ளன. மன்னர் ரகுநாத நாயக்கரின் கையெழுத்து தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தங்கச்சுவடி கோப்பன்ஹாகன் நேஷனல் ஆர்க்கவில் மிகப்பாதுகாப்பாகன அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

இன்றைய கட்டுரை டென்மார்க், கோப்பன்ஹாகன் விமான நிலையத்திலிருந்து உங்களை வந்தடைகின்றது. அதிலும் குறிப்பாக டென்மார்க் அரச நூலகத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகளில் சிலவற்றை தொட்டு மின்னாக்கம் செய்த அனுபவத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் அச்செய்திகளை உங்களுடன் இக்கட்டுரையின் வழி பகிர்ந்து கொள்வதில் அகம் மிக மகிழ்கின்றேன்.