கரூரில் ஒரு கல்லூரியில் எனது சொற்பொழிவு நிகழ்வை முடித்து சில தினங்களுக்கு முன்னர், அதாவது 22 டிசம்பர் காலையில் தென் தமிழகத்தின் கலைவளமும் தமிழ் வளமும் பொருந்திய நெல்லைச் சீமையை வந்தடைந்தேன். அன்று காலைத்தொடங்கி நெல்லைச்சீமையில் பல சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் வரலாற்று ஆவணப்பதிவுகளுக்காக என் பயணம் அமைந்திருந்தது. இடையில் இரு நாட்கள் தூத்துகுடியில் மீனவர்கள் வாழ்க்கையையும் நெசவுத்தொழிலில் ஈடுபடும் மக்களையும் சந்தித்து சில பதிவுகளைச் செய்திருந்தேன்.
திருநெல்வேலியில் இந்த ஆண்டு எனது வரலாற்றுப்பதிவுகள் பன்முகத்தன்மைக் கொண்டவையாக அமைந்தன.
அம்பாசமுத்திரத்தில், ராஜராஜன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே மன்னன் கட்டிய திருவாளீஸ்வரம் கோயிலின் பதிவிலிருந்து எனது வரலாற்றுப் பதிவு தொடங்கியது. ராஜராஜசோழன் பெரிய கோயிலில் புதிய கட்டிட பாணியை அறிமுகப்படுத்துவதற்கு முன்னராக வழக்கில் இருந்த பராந்தக சோழனின் காலத்திய கோயில்கட்டுமானத் தோற்றத்துடன் கூடிய வகையில் அமைக்கப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலில் சில சிற்பங்களை ஓவியர் சந்துருவுடனும் டாக்டர்.பத்மாவதியுடனும் இணைந்து ஆய்வு செய்து அதனைப் பதிவாக்கினோம். இக்கோயிலின் விமானத்தில் இருக்கும் சிவன் பார்வதி சிற்பமும், அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் மற்றும் ஏனைய ஒவ்வொரு சிற்பங்களும் சிற்பக்கலை மாணவர்களுக்கு ஒரு இனிய விருந்து எனலாம். இவற்றை உருவாக்கிய சிற்பி அவ்வடிவங்களை முழுமையாக தமது மனக்கண்ணில் உருவாக்கி, தமது படைப்பின் முழு பரிமானத்தையும் உணர்ந்து பின் அவற்றை செதுக்கியிருக்கின்றார். சிற்பங்களின் ஒவ்வொரு பாகமும் இதற்குச் சான்று பகர்கின்றன.
இந்தக் கோயிலின் வெளிப்புறச்சுவற்றில் ஏராளமான வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டுக்களும் உள்ளன. வட்டெழுத்துக்குப் பரிச்சயம் பெற்ற பாண்டிய தேசத்தில் சோழமன்னன், தான் பதிந்து வைக்க நினைத்த செய்திகளை, அங்கே பரிச்சயமான வட்டெழுத்து எழுத்துரு முறையிலேயே செய்திருக்கின்றான் என்பது ஒரு சிறப்பு.
இதற்கு அடுத்தார்போல செய்யப்பட்ட பதிவு ஓவியக்கலைக்குச் சிறப்பு தரும் திருப்புடைமருதூர் ஆலயத்தில் செய்தோம். இதுவும் அம்பாசமுத்திரத்தில் அமைந்திருக்கும் ஒரு கோயில் தான். நான் இதுவரைக் கேள்விப்படாத அதிசயமாய் இந்தக் கோயில் அமைந்திருந்தது. இதற்குக் காரணம், இக்கோயிலின் முன்புற கோபுரத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கவின் மிகு சித்திரக்கூடம்தான்.இந்தச் சித்திரக்கூடம் ஐந்து தளங்களில் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சுவர் ஓவியங்கள் கதை சொல்கின்றன. காவியம் படைக்கின்றன. மூலிகை செடிகளினால் உருவாக்கப்படும் வர்ணங்களைக் கொண்டே சித்திரங்களைத் தீட்டியிருக்கின்றனர் இவற்றை உருவாக்கிய ஓவியர்கள். அதுமட்டுமா? சித்திரங்கள் சுவர்களை அலங்கரிப்பது போல சுவர்களுக்கு இடையில் மர வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் மரச்சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்படைப்பு இது. தமிழர்களின் தச்சு வேலைப்பாட்டு கலைத்திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
நெல்லைச் சீமையைச் சிறப்பித்துச் சொல்வது என்றால் திருநெல்வேலி அல்வாவை நினைக்கும் நமக்கு நெல்லைச் சீமை ஒரு கலைப்பொக்கிஷம் என்பது தெரியாமல் தான் இருக்கின்றது. நெல்லையின் அம்பாசமுத்திரம், மன்னார்கோயில், பாபநாசம், சேரன்மாதேவி போன்ற கிராமங்கள் எண்ணற்ற கலைச்செல்வங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றன. வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் மட்டும் தான் இப்பகுதியில் நிறைந்திருக்கின்றன என்பதல்ல; பச்சை பசேலென கம்பளி விரித்தார்போல நீண்ட தொலைவிற்கு விரிந்திருக்கும் வாழைத்தோட்டங்களும் தென்னை மரங்களும், நெற்பயிர்களும் இப்பகுதியின் வளத்தை பார்ப்போருக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. தாமிரபரணியின் கொடையாக இந்தப் பசுமை கண்களையும் மனதையும் நிறைக்கின்றது.
நெல்லையின் மேற்குக்கோடியில் அமைந்திருக்கும் பாபநாசம் கிராமத்திற்கும் நான் இந்தப் பயணத்தின் போது சென்றிருந்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மேற்பார்வையில் இயங்கும், குன்றக்குடி ஆதீனத்தின் திருவள்ளுவர் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கினை இந்த ஆண்டு 23ம் தேதி நிகழ்த்தினோம். இந்தகருத்தரங்கை முடித்து பின்னர் மதியம் இங்குள்ள மலைப்பகுதிக்குச் செல்வதும் எனது பயணத்தில் ஒரு அங்கமாக இடம் பெற்றிருந்தது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கருணாகரனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதால் காட்டுக்குள் சென்று பழங்குடி மக்களைச் சந்திக்கச் செய்ய வேண்டிய ஏற்பாட்டில் எந்த வகைப்பிரச்சனைகளோ சிரமமோ ஏற்படவில்லை. மாறாக பதிவுகள் அனைத்தும் சிறப்பாக செய்யும் வகையில் சூழலும் அமைந்திருந்தது. இங்குள்ள பழங்குடி மக்கள் காரையூர் காணி மக்கள் எனப்படுபவர்கள். இவர்களது பூர்வீகம் இன்றைய கேரளாவின் மேற்குப்பகுதி. இவர்கள் இன்று தமிழ் மொழி பேசினாலும் கூட இவர்களது சமூகத்தில் இருக்கும் வயதில் மூத்தோர் இன்றளவும் காணி மொழியும் பேசுகின்றனர். அத்தோடு மலையாளமும் தமிழும் கலந்த வகையிலான ஒரு மொழியையும் இவர்கள் பேசுகின்றனர். இவர்களது காணி மொழிக்கு எழுத்துரு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது இந்த காணிமக்கள் குடியிருப்புப்பகுதிக்கான பயணத்தின் போது அவர்களது வாழ்வியல் கூறுகள், மொழி, உணவு வகை, தொழில், இறைவழிபாடு, இன்றைய சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற தகவல்களைக் கேட்டுப் பெற்று பதிவாக்கினோம்.
நெல்லைச்சீமையில் இஸ்லாமிய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இங்குதான் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் இருக்கின்றார். இவரது படைப்புக்களைப் பற்றிய பேட்டி ஒன்றினைச் செய்து விட வேண்டும் என்ற பேராவலுடன் அவரை அணுகியபோது, மிகுந்த உடல் நலப்பிரச்சனைக்கு இடையேயும் கூட தம்மால் முடிந்த அளவு தகவல்களைச் சொல்லியதோடு அவரது நாவல்களில் நான்கினை எனக்குப் பரிசாகவும் அளித்தார். இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் உண்மை மனிதர்கள் என்பதோடு கதைகளில் வரும் காட்சிகளில் இடம்பெறும் இயற்கைச்சூழலும் கூட இவரது கண்களின் பார்வைக்குள் சிக்கிய காட்சிகள் தாம் என்பது தனிச்சிறப்பு. இவர் வீட்டு வாதாங்கொட்டை மரமும் மாங்காய் மரமும் அதன் இலை, கிளை காய்களும் கூட இவரது கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை இவரது குடும்பத்தார் சொல்லக்கேட்டு வியந்தேன்.
நெல்லையில் வாழும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு.திவான் அவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பல்தரப்பட்ட தரமான நூல்களை வழங்கியிருக்கும் எழுத்தாளர், ஆய்வறிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். இவரோடு உரையாடி பேட்டி ஒன்றினை பதிவாக்கியபோது இவரது தீவிர ஆய்வு முயற்சிகள் பற்றி அறிந்து வியந்தேன். புத்தகக் குவியலாய் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூற்கள் நிறைந்த தன் வீட்டில் நூற்களுடன் ஐக்கியமாகி வாழும் இவரைப் போன்றோரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை ஆய்வுலகம் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
நெல்லை மாவட்டத்துக்குச் சற்று வெளியே சீவலப்பேரி எனும் சிற்றூருக்கு அருகில் இருப்பது மருகால்தலை எனும் கிராமம். இங்குத் தமிழகத் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படும் ஒரு தமிழி கல்வெட்டு இருக்கும் பகுதிக்குத் தமிழ் மரபு அறக்கட்டளைக் குழுவினருடன் சென்றிருந்தேன். பாறைகள் நிறைந்த ஒரு பகுதி இது. இதில் பெரிய தமிழி எழுத்துக்களில் இங்கு கி.மு1ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இருக்கின்றது. இந்தக் கல்வெட்டினையும் அதன் கீழ் இருக்கும் கற்படுக்கைகளையும் பார்த்து பதிவுகள் செய்து கொண்டோம். இங்கே இருந்த பாகுபலியின் சிற்பம் சேதம் செய்யப்பட்டதாகவும் அது அருகாமையிலேயே பாறையின் மேல் இருக்கும் உச்சிக் கோயிலில் இருப்பதையும், அது இப்போது சாஸ்தா, அதாவது ஐயனாராக வழிபடப்படுவதையும் பற்றிய செய்திகளையும் தொகுத்துப் பதிந்து கொண்டோம்.
நெல்லைச் சீமை செல்லுமிடமெல்லாம் வரலாற்றுப்பொக்கிஷங்கள் நிறைந்ததாய் காட்சியளிக்கின்றது. முற்றிலும் அறியப்படாத தமிழகம் தான் தற்சமயம் நாம் அறிந்த தமிழகம் என்பதும் இப்படி அறியப்படாத பல கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதும் முக்கியமாகின்றது.