Thursday, October 27, 2016

34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்



தாயகத்திலிருந்துப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்சமயம் உலகமெங்கும் வாழ்கின்றனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி நமக்குக் காலம் காலமாக நன்கு பரிச்சயமான ஒன்று தான். இன்று நாம் கடல் மார்க்க பயணங்களைப் பற்றிப் பேசுகின்றோம். இன்றைக்கு சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களான கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணத்தையும், வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணத்தையும் ஜேம்ஸ் குக் மேற்கொண்ட கடற்பயணங்களையும் பற்றி நாம் நிறைய வாசித்திருப்போம். இத்தகைய விரிவான கடற்பயணங்களை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பண்டைய தமிழ்மக்கள் மேற்கொண்டனர் என்பதற்குச் சான்றாக பல தொல்லியல் அகழ்வாழ்வுகள் நமக்குச்சான்றுகளைத் தருகின்றன. இப்படிப் பயணித்த ஐரோப்பியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் தக்க முறையில் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தி, பாதுகாத்து வந்தமையால் அவர்களது பயணங்களும் அவை நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் உலக அளவில் எல்லோரும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக அமைந்துள்ளன,

ஐரோப்பியர்கள் போல தமிழர்கள் கடற்பயணம் மேற்கொள்ளவில்லையா? எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் இருப்போம். அப்படி எழும் கேள்விகளுக்கு விடைக்கான முற்படும் போது சிதறல்களாக பலபல தகவல்கள் நமக்கு ஆய்வுகளில் கிட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வுகளே இத்தகைய முயற்சிகளுக்கு பெரும் வகையில் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. அதோடு ஏனைய நாட்டிலிருந்து வந்து சென்ற வணிகர்களின் குறிப்புக்களிலிருந்து அக்காலச் சூழலை அறியக்கூடியதாக் இருக்கின்றது.

பொதுவாகவே தமிழகம், தமிழர் நாகரிகம் என ஆராய முற்படுபவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது ஆவணச் சான்றுகளே. தகவல்களை முறையாகக் குறிப்பெடுத்து எழுதி வைக்கும் பழக்கமும், ஆவணப்படுத்தும் எண்ணமும் பதிந்து வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் தமிழர் மரபில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் பல நூல்கள், அவற்றை எழுதியவர் யார் என்றே தெரியாத ஒரு நிலையும் இருப்பதை ஏடுகளை வாசித்தறிவோர் பலர் அனுபவித்திருக்கலாம். இத்தகைய போக்குகள் வரலாற்றாய்வாளர்களுக்குப் பெரும் சோதனைகளாக அமைந்து விடுகின்றன. ஔவையார்களில் பல ஔவைகள், அதியமான்களில் பல அதியமான்கள், கபிலர்களில் பல கபிலர்கள் என ஒன்றிற்கு மேல் என ஒரே பெயரில் சிலர் குறிப்பிடப்படுவதும், அவை உருவாக்கப்பட்ட காலநிலையை சரிவரக்கணிப்பதில் அவை ஏற்படுத்தும் சிக்கல்களையும் பற்றி நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இதே நிலை தான் கடல்சார் பயணங்களிலும் எனலாம். நமக்குத் தமிழ் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய சான்றுகள் என்பன அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் தான் என்று அமைகின்றன. உதாரணமாக, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அண்மைய கால கீழடி அகழ்வாய்வுகள் ஐரோப்பியர்கள் இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டமையை எப்படி சான்று பகர்கின்றனவோ,  அதே போல, கிரேக்கம், துருக்கி, போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களின் ஓடுகளும் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அக்காலத் துறைமுகப்பகுதிகளிலிருந்து விரிவாகப் பயணித்து கிழக்காசிய நாடுகளில் வணிகத்தையும் பௌத்த, இந்து சமயத்தைப்பரப்பியதன் விளைவை அந்த நாடுகளில் இன்றளவும் காண்கின்றோம். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டாலோ காலம் காலமாக கடற்பயணங்களின் காரணத்தால் தமிழ் மக்கள் ஐரோப்பிய பெரு நகரங்களுக்கு வந்து சென்றிருக்கின்றனர்; ஒரு சிலரோ இங்கே தங்கி உள்ளூர் மக்களுடன் மக்களாகக் கலந்து தங்கிவிட்டனர்;

பிரான்சை எடுத்துக் கொண்டால் கடந்த முந்நூறு ஆண்டுகளில் இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்தும் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக வந்து இங்கே வாழ்கின்றனர். இன்றளவும் இப்படிப்புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றது. அப்படிப் புலம்பெயர்ந்து பிரான்சு வந்தவர்கள் பெருவாரியாக இருப்பது பிரான்சின் தலைநகரமான பாரீசில். ஆயினும் பாரிசுக்கு வெளியே ஏனைய பெரு நகரங்களிலும் பாரிசுக்கு வெளியே கிராமங்களிலும் தமிழர்கள் குடியிருப்பு என்பது பெருகி உள்ளது. தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு காண வேண்டும் என்ற சிந்தனையை மனதில் கொண்டு புலம் பெயர்ந்தாலும் புதிதாகத்தாம் பெயர்ந்த நிலப்பகுதியில் தங்கள் பண்பாட்டு மரபு, மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரிய ஒரு விசயமே.

அப்படியொரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கடந்த வாரம் கிட்டியது. பாரீசிற்கு வெளியே தெற்கே புறநகர்ப்பகுதியில் இருக்கும் எவ்ரி கிராமத்தின் கலை கலாச்சார மன்றம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் கடந்த 23ம் தேதி அக்டோபரில் நிகழ்த்தியது. இதில் சிறப்பு சொற்பொழிவை வழங்க இந்த அமைப்பு என்னை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வில் அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ்த்தொண்டு செய்யும் பத்து புலம்பெயர்ந்த தமிழர்களைக் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் என்னையும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிக்காகக் கவுரவித்துச் சிறப்பித்தார்கள். புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் மொழி, கலை, மரபுகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களை  எடுத்துக் கூறி எனது சொற்பொழிவு ஒன்றினையும் இந்த நிகழ்வில் நிகழ்த்தினேன்.


ஒரு இனத்தின் அடையாளமாக இருப்பவை அந்த இனத்தின் பண்பாட்டுக்கூறுகளாக அமைந்திருக்கும் உடை, உணவு, சடங்குகள், மனித உறவுகளுக்கு இடையிலே நிலவும் தொடர்பு, குடும்ப அமைப்பு , தொழில்கள், தத்துவம், இறைவழிபாடு என்பன. தாயகத்தில் பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியுற்று, நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் அங்கம் வகிப்பது இப்பண்பாட்டுக் கூறுகளே. இயல்பாக நம் தாயகத்தில் நமக்கு அமைந்திருக்கும் இக்கூறுகள் தாய் நிலம் விட்டுப் பெயர்ந்து புலம் பெயர்ந்து புதிய நாடுகளுக்கு வரும் போது கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அதுவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் எனும் போது இது வேறு விதமாகவே அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கூறுகளாக இருப்பவை அவர்கள் திருவிழாக்களில் அல்லது தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் அணியும் உடைகள், தமிழ்ச்சினிமா பாடல்கள், ஆடல்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அமைந்துவிடுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் நிகழ்கின்ற ஏறக்குறைய 95% தமிழ் நிகழ்வுகள் சினிமா பாடல்களையும், ஆடல்களையும் நடிக நடிகையர்களையும் முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சினிமா ஊடகம் என்பது மட்டுமே தமிழர் அடையாளத்தை உலகளாவிய வகையில் எடுத்துச் சென்றிருக்கின்றது. இதனைச் செய்வதில் தான் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சாதனைப்புரிந்திருக்கின்றார்கள் எனக் கருத வைக்கின்றது நாம் காணும் நிகழ்வுகள். இது ஆரோக்கியமான ஒரு விசயமல்ல. திரைப்பட பாடல்களும், அதில் கூறப்படும் விசயங்களும் ஆடல்களும் மட்டும் தமிழ்க்கலாச்சாரத்தின் பிரதிநிதிகளல்ல. அயல்நாடுகளில் வாழும் போது பிள்ளைகளுக்குச் சரியாக தமிழ் மொழியையும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டு சேர்க்க முடியவில்லையே என வருந்தும் அனைவரும் தாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழி தொடர்பான விசயங்களில் தம்மை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டிருக்கின்றோம்? எத்தனை நூல்களை வாசிக்கின்றோம்? எத்தகைய நூற்களை வாசிக்கின்றோம்? எத்தகைய தன்மை கொண்ட தமிழ் மொழி தொடர்பான விசயங்களைக் கலந்துரையாடுகின்றோம் என தம்மைத்தாமே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் வளர்க்க முனையும் நாம் ஒவ்வொருவரும் நம்மை, நம் தமிழ் மொழி அறிவை விசாலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்வதும் அவசியமே..

பிரான்சைப் பொறுத்தவரை இங்கே தமிழ் மக்கள் என்றால் அது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பாண்டிச்சேரி தமிழ் மக்களாக இருப்பர் ; அல்லது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களாக இருப்பர். இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே நட்பு பாராட்டுதல் என்பது நல்ல முறையில் இருந்தாலும், தமிழ் இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்மன்றங்கள் என்பன தனித்தனியாகத் தான் இயங்குகின்றன. இலங்கைத்தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் அல்லது பாண்டிச்சேரி தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் என இரு பிரிவாகத்தான் தமிழ் மக்கள் இங்கே பொதுத்தளத்தில் செயல்படுகின்றனர், ஒரு சில  விதிவிலக்குகளைத்  தவிர்த்து. இது இக்காலத் தலைமுறையினருக்கு அதிலும் குறிப்பாக அன்னிய நாட்டில் தமிழ் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைய விரும்பும் இளையோருக்குக் குழப்பத்தை நிச்சயம் மேற்படுத்தும் ஒரு செயல்பாடாகத்தான் அமையும். இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரிவினைப்   படிப்படியாக ஏற்படுத்தக்கூடிய பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு சங்கங்கள் இயங்க வேண்டும். இது, இத்தகைய சங்கங்களை நடத்துவோர் முன் நிற்கும் பெரும் உளவியல் சவாலாகவே நான் காண்கின்றேன்.

இத்தகைய விசயங்களை அவதானித்து, தமிழர் என்ற ஒரு இன அடையாளத்தைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று கூட வேண்டும். ஒற்றுமையே பலம். இதனை வாய்ச்சொல்லில் சொல்லி மகிழ்வதை விடச் செயலில் நடத்திக் காட்டி தமிழராகச் சாதனைகளை அயலகத்திலும் நாம் புரிந்து மேன்மை அடைய வேண்டும்!

Wednesday, October 19, 2016

33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை




தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்து 17ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்து வந்த பாதையில் ஏராளமான களப்பணிகள் நமது சான்றுகளாக நமது வலைப்பக்கத்தில் நிறைந்திருக்கின்றன. நேரடி களப்பணிக்குச் சென்று வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி அவற்றை வெளியிடுவதும் அவை தொடர்பான கலந்துரையாடலை வளர்ப்பது, தக்கச் சான்றுகளை மையமாக வைத்து ஆய்வுகளை மேற்கொள்வது என்பது எமது தலையாய பணியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் கருத்தரங்கங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுதல், மின்னாக்கப் பட்டறைகளை ஏற்பாடு செய்து மாணவர்களும், ஆர்வலர்களும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் வாய்ப்புக்களை அமைப்பது என்ற ரீதியில் பல நிகழ்வுகளை நாம் செய்து முடித்துள்ளோம். அத்தகைய ஒரு நிகழ்வினைப் பற்றியதுதான் இன்றைய இந்தப் பதிவு.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் பலர் வாழும் நாடுகளும் ஒன்று சுவிஸர்லாந்து. இந்த சுவிஸர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்று சூரிச். சுற்றுலாத்தலம், வர்த்தகப் பெருநகரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் வாழும் நகர் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட நகரம் சூரிச். இங்கே 2008ம் ஆண்டில் தமிழ்மொழியில் கணினிக்களம் என்னும் ஒரு அமைப்புடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து 'அறிவியல் அரங்கம்' எனும் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். சுவிஸர்லாந்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆர்வம் உள்ள தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அறிவியல் அரங்கம் என்று அறிவித்த பின்னரும், கூத்து, பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் இருக்காது என்று தெரிந்தும் 100 பேருக்கு மேல் தமிழ் ஆடவர், பெண்கள், சிறுவர்கள் என பெருவாரியாகப் பல இந்த நிகழ்விற்கு வந்திருந்தது கலந்து கொண்டனர்.

மாலை 3 மணிக்கு முதலில் தொடங்கிய சொற்பொழிவு நிகழ்வு மாலை 6 மணிக்கு முடிந்த பின்னர் ஓரு கணினித்தமிழ் தொடர்பான இணையப்பட்டறையையும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது இரவு 10 மணி வரை நடைபெற்றது. வந்திருந்தோர் ஆர்வம் குறையாது, மிகப் பொறுமையாய் இருந்து நாங்கள் வழங்கிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு
கேள்விகள் கேட்டு பின் 'மீண்டும் இது போல் ஓர் நிகழ்வு' சுவிட்சர்லாந்தில் நிகழ வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தமை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அமைந்தது.

1990ம் ஆண்டுகளின் ஆரம்பம் தொடங்கி இணைய உலகில் தமிழ்ப்பயன்பாடு என்பது மிகத் தீவிரமாக வளர ஆரம்பித்த காலம் மிகச் சுவாரசியமான நிகழ்வுகள் அடங்கிய காலம். ஒருங்குறி எழுத்துருக்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில் சில தனி நபர்களின் முயற்சியில் கணினி பயன்பாட்டிற்கான தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் கண்டன.  அச்சமயம் எனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்து மலேசியாவில் ஒரு கல்லூரியில் கணினித்துறை விரிவுரையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மலேசிய, சிங்கையில் திரு.முத்து நெடுமாறன், திரு கோவிந்தசாமி, தமிழ்னெட் நிறுவனர் பாலாபிள்ளை மற்றும் பலர் எழுத்துவாக்கம், இணையப் பதிப்பு என முயன்று கொண்டிருந்த வேளையில், ஐரோப்பாவில் மதுரைத்திட்டம் என்ற ஒரு கருத்தினை சில நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி அதனைச் செயல்படுத்திக் கொண்டிருந்த முனைவர்.கு.கல்யாணசுந்தரம், மற்றும் முனைவர்.நா.கண்ணன் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான் ஐரோப்பாவிற்கு மாற்றலாகி வந்த பின்னர் தமிழ்க்கணினி தொடர்பான எனது முயற்சிகள் இவர்களுடன் இணைந்ததாகவே அமைந்திருந்தது. தமிழ் நூல்கள் பாதுகாப்பு என்பது பற்றி அச்சமயத்தில் விரிவாக உரையாடியிருக்கின்றோம். அப்படித் தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடல்களின் வழியாகத் தமிழ் நூல் மின்னாக்கம் தொடர்பான பல முயற்சிகள் பற்றிய கருத்துருவாக்கங்கள் 2000ம் ஆண்டின் தொடக்கம் தொடங்கி நிகழ்ந்தன. அதில் என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் தமிழ் மரபு அறக்கட்டளையின் உருவாக்கத்தில் இணைந்தவர்கள். 2001ம் ஆண்டு கருத்தளவில் தொடங்கி பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மரபு அறக்கட்டளையில் தொடங்கப்பட்டன. அது இன்று மேலும் செப்பனிடப்பட்ட வகையில் சீரிய பல முயற்சிகளை உள்ளடக்கியதாக வடிவெடுத்துத் தொடர்கின்றது.

அந்த வகையில் இந்த சூரிச் நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதினிதித்து என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவினையும் கணினிப்பட்டறையையும் நடத்தி முடித்தோம். அது ஒரு இனிமையான நிகழ்வாகவே அமைந்திருந்தது.

தமிழில் 'அறிவியல் அரங்கம்' என்ற பெயரைக் கேட்டதும் பொது மக்கள் வந்து கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எங்களுக்கு எழாமலில்லை. இந்த நிகழ்ச்சியின் முழு ஏற்பாட்டுப் பொறுப்பினையும் கணினிக்களம் மாத சஞ்சிகையின் ஆசிரியர் திரு.நாகந்தனும், சூரிச் திரு.சரவணபவானந்த குருக்களும் ஏற்று திறம்பட இந்த நிகழ்வை நடத்திக்காட்டினர். புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் தமிழ் நிகழ்ச்சிகள் என்றால் நடனமும், பாடல்களும் சினிமா துறை சார்ந்த நிகழ்வுகளும் தான் இருக்கும் என்ற பொதுவான நம்பிககியை உடைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்பசமாக இரண்டு விஷயங்களை உட்புகுத்தியிருந்தோம். முதலாவது நோக்கம், கணினிக்களம் என்ற மாத சஞ்சிகையினை அறிமுகம் செய்தல். அடுத்தது, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியவற்றின்தமிழ்க்கணினி சார்ந்த முயற்சிகளைச் சூரிச் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகியன.

கணினிக்களம் மாத சஞ்சிகையைப் பற்றிய ஆய்வுரையாக எனது உரையும் முனைவர்.கு.கல்யாணசுந்தரத்தின் உரைகளும் அமைந்திருந்தன. அதனூடாக, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியற்றைப் பற்றிய தகவல்களையும் இணைத்து வழங்கினோம். மூன்றரை மணி நேரப் புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் சிறிய ஓய்வுக்குப் பின்னர் மாலை ஏழு மணிக்கு இரண்டாம் பகுதியாகியக் கணினி பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முனைவர்.நா.கண்ணனின் பொது விளக்கத்துக்குப் பின்னர், நான் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப் பணிகள் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கினேன். எவ்வகையில் மின்னாக்கப் பணிகள் அச்சுப் பதிவு, ஓலைச் சுவடியை வருடிப் பாதுகாத்தல், மற்றும் ஒலிக் கோப்புக்களைச் சேகரிக்கும் முறைகள் எனத் தொழில்நுட்ப விஷயங்களை என் உரையின் போது பகிர்ந்து கொண்டேன். அடுத்ததாக முனைவர்.கு.கல்யாணசுந்தரம் மிக விரிவாகக் கணினியில் தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சியைப் பற்றி, 1997 முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பற்றிய தகவல்களை வழங்கினார். ஏறக்குறை இரவு 9:45க்கு கேள்வி பதில் அங்கம் ஆரம்பித்து மேலும் அறை மணி நேரத்திற்குப் பின்னர் இந்தப்பட்டறையை நிறைவு செய்தோம்

சூரிச் நண்பர் திரு.மலைநாடன் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். அவரது தொடர்ந்த பணிகளுக்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து செயலாற்றியமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சி நல்ல முறையில் ஏற்பாடாகி நடைபெற்றது என்பது ஒரு புறமிருக்க இணையத்தின் வழியும் தொலைப்பேசி வழியும் மட்டுமே தொடர்பில் அறிமுகமாகியிருந்த ஐரோப்பிய வாழ் நண்பர்கள் சிலரை இந்த நிகழ்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. சூரிச் நகரில் இது ஒரு மிகப் புதிய நிகழ்வு. மேலும் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடை பெறும் போது ஐரோப்பியவாழ் இளம் தலைமுறையினருக்கு தமிழ்க்கணினி, வரலாறு தொடர்பான விஷயங்களில் நல்ல அறிமுகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இலங்கை மற்றும் தமிழாக்த்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நிகழ்வுகள் என்றால் பெரும்பாலும் நடனம் இசை, திரைப்பட துறைச்சார்ந்த நிகழ்வுகள் என்பனவே பெருவாரியாக ஆக்கிரமித்திருக்கும் நிலையை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் கூடத் தொடர்ந்து தொய்வில்லாது, பல தன்னார்வலர்களும் இயக்கங்களும் தமிழ் மொழி தொடர்பான, நிகழ்வுகளைச் செய்து இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழி அன்னியப்பட்டுவிடாத வகையில் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்பன ஐரோப்பாவின் பெருநகர்களான லண்டன், பாரிஸ், டூசல்டோர்ஃப், பெர்ன், ச்சூரிச், பெர்லின் போன்ற நகரங்களில் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன . இவை பாராட்டுதலுக்குரிய முயற்சிகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவையே இங்கே ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு தக்க வகையில் தமிழ் மொழி மற்றும் வரலாறு சார்ந்த பற்றுதலையும், ஆர்வத்தையும் கொண்டு செல்லக் கூடிய முயற்சிகளாக நான் காண்கின்றேன்.

அத்தகைய சீரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைக்கும் அனைத்து ஐரோப்பிவாழ் தமிழ்ச்சங்கங்களுக்கும் தனி நபர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகுக! 

Wednesday, October 12, 2016

32.பேராசிரியர்.டாக்டர்.ரெ.கா



திங்கட்கிழமை காலை எனக்கு மலேசிய நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என் இளம் வயது முதல் நன்கறிந்த நண்பர், பேராசிரியர்.டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தான் அது. 

பினாங்கு எழுத்தாளர் சங்கம் எனக்கு மலேசிய தமிழ் இலக்கிய ஆளுமைகளை இளம் வயது முதல் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கியிருந்தது. என் தாயார் ஜனகா சுந்தரம் அவர்கள் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவைக்குழுவில் இருந்தவர். என் இளம் வயது முதலே இந்தச் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய பல தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் நான் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அதில் என் அன்னையார் வழியாக நான் அறிந்து கொண்டவர்களில் ஒருவர் தான் பேராசிரியர். டாக்டர். ரெ,கா அவர்கள். 

சுங்கைப்பெட்டாணி நகரில் பிறந்து மலேசியாவில் உயர்கல்வியை முடித்து பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் இவர். பல்கலைக்கழகப்பணி மட்டுமே என்றில்லாது தனது ஆர்வத்தைச் சமூக நலனை முன்வைத்து, பினாங்கில் இயங்கிய அமைப்புக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் டாக்டர்.ரெ.கா. மலேசிய இந்து சங்கம், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆகியவை இவற்றுள் சில. 

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தமிழ்ப்பிரிவு நடத்திய பல கருத்தரங்கங்களில் டாக்டர். ரெ.கா அவர்களது சொற்பொழிவுகளை நான் கேட்டிருக்கின்றேன். அம்மாவின் சொற்பொழிவுகளும் பேராசிரியர் ரெ.காவின் சொற்பொழிவும் என்னை பொதுப்பேச்சுக்களுக்குத் தயார் செய்ய ஒரு வகையில் உதவின என்பதை என்னால் மறுக்கமுடியாது. ஆங்கிலச் சொற்கள் கலக்காது சரளமாகத்தமிழ் பேசும் கலையை இவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன். மிகத்தெளிவான உச்சரிப்புடன், மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆய்வு நெறியை மனதில் வைத்தும் இவரது சொற்பொழிவுகளும் கருத்தரங்க உரைகளும் இருக்கும். 

தமிழ்மொழி மட்டுமன்றி இசை, நடனம் என பாரம்பரியக் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவராக டாக்டர்.ரெ.கா அவர்கள் திகழ்ந்தார்கள். பாரம்பரிய கர்நாடக இசைப்பிரியர் இவர். இசையின் மீதிருந்த தீராத ஆர்வத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாவிற்குத் தவறாமல் சென்று விடுவார். அவ்வப்போது நான் தொலைப்பேசி வழியாகப் பேசும் போது தான் கேட்டு மகிழ்ந்த இசைக் கச்சேரிகள், கீர்த்தனைகள் பற்றி என்னிடம் அவர் பேசியதும் உண்டு. 

தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்திலிருந்து இந்த அமைப்பின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். 2001ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தேவைபற்றி பேசி அதனை நிலையான ஒரு அமைப்பாக உருவாக்கினோம். அன்று தொடங்கி இன்று வரை எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் அங்கம் வகித்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். 

மலேசிய வரலாறு, அதிலும்குறிப்பாக தமிழ் இலக்கிய வரலாறு எனும் போது டாக்டர்.ரெ.கா அவர்களது நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனதுண்டு. அவரது அனுபவங்களையெல்லாம் பதிந்து வைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் மலேசியாவிற்கு இருவார விடுமுறைக்குச் சென்றிருந்த போது அவரை ஒரு விழியப் பதிவு பேட்டி செய்ய விரும்புவதாகச் சொல்லி 20ம் நூற்றாண்டு மலேசியா பற்றி விவரிக்கச் சொல்லிக் கேட்டேன். எப்போதும் போலவே என்னை ஆர்வத்துடனும் அன்புடனும் வரவேற்று உபசரித்து நீண்ட நேரப்பேட்டி ஒன்றினையும் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். இப்பேட்டியில், 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை, மலேசியத் திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள், மலேசிய தமிழ் பத்திரிக்கைகள், மலேசியாவில் பெரியார் ஏற்படுத்திய திராவிடர் கழகத் தாக்கத்தால் விளைந்த தமிழ் முயற்சிகள், தமிழர் திருநாளும் திரு.கோ.சாரங்கபாணியும், இசை ஆர்வம், தன் சகோதரர் ரெ.சண்முகம், மலேசியாவில் இந்தியர்களுக்கான என்ற அடையாளம், மலேசிய இலக்கிய முயற்சிகள், இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள், மலேசியாவில் வெளிவந்த முன்னோடி நாவல் படைப்புக்களான பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை, மலேசியாவில் ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்களின் நிலை, மலேசியாவில் தற்காலத் தமிழர்களின் நிலை, மலேசியத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி, மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் எனப் பல கோணங்களில் தனது அனுபவக் கருத்துக்களைப் பதிந்திருக்கின்றார். 

அந்தப்பேட்டியை மலேசியத் தமிழர்களின் வரலாற்றை மிகுந்த யதார்த்தத்துடன் கூறும் மிகச் சிறந்த ஆவணமாகக் கருதுகிறேன். அப்பேட்டியை ஏற்பாடு செய்து அதனை நான் பதிந்து தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக வெளியிட்டமைக்காகவும் பெருமை கொள்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று ஆவணச் சேகரிப்புக்களில் இது தனிச்சிறப்பு பெற்றிருக்கும் ஒரு பதிவு இது எனக்கூறுவது மிகையன்று. 

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கோலாலம்பூரில் கணியாழிக்கு பொன்விழா எடுக்க ஏற்பாடு செய்த போது பொன்விழா மலரில் டாக்டர்.ரெ.கா அவர்களின் எழுத்தும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என ஆசைப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு நான் கேட்டுக் கொண்டபோது அவரது உடல் நிலையை ஒரு காரணமாககூறாமல் விரைந்து ஒரு படைப்பாக்கத்தை எனக்கு அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகத் தனது உடல் நிலையை அவர் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இயங்கினார் என்பதை அந்த ஒரு உதாரணமே சான்று சொல்லும். 

நான் ஜெர்மனிக்கு உயர்கல்வியைத் தொடரச் சென்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவிற்கு விடுமுறைக்குத் திரும்பும் போது ஏதாவது ஒரு நிகழ்வில் டாக்டர்.ரெ.கா அவர்களை நான் சந்திப்பதுண்டு. அது அனேகமாகத் தமிழ் மொழி தொடர்பான கருத்தரங்கமாக இருக்கும். என்னை அவர் வாழ்த்திப் பாராட்டி ஊக்கம் கொடுக்கும் சொற்களைக் கூறி மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 

விடுமுறையில் நான் மலேசியா செல்லும் போது அவரது நாவல்கள், நூற்கள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால் தவறாது எனக்கு ஒரு நூலை வழங்கி விடுவார். அதோடு நிற்காது நூலுக்கு ஒரு விமர்சனம் தருமாறும் அன்புக்கட்டளையிட்டுவிடுவார். அந்த வகையில் அவரது நாவல்களான சூதாட்டம் ஆடும் காலம், காதலினால் அல்ல, இன்னொரு தடவை, அந்திம காலம் ஆகியனவற்றை வாசித்து நூல் விமர்சனமும் அவருக்கு வழங்கியிருந்தேன். தொலைப்பேசியில் உரையாடும் போது அவரது படைப்புக்களில் உள்ள மையக் கருத்துக்கள், கதாமாந்தர்களின் தன்னியல்புகள், கதைக்களம் என என் மனதில் பதிந்த விசயங்களைப் பற்றிச் சொல்வேன். ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வார். 

மலேசியாவில் இலக்கியப்படைப்புக்களின் தரம் பற்றிய அவரது அவதானம் கூர்மையானது. உள்ளூர் படைப்புக்கள், அவை மண்வாசனையோடு இருக்கின்றனவா என்பதைப் பற்றிய அக்கறை கொண்டவர் அவர். ஆக்கப்பூர்வமான விமர்சனக் கருத்துக்களைத் தயங்காது உரக்கச் சொல்லக்கூடியவர். பல்வேறு இலக்கியப்படைப்புக்களுக்குத் தான் எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து விமர்சன முகம் என்ற தலைப்பில் ஒரு நூலினையும் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் அவர் விமர்சனம் என்பதைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார். " ... அடுத்தவர்களின் படைப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் போது இப்படி விமர்சனம் செய்வது ஒரு கட்டாயமாகவே ஆகிவிடுகின்றது. அதிலும் சிறந்த படைப்புக்களின் நுணுக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்வதென்பது ஒரு தீவிரமான அறிவுப்பயணம் ஆகிவிடுகின்றது. படைப்பின் பரிமாணங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து புரிந்து கொள்ளும் போது என் மனமும் அறிவும் விரிவடைவதையும் நான் காண்கின்றேன். ஆகவே விமர்சனம் என்பது பயனுள்ள ஒரு செயல் என்றே தெரிகின்றது" எனக் குறிப்பிடுகின்றார். 

நான் இறுதியாக தொலைப்பேசியில் உரையாடி ஏறக்குறை நான்கு மாதங்கள் இருக்கலாம். உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தாலும் அவரது தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பதை என்றும் மாற்றம் பெறாத அவரது குரலின் வழி கேட்டு நான் உணர்ந்தேன். அந்த உரையாடலின் போது தாம் ஒரு நூலினை எழுதிக்கொண்டிருப்பதைப் பற்றி சில விபரங்கள் குறிப்பிட்டார். எப்போதும் போல தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசி மகிழ்வதோடு மறைந்த எனது தாயார் ஜனகா பற்றியும் பேசாமல் எங்களது உரையாடல் இருந்ததில்லை. இறுதியாக நான் டாக்டர்.ரெ.கா அவர்களைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் மரபு அறக்கட்டளையும் தமிழ் மலர் நாளேடும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கணையாழி பொன்விழா நிகழ்வில் சந்தித்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வு என்பதற்காகவே எமது அழைப்பை ஏற்றுக் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று வந்து, கலந்து கொண்டுசிறப்பித்தார். அன்று அந்த நிகழ்வில் அவரைப்பார்த்துப் பேசிய நினைவுகள் பசுமை குறையாமல் இருக்கின்றன. 

ஒரு பேட்டியில் டாக்டர்.ரெ.கா அவர்களை ஒரு நிருபர் கேட்கின்றார். "தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் எதிர்கால இலக்கு என்ன ?", என்று. அதற்கு அவரது பதில் , "தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதுதான்." இலக்கியம் படைக்க வேண்டும் . அதிலும் மலேசிய மண்வாசனை நிறைந்த படைப்பாகதமது படைப்பு இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடித்தவர். 

டாக்டர்.ரெ.காவிடம் நான் செய்த "20ம் நூற்றாண்டு ஆரம்பக் கால மலாயா செய்திகள்" எனும் விழியப் பேட்டியினை 2015ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறந்த வெளியீடுகளில் ஒன்று எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் சிகரமாக விளங்கியவர் இவர். இவரது புகழ் மலேசிய தமிழர் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாதது!

Thursday, October 6, 2016

31. தமிழறிஞர் டாக்டர்.ராஜம்



தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தித் தகவல் பரிமாற்ற ஊடகமான மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் உறுப்பினராக இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோரில் பலதரப்பட்ட ஆர்வம் கொண்டோர் இருக்கின்றனர். தொழில் அடிப்படையில்  வெவ்வேறு துறையைச் சேர்ந்திருந்தாலும் கூட, தமிழ்மொழி மேல் இருக்கும் ஆர்வமும் பற்றும் காரணமாக அமைவதால்,  தமிழ் மொழியின் பல தரப்பட்ட ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பலர் இந்த இணையக் கலந்துரையாடல் தளத்தில் கருத்துப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவரே டாக்டர் ராஜம் அவர்கள்.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக டாக்டர்.ராஜம் அவர்களுடன் நான் இணையம் வழி கடிதப் போக்குவரத்து தொடர்பில் இருக்கின்றேன். அவர் மின்தமிழில் உறுப்பினராக இணைந்த ஆரம்பகால கட்டத்தில், மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் இவர் மணிமேகலைக் காப்பியத்தை ஆராய்ந்து தொடர் கட்டுரைகளைப் படைத்து வந்தார். இந்த முயற்சி மணிமேகலைக் காப்பியக் கதாமாந்தர்களை எளிய தமிழில் வாசிப்போர் புரிந்து கொள்ளவும், மணிமேகலைக் காப்பியத்திற்கு அறிமுகம் அற்றவர்களுக்கும் இக்காப்பியத்தைப் புரிந்து கொள்ள ஒரு அறிமுகமாக உதவியது என்பதோடு, இக்கட்டுரைத் தொடர்ந்து மின்தமிழ் மடலாடற்குழும உறுப்பினர்களின் பாராட்டுதலையும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாகப் பல தரப்பட்ட சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டும், அதிலும் குறிப்பாகத் தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளில் ஆர்வத்துடன் தொடர்ந்து  ஈடுபாடு காட்டி வருகின்றார். கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற ஃபெட்னா 2015 நிகழ்வில் சிறந்த தமிழ் ஆய்வறிஞர் என்று சிறப்பிக்கப்பட்டார் என்பதுவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே.

டாக்டர்.ராஜம் அவர்களுடன் இணையத்தொடபில் பல முறை உரையாடி இருக்கின்றேன். தமிழ்மொழி ஆய்வு மேல் இவருக்கு இருக்கும் உயிர்ப்புடன் கூடிய பற்றுதல் என்னை வியக்க வைக்கும். பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேளையில் என்றாவது ஒரு முறை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்றும் பேசியிருக்கின்றோம். இந்த விருப்ப்ம் இந்த ஆண்டு நிறைவேறியது.

ஃபெட்னா 2016 நிகழ்வில் கலந்து கொள்ள வட அமெரிக்காவின் நியூ ஜெர்சி மானிலம் சென்றிருந்த நான் அங்கு மூன்று நாட்கள் நிகழ்வுகள் முடிந்தவுடன் சான் பிரான்சிஸ்கோ மானிலத்திற்குச் சிறிய விடுமுறை சென்று, என் தோழி தேமொழியுடன் மூன்று நாட்களைக் கழித்து கலிபோர்னியா நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு திட்டம் வகுத்திருந்தேன். அந்த திட்டத்தில் முக்கிய நிகழ்வாக கலிபோர்னியாவில் வசிக்கும் டாக்டர்.ராஜம் அவர்களையும் சந்தித்து வர எண்ணம் கொண்டேன்.

கலிபோர்னியா வந்திறங்கிய என்னை தோழி தேமொழி விமான நிலையத்தில் சந்தித்து அழைத்துக் கொண்டார். முனைவர்.தேமொழி அவர்கள் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டவர். திருமணம் முடித்து பல ஆண்டுகளாக குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசிப்பவர். அவரையும் மின்தமிழ் மடலாடற் குழுவின் வழியாக மட்டுமே, மடல்களின் வழியும், இணைய ஊடகங்கள்  வழியும் அறிந்திருந்தேன். ஆக, அவரையும் நேரில் சந்தித்து உரையாட இது வாய்ப்பாக அமைந்த்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.

என்னை விமான நிலையத்தில் வரவேற்ற தேமொழியுடன் நேராக டாக்டர்.ராஜம் அவர்களின் இல்லம் நோக்கி இருவரும் வாகனத்தில் புறப்பட்டு விட்டோம். தோழி தேமொழி விமானம் ஓட்டுவது போல வாகனத்தை மிக நேர்த்தியாக ஓட்டிச் சென்றதை நினைக்கும் போது பாராட்டத்தான் தோன்றுகின்றது.

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்தில் டாக்டர்.ராஜம் அவர்கள் இருக்கும் குடியிருப்ப்புப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். எங்கள் இருவரின் வருகைக்காகவும் டாக்டர்.ராஜம் மிகுந்த குதூகலத்துடன்  வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் என்பதை  அவரது முதல் பார்வையிலேயே உணர்ந்தேன். என்னைப் பார்த்து வரவேற்று கட்டியணைத்தபோது அவர் கண்களில் தோன்றிய கண்ணீர் முத்துக்களை நான் பார்த்தபோது அந்தத் தமிழறிஞருக்கு என் மேல் இருக்கும் அளவற்ற பாசமும் அன்பும் வார்த்தைகளில்  விளக்கம் தேவைப்படாமலேயே எனக்குப் புரிந்தது.


தமிழகத்தின் மதுரையில் பிறந்து பின்னர் அமெரிக்காவிற்கு உயர்கல்விக்காக 1952ம் ஆண்டு புலம்பெயர்ந்தவர் டாக்டர்.ராஜம் அவர்கள். தமிழ் ஆய்வுதான் இவரது துறை. அமெரிக்காவைப் பொருத்தவரை பல்கலைக்கழகங்களில் தமிழ் என்பது  தென்னாசியத்துறை அதாவது South Asia Studies அல்லது  Southern South East Asia என்ற வகையில் தான் உள்ளது. அதில் தமிழ் மொழி ஒரு பகுதியாகக் கற்பிக்கப்படுகின்றது. இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு மொழியியல் படிப்பதற்காக வந்து, ஆனால் கல்வியைத்தொடர  ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த உதவிப்பணம் வருவதற்கு தாமதமாகிய நேரத்தில் தமிழ் பயிற்றுவிக்க அதே பல்கலைகழகத்தில் இருந்த இணைப் பேராசிரியர் ஒருவருக்கு உதவியாளராக, அதாவது Native Informant போன்று Teaching Assistant ஆக பணியைத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாக University of Pennsylvania.  மொழியியல் துறையில் சிறப்பு பார்வையுடன் தனது முனைவர் பட்ட ஆய்வினையும் மேற்கொண்டார். வடமொழி இலக்கணமான பானினியைக் கறைத்து குடித்தவர் ஒருவரிடம் இவர் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இணைந்தது நல்லதொரு ஆய்வுத்துறையை இவர் தேர்ந்தெடுக்க உதவியது.

ஒரு சிலர் பானினியின் வடமொழி நூலில் உள்ளனவற்றைக் கடன் வாங்கித்தான் தொல்காப்பியர்  தொல்காப்பியத்தைப் படைத்தார் என்றும் சொல்வார்கள். அதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது என  ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்  தொடங்கியதுதான் இவரது முனைவர் பட்ட ஆய்வு. அதற்கு அவரது வழிகாட்டியும் நல்ல ஆசிரியராக அமைந்தார். இந்த ஆய்வின் முடிவாக இவர் வெளிக்காட்டியது என்னவென்றால் பாணினியும், அதற்கு முன்னர் சிவசூத்திரம் எழுதிய அனைவரது அனுகுமுறையும்  வெவ்வேறு; தொல்காப்பியத்தின் அணுகுமுறையோ வேறு;  அதனால் அங்கிருந்து இங்கே கடன் வாங்கியிருக்க முடியாது. ஆக பானினியைச் சார்ந்து அல்லது தழுவி எழுதப்பட்டதல்ல தொல்காப்பியம் என்பது இவரது ஆய்வு முடிவாக அமைந்தது.  பல தடங்கல்களினால் இந்த  ஆய்வு நூல் இன்னமும் நூல் வடிவம் பெறவில்லை என்பது ஒரு குறைபாடுதான்!

இதற்கிடையில் தனது ஆசிரியர் பணியின் போது மாணவர்கள் சங்க இலக்கியத்துக்கு ஒரு இலக்கணம் எழுதுமாறு கேட்க, அதனை கருத்தில் கொண்டு இவர் எழுதிய ஆங்கில மொழியில் அமைந்த நூல்தான்   A Reference Grammar of classical Tamil Poetry. இது 1992ம் ஆண்டில் American Philisophical Society  வெளியீடாக  வந்தது என்பதோடு, இத்துறையில் தற்காலத்தில் இருக்கும் மிக முக்கிய நுல் என்ற புகழையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதே.

இதனை அடுத்து இவரது ஆய்வுலகில் ஒரு மைல்கல் என்று சொன்னால் அது  The earliest Missionary Grammar of Tamil என்ற நூல். சங்க இலக்கியத்துக்கான இலக்கணம் முடித்து பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுக்கு இலக்கணம் எழுதத் தொடங்க வேண்டும் என நினைத்திருந்தவருக்கு யுகேவன் நகரைச் சார்ந்த ஜீன் கைன் என்ற அமெரிக்கப் பெண்மணியும் கிறித்துவ சமயத்துறையில் இருந்த அவரது கணவர்  வழியாகவும் கிறித்துவ பாதிரிமார்களின் இந்திய வருகையினால் எழுந்த தமிழ் மொழி பற்றிய ஆய்வில் ஈடுபடும் நிலை உருவாகியது.  அவர்கள் பாதிரிமார்களின் இந்தியப் பயணம் பற்றி படிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் மதமாற்றம் எவ்வாறு நடந்தது என்ற ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அது பின்னர் அண்ட்றிக்கி பாதிரியாரின் இலக்கண நூலை விவரித்து எழுதும் ஒரு திட்டத்தை வித்திட்ட முதல் புள்ளியாக அமைந்து விட்டது.

போர்த்துக்கீசியரான அன்றிக்கி பாதிரியார், 1547ம் ஆண்டு தொடங்கி  1549 வரை தென்னிந்தியாவின் தெற்குப்பகுதியான புன்னைக்காயல் பகுதியில் பரதமர் சமூகத்து மக்களுடன் வாழ்ந்து தமிழ் மொழிச் சொற்களைக் கற்றிருக்கின்றார். தான் கற்ற தமிழ்மொழிச் சொற்களைக் தொகுத்து ஒரு  கையேடாக Arte  da Lingua Malabar என்ற பெயரில் உருவாக்கியிருக்கின்றார். இந்தக் கையேடு,  தன்னை ஒத்த பாதிரியார்களுக்கு, அதாவது அன்றைய ஸ்பேனிஷ் அரசின் ஆதரவில் கத்தோலிக்க மதம் பரப்பும் சேவையில் ஈடுபட்டோருக்கு இந்தக் கையேடு தமிழ்க்கற்று தமிழ்மக்களோடு பேசி அவர்களது பணிகளைத் தொடர வழிகாட்டியாக அமையும் என்பது அவரது எண்ணம்.

ஜீன் அம்மையார் அண்ட்றிக்கி பாதிரியாரின் இந்த இலக்கண நூலை போர்த்துக்கீஸிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து கிறித்துவ பாதிரிமார்களின் தமிழ் மொழி கற்றல் பற்றி ஆங்கிலத்தில் எழுத நினைத்தபோது தமிழும் ஆங்கிலமும் அறிந்த ஒருவரது உதவி தேவைப்படவே டாக்டம்.ராஜம் அவர்களது உதவியுடன் இந்த நூல் எழுதும் பணியைத் தொடக்கினார். ஆயினும் பல தடங்கல்கள் தொடர நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2013ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்தது.

தொடர்ச்சியாக, 2015ம் ஆண்டில் சிறிய தமிழ் நூல் ஒன்றினை டாக்டர்.ராஜம் அவர்கள் எழுதி வெளியிட்டிருந்தார். ”சங்கப்பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற ..” என்ற தலைப்பிலான நூல் இது.  சங்க இலக்கியங்களிலேயே சாதி மற்றும் தீண்டாமைப் பற்றியக் குறிப்பினைத் தேடத்தொடங்கி  எங்கே, எப்போதிலிருந்து சாதி, தீண்டாமை என்ற கோட்பாடு தோன்றியது என ஆராய ஆரம்பித்ததின்  விளைவே இந்த நூல். வள்ளுவர் எத்தனையோ விசயங்களை தமது குறளில் சொல்கின்றார். ஆனால்  சாதியைப் பற்றியோ தீண்டாமையைப் பற்றியோ சொல்லவில்லை. தீண்டாமை என்னும் கருத்து வள்ளுவர் காலத்தில், அதாவது சங்க காலத்தில் இருந்திருந்தால் அவர் அதனைக் கடியாமல் இருந்திருப்பாரா? என யோசித்து தொடர்ந்து மேற்கொண்ட நூல்வாசிப்பு, ஆய்வு என்பதன் வழி, சங்க இலக்கியத்தில், இன்று நமது வழக்கில் இருக்கும் சாதி மற்றும்  தீண்டாமை என்பன பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லை, ஆனால் இவை பக்தி காலத்தில் தான் தென்படுகின்றன;  ஆக பக்தி காலத்தில் தான் சாதிக் கொள்கையும் தீண்டாமை என்ற கருத்தும் தோன்றியிருக்க வேண்டும் என தன் நூலில் குறிப்பிடுகின்றார்.

தமிழ்ச்சமூகத்தைப் பலவாறாகப் பிரித்து கூறுபோட்டு சமூக அவலங்களை உயிர்ப்பித்து வளர்க்கும் சாதியை தமிழ் மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றே என்ற சிந்தனையை ஆய்வு நோக்கில் மக்கள் மனதில் விதைப்பதற்கும் இந்தகை ஆய்வுகள் காலத்தின் தேவை.

இத்தகைய அரும்பணியைச் செய்து கொண்டிருக்கும் டாக்டர்.ராஜம் அவர்களை சந்தித்தபோது அவரைப் பற்றியும் அவரது ஆய்வுக் குறிப்புக்கள் பற்றியும் நான் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக ஒரு பேட்டி ஒன்றினைச் செய்திருந்தேன். விழியப் பதிவு பேட்டியான அது அவரது ஆய்வுகள் தொடர்பான பல தகவல்களை வெளிக்கொணரும் ஒரு பேட்டியாக அமைந்தது. டாக்டர். ராஜம் அவர்களது தமிழ்ச்சேவை மேலும் தொடர வேண்டும்.  அவரது ஆய்வுப் பணிகளைத் தொடரும் மாணவர்களும் பெருக வேண்டும் என்பதுவே தமிழ் மரபு அறக்கட்டளையின் அவா!