Thursday, September 28, 2017

71. போலந்தின் க்ராக்காவ் - தமிழகத்தின் கீழடி தொல்லியல் ஆய்வுகள்ரஷ்யா, லுத்துவானியா, பெலாரஸ், உக்ரேன், சுலோவாக்கியா, செக், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளை எல்லைகளாகக் கொண்டும், வடக்கே பால்ட்டிக் கடலை ​எல்லையாகக் கொண்டும் திகழும் நாடு போலந்து. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நாடாக இடம் பிடிக்கும் நாடுகளில் ஒன்று.

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிற்கும் பண்டைய வரலாற்றுப் பெருமைகள் இருப்பது போல, தனித்துவத்துடன் கூடிய வரலாற்றுப் பெருமை உள்ள நாடு போலந்து என்பதை மறுக்க முடியாது. இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகச் சற்று பின் தங்கிய நிலையில் இருந்தாலும் கூட, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சிறந்த பொருளாதார பலத்துடன் திகழ்ந்தது போலந்து. இதன் இன்றைய தலைநகரம் வார்சாவ். ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, போலந்தின் தலைநகரமாக விளங்கியது க்ராக்காவ் நகரமாகும். பல நூற்றாண்டுகளாக போலந்த்தின் பண்பாட்டுக் கலாச்சார நகரம் என்ற சிறப்புடன் விளங்கும் நகரம் இது. இதன் சிறப்பினைக் கருத்தில் கொண்டு இந்த நகரத்தை முழுமையாக யுனெஸ்கோ, பாதுகாக்க வேண்டிய நகரங்களுள் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த க்ராக்காவ் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது க்ராக்காவ் நகரின் தொல்லியல் பழமைகளையும் வரலாற்றுச் செய்திகளையும் ஓரளவு அறிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன்.

க்ராக்காவ் நகர மையம் ஒரு விரிந்த பரந்த மேடையைப் போன்ற தோற்றம் கொண்டது. சதுர வடிவிலான அதன் மையப் பகுதியில் நடந்து செல்லும் போதும், அங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் ஏதாகினும் ஒன்றில் அமர்ந்து உணவருந்தும் போதும், அங்குள்ள The Cloth Hall என அழைக்கப்படும் 600 ஆண்டுகள் பழமையான வர்த்தக மையக் கட்டிடத்திற்குள் சென்று பொருட்களைத் தேடிப் பார்த்து வாங்கும் பொழுதும், அந்தத் தரைப்பகுதிக்கும் கீழே சுரங்கப்பாதை ஒன்று இருப்பதையும், அங்கே நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது என்ற உண்மையையும் நிச்சயமாக யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

Rynek Underground என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அருங்காட்சியகம் க்ராக்காவ் நகரத்தின் முக்கிய வரலாற்றுச் சான்றுகளில் ஒன்று. இது 4000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. தொல்லியல் அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதி கீழே நிலத்துக்கு அடியில் இருக்கின்றது. தொல்லியல் அகழ்வாய்வு நடத்தப்பட்ட ஒவ்வொரு பகுதிகளையும் தக்க வகையில் பாதுகாப்பு வளையங்களை அமைத்துப் பாதுகாத்திருப்பதோடு பொதுமக்கள் அவற்றை நேரில் கண்டு அங்கங்கு என்னென்ன பொருட்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டனவோ அவற்றிற்கான விளக்கத்தினை இணைத்து, தேவைப்படும் இடங்களில் கணினிகளைப் பொருத்தி விரிவான விளக்கங்களைப் பார்வையாளர் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர் தொல்லியல் துறையினர் . சில இடங்களில் லேசர் விளக்கொளிகளைப் பொருத்தி, அங்கே தொழில்நுட்பக் கருவிகளின் துணையோடு பழங்கால சூழலை விவரிக்கும் காட்சிகளை லேசர் காட்சிகளாகத் தத்ரூபமான வடிவில் நம் கண்களின் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றனர்.


2005ம் ஆண்டு இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டிருக்கின்றது. அதாவது நிலத்துக்கு மேலே 600 ஆண்டு பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடங்கள் இருக்கின்ற அதே பகுதியின் அடித்தளத்தில் தான் இந்த ப் பணி தொடங்கப்பட்டிருக்கின்றது என்றால் எவ்வளவு சவாலான அகழ்வாய்வுப் பணியைத் தொல்லியல் துறை முன்னெடுத்திருக்கின்றது என்பதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது அல்லவா?

இந்த அகழ்வாய்வின் போது பண்டைய போலந்து மக்கள் இப்பகுதியை ஒரு வணிக மையமாகப் பயன்படுத்தியமை பற்றிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்த அகழ்வாய்வில், காசுகள், உடைகள், காலணிகள், அணிகலன்கள் ஆகியவற்றோடு 4000 ஆண்டு பழமையான மனித உடலின் மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் ஆகியவையும் ஈமக்கிரியைச் செய்யப்பட்ட சடங்குப் பொருட்கள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு போலந்து அரசு இந்தப் பகுதியில் அகழ்வாய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்து இப்பகுதியை பொதுமக்கள் வந்து பார்த்து அறிந்து செல்லும் தரமான ஒரு அருங்காட்சியகமாக அமைத்துள்ளது என்பது பாராட்டத்தக்க செய்தியல்லவா?

இந்த அருங்காட்சியகத்தின் உட்சென்று அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டு வந்த பின்னர் என் மனதில் தமிழகத்தின் கீழடி அகழ்வாய்வுகள் தொடர்பான கடந்த சில மாதங்களின் நினைவுகள் நிழலாடத் தொடங்கின.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழ்வாய்வு  தொடர்பான சர்ச்சைகளை இன்றளவும் நாம் செய்தி ஊடகங்களின் வழியாக அறிகின்றோம். இன்று புதிதாக பேசப்படும் பொருள் அல்ல கீழடி. 1980-1981ம் ஆண்டிலேயே இப்பகுதியின் மேற்பரப்பில் தென்பட்ட சிவப்பு-கருப்பு நிறத்தில் அமைந்த பானை ஓடுகளைப் பார்த்த சிலைமான் என்ற ஊரில் இருந்த ஆசிரியர் திரு.பலசுப்பிரமணியம் என்பவர், தாம் கண்டெடுத்த அப்பானை ஓடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும் எனச் சந்தேகித்து அதனைத் திருமலை நாயக்கர் மகால் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து தகவல் தெரிவிக்க, அப்போது ஆய்வுப் பணியை அங்கிருந்த ஆய்வாளர்கள் தொடங்க முயற்சித்தனர். அந்த ஆய்வின் போதே இப்பகுதி சங்ககாலத்திற்கு முந்தைய நாகரிகத்தின் சான்று அடங்கிய பகுதிதான் என அடையாளம் காணப்பட்டாலும் அகழாய்வுப் பணி தொடரவில்லை. இது ஏன் என்பது நம் முன்னே நிற்கும் கேள்வி என்றாலும், அது பழங்கதையாகிவிட்ட நிலையில், மீண்டும் 2015ம் ஆண்டு தொடக்கம் நடைபெறுகின்ற அகழ்வாய்வுச் செய்திகளில் நமது கவனக் குவிப்பைச் செலுத்த வேண்டியுள்ளது.

இந்திய மத்திய அரசின் தொல்லியல் துறை, மதுரையில் பாயும் வைகைக்கு அருகே உள்ள 293 கிராமங்களில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. பின்னர் கீழடியில் 43 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வாளர் அமர்நாத் என்பவரின் தலைமையில் இங்கு ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இந்த ஆய்வில் மனித நாகரிகத்தைப் பறைசாற்றும் பல சான்றுகள் கிடைத்தன. பானை ஓடுகளில் கீறப்பட்ட பிராமி எழுத்துக்கள், சுடுமண் உலைகள், சுடுமண் குழாய்கள், சுடுமண் உருவங்கள், சுடுமண் கலங்கள், தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், அணிகலன்கள் போன்றவை இந்த ஆய்வில் கிட்டின. அதுமட்டுமன்றி செங்கல்லினால் அமைக்கப்பட்ட கட்டிட சுவர்களையும் இந்த அகழாய்வு நமக்குப் புலப்படுத்தியது. அதுமட்டுமன்றி இதே போன்ற அடுப்புக்களும் தமிழகத்தின் அரிக்கமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன என்பதும் ஒரு பண்பாட்டுக் கலாச்சார ஒற்றுமையை நமக்கு நிறுவும் சான்றாக அமைகின்றது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் இவை பழமையானவை என கரிமச் சோதனைகளின் வழி இந்த அகழாய்வுச் சான்றுகள் நிரூபிக்கப்பட்டன.

பின்னர் கீழடியில் இரண்டாம் கட்ட ஆய்வு 2016ம் ஆண்டு தொடங்கியது. இதில் மேலும் வியப்பூட்டும் வகையில் ஏறக்குரைய 5000 சான்றுகள் அகழாய்வில் கிட்டின. இதன் பின்னர் படிப்படியாக கீழடி ஆய்வுக்குத் தடைகள் ஏற்படத் தொடங்கின. தொல்லியல் ஆய்வினைத் தொடர்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் பிரச்சனை, அகழாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்த ஆய்வாளர் திரு.அமர்நாத் அவர்களின் பணியிட மாற்றம், என ஒன்றை அடுத்து மற்றொன்றாக கீழடி ஆய்வு சவால்களை எதிர்நோக்கியதைப் பலரும் அறிவோம். இந்தச் சூழலில் இந்த ஆண்டு மீண்டும் மற்றொரு தலைமை ஆய்வாளரின் மேற்பார்வையில் அகழாய்வின் மூன்றாம் கட்டப் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அத்துடன் கீழடி அகழாய்வு நிறைவு பெறுகின்றது என்ற செய்தியையும் அறிவித்து மீண்டும்  இப்பணியில் ஒரு சிக்கல் முளைத்துள்ளது. இது கீழடி தொடர்பில் நம் முன்னே தொடர்கின்ற பெரிய சவால்.

இது ஒருபுறமிருக்க,  கீழடி அகழ்வாய்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட  அரும்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இக்குரல்கள் பல தரப்பிலிருந்து எழுகின்றன. சமூக ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் இந்தச் சான்றுகளை மையப்படுத்தி ஒரு அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தினை முன் வைத்த நிலையில்,  போராட்டங்களும் நடைபெற்றன. அவை தொடர்கின்றன. இதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருப்பது, இங்கு உள்ளூரிலேயே ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதை விடுத்து தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் இவ்வரலாற்றுச் சான்றுகளை மைசூரில் உள்ள அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடங்கப்பட்டமையே எனலாம்.

ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற அகழ்வாய்வுகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் போலவும் அதற்கும் மேலான அதிர்வலையை கீழடி அகழாய்வுகள் ஏற்படுத்தியுள்ளன. தமிழரின் பண்டைய வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டினையும் சான்று பகரும் இந்தத் தொல்லியல் சான்றுகள், கீழடிக்கு அருகாமையில் சிறப்பான ஒரு புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பொதுமக்கள் வந்து பார்த்து அறியும் வகையில் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியம். தமிழக அரசு இந்தப் பணிக்கு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை காலதாமதப்படுத்தாது செயல்படுத்த வேண்டியது மிக aவசியம். ஏனெனில் கண்டெடுக்கப்பட்ட பழம் சான்றுகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அருங்காட்சியகத்தினை விரைவில்  அமைப்பது தமிழர் நம் பண்பாட்டுச் சான்றுகளைப் பாதுகாக்க  எடுக்கப்படும் காலத்திற்கேற்ற  நன்முயற்சியாக அமையும்.

Thursday, September 21, 2017

70. சூதாட்டம் ஆடும் காலம்
இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவையாக இருக்கும் போது இலக்கியங்கள் உயிர் பெறுகின்றன. அவை கற்பனையாக மட்டுமே இருக்கும் போது அவை பொறுளற்றதாகின்றன. மலேசிய சூழலில் மக்கள் வாழ்க்கையின் கூறுகளைத்   புதினங்களின் வழியாகவும் நாவல்களின் வழியாகவும் பதிவு செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தரமான எழுத்துப் படைப்புக்களை வழங்கக்கூடிய தமிழ் எழுத்தாளர்கள் மலேசிய மண்ணில் வரலாறு பதித்திருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமையாக நம் முன்னே வாழ்ந்து மறைந்தவர் பேராசிரியர் ரெ.கார்த்திகேசு அவர்கள்.

அவரது சூதாட்டம் ஆடும் காலம் என்ற நாவல் பற்றியதுதான் இந்தப் பதிவு.

2007ம் ஆண்டு. அப்போது தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியத் தொடர்பாளராகப் பேராசிரியர் இணைந்திருந்த காலகட்டம் அது. ஒருமுறை தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது இந்த நூல் வெளிவந்திருப்பது பற்றிய தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நூலைப் பற்றி நான் கேட்டதுமே சிரமம் பாராது எனது இல்ல முகவரிக்கு இந்த நூலையும் மேலும் இரு  மலேசிய  வெளியீடுகளையும் அனுப்பி வைத்தார்.

சில நாவல்களின் முதல் ஒரு சில பக்கங்களைப் புரட்டியதுமே, நாளைப் படிக்கலாமே என்று தோன்றும். இந்த நாவல் அப்படியல்ல. படிக்க ஆரம்பிக்கும் போதே முழுவதையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவல் ஆரம்பத்திலேயே தோன்றச் செய்யும் வகை எழுத்து. ஒரு எதிர்பார்ப்பை முதலிலேயே கொடுத்து வாசகர்களை நாவலோடு சேர்த்துக் கொண்டு அழைத்துச் செல்கின்றார். இந்தப் பாணியை அவரது முந்தைய நாவல்களிலும் கண்டிருக்கின்றேன். இதுவே இவரது நாவல்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்றும் நான் நினைப்பதுண்டு.

இந்நூலின் முன்னுரையில்(முன்னீடு) எஸ்.பொ அவர்கள் அழகாக ஒரு கருத்தை முன்வைக்கின்றார். "மலேசியத் தமிழ் சூழல் இந்நாவலிலேயே கமழ்வதனால் தமிழ் இலக்கியத்தின் கதை நிகழ் களம் விசாலம் அடைகின்றது" என்கிறார் எஸ்.பொ. உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வேரூன்றி நிற்கின்ற காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். தமிழ் மக்களின் வாழ்க்கை என்பது தமிழகமோ, அல்லது இலங்கைக்கோ மட்டும் உரிய ஒன்றாக இருந்த நிலை மாறி, உலகின் பல் வேறு நாடுகளில் தமிழ் மக்களின் வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்கள் தங்களது தாயகத்திலிருந்து மற்ற பல நாடுகளுக்குச் சென்று வாழும் போது அந்நாட்டுக் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு கலந்துவிட்ட ஒரு கலவையாகவே புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழியும் பண்பாடும் வெளிப்படுகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்திலிருந்து (இலங்கையிலிருந்தும் கூட) புலம் பெயர்ந்து மலேசியா சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் இதற்கு ஒரு நல்ல சான்று.

மலேசிய பேச்சுத் தமிழ் வித்தியாசமானது. பல மலாய் சொற்கள் அன்றாட பேச்சுத் தமிழில் பிரித்தெடுக்க முடியாத வகையில் கலந்து விட்டிருக்கின்றன; மலேசிய சூழலில் இந்துக் கோயில்களில் வழிபாட்டிற்கு வருகின்ற சீன மக்களையும் பார்க்க முடியும்; இங்குத் தைப்பூசம் தேசிய விடுமுறையாக எல்லா இன மக்களும் கொண்டாடும் திருவிழாவாக விளங்குகின்றது; இப்படிப் பல கலாச்சாரக் கலவைகள் மலேசியத் தமிழர்களின் கலாச்சாரத்தூடே பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு நிலை இங்கு உண்டு.

இதை நோக்கும் போது, இந்தக் கலவையான மலேசியத் தமிழை, மக்களின் சிந்தனையை, இந்தத் தனித்துவம் வாய்ந்த வாழ்க்கை முறையைப் பதிவுசெய்வது மிக முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது சந்தேகமற்ற ஒரு விஷயம்.

ரெ.கா மலேசிய தமிழ் சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியலில் நிதர்சனத்தை வெளிக்காட்டும் வகையில் கதை புனையும் ஒரு சில எழுத்தாளர்களில் சேர்க்கப் பட வேண்டியவர். மலேசிய தமிழ் சிறுகதைகளில், நெடுங்கதைகளில், நாவல்களில் பல ஆண்டுகள் அறிமுகம் உள்ள எனக்கு இது அனுபவித்துத் தெரிந்த ஒன்று. மலேசிய தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பலர் அதீத கற்பனையில், கனவுலக வாழ்க்கையை மனதில் கொண்டு, புனிதத்துவத்தை தங்கள் கதைகளின் வழி எடுத்துக் காட்ட முயல்பவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பல சிறுகதை எழுத்தாளர்கள், நடைமுறையில் உள்ள ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை அதீத கற்பனையோடு சேர்த்துப் படைத்து வாசகர்களுக்குக் கொடுத்து விடுவதன் வழி நிம்மதி அடைந்து விடுகின்றனர். பலரது எழுத்துக்களில் தனிமனித ஒழுக்கம் பண்பாடு போன்றவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை என்பது மாறி நன்னெறி பாட போதனை போன்ற வகையில் எழுதி வாசகர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்திவிடும் நிலையையும் அமைந்திருப்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் கதையின் கருவும், கதை செல்லும் நடையும் மனதைத் தொட்டாலும் மொழி வளம் குறைந்து சுவை குன்றி அமைந்திருக்கும். இந்த நிலையிலிருந்து மாறுபட்டு நடைமுறையில் உள்ள ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்த்து அதனை நல்ல கோர்வையாக மலேசியத்தமிழில் தருவதில் வெற்றி கண்டவர் ரெ.கா. அந்த வகையில் இந்த நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இலக்கியம் என்பது ஒரு வகையில் நடப்பைக் காட்டுகின்ற கண்ணாடி. பல நாவல்களும் சிறுகதைகளும் ஒரு கால கட்டத்தின் சரித்திர நிகழ்வுகளைக் கோடி காட்டுகின்ற முக்கிய ஆவணங்களாகக் கூட அமைந்துவிட்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் சில விஷயங்களை அளவான கற்பனையோடு கலந்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால் எழுத்தாளர்கள் கற்பனையை மட்டுமே மையமாக வைத்து எழுதும் போது கதையின் ஊடாகச் சொல்ல நினைக்கும் செய்தி முழுமையாக, படிக்கின்ற வாசகர்களை வந்தடையாமல் போய்விடுகின்றது என்பதே வருத்தத்தைத் தரும் உண்மை.

சரி. நாவலுக்கு வருவோம். இந்த நாவலின் பெரும்பகுதி பினாங்கு மாநிலத்தையும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தையும் சுற்றி வருகின்றது. பல்கலைக்கழகத்தையும் அதன் சூழலையும் இந்த நாவலின் வழி நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார் நூலாசிரியர். பல்கலைக்கழகத்தின் அங்கமான அருங்காட்சியகம், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை அலுவலகம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம், எனப் பல கட்டிடங்களை எந்த மாற்றமும் இன்றி இந்த நாவலில் உலவ விட்டிருக்கின்றார். சில உண்மையான நபர்களின் பெயர்களும் எந்த மாற்றமுமின்றி நாவலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பதிவாளர் அருணாச்சலம் இந்த நாவலில் உலவுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்படி பற்பல நிகழ்கால உண்மைகள் இந்த நாவலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நாவலின் முழுமையும் ஒரு வகையில் மனித உணர்வின் போராட்டத்தை மையமாக வைத்தே பின்னப்பட்டிருப்பது படிக்கின்ற வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுவதாக அமைந்துவிடுகின்றது. இது ஒரு வகையில் இந்த நாவலின் சிறப்பு என்றும் சொல்லலாம்.

மலேசிய உணவு வகைகள் சுவையில் சிறந்தவை என்பது மலேசிய உணவைச் சுவைத்தவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் . வெளி நாடுகளில் இதே உணவு வகைகள் சில பிரத்தியேக உணவகங்களில் கிடைக்கின்ற போதிலும் உள்ளூரில் கிடைக்கும் உணவின் சுவையை கொண்டிருப்பதில்லை. இதனைக் கதையின் நாயகன் கதிரேசன் நாசி லெமாக் - சுவைத்து உன்னுவதாகக் காட்டும் போது ரசித்து உணர முடிகின்றது. அதே வேலைத் தூரத்தில் ஜெர்மனியில் இருப்பதால் இந்த உணவை மலேசியாவில் இருந்து சுவைக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் ஏற்படாமல் இல்லை. கதாப்பாத்திரங்கள் உடுத்துகின்ற உடைகளின் தன்மையையும் விட்டு விடவில்லை கதாசிரியர். மலேசியத் தமிழ் மாதர்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் போது கைலி சட்டை அணிந்திருப்பது வழக்கம். சாவித்திரி கதாப்பாத்திரத்தின் வழி இந்த விஷயம் காட்டப்படுகின்றது.

கதையின் மையக்கரு தாய்-மகன் என்ற பாசத்தை பற்றியதாக இருந்தாலும் கதையின் வழியாக மலேசிய நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தின் அளவுகோல் எந்த வரையறைக்கு உட்பட்டு வைக்கப்படிக்கிருக்கின்றது என்று கூறியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு வகையில், மலேசியாவில் ஜனநாயகம் குன்றி பத்திரிக்கை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலை அமைந்திருப்பதை, பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றில் நிகழும் கேள்வி பதில் அங்கத்தின் வழி வெளிக்காட்டுகின்றார். மலேசிய பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் உலவும் உட்பூசல், கருத்து விவாதங்கள், சுயநலமிக்க போக்கு, பிறரது உழைப்பில் பெயர்வாங்கும் தன்மை போன்ற உள்ளூர் மக்கள் அறிந்த பல உண்மை விஷயங்களும் பரவலாக கதையினூடே வந்து போகின்றன. தயக்கமின்றி இந்த உண்மை விஷயங்களை நாவலினூடே பதிவுசெய்திருப்பதற்காகவே நாவலாசிரியரை நிச்சயமாகப் பாராட்டலாம்.

கதையின் நாயகன் கதிரேசனின் சிந்தனையை, மனப் போராட்டத்தை அங்கங்கே அழகான தமிழில் படிக்கும் போது அந்தச் சொற்களில் உள்ள உண்மை மனதைத் தொடுகின்றது. இதற்கு உதாரணமாகப் பல வாக்கியங்களைக் சொல்லலாம். உதாரணமாக ஒரு பகுதி..

" ஒரு தெளிவு ஏற்படுவது போல தெரிகையில் தெரிந்த விஷயங்களின் விளிம்புகளில் இருந்து பார்க்கும் போதுதெரியாத விஷயங்களின் உலகம் இன்னும் பெரிதாக விரிந்து கொண்டே போவதைப் பார்த்து அவன் வியந்து சோர்ந்ததுண்டு. இந்த ஆரவாரமிக்க அறிவின் போதையில் தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களும் குடும்பமும் சுருங்கிப் போயிருப்பது உண்மை தான். தன் வாழ்வும் தன் விருப்பங்களுமே முக்கியம் என்ற நிலை தணிந்து சமுதாயம், உலகு என் அவன் சிந்திக்க ஆரம்பித்திருந்தான்.."

பல விஷயங்களைக் கற்றுத் தெரிந்து அறிவில் விசாலம் அடையும் போது ஒரு மனிதன் தனது உலகத்தைப் பார்க்கும் பார்வையிலும் விசாலத்தை அடைவது உண்மை. தான் தனது குடும்பம் தனது நேசத்திற்கு உரியவர்கள் என்ற குறுகிய வட்டம் மறந்து பொது நலச் சிந்தனை ஆட்கொண்டு விடுவது அறிவு விரிவடையும் போது ஏற்படும் விளைவு.

மேலை நாடுகளில் பெற்றோர் குழந்தைகளை அடிப்பது, உடல் அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தண்டனை கொடுப்பது போன்றவை சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய தவறுகளாகப் பார்க்கப்படுகின்றன. நம் மலேசிய சூழலில் இவ்வகைக் குற்றங்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படக்கூடியவையாக இருப்பினும் பலர் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. தங்கள் பிள்ளைகளை அடிப்பதற்கும் தண்டனை தருவதற்கும் பெற்றோர்களுக்கு இல்லாத உரிமையா என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் பலர் இன்னமும் உண்டு. ஆகப் பல இடங்களில் பெற்றோர் குழந்தைகளை அடிப்பது இன்னமும் நடைமுறையில் உள்ள ஒரு விஷயம். இந்த விஷயம் இந்த நாவலில் முக்கிய அங்கமாக அமைந்திருப்பதும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சலும் மிக மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. கதிரேசன் சிறு வயதில் அனுபவிக்கும் கொடுமைகள் பின்னாளில் மனதை விட்டு அகலாமல் பூதாகரமாக விரிந்து வியாபித்துப் பய உணர்வை அவனுள்ளே ஏற்படுத்துவதும். பிறரை அண்டி வாழ வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டு விட்டதே என்று வருந்துவதும் மனதைத் தொடுகின்றன.

இந்த நாவலின் கதை முடிவு நன்று. இருப்பினும் கொஞ்சம் தமிழ் திரைப்பட சாயல் இதில் தென்படுகின்றது. தனது சவலைத் தம்பியை அனாதை இல்லத்திலேயே விட்டு வருவது நிதர்சனத்தைக் காட்டுகின்றது. கதிரேசன் பாரதியோடு வாழ்க்கையில் கைகோர்த்து செல்வது மலேசிய தமிழ் கதை உலகத்திற்குக் கொஞ்சம் வித்தியாசமான விருந்து.

சுவாரசியமான கதை களம்; பல உண்மைப் பதிவுகள், சிந்திக்க வைக்கும் கதாப்பாத்திரங்கள்; படிக்கின்ற வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் சொல் பிரயோகங்கள் - இப்படிப் பல நல்ல அம்சங்களோடு மலேசியத்தமிழில் கலந்து விட்ட மலாய் சொற்களின் சேர்க்கையோடு இனிய தமிழில் ' சூதாட்டம் ஆடும் காலம்' என்ற தலைப்பிலான இந்த நாவலை வழங்கியிருக்கும் ரெ.கா அவர்கள் மலேசியத் தமிழ் மக்களின் வாழ்க்கையை நமக்காக வழங்கிச் சென்றிருக்கின்றார். மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்க்கும் அவரது இலக்கியப் படைப்புக்கள் உலகத் தமிழர்களைச் சென்றடைய வேண்டும்.

Thursday, September 7, 2017

69. திருமலை புராதனச் சின்னங்கள்2012ம் ஆண்டு. அந்த ஆண்டில் 2 வாரங்கள் எனது தமிழகப் பயணத்தில் பல இடங்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்வுகளுக்காகவும் களப்பணிகளுக்காகவும் சென்றிருந்தேன். அப்பயணத்தின் போது காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் கருத்தரங்க நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. அதனால் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதோடு காரைக்குடிக்கு அருகாமையில் உள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிந்து வைக்கவும் திட்டமிட்டிருந்தேன். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு நேரம் இருந்தால் அதன் படி வேறு சில இடங்களுக்குச் செல்வோம் என முடிவானது.

நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து  எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி.
திருமலைக்குச் செல்வதற்கு சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக வரலாற்றுச் செய்திகளைப் பேசிக் கொண்டே நாங்கள் பயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள்... தாமரை மலர்கள் நிறைந்த குளம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி இயற்கை சூழல் மனதைக் கொள்ளைக் கொள்ளும் ஒரு ஊர் தான் திருமலை.

தமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். தமிழகத்திலே தான் வரலாற்றினை சொல்லும்  எத்தனை எத்தனை இடங்கள் உள்ளன.. பார்த்து ரசித்து இப்படி படம் பிடித்துப் போட்டு கதை சொல்ல..!

திருமலைப் பகுதியில் முதலில் பாறை ஓவியங்களைப் பார்க்கப் போகின்றோம் என்பதாகத்தான் என் மனதில் பதிவாகியிருந்தது. ஆனால் அங்கு சென்று வந்த பின்னர், பாண்டியர் காலத்து மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம், ஆலயத்தின் குடைவரைக் கோயில், குகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள், முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியனின் சிலை, கோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள், பாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள், அங்கு சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள், அந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம்,  என,  அந்த ஊருக்கே சிறப்பினைச் சேர்க்கும்  பல விஷயங்கள் இருப்பதை  அங்கிருந்த சில மணி நேரங்களில்  தெரிந்து கொண்டோம்.

முதலில் குன்றின் மேல் ஏறி அங்கிருக்கும் பாறை ஓவியங்களை ஆரய்வது என்பது எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. எங்களின் இந்த களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம்.

கோயிலில் இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.  கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம்.
பாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலைப் பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாக பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.

முதலில் ஒரு பாறையைக் கண்டோம்.   வித்தியாசமான வடிவில் முழு மனித உருவத்தின்  ஓவியங்களாக அவை கீறப்பட்டுள்ளன.  தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற  மனித  வடிவம்.   இவை பண்டைய  எகிப்தில் வழிபடு கடவுளர்களாக உள்ள தெய்வ வடிவங்களை ஒத்த வகையில் உள்ளன. எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாக கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில்  இந்தத் திருமலை பாறை ஓவியங்களும் உள்ளன என்பது தான் சிறப்பு..

ஆச்சரியப்படுத்தும் ஒற்றுமை இது, அல்லவா? தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு வரலாற்றுப் புராதணச் சின்னம். ஆனால் இந்த சித்திரங்களின் தற்போதைய நிலையோ மனதை உலுக்கும் வகையில் தான் இருக்கின்றது. ஏனென்றால் அந்தச் சித்திரங்களின் மேற்பகுதியில்  அங்கு வந்து போவோர் பெயர்களையும் எண்களையும் கிறுக்கி அவற்றை சிதைத்து வைத்துள்ளனர்.   இவ்வாறு சிதைக்கும் போது இவ்வகை சித்திரங்களின் வரைகோடுகளைத் துல்லியமாக அறிவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது.  தாங்கள் பெயர்களைக் கிறுக்கி வைப்பதால் தங்களது பண்டைய வரலாற்றைத் தான் சிதைக்கின்றோம் என்ற அடிப்படை சிந்தனை இல்லாத காரணத்தால் தான் இது நிகழ்கின்றது. மக்கள் மனதில் இவற்றை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை எழ வேண்டும்!

அந்தக் குறிப்பிட்ட பாறையில்  அச்சித்திரங்களைப் பார்த்து மேலும் அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டு நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகளில்  கூட இத்தனை  அழகான வடிவங்களில் பாறைகளா,  என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில்  அமைந்த பாறைகள் உள்ளன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம்.மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடிய செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கபப்ட்டிருந்த கற்படுக்கைகள் என அனைத்தையும் அங்கே கான முடிந்தது. இவற்றை முழுமையாக வீடியோவில் பதிவாக்கினேன். அது தமிழ் மரபு அரக்கட்டளை வலைப்பக்கத்தில் ஒரு பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

சமணப் படுக்கைகள் என்பன பண்டைய காலத்தில் சமண முனிவர்களுக்கு அவர்கள் தங்குவதற்காகவும் படுத்து உரங்குவதற்காகவும் குன்றுகளில் உள்ள பாறைகளில்  சிறு பள்ளம் போல அமைத்துப் செதுக்கி உருவாக்கும் படுக்கையாகும்.

இங்கே அந்தத் தரைப்பகுதியையும் மக்கள் விட்டு வைக்கவில்லை.  அவற்றையும் கிறுக்கி சிதைத்து   சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை? நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால்  இன்றோ, நம்   கண்முன்னே,   நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்? வருந்தத்தக்க ஒன்றல்லவா ?

பாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தோம். கோயிலில் அவ்வூர் மக்கள் சிலர் அதற்குள் வந்து கூடிவிட்டனர்.   நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எதனால் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் விளக்கினோம். எங்களின் விளக்கம் கேட்டு அவர்களின் முகத்தில் மலர்ச்சி. அது  எங்கள் குழுவினருக்கும் மகிழ்ச்சியளித்தது.

பேசிக்கொண்டே எல்லோரும் கோவிலுக்குள் நுழைந்தோம். கோயிலில் முதலில் வருவோரை எதிர்கொள்வது மாவீரர் கருவபாண்டியன்   சிலைதான். இந்தக் கோயில் பாண்டியர் காலத்தது என்றாலும் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயிலின் முன்பகுதியைக் கட்டி அதனைச் சீரமைத்தவர் தான் கோயிலின் முன் சிற்பவடிவில் காட்சியளிக்கும் இந்த மாவீரர் கருவபாண்டியன். அவர் பயன்படுத்திய  ஏறக்குறைய 200 வருடம் பழமை கொண்ட ஒரு வாளை சிலையோடு இணைத்தே வைத்திருக்கின்றனர். அந்த வாளை என் கையில் கொடுத்து அதனைத் தூக்கிப் பார்க்கச் சொல்லி மகிழ்ந்தார் ஒரு முதியவர். அவர் இந்த மாவீரர் கருவபாண்டியன்  பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக் கொண்டார். முதியவர். வயது 80க்கும் மேல். ஆனால் சுறுசுறுப்பான நடை. வேகமான பேச்சு, தெளிவான குரல். வயதை மறைத்து நின்றது அவரது சுறுசுறுப்பு.

மாவீரர் கருவபாண்டியன்  சிலையைத் தாண்டி மேலே இடது புறமாக நடந்தால் குடைவரைக் கோயில் பகுதிக்குச் செல்லலாம். உள்ளே பிள்ளையார், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என வெவ்வேறு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அச்சிலைகளின் சிறப்புக்களையும் தன்மைகளையும் டாக்டர் வள்ளி அவர்கள் விளக்குவதை விழியப் பதிவாக தமிழ் மரபு அறக்கட்டளையின்   வெளியீடாக வெளியிட்டிருந்தேன்.  அந்த விழியப்பதிவுகளைப் பற்றிய செய்திகளை  இங்கே காணலாம்.  http://tamilheritagefoundation.blogspot.de/2013/01/2013.html.  குறிப்பாக இந்தக் குடைவரை கோயில் பற்றிய விழியப் பதிவினை http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_30.html என்ற வலைப்பூவில் காணலாம்.

அற்புதமான குடைவரைக் கோயில். வெளியேயிருந்து பார்க்கும் போது இப்படி ஒரு சிற்பக் களஞ்சியம் உள்ளே இருப்பதைப் பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. எத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தகைய அற்புதப் படைப்புக்கள் நாம் அறியாமல் இருந்திருக்கின்றோம் என்று வியக்க வைக்கும் கலைப்படைப்புக்கள் இவை. சிற்பங்களின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே குடைவரைக் கோயிலின்  குகைப்பகுதியிலிருந்து வெளிவந்தோம். இரண்டு பக்க சுவர் பகுதி முழுவதும் கல்வெட்டுக்கள். இவ்வளவு நீளமாக சிறப்பாக நேர்த்தியாக பாறை சுவற்றில் செதுக்கிய இந்த எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இந்தச் சுவர் முழுவதும் உள்ள எழுத்துக்கள் தமிழ் வட்டெழுத்துக்களால் ஆனவை. கல்லெழுத்துக்கலை என்பதே ஒரு அற்புதக்கலை என்பதை எழுத்துக்கள்  பொறித்த இச்சுவற்றை பார்த்தபோது ஆழமாக உணரலாம்.

அடுத்து கோயிலில் அமர்ந்து பூக்கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லைப் பார்வையிட்டோம். இந்தப் பாறையானது அமர்ந்து பூத்தொடுப்பதற்காக  என்ற நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.   இன்று மரப்பலகையில் அமர நாற்காலி செய்கின்றோம். அன்றோ அமர்ந்து வேலை செய்ய கல்லிலேயே செதுக்கியிருக்கின்றார்கள்.

எங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் அந்த யாதவர் குல மக்களுக்கும் எங்கள் நடவடிக்கைகளில் ஆர்வம் வந்திருக்கும் போல.  சற்று இளைப்பாறி விட்டு நாங்கள் புறப்பட நினைக்கையில் பக்கத்திலேயே மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கேயும் பாறை சித்திரங்கள் இருக்கின்றன என்றும் கூறி நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அந்தப் பாறையில் இருந்த சித்திரங்களைப் பார்த்து புகைப்படமாகவும் விழியப் பதிவாகவும் பதிவு செய்து கொண்டோம். இப்பதிவைhttp://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_29.html   காணலாம். வரலாற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நம் செயல்பாடுகளைப் பார்க்கும் ஏனையோருக்கும் நமது ஆர்வம் தொற்றிக் கொள்ளும் என்பதை அனுபவப் பூர்வமாக என்னால் அன்று உணர முடிந்தது.

திருமலைக்கு வந்து விட்டு அவர்கள் குலசாமிக் கோயிலைப் பார்க்காமல் செல்வது எப்படி என்று ஒரு பெரியவர் கேட்க அங்கே அருகாமையில் இருந்த அவர்களின் குலதெய்வமான மடையக் கருப்பு சாமி கோயிலுக்கும் வாகனத்திலேயே புறப்பட்டோம். கோயிலின் முன் பக்கமே மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. வேலி போட்டது போல பெரிய அரசமரம் ஒன்றினைச் சுற்றி அருவாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான அருவாள்கள். பக்கத்தில் ஒரு சிறிய கோயில். கோவிலின் உள்ளேயும் அருவாள்கள்.இங்கு வருபவர்கள் தங்கள் நேர்த்திக்கடனைத் தீர்க்க கோயிலில் அருவாள் அல்லது மணி வாங்கி இப்படி வைப்பது வழக்கம் என்று தெரிந்து கொண்டேன். கோயில் சிறப்புக்களை விளக்கும் மண்ணின் குரல் வெளியீட்டில் விரிவாக இக்கோயிலைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம். (மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை மடையக்கருப்பு சாமி)

நாங்கள் பதிவு செய்து கொண்டிருக்கும் போதே எங்களோடு வந்து இணைந்து கொண்டவர்கள் எங்களுக்காக இளநீர் வாங்கி வந்து கொடுத்து அருந்த வைத்தனர். இதுதானே தமிழரின் விருந்துபசரிப்பு. திருமலையில் நாங்கள் பார்த்த ரசித்து பதிந்த காட்சிகள் மனதை நிறைந்தது. இளநீர் வயிற்றுப் பசியை நிறைத்தது.  அவர்களுடன் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சற்று நேரத்தில்  விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

இப்படி எத்தனை எத்தனை கிராமங்கள் நம் பாரம்பரிய புராதனச் சின்னங்களை நமக்காக வைத்துக் கொண்டு காத்திருக்கின்றன. அவற்றை அறிவது முக்கியம். அவற்றை பாதுகாப்பது நம் கடமை. தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுச் சின்னங்கள் பாதுகாப்புப் பணிகள் என்றும் தொடரும்!