Thursday, January 31, 2019

95. நோர்வே நாட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு பயணம்



தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலைக் கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னணி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர் கடந்த ஐந்நூறு ஆண்டுகள் காலப்பின்னனியிலும் வணிகத்துடன், சமயம் பரப்புதல், பின்னர் அரசியல் ஆளுமையைச் செலுத்தியமை என்ற வகையிலும் ஐரோப்பியரின் செயல்பாடுகளைக் காண்கின்றோம். இக்காலகட்டங்களில் ஐரோப்பியர் ஆசியா வந்தது போல தமிழர்கள் ஐரோப்பிய நிலப்பகுதிகளுக்குச் சென்றமையைப் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைத்தாலும் அவற்றை ஆராய வேண்டியதும், குறிப்பிட வேண்டியதும் தமிழர் வரலாறு சார்ந்த ஆய்வுகளுக்கு அவசியமாகின்றது.

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கானத் தமிழர் புலம்பெயர்வு என்பது இலங்கையில் நடைபெற்ற போரின் காரணத்தாலும், உயர் கல்வி ஆய்வுகள் என்ற நோக்கத்தினாலும் ஏற்பட்டதைக் காண்கின்றோம். அப்படி தமிழர் பெருவாரியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நோர்வே குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

நோர்வே நாட்டிற்குத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டிற்கு முன்னர் வந்திருக்கலாம். ஆயினும் அது சார்ந்த குறிப்புக்கள் ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. கடந்த நூற்றாண்டில், இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில், முதலில் நோர்வே நாட்டிற்கு வந்து வாழ்ந்த தமிழர் ஒருவரைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ”குட்டி மாமா” என அன்புடன் அவரது உறவினர்களாலும் நண்பர்களாலும் அழைக்கப்படும் திரு.ஆண்டனி ராஜேந்திரன் தான் அவர். இலங்கையிலிருந்து தனது நண்பர் ஒருவருடன் புறப்பட்டு இந்தியா வந்து, பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில் தரைவழியாகப் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றார். லெபனான், துருக்கி மற்றும் ஏனைய நாடுகளை மோட்டார் சைக்கிள் பயணத்திலேயே கடந்து பின்னர் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். பின்னர் பொருளாதாரச் சிரமத்தை ஈடுகட்ட அங்கு சில மாதங்கள் ஒரு தங்கும்விடுதியில் பணிபுரிந்திருக்கின்றார். அங்கு அறிமுகமான நண்பர்களுடைய ஆலோசனையின் படி 1956ம் ஆண்டு நோர்வே நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். நோர்வே நாட்டில் மீன்பிடித்தொழில் தொடர்பான தகவல்களைப் பெறவும் கப்பல்களைக் கட்டும் தொழில்நுட்பம் பற்றியும் அறிந்து கொள்ளலாம் என நண்பர்களின் ஆலோசனை அமைந்ததால் நோர்வேக்கு புறப்பட்டிருக்கின்றார் என்பதை அறிகின்றோம்.

மீன்பிடித்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழிலுக்கு நோர்வே பிரசித்திபெற்ற நாடு என்பதை அறிந்து கொண்டார். நோர்வே நாட்டிற்கு வந்த திரு.ராஜேந்திரன் நோர்வேஜியன் மொழியைக் கற்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஒரு நோர்வே இன பெண்மணியின் அறிமுகம் ஏற்படவே அவரையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒருவர் இலங்கையில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி. திரு,ராஜேந்திரன் இலங்கைக்குத் தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து தங்கியிருந்ததோடு இலங்கை-நோர்வே ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளைத் தொடங்கியிருக்கின்றார் என்பதும் சுவாரசியமான ஒரு செய்தி.

இலங்கைக்கு வந்தவர் அங்குத் தனது நண்பர்கள் சிலருக்கு தான் நோர்வே நாட்டில் கற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கப்பல் கட்டும் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றார். அவர்களில் சிலர் இவருடன் நோர்வே நாட்டிற்கு வந்து பின் நோர்வே நாட்டிலேயே தங்கிவிட்டனர். இலங்கை அரசின் அனுமதியுடன் ஒரு தொழிற்சாலையை இலங்கையில் உருவாக்கியிருக்கின்றார். SINOR என்ற பெயருடன் 1968 வாக்கில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இந்தத் தொழிற்சாலை நெகிழி கப்பல்களையும், மீன் பிடிக்கும் வலைகளையும் உருவாக்கும் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. இதன் வழி இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அங்கு இத்தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது. முதலில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட பின்னர் இன்று கொழும்பில் இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இலங்கையில் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தாலும் திரு,ராஜேந்திரன் நோர்வே நாட்டிற்கே வந்து தங்கி விட்டார். இன்றைய காலகட்டங்களைப் போல கடவுச்சீட்டு கெடுபிடிகள் இல்லாத காலகட்டமாகவே அது இருந்திருக்க வேண்டும்.

இதில் மேலும் ஒரு சுவாரசியமான செய்தி என்னவென்றால், இலங்கையிலிருந்து முதன் முதலில் தரைவழி பயணத்தைத் தொடங்கியபோது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இங்கிலாந்து வரும் போது பழுதடைந்து விடவே அவரது பயணம் தடைபட்டது. அவர் நோர்வே நாட்டில் உதவி கேட்க, அவருக்கு நோர்வே நாட்டில் ஒரு மோட்டார் சைக்கிளை பரிசளித்திருக்கின்றனர். இந்த புதிய மோட்டர் சைக்கிளில் மீண்டும் நிலவழியாகவே இவர் பயணம் செய்து இலங்கைக்கு ஓரு பயணம் மேற்கொண்டிருக்கின்றார். இதனைப் பார்க்கும் போது மோட்டார் சைக்கிளில் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரவேண்டும் என்று அவர் மனதில் இருந்த தீவிர ஆர்வத்தை நம்மால் ஊகிக்க முடிகின்றது அல்லவா?

திரு.ஆண்டனி ராஜேந்திரன் தனது 58வது வயதில் காலமானார். நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் வரலாற்றில் முக்கியத்துவம் படைத்தவராக இவர் திகழ்கின்றார். இவர் பயணத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்றும் இலங்கையில் அவரது மனைவியின் வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவி சில மாதங்கள் இலங்கையிலும் சில மாதங்கள் நோர்வே நாட்டிலும் வாழ்கின்றார் என்று அறிகின்றோம்.

இவரது உறவினர் திரு.ஜெயாநந்தன் அவர்களை அண்மையில் நான் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்றிருந்த போது சந்திக்க நேர்ந்தது. திரு.ஜெயாநந்தன் நோர்வே நாட்டில் இன்று நாற்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். அவர் கூறிய தகவல்கள் புகைப்படங்கள் ஆகியன தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் விழியப் பதிவு பேட்டியாக வெளியிடப்பட்டது. அப்பேட்டியை https://youtu.be/CpIt7les8NE என்ற யூடியூப் பக்கத்தின் வழி இணையத்தில் காணலாம்.

திரு.ஜெயாநந்தனும் அவரது சில நண்பர்களும் 1979ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடக்கினர். மொத்தமாக பதினேழு பேர், அதாவது ஒன்பது இலங்கைத் தமிழரும், ஐந்து இந்தியத் தமிழரும், இரண்டு மலேசியத் தமிழரும் இனைந்து இக்காலகட்டத்தில் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நோர்வே தமிழ்ச்சங்கம் நோர்வே வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழர் கலைகளையும் பண்பாட்டையும் நோர்வே மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையிலும் செயல்பட்டது. இன்று அதன் நோக்கம் மேலும் பல செயல்பாடுகளுடன் விரிவடைந்துள்ளது.

நாற்பதாவது ஆண்டினை எட்டிப்பிடித்திருக்கும் நோர்வே தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டது இந்த அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவாக அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்பாகவும் அமைந்தது. தமிழ் மொழி வளர்ச்சி, கலை, பண்பாடு, விளையாட்டுப் போட்டிகள் என்பது மட்டுமல்லாது சமூக நல நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்திச் செயல்படுகின்றது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் பொருளாளராகச் செயல்படும் திரு.வேலழகன் வரலாற்று ஆவணங்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். இவரது சேகரிப்பில் உள்ள ஆவணங்களுள் யாழ்ப்பாணம், மற்றும் மலையகம் சார்ந்த நூறாண்டுகளுக்கு மேலான அஞ்சல் அட்டைகள், இலங்கை வரப்படங்கள், காசுகள், ஈய, வெண்கலப் பொருட்கள் ஆகியவையும் அடங்கும். இவரது சேகரிப்புக்கள் எனது நோர்வே நாட்டிற்கான இந்த அண்மைய பயணத்தின் போது மின்பதிவாக்கப்பட்டு அவை ஒவ்வொன்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையப்பக்கத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன.

ஏறக்குறைழ ஐந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நோர்வே நாட்டில் இன்று ஏறக்குறைய 13,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் சீரிய தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் வரவேற்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது; பாராட்டுதலுக்குரியது. நார்வே வாழ் தமிழ் மக்களுக்கும் நார்வே இன மக்களுக்கும் இடையிலான பாலமாகவும் இந்த அமைப்பு திகழ்கின்றது. வெற்றிகரமான நாற்பதாவது ஆண்டின் தன் பயணத்தைத் தொடரும் நோர்வோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள்.









Monday, January 14, 2019

94.அணிவோம் கைத்தறி.. இணைவோம் தமிழால்..!

முனைவர்.க.சுபாஷிணி





கொடிகளையும் இலைகளையும் உடலின் மேல் அணிந்து தன் உடலைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்ட மனித இனம், படிப்படியாக விலங்கின் தோலை ஆடையாக உடுத்தும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டது. நாகரிகம் வளர வளர, நூல் உற்பத்தி செய்யும் கலையைக் கற்று தன்வயப்படுத்திக் கொண்டது மனித இனம்.

உலகில் இன்றும் வளமுடன் திகழும் பண்டைய நாகரிகங்களின் சுவர் சித்திரங்களை உற்று நோக்கி ஆராய்ந்தால், இன்றைக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித குலத்தின் ஆடை அணிகலன்கள் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில் நமக்கு இன்றைக்கு பெருவாரியாகக் கிடைக்கக்கூடிய கிரேக்க, ரோமானிய எகிப்திய, அசிரிய ஓவியங்கள் அக்கால மக்களின் ஆடைகள் பற்றிய விபரங்களை நமக்குத் தருகின்ற சான்றுகளாக அமைகின்றன.

நீண்ட துணியால் அமைக்கப்பட்ட வெள்ளாடைகள் பண்டைய மக்களின் நாகரிக சிறப்பை உணர்த்துகின்றன. ஆடைகள் அணியும் முறை, ஆடைகளின் மேல் அவற்றை பொருத்தி அணிவதற்காக உருவாக்கப்பட்ட அணிகலன்கள், ஆகியவை மக்களின் பொருளாதார நிலையையும் சமூகத்தில் மக்களின் நிலையை வெளிப்படுத்தும் சான்றுகளாகவும் அமைகின்றன. சுவர் சித்திரங்கள் மட்டுமன்றி தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் இத்தகைய ஆய்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைகின்றன.

உலகின் பெரும்பகுதி மக்கள் மரவுரி உடுத்திக் கொண்டு வாழ்ந்த காலத்தில், தறி நெய்து ஆடைகள் உடுத்தியவர்கள் தமிழர்கள். பருத்தி பஞ்சில் நூலைப் முறுக்கியெடுக்கும் முறையையும், சிக்கலான கணித செயல்பாடுகள் மிக்க கைத்தறி நெசவையும் கண்டுபிடித்து, துணிகளை நெய்து உலகின் பல பாகங்களுக்குப் பருத்தித் துணியை அனுப்பியவர்களும் தமிழர்களே. துணிகளுக்கு வண்ணமேற்றும் முறையையும் மேம்படுத்தி, காலத்தால் அழியாத வண்ணக் கலப்பு முறையையும் உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதனால்தான் 'உடைபெயர்த் துடுத்தல்' என தொல்காப்பியம் நெசவைப் பற்றி குறிப்பிடுகிறது.

சங்க காலத்தில் பாம்பின் சட்டை போலவும், மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும், பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும், பால் நுரை போலவும், தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய மெல்லிய ஆடைகளை நெய்தனர். அதனால் முப்பத்தாறு வகையான பெயர்கள் துணிக்கு சங்க காலத்திலேயே வழக்கில் இருந்துள்ளன.

தமிழர் வழக்கில்  இருந்த இந்தத் தொழில்நுட்பத்திற்கும்  தமிழர்கள் நெய்த துணிகளுக்கும் உலகம் முழுமைக்கும் பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தன. துணிகளை மட்டுமின்றி நெய்யும் தொழில் நுட்பத்தையும் உலகிற்கு வழங்கியுள்ளனர் தமிழர்கள். அதுவே உலகின் பலநாட்டு மக்கள் ஆடை நெய்யும் அறிவியலை முன்னெடுக்க அடிப்படையாகவும் அமைந்தது.

தமிழகத்தில் உருவான கைத்தறி தொழில்நுட்பம் கடல்கடந்து பயணித்து வணிகம் வளர்த்த தமிழக வணிகர்களால் மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் கண்டது. இதில் குறிப்பாக கிழக்காசிய நாடுகளைக் கூறலாம். தமிழக தறி அமைப்பின் பிரதிபலிப்பை கம்போடிய கைத்தறி நெசவு இயந்திரங்களில் இருக்கும் ஒற்றுமை  சான்று பகர்கின்றது.

நாகரீகம் கற்று தந்ததாக பெருமை கொள்ளும் ஐரோப்பியர்களுக்கு ஆடையுடுத்தியவர்கள் தமிழர்கள். தமிழக நெசவுக்கலையின் பெருமை அறிந்த பண்டைய அரேபியர்களும் கிரேக்கர்களும், ரோமானியர்களும் நீண்ட தூரம் கடல் பயணம் செய்து தமிழகம் வந்து கைத்தறி பருத்தித் துணிகளை வாங்கிச் சென்று அணிந்தனர். வணிகம் செய்து கொழித்தனர் என வரலாறு சொல்கிறது.

உலக மக்களின் மானத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்திய தமிழக நெசவாளர்களின் நிலை இன்று எவ்வாறு உள்ளது? யோசிக்க வேண்டாமா நாம்? உலகம் முழுமைக்கும் பரந்து வாழும் தமிழ் மக்களாகிய நாம் நெசவாளர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவு யோசிப்பது நமது கடமை அல்லவா?

எனது தமிழகத்திற்கான களப்பணியில் நெசவாளர்கள் நிறைந்த தூத்துக்குடியின் சாயர்புரம், கொல்லிமலை, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்களின் உண்மை வாழ்நிலையை கண்டறியும் முயற்சி மேற்கொண்டிருந்தேன். நெசவாளர்கள் இன்று நலிந்து வாடுகின்றனர் என்பதையே இத்தகைய நேரடி பயணங்கள் உணர்த்துகின்றன.

பொதுவாகவே ஒரு நெசவாளர் குடும்பத்தின் வீட்டைக் கவனித்தால் இன்று எப்படி நாம் மேசை நாற்காலிகள் என வரவேற்பறையில் வைத்திருக்கின்றோமோ, அந்த வகையில் வீட்டின் வரவேற்பறையில் இரு தறி இயந்திரம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கின்றது. ஒரு நெசவாளர் தினம் தினம் கண் விழிக்கும் போதிலிருந்து இரவு தூங்கும் வரை தறி இயந்திரத்தை பார்த்துக் கொண்டு தான் தன் வாழ்நாளைக் கழிக்கின்றார். மனித குலத்திற்கு ஆடை நெய்து அவர்களை மானத்தோடும், பாதுகாப்போடும் வாழ வைக்க வேண்டியது தனது கடமை என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்திருப்பதன் வெளிப்பாடாகவே ஒவ்வொரு நெசவாளரின் அன்றாட இயக்கம் என்பது அமைந்திருக்கின்றது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் நெசவாளர்களின் ஓலைக் குடிசைகளும் சிறிய வீடுகளும் இன்றும் தமிழக கிராமங்களில் காட்சியளிக்கின்றன.

உலகம் முழுமைக்கும் பருத்தி துணிகளுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்தாலும் தமிழ் நெசவாளர்களின் வறுமையில் மாற்றமில்லை. ஏன்..? நவீன தொழிற்சாலைகளின் பேரளவிலான உற்பத்திக்கு ஈடுகொடுக்கும் வல்லமை அவர்களிடம் இல்லையென்பதல்ல.  மாறாக, விளம்பரங்களின் திசைத் திருப்பல்களுக்கு பலியாகி பெருமையையும், தன் துணியின் மாண்பையும் மறந்த தமிழர்களே இந்த நிலைக்கு மூலகாரணம்.

வெயில், மழை, பனி என எக்காலத்திலும் உடலைப் பாதுகாக்கும் துணி வகைகள் கைத்தறியில் இருக்கின்றன. வசதி படைத்தவர்களுக்கான ஆடைகள் வகையும், சாதாரண மக்களுக்கு ஏற்ற விலையில் உள்ள ரகங்களும் கைத்தறியில் கிடைக்கின்றன. இன்று மேற்கத்திய நாடுகளின் கோடைகால ஆடைகளாகத் திகழ்பவை பெரும்பாலும் பருத்தி துணி வகைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளே. இன்றைய நவநாகரிக பெண்களும் நேர்த்தியுடன் அணியும் போது கைத்தறி சேலைகள் பெண்களின் இயற்கை அழகிற்கு மேலும் பொலிவூட்டும் தன்மை படைத்தவை கைத்தறி ஆடைகள் என்பதில் மறுப்பேதுமில்லை.

இன்று பெரிய மேற்கத்திய நெசவு நிறுவனங்களின் தாக்குதல்களினால் தமிழக கைத்தறிநெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடன், வேலையில்லா பற்றாக்குறை, வறுமை, அரசின் பாராமுகம், வெளிநாட்டிலுள்ள தமிழர்களிடையே கைத்தறி துணிகள் பற்றின விழிப்புணர்ச்சி போதாமை.. என நெசவுத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கைத்தறியில் துணி நெய்யும் தமிழ் நெசவாளி நூலை மட்டும் திரித்து துணி நெய்யவில்லை, தமது அன்பையும், தமிழ் மீதான பற்றையும் சேர்த்து நெய்கிறார். நெடுங்காலத்துத் தமிழ் மரபை நம்மிடையே கைம்மாற்றித் தருகிறார். சங்க காலத்து அரசர்களும், பண்டைய கிரேக்க ரோமானிய அரசர்களும், அரசவைப் பெண்களும் நான் நெய்தத் துணியை அணிந்தார்கள், அதை உங்களுக்கும் தருகிறேன் என்று வரலாற்றைச் சுட்டிக் காட்டுகிறார். பண்டைய தமிழர் பெருமையை நமது உடலுக்குப் போர்த்தி விடுகிறார் ஒரு நெசவாளி.

வெயிலுக்கு இதமும், குளிருக்குக் கதகதப்பும் தரும் கைத்தறி துணிகளின் நேர்த்தியான அழகும் கண்களை உறுத்தாத நிறமும் கலை நுட்ப வேலைப்பாடுகளும் கைத்தறிதுணிகளின் சிறப்பு அம்சங்கள். எனவேதான் உள்ளத்துக்கும் உடலுக்கும் சுகமான அனுபவத்தையும் கைத்தறி துணிகளே இன்றும் சாத்தியப்படுகின்றன.

பெரும் விளம்பரங்களினால் திசைத்திரும்பி, கைத்தறி துணிகள் மீதான பார்வையை பெரும்பாலானத் தமிழகத்தின் தமிழர்கள் இழந்து விட்டதைப் போலவே உலகத் தமிழர்களும் இழந்து விட்டார்கள். தமிழர்களின் பண்டைய பெருமையை மீட்கப்படும் இக்காலத்தில் கைத்தறிநெசவும் காக்கப்பட வேண்டும். சிற்பக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை ஆகியன எப்படி தமிழ் பண்பாட்டிற்கு முதன்மையோ அதைப்போலவே தமிழர் மரபுத் தொழில்நுட்பமான நெசவுக் கலையும் சிறப்பு வாய்ந்ததே.

எனவே தமிழர்களின் பெருமையை மீட்கும் நமது பெரும் முயற்சியில், நீண்ட நெடுங்காலத்து தமிழ்ப் பெருமையான கைத்தறி பருத்தி துணிகளையும் மீட்க வேண்டியதும் பருத்தி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியது உலகத் தமிழர்களாகிய நமது கடமையாகும். இக்கருத்தை முன்னிறுத்தும் பணிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை இவ்வாண்டு ஜூலை மாதம் தொடக்கினோம். நம்முடன் Traditional India அமைப்பும் கைகோர்த்துக் கொண்டது. திருமதி புஷ்பா கால்ட்வெல் மற்றும் அவரது குழுவினரின் இக்கருத்தின் மீதான தீவிர ஆர்வம் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சிக்குப் பக்க பலமாகத் துணை நிற்கின்றது.

இதன் அடிப்படையில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு விழா இவ்வாண்டு ஜூலை மாதம் டல்லாஸ் நகரில் நடந்த போது கைத்தறி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியை அந்த விழாவில் நிகழ்த்தினோம். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கடந்த 25.10.2018 அன்று கைத்தறி அணிவோம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தோம். கல்லூரியின் தலைவர் திரு.முரளீதரனும் நிர்வாகக்குழுவும் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைய பெரும் ஆதரவு நல்கினர். நிகழ்ச்சி சிறப்புற நிகழ கல்லூரி முதல்வர் முனைவர்.புவனேஸ்வரி அவர்கள் பக்க பலமாக இருந்தார். நிகழ்ச்சியை முற்றும் முழுதுமாக முழு ஈடுபாட்டுடன் நடத்திக் காட்டி மாணவர்கள் அனைவரிடையே கைத்தறி ஆடைகளைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியவர் கல்லூரியின் பெண்ணியத் துறை தலைவர் முனைவர்.அரங்கமல்லிகா. கல்லூரியின் குழுவினரோடு நெசவாளர்களில் ஒருவரான ஆரண்யா அல்லி அவர்கள் கைத்தறி சேலைகளின் கண்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வந்திருந்தோர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிகழ்ச்சியாக மாணவியரின் கைத்தறி ஆடை பவனி திகழ்ந்தது. எளிமையாகக் காட்சியளிக்கும் சேலைகள், விதம் விதமான வண்ண வண்ண மேலாடைகளோடு இணைத்து அணியும் போது பேரழகை வெளிப்படுத்தும் அதிசயத்தைக் காண முடிந்தது. பெண்களின் சேலை பவனி வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியளித்து. கைத்தறி துணிகளின் பெருமையை பறைசாற்றியது.

இத்தகைய கைத்தறி விழிப்புணர்வு தரும் மேலும் பல நிகழ்ச்சிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகம் தவிர்த்த ஏனைய தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடு செய்ய திட்டம் வகுத்துள்ளோம். இந்த முயற்சியில் ஆர்வம் உள்ளோர் எம்மைத் தயங்காது தொடர்பு கொள்ளலாம்.

கைத்தறித் துணிகள் தமிழரின் பெருமை.
புதுயுகத்தின் அடையாளம்.
பெருகும் உலக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு.

தமிழர் பெருமை கொள்ள கைத்தறித் துணிகளை அணிவோம். நவீன காலத்திற்கு ஏற்ப கைத்தறித் துணிகளை மேம்படுத்த உதவி புரிவோம். உலகிற்கு நம் துணிகளை கொண்டு சேர்ப்போம். நாம் உடுத்தும் ஒரு பருத்தி சேலையோ அல்லது ஆடையோ நமது மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, நமது பெருமைமிகு மரபான மகிழ்ச்சிக்கு, நெசவாளிகளின் குடும்ப மேன்மைக்கும் அடிப்படை என்பதை புரிந்து கொள்வோம்.

அணிவோம் கைத்தறி.. இணைவோம் தமிழால்..!