Wednesday, March 1, 2017

47. நடுகற்கள்
நடுகற்களா?
என்ன அவை?
என்ற கேள்வி மலேசிய சூழலில் பலருக்கும் எழலாம். தமிழக நிலப்பரப்பில் இன்றும் கிடைக்கின்ற புராதனச் சின்னங்களில் ஒன்று தான் நடுகற்கள் எனப்படுபவை.

பண்டைய தமிழர் வரலாற்றில் வீரச்செயல் புரிந்தோரை மக்கள் காலந்தொரும் நினைத்திருக்கும் வகையில் அவர்கள் செயலைப் பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் அவ்வீரனது சிற்பத்தைக் கல்லில் செதுக்கி வைப்பார்கள். இன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இவை காணக்கிடைக்கின்றன. பரவலாக ஆங்காங்கே இவை நமக்குத் தென்பட்டாலும், இந்த நடுகற்கள் அனைத்தும் ஒரே தன்மையானவை அல்ல. பெரும்பாலானவை ஒரு வீரன் தன் ஒரு கையில் வாள் ஒன்றினை ஏந்தியவாறு நிற்பது போலவோ அல்லது ஒரு கையில் வாளினை ஏந்தி தன் மறு கையால் தன் தலையை உயரப் பிடித்து தன் கையாலேயே தன்னைப் பலிகொடுத்துக் கொள்ளும் காட்சியாகவோ அல்லது வீரனுடன் புலி ஒன்று இருப்பது போலவும் அதனை அவர் தாக்குவது போலவோ, அல்லது ஒரு குதிரையை வீரன் குத்துவது போலவோ அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில நடுகற்களில் வீரனுடன் பெண் ஒருத்தியின் சிற்பமும் இணைக்கப்பட்டிருக்கும். சில நடுகற்களில் வீரனின் தலைப்பகுதியின் இரு பக்கங்களிலும் தேவதைகள் மலர் தூவுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கிக்கும்.

பெரும்பாலான நடுகற்களில் உருவங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆயினும் சில நடுகற்கள் எழுத்துக்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் காணப்படுகின்ற எழுத்துக்கள் அவ்வீரனது பெயரைக் குறிப்பிடுவதாக அமைகின்றன.

இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கொங்குமண்டலத்திலும் நாம் பரவலாக காணக்கூடிய வகையில் கிடைக்கின்ற நடுகற்களில் பல, ஒரு அரசனுக்காகப் போர் நிமித்தம் தன் உயிரைத் தானே பலிகொடுத்துக் கொண்ட வீரனுக்காக அமைக்கப்பட்ட நடுகற்களாகவே இருப்பதைக் காணலாம். தன்னைத் தன் அரசனின் வெற்றிக்காக மாய்த்துக் கொள்ளும் வீரன், கொற்றவை அல்லது காளி தெய்வத்தின் முன் தன் தலையைத் தானே தூக்கிப் பிடித்து தன் மற்றொரு கையில் ஒரு வாளை ஏந்தி தன் தலையை வெட்டி தன் தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு தன்னைப் பலி கொடுத்துக் கொள்வான். இத்தகைய நடுகற்கள் தலைபலி நடுகற்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை நவகண்டம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இன்று நடுகல்லுக்கும் தெய்வச் சிற்பங்களுக்கும் வித்தியாசம் தெரியாது பலர் இருக்கின்றனர். நடுகற்களை ஏதாவது ஒரு வகையில் ஒரு வீரச்செயல் புரிந்த மனிதர்களுக்கான நினைவுச்சின்னம் என அறியாது, சிற்பத்தின் உருவத்தைக் கூட ஆராயாமல் இவற்றை வேடனாக வருகின்ற முருகன் சிலை என நினைத்துச் சிலரும், ஆஞ்சநேயர் என சிலரும், கருப்பண்ணசாமி என சிலரும் பெயர் வைத்து அழைத்து வழிபடுகின்றனர். நடுகற்கள் என்பவை யாது எனத் தெளிவு பிறந்தால் இத்தகைய சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்காது.

இறந்தோருக்காக நடுகல் அமைக்கும் முறை பண்டைய தமிழர் மரபில் இடம் பெறும் ஒன்று. ஒரு நடுகல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை தொல்காப்பியம் வரையறை செய்திருக்கின்றது.

வெவ்வேறு விதமான நடுகற்கள் பண்டைய தமிழகத்தில் வழிபாட்டில் இருந்தன. சில இன்னமும் வழிபாட்டில் தொடரப்படுகின்றன. அப்படிக் காணக்கிடைக்கின்ற வெவ்வேறு விதங்களில் அமைந்த நடுகற்களைப் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்வதும் நமக்குச் சுவாரசியமான அனுபவமாகத்தானே அமையும்.

எனது ஒவ்வொரு ஆண்டு தமிழகத்துக்கான வரலாற்றுப் பயணங்களிலும் நான் தேடிச்செல்லும் இடங்களில் ஆங்காங்கே மாறுபட்ட நடுகற்களைப் பார்த்ததுண்டு.

மிகச் சாதாரணமாக உருவங்கள் யாதுமன்றி நெடிய கல் ஒன்று மட்டும் வைக்கப்பட்டு அதுவே வழிபாடு பொருளாக இருக்கும். இதுவும் ஒருவகை நடுகல் தான்.

நடுகற்களில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவருக்காக எழுப்பப்படுவதை "புலி குத்திக் கல்" என வகைப்படுத்தி அழைக்கின்றார்கள். அண்மையில் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் எனும் சிற்றூரின் அருகே ஏறக்குறைய 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்படும் புலிக்குத்திக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கிராமத்தில் சேதங்களை ஏற்படுத்திய புலியுடன் சண்டையிட்டு மரணமடைந்து விட்ட வீரனுக்காக அவனது தாயார் எழுப்பிய கல்வெட்டு இது. இந்த நடுகல்லில் மேலும் சிறப்பாக மேற்பகுதியில் 3 வரிகளில் ஒரு செய்தி கல்வெட்டாகப் பதியப்பட்டிருக்கின்றது. “கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்பது தான் அச்செய்தி. பெரும்பாலான நடுகற்கள் கல்வெட்டுக்கள் இல்லாமலேயே அமைந்து விடுகின்றன. அதனால் இது யாருக்கு யாரால் எழுப்பப்பட்டது எனக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகின்றது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட நடுகல்லில் எழுத்துக்கள் மிகத் தெளிவாக அமைந்திருப்பதனால் இதனை உருவாக்கியவரின் பெயரையும் எதனால் இது எழுப்பப்பட்டது என்ற காரணத்தையும் 700 ஆண்டுகளுக்குப் பின்னரும் நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இதே போல கரூர் அருங்காட்சியகத்திலும் ஒரு புலிக்குத்திக் கல் ஒன்றினை நான் எனது அண்மைய பயணத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. பெண்ணையாற்றின் கரையில் ஆங்காங்கே கிடைக்கின்ற நடுகற்களில் புலிக்குத்தி நடுகல் ஒன்றும் இருக்கின்றது. இதனை எனது 2012ம் ஆண்டு பயணத்தில் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தேன்.

நடுகல்லில் மற்றொரு வகையும் உண்டு. கரூர் அருங்காட்சியகத்தில் இருக்கின்ற ஒரு நடுகல் வீரன் ஒருவன் தன் கையில் ஒரு வாளைப் பிடித்து குதிரையைத் தாக்குவது போல அமைந்திருக்கின்றது. இதனை "குதிரைக் குத்தப்பட்டான் கல்" என அழைக்கின்றனர். ஒரு போரில் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையைத் தீர்க்க குதிரையை வாள் கொண்டு தாக்கிய வீரன் இறந்து போய்விடுகின்ற நிலையில் அவன் நினைவாக எழுப்பப்படுவது தான் இந்த வகை நடுகல்.

2012ம் ஆண்டு நான் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது பெண்ணையாற்று நதிக்கரையோரம் அமைந்திருக்கும் பெண்ணேஸ்வரர் சிவாலயத்திற்குச் சென்றிருந்தேன். இக்கோயிலின் வாசலிலேயே சில நடுகற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வெளியே சாலையின் இரு புறமும் நடுகற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்துக் கொண்டே வந்தோம். சாலையின் வலது புறத்தில் உள்ள அடர்ந்த புதர் பகுதிகளில் பராமரிப்பு அற்ற நிலையில் ஆங்காங்கே நடுகற்கள் புதர்ச்செடிகளால் மூடிய படி கிடந்தன. அப்படி புதர் மூடிய ஒரு நடுகல்லைச் சென்று பார்த்து புகைப்படம் எடுப்போம் என நாங்கள் அருகில் சென்று சிறு கொடிகளையும் செடிகளையும் இழுத்து அப்புறப்படுத்தி அந்த நடுகல்லைப் பார்வையிட்டோம். அது ஒரு வீரன் வாளுடன் நின்ற வடிவில் அமைக்கப்பட்ட ஒரு நடுகல். கிராம மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மரணம் எய்திய அந்த வீரன் தெய்வமாக வழிபடப்படுவதைக் காட்டும் ஒரு நடுகல் தான் அது. இந்த அழகிய நடுகல் புதர் மண்டி பாதுகாப்பற்ற நிலையில் காட்டுக்குள் கிடப்பது தான் கொடுமை. இத்தகைய புராதனச் சின்னங்களை மீட்டெடுத்துப் பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியமல்லவா?

அதே சாலையில் நாங்கள் மேலும் பயணித்தபோது சிறு ஓடை ஒன்றின் அருகே மக்கள் வழிபாட்டில் இன்றும் இருக்கும் ஒரு நடுகல்லைப் பார்வையிட்டோம். அதில் ஒரு வீரனோடு அவன் மனைவியும் இணைந்து செல்வது போலச் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. அப்பெண்ணின் கையில் ஒரு பானை இருப்பது போலவும் வீரனின் கையில் அவன் வாள் ஏந்தி நடப்பது போலவும் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. வழிபாட்டில் இடம்பெறுவதால் மஞ்சள் சந்தனம் குங்குமம் என அலங்கரிக்கப்பட்டு நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

பெண்ணையற்றுக் கரை நடுகற்களுக்குப் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது போல கொங்கு மண்டலத்தின் கரூர், சேலம் போன்ற பகுதியிலும் பல இடங்களில் நடுகற்கள் கிடைப்பதைக் காணலாம்.

கொங்குமண்டலத்தின் அந்தியூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் மிகப்பிரசித்தி பெற்ற ஒரு கோயில். இங்கே கோயிலின் பின் பக்க கொல்லைப்புறத்தில் நவகண்டம் ஒன்றினை தற்செயலாக நான் காண நேர்ந்தது. கோயிலின் பழமையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கோயில் குருக்கள் ஒரு நவகண்டம் ஒன்று கொல்லைப்புறத்தில் இருப்பதாகக் குறிப்பிட, உடனே அதை தேடிச் சென்றேன். கோயில் அலுவலகத்தில் விசாரித்த பின்னர் அவர்களும் அதனை எடுஹ்ட்து காண்பிக்க முன் வந்ததால் கொல்லைப்புரம் சென்று மண்ணிற்குள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அண்டஹ் நவகல்லை திருப்பிப் பார்ஹ்ட்த போது வியந்தோம்.

மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு நவகண்டம் வகையிலான ஒரு நடுகல் அது. வீரனின் கையில் வாளுடன் தன்னை பலியிட்டுக் கொள்ளும் நிலையில் தன் மற்றொரு கையால் தலையைப் பிடித்தவாறு அமைக்கப்பட்ட சிற்பட்துடன் இந்த நடுகல் காட்சியளிக்கின்றது. இந்த நடுகல்லைப் பாதுகாக்கும் முயற்சியில் தற்சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு பாதுகாவலர் குழு ஈடுபட்டுள்ளது.

இதே போல தமிழகத்தின் பல சிற்றூர்களில் பொதுமக்கள் கண்டுபிடிக்கும் நவகண்டங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின. வயல்களில் புதையுண்டு பாதிப்பகுதி மட்டுமே தெரியும் வகையில் உள்ள நவகண்டங்களைப் பார்த்தவர்கள்புகைப்படங்கள் எடுத்துப் பகிர்ந்து கொள்கின்றனர். சாலை ஓரத்தில் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போன நடுகற்களும் கிடைக்கின்றன. இவை தமிழர் புராதனச் சின்னங்கள். இத்தகை புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் சீறிய முறையில் மேற்கொள்ளப்படும் போது விடுபட்டுப் போன பல வரலாற்றுச் செய்திகளை நாம் மீட்டெடுக்க வாய்ப்பு கிடைக்கும்! 

No comments:

Post a Comment