Thursday, February 22, 2018

83. கிழவன் சேதுபதி அளித்த செப்பேடு



இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்குப் பரிசளிக்கவோ அல்லது அரசாங்க ஆணையைசெயல்படுத்தவோ தேவை ஏற்படும் போது பத்திரங்களைச் சட்ட நிபுணர்களை வைத்துத் தயாரித்து அதனைப் பதிவு செய்கின்றோம். ஆனால் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்னதான அரச ஆணைகள் மிகப் பெரும்பாலும் கல்வெட்டுக்களாகவும், ஓலைச்சுவடி பத்திரங்களாகவும் செப்பேட்டில் பொறிக்கப்பட்ட வாசகங்களாகவும் அமைந்தன. தமிழகத்தில் இன்று ஒரு சில அருங்காட்சியகங்களிலும், தனியார் சேகரிப்புகளிலும், சிலரது வீடுகளிலும் இன்றளவும் அத்தகைய செப்பேடுகள் பாதுகாக்கப்படுகின்றன. தனியார் பலர் இவ்வகைச் செப்பேட்டில் என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது, என்பதை அறியாமலேயே அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். ஒரு சிலரோ அதில் புதையல் பற்றிய செய்திகள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிலரோ இவை மாந்திரீகம் தொடர்பானது என்று நினைத்து இவற்றைப் பெட்டியிலிருந்து எடுத்துப் பார்ப்பதற்கே அஞ்சி மறைத்து பரன் மேல் பெட்டிக்குள் போட்டுப் பூட்டி வைத்து விடுகின்றனர். இப்படி யாருக்கும் வாசிக்கக் கிடைக்காத செப்பேடுகள் பல தனியார் வசம் இன்றளவும் இருக்கின்றன.

இன்று தமிழகத்தின் பண்டைய வரலாற்றுச் செய்திகளில் சிலவற்றை  அறிந்து கொள்வதில் சில குறிப்பிடத்தக்க செப்பேடுகள் முக்கியமானவையாக அமைகின்றன . அவற்றைப் பற்றி விளக்குவதற்கு முன் நான் நேரில் சென்று பார்த்து விளக்கம் கேட்டு பதிந்து வந்த ஒரு செப்பேடு பற்றிய சில தகவல்களையும் இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழகத்தின் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் எனது நெடுநாள் நண்பர். அவரது இல்லத்தில் அவர் தனது மாமியாரிடமிருந்து குடும்ப சொத்தாகப் பெற்றுக் கொண்ட ஒரு செப்புப் பட்டயம் ஒன்று உள்ளது. அந்த செப்புப்பட்டயத்தை வாசித்து அது தமக்கு கிடைத்த செய்திகளையும் எனக்குத் தெரிவிப்பதாகச் சொல்லி என்னைக் காரைக்குடிக்கு  அழைத்திருந்தார். மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கானப் பதிவுகள் செய்வதற்காக நான் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சில நாட்கள் தங்கியிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் காரைக்குடி நகரில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விழாவிற்கு வாழ்த்துரை வழங்க ஒரு அழைப்பு வந்திருந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது முனைவர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் வீட்டிற்கும் சென்று அந்தச் செப்பேட்டை நேரில் சென்று பார்த்து அந்தச் செப்பேடு சொல்லும் தகவல்களையும் பதிந்து வந்திருந்தேன். ஒரு முழு கட்டுரைப் பதிவாக இந்தச் செப்பேட்டின் வாசகங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இடம்பெறுகின்றது. அதனை http://tamilheritage.org/old/text/ebook/THF_ValliCopper.pdf என்ற பக்கத்திற்குச் சென்று காணலாம்.

அந்தச் செப்பேடு இராமநாதபுரத்தை ஆட்சி செய்து வந்த மன்னன் கிழவன் சேதுபதி எழுதிக் கொடுத்த ஒரு செப்பேடு. இது உருவாக்கப்பட்ட ஆண்டு 1706. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடனை வட்டத்தில், இடையன்வயல் என்ற பகுதியில் பெருமாள்கோன் வழியினருக்குச் சொந்தமான செப்பேடு இது. இந்தச் செப்பேடு சொல்லும் செய்தி இதுதான்.

பெருமான்கோன் என்பவருக்கு கோபாலமடம் என்ற பெயரில் ஒரு மடத்தை நிறுவி அதனைப் பரிபாலனம் செய்வதற்காக இடையன்வயல் என்ற ஊரையும் மேலும் சில வருவாய்களையும் கொடுத்த செய்தி இந்தச் செப்புப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இடையன்வயல் என்ற ஊரைச் சுற்றி உப்பு தயாரிக்கும் உப்பளங்கள் இருக்கின்றன. ஆக, இந்த உப்பளங்களிலிருந்து கிடைக்கும் உப்பு வருவாயாக இந்த மடத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தச் செப்புச் சாசனம் அறிவிக்கின்றது. அதோடு, சேதுமார்க்கத்தில் அமைந்துள்ள இந்த மடத்திலிருந்து இங்கு வந்து செல்லும் யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் நீர் மோரும், சூடான கஞ்சியும், உப்பு, ஊறுகாய் ஆகியனவும் கொடுக்கப்பட வேண்டும் என இச்சாசனம் குறிப்பிடுகிறது. செப்பேட்டின் இறுதியில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பெருமாள்கோனுக்கு மானியமாக மீண்டும் இந்தச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள் புதுப்பித்துத் தரப்பட வேண்டும் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்படும் இடையன் வயல் கிராமமும் அந்த மடமும் இன்று சிதைந்த நிலையில் உள்ளன. இங்கு செப்புப்பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தச் செயல்பாடுகளும் நடைபெறவில்லை. காலம் மாறி விட்டது. மன்னர் ஆட்சி முடிந்து ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி, அதற்குப் பின் சுதந்திர இந்தியா எனக் காலம் உருண்டோடிவிட்டது. ஆயினும் இன்று முனைவர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் காட்டி விளக்கிய செப்பேடு சொல்லும் செய்தி யாத்திரிகர்களின் நலனைக் கருதி வழங்கப்பட்ட ஒரு அரசாணையின் தன்மையை நமக்கு விளக்கும் சான்றாக அமைகின்றது.

இந்தக் கிழவன் சேதுபதியின் இடையன்வயல் செப்பேடு இரண்டு ஏடுகளாக அமைந்துள்ளன. முதல் செப்பேட்டின் முதல் பக்கத்தில் 27 வரிகளில் ஆணைகள் சொல்லும் செய்தி கீறப்பட்டுள்ளது. முதல் செப்பேட்டின் பின்புறம் 27-35 வரிகளும், இரண்டாவது செப்பேட்டின் முன்புறத்தில் 36- 67 வரிகளும், இரண்டாவது ஏட்டின் பின்புறத்தில் 68-76 வரிகளும் கீறப்பட்டுள்ளன. இதனை அடுத்து இச்சாசனம் புதுப்பிக்கப்படும் செய்தி இரண்டாம் ஏட்டின் பின்புற ம் 1-8 வரிகளில் கீறப்பட்டுள்ளன.

இந்தச் செப்பேடு போலத் தமிழக தொல்லியல் அறிஞர்கள் கண்டெடுத்த மிக முக்கிய செப்பேடுகள் சிலவற்றைப் பற்றியும் அவை சொல்லும் வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும் சற்று காண்போம்.

இன்று இதுகாறும் வரலாற்றாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள செப்பேடுகளைத் தமிழகத்தை ஆண்ட பேரரசின் பின்னணிகளோடு இணைத்துப் பார்த்து பெயரிடுவது வழக்கமாக உள்ளது. உதாரணமாகப் பல்லவ மன்னர்களால் வெளியிடப்பட்ட செப்புப்பட்டயங்கள் பல்லவர் கால செப்பேடுகள் என்றும், பாண்டிய மன்னர்களின் காலத்தில் வெளியிடப்பட்டவை பாண்டியன் கால செப்பேடுகள் என்றும், சோழ மன்னர்கள் வெளியிட்டவை சோழர் கால செப்பேடுகள் என்றும் நாயக்க மன்னர்கள் வெளியிட்டவை நாயக்கர் கால செப்பேடுகள் என்றும் தனித்தனியே சிற்றாரசர்கள் வெளியிட்டமை அவர்கள் பெயருடன் இணைத்து அழைக்கப்படுபவையாகவும் அமைகின்றன.

பல்லவ காலத்தில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் கீறப்பட்டவையாக அமைந்துள்ளன. பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்டவை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அமைந்திருக்கின்றன. பாண்டியமன்னர்கள் காலத்தையவையாக இன்று அறியப்படும் செப்பேடுகள் ஏழு. அவை (இளையான்புதூர்) மாறவர்மன் அரிகேசரியின் செப்பேடு. வேள்விக்குடி செப்பேடு, சீவரமங்கலம் செப்பேடு, சின்னமனூர் செப்பேடு ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தைவை, (தளவாய்புரம்) பராந்தக வீரநாராயணனுடைய கால செப்பேடு, (சின்னமனூர் பெரிய செப்பேடு) இராஜசிம்மன் காலத்தையது, மற்றும் (சிவகாசி) வீரபாண்டியனின் காலத்தைத் சேர்ந்தது ஆகியன.

சோழர் கால செப்பேடுகளில் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்தியைச் சொல்லும் சில செப்பேடுகளைப் பற்றியும் காண்போம்.

பெரிய லெயிடன் செப்பேடு என்பது மாமன்னர் ராஜராஜன் காலத்தையது. இது தற்சமயம் நெதர்லாந்து நாட்டில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இந்தச் செப்பேடு சோழர் குலத்தைப் பற்றியும் அம்மன்னர்களின் கொடைகளைப் பற்றியும் அதிகமான தகவல்களைச் சொல்லும் செப்பேடு. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அமைந்த செப்பேடு இது. இதன் சமஸ்கிருதப் பகுதியில் சோழர் குலத்தோற்றம், புராண கால சோழ மன்னர்களைப் பற்றிய செய்திகள், சங்க கால சோழ மன்னர்களின் செய்திகள், அவர்கள் வீரச் செயல்கள், புராண கால சோழ மன்னர்கள் மனு நீதிச் சோழன், இல்ஷ்வாகு, முககுந்தன், வளபா, சிபி சோழன், இராஜசேரி, பரகேசரி, சுரகுரு, வியாகரகேது, பஞ்சப சோழ மன்னர்கள் பட்டியல் பற்றிய செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. சங்ககால சோழ மன்னர்கள் வரிசையில் கரிகாலன், கோச்செங்கண்ணான், கோக்கிள்ளியின் வழி வந்த விஜயாலயன், அவன் மகன் ஆதித்யன், அவன் மகன் பராந்தகன், அவன் மகன்கள் இராஜாதித்யன், கண்டராதித்யன் மற்றும் அரிஞ்சயன், அரிஞ்சயன் மகன் இரண்டாம் பராந்தகன், அவன் மகன் ஆதித்யன், அவனுக்கு அடுத்து கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் ஆட்சி செய்தான் என்று கூறி அவனையடுத்து பராந்தகனின் மகன் முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தான் என்ற செய்தியைக் குறிப்பிடுகின்றது இச்செப்பேடு. சோழர் குலத்தின் தலைமுறை வரிசையைப் பதிந்து வைத்த ஆவணமாக இந்தச் செப்பேடு விளங்குகின்றது. இந்த அறியச் செப்பேடு தமிழகத்தில் போற்றிப் பாதுகாக்கப்படாமல் நெதர்லாந்தின் லைடன் வரலாற்று நகரத்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் கண்ணாடிப் பேழைக்குள் இருப்பது தமிழர்களுக்கு ஒரு வகையில் தாழ்வு என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டியுள்ளது. இத்தகைய அரும்பொருட்கள் தமிழகத்தில் அல்லவா போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். இதனைத் தக்கோர் யோசிப்பார்கள் என்று கருதுகிறேன்.


சோழற்காலத்தைய பெரும்பாலான செப்பேடுகள் பிராமணர்களுக்கு பிரமதேயமாக (இலவசமாக) நிலங்கள் வழங்கியமையும் தானங்கள் வழங்கியமையும் குறிப்பிடுகின்றன. உதயேந்திரம் செப்பேடு முதலாம் பராந்தக சோழன் காலத்தினது. இது தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருதப்பகுதி கிரந்தத்தில் எழுதப்பட்டு, தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. இது சங்க காலத்துச் சோழ மன்னர் பட்டியலைத் தருகிறது. அதோடு பராந்தகனின் சிற்றரசனான கங்க மன்னன் இரண்டாம் பிருதிவியின் முன்னோர் வரிசையையும் குறிப்பிடுகிறது. அதோடு பராந்தகன் தன் பெயரால் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பிரமதேய கொடைகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அதோடு தனது ஆட்சியின் போதிருந்த நாட்டு எல்லையைக் குறிப்பிடுவதோடு பிரமதேயமாக்கப்பட்ட நிலப்பகுதிகளை விவரிப்பதாகவும் இது அமைகின்றது.

இதேபோல சுந்தர சோழன் காலத்து செப்பேடான அன்பில் செப்பேடு,  அன்பிலைச் சேர்ந்த நாராயண அநிருத்த பிரம்மாதிராஜர் என்பவருக்கு திருவழுந்தூர் நாட்டில் உள்ள நன்முழான்குடி என்னும் ஊரைச் சேர்ந்த நிலங்களை ஏகபோக பிரமதேயக இராஜகேசரி சுந்தர சோழன் அளித்ததைத் தெரிவிக்கிறது. இது பிராமணர்களின் சுய பயன்பாட்டிற்காக இந்த நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட வரலாற்றுச் செய்திகளை பதியும் செப்பேடாக அமைகின்றது.

இத்தகைய செப்பேடுகள், சோழர் காலத்தில் பிராமண குலத்தோர் சோழ மன்னர்களின் மிக உயர்ந்தனிலையிலான ஆதரவைப் பெற்று வாழ்ந்தமைக்கானச் சான்றாகவும், பிராமணர்கள் சோழர் ஆட்சியில் நிலங்கள் பெற்று வளமுடன் வாழ்ந்து வந்த வரலாற்றுச் சிய்திகளை இன்று நாம் அறியக்கூடிய சான்றுகளாகவும் அமைகின்றன.

முதலாம் ராஜேந்திரன் காலத்துக் கரந்தை செப்பேடு இதேபோல தமது தாயின் பெயரில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் அக்கிரகாரத்தை தனது 8ம் ஆட்சியாண்டில் அமைத்துத் தந்த செய்தியைப் பகர்கின்றது. அத்தோடு இராஜராஜனுக்கு மகனாக மதுராந்தகன் பிறந்தான் என்ற செய்தியையும், (மதுராந்தகன்) இராஜேந்திரனின் நட்பைப் பெறுவதற்காக அன்றைய கம்போடிய மன்னன் தனது நாட்டிலிருந்து ஒரு தேரை அனுப்பி வைத்தான் என்ற செய்தியையும், அதன் துணையுடன் இராஜேந்திரன் தன் எதிரிகளைப் போரில் வெற்றி கொண்டான் என்ற செய்தியையும் தெரிவிக்கின்றது. அதோடு சக்கரக் கோட்டத்து மன்னன் தன் ஆட்சியைப் பாதுகாக்கும் பொருட்டு பல யானைகளைப் பரிசாக இராஜேந்திரனுக்கு அனுப்பி வைத்த செய்தியையும் இச்செப்பேடு குறிப்பிடுகின்றது.

இப்படி மன்னர் குல செய்திகளையும் அவர்களது வீரச் செய்லகளையும் அவர்கள் யாரையெல்லாம் கொடையளித்து ஆதரித்து வந்தனர் என்ற செய்திகளையும், அயல்நாட்டு தொடர்புகளையும், தங்களுடன் தொடர்பு கொண்டிருந்த சிற்றரசர்களைப் பற்றியுமான அத்தகவல்களை செப்பேடுகள் வழங்குகின்றன. அதே வேளை, பொருள்படைத்தோரது தானங்களை விளக்கும் செப்பேடுகளும் உள்ளன. சிற்றரசர்களின் செப்பேடுகளும் காணக்கிடைக்கின்றன. அத்தகைய ஒரு செப்பேடுதான் முனைவர். வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் மீட்டெடுத்து வாசித்தளித்த கிழவன் சேதுபதி செப்பேடு. இது போன்ற செப்பேடுகளைத் தேடி அவற்றை அடையாளம் கண்டு அதில் உள்ள வாசகங்களை வாசித்து அவற்றை ஆய்வுக்கட்டுரைகளாகவும் நூலாகவும் வெளியிடும் போது தமிழர் வாழ்வியல், வரலாற்று, சமூக நிகழ்வுகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை நாம் நிச்சயம் பெற முடியும். அத்தகைய தேடல் முயற்சிகளில் நாம் கவனம் செலுத்திச் செயல்படுவோம்.






Thursday, February 8, 2018

82. பதிப்புலகில் சி.வை.தாமோதரம்பிள்ளை





சுவடிப்பதிப்பியல் என்பது எளிதானதொரு காரியம் அல்ல என்பது தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் ஈடுபட்டோருக்கு நிச்சயமாகத் தெரியும். ஒரு ஓலைச்சுவடியை எடுத்தோம், அதனை அப்படியே அதில் உள்ள எழுத்துக்களை அச்சுக்கோர்த்து நூலாகக் கொண்டு வந்தோம் என்பது தான் அச்சுப் பதிப்பாக்கம் என யாரேனும் நினைத்தால் அது ஒரு கற்பனை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் சுவடி நூலிலிருந்து அச்சுப்பதிப்பாக்கமாகக் கொண்டுவருவதென்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாம் புரிந்து கொண்டால் தான், ஒரு நூலை ஒரு பதிப்பாசிரியரால் சரியான முறையில் அதனை அச்சு மொழிக்குப் பெயர்த்து மாற்றிக் கொண்டு வர இயலும். 

எனது கடந்த பதினெட்டு ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்க முயற்சியில் ஏராளமான ஓலைச்சுவடி நூல்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. பொதுவாகவே ஓலைச்சுவடி எனச் சொன்னவுடன் கேட்போரின் எதிர்பார்ப்பு என்பது, அது சோதிட சுவடியா என்பதாகத் தான் இருக்கும். ஏனெனில் ஓலைச்சுவடி என்றாலே அது சோதிடத்தைப் பற்றித்தான் சொல்லும் என்ற பிழையான கருத்து ஒன்று மிக விரிவாக நம் தமிழ்ச்சூழலில் இருக்கின்றது. நமது சூழலில் பொதுவாகவே மந்திரம். மாயம், சோதிடம், திடீர் அதிசயம் என்பதில் தான் மக்களுக்குப் பெருமளவு ஆர்வமும் ஈர்ப்பும் இருக்கின்றதே தவிர, ஆராய்ச்சிப் பூர்வமான செய்திகளிலோ அல்லது சுயசிந்தனையோடு கூடிய செயல்பாடுகளிலோ நாட்டம் என்பது மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றது. இதனால் தான் ’வானத்தில் சிவனும் பார்வதியும் தெரிகின்றார்கள்’ என யாராவது சொன்னால் நம்பிவிடுவதும், ’கர்த்தர் பக்க வாதம் வந்தவர்களை அவர்கள் கிருத்துவ மதம் மாறி நம்பிக்கை கொண்டால் அவர்கள் எழுந்து நடமாடுவார்கள்’ என்று சொன்னால் நம்பி விடுவதும், இந்தச் சாமியாரிடம் சென்றால் பிள்ளை வரம் கிடைக்கும் என நம்பிச் சென்று பின் ஏமாந்துபோய் திரும்பி வந்து அழுது புலம்புவதும் தொடர்கின்றது. 

சுவடி நூல்கள் என்றால் என்ன? 
சுவடி நூல்களில் என்ன தான் இருக்கின்றன? 
இப்படியான கேள்விகள் எழுவோருக்காக சில அடிப்படை செய்திகளை வழங்க வேண்டியதும் அவசியமாகின்றது. அதோடு சுவடி பதிப்பாக்கத்தில் சிறந்த பங்களிப்பு வழங்கியோரைப் பற்றி விளக்கம் தருவதும் அவசியமாகின்றது. 

அச்சு இயந்திரம் கி.பி.14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குட்டன்பெர்க் என்ற ஜெமானியரால் கண்டுபிடிக்கப்படும் வரை, உலகின் எல்லா பகுதிகளிலும் இலக்கியங்களையும். மருத்துவக் குறிப்புக்களையும், வானியல் சாத்திரங்களையும், பாடல்களையும் இலக்கணங்களையும், ஓவியங்களையும், கணிதக் குறிப்புக்களையும். வர்த்தகச் செய்திகளையும் ஏதாவது ஒரு வகையில் பதிந்து வைத்துப் பாதுகாக்கப்படும் முயற்சிகள் நிகழ்ந்தன. சீனாவில் பட்டுத்துணியில் எழுதி வைக்கும் கலை பன்னெடுங்காலமாக இருந்தது. எகிப்திலும் கிரேக்க, ரோமானிய நாகரிகங்களிலும் பாப்பிரஸ் தாளிலும் பாறைகளில் கல்வெட்டுக்களாகப் பொறிக்கும் வழக்கமும் இருந்தது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பனை ஓலைகளைத் தயார் செய்து அவற்றில் எழுத்தாணி கொண்டு எழுதி வைப்பதும், கல்வெட்டுக்களைக் கீறி அவற்றில் செய்திகளைக் கல்வெட்டுக்களாகப் பொறிப்பதும் வழக்கமாக இருந்தது. இப்படிப் பனை ஓலைகளில் தான் தமிழ் மக்களின் பெருவாரியான சிந்தனைக்களஞ்சியம் பதியப்பட்டு வழிவழியாக அவை படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. 

இன்று நமக்குக் கிடைக்கின்ற பனை ஓலைச்சுவடிகள் பலதரப்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில 
  • இலக்கிய இலக்கண நூல்கள் 
  • மனிதர்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், உடற்கூறு அறிவியல் 
  • வான சாத்திரம் 
  • கட்டிடம், வீடு கட்டும் சாத்திரம் 
  • அடிமைகள் வாங்கி விற்பது பற்றிய தகவல்கள் 
  • கோயில் பராமரிப்பு பற்றிய ஆவணங்கள் 
  • நில மேலாண்மை ஆவணங்கள் 
  • விலங்குகள், பறவைகளுக்கான மருத்துவக் குறிப்புக்கள் 
  • கப்பல் கட்டும் சாத்திரம் 
  • சோதிடம் 
  • நாட்டுப்புறப் பாடல்கள் 
  • ஓவியங்கள் 
  • கணிதக்குறிப்புக்கள் 
  • சமய தத்துவ, தோத்திர நூல்கள் 
  • தலபுராணங்கள் 
என்று வகைப்படுகின்றன.

அச்சு இயந்திரம் தமிழகத்தில் 16ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் தமிழில் வெளியிடப்பட்ட அச்சு நூல் தம்பிரான் வணக்கம் என்னும் கிருத்துவ மறை நூலாகும். இதனைப் போர்த்துக்கீசிய பாதிரியார் ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளார், தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு, அச்சுக்கட்டைகளை உள்ளூர் மக்களின் உதவியுடன் தயாரித்து உருவாக்கினார். இன்று கிடைக்கக்கூடிய இந்த நூலில் ஒரே ஒரு படிவம்  ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இந்தியாவிலேயே வேறெந்த மொழிகளிலும் அல்லாது,  முதன் முதலில் தமிழ் மொழியில் தான் அச்சு இயந்திரம் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நூல் வெளிவந்தது.

படிப்படியாகத் தமிழகம் வந்த ஐரோப்பியர் பலர் அச்சுப்பதிப்புப் பணியில் ஈடுபட்டு தமிழ் நூல்களை அச்சிடும் பணியை மேற்கொண்டனர். கி.பி.18ம் நூற்றாண்டு தொடங்கி அச்சுக்கலை தமிழகத்தில் வளர்ச்சியடையத்தொடங்கியது. 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தமிழ் பழம் நூல்களின் அச்சுப்பதிப்புப் பணியில் முன்னோடிகளாகத் திகழ்ந்தோரில் ஐரோப்பியர் சிலரை குறிப்பிட வேண்டும். குறிப்பாக கொண்ஸ்டாண்டின் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர், திருக்குறளை ஜெர்மானிய மொழிக்கு மொழி பெயர்த்த ஃப்ரெடெரிக் காமெரர், மற்றும் எல்லிஸ் ஆகியோரை நாம் மறக்கவியலாது. இவர்களை அடுத்து தொடர்ச்சியாக திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் போன்றோர் மிகச் சிறந்த பதிப்புப் பணியாற்றியிருக்கின்றார். அவருக்கு உதவியாக இருந்து பின்னர் அவருக்குப் பின் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்பாக்கப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். இவர் உ.வே.சாமிநாதையருக்கு முன் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்புப் பணியை இலங்கையில் தொடங்கி பின்னர் இப்பணிக்காகத் தமிழகம் வந்து தங்கியிருந்து அச்சுப்பதிப்புப் பணியில் தம் வாழ்நாளைச் செலவிட்டவர். 


அடிப்படையில் சட்டக் கல்வி முடித்து நீதிபதியாகத் தொழில்புரிந்தவர் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். தமிழ் நூற்கள் அச்சுப்பதிப்புப் பணியில் அவர் 1854 ஆம் ஆண்டில் ஈடுபடத் தொடங்கினார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1849-ஆம் ஆண்டில் அச்சுப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு வரும் போதே இவரும் அவருடன் இணைந்து தமிழ் நூற்கள் பதிப்பிக்கும் துறையில் செயல்பட்டார். 

இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் பதினொன்று. அவற்றுள் இலக்கண நூல்கள் ஏழு. இலக்கிய நூல்கள் நான்கு. இலக்கண நூல்களின் பட்டியலில் வருபவை:
  • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையருரை (1868) 
  • வீரசோழியம் - மூலமும் பெருந்தேவனார் உரையும் (1881) 
  • இறையனார் அகப்பொருள் - நக்கீரருரை (1883) 
  • தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை , 3 பகுதிகள் (1885) 
  • இலக்கண விளக்கம் - (1889) 
  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரை (1891) 
  • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் , நச்சினார்க்கினியருரை (1892) 

இலக்கிய நூல்களின் பட்டியலில் வருபவை 
  • நீதிநெறிவிளக்கம் - (1854) 
  • தணிகைப்புராணம் - (1883) 
  • கலித்தொகை - நச்சினார்க்கினியருரை (1887) 
  • சூளாமணி (மூலம் மட்டும்) (1889) 


பதிப்புத்துறையில் 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியை ஆறுமுகநாவலர் காலம் என்றும், நாவலரையடுத்து 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியை சி.வை.தாமோதரம்பிள்ளையின் காலம் என்றும் அதனைத் தொடர்ந்து 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தை சாமிநாதையர் காலம் என்றும் குறிப்பிடுகின்றார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. 

இத்தனை பெருமைகள் கொண்ட யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் வரலாற்றை அறிந்து கொள்வது இக்காலத் தலைமுறையினருக்குப் பயனளிக்கும். 

இலங்கைத்தீவின் வடக்கில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரான சிறுப்பிட்டி யில் இவர் 12.9.1832ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் வைரவநாதர், பெருந்தேவியார் என்பதாகும். இவருக்கு ஆறு தம்பிகளும் இருந்தனர். தந்தையார் வைரவநாதர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆக தொடக்கக்கல்வியை தம் தந்தையிடமே இவர் கற்றார். பின்னர் தெல்லியம்பதி அமெரிக்கன் மிசன் கலாசாலையில் பயின்று அதன் பின்னர் யாழ்ப்பாண வட்டுக்கோட்டை பலகலைக்கல்லூரியிலும் கணிதம், தத்துவம், வானவியல் ஆகியன கற்றார். பின்னர் தமிழகத்தின் சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட பி.ஏ. வகுப்பிற்கான தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். பி.ஏ பட்டம் பெற்று பின்னர் சட்டக் கல்வி பயின்று அதிலும் தேர்ச்சி பெற்றார். 

தனது கல்வியை முடித்து முதலில் யாழ்ப்பாண கோப்பாய் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியரானார். அத்துடன் தினவர்த்தமானி என்ற வார இதழுக்கு துணையாசிரியராக பணியாற்றினார். தமிழகத்தின் சென்னையில் இவருக்கு வரவு செலவு கணக்குத் துறையில் அலுவலகர் பணி கிடைத்தது. அப்பதவி வகித்தபோதுதான் சட்டக் கல்வி பயின்று 1871ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமது ஐம்பதாம் அகவையில் பதவி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் கும்பகோணம் பகுதிக்கு மாற்றலானார். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இடையில் பல நூல்களை அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டு வரும் பணியையும் மேற்கொண்டு வந்தார். 1887ம் ஆண்டு புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவர்களில் ஒருவராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நான்காண்டுகள் இப்பணியையும் இவர் ஆற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழக பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும், தேர்வுத் திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராகவும் சேவையாற்றினார். இவர் 1901ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் காலை இயற்கை எய்தினார். 

சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏடு தேடி பயணித்துப் பல சுவடி நூல்களை வாங்கி ஆராய்ந்து அவற்றை அச்சுப்பதிப்பாகப் பதிப்பிக்கும் பணியைச் செய்தவர். இவரது பணிகளை அறிந்த அன்றைய அரசு அவருக்கு ’இராவ் பகதூர்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளி த்து கவுரவித்தது. 

தமிழுலகில் அச்சுப்பதிப்பக்கத்திற்குச் சேவையாற்றியோரில் இன்று நாம் அறிந்த உ.வே.சாமிநாதையர், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், வ.உ.சிதம்பரனார், வடலூர் வள்ளலார், புதுவை நயனப்ப முதலியார், மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முகவை இராமானுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை க.சரவணப் பெருமாளையர், திருவேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எஸ். சபாபதி முதலியார் போன்று சிறப்பித்துக் கூறப்படவேண்டியார்களின் பட்டியலில் இடம் பெறும் சிறப்பு, ’பதிப்புச் செம்மல் சி.வை.தா” என அன்புடன் அழைக்கப்படும்  சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களுக்குமுண்டு. வாழ்க தமிழ் !