Thursday, September 29, 2016

30.அகதி நிலை





ஜெர்மனிக்கு வந்த புதிதில் நான் அறிந்து கொண்ட தமிழ் நண்பர்களின் வழியாக இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகள் அதிலும் பிரத்தியேகமாக இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸர்லாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களின் கதைகளைக் கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நான் சந்தித்து நட்பு உருவாக்கிக் கொண்ட இலங்கைத் தமிழ் நண்பர்களில் சிலரது கதையைக் கேட்டு “இப்படியும் வாழ்க்கை அமையக்கூடிய நிலை இருக்கின்றதா” என அதிர்ந்து நின்றதுண்டு. இலங்கைத் தமிழர் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருபவர்களின் கதைகள் பல சோதனைகள் நிறைந்தவை.

பொதுவாக அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கள் தாய்நாட்டில் தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள வழியின்றி புகலிடம் தேடி வருபவர்களாக அமைகின்றனர். தங்கள் தாய்மண்ணை விட்டு அங்கு நிலவும் பிரச்சனை மிகுந்த  சூழலிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் விடுவித்துக் கொண்டு உலகின் ஏதோ ஓர் மூலையில் தன் வாழ்நாளின் மிச்ச நாட்களைக் கழிக்க வருவோர் அதிகம். இப்படி தன் நாட்டை விட்டு வருவோரில் தனியாக வருவோரும் உண்டு. குடும்பத்தாரோடும் குழந்தைகளோடும் வருவோரும் உண்டு.  இவர்கள் கடல் வழியாகவும் நில வழியாகவும் பல இன்னல்களைத் தாண்டி ஐரோப்பாவில் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் நாடுகளுக்கு வருகின்றனர். இப்படி வரும் பொழுது பல கொடூரமான அசம்பாவிதங்களும் நிகழ்வதை செய்தி ஊடகங்களின் வழி அறிகின்றோம்.  நில மார்க்கமான பயணத்தில் ஏற்படும் இன்னல்கள் ஒரு வகை; கடல்மார்க்கமாக வரும் போது ஏற்படும் இன்னல்கள் மற்றொரு வகை. கடல்பயணங்களின் போது தாங்கள் பயணித்து வரும் படகு கடலில் மூழ்கி உடைந்து உயிரிழப்போரும் உண்டு.  உதாரணத்திற்கு 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி   ஆப்பிரிக்க அகதிகள் 500 பேரை ஏற்றிக் கொண்டு பயணித்து இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்த படகு ஒன்று நெருப்புப் பிடித்து உடைந்து மூழ்கியது. அதில் பயணித்த நூற்று முப்பதுக்கும்  மேலானோர் இறந்தனர் என்ற செய்தியை பலரும் செய்தி ஊடகங்கள் வழி கேல்விப்பட்டிருப்போம்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குப் புலம்பெயர்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை தரத்தில் உயர்வைக் காணவும், பொருளாதார நிலையில் மேன்மை அடையவும் வருபவர்களாக அமைகின்றனர். அந்த வகையில் கிழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடுகளான ரோமானியா, பல்கேரியா ஆகிய நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளைச் சொல்லலாம். உள்ளூரில் நிலவும் வேலையில்லா நிலையும், வருமையும், குடும்பச் சூழலும் பலர் அகதி அந்தஸ்து வேண்டி ஜெர்மனிக்கு வரக் காரணமாக இருக்கின்றது. இப்படி வருவோரால் ஜெர்மனியில் ஏற்படும் பல சமூக மாற்றங்களை உள்ளூரில் மக்கள் பொதுவாக விரும்புவதில்லை என்ற போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில தேவைகளை மனதில் வைத்து ஜெர்மனி உள்ளூரில் இவர்களுக்கு வேலை, குழந்தைகளுக்கான செலவுப் பணம் என தொடர்ந்து வழங்கி வருவதும் குறைப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயமாகின்றது. ஒரு குழந்தைக்கு மாதம் 190 யூரோ செலவுத்தொகை என்பது ஜெர்மனியில் குறைந்த தொகை என்றாலும் ரோமானியா பல்கேரியா ஆகிய நாடுகளில் இது பெரியதொரு தொகையாக அமைவதால் வேலையில்லாமலும் ஜெர்மனிக்கு வந்தால் வாழலாம் என்ற மனப்போக்கை இவர்களுக்கு ஏற்படுத்தத் தவரவில்லை. இதனை உணர்ந்த அரசு இதனை சற்று மாற்றி ”இப்படி வேலை தேடி அகதி அந்தஸ்து கோருபவர்கள் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவரவர் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவர்” என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் நடந்த இனப்போர் நிமித்தம் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழரில் கணிசமான என்ணிக்கையினர் ஜெர்மனியில் இருக்கின்றனர்.  இவர்களில் ஒரு சிலரது பயணம் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத பயணமாக அமைந்து போவதை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
எனது நல்ல நண்பர் ஒருவர். அவர் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்து அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு இப்போது ஜெர்மானியப் பெண்மனியை மணந்து நன்கு வாழ்கின்றார். அவரது பயணம் வித்தியாசமானது. இலங்கையிலிருந்து புறப்பட்டு கடல் வழியாக இந்தியா வந்து பின்னர் பஸ், ரயில் என பயணித்து, அங்கிருந்து பாக்கிஸ்தான் சென்று பின்னர் ஆப்கானிஸ்தான் சென்று அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து பின்னர் உஸ்பெக்கிஸ்தான் சென்றிருக்கின்றார். அங்கு சில காலம் பணிபுரிந்து விட்டு அங்கிருந்து கஸகிஸ்தான் வந்து பின்னர் ரஷ்யாவில சில மாதங்கள் ஒளிந்திருந்து பின்னர் உக்ரேயின் வழியாக போலந்து வந்து அங்கிருக்கும் போலந்து எல்லையின் வழியாக ஜெர்மனிக்குள் வந்து சேர்ந்தவர். போலந்திலிருந்து வருகின்ற ஒரு விற்பனை பொருள் ஏற்றிச் செல்லும் லாரியில் பயணித்து ஜெர்மனி எல்லைக் காவலர்களை ஏமாற்றி விட்டு ஜெர்ம்னியின் தலைநகர் பெர்லினுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார். இந்தப் பயணம் இரண்டாண்டுகள் எடுத்ததாம். கேட்பதற்கு மிக அட்வெஞ்சரஸாக இருந்தாலும் இந்த இரண்டாண்டு காலத்தில் உணவுக்காகவும், உடைக்காகவும், தங்கும் வசதிக்காவும் இவர் அனுபவித்த இன்னல்கள் சிறிதல்ல.

இதே போல ஒரு இலங்கைத் தமிழ் பெண்மணிஒருவர். கொழும்பில் விமானமேறி வட இந்தியா  வந்து அங்கிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட அவரது பயணம் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் ஏஜெண்டுகள்.  ஆனால் வட இந்தியாவில் போலீஸாரிடம் கைதாகி சில காலங்கள் சிறையில் இருந்து பின்னர் மீண்டும் தன் பயணத்தை இவர் தொடங்கியிருக்கின்றார். இந்த இடைப்பட்ட பிரச்சனைகளினால் ஏற்பாட்டில் மாற்றம் ஏற்பட, விடுதலை ஆன பின்னர் ஜெர்மனிக்கு விமானத்தில் இல்லாமல் அவரை இத்தாலிக்கு கப்பலில் அனுப்ப ஏஜென்சி முடிவு செய்து அனுப்பியிருக்கின்றது. இடையில் இலங்கைத் தமிழ் ஏஜெண்சி ஆட்களினாலேயே பாலியல் வல்லுறவு கொடுமைகளை அனுபவித்து விட்டுத்தான் இத்தாலிக்கு கப்பல் ஏறியிருக்கின்றார். கப்பலில் திருட்டுத்தனமான பயணம் என்பதால் பயணம் முழுக்க குறைந்த உணவும் சிரமங்களும் அனுபவித்து இத்தாலி வந்து சேர்ந்திருக்கின்றார். இத்தாலியிலிருந்து ஏஜென்சியின் மூலமாக லாரியில் மறைத்து வைத்து பின்னர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டவர் இவர். இப்போது தனது உறவினருடன் திருமணமாகி குழந்தைகளுடன் நலமாக இருக்கின்றார்.

இன்னொரு இலங்கைத் தமிழ் நண்பர் இப்படி இலங்கையிலிருந்து தப்பித்து பயணித்து வரும் வேளையில் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து பய்ணித்து வந்த லாரியில் இருந்த அமிலங்கள் உடைந்து கொட்டியதால் உடல் முழுக்க வெந்து புண்ணாகி இன்றும் அந்த வடுக்கள் மாறாத நிலையிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்கின்றார்.

ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தொகுத்து வைக்க வேண்டியது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு பற்றிய ஒலிப்பதிவுகளை தொகுக்க ஆரம்பித்தேன்.  . இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி  ஒவ்வொரு மாதமும்  ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும் ஐரோப்பா ”நோக்கிய ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்” ஒலிப்பதிவு செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மாதாந்திர வெளியீடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
திரு குமரன் அவர்கள் ஐரோப்பிய புலம் பெயர் தமிழர்களிடையே மாஸ்டர் குமரன் எனமான்பாக அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணத்தில் தமிழாசிரியராக பணி புரிந்தவர். ஆழ்ந்த இலக்கிய தமிழ் புலமை கொண்டவர் இவர். இப்பதிவுகளில் ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு அலசப் படுகின்றது.  ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கான அகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
 புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் ஈழத்தமிழர்களின் தொழில் நிலை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வு என்ற தலைப்பின் கீழ் வரும் ஒலிப்பதிவுகளின் வழி இப்பேட்டிகளை கேட்டறியலாம்.
அகதி அந்தஸ்து பெற்று தன் வாழ்க்கையை வேறோர் இடத்தில் தொடர தன் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்லும் மனிதர்களின் நிலைகளை பல வேலைகளில் நாம் கவனிப்பதில்லை. நமது இயந்திரத்தனம் வாய்ந்த அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இத்தகைய விஷயங்களை யோசித்துப் பார்ப்பதற்கும் கூட இடமும் இருப்பதில்லை.

உலகில் பல்வேறு காரணங்களுக்காக அதிலும் சமயத்தின் பெயரால்,  சமூகத்தின் பெயரால் நடக்கின்ற செயல்களால் இன்னமும் பல நாடுகளில் மனிதர்கள் தங்கள் அடிப்படை வாழ்க்கையைக் கூட வாழ முடியாத நிலையில் வாழ்க்கை அமைந்திருக்கின்றது. இப்படி அமைந்துள்ள அரசியல் சூழல்களை நோக்கும் போது சுயநலமே பெரும்பாலான வேலைகளில் இத்தகைய சமூக இன்னல்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் உண்மையைக் மறுக்க முடியாது.  இன்னொரு ஜீவனின் மகிழ்ச்சியும் நம் மனதில் மகிழ்ச்சி உருவாக்கக் காரணமானால் நம் மனதில் இறைமையை உணரலாம். சுயநலம் போக்கி பிற ஜீவனின் உள்ளத்திலும் மகிழ்ச்சியைக் கண்டு அந்த மகிழ்ச்சியில் மனம் மகிழும் நற்குணத்தை அடைவதே மனிதகுலம் செழிக்க நல் வகை செய்யும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து செயல்படுத்துவோமே.

Thursday, September 22, 2016

29. ராஜா பள்ளிக்கூடம்



நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத  ஒரு அனுபவம் இருக்கின்றதென்றால் அது நமது இளமைக்கால பள்ளி அனுபவம் தான். இளம் வயதில் பள்ளிக்கூடத்தில் நாம் சந்திக்கும் ஆசிரியர், நம்மோடு கூடி விளையாடும் சக மாணவ மாணவியர், பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என நமது மனதின் ஆழத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆழமாகப் பதிந்திருப்பதை நாம் ஒவ்வொருவரும் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட நினைவு கூர்ந்து மகிழ்வதை அவ்வப்போது செய்கின்றோம் அல்லவா?

இன்றைய பள்ளிக்கூட அமைப்பு முறைகளைப் பற்றி அறிந்த நம்மில் பலருக்குப் பண்டைய கல்வி முறை பற்றிய அனுபவ அறிவு என்பது மிகக் குறைவே. நம் வீடுகளில் இருக்கும் பெரியோர்களைக் கேட்டால் இன்றைக்கு அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பள்ளிக்கூட அமைப்பு, ஆசிரியர்களின் உடை அலங்காரம், மாணவ மாணவியரின் உடைத்தோற்றம், கல்விக்கூடங்களில் இருந்த அமல்படுத்தப்பட்ட சட்ட வரையறைகள் ஆகியன பற்றி பல தகவல்களைத் தருவார்கள். அவை அனைத்துமே இப்படியா பள்ளிக்கூடங்களில் கல்வி முறை அமைந்திருந்தன என நம்மை வியக்க வைப்பதாய் அமைந்திருப்பதை உணர்வோம்.


2009ம் ஆண்டில் நான் எட்டயபுரத்திற்கு இரண்டு நாட்கள் தமி
​ழ்​ மரபு அறக்கட்டளைப் பணிக்காகச் சென்றிருந்தேன். என்னுடன் களப்பணியில் இணைந்து கொள்ள மதுரையிலிருந்து தமிழாசிரியர் திரு.கருணாகரன் அவர்​களு ​ம் வந்திருந்தார். அவர் எட்டயபுரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். எட்டயபுர ஜமீந்தார் ஆரம்பித்த ராஜா  பள்ளிக்கூடத்தில் படித்தவர்களில் ஒருவர். என்னை அந்தப்பயணத்தில் ராஜா பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று அதன் வரலாற்று தகவல்களை வழங்குவதற்காக அவர் வந்திருந்தார்.

எனது அந்தப் பயணத்தில் நான் எட்டயபுரத்தில் திருமதி.
​​சாவித்திரி அவர்கள் இல்லத்தில் தங்கியிருக்க ஏற்பாடாகியிருந்தது.  திருமதி ​​சாவித்திரி  பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இவரது கணவர் மறைந்த திரு.துரைராஜ் ஆசிரியர். திரு.துரைராஜ்,  அவர் வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் இருந்த பாரதி அன்பர்களை ஒருங்கினைத்து செயல்பட்டவர். எட்டயபுரம் அரண்மனையுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். எட்டயபுர ஜமீன் வம்சத்தில் மூத்த மகனான திரு.துரை பாண்டியன் அவர்களின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். சிறந்த பேச்சாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்தவர். அதிலும் குறிப்பாக திரு.சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றங்களில் பேசியிருக்கின்றார். திரு.துரைராஜ் அவர்கள் உசிலம்பட்டி கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியிருக்கின்றார்.  மாணவர்கள் கல்வி வளர்ச்சியின் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்று கொண்ட இவர் தனது சேகரிப்பில் இருந்த நூல்கள் அனைத்தையும் எட்டயபுரத்தில் உள்ள ரகுநாதன் நூலகத்திற்குக் கொடையாக வழங்கியிருக்கின்றார்.  திருமதி.சாவித்ரியின் சகோதரர் திரு.பாஸ்கர தொண்டைமான் அவர்கள்.  அவர் ஒரு  தமிழ் தொண்டாளர். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.  பற்பல கவிதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும்,  நூல்களையும் எழுதியிருக்கின்றார். இவரது இளைய சகோதரர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் பாரதி - காலமும் கருத்தும் என்னும் நூலை எழுதியவர். அமரர்.ஜீவாவுக்குப் பிறகு கலை இலக்கிய பெறுமன்றத்தின் தலைவராக தொண்டாற்றியவர். எட்டயபுரத்தில் "ரகுநாதர் நூல் நிலையம் - பாரதி ஆய்வு மையம்" அமைய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்​ இவர்​.

 தனது கணவர், சகோதரர் போன்று மிகுந்த தமிழார்வம் கொண்டவர் திருமதி.சாவித்ரி. சில ஆண்டுகள் காந்தி கிராமத்தில் ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கின்றார்.  இவரது மகள் செல்வி.கிருஷ்ணவேணி அவர்கள். அங்கேயே படித்து பின்னர் பட்டம் பெற்று தற்சமயம் எட்டயபுரத்தில் உள்ள ராஜா உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக
​ப்​ பணி புரிந்து வருகின்றார்.

நம்மில் சிலர் ஏட்டுப் பள்ளிக்கூடம் என்ற ஒன்றினைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  என்னளவில் ஏட்டுப் பள்ளிக்கூடம் என்ற சொல்லை எப்போதோ கேட்டிருக்கின்றேன். அதனை பற்றிய ஒரு சுவாரசியமான உரையாடலை திரு.கருணாகரபாண்டியன், செல்வி.கிருஷ்ணவேணீ மூலமாக மேலும் தெரிந்து கொள்ள முடிந்ததில் எனக்கு ​ மகிழ்ச்சியே. அக்காலத்தில், அதாவது அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில்  ஒரே ஒரு பள்ளிக்கூடம் மாத்திரம் இருக்குமாம். அந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் இருப்பார்களாம். கிராமத்திலுள்ள குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்வதில்லை. அக்காலத்தில், ​நம் ​தமிழ்ச்சமூகத்தில் இருக்கும் சாதி என்னும் பிரிவினைக் கொடுமையினால் சிலர் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை  என்பதும் ஒரு முக்கிய விசயம் தான். இதனால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவே. ஆக ஒரு ஆசிரியரே பல மாணவர்களுக்கு போதிக்கும் நிலை என்பது அன்று இருந்திருக்கின்றது.

திரு.கருணாகரபாண்டியனின் கல்வி அனுபவம் சுவாரசியமானது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது இளம் பிராயத்தில் கணக்கு ஆசிரியரின் பாட போதனையை நினைவு கூர்ந்தார்.

ஒரு கால் கால்
இரு கால் அறை
மூன்று கால் முக்கால்
நாலு கால் ஒன்று
என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டே செல்வாராம்.  மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைத் தொடர்ந்து மீண்டும் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டுமாம். மீண்டும் மீண்டும் இது தொடருமாம். இப்படியே மனப்பாடம் செய்து படிப்பார்களாம் மாணவர்கள். இப்பொழுதும் கூட இவ்வகையான கல்விமுறை நடைமுறையில் இருக்கின்றது.  அதிலும் வாய்விட்டுச் சொல்லி மனனம் செய்வது நீண்ட நாட்கள் ஞாபகத்தில் இருப்பதற்கும் துணை புரியும்.

பள்ளிகளில் எப்போதும் எல்லா மாணவர்களும் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். குறும்புத் தனம் செய்யும் மாணவர்களும் இருக்கத்தானே செய்வர். ஆக மாணவர்கள் குறும்பு செய்தால் தண்டனையும் கிடைக்கும். இவரது ஆசிரியர் வழங்கிய தண்டனை சற்றே வித்தியாசமானது என்று நினைவு கூர்ந்தார். மாணவர்கள் குறும்புத்தனம் செய்தால், தரையில் கிடக்கும் மணலை அள்ளி தொடையில் வைத்து கிள்ளுவாராம் ஆசிரியர். அந்தத் தண்டனை தரும் வலிக்குப் பயந்து இவர்கள் படிப்பார்களாம்.

பள்ளிக்கூடத்திற்கு வரும் புதிய மா​ண​​வருக்கு ஏடு ஒன்றைத் தந்து விடுவார்களாம். பள்ளி நுழைவு என்பது விஜயதசமி அன்று தான் நடைபெறும். ஒரு மாணவருக்கு அன்று தான் கல்வி தொடங்குமாம். பாடம் கற்றுக் கொள்ளச் செல்லும் குழந்தை, ஆசிரியருக்குக் குருதட்சனை செலுத்த வேண்டியது முறையாக கடைபிடிக்கப்பட்டிருக்கின்றது. குருதட்சனையாக  தேங்காய்​,​ பூ​,​ பழம் வைத்து அதனை ஒரு துணியில் சுற்றி கட்டி ஒரு தாம்பளத்தில் வைத்து பெற்றோர்கள் மாணவரின் கையில் கொடுத்து விடுவார்களாம். மாணவர்கள் பள்ளிக்கு அதனை கொண்டு வருவார்களாம். ஆசிரியர் பள்ளியிலுள்ள சரஸ்வதி சிலை மு​ன்​ குருதட்சனையை வைத்து மாணவர்களை ஒவ்வொருவராக தனது மடியில் அமரவைத்து மஞ்சள் அரி​சி​யில் எழுத வைப்பாராம். பின்னர் நாக்கை நீட்ட வைத்து நாக்கில் அரிசியால் ​”​அரி ஓம் நமஹ​”​ என எழுதுவாராம். இப்படித்தான் அக்காலத்தில் ஒரு மாணவரின் வாழ்க்கையில் பள்ளிப் படிப்பு என்பது தொடங்கப்பட்டிருக்கின்றது.

எட்டயபுரத்தில் முதன் முதலாக ஒரு பள்ளிக்கூடத்தை எட்டயபுர ஜமீந்தார் தொடக்கி வைத்திருக்கின்றார். அந்தப் பள்ளிக்கூடத்தின் தற்போதைய பெயர் ராஜா பள்ளிகூடம். இது தற்சமயம் ஆரம்ப நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்ற இரண்டு பிரிவுகளாக ஒரிடத்திலேயே அமைந்திருக்கின்றது.

தமிழக கிராமத்தின் ஏனைய பள்ளிகளைப் போல இந்தப் பள்ளியில் படித்த பலர் இந்தியாவின் பல இடங்களிலும், சிலர் அயல் நாடுகளிலும்  கூட தற்சமயம் நல்ல நிலையில் பணிபுரிந்து வருகின்றனர் என்று இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி.கிருஷ்ணவேணி என்னிடம் தெரிவித்தார். அவ்வப்போது யாராவது சிலர் இந்தப் பள்ளிக்கு வருவார்களாம். இந்த ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்தேன் என்று சொல்லி பள்ளியின் வாசலில் விழுந்து கும்பிட்டு தரையில் கிடக்கும் மண்ணை நெற்றியில் இட்டுக் கொண்டு பள்ளியை மீண்டும் சுற்றிப் பார்த்து விட்டு செல்வதை தனது அனுபவத்திலேயே பார்த்திருப்பதாக செல்வி.கிருஷ்ணவேணி என்னிடம் குறிப்பிட்டார்.

இந்தப் பள்ளிக்குத் தமிழ் நாடு அளவில் மேலும் ஒரு தனிச் சிறப்பும் இருக்கின்றது. அதாவது தமிழ் நாட்டில் அரசாங்கம் திட்டமிட்டு பள்ளியில் மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னரே இந்தப் பள்ளியில் இலவச உணவுத் திட்டம் 1956ல் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்திருக்கின்றது.  இதனை தொடக்கியவர்கள் எட்டயபுர  ஜமீன் குடும்பத்தினர்.


ராஜா பள்ளிக்கூடம் அரண்மணைக்கு பக்கத்திலேயே இருப்பதால் உணவு அரண்மனை சமையலறைப் பகுதியிலேயே தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுமாம். பள்ளி ஆசிரியர்களே ஒவ்வொருவராக முறை எடுத்துக் கொண்டு  மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியைச் செய்வார்களாம்.  இந்தப் பள்ளியில் படித்து இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் கல்லூரியில் தமிழ்  தொண்டு புரிந்து மறைந்த துரைராஜ் அவர்களின் புதல்வி செல்வி.கிருஷ்ணவேணி அவர்களே தற்சமயம் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கின்றார்.

இவரது இல்லத்திலேயே தங்கியிருந்து நான் எட்டயபுர கிராமத்தின் வரலாற்று அம்சங்களைப் பதிவு செய்ய இந்த அம்மையார் எனக்கு மிகவும் உதவினார். இவரது தாயாரின் சகோதரர்கள் தமிழறிஞர் சி.மு.தொட்டைமான், சி.மு.ரகுநாதர் ஆகியோர். இந்த குடும்பத்தினரின் கல்விப்பணி இன்றும் தொடர்கின்றது என்பதை நினைக்கும் போது இவர்களைப் போற்றவே என் மனம் நினைக்கின்றது.

இந்தப் பள்ளி மேலும் மேம்பாடுகளைக் காண வேண்டும். தற்சமயம் இப்பள்ளிக்கூடக் கட்டிடம் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு மண்டபமும் ஆரம்ப நிலைப்பள்ளிக்காக ஒரு பழைய மண்டபமும் ஒதுக்கியிருக்கின்றார்கள். ஆரம்ப நிலை பள்ளியில் ஒரு மூலையில் குழுவாக பத்து பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார். இன்னொரு மூலையில் மேலும் சில குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார். தனி அறைகள் இல்லை.  இந்த மண்டபத்தை சற்று சீரமைக்கலாம். அதன் வழி தனித் தனி அறைகள் அமைத்து மாணவர்களுக்கு நாற்காலி மேசைகள் ஏற்பாடு செய்து படிக்க ஏற்பாடு செய்யலாம். இப்போதும் கூட மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலையில் இருப்பது தமிழகம் முழுதும் கல்விக்கழகங்களுக்கான சீரிய  மேம்பாட்டு நிலையில் அரசாங்கம் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் இருப்பதை உணர்த்துகின்றது.

கல்விக்கூடங்களில் கல்விச் சூழலை உயர்த்தும் போதுதான் மாணவ்ர்களின் கல்வி மேம்பாடு செழுமை பெறும். இதற்காக கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமன்றி, அரசும் தனி நபர்களும் கூட உழைக்கலாம். தமிழ்ப்பணி என்பது எல்லோரும்  இணைந்து செய்ய வேண்டிய ஒன்றே!

Wednesday, September 14, 2016

28. தாய் மொழியைக் கொண்டாடுவோம்



அனைத்துலக தாய்மொழிகளின் தினம் என்பது உலகில் உள்ள எல்லா  மொழிகளையும் அங்கீகரித்து சிறப்பிக்கும் ஒரு நிகழ்வு. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மொழிகளில்  சில மட்டும் உலகில் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற நிலை ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில், ஒவ்வொரு மொழியையும் மதித்துச் சிறப்பித்து அதன் முக்கியத்துவத்தை உணரும் வகையில் மக்கள் மனதில் சிந்தனையை உருவாக்கும் நோக்கத்துடனேயே உலக தாய்மொழிகள் தினம் என்பது கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ எனும் சர்வதேச அமைப்பினால் 1999ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இது அறிவிக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21ம் நாள் உலகமெங்கிலும் உலகத்தாய்மொழிகளின் தினம் கொண்டாடப்படுகின்றது.

இப்படி ஒரு நிகழ்வு நான் வசிக்கின்ற ஜெர்மனி நாட்டின், பாடர்ன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தின் தலைநகரமான ஸ்டுட்கார்ட் நகரில் கடந்த சில ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 2014ம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதிநிதித்து கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

2014ம் ஆண்டில் உலக மொழிகள் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகம் பல மொழிபேசும் மக்களை ஒருங்கிணைத்து மொழிகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வு 22.2.2014, சனிக்கிழமை, ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்றது.

தமிழ் மொழி பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளைச் சார்பாக நான் தயாரித்திருந்தேன். இதில் தமிழ் மொழி பேசப்படும் நாடுகள், அதன் தொண்மை, தமிழ் எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களின் தொண்மை என என் உரை அமைந்திருந்தது.  குறியீடுகளாக உருவாக்கப்பட்டவை பற்றியும்,  பண்டைய  தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் பற்றியும் பின்னர் இந்தத்  தமிழி எழுத்துரு வட்டெழுத்தாகவும் தமிழ் எழுத்தாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றதையும் விளக்கிப் பேசினேன்.   இந்த உரையை ஆங்கிலத்திலும் ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியிலும் வழங்க வேண்டிய நிலை இருந்தது. நிகழ்வில் கலந்து கொண்டோர் பன்மொழி பேசுவோராக அமைந்ததே  இதற்குக் காரணம்.

என்னுடன் இந்த உரை நிகழ்வில்   நண்பர் திரு.யோக புத்ராவும் பங்கெடுத்துக் கொண்டார். நண்பர் யோகா ஸ்டுட்கார்ட் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர். ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டுட்கார்ட் நகரில் வசிப்பவர். SWR எனப்படும் பாடர்ன் உட்டெர்ன்பெர்க் மாநில தொலைக்காட்சி நிருவனத்தில் பணிபுரிபவர்.  ஸ்டுட்கார்ட் நகரில் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல சேவையாளர் என்ற நன்மதிப்பினைப் பெற்ற நண்பர் இவர். ஆக, நாங்கள் இருவருமாக இந்த உரையைத் தயாரித்து எங்களுக்கு வழங்கப்பட்ட  முப்பது நிமிடங்களில் எங்கள் உரையை இந்த நிகழ்வில்  வ்ழங்கினோம்.

நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வுகள் நடக்கும் அறைகளைத் தனித்தனியாக வெவ்வேறு நாட்டு மக்களின்  கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அதோடு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வங்காளதேச நாட்டு மக்களின் கலையைச் சிறப்பிக்கும் ஒரு அறை. அதனால் அந்த அறைக்கு ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் ”மோனோகொல்” என்ற ஒரு அமைப்பு பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தது. அந்த  அறையின் அலங்காரம், வரவேற்பு என அனைத்தும் வங்காள தேச முறைப்படி என ஏற்பாடு செய்திருந்தனர்.

மாலை உணவு வகை அந்த அறையில் வங்காள தேச உணவு என்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது.

தமிழ் மொழி பற்றிய உரையுடன் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நான் என் வீட்டு நூலகத்திலிருந்து தேர்ந்தெடுத்தச் சில நூல்களைக் கொண்டு  சிறிய அளவிலான தமிழ் நூல் கண்காட்சியையும் இதே நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்தேன்.  வந்திருந்தோரில் ஏறக்குறைய அனைவருமே தமிழ் எழுத்துக்களை இது வரை பார்த்திராதவர்களே. ஆகையால் பார்வையாளர்களில் அனைவருமே  நான் காட்சிப் படுத்தியிருந்த நூற்களைப் பார்த்து எழுத்துக்களின் வடிவத்தைப் பார்த்து வியந்து தமிழ் மொழி பற்றி பல கேள்விகள் கேட்டு தகவல் பெற்றுக் கொண்டனர்.

நான் உரையாற்றிய நிகழ்ச்சியை  பாடர்ன் உட்டன்பெர்க் மானில ஆட்சிக்குழுவிலிருந்து வந்திருந்த திரு.ஹெல்முட் ஆல்பெர்க் தொடக்கி வைத்து பேசினார். மொழிகளின் சிறப்பினை வலியுறுத்தும் பொதுவான ஒரு பேச்சாக அது அமைந்தது.

எங்கள் தமிழ் மொழி பற்றிய உரையில் நானும் திரு.யோகாவும் தமிழ் எழுத்துக்கள் அறிமுகம், தமிழ் மொழி பேசப்படும் நாடுகள், அதன் ஆரம்பகால எழுத்து வடிவம், தமிழ் நூல் அச்சு வரலாறு, முதல் தமிழ் நூல், குட்டன்பெர்க் அச்சு இயந்திரம், அச்சுக் கலை வளர்ச்சியில் போர்த்துக்கீஸிய தாக்கம், ஜெர்மானிய பாதிரிமார்களின் தமிழ்-ஜெர்மன் மொழி தொடர்பான செயற்பாடுகள், ஹாலே தமிழ் தொகுப்புக்கள் என பல தகவல்களை வழங்கினோம்.   இது வந்திருந்தோருக்கு புதிய தகவல்களாக அமைந்தன என்பதை அவர்களது கேள்விகள் நிரூபித்தன.

வந்திருந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய திரு. ஆல்பெர்க் அவர்கள், ஜெர்மனியின் ஹாலே தொகுப்புக்களைப் பற்றி தாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும், அதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளதாகவும், பின்னர் தேனீர் நேரத்தில் என்னிடம் குறிப்பிட்டமை மகிழ்ச்சியளிப்பதாக அமைந்தது.

அடிப்படையில் ஒரு எண்ணெய் சோதனைத்துறை எஞ்சீனியரான திரு.ஆல்பெர்க் இந்தோனீசியாவிலும் தாய்லாந்திலும் பல ஆண்டுகள் தொழில் முறையில் கழித்தவர் என்பதும் மலாய் கலாச்சாரமும் மொழியும் ஓரளவு அறிந்தவர் என்பதும் எனக்கு ஆர்வத்தை அளித்தது. எனது தமிழக தொடர்புகள், பயணங்கள், தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகள் பற்றி பின்னர் அதிக நேரம் உரையாடினோம். இது அவருக்கு ஒருமுறை தமிழகம் வந்து கட்டாயம் ஆலயங்களில் உள்ள  கல்வெட்டுக்களைக் காண ஆவலை உருவாக்கியுள்ளது.

எங்கள் உரையோடு அதற்கு பின்னர் ஹங்கேரி நாட்டின் மொழி பற்றி ஒருவர் சிறு விளக்கம் அளித்தார். அதன் பின்னர் வங்காள மொழி பற்றி ”டோய்ச்ச வெல்ல” தொலைகாட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர் ஒருவர் ஆங்கிலம், வங்காளம் என இரு மொழிகளில் உரையாற்றினார்.

அதன் பின்னர் வங்காள மொழி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகச் சிறப்பாகத் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் நிகழ்ச்சியை நடத்தினர். அழகிய சேலைகளில்,  கண் கவரும் அலங்காரத்துடன் பெண்மணிகள் வந்து கலை நிகழ்ச்சியைச் செய்தது மிக அருமையாக அமைந்திருந்தது.

பல இன மக்கள் வாழும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இவ்வகை நிகழ்ச்சிகள் மாறுபட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளையும் மொழி கலாச்சார பண்பாட்டு விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. அருமையானதொரு நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கின்றது


Saturday, September 10, 2016

27. மாமனிதர் வ.உ.சி



தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் என்ற  ஒரு ஊரின் பெயரை 2009ம் ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதில்லை.

2009ம் ஆண்டின் இறுதியில் நான் தமிழகத்தில்  தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக இரண்டு வார பயணம் ஒன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரம் சென்று அங்கிருக்கும் எட்டயபுர ஜமீன் மாளிகையைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவினைத் தயாரிக்க வேண்டும் என்பது அப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அப்பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது   நண்பர்  மாலன் அவர்களை அணுகி  திட்டமிட ஆரம்பித்த வேளையில் எட்டயபுரம் செல்லும் முன், வழியில் ஒட்டப்பிடாரத்தைக் கடந்து சென்றால் அங்கிருக்கும் வ.உ.சி. நினைவு இல்ல அருங்காட்சியகமும் சென்று வரலாம். அது பயணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இதன் அடிப்படியில் இந்த நினைவில்லத்திற்கான எனது பயணம் அமைந்தது.

ஒரு வீடாக இருந்த இந்தக் கட்டிடத்தை  அருங்காட்சியகமாகப் புதிதாக நிர்மாணிக்க திட்டம் எழ,  7.8.1957 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு.கு.காமராஜ் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் முழுமையடைந்த பின்னர்  12.12.1961ல்  அன்றைய முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது.

இந்த நினைவு இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்பது ஒரு இரும்புத் தகட்டில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்களின்  சிறு வாழ்க்கை குறிப்பு செய்திகள்.

வ.உ.சி. அவர்கள், 1872ம் ஆண்டு செப்டம்பர் 5  தேதி  ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். 1895ம் ஆண்டு இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 1900ம் ஆண்டு  தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்றுக் கொண்டார் என்றும், 1908ல் 'சுதேசிக் கம்பெனி'  எனும் பெயரில் கப்பல் நிறுவனம் ஒன்றினை நிறுவினார் என்றும் இத்தகவல்கள் கூறுகின்றன. மேலும்,  பல்வேறு காலகட்டங்களில் பல போராட்டங்களில் ஈடுபட்டார் என்றும், அதன் தொடர்ச்சியாக அப்போதைய ஆங்கிலேய அரசால் 1908ம் ஆண்டு ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிரை சென்ரார் என்றும் அறிகின்றோம்.

 சமூக பணிகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் வ.உ.சி எனச் சொன்னால் அது சிறிதும் மிகையில்லை. உணர்ச்சிப்பூர்வமான நிலையைக் கடந்து அறிவுப்பூர்வமான வகையில் செயல்பட்டு தமிழ் மக்களிடையே சுதந்திர சிந்தனையை வளர்த்தவர் இவர்.
காலணித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேய  ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகள் தனித்துவம் வாய்ந்தவை.  பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் சுயமரியாதையுடன் பொருளாதாரத் தேடலில் இயங்கவும் புரட்சிகரமாகத் திட்டமிட்டு செயல்பட்டவர் இவர். வணிக குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வித் தகுதி பெற்றதோடு நின்று விடாமல் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகத்திற்காகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இந்தச் செயல் இவருக்குக் கப்பலோட்டிய தமிழன் என்னும் மங்காப் புகழை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைத்துத் தந்தது. பெறும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.

அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் குற்றம் சுமத்தி இவரைச் சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாது அவரது குடும்பச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. செல்வந்தரான வ.உ.சி அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நாட்டுக்காகத் தன் வாழ் நாளையே உழைத்து அர்ப்பணித்த இந்த நல்ல மனிதர்  தன் இறுதி நாட்களில் மிகுந்த பொருளாதார நிலையில் நலிவுற்று சிரமத்தில் இருந்தார் என்பதை எழுதும் போதே என் மனம் கலங்குகின்றது.

வ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர்.  உலகில் நிகழ்ந்த,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம்.  தனி மனிதரின் ஆன்ம பலமும்,  ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.  அத்தகைய பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான்  வ.உ.சி அவர்களை நான் காண்கின்றேன்.

அருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன்.  வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை.  வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது. வள்ளியம்மையி மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன்  இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.  இவை அக்கால சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்களாக அமைகின்றன.  வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகின்றது.

சிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது.  அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.

வ.உ.சி.  ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை,  தமிழ்க்கல்வி,  ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூற்களைப் புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது.  வ.உ.சி அவர்கள் எழுதி வெளி வந்த நூல்கள், மெய்யறிவு, மெய்யறம், எனது பாடல் திரட்டு, வ. உ.வி.கண்ட பாரதி, சுயசரிதை ஆகியவை. இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்கள் என்றால், மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்கள், சிவ ஞான போதம், இன்னிலை, திருக்குறள். ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக  பதிப்பிக்கப்பட்ட நூல்கள், தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை), சிவஞான போதம் ஆகியவை.

இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். விவேக பாநு, தமிழ் நேஷனல், பத்திரிகை, இந்து நேசன் ஆகியவை இவ்வகையில் இணைகின்றன.


சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள்.  தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார்.  பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு 'எனது அரசியல் பெருஞ்செயல்'  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.

இந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா? இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா?  வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை,  உயர்வான வாழ்வியல் நெறி முறைகள்,  தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு,  அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகின்றேன்.   இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும்? என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினை எட்டயபுரம் இளசை மணியன் அவர்கள் எனக்கு இந்தப் பயணத்தின் போது காட்டினார். அதன் டிஜிட்டல் வடிவத்தை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைத்து வைத்துள்ளேன்.  இக்கடிதத்தைப் பார்க்க விரும்புவோர் http://tamilheritagefoundation.blogspot.de/2010/05/blog-post.html பக்கத்தில் காணலாம்.

Friday, September 2, 2016

26. தாராசுரம் எனும் கவின்கலைப்படைப்பு




தமிழகத்துக்குச் சுற்றுலா செல்லும்   மலேசியத் தமிழர்கள்   டி-நகர், மற்றும் ரங்கநாதன் சாலை வணிக அங்காடிகளுக்குச் செல்வதும், தமிழகத்தின் கோயில்களுக்குச் சுற்றுலா செல்வதும் பட்டியலில் கட்டாயம் இருப்பவையே. அதிலும் கோயிலுக்குச் சென்று பார்த்து வருதல் எனும்போது பொதுவாக அனேகமானோர் தங்கள் பட்டியலில் சிதம்பரம் சிவன் கோயில், திருவண்ணாமலை சிவன் கோயில், கன்னியாகுமரி அம்மன் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் அல்லது பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றைக் கட்டாயம் பட்டியலில் வைத்திருப்பர்.  இதனைத் தவிர மேலும் சிலர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் போன்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் முக்கிய அம்சமாக வைத்திருப்பர்.   இந்தப் பட்டியலில் உள்ள கோயில்களைத் தவிர மேலும் பல அற்புதமான கட்டிட அமைப்பைக் கொண்ட கோயில்கள் தமிழகத்தில் நிறைந்திருக்கின்றன. எனது ஒவ்வொரு ஆண்டு பயணத்திலும் நான் பார்த்து பதிந்து வந்துள்ள கோயில்களைப் பற்றிய தகவல்கள் பல தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில்  உள்ளன. ஆர்வமுள்ளோர் இவற்றை வாசிப்பதோடு, வாய்ப்பமைந்தால் இக்கோயில்களுக்குச் சென்று அவற்றை பார்த்து கலை நேர்த்தியையும் அவை ஒவ்வொன்றின் சிறப்பினையும் அறிந்து மகிழ வேண்டும் என்பதே என் அவா. அந்த வகையில் கோயில் கட்டுமானக் கலைக்கு ஒரு உதாரணமாக அமைவது தான் தாராசுரம் கோயில்.

தமிழகத்தில்  உள்ள ஊர்களில் கோயில்களுக்குப் பிரசித்தி பெற்ற ஒரு ஊர் கும்பகோணம். அங்கே சோழர்காலக் கோயில்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்த கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் தான் தாராசுரம். இந்த ஊரில் அமைந்திருகும் ஐராவதேஸ்வரர் கோயில்,  கோயில் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இக்கோயிலின் ஒவ்வொரு தூண்களும் பல கதைகள் சொல்லும். வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற சம்பவங்கள் சில நிகழ்ந்த ஓர் ஆலயம் என்ற சிறப்பும் பொருந்திய ஒரு கோயில் இது. தற்சமயம்  யுனெஸ்கொ நிறுவனத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைப்பொக்கிஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு   சிறப்பாகப் பாதுகாக்கபப்டுகின்றது இக்கோயில்.

சோழ மன்னர்களில் இரண்டாம் ராசராசனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளைக் காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.

தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை கல்வெட்டு அறிக்கைகளாகப்  பதிப்பித்துள்ளது.

இரண்டாம் ராசராசன்   கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான்.  இந்த இரண்டாம் ராசராசன், இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகன். கி.பி.1150ம் ஆண்டில் சோழ ராஜ்ஜியத்திற்கு அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டவன் இவன். இரண்டாம் ராசராசன்  சைவ வழிபாட்டை பேணி வளர்த்தவன். சைவ சமயத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்த போதிலும் ஏனைய சமயங்களை ஆதரித்து வளர்க்கும் தன்மையுங் கொண்டவனாக இந்தச் சோழ மன்னன் அறியப்படுகின்றான். முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தன் சோழ ஆட்சிக்கு தலைநகரமாகக் கொண்டிருந்தாலும், பின்னர் பழையாறை நகரை  தனது ஆட்சிக்குப் புதிய தலைநகரமாக  உருவாக்கிக் கொண்டான். சுந்தர சோழன், முதலாம் இராசராசன் போன்றோர் தங்கி இருந்து சிறப்புடன் ஆட்சி செய்த நகரம் பழையாறை. அதனை மீண்டும் புதுப்பித்து தன் ஆட்சிக்கு தலைநகரமாக வடிவமைத்தான் இந்தச் சோழ மன்னன். இந்த நகரின் வடபகுதியில் இருப்பதுதான் தாராசுரம். இங்கே இராசராசேச்சுரம் என்ற ஒரு கோயிலை கட்டினான் இரண்டாம் ராசராசன். அதுவே இன்று தாராசுரம் கோயில் என அழைக்கப்படுகின்றது.

அம்பிகாபதி தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் வரும் பொல்லாத கவிஞர் ஒருவரை இன்றும் நினைவிருக்கலாம். ஒட்டக்கூத்தரே இந்தத் திரைப்படத்தில் வில்லனாகக் காட்டப்படுவார். இந்தத் திரைப்படத்தை எழுதிய கதாசிரியருக்கு பெருங்கவிஞர் ஒட்டக்கூத்தர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. கம்பரையும் அமபிகாபதியையும் புகழ நினைத்து ஒட்டக்கூத்தரை வில்லனாக்கி ஒட்டக்கூத்தரை தமிழ் மக்கள் மத்தியில் அவரது கவிப்புலமையும், அரச சேவையும் சரியாக அறிந்து கொள்ளாத வகையில் செய்து விட்டனர் இந்தத் திரைப்படத்தை எடுத்தவர்கள் என உண்மையில் ஆதங்கப்படுகின்றேன்.

இரண்டாம் இராசராசனின் காலத்தில் அவைப்புலவராக விளங்கியவர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.   இந்த மன்னனைப் புகழ்ந்து இராசராச சோழனுலா என்ற ஒரு நூலை இவர் எழுதியிருக்கின்றார்.  இந்த நூலை அரங்கேற்றியபோது அதில் உள்ள ஒவ்வொரு கண்ணிக்கும் ஒரு ஆயிரம் பொன் எனப்பரிசளித்து  அந்த நூலைப்  பெற்றுக் கொண்டான் அம்மன்னன், என்று சங்கர சோழனுலா எனும் நூல் விவரிக்கின்றது.

இதுதவிர மூவருலா எனும் நூலையும் ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம்  ராஜராஜசோழன் ஆகிய மூவருடைய  புகழைப் பாடுவதாக அமைந்த  நூல் இது.
ஒட்டக்கூத்தரின் புகழை இன்றும் கூறும் நூல் தக்கயாகப்பரணி. அந்த நூலை  எழுதி இந்த தாராசுரம் கோயிலில் தான் அரங்கேற்றினார் ஒட்டக்கூத்தர்.

கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் ராசராசேசுவரமுடையார் என்ற பெயர்   இக்கோயிலுக்கு வழக்கில் இருந்தது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் மாற்றம் பெற்றது.    63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்கு இருக்கும் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால்  இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் தான் முதலாம்  ராசராசசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற தகவல் முதன் முதலாக அறியப்பட்டது. அவை வெவ்வேறு இடத்தில் அமையப்பெற்றிருந்தாலும், பள்ளிப்படைக்கோயில் அவர்களுக்கு எழுப்பப்பட்டது, என்ற செய்தியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருப்பது இக்கோயில் சோழர் கால வரலாற்று ஆவணமாகத் திகழ்வதற்கு ஒரு நற்சான்று.

இக்கோயிலுக்கு நான் 2011ம் ஆண்டு நேரில் சென்றிருந்தேன். என்னுடன் தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் அறிஞர் டாக்டர்.பத்மாவதியும் தம்பிகள் உதயன், செல்வமுரளி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். இக்கோயிலின் வரலாறு, இரண்டாம் ராசராசன், ஒட்டக்கூத்தரின் இலக்கியப் பணி மற்றும் அரசியல் பணி, கோயில் கட்டுமான அமைப்பு எனப் பல செய்திகளை டாக்டர்.பத்மாவதி  அவர்கள்  விவரிக்க அதனை விழியப் பதிவாகத் தயாரித்து அதே ஆண்டு வெளியிட்டேன். அந்தப் பதிவும் இக்கோயிலின் கவின்கலையை விவரிக்கும் மூன்று பக்கங்கள் கொண்ட புகைப்படத் தொகுப்பும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வரலாறு எனும் தொகுப்பில் உள்ளன.

தமிழகக் கோயில் கட்டுமானக் கலையில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு கோயில் தாராசுரம் சிவன் கோயில். இங்கே ஒவ்வொரு கற்களும் கதை சொல்லும். சோழர் கால வரலாற்றில் தனித்துவம் பெறுகின்ற  கோயிலாக இந்த 12ம் நூற்றாண்டு கோயில் இன்றும் அதன் சிறப்பு குறையாமல் வீற்றிருக்கின்றது.