Wednesday, May 25, 2016

15.குன்றக்குடி குடைவரைக்கோயில்
இந்து தெய்வ கோயில்களின் அமைப்பு, காலம் காலமாக பல மாறுபாடுகளை உள்ளடக்கியதாக படிப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழக நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்து தெய்வ கோயில்கள் பலவகைப்படும். இன்று நாம் காணும் திறந்த வெளியில் அமைந்த குல தெய்வ சாமி வழிபாடாகட்டும், கோபுரங்களுடன் கூடிய பெரிய கட்டுமானங்களைக் கொண்ட கோயில்களாகட்டும், இவைஅ அனைத்துமே காலம் காலமாக பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்தன. இன்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னான கோயில் கலை பற்றி ஆராயும் போது அவை மரம், செங்கல், சுண்ணாம்பு, மணல்  போன்ற அடிப்படைப் பொருட்களைக் கொண்டு கபட்டப்பட்டதாக அமைந்திருப்பதை, நமக்கு கிடைக்கின்ற அகழ்வாராய்ச்சி தகவல்களிலிருந்து அறிகின்றோம். பல்லவர் ஆட்சி காலத்தில், உறுதியான மலை பாறைகளைக் குடைந்து  கோயில் அமைக்கும் தொழிற்கலை உருவானது. 

குடைவரைக் கோயில் என்றால் என்ன, என பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
குடைவரைக் கோயில் என்பது மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு உறுதியான பாறையைக்  குடைந்து அதில் சிற்பிகளைக் கொண்டு இறைவடிவங்களைச் செதுக்கச் செய்து, அக்குகைக்குள்ளேயே மண்டபங்களையும் அமைத்து தூண்களையும் செதுக்கி  அமைக்கப்படும் கோயில் அமைப்பாகும்.

தமிழகத்தில் இருக்கின்ற  புகழ்பெற்ற குடவரைக் கோயில்கள் வரிசையில் மகேந்திரப்பல்லவனால் அமைக்கப்பட்ட மண்டகப்பட்டு கோயில் காலத்தால் முந்தியதாக இன்று அறியப்படுகின்றது. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலும் ஒரு குடைவரை கோயில் தான். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் உருவாக்கிய குடைவரைக் கோயில்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றன. கழுகு மலையில் இருக்கும் வெட்டுவான் கோயில் பாறையைக் குடைந்தும் கூட இத்தனை சிற்பங்களை அமைக்க முடியுமா என்று நம்மை வியக்க வைக்கும் அமைப்பாக இருக்கின்றது. 

தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இத்தகைய காலத்தால் முந்திய குடைவரைக் கோயில்களில்  இதுவரை ஏறக்குறைய பத்துக்கும் குறையாத எண்ணிக்கையிலான குடைவரைக் கோயில்களைப் பற்றிய தகவல்களை இணைத்திருக்கின்றோம்.  அவற்றில் ஒன்று தான் குன்றக்குடியில் இருக்கும் ஒரு குடைவரைக்கோயில். 

குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் கூட உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் நம்மை வியக்க வைக்கின்றன. மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் இவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

கோயில் முழுக்க மலையைக் குடைந்து சிற்பிகள் உயரமான பெரிய சிற்பங்களை வடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல.  இச்சிறிய குடவரைக் கோயில் முழுதும் பல கல்வெட்டுக்கள் நிறைந்திருப்பதும் இக்கோயிலின் சிறப்பாக அமைகின்றது. குறிப்பாக "திருமகள் போல பெருநிலச் செல்வியும்" எனத் தொடங்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியைக் குறிக்கும் கல்வெட்டு, சோழ மன்னர்கள் செய்த தானங்கள் மற்றும் பல வரலாற்றுக் குறிப்புக்களை இன்றளவும் வெளிக்காட்டும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
இந்தக் குடவரைக் கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்திருப்பது சிவலிங்க வடிவம். மலையிலேயே பாறையைக் குடைந்து செதுக்கி இச்சிவலிங்க வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் குடவரைக் கோயிலில் ஒரு பக்கத்தில் வலம்புரி பிள்ளையாரின் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் உள்ளதைப் போலவே இந்தக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் சிலையும் வலம்புரிப்பிள்ளையார் வடிவமாக, இரண்டு கரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. 
பழமையான இந்தக் கோயில் கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று இங்குள்ள எழுத்துக்களின் தோற்ற அமைப்பைக் கருத்தில் கொண்டு கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் பின்னர் வந்த சோழ மன்னர்களும் இக்கோயிலை பராமரித்து இங்கே தங்கள் கல்வெட்டுச் செய்திகளையும் செதுக்கி வைத்து இக்கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடந்து வர ஆவண செய்திருக்கின்றனர்.
  
வெளியேயிருந்து பார்க்கும் போது ஒரு கோயிலாக மட்டும் இது தெரிந்தாலும் இக்கோயிலுக்குள் மூன்று கோயில்கள் அமைந்திருப்பதை உள்ளே சென்று காணும் போது அறியலாம். 
முதலில் அமைக்கப்பட்டுள்ள கோயிலில் மூலஸ்தானத்தில் இறைவன் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றார். வெளிப்பக்கச் சுவற்றில் பாறையைக் குடைந்தே ஒரு புறம் துர்க்கையின் வடிவமும் ஒரு புறம் விஷ்ணுவின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.சங்கு சக்கரத்துடன் உள்ள மிகப் பிரமாண்டமான திருமால் வடிவம் இது. நடந்து செல்லும் வகையில் இந்த திருமால் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. திருமால், துர்க்கை, இரண்டு சிலைகளுமே மிகப் பெரிதாக பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது குடவரைக் கோயில் சற்று எளிமையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவமே அமைந்துள்ளது. இதுவும் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவலிங்க சிலையே.
  
மூன்றாவதாக அமைந்துள்ள கோயிலில் முன் வாசல் பகுதியில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்திருக்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.குடவறை கோயில் படிகள் பாதி வட்டமாக (அர்த்தவட்டம்) அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இக்கோயிலில் தற்சமயம் மாத ப்ரதோஷத்தின் போது மட்டும் இங்கு பூஜை நடைபெறுகின்றது. மற்ற சமயங்களில் இக்கோயில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் குன்றக்குடி ஆதீனத்தின் மேற்பார்வையிலேயே தற்சமயம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ள குறிப்புக்களின் வழி முன்னர் இக்கோயில் மசிலீச்வரம் என்று அழைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 
நாங்கள் பதிவிற்காகச் சென்ற தினத்தில் முதலில் குன்றக்குடியில் ஆதீனகர்த்தரை சந்திந்து ஒரு பேட்டியை முடித்து விட்டு தொல்லியல் அறிஞர் முனைவர்.வள்ளி சொக்கலிங்கம், முனைவர்.கண்ணன்,முனைவர்.காளைராசன் நான் ஆகிய நால்வரும் இந்தக் கோயிலைப் பார்க்க வந்தோம். எங்களுக்கு உதவியாக கோயிலைத் திறந்து காட்டி உதவிட குன்றக்குடி மடத்திலிருந்து ஒரு உதவியாளரும் வந்திருந்தார்.

இந்தப் பதிவின் போது தொல்லியல், கல்வெட்டு , தமிழ் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற காரைக்குடி முனைவர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்களும் எங்களுடன் வந்திருந்ததால் கல்வெட்டுக்களை வாசித்து உடன் பொருளறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள், குலோத்துங்க சோழனின் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் ஆகியவற்றை டாக்டர் வள்ளி அவர்கள்  வாசிக்கக் கேட்டு பதிவு செய்தேன். இப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாஇப்பக்கத்தில் பல புகைப்படங்களுடனும் ஒலிப்பதிவு கோப்புக்களுடனும் வரலாற்றுப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 

இக்குகைக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டில் குன்றக்குடி என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. இது இவ்வூருக்கு அமைந்துள்ள பெயரின் பழமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் பாண்டி நாடு சோழர் ஆட்சியின் கீழ் இருந்ததால் இக்கல்வெட்டுக்கள் சோழ அரசரின் மெய்கீர்த்தி குறிப்புக்களோடு தொடங்குவதைக் காணமுடிகின்றது.
தமிழகத்தில்,பொதுவாக எங்கெங்கெல்லாம் சமண முனிவர்கள் தங்கியிருந்து சமணப் பள்ளிகள் அமைத்திருந்தார்களோ அங்கெல்லாம் இவ்வகைக் குடவரைக் கோயில்களைப் காணலாம். சைவ வைஷ்ணவ தெய்வ வழிபாடுகள் மேலோங்க ஆரம்பித்த காலங்களில் மன்னர்களின் ஆதரவும் இச்சமயங்கள் பெற்றதால்  சைவ வைஷ்ணவ தெய்வங்களுக்காக இவ்வகை பாறையைக் குடைந்த கட்டுமான அடிப்படையில் சிற்பிகளில் தேர்ந்த கைத்திறனைக் கொண்டு இவ்வகைக் குடைவரைக் கோயில்களை உருவாக்கியிருக்கின்றனர் 

இதே குடைவரைக் கோயிலின் முன் வாசல் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் மன்னர்களின் சிலைகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் சிற்பங்களின் வடிவங்களைப் பார்த்தே அரசர்களின் வடிவங்கள் இவை என்பதை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
இக்கோயிலுள்ள அனைத்து கல்வெட்டுக்களும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு மிக்க குடவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. கலைச்சிற்பங்களாக அமைந்திருக்கும் இறை வடிவங்களும் தமிழர் வரலாற்றை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் கல்வெட்டு ஆவணங்களும் நிறைந்துள்ள இக்குடவரைக் கோயிலைப் பற்றி பலரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

Wednesday, May 18, 2016

14. அக்னி சிறகொன்று கண்டேன்திரு.அப்துல் கலாம் அவர்களைத் தெரியாத தமிழ் மக்களே கிடையாது எனலாம். அவர் பெயரைக் கேட்கும் போதே அவரது புன்னகைப் பூத்த முகமும் இளையோர் அனைவரும் கல்வி கற்று சிறந்த குடிமக்களாக வாழவேண்டும் என்ற அவரது அறிவுரையும், அவர் உள்ளத்தின் அன்பும், கனிவுமே நம் எல்லோருக்கும் உடன் நினைவுக்கு வரும். 

இந்திய நாட்டின் 11-வது குடியரசுத்தலைவராக  2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித்த சிறப்பைப் பெற்றவர் திரு.அப்துல்.கலாம் அவர்கள். இந்திய நாட்டின் உயரிய அரசியல் பதவியை வகித்த அப்துல் கலாம் அவர்கள் மிக எளிமையான குடும்பத்தில் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். இவரது தந்தையார் திரு.ஜெனுலாபுதீன், தாயார் திருமதி.அஷியம்மா.  இருவரும் அன்பு நிறைந்த உதாரணத்தம்பதியர் என அண்டை அயலாரிடம் மதிப்புப் பெற்றிருந்தனர்.. இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்திலேயே இவர்கள் குடும்பம் வருமையில் வாடியதால் படிக்கும் போதே வேலை செய்து குடும்ப வருமையைப் போக்க தன் உழைப்பையும் நல்கியவர் திரு.அப்துல் கலாம். வீட்டில் வருமை இருந்த போதிலும் கூட தம் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கும் மேலாக பலரும் உணவு உண்ண வருவார்கள் என்றும்,  அனைவருக்கும் உணவு  பரிமாறும் தரும சிந்தனை கொண்டவர்கள் தமது பெற்றோர் என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.  பெற்றோரது அன்பும் கருணையும், பிறரை நேசிக்கும் மனமும் இயல்பாகவே இவருக்கு வாய்த்திருந்தது.

தனது அயராத முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும், கட்டுக்கோப்பான சிந்தனையினாலும் படிப்படியாக கல்விக்கூட தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்று தன் கல்வித்தரத்தையும் வாழ்க்க்கை நிலையையும் இவர் உயர்த்திக் கொண்டதோடு நாட்டின் உயரிய பதவியையும் பெற்றார். தமிழகத்தின் மெட்ராஸ் தொழில் நுட்பக்கழகத்தில் கல்வி கற்று பட்டம் பெற்று பாதுகாப்பு ஆய்வு வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக முதலில் தமது பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் இணைந்தார். 1980ம் ஆண்டில் ரோகினி துணைக்கோளை ஏவும் பணிக்கு தலைமையேற்று அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.  இந்த சாதனைக்காக அவருக்கு 1981ம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.

1989ம் ஆண்டு "அக்னி"  ஏவுகனையை விண்ணில் செலுத்தும் குழுவிற்கு திரு.அப்துல் கலாம் அவர்கள் தலைமை தாங்கினார். மே மாதம் 22ம் தேதி "அக்னி" வானில் செலுத்தப்பட்டது. இது மாபெரும் வெற்றி என்பதோடு உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு அணு ஆயுத வல்லரசு என்ற சிறப்புத்தகுதியைப் பெற்றுத்தந்தது. "அக்னி" ஏவுகணையை விண்ணில் செலுத்துவதற்கு முதல் நாள் பாதுகாப்பு அமைச்சரும் மேலும் சிலரும் திரு.அப்துல் கலாம் அவர்களும் மாலை உலாவச் சென்ற போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திரு.கே.சி.பந்த் அவர்கள் "கலாம்! ... அக்னி வெற்றியை கொண்டாடுவதற்காக நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றீர்கள்" என்று கேட்டிருக்கின்றார். அதற்கு பதிலளிக்கு முன்னர்.. "எனக்கு என்ன வேண்டும்? என்னிடம் இல்லாதது எது? எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கப்போவது எது? .." என இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்து விட்டு, அங்கே ஆய்வுக்கூடத்தில் நடுவதற்கு ஒரு லட்சம்  செடிகள் வேண்டும் எனக் கேட்டிருக்கின்றார்.  இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த பாதுகாப்பு அமைச்சர், "அக்னிக்காக பூமித்தாயின்  ஆசிகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.. நாளை நாம் வெற்றியடைவோம்" என்று சொன்னாராம். அதனை தனது சுயசரிதையான அக்னிச்சிறகுகள் நூலில் திரு.அப்துல் கலாம் குறிப்பிடுகின்றார்.

எவ்வளவு உயர்ந்த சிந்தனை இது என ஒவ்வொருவரையும் எண்ணிப் பார்க்க வைக்கும் செய்தி இது. 

திட்டமிட்டபடி "அக்னி"  விண்ணில் செலுத்தப்பட்டு அதன் வான் பயணத்தின் வெற்றி உறுதி என அறிவிக்கப்பட்டபோது தனது நாட்குறிப்பில் அன்றைய இரவு திரு.அப்துல் கலாம் அவர்கள் இப்படி எழுதுகின்றார். 

தீச் சகுனங்களைத் தடுத்து நிறுத்த
மேல் நோக்கிச் செலுத்தும் அம்சமாகவோ,
உனது பேராற்றலை வெளிப்படுத்தச் 
செலுத்தப்படுவதாகவோ
அக்கினியைப் பார்க்காதே.

அது நெருப்பு
இந்தியனின் இதய நெருப்பு.
அது ஒரு வெறும் ஏவுகளையன்று.
இந்த நாட்டின் எரியும் பெருமை.
அதனால் தான்  அதற்கு 
அத்தனை ஒளி.

எத்தகைய எழுச்சி தரும் வரிகள்!

சாதனையைப் படைக்கப் பிறந்தவர்கள் ஏற்றும் அக ஒளி அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் அனைவரிடத்தும் சூழ்ந்து நிச்சயம் ஒளி பரப்பத்தான் செய்யும்..

தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக 2002ம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்த வேளையில் அதி வேக ஸ்கேனர்களைக் கொண்டு எவ்வகையில் அரிய பழம் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்யலாம் என்ற ஒரு கலந்துரையாடலை தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்துறைப் பேராசிரியர் டாக்டர்.உதயகுமார் அவர்களுடன் நானும் டாக்டர்.நா.கண்ணன் அவர்களும் மேற்கொண்டிருந்தோம். அவ்வேளையில் அங்கே திரு.அப்துல் கலாம் அவர்கள் சிறப்பு பேராசியரியராக பதவி எடுத்துக் கொண்டு பணியாற்றிய காலகட்டம் அது. நாங்கள் இருந்த சமயத்தில்  அவர் அருகாமையில் தனது அலுவலகத்தில் இருப்பதாகத் தெரியவர தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அவரிடம் கூறி அறிவுரையும் ஆசிகளும் பெற அவரது அறைக்குச் சென்றோம்.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி செல்கின்றோமே என்ற தயக்கம் மனம் முழுவதும் இருந்தது. ஆனால் அவரைப் பார்த்துப் பேசிய மறு நொடியே தயக்கம் மறைந்து மிக அன்னியோன்னியமானதொரு கலந்துரையாடலாக அது அமைந்தது என்பதோடு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாளாகவும் அது பதிந்து போனது.

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் எமது தன்னார்வ தொண்டூழிய நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடுகள் திட்டங்கள் என்பன பற்றி நானும் டாக்டர்.கண்ணன் அவர்களும் திரு.அப்துல் கலாமுக்கு விளக்கிச் சொன்னோம். மிகப் பொறுமையாகவும் மிகுந்த ஆர்வத்தோடும் எங்கள் விளக்கங்களைக் கேட்டவர் ஓலைச்சுவடிகள் பற்றி குறிப்பிட ஆரம்பித்த போது இடைக்கிடையே தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சுக்கிடையே அடிக்கடி திருக்குறள் செய்யுட்களை உதாரணமாகச் சொல்லி பேசியது என்னுள் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு பொறியியல் விஞ்ஞானி என்ற போதிலும் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் தமிழ் நிலத்தின் வரலாற்றையும் உணர்வுப்பூர்வமாக மிக நேசிக்கும் ஒரு மனிதரை நேரில் பார்த்து பேசியது என்னுள்ளே பல மடங்கு எழுச்சியை எற்படுத்தியது. அடிப்படையில் கணினி அறிவியல் துறையே எனது துறை என்ற வகையில் கூடுதலாக தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளில் அதிலும் குறிப்பாக பழம் நூல்கள் பாதுகாப்பு, தமிழர் வரலாற்று புராதன சின்னங்கள் பாதுகாப்பு  என்ற வகையில் அப்போது ஈடுபட ஆரம்பித்திருந்த  எனக்கு  உறுதியான உந்துதலைத் தருவதாக அச்சந்திப்பு அமைந்தது. மிக உயரிய சாதனையைச் செய்த மாபெரும் விஞ்ஞானி என்ற கர்வம் ஏதும் இல்லாமல் தமிழ் மொழியின் பால் கொண்ட பற்றினாலும் ஆர்வத்தினாலும் எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளை ஆசீர்வதித்து நல்வாழ்த்துக்களை வழங்கினார். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இந்தியாவின் மில்லியன் நூற்கள் மின்னாக்கத் திட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையும் அங்கம் வகித்து நூறு தமிழ் நூற்களை நமது முயற்சியில் இத்திட்டத்திற்காக மின்னாக்கம் செய்து வழங்கினோம் என்பது பெருமையுடன் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவிசயம். 

அன்றைய சந்திப்பில் எங்களை மேலும் மகிழ்ச்சி படுத்தியது திரு.அப்துல் கலாம் அவர்கள் எனக்கும் டாக்டர். கண்ணன் அவர்களுக்கு அளித்த விருந்தோம்பல். அவருக்காக கொண்டு வரப்பட்டிருந்த உணவை எங்கள் இருவருடன் பகிர்ந்து கொள்ள மூவருமாக அன்று சேர்ந்து உணவருந்தினோம். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பேறு என்று தான் சொல்ல வேண்டும்.  அந்தச் சந்திப்பிற்குப் பிறகு திரு.அப்துல் கலாம் அவர்கள் கைப்பட தமிழ் மரபு அற்க்கட்டளையின் முயற்சிகளை வாழ்த்தி தாமே எழுதி அனுப்பிய  வாழ்த்துக் கடிதமும் எங்களுக்குக் கிடைத்தது. இது எமது தமிழ் மரபு அறக்கட்டளைக்குக் கிடைத்த மிக உயரிய பாராட்டுதல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அச்சந்திப்பிற்குப் பிறகு அவரது சுயசரிதை  Wings of Fire நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான அக்னிச்சிறகுகள் நூலை வாங்கி வாசித்தேன். கொண்ட குறிக்கோளில் வெற்றி காண வேண்டும் என்ற இதயத் தீயின் வெளிப்பாடு அந்த நூல் முழுவதும் இருப்பதை வாசிக்கும் போது ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் மட்டுமன்றி எனது தனிப்பட்ட வாழ்க்கையின் மேம்பாட்டிற்கும் அக்னிச்சிறகுகள் தரும் அனுபவக் கருத்துக்களும் ஊக்கச் சொற்களும் எனக்குத் துணையாக அமைந்தன. இந்த நூலை எப்போது எடுத்து வாசித்தாலும் திரு.அப்துல் கலாமின் எண்ணங்களின் வெளிப்பாடுகளும் சிந்தனைகளும் மனதில் எழுச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை.

இந்தப் பூவுலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது எண்ணங்களும் கருத்துக்களும் பலரது நெஞ்சத்தில் குடிகொண்டிருப்பதைப் போல தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அவர் உளமார வழங்கிய வாழ்த்துக்கள் எமது நோக்கங்களுக்கு துணையாகத் தொடர்கின்றன!

Thursday, May 12, 2016

13. கரிகால் வளவன் கட்டிய கல்லணை
நீரின்றி அமையாது உலகு. உலகம் செழிக்க நீர் அவசியம். மழையாகவும், பனித்துளிகளாகவும், ஆறாகவும்,  ஓடையாகவும் வடிகின்ற நீர் சரியாக தேக்கி வைக்கும் போது மக்கள் பயன்பாட்டிற்குப் பயன்படும் வகையில் அமைந்து விடுகின்றது. இன்றைக்கு நீர் பயன்பாட்டின் தேவையின் காரணத்தை அறிந்திருப்பதால், நீரைத் தேக்கி வைத்து மக்கள் பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் நீர் தேக்கி வைப்பதற்கான தொழில்நுட்ப முறைகளைப் பற்றியும் உலகின் எல்லா நாடுகளிலும் அரசும் சமூக நலனில் அக்கறை கொண்ட குழுவினரும் தனி மனிதர்களும் கூட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை பொது ஊடகங்களின் வழி அறிகின்றோம்.

நீர் நிலைகளை முறையாகப் பாதுகாக்காதக் காரணங்களினாலும் ஏரிகளையும் குளங்களையும் நீர் நிலைகளையும் கவனிக்காது அவற்றை சேதப்படுத்தியும் அவற்றில் கட்டிடங்களைக் கட்டியும் அழித்ததனால் தமிழகத்தின் சென்னைப்பகுதியே 2015ம் ஆண்டு வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டது என்பதை தமிழர் அனைவருமே அறிவோம். 

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சிந்தனை இல்லாத அக்காலத்திலேயே பல்லாண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் நீரைத் தேக்கி வைத்து நாட்டு மக்கள் விவசாயம் செய்து நல்வாழ்வு வாழ வழி செய்தவன் சோழ மன்னன் கரிகால் வளவன்.  

சங்ககால சோழ மன்னர்களுள் காலத்தால் முந்தியவனாகக் கருதப்படுபவன் சோழன் இளஞ்சேட்சென்னி. இவனது வீரத்தையும், இவனது நால்வகைச் சேனைப்படைகளையும், அவனது வள்ளல் குணத்தையும் விளக்கும் வகையில் அமைந்த இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனது திருக்குமாரனாகப் பிறந்தவன் கரிகாலன். தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றவன் என்ற சிறப்பைக் கொண்டவன் கரிகால வளவன். இவனுக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான், கரிகால் வளவன், வளவன் என்ற பெயர்களும் உண்டு.

கரிகால் வளவனின் ஆட்சி காலத்தில் அவனுக்குப் புகழ் சேர்த்த போர் என்றால் அது வெண்ணி வாயில் போர் எனக் குறிப்பிடலாம்.  தென்னாசிய அளவில் மிகப்பெரியதொரு போர் என்ற சிறப்புடன் இப்போர் வர்ணிக்கப்படுகின்றது. கரிகால் வளவன் தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ள வென்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுடனும், பாண்டிய மன்னனுடனும், பதினொரு வேளிருடனும் போரிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தான். இதனால் தமிழகம் முழுவதும் கரிகால் வளவனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது.  மூன்று தலைமுறைகளாக சோழ மன்னர்களுக்கிடையே இருந்த குழுச்சண்டை முடிவுக்கு வந்து துறைமுக நகரமான புகார் நகரமும், தலநகரமான உறையூரும் பெருமை பெற்றது.  தமிழகத்தைக் கைப்பற்றி பின்னர் வடநாட்டிற்கும் சென்று, அங்குச் செல்லும் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் போர் நடத்தி அவ்வூர்களையெல்லாம் வென்று  இமயம் வரை சென்று அங்கு போரிட்டு வெற்றிக் கொடி நாட்டினான் கரிகால் வளவன். சோழப் பேரரசு தென்னிந்தியா முழுமையுமான பேரரசாகவும், கரிகால் வளவன் பேரரசனாகவும் உருவெடுக்க வெண்ணிப்பறந்தலைப் போர் மிக முக்கியக் காரணியாக அமைந்தது.

தரைப்படை மட்டுமன்றி கடற்படை பலமும் கொண்டிருந்தான் கரிகால் பெருவளத்தான். இப்படை பலத்துடன் இலங்கையில் போரிட்டு இலங்கையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான் இச்சோழமன்னன்.  அவனது ஆட்சி காலத்தில் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு புகார் நகரத்தில் ஏற்பட்டு வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. காவிரி வெள்ளத்தில் அடித்துவரும் மணல்  கடல் வாணிபத்தையும் பாதித்ததோடு கப்பல், மற்றும் படகு போக்குவரத்துக்கு மிகுந்த இடையூற்றையும் ஏற்படுத்தியது. ஆக இதனை சரி செய்ய ஒரு அணையைக் கட்டி நீர் நிலையை சரி செய்து துறை முகத்தை பாதுகாப்பதுடன் தமிழகத்தின் விவசாயத்தைச் செழுமைப்படுத்தவும் முயற்சி எடுத்தான் வளவன். தனது பெரும்படையின் பலத்துடனும் இலங்கைப் போரில் தோல்வி கண்ட படையினரையும் கொண்டு தமிழகத்தின் காவிரியாற்றின் கரைப்பகுதியைச் சீரமைத்து உயர்த்திக் கட்டினான்  பெருவளத்தான். காவிரியில் கல்லணை கட்டி தலைநகரான உறையூர் வரை நிலையான நீர்ப்போக்குவரத்து விரிவடைய வழி செய்தான் நீர் மேலாண்மையில் தனித்திறன் கொண்டிருந்த கரிகால் வளவன். வெண்ணிப் போரின் நினைவாக கரிகாலன் வெட்டிய ஆறு இன்றைக்கு வெண்ணாறு என அழைக்கப்படுகின்றது (வெண்ணியாறு என்பதன் திரிபு). இந்த ஆற்றின் தலைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளதுதான் கரிகாலன் திருமாவளவன் கட்டிய கல்லணை.

இந்தக் கல்லணையைக் கட்ட சோழ நாட்டின் கரூர், முசிறி என்ற நகரங்களிலிருந்து வெட்டியெடுத்து ஆற்று வழியே கொண்டு வரப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவை ஆங்கிலேய காலணித்துவ அரசு ஆண்ட போது இக்கல்லணையைப் பரிசோதித்து இடிக்கும் படி முடிவெடுத்து பொறுப்பை சர் ஆர்தர் காட்டன் என்பவருக்குக் கொடுத்தனராம் .அவர் தலைமையில் இயங்கிய குழு இக்கல்லணையைப் பரிசோதித்து இதன் கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்து அதிசயித்து இதனை Grand Anaicut, அதாவது மாபெரும் அணைக்கட்டு என்று கூறிப் புகழ்ந்து சென்றதாம். 

இந்தக் கல்லணை ஏனைய கல்லணைகளுக்கும் பொறியியல் ரீதியில் உதாரணமாக அமைந்தது. கோதாவரியில் அமைக்கப்பட்ட கல்லணையும் இதே தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டதே. இந்த கல்லணையின் பொறியியல் நுட்பத்திறன் பின்னர் ஆங்கிலேய அரசு அமைத்த பாலங்களின் கட்டுமானம், ஏரி அணை அமைப்புக் கட்டுமாணம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது இதன் தொழில்நுட்பத்திறனுக்குக் கிடைத்திருக்கும் பெருமை.  

சோழமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை பற்றிய விரிவான வரலாற்றுப் பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்றிருந்தபோது செய்து வந்தேன். அது பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை  வலைப்பக்கத்தில் காணலாம்.

உலகமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது நீர் நிலைகளே. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சோழன் கரிகால் வளவன் தூரநோக்குச் சிந்தனையுடன் நாட்டு மக்கள் நலன் கருதி எடுப்பித்த கல்லணை இன்றளவும் காவிரி நீர்ப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி நாட்டு மக்கள் நலன தரும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

Thursday, May 5, 2016

12.அன்னை பூமி

டாக்டர்.சுபாஷிணிகாட்டு விலங்குகளை வேட்டையாடி ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்குப் பெயர்ந்து,  நாடோடியாகத் திரிந்த  மனித குலம், விவசாயத்தைக் கற்றுக் கொண்ட பின்னரே படிப்படியே நாகரிகம் அடைந்தது. உலகம் முழுவதும் பல்லின மக்களிடையே இந்தக் கூறுகளை மானுடவியல் அடிப்படையில் நம்மால் காணமுடிகின்றது.  தமிழர் தம் பண்பாட்டுக் கூறுகளில் விவசாயத்திற்குப் பண்டைய காலம் தொட்டே தனியிடம் உண்டு.

விவசாயம் என்பது தமிழர் பண்பாட்டில் இடம்பெறுகின்ற முக்கிய அம்சம் தான். உழவர்களையும் விவசாயத்தையும் மதித்துப் போற்றும் சமூகமாகவே  தமிழ்ச்சமூகம் இருக்கின்றது. தமிழர் தம் வாழ்வியலில் மிக முக்கியப் பங்கு பகிக்கும் பண்டிகைகளில் ஒன்று உழவர்களுக்கும் உழவுத்தொழிலுக்கும் சிறப்பு சேர்க்கும்  பொங்கல் திருநாள் தான். பொங்கல் திருநாள் பல ஊர்களில் தமிழ் மக்களால் தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுவதும் உழவுத்தொழிலுக்குத் தமிழ்ச்சமூகம் கொடுத்திருக்கும் உயரிய மதிப்பினை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

கருத்தளவில் உழவுத்தொழில் பற்றிய மதிப்பு என்பது இருந்தாலும் பொருளாதார அடிப்படையில் அது லாபம் தராத ஒரு தொழில் என தவறான எண்ணம் கொண்டு பலர் கிராமப்புறங்களில் உள்ள வயல் வெளிகளை நகர்மயமாக்கலின் பொருட்டு விற்பதும், விவசாயத்தை விட்டு நகர்ப்புறங்களுக்குக் குடியேறி விவசாயத்தைப் புறந்தள்ளி வாழும் நிலையையும் கூட காண்கின்றோம். 

பொருளாதார ரீதியாக விவசாயிகளின் நிலை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். மனிதனின் அடிப்படை தேவை உணவு. தமிழ் மக்களின் அடிப்படை உணவு சோறுதான். நம் வாழ்க்கையே ஒரு வேளை உணவை நம்பித்தான் இருக்கின்றது. அதனால் விவசாயத்தை அரசாங்கம் பாதுகாத்து ஆதரவு கொடுத்து வளர்க்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவு பொது மக்களும் விவசாயத்தையும், விவசாயத் தொழிலையும், விவசாயிகளையும் மதிக்கும் பண்புடையோராக இருத்தல் நாம் உண்ணும் உணவிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.

தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழர்களின் வாழ்வில் இடம் பிடிக்கும் விவசாயத்தொழில் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைப்பதிலும் நாட்டம் கொண்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்தில் விவசாயத்தொழில் தொடர்பான சில பதிவுகளை 2009ம் ஆண்டு ஒலிப்பதிவு பேச்சுக்களாகப் பதிவு செய்து அவற்றை வெளியிட்டுள்ளதோடு அவை ஏனைய பொதுமக்களும் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இணைத்து வைத்துள்ளோம்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், ஆடி மாத வாக்கில் வயலில் தண்ணீர் திறந்து விடப்படும் போது விவசாயிகளுக்கு அது ஒரு குதூகலமான நாள் தான். வயலுக்கு நீர் வந்தால் அது தீபாவளி கொண்டாட்டத்தைப் போல மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்குமாம். ஆற்றில் நீர் வரும்போது அதனை மிக உயர்வாகக் கருதி ஆற்று நீருக்கு சடங்குகள் செய்து வழிபட்டு  மக்கள் வயலுக்குப் பாய்ச்சப்படும் நீரை வரவேற்கின்றனர். 

விவசாயம் செய்வதற்கு முன்னர் வயல் நிலத்தை தயார் செய்வதே ஒரு தனி கலை. பல  படி நிலைகளில் விளை நிலத்தைத் தயார் செய்யும் பணி நடக்கின்றது. தமிழர் வாழ்வியலில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்று . கலாச்சார வளம் நிறைந்தது தமிழர் தம் வாழ்க்கை. தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு தனி சடங்கு, சம்பிரதாயம் என வைத்து, அதன் சூழலிலேயே தம் வாழ்க்கையை தமிழர் அமைத்திருப்பது, தமிழ் மக்கள் வாழ்க்கை வளமான கலையம்சங்கள் நிறைந்ததாக இருப்பதை நமக்குக் காட்டுகின்றது. 

விவாசயம் என்று எடுத்துக் கொண்டால் நீர் ஆற்றில் திறந்து விடப்படும் போது அதற்கு சில சடங்குகள்.... நிலம் மறு விளைச்சலுக்காக தயார் செய்யப்படும் போதும் சில சடங்குகள்..  நாற்று நடும் போதும் சில சிடங்குகள்.. நெல் காய்க்கத்தொடங்கியதும் சில சடங்குகள்.. அறுவடைக்குக் கதிர் தயாராகும் போதும் சில சடங்குகள்.. அறுவடை நேரத்திலும் சடங்குகள்.. அறுவடை முடிந்ததும் விளைச்சலை முன்னிறுத்தி சில சடங்குகள்... இப்படி விவசாய காலத்தின் ஒவ்வொரு படி நிலைகளிலும் தமிழர் வாழ்க்கை என்பது பற்பல சடங்குகளோடு பின்னிப் பினைந்து, பிரித்துப் பார்க்க முடியாத அளவில் கலந்து தான் இருக்கின்றது.

விவசாயத்துக்கு நெல்லைத் தயார் படுத்துவது எளிதல்ல. சரியான விளை நெல்லை தேர்ந்தெடுத்து,  முளைப்புத் திறனைக் கூட்ட பிரத்தியேகமாக சில நடைமுறைகளையும் விவசாயிகள் கையாளுகின்றனர்.  பின்னர் நெல் தயாரானதும் அளவான நீரில் முளைத்து வந்திருக்கும் நெற்பயிரைப் பார்ப்பதற்குக் கண்ணுக்கு குளுமையாக இருப்பது போல மனதிற்கும் குளுமைமையாகத்தான் இருக்கும் . விவசாயிகளுக்குக் காலையில் எழுந்தவுடன் தங்கள் வயலில் முளைத்து வந்திருக்கும் நெற்பயிர்களைப் பார்ப்பதே அவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வு தான்.

நார்த்தங்கால் நடுவதற்கு முன்னர் வயலில் சிறப்பு சடங்குகளைச் செய்வதும் விவசாயிகளுக்கு உள்ள வழக்கம்.  இதனை பொன்னேறு கட்டுதல் எனக் குறிப்பிடுகின்றார்கள். விவசாயம் ஆரம்பித்த பின்னர் விவசாயிகளுக்குப் பெரிய பிரச்சனையாக இருப்பது  வயலில் விரிவாக மண்டி விடும் களைகள் தான். நெற்பயிருக்கு இடையே வளரும் களைகளைச் சரியாக நீக்கினால் தான் நெற்பயிர்கள் செழித்து வளர முடியும். ஆக இதனை அறிந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர்களை நட்டு வைக்கும் போது எவ்வளவு கவனமாக அப்பணியைச் செய்கின்றார்களோ அந்த முக்கியத்துவம் குறையாத வகையில் நெற்பயிர்கள் வளரும் போது இடையில் மண்டி விடும் களைகளை எடுத்து நெற்பயிற்கள் செழித்து வளர பாதுகாக்க வேண்டியதும் முக்கியமானதாகின்றது. 

இப்படி பல தகவல்களை ஒலிப்பதிவு பேட்டிகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளை செய்திருந்தோம். தமிழகத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து விவசாயப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதோடு கிராமத்துப் பெண்களுக்கும் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக சேவையாற்றி பின்னர் மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த திருமிகு.வசந்தா அவர்களது அனுபவச்செய்திகள் விவசாயம் தொடர்பான பல அரிய தகவல்களை வழங்கும் வண்ணம் தமிழ் மரபு அறக்கட்டளையை அலங்கரிக்கின்றன.  இப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் உழவுத் தொழில் என்ற பக்கத்தில் காணலாம். ஐந்து பாகங்களில் அமைந்த பேட்டி ஒலிப்பதிவுகளைக் கேட்போருக்கு கிராமத்தில் நெற்பயிர் விவசாயம், தென்னை, மாடுகள் பராமரிப்பு என பல விசயங்களைப் பற்றிய அடிப்படை தகவல்கள் பல அறியக்கிடைக்கும்.

கிராமத்து வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வகையிலான ஒரு வாழ்க்கை. இன்றைய நகர்புற வாழ்க்கை முறையில் அவசர தேவைகள் என்ற பெயரில் இயற்கை உணவு முறையிலிருந்து விலகியிருக்கும் நிலைக்குத்தான் நாம் வந்து விட்டோம். மனிதர்கள் அனுபவிக்கும் பல்வேறு வகையான உடல் ரீதியான நோய்களுக்கு இந்த இயற்கைக்கு மாறான உணவுப்பழக்கங்களும் வாழ்வியல் கூறுகளும் காரணமாக அமைந்திருப்பதை மறுக்கமுடியாது.   தமிழர் பண்பாட்டில் ஒரு அங்கமாகிய விவசாயத்தைப் போற்றி அதனை வளர்க்கும் மனப்பாண்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!