Saturday, April 9, 2016

8. பட்டினத்தார் நினைவாலயம்



“ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி 
உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து 
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று 
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் 
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து 
யோகமும்வாரமும் நாளும் அறிந்து

ஒரு கரு உருவாகி,  படிப்படியாக வளர்ந்து,  உலகில் பிறந்து, வளர்ந்து வாழ்க்கையில் லயித்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, பினி, மூப்பு என்ற இயற்கை அனுபவங்களையும் பெற்று, இறுதில் இந்த உலகிலிருந்து விடுபட்டு, மீண்டும் இல்லாது போகும் நிலையை இந்த செய்யுளானது வாசிப்போருக்கு படித்த மாத்திரத்தில் புரியவைத்துவிடும். ஆழமான உண்மையைக் கொண்டிருப்பதனாலேயே இச்செய்யுளின் ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு சொல்லிற்கும் கூட பலமும் தனிச்சிறப்பும் நிறைந்திருக்கின்றது. யாருடைய பாடலிது என்று யோசித்தீர்களேயானால், இப்பாடலுக்குச் சொந்தக்காரர், பட்டினத்தார் என தமிழ் மக்களால் குறிப்பிடப்படும் பட்டினத்து அடிகள் தாம்.

இந்தச் செய்யுளைக் கேட்கும் போது ஒவ்வொரு முறையும் என்  மனம் இந்த புவியில் இருப்பதை விட்டு அகன்று தனி இன்ப நிலையில் சஞ்சரிப்பதை நான் உணர்வதுண்டு. அது ஒரு விதமான வகையில் அமைந்த, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம். 

ஆன்மீகத் தேடலின் அடிப்படையில் பட்டினத்தார் சித்தர் என்ற வகையில் வைத்து வணங்கப்படுகின்றார்; சிறப்பு செய்யப்படுகின்றார். 

பொதுவாகவே சித்தர்கள் என்பவர்களைப் பற்றிய பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் மக்கள் மனதில் உலவுகின்றன. மிக எளிய வகையில் சித்தர்களைப் புரிந்து கொள்ள முயல்பவர்கள், அவர்களை மனிதர்களை விட்டு விலகி நிற்பவர்களாகவும், அலங்கோலமாகக் காட்சி தருபவர்களாகவும், வாழ்க்கையை வெறுத்தவர்களாகவும், பேய் பிசாசுகளோடு பேசக்கூடியவர்களாகவும், மந்திரங்கள் செய்து மாயாஜாலங்கள் செய்து வானில் பறத்தல், தண்ணீரில் மிதத்தல் போன்ற சாகசங்களைச் செய்பவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இப்படி தாம் நினைப்பதோடு நிற்காமல், சித்தர்கள் என்றால் இவர்கள் தாம் என்று அடித்துப் பேசி சிந்தர்கள் பற்றிய தவறான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்பவர்களாக்வும் இவர்களில் சிலர் அமைந்து விடுகின்றனர்.

இயற்கையாகவே நம் தமிழ் மக்கள் மாய மந்திரம் என்றால் ஆகா ஓகோவென்று வியப்பதிலும், பெரிய நன்மைகளை விரைவில் பெற இவ்வகை மாய மந்திரங்களின் துணை வேண்டும் என்பதால் சில குறுக்கு வழிகளில் செல்வதற்கு இவ்வகை சித்தர்களை குருக்களாக ஏற்றுக் கொண்டு விரைவாகப் பலனடைவோம் என்றும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு வருவதை நம் சூழலியே அதிகமாகக் காண்கின்றோம். இப்படி  அறிவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத மாய ஜாலங்களை நம்பி பொருட்செலவு, நேர விரயம் என்பதோடு மன உளைச்சலையும் மட்டுமே பெற்றவர்களாக இத்தகையோர் பின்னர் வருந்துவதையும் காண்கின்றோம். இப்படி ஏமாந்து வருந்துவதற்கு பதிலாக உண்மையில் சித்தர்கள் என்றால் யார்? அவர்களது குணாதிசியங்கள் யாவை? அவர்கள் மக்களுக்கு விட்டுச் சென்றவை யாவை? சித்தர்கள் எப்படிப்பட்டோர் என்று தீர ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சித்தர்கள் என்போர் ஒரு வகையில் விஞ்ஞானிகள் என்று குறிப்பிடலாம். இவர்களில் வெவ்வேறு வகைப்பட்டோர் உள்ளனர். பொதுவாகச் சொல்வதென்றால் இயல்பான இல்லற வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஆன்ம பலத்தைப் பெருக்கும் வழியில் ஈடுபடுபவர்களாக சிலர் இருப்பர். சிலர் தாம் கண்ட சிந்தனைகளை ஆன்மீகப் பாடல்களாக எழுதி வைத்து மக்கள் வாசித்து சிந்திக்க விட்டுச் சென்றோராக இருப்பர். வேறு சிலர் மூலிகைகளைக் கொண்டு புத்துப்புது மருந்துகளைக் கண்டு பிடித்து நோயாளிகளின் நோயை குணப்படுத்துவோராக இருப்பர். ஒரு சிலர் புதிய புதிய ஆராய்ச்சிகளைச் செய்து புதுமை வேட்டலை நாட்டமாகக் கொண்டோராக இருப்பர்.  

பட்டினத்தாரை பொறுத்தவரை அவர் நன்கு பொருளாதார வசதி மிகுந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, நல்வாழ்வு நடத்தி, பின்னர் இல்லறத்திலிருந்து விடுபட்டு, வீட்டினை விட்டு, பின் நகரத்தை விட்டு வெளியேறிச் சென்று, தன்னைத்தானே தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்.

இவர் தன் சிந்தனைகளையெல்லாம் அருமையான செய்யுட்களாக வடித்து வைத்தார்.  இவரது செய்யுட்கள் எளிய தமிழில் வாசிப்போர் புரிந்து கொள்ளும் வண்ணம் இருப்பவை. இச்செய்யுட்கள் ஒவ்வொன்றும் பொதுவாக வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொன்றிலும் இருக்கின்ற நிலையாமையை குறிவைத்தே எழுதப்பட்டவையாக இருப்பதுதான் இப்பாடல்களின் தனிச்சிறப்பு. 

நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் தினம் தினம் பல தோல்விகளை சந்தித்துத்துக் கொண்டேயிருக்கின்றோம். நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதுபோல நிலையாமையைக் காட்டும் பட்டினத்தார் பாடல்கள் அமைந்திருப்பதால் அவர் நமக்ககவே இப்பாடல்களை எழுதி விட்டுச் சென்றிருக்கின்றாரோ என நம்மை நினைக்க வைக்கின்றன இவரது பாடல்கள்.

இறப்பு சடங்குகளின் போது பட்டினத்தார் பாடல்களை ஓதுவார் ஓதுவது சில இடங்களில் வழக்கத்தில் நடைமுறையில் இருப்பதைக் காண்கின்றோம். இறப்பு என்பது மனித வாழ்க்கையில் இயல்பான ஒரு விசயம்தான் என்பதை உயிரோடு இருக்கும் எல்லோரும் உணரும் வகையில்  இழவு வீடுகளில் பட்டினத்தார் பாடகள் ஓதுவது சடங்குகளில் ஒன்றாக இருக்கின்றது. 

எது நடக்கின்றதோ இல்லையோ.. இறப்பு என்பது நிச்சயம் நடக்கும் என்ற வகையில் இவரது செய்யுட்கள் நமக்கு நம் நிலையாமையை ஆணி அடித்துச் சொல்பவையாக இருக்கின்றன. நேற்று இருந்தவர் இன்று இல்லை. நேற்று அலங்கரித்து அழகு செய்து புன்னகை பூத்த முகம் இன்று  உயிரற்று போன பின்னர் இடுகாட்டில் பிணம் என்று சொல்லப்பட்டு எரியூட்டப்பட்டு சாம்பலும் எலும்புகளுமாகத்தானே காட்சியளிக்கின்றன. எங்கே போயின அந்த வனப்பும், கவர்ச்சியும் என்று சில பாடல்களின் வழி நம்மை அதிர வைக்கின்றார் பட்டினத்தார். 

பட்டினத்தாரின் வாழ்க்கை சோகம் நிறைந்த பல நிகழ்வுகளைக் கொண்டது. இவர் வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக அலைந்து திரிந்து பிச்சை எடுத்து வாழ்கின்றார். இது தமக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக நினைக்கும் அவரது உடன்பிறந்த தமக்கையே அவருக்கு சோற்றில் நஞ்சு வைத்து கொல்லப்பார்க்கின்றார். இது தெரிந்து அவர் ‘தன்னப்பம் தன்னைச் சுடும்;  வீட்டப்பம்  ஓட்டைச்  சுடும்’  என்று கூறி அப்பத்தை வீட்டின் கூரை மீது வீச அந்த வீடே எறிந்ததாக ஒரு கதை உண்டு.

எவ்வளவு பற்றுக்களை துறந்தாலும் தன் தாயின் இறப்புக்கு வந்து அங்கே பிணமாகக் கிடக்கும் தன் தாயின் உடலுக்கு தீமூட்டும் போது கலங்கிப் போய் தவிக்கின்றார் பட்டினத்தார்.  அண்டஹ் உணர்வை விளக்கும் இரண்டு செய்யுட்களை காண்போம்.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு 
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை 
எப்பிறப்பிற் காண்பே னினி”
....

“முன்னை யிட்ட தீ முப்புரத்திலே 
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில் 
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே 
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே”


இப்படி வாழ்வின் நிலையாமையை தம் செய்யுட்களினாலேயே நமக்கு தம் பாடல்களின் வழி உயிர்கொடுத்துக் கொண்டிருப்பவர் பட்டினத்தார். 

பட்டினத்தாரின் வாழ்க்கைச்சரிதம் தமிழ்த்திரைப்படமாகவும் வெளிவந்தது. நாம் நன்கறிந்த பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் இப்படத்தில் பட்டினத்தார் வேடத்தில் நடித்தார். கே.சோமு தயாரித்த இந்தப்படம் 1936ம் ஆண்டில் வெளிவந்தது.

இத்தனைச் சிறப்புக்கள் வாய்ந்த பட்டினத்தாரின் நினைவாலயத்தைச் சென்று பார்த்து தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பதிவினைச் செய்து வைக்க 2008ம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்தபோது திருவெற்றியூர் சென்றிருந்தேன். தமிழகத்தின் திருவெற்றியூர் நகரில் கடற்கரைக்கு அருகே இருக்கின்றது இவரது நினைவாலயம்.

பட்டினத்தார் நினைவாலயம் மிகச் சிறியதொரு கோயில். உள்ளே சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதாவது பட்டினத்தார் இறந்த பின்னர் அவரது உடலைப்புதைத்து அதன் மேல் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து இக்கோயிலை அமைத்திருக்கின்றனர்.

இந்த ஆலயம் இருக்கும் இடம் ஒரு மீனவ குப்பம். நான் சாலையைக் கடந்து கோயிலைத் தேடி  உள்ளே செல்லும் போது ஒரு தண்ணீர் லோரி வந்திருக்க குப்பத்துப் பெண்கள் வண்ண வண்ண ப்ளாஸ்டிக் குடங்களைச் சுமந்து கொண்டு  தண்ணீர் எடுப்பதற்காக வந்து வரிசையில் நின்றிருந்தார்கள். கோயில் இருக்கும் இடம் பற்றி விசாரித்து மிக எளிதாகக் கோயிலைச்  சென்றடைந்தேன். கோயில் இருக்கும் இடத்தின் வெளிப்புறம் மிக அசுத்தமாகக் குப்பை கூளங்கள் நிறைந்து காட்சியளித்தது. குப்பைகளில் மொய்க்கும் ஈக்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு வித அச்சம் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. நான் சென்ற வேளை கோயில் பூட்டியிருந்ததால், நான்  தமிழ் மரபு அறக்கட்டளைக்காகப் பதிவு செய்ய வந்திருக்கின்றேன் என்று சொன்னவுடன், எனக்காக அங்கிருந்தோர் கோயில் சாவி வைத்திருப்பவரின் வீட்டிற்க்குச் சென்று  சாவி கொண்டு வந்து கோயிலைத்திறந்து காட்டினர். 

பட்டினத்தாரின் நினைவாலயமாகத் திகழும் இந்த சிறிய கோயிலை அந்த  குப்பத்து மக்களே தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் வழிகளைச் செய்யலாம். தூய்மையின் அவசியத்தை அம்மக்களுக்கு எடுத்துணர்த்து, அந்த நினைவாலயத்தைச் சுற்றி சிறிய பூங்கா உருவாக்கி எழிலைக் கூட்டி அந்த இடத்தைப் பாதுகாக்கலாம். 

ஒவ்வொரு கிராம மக்களும் மனம் வைத்தால் தங்கள் கிராமத்தில் அல்லது ஊரில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க முடியும். நான் இந்தப் பகுதிக்குச் சென்றிருந்த போது என்னை சுற்றிக் கொண்டு நின்ற பெண்மணிகளிடமும் பெரியோர்களிடமும் இதனைச் சொல்லி விட்டு வந்தேன். 

ஆண்டுகள் கடந்து விட்டன. மீண்டும் ஒரு முறை நான் தமிழகம் செல்லும் போது திருவெற்றியூர் நகர் சென்று, இக்கோயில் இன்று எவ்வாறு இருக்கின்றது என்று பார்க்க வேண்டும்.

1 comment:

  1. அருமையான கருத்துக்கள்.,ஆய்வின் பிறப்புக்கள்.., வெகு சிறப்பு.,பாராட்டுக்களுடன் அன்பு வணக்கம் சகோதரி.

    ReplyDelete