Wednesday, April 13, 2016

9. தூத்துக்குடி பனிமயமாதா



தூத்துக்குடி நகர் முத்துக்குளித்தல் தொழிலுக்கு மிகப் பிரசித்தி பெற்ற ஒரு நகரம். தமிழகத்தின் தென்பகுதியில் கடற்கரையோரத்து நகரமாக இது அமைந்திருக்கின்றது. 2011ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக தூத்துக்குடி தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைச் செய்து வர இங்கு சென்றிருந்தேன். 

முத்துக்குளித்தல் என்பது கடலுக்குள் நீந்திச் சென்று சிப்பிக்குள் இருந்து முத்தெடுக்கும் தொழில். இப்பகுதி மக்களின் முக்கியத்தொழில்களில் மீன்பிடித்தல், கப்பல் கட்டுதல் எனபனவற்றோடு முத்துக்குளித்தலும் பிரசித்தி பெற்ற தொழிலாக காலம் காலமாக இருந்து வருகின்றது. தூத்துக்குடி முத்துக்கள் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பிய கடல் வணிகர்களால் விரும்பி வாங்கிச் செல்லப்பட்ட பொருட்களில் ஒன்றாக அமைந்திருந்ததைப் பற்றிச் சொல்லும் செய்திகள் இந்தத் தொழில் இப்பகுதியில் நீண்டகாலம் தொடர்ந்து மக்கள் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்திருப்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

தமிழக நிலப்பரப்பில் காலம் காலமாக அன்னிய தேசத்தவர் வருகை என்பது தொடர்ந்து நடந்து வருவதுதான். ஆயினும் இன்றைக்கு ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க மதம் பரப்ப தென்னிந்தியா வந்த போர்த்துக்கீசிய கத்தோலிக்க  மத குருமார்கள் தென் தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் படிப்படியாக இங்கேயே தங்கி  தங்கள் மதம் பரப்பும் பணியை மேற்கொண்டனர். இந்த மத குருமார்கள் தமிழகம் வந்து தங்கள் மதப்பிரச்சாரத்தைத் தொடங்க முற்பட்டபோது தமிழ் மொழி அடிப்படை அறிவு இல்லாமல் தம்மால் இத்தமிழ் நிலத்து மக்களுக்கு தங்கள் இறை போதனைகளை அறிமுகப்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்து கொண்டமையால்  மிகத்தீவிரமாக தமிழ்மொழியைக் கற்றனர். அப்படித் தமிழ் கற்று தமிழில் நூற்களையும் படிப்படியாக இவர்கள் அச்சுப்பதிப்பாக வெளியிட்டமை தான் அச்சுக்கலை தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே அறிமுகப்படுத்த காரணமாக அமைந்தது என்பது வரலாற்று உண்மை.

தூத்துக்குடி பகுதியானது, பரத சமூகத்து மக்கள் நிறைந்த ஒரு பகுதி. கிறிஸ்துவ மதம் இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்கள் சமயத்தால் இந்துக்களாக  இருந்தவர்களே. இன்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரதவ மக்கள்  தூத்துக்குடி கடற்கரையோரத்து முத்துக்குளித்துறை பகுதியில் தங்கள் இயல்பான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் வியாபாரம் செய்ய,  அக்காலத்தில் அப்பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அரேபிய மூர் இன வியாபாரிகளும் இப்பகுதியில் முத்துக்குளித்தல் தொழிலைத் தொடங்கி இருந்தனர். மத்திய கிழக்காசியாவிலிருந்து வந்த அரேபியர்கள்  இவர்கள். இவர்களுக்கும் இங்கேயே காலம்காலமாக முத்துக்குளித்தல் தொழில் புரிந்து வரும் பரதவ இன மக்களுக்கும் அவ்வப்போது ஏதாவது சண்டை சாச்சரவு என்பது நடப்பது வழக்கமாக இருந்திருக்கின்றது.

ஒரு முக்கிய நிகழ்வு கி.பி.1535ம் ஆண்டு நிகழ்ந்தது. ஒரு நாள் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஒரு பரதவ சமூகத்துத் தமிழ்ப்பெண் மாவுப்பணியாரம் விற்றுக் கொண்டிருந்தார்.  அப்பெண்ணை மூர் அராபியன் ஒருவன் அவமானப்படுத்தி விட்டான். இதனை அறிந்த அவள் கணவன் கோபம் தாளாது, அவனோடு சண்டையிட்டான். இந்தச் சண்டை நடந்த போது மிக கொடூரமாக  அந்தக் கணவனின் காதில் அணிந்திருந்த தொங்கட்டான் என்று சொல்லப்படுகின்ற காதணியை அவனது காதோடு சேர்த்து மூர் அராபியன் வெட்டி எறிந்து விட்டான். இது அவ்வூர் பரதவ மக்களுக்கு பெரும் சினத்தை உண்டாக்கியது.  இந்தக் கொடுஞ்செயல் தங்கள் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரிய அவமானமாகக் கருதிய பரதவர்கள், அராபிய  மூர்களோடு சண்டயிட்டு, பலரைக் கொன்றனர். அரேபிய மூர்களும் சும்மா இருக்கவில்லை.   ஆத்திரமடைந்த மூர்கள் கீழக்கரையிலிருந்தும், காயல்பட்டினத்திலிருந்தும் ஏராளமான ஆயுதங்களுடன் திரண்டுவந்து, பரதர்களோடு போரிட்டு நிறைய தமிழ் பரதவ சமூகத்து மக்களையும் கொன்றனர். வெட்டி எடுத்துக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு பரதவ இனத்தவர் தலைக்கும் ஐந்து சிறிய பொற்காசுகள் தருவதாக மூர்கள் வாக்களித்தனர். அவ்வளவுதான்! ஏராளமான பரதவர்களின் தலைகள் வெட்டி எறியப்பட்டன. ஒரு தலைக்கு ஐந்து பொற்காசுகள் என்பது, ஒரு தலைக்கு ஒரு பொற்காசு என்று மலிவாகும் அளவிற்கு ஏராளமான கொலைகள் நடந்தேறின. இது மக்கள் மனதில் பெறும் அச்சத்தை உருவாக்கியது.

மூர் அராபியர்களுடன் ஏற்பட்ட இப்பிரச்சனையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவி நாட வேண்டிய அவசியம் பரதவ மக்களுக்கு ஏற்பட்டது. இது மதமாற்றத்திற்கு நல்லதோர் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.  அச்சமயத்தில் கேரளாவில் இருந்த டாம் ஜோகுருஸ் என்ற போர்த்துக்கீஸிய குதிரை வியாபாரி ஒருவர் பரதவக் குலத் தலைவர்களான பட்டங்கட்டிகள் என்பவர்களிடம் பேசி, அவர்களுக்குப் போர்த்துக்கீஸிய படைகளின் ஆதரவைப் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு பரதவர்கள், கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் என்று ஆலோசனை வழங்க கி.பி.1535ம் ஆண்டின் இறுதியில் பட்டங்கட்டிகள் கொச்சின் சென்று அங்கே முதன்மை கத்தோலிக்க குரு மிக்கேல் வாஸ் அடிகளாரிடம் திருமுழுக்கு பெற்று மதம் மாறினர். இந்த ஒப்பந்ததில்  வாக்களித்தபடி தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதிக்கு  ஒரு பெறும் கப்பற்படையை போர்த்துக்கீஸிய படைத் தளபதி அனுப்பிவைத்து மூர் அராபியர்களுடன் போரிட்டு அவர்களை அடக்கி படிப்படியாக அப்பகுதி முழுமையையும் தம் வசமாக்கிக் கொண்டார். அதன் வழி அப்பகுதி பரதவ மக்களுக்கு போர்த்துக்கீஸியர்களின் பாதுகாப்பு கிடைத்தது.    அதே ஆண்டிலும் பின்னர் 1536ம் ஆண்டிலும் தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதி இந்து சமய பரதவர்கள் 30,000 பேர் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 

அப்படி மதம் மாறிய பரதவ இன மக்கள் தாங்கள் புதிதாக மாறிய மதத்தில் வழிபாட்டினைச் செய்ய முற்பட்டபோது  தங்களுக்கு காலங்காலமாக பழக்கமான வகையிலேயே தங்கள் மத வழிபாட்டினைச் செய்வதை வழக்கமாகக் கொண்டனர்.

கத்தோலிக கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவில் வளர்ந்து விரிவைடந்த மதம். அங்கே ஏசு கிறிஸ்துவின் தாயாரான புனித மேரி அன்னையார் வெள்ளை நிற நீண்ட கவுன் போன்ற உடையில் தான் அனைத்து தேவாலயங்களிலும் காட்சி அளிப்பார். அந்த மேரி அன்னை தூத்துக்குடிக்கு அறிமுகம் செய்யப்பட்ட போது பனிமயமாதாவாக கோயில் கொண்டு அருளினார். அந்தச் சிலை மட்டுமன்றி தமிழகத்தில் அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட தேவாலயங்களில் புனித அன்னை மேரி, வண்ண சேலைகள் கட்டிய வகையில் இந்து கோயில் பெண் தெய்வங்கள் போல உடை அலங்காலாரம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

அது மட்டுமா? 

கத்தோலிக்க மதம் பிறந்த ஐரோப்பாவில்  மத விழாக்களில் தேர் திருவிழா என்பது வழக்கில் இல்லாத ஒன்று. ஆனால் தமிழ் நிலத்தில் இந்து மத பண்டிகை மற்றும் திருவிழாக்களில் தேர் இழுத்துச் செல்வது என்பது நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் ஒன்று.  கத்தோலிக்க மததிற்கு மாறிய தூத்துக்குடி பரதவர்கள் தங்கள் தெய்வ நம்பிக்கையின் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான பனிமய மாதா கோயில் புனித அன்னை மேரிக்கு தேர் இழுத்துச் செல்வதை தொடர்ந்து கடந்த 200 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 

இந்தத் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது தேவாலயத்தின் வலது புறத்தில் இருக்கும் அலுவலகப் பகுதிக்குச் சென்று தேவாலயத்தின் மத குருவைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றேன். தொடர்ச்சியாக அப்பகுதியில் வாழும் எளிய மக்களுக்குத் தேவையான பல உதவிகளை இவர்களது அமைப்பின் வழி தொடர்ந்து செய்து வருகின்றார் என்ற செய்தியை அவரிடம் உரையாடும் போது தெரிந்து கொண்டேன். 

பனிமயமாதா பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றினை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவிற்காக தேவாலத்தின் மத குரு வழங்கினார்கள். அந்தக் கட்டுரை தொகுப்பில் அடங்கியிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கியில் http://www.heritagewiki.org/ வலைப்பக்கத்தில், கிறிஸ்துவம் என்ற தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் கிறிஸ்துவ மதம் தொடர்பான ஆவணங்களைச் சேகரிப்பதில் தொடர்ந்து நாம் ஈடுபட்டு வருகின்றோம். போர்த்துக்கீசிய மத குருமார்களான ஹெண்ட்ரிக்ஸ் ஹெண்ட்ரிக்ஸ் அடிகளார், வீரமாமுனிவர் என்ற பெஸ்கி அவர்கள், மற்றும் லூத்தரேனியன் மத போதகர்களான சீகன்பால்க், க்ரூண்ட்லர் போன்றவர்கள், தமிழ் மொழி ஐரோப்பா வரை பரவ வழி செய்தவர்கள். தமிழ் கிறிஸ்துவம் என்பது மிக விரிவான ஒரு ஆய்வுத்துறை. தமிழகத்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் சில குறிப்பிடத்தக்க இடங்களில் இந்த தமிழகம் வந்து சென்ற கிறிஸ்துவ மத போதகர்களின் கையெழுத்து ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.  அவை மின்னாக்கம் செய்யப்பட்டு பரவலாக ஆய்வுலகில் இவை ஆராயப்படவேண்டும் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு. அதற்கான நடவடிக்கைகள் சிலவற்றிலும் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டு வருகின்றோம் என்னும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

1 comment:

  1. சகோதரிக்கு , வணக்கம், நல்ல பதிவு --உங்களின் பதிவுக்கு எனது பணிந்த, நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள், இந்த விவரங்கள் கிடைத்தவுடன் ஏன் பதியவில்லை, கட்டுரை எழுத இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கிறது,இருப்பினும் மீண்டும் நன்றி--பரதவப்பாண்டியர் வரலாறு நீளமானது,இவ்வளவு சுருக்கியுள்ளீர்கள்--உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்----மிக்கி மைக்கேல் பெர்னாண்டோ.

    ReplyDelete