Friday, April 29, 2016

11.சித்தன்னவாசல் சிற்பங்கள்

டாக்டர்.சுபாஷிணிதமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கலாச்சார பின்னனியும் வரலாற்றுச் சிறப்பும் பெற்று தனித்துவத்துடன் விளங்குகின்றது.  இந்த மாவட்டத்தில் வளம் மிக்க வரலாற்றுச் சின்னங்கள் ஏராளம் இருக்கின்றன. கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், குடைவரைக் கோயில்கள் என்று தமிழகத்தின் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னங்கள் சூழ்ந்த பகுதியாக புதுக்கோட்டை விளங்குகின்றது. கட்டுமானச்சிறப்பு கொண்ட கோயில்கள், சிற்ப வேலைகள் மட்டுமன்றி, தொல்படிமங்களான விசிறிக்கற்கள், முதுமக்கள் தாழி, என தொல்லியல், மானுடவியல் ஆய்விற்கு பல தகவல்களை வழங்கும் களமாகவும் புதுக்கோட்டை விளங்குகின்றது.

பொதுவாகவே புதுக்கோட்டை தொடர்பான வரலாற்றை பேச ஆரம்பித்தால் நமக்கு முதலில் மனதில் தோன்றும் பெயர் சித்தன்னவாசல் தான்.  சித்தன்னவாசல் எனும் ஊர் புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கின்றது. புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசலுக்குச் செல்லும் இடத்தில் இந்த ஊர் அமைந்திருக்கின்றது. புதுக்கோட்டை பகுதியானது தமிழகத்தில்  சமணம் பரவி செழித்த ஊர்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் சமண சமயம் மிக விரிவாக வேரூன்றி இருந்த பகுதிகளில் முக்கியமானதொரு பகுதியாக இதனைக் கருதலாம்.  மதுரையைப் போலவே புதுக்கோட்டையும் மிகப்பிரபலமாக சமணம் செழித்த ஊர் எனத்தயங்காது குறிப்பிடலாம்.

சித்தன்னவாசல் குகைப்பகுதிக்குச் செல்லும் முன் சாலையோரத்திலேயே பண்டைய வழிபாட்டுச்சின்னங்களான விசிறிக்கற்கள் ஓரிரண்டு சாலையின் இரு பக்கங்களும் இருப்பதை நாம் காணலாம். அவை இருக்கும் இடங்களிலேயே ஈமக்கிரியைச் சடங்குகள் நிகழ்ந்தமைக்குச்  சான்றாக வட்டக்கற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதையும் காணலாம். இப்பகுதியைக் கடந்து செல்லும் போது முதலில் நமக்குத் தென்படுவது ஏழடிப்பட்டம் எனப்படும் பாறைப்பகுதி. இந்த ஏழடிப்பட்டம் எனப்படும் பகுதி பாறைகள் சூழ்ந்த ஒரு பகுதி. இங்கே இயற்கையாக உருவான குகைகள் இருக்கின்றன. இக்குகைப்பகுதிகளில் முன்னர் சமணத்துறவியர்கள் தங்கியிருந்து பள்ளிகளை நடத்தியமைக்குச் சான்றுகளாக இருக்கும் சமணப்படுக்கைகளையும் கல்வெட்டுக்களையும் இன்றும் காணலாம். பாறையின் மேற்பகுதியில் பதினேழு கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. கற்படுக்கைகள் உள்ள பகுதி மழைக்காலத்தில் சேதமடையாமல் இருப்பதற்கு ஏதுவாக மலையில் காடி (இது மழை நீர் வடியும் வகையில் பாறையில் நீர் வடிய செய்யப்பட்ட ஒரு அமைப்பு)  வெட்டப்பட்டுள்ளது. 

சித்தன்னவாசல் கல்வெட்டு என்பது தமிழக தொல்லியல் வரலாற்றிற்கு முக்கியத்துவத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுவது. கி.மு.3ம் நூற்றாண்டிலிருந்து கி.மு.1ம் நூற்றாண்டு எனக்குறிப்பிடப்பிடப்படும்   தமிழி (தமிழ் பிராமி) எழுத்துருக்களில் அமைந்த கல்வெட்டுக்களை இங்கே காணலாம். அவற்றில் சில, சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து மறைந்த சமண முனிவர்களைப் பற்றிய குறிப்புக்களைக் கொண்டதாக அமைந்திருக்கின்றன.  இங்கே அமைக்கப்பட்டுள்ள கற்படுக்கைகளின் மேல் உள்ள கல்வெட்டுக்களை வாசிப்பது மிக சிரமமானதொரு செயலாகவே இருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணம், இங்கு வருகின்ற சுற்றுப்பயணிகளில் சிலரும் பொழுது போக்கிற்காக வருகின்ற இளைஞர்களும் பார்க்கும் இடங்களிலெல்லாம் தங்கள் பெயர்களையும் தங்கள் காதலன் அல்லது காதலி பெயர்களையும்  கீறி வைத்தும், தொலைபேசி எண்களை எழுதி வைத்தும் இங்குள்ள கல்வெட்டுக்களை வாசிக்க இயலாத நிலைக்கு மாற்றியுள்ளமைதான்.

தங்கள் பெயரையோ அல்லது தாம் விரும்பும் நபர்களின் பெயர்களையோ இவ்வகையான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் எழுதி வைக்கும் போது தமது சொந்த இனத்தின் வரலாற்றையே நாம் சேதம் செய்கின்றோம் என்று யோசிக்க பலர் மறந்து விடுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்திற்கு நாம் சென்று வந்தோம் என்பது பிறருக்குத் தெரிய வேண்டும் என நினைத்து சிலர் இவ்வகைக் காரியங்களைச் செய்கின்றனர். ஒரு சிலர் அந்தச் சின்னங்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்பது போல தனது பெயரும் தாம் விரும்புபவர் பெயரும் நிலைத்து நிற்கவேண்டும் என்றும் நினைத்து செய்கின்றனர். அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகச் செய்கின்றனர். காரணம் எதுவாகினும், இப்படிச் செய்ய்வதனால்  இச்சின்னங்கள் இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும் பாறை ஓவியங்களையும் எழுத்துக் குறியீடுகளையும்  கண்டு அவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. இது மிகவும் வருத்தத்திற்குறிய ஒரு நிலை. பொதுவாகவே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்திற்கு நாம் செல்லும் போது அதன் சீரும் சிறப்பும் கெடாத வகையில் நாம் ஒவ்வொருவரும் அதனைப் பாதுகாக்கும் எண்ணத்தை  மனதில் ஏற்படுத்திக் கொண்டு செல்வது மிக அவசியம்.

தமிழர் வரலாறு, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் என்பனவற்றை முறையாக ஆராய முற்படும் போது வரலாற்றுச் சின்னங்கள் தாம் மிக முக்கிய ஆய்வுக்கான ஆவணங்களாக அமைகின்றன. அவை சேதப்படுத்தப்படும் போது முறையான ஆய்விற்கு இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அமைவதால் நம் வரலாற்றை நாமே சீர்குலைத்த நிலையை நாம் ஏற்படுத்தி விடுகின்றோம் என்பதை மறக்க இயலாது.

ஏழடிப்பட்டம் பாறை பகுதிக்கு வலது புறத்தில் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் (கி.பி580 - 630) தான் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறுவதற்கு முன்னர் கட்டிய குடைவரைக்கோயில் ஒன்றுள்ளது. அரிவர்கோயில் என இது அழைக்கப்படுகின்றது. ஆயினும் அதற்குப்பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களான, மாறன் சேந்தன் (கி.பி654 - 670), அரிகேசரி மாறவர்மன் (கி.பி 670 - 700) ஆகியோர் இதனைப் புதுப்பித்துக்கட்டிய செய்திகளை கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது. இந்தக் குடைவரைக்கோயிலின் உட்பகுதியில் இருக்கும் முதல் மண்டபத்தை அடுத்து இரண்டாம் மண்டபம் வருகின்றது. உள்ளே சமண தீர்த்தங்கரர் மூவரின்  புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இக்குடைவரை கோயிலின் சுவர் சித்திரங்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. தமிழகத்து சுவர்சித்திரங்களில் புகழ்மிக்க சுவர் சித்திரமாக இது இன்றளவும் புகழ்பெற்றிருப்பது   இதன் தனிச்சிறப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. 

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் சித்தன்னவாசல், தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் தற்சமயம் உள்ளது. நான் 2013ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளைக் களப்பணிக்காகச் சென்றிருந்த போது விரிவான ஒரு பதிவைச் செய்யக்கூடிய வாய்ப்பு  எனக்கு அமைந்தது. அப்பதிவு விளக்கமாகவும் ஒரு வீடியோ பதிவாகவும் வெளியிடப்பட்டது.  இந்த விழியப்பதிவை யூடியூப் வழி https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg என்ற முகவரியில் கண்டு மகிழலாம்.

சித்தன்னவாசல் கல்வெட்டுக்களையும், குடைவரைக்கோயில் சிற்பங்களையும், ஓவியங்களையும் பதிவு செய்துவிட்டு வரும்போது  கீழே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிலரை சந்தித்தேன். அவர்களிடம் உரையாடி சித்தன்னவாசலின் வரலாற்றுச் சிறப்பை பற்றி கொஞ்சம் விவரித்தேன். அவர்கள் அன்புடன் என்னை அமரவைத்து அவர்கள் கொண்டுவந்திருந்த உணவையும் பழங்களையும் எனக்குக் கொடுத்து சாப்பிடுமாறு அன்புக்கட்டளையிட்டனர். இது மறக்கமுடியாத ஒரு இனிமையான அனுபவம். 

சித்தன்னவாசல் சிற்பங்கள் கற்சிற்பங்கள்; அவை அசையாதவை! இந்தப் பெண்களோ அசையும் சித்தன்னவாசல் சிலைகள், என நினைத்துக் கொண்டே மகிழ்வுடன் மீண்டும் புதுக்கோட்டைக்கு புறப்பட்டேன்.

4 comments:

 1. Great Sharing. The locals should be involved in protecting such precious places

  ReplyDelete
 2. அற்புதமான விழியப்பதிவு...வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 3. அற்புதமான விழியப்பதிவு...வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 4. அற்புதமான பதிவு, உங்கள் சேவையும் மனிதநேயமும் ,சிறக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete