Wednesday, March 30, 2016

7.எட்டயபுரம் ஜமீன் அரண்மனைக்குச் செல்வோமா?வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் உடன் நம் மனதில் தோன்றும் இன்னொரு பெயர் எட்டப்பன். 

„எட்டப்பன் வேலை செய்து விட்டாயே“  என்று தந்திரமாக ஏமாற்றி பிறரைக் காட்டிக் கொடுப்பவர்களைப் பேசும் வழக்கம் நம்மில் சிலருக்கு உண்டு. தமிழர் நம் பேச்சு வழக்கிலும் சரி, எழுத்துக்களிலும் சரி „துரோகம்“ என்ற சொல்லைக் குறிக்க “எட்டப்பன் வேலை செய்து விட்டாயே“,  என்று எட்டப்பன் என்ற ஒருவரை சுட்டி குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. எட்டப்பன் என்னும் ஜமீன்தார் வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்து ஒரு மாவீரன் தூக்கிலிட்டு கொலையுண்டு இறந்து போக  காரணமாக இருந்தார் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். இதற்கு முக்கிய காரணமாக அமைவது சிவாஜிகணேசன் நடித்து தமிழ்த்திரையுலகில் மாபெரும் வெற்றியைக் கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தான்.  

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர் பொதுமக்கள் விரிவாக அறியாமல் இருந்த காலம்; 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். “வீரப்பாண்டிய கட்டபொம்மன் நாட்டுப்புர பாடல்கள்“ வழி மட்டுமே இந்த பாளையத்துக் குழுத்தலைவனை எல்லோரும் அறிந்திருந்தார்கள். அப்பொழுது திரு.ம.பொ.சி என அழைக்கப்படும் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள் கதை வசனம் எழுதி வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான் இந்த பாளையத்துக்குழுத் தலைவனைத் தமிழர் இன வீரத்தலைவனாக மக்கள் மனதில் ஒரு தகவலைக் கொண்டு சென்று சேர்ப்பித்தது. இந்தக் கதை மக்களைச் சென்றடைய மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்றால் மிகையில்லை. அவரது வசனமாகிய,

வரி, வட்டி, கிஸ்தி.... யாரை கேட்கிறாய் வரி... எதற்கு கேட்கிறாய் வரி...
வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது...
உனக்கேன் கட்டவேண்டும் வரி...

எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா?
அல்லது கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா?
மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே?

என்பது பரவலாகி எல்லா தரப்பினரையும் ஈர்த்தது என்பதோடு வீரபாண்டிய கட்டபொம்மனை ஒரு மாவீரனாக மக்கள் மனதில் உருவாக்கி வைத்தது. கட்டபொம்மன் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தவர்களில் ஒருவர் என்றாலும் அதில் குறிப்பிடப்படும் எட்டப்பனைப் பற்றி சொல்லப்படும் கதை திரிக்கப்பட்ட ஒரு கதை என்ற விசயத்தை வெளிப்படுத்தினார் தமிழகத்தில் எட்டயபுரத்தில் பிறந்து தமிழக அரசில் பல காலங்கள் சமூக நல உயர் அதிகாரியாக  பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் அமெரிக்காவில் வாழும் அம்மையார் சீதாலட்சுமி அவர்கள். அவர் இந்த விசயம் தொடர்பாக எழுதிய தொடர்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின் தமிழில் தொடர்ந்து வெளிவந்தது. அக்கட்டுரையை வாசித்த போது இது பற்றி மேலும் எனக்கு மேலும் அறிந்து கொள்ள ஏற்பட்ட ஆவலை வெளிப்படுத்தியபோது ஒரு முறை நேராக எட்டயபுரம் சென்று ஜமீந்தார் மாளிகையைப் பார்த்து பேட்டி எடுத்து வருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான்  இதன் அடிப்படையில் அவரது ஏற்பாட்டு உதவியோடு ஜமீந்தார் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு  எட்டயபுரம்  சென்று ஜமீந்தார் மாளிகையச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் குறிப்புக்கள் எடுத்துக் கோண்டும் வந்து அவற்றை வெளியிட்டேன். அப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19 என்ற வலைப்பக்கத்தில் உள்ளன. 

எட்டயபுர ஜமீந்தார் பற்றியும் அவரோடு பேசப்படுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியும் நான் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குத் தமிழகத்தில் நமக்குக் கிடைக்கின்ற சில ஆதாரத்தரவுகளை ஆராயவேண்டியது மிக அவசியம். சினிமா படத்தை மட்டிலும் பார்த்து விட்டு இது தான் முழுமையான தமிழக வரலாறு என்று மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தால் உண்மையான வரலாறு மறைந்து திரிக்கப்பட்ட கதைகள் உண்மையாகி விடும் நிலை ஏற்படும் என்பதோடு இது வரலாற்றுக்கு நாம் செய்யும் பிழையாகவும் அமையும் என்பதை மறக்கலாகாது.

கட்டபொம்முவின் வம்சத்தினர் இன்றைய ஆந்திர நிலப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி பாஞ்சாலாங்குறிச்சிக்கு வந்தவர்கள். பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறும் ஒரு வீரச்சம்பவம் இவர்கள் மனதை ஈர்க்க, அதுவே காரணமாகக் கொண்டு அங்கே தங்கி தங்கள் ஆட்சியை இவர்கள் விரிவாக்குகின்றனர். அந்தவகையில் தனது பாட்டனாருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். இது பற்றிய விரிவான தகவல்களை மேற்குறிப்பிட்ட வலைப்பக்கத்தில் வாசித்தறியலாம்.

எட்டயபுர ஜமீந்தார் வம்சத்தினரும் ஆந்திர நிலப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து வந்து எட்டயபுரத்தில் குடியேறியவர்கள் தாம். எட்டயபுர ஜமீந்தார் குடும்பத்தின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து கடந்த நூற்றாண்டு தகவல் வரை பதிவாக்கி வைத்திருக்கும் நூல் வம்சமணிதீபிகை என்பது. வம்சமணிதீபிகையின் மூலம் 1879ல் வெளிவந்துள்ளது.  இந்த நூல் கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதர் என்பவரால் முதலில் எழுதப்பட்டது. இந்த நூல் வாய்மொழிச் செய்திகளின் தொகுப்பாகவும், அரண்மனையில் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை இக்கால தமிழ் நடையில் மாற்றி எழுதித்தர விருப்பம் கொண்டிருந்தார் எட்டயபுர வாசியான சுப்பிரமணிய பாரதியார். ஆனால் அது நடைபெறவில்லை. இச்செய்தியை இன்று நமக்குக் கிடைக்கின்ற புதிய பதிப்பில் பாரதி எட்டயபுர ஜமீந்தாருக்கு எழுதிய ஒரு கடிதமாகக் காண முடிகின்றது. 


அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர், பாரதி எண்ணப்படி கடின தமிழ் நடையையும் பிழைகளையும் திருத்தி எளிய தமிழில் இதே நூலை  வெளியிட எண்ணம் கொண்டிருந்த திரு.இளசை மணியன் அவர்கள்  பலரிடம் இது பற்றி கலந்து பேசிய போது அதனை அப்படியே மாற்றமில்லாமல் பதிப்பிக்குமாறு நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக  தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எவ்வித திருத்தமும் செய்யாமல் மூல நூலை அப்படியே வெளியிட வேண்டும் என வற்புறுத்திக் கூறியதன் அடிப்படையில் மாற்றங்கள் இன்றி இந்த நூலை பதிப்பித்துள்ளார் திரு.இளசை மணியம் அவர்கள். மறுபதிப்பு கண்டுள்ள வம்சமணி தீபிகை 2008ம் ஆண்டு திரு.இளசை மணியத்தினால் தொகுக்கப்பட்டு, தென்திசை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த நூலில் முதல் பிரகரணம் எட்டயபுரம் ராஜாக்களின் பரம்பரை விஷயங்களைப் பொதுவாகக் கூறுவதாக சிறு பகுதியாக மட்டுமே உள்ளது. இரண்டாம் பிரகரணத்திலிருந்து ராஜ வம்சத்தினரின் பெயர்கள் பட்டியலிடப்பட்ட தகவல் இருக்கின்றது. இந்த இரண்டாம் பிரகரணத்துக்கான இங்கிலீஷ் ஆண்டு 1304 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆக 1304லிருந்து தொடங்கி இந்த ராஜ வம்சத்தினரைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக 13ம் பிரகரணத்திலிருந்து 37ம் பிரகரணம் வரை பாஞ்சாலங்குறிச்சி சண்டை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.  குறிப்பாக 1799ல் நிகழ்ந்த முதலாம் பாஞ்சாலங் குறிச்சிப் போர், 1801ல் நடந்த இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போர் பற்றிய செய்திகள் இப்பக்குதிகளில் உள்ளன. 

வம்சமணி திபிகை ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். இதில் ஒவ்வொரு காலத்திய நிகழ்வுகளின் பதிவுகளும் இடம் பெறுகின்றன என்பதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு. அந்த  வகையில் பாளையத்து குறுநில மன்னர்களில் ஒருவரான கட்டபொம்மன் காலத்து நிகழ்வுகளும் பதியப்பட்டிருக்கின்றன.  

இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள சான்று கடிதங்கள் இவற்றிற்கு வலு சேர்ப்பனவாக உள்ளதுவும் தெளிவாகத் தெரிகின்றது.   அதன்படி பாஞ்சாலங்குறிச்சிப் போரின் போது அவரைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெறும் முயற்சியினை எட்டயபுர ஜமீந்தார் மேற்கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது.  ஆனாலும் கட்டபொம்முவை பிடித்து கைது செய்து கொடுத்தது புதுக்கோட்டை மஹாராஜா விஜயரகுநாத தொண்டமான் பகதரவர்கள் என்பதும் இந்த நூலில் தெளிவாகக் காட்டப்படுகின்றது.  

ஆக, வரலாறு இப்படி இருக்கும் போது  வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமோ கட்டபொம்முவை வீரனாக்கி எட்டப்ப ஜமீந்தாரை துரோகியாக்கி காட்டிவிட்டது என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்றே கூறவேண்டும்.

சரி, எட்டப்பன் என்பதற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவும் பலருக்கும் ஆர்வம் இருக்கலாம்.

தமிழக நிலப்பரப்பில் எட்டயபுர அரச வம்சத்தின் காலம் கி.பி 803லிருந்து பதிவாகியிருகின்றது. இதனை Etaiyapuram - Past and Present நூலும் உறுதி செய்கின்றது. இந்த அரச வம்சத்தில் 11ம் பட்டமாகிய நல்லமநாயக்கர் காலத்திலிருந்து தான் இந்த அரசர்களுக்கு எட்டப்பன் என்ற அடைமொழி கிடைக்கின்றது.  ஆட்சி செய்த காலம்: 43 ஆண்டுகள். இவர் ஆட்சியை ஆங்கில வருடம் 1304ல் தொடங்குகின்றார். ஒரு கொடியன் ஒருவனை மல்யுத்ததில் வெற்றி கண்டு கொலை செய்துவிட அனாதைகளாகிப்போன அவனது எட்டு குழந்தைகளையும் இனி தானே வளர்த்து ஆளாக்குவேன் எனப் பொருப்பு எடுத்துக் கொண்டார் இந்த மன்னர் என்பதற்காக அவருக்கு சிறப்பு அடைமொழியாக எட்டு குழந்தைகளுக்கு அப்பன், எட்டப்பன் என்ற பெயர் வாய்த்தது.  

இந்த விசயங்களை இந்த நூலை வாசித்தும் எட்டயபுர ஜமீன் அரச மாளிகைக்கு நேரில் சென்றும் பார்த்தும் பேட்டிகள் எடுத்தும் அறிந்து கொண்டேன். நான் அறிந்து கொண்ட தகவல்களைப் புகைப்படமாகவும், கட்டுரைத் தொடராகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியிட்டேன்.http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19 என்ற பக்கத்தில் முழு தகவல்களும் அடங்கியுள்ளன.

எட்டப்பன் என்ற சொல்லைப் போல எத்தனை விசயங்கள் சரியான தகவல்களைத் தேடாமல் போவதாலும் மேம்போக்காக, நன்கு ஆராயமல் பேசுவதாலும், தமிழக வரலாறும் தமிழர் வரலாறும்  தவறாக பலரால்  பேசப்படுவது காலத்தின் கொடூரம் தான்!

1 comment:

  1. வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு வசனம் எழுதியவர் ம.பொ.சி அல்ல; சக்தி கிருஷ்ணசாமி.
    திருத்தி விடவும்.

    ReplyDelete