Thursday, April 21, 2016

10.பிரித்தானிய நூலகத்தில் தமிழ்க்கருவூலங்கள்



காலணித்துவ ஆட்சி என்பது தான் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டிலிருக்கும் வளங்களைச் சுரண்டிக் கொண்டுபோய் தன் நாட்டில் சேர்க்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டது.  

ஒரு நாட்டின் வளங்கள் எனும் போது,  அவை இயற்கை வளங்களாகட்டும், கலைப்படைப்புக்களாகட்டும், அறிவுச் சுரங்கங்களாகட்டும்.. அவை எத்தன்மையினதாயினும், காலணித்துவ ஆட்சி செய்த, அல்லது ஆட்சியை இன்றும் செய்யும் நாடுகள், அவற்றை சிரமம் பாராமல் கப்பலேற்றிக் கொண்டு போய் தங்கள் நாட்டில் வைத்துப் பாதுகாத்து தங்கள்  வளங்களாக அவற்றிற்கு முத்திரை குத்தி பெருமை பட்டுக் கொள்வதில் சளைத்தவர்களல்ல.

இயற்கை வளங்கள் நிறைந்த மலேசியா இந்தோனிசியா போன்ற நாடுகளிலிருந்து இயற்கை வளங்களை முந்தைய காலணித்துவ ஆட்சி செய்த போர்த்துக்கீசிய, டச்சு, இங்கிலாந்து போன்ற அரசுகள் தங்கள் நாடுகளின் பொருள் வளத்தைப் பெருக்குவதற்காக எடுத்துச் சென்றன.  ஆப்பிரிக்க கண்டத்தின் கானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட செம்பணை மரங்கள் மலேசிய காடுகளை அழித்து தோட்டங்கள் உருவாக்கி நடப்பட்டு அதனிலிருந்து வரும் வருமானம் அனைத்தும் இங்கிலாந்து அரசின் போர்க்காலத்தேவைக்கும் நாட்டின் வளத்தைப்பெருக்கவும் பயன்படுத்தப்பட்டன. இதே போல கடந்த இரு நூற்றாண்டுக்கு முன் காடுகளை அழித்து,  ரப்பர் மரத்தோட்டங்கள்  மலேசியாவில் உருவாக்கப்பட்டன என்பது  நாம் அறிந்த செய்தி தான் என்றாலும் அதிலிருந்து பெறப்பட்ட பொருளாதார வளம் என்பது முதலாம் உலகப்போரின் போதும் இரண்டாம் உலகப்போரின் போது பெருவாரியாக இங்கிலாந்து அரசினால் பயன்படுத்தப்பட்டது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.

இந்திய சூழலில் காணும் போது ஆங்கிலேய காலணித்துவ அரசும் சரி ப்ரென்சு காலணித்துவ அரசும் சரி,  அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலப்பகுதியின் வளங்களைச் சுரண்டித் தங்கள் நாட்டில் சேர்ப்பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டனர். ஆனாலும் கூட பெருவாரியான இந்திய நிலப்பகுதி ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அமைந்திருந்தமையால், ஆங்கிலேய அரசு இயற்கை வளங்களோடு அரும்பொருட்கள் பலவற்றையும் கூட தங்கள் நாட்டின் கலைப் பெருமையை விரிவாக்கவும் தங்கள் பேரரசின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிக் கொள்ளவும் எடுத்துக் கொண்டு போய் வைத்துள்ளன. 

ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது ஜெர்மானிய லூத்தரன் மத சபையினர் டென்மார்க அரசின் பொருளாதார உதவியுடன் தமிழகத்தின் சில ஊர்களில் கல்விமையங்களை அமைத்திருந்தனர். அதே போல அவர்களுக்கு முன்னர் தமிழகம் வந்து கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை தமிழக நிலப்பரப்பில் விரிவாக்கிய போர்த்துக்கீஸிய கத்தோலிக்க பாதிரிமார்களும்  கல்விக்கூடங்களை அமைத்தும் ஆய்வு நிறுவனங்களை அமைத்தும் கல்விச்சேவைகள் செய்து வந்தனர். ஆக கடந்த ஐநூறு ஆண்டுகள் என எடுத்துக் கொண்டால் ஐரோப்பிய நாடுகளான போர்த்துக்கல், ப்ரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் தங்கள் ஆளுமையை தமிழக நிலப்பரப்பில் செலுத்திய நிகழ்வுகள் என்பது நிகழ்ந்தது. இந்தச் சூழலில் அரும்பொருட்கள் மட்டுமன்றி அறிவுக்கருவூலங்களும் இந்த ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பது மறுக்கமுடியாத வரலாற்று உண்மை.

இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் காலணித்துவ அரசு திட்டமிட்டு எடுத்துச் சென்ற வளங்களென்பது ஒரு புறமிருக்க, இந்தியாவிற்குப் பணியாற்ற வந்த ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் சொந்தச் சேகரிப்புக்களாகச் சிலவற்றையும் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றனர். உதாரணமாக, இங்கிலாந்தின் விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தை எடுத்துக் கொண்டால், அதில் இருக்கும் பெருவாரியான அரும்பொருட்கள் தனியார் சேகரிப்பிலிருந்து வாங்கி சேகரிக்கப்பட்டமை பற்றிய செய்திகளை அறியலாம். இதே போலத்தான் ஏனைய பிற அருங்காட்சியகங்களில் உள்ள அரும்பொருட்களையும் கூறலாம்.

அரும்பொருட்கள் என்னும் வகையில் நூல்களையும் பனை ஓலைச் சுவடிகளையும் செப்பு ஆவணங்களையும், காகித ஆவணங்களையும் நாம் மறந்து விடமுடியாது. 

உலகின் மிகத் தரம் பாய்ந்த நூலகமான பிரித்தானிய நூலகத்தில் இருக்கும் ஆசிய ஆப்பிரிக்கத் துறையில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஆவணங்கள் மிகப்பல. இங்கே பனை ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், காகித ஆவணங்கள் பழம் நூல்கள், அறிக்கைகள், செய்தித்தாட்கள் என தமிழ்மொழியில் அமைந்த பல அரும்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை அனைத்துமே இங்கிலாந்தின் காலணித்துவ ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் தாம்.

காலின் மெக்கன்சி என்னும் ஆங்கிலேயர்தான்  இந்தியாவில் முதன் முதலாக 18ம் நூற்றாண்டில்  ஆவணப்பாதுகாப்பை செயல் படுத்தியவர். இவரை நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். காலின் மெக்கன்சி இலங்கை, இந்தோனிசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் தனது பணிக்காலத்தில் பல அரும்பொருட்களைச் சேகரித்தார். அவரது ஆவணப் பாதுகாப்பு முயற்சியின் அடிப்படையில் தான் அதற்கடுத்தார் போல நிகழ்ந்த ஆவணப்பாதுகாப்பு முயற்சிகள்,  தமிழ் அச்சுநூல் முயற்சிகள் ஆகியனவற்றை நாம் வரிசைப்படுத்த முடியும். காலின் மெக்கன்சியின் சேகரிப்புக்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டி, ஹிந்தி ,சிங்களம் ஆகிய மொழிகளில் அமைந்தவை. சென்னையில் இருக்கும் கீழ்த்திசை ஆவணப்பாதுகாப்பு மையத்தில் காலின் மெக்கன்சியின்  சேகரிப்பில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள்  பாதுகாக்கப்படுகின்றன. அதே போல வங்காளத்திலும் ஒரு நூலகத்தில் காலின் மெக்கன்சி சேகரிப்புக்கள் உள்ளன. இதற்கடுத்தார்போல,  ஆனால் மிகப்பெரிய எண்ணிக்கையிலான காலின் மெக்கன்ஸி ஆவணத் தொகுப்பு இருப்பது இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் தான்.

இந்த நூலகத்தில் உள்ள ஏழு மாடிகளுக்குச் செல்லும் பாதைக்கு இடையே நீள்சதுர வடிவில் அமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் காலின் மெக்கன்சி ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை மட்டுமன்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த பிரித்தானிய நூலகத்தின் ஆசிய ஆப்பிரிக்க துறையின் கீழ் இருக்கும் சேகரிப்பில், தமிழ் மொழி நூல்கள், ஆவணங்கள், வரைபடங்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்து ஆவணங்கள், செய்தித்தாட்கள், ஆகியனவும் ஏராளமானவை சேகரித்து பட்டியலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

2001ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட பின்னர் ஒரு முக்கியத்திட்டமாக நாம் பிரித்தானிய நூலகத்துடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டு ஆவணப்பாதுகாப்பு முயற்சியைத் தொடங்கினோம். அதன் வழி சில  பழமையான நூல்களை மின்னாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் சேகரத்தில் உலகத்தமிழர் பயன்பாட்டிற்காக இணைத்து வைத்துள்ளோம்.  இந்த நூல்கள் அடங்கிய பகுதியை http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html என்ற எமது வலைப்பக்கத்தில் காணலாம்.

இந்தத்திட்டத்தின் வழி மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களில் 1898ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஹாஸ்ய மஞ்சரி, 1893ம் ஆண்டில் வெளியிடப்பட்ட குதிரைப்பந்தைய லாவணி, , 1899ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மூலிகை மர்மம், 1905ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொடுகுறி சாஸ்திரம் போன்ற நூற்களைக் குறிப்பிடலாம்.

தமிழர் தம் அறிவுக் கருவூலங்கள் ஐரோப்பாவில் பல நூலகங்களிலும், ஆர்க்கைவ்களிலும், தனியார் சேகரிப்பாகவும் பாதுகாக்கப்படுகின்றன. இவை பாதுகாக்கப்படும் விதம் தமிழக சூழலைவிட பன்மடங்கு தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்ரது என்படஹி மறுக்க முடியாது. ஆயினும் கூட தமிழர் தம் அறிவுக் கருவூலங்களான இவை மின்னாக்கத்தின் வழி டிஜிட்டல் தொழில் நுட்பத்துணையோடு பதிவு செய்யப்பட்டு தமிழ் மக்கள் வாசிப்பிற்கு கிடைக்கும் வகையைச் செய்ய வேண்டிய பெரும் கடமை நம் முன்னே இருக்கின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை எம்மால் முடிந்த அள்வு இவ்வகை முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன்.

1 comment:

  1. மதிப்புமிக்க தகவல்கல்...பாராட்டுதலுக்குரிய முயற்சிகள்.தமிழ் அழியாமல் காக்க.,ஒவ்வொரு தமிழனும் பங்காற்ற வேண்டுமே...மின்னாக்க நூல்களைப் படித்தபின்.,மேஎலுன் என் கருத்துக்களைப் பகிர்கிறேன்.,தங்கள் தமிழ்ப்பணிக்கு.,சிரந்தாழ்ந்த வணக்கங்களும்.,சிந்தைமகிழ் வாழ்த்துக்களும்.

    ReplyDelete