Thursday, May 5, 2016

12.அன்னை பூமி

டாக்டர்.சுபாஷிணிகாட்டு விலங்குகளை வேட்டையாடி ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்குப் பெயர்ந்து,  நாடோடியாகத் திரிந்த  மனித குலம், விவசாயத்தைக் கற்றுக் கொண்ட பின்னரே படிப்படியே நாகரிகம் அடைந்தது. உலகம் முழுவதும் பல்லின மக்களிடையே இந்தக் கூறுகளை மானுடவியல் அடிப்படையில் நம்மால் காணமுடிகின்றது.  தமிழர் தம் பண்பாட்டுக் கூறுகளில் விவசாயத்திற்குப் பண்டைய காலம் தொட்டே தனியிடம் உண்டு.

விவசாயம் என்பது தமிழர் பண்பாட்டில் இடம்பெறுகின்ற முக்கிய அம்சம் தான். உழவர்களையும் விவசாயத்தையும் மதித்துப் போற்றும் சமூகமாகவே  தமிழ்ச்சமூகம் இருக்கின்றது. தமிழர் தம் வாழ்வியலில் மிக முக்கியப் பங்கு பகிக்கும் பண்டிகைகளில் ஒன்று உழவர்களுக்கும் உழவுத்தொழிலுக்கும் சிறப்பு சேர்க்கும்  பொங்கல் திருநாள் தான். பொங்கல் திருநாள் பல ஊர்களில் தமிழ் மக்களால் தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுவதும் உழவுத்தொழிலுக்குத் தமிழ்ச்சமூகம் கொடுத்திருக்கும் உயரிய மதிப்பினை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

கருத்தளவில் உழவுத்தொழில் பற்றிய மதிப்பு என்பது இருந்தாலும் பொருளாதார அடிப்படையில் அது லாபம் தராத ஒரு தொழில் என தவறான எண்ணம் கொண்டு பலர் கிராமப்புறங்களில் உள்ள வயல் வெளிகளை நகர்மயமாக்கலின் பொருட்டு விற்பதும், விவசாயத்தை விட்டு நகர்ப்புறங்களுக்குக் குடியேறி விவசாயத்தைப் புறந்தள்ளி வாழும் நிலையையும் கூட காண்கின்றோம். 

பொருளாதார ரீதியாக விவசாயிகளின் நிலை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். மனிதனின் அடிப்படை தேவை உணவு. தமிழ் மக்களின் அடிப்படை உணவு சோறுதான். நம் வாழ்க்கையே ஒரு வேளை உணவை நம்பித்தான் இருக்கின்றது. அதனால் விவசாயத்தை அரசாங்கம் பாதுகாத்து ஆதரவு கொடுத்து வளர்க்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவு பொது மக்களும் விவசாயத்தையும், விவசாயத் தொழிலையும், விவசாயிகளையும் மதிக்கும் பண்புடையோராக இருத்தல் நாம் உண்ணும் உணவிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.

தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழர்களின் வாழ்வில் இடம் பிடிக்கும் விவசாயத்தொழில் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைப்பதிலும் நாட்டம் கொண்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்தில் விவசாயத்தொழில் தொடர்பான சில பதிவுகளை 2009ம் ஆண்டு ஒலிப்பதிவு பேச்சுக்களாகப் பதிவு செய்து அவற்றை வெளியிட்டுள்ளதோடு அவை ஏனைய பொதுமக்களும் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இணைத்து வைத்துள்ளோம்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், ஆடி மாத வாக்கில் வயலில் தண்ணீர் திறந்து விடப்படும் போது விவசாயிகளுக்கு அது ஒரு குதூகலமான நாள் தான். வயலுக்கு நீர் வந்தால் அது தீபாவளி கொண்டாட்டத்தைப் போல மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்குமாம். ஆற்றில் நீர் வரும்போது அதனை மிக உயர்வாகக் கருதி ஆற்று நீருக்கு சடங்குகள் செய்து வழிபட்டு  மக்கள் வயலுக்குப் பாய்ச்சப்படும் நீரை வரவேற்கின்றனர். 

விவசாயம் செய்வதற்கு முன்னர் வயல் நிலத்தை தயார் செய்வதே ஒரு தனி கலை. பல  படி நிலைகளில் விளை நிலத்தைத் தயார் செய்யும் பணி நடக்கின்றது. தமிழர் வாழ்வியலில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்று . கலாச்சார வளம் நிறைந்தது தமிழர் தம் வாழ்க்கை. தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு தனி சடங்கு, சம்பிரதாயம் என வைத்து, அதன் சூழலிலேயே தம் வாழ்க்கையை தமிழர் அமைத்திருப்பது, தமிழ் மக்கள் வாழ்க்கை வளமான கலையம்சங்கள் நிறைந்ததாக இருப்பதை நமக்குக் காட்டுகின்றது. 

விவாசயம் என்று எடுத்துக் கொண்டால் நீர் ஆற்றில் திறந்து விடப்படும் போது அதற்கு சில சடங்குகள்.... நிலம் மறு விளைச்சலுக்காக தயார் செய்யப்படும் போதும் சில சடங்குகள்..  நாற்று நடும் போதும் சில சிடங்குகள்.. நெல் காய்க்கத்தொடங்கியதும் சில சடங்குகள்.. அறுவடைக்குக் கதிர் தயாராகும் போதும் சில சடங்குகள்.. அறுவடை நேரத்திலும் சடங்குகள்.. அறுவடை முடிந்ததும் விளைச்சலை முன்னிறுத்தி சில சடங்குகள்... இப்படி விவசாய காலத்தின் ஒவ்வொரு படி நிலைகளிலும் தமிழர் வாழ்க்கை என்பது பற்பல சடங்குகளோடு பின்னிப் பினைந்து, பிரித்துப் பார்க்க முடியாத அளவில் கலந்து தான் இருக்கின்றது.

விவசாயத்துக்கு நெல்லைத் தயார் படுத்துவது எளிதல்ல. சரியான விளை நெல்லை தேர்ந்தெடுத்து,  முளைப்புத் திறனைக் கூட்ட பிரத்தியேகமாக சில நடைமுறைகளையும் விவசாயிகள் கையாளுகின்றனர்.  பின்னர் நெல் தயாரானதும் அளவான நீரில் முளைத்து வந்திருக்கும் நெற்பயிரைப் பார்ப்பதற்குக் கண்ணுக்கு குளுமையாக இருப்பது போல மனதிற்கும் குளுமைமையாகத்தான் இருக்கும் . விவசாயிகளுக்குக் காலையில் எழுந்தவுடன் தங்கள் வயலில் முளைத்து வந்திருக்கும் நெற்பயிர்களைப் பார்ப்பதே அவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வு தான்.

நார்த்தங்கால் நடுவதற்கு முன்னர் வயலில் சிறப்பு சடங்குகளைச் செய்வதும் விவசாயிகளுக்கு உள்ள வழக்கம்.  இதனை பொன்னேறு கட்டுதல் எனக் குறிப்பிடுகின்றார்கள். விவசாயம் ஆரம்பித்த பின்னர் விவசாயிகளுக்குப் பெரிய பிரச்சனையாக இருப்பது  வயலில் விரிவாக மண்டி விடும் களைகள் தான். நெற்பயிருக்கு இடையே வளரும் களைகளைச் சரியாக நீக்கினால் தான் நெற்பயிர்கள் செழித்து வளர முடியும். ஆக இதனை அறிந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர்களை நட்டு வைக்கும் போது எவ்வளவு கவனமாக அப்பணியைச் செய்கின்றார்களோ அந்த முக்கியத்துவம் குறையாத வகையில் நெற்பயிர்கள் வளரும் போது இடையில் மண்டி விடும் களைகளை எடுத்து நெற்பயிற்கள் செழித்து வளர பாதுகாக்க வேண்டியதும் முக்கியமானதாகின்றது. 

இப்படி பல தகவல்களை ஒலிப்பதிவு பேட்டிகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளை செய்திருந்தோம். தமிழகத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து விவசாயப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதோடு கிராமத்துப் பெண்களுக்கும் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக சேவையாற்றி பின்னர் மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த திருமிகு.வசந்தா அவர்களது அனுபவச்செய்திகள் விவசாயம் தொடர்பான பல அரிய தகவல்களை வழங்கும் வண்ணம் தமிழ் மரபு அறக்கட்டளையை அலங்கரிக்கின்றன.  இப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் உழவுத் தொழில் என்ற பக்கத்தில் காணலாம். ஐந்து பாகங்களில் அமைந்த பேட்டி ஒலிப்பதிவுகளைக் கேட்போருக்கு கிராமத்தில் நெற்பயிர் விவசாயம், தென்னை, மாடுகள் பராமரிப்பு என பல விசயங்களைப் பற்றிய அடிப்படை தகவல்கள் பல அறியக்கிடைக்கும்.

கிராமத்து வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வகையிலான ஒரு வாழ்க்கை. இன்றைய நகர்புற வாழ்க்கை முறையில் அவசர தேவைகள் என்ற பெயரில் இயற்கை உணவு முறையிலிருந்து விலகியிருக்கும் நிலைக்குத்தான் நாம் வந்து விட்டோம். மனிதர்கள் அனுபவிக்கும் பல்வேறு வகையான உடல் ரீதியான நோய்களுக்கு இந்த இயற்கைக்கு மாறான உணவுப்பழக்கங்களும் வாழ்வியல் கூறுகளும் காரணமாக அமைந்திருப்பதை மறுக்கமுடியாது.   தமிழர் பண்பாட்டில் ஒரு அங்கமாகிய விவசாயத்தைப் போற்றி அதனை வளர்க்கும் மனப்பாண்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!

4 comments:

 1. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பணத்தை உண்ண முடியாது.உலகத்து மாந்தர்கள் விஞ்ஞான போர்வையில் பூமியை அழித்து மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.இதன் விளைவு பூமித்தாய் தன் வலிமையை வெள்ளம், பூகம்பம்,நெருப்பு, புயல், சுனாமி மழை இவற்றால் காண்பிக்கும்போது உயிரைவிடுகிறான். நிம்மதி இழக்கின்றான்.உணவின்றி பஞ்சத்தால் சாகிறான். இரசாயன உரத்தில் பூமி உயிர்ச்சத்து இழந்து வருகிறது.இயற்கை உரமிட்டு புது நோய்களில் இருந்து மனிதன் தன்னை காத்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.முழுவதும் அழிவதில் இருந்து தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். கவிதைகணேசன். பண்ருட்டி. தமிழ்நாடு. இந்தியா

  ReplyDelete
 2. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பணத்தை உண்ண முடியாது.உலகத்து மாந்தர்கள் விஞ்ஞான போர்வையில் பூமியை அழித்து மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.இதன் விளைவு பூமித்தாய் தன் வலிமையை வெள்ளம், பூகம்பம்,நெருப்பு, புயல், சுனாமி மழை இவற்றால் காண்பிக்கும்போது உயிரைவிடுகிறான். நிம்மதி இழக்கின்றான்.உணவின்றி பஞ்சத்தால் சாகிறான். இரசாயன உரத்தில் பூமி உயிர்ச்சத்து இழந்து வருகிறது.இயற்கை உரமிட்டு புது நோய்களில் இருந்து மனிதன் தன்னை காத்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.முழுவதும் அழிவதில் இருந்து தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். கவிதைகணேசன். பண்ருட்டி. தமிழ்நாடு. இந்தியா

  ReplyDelete
 3. விவசாயம் குறித்த பதிவும்,விவசாயிகளுக்கான.ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதும் அறிந்து மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐

  ReplyDelete
 4. விவசாயம் குறித்த பதிவும்,விவசாயிகளுக்கான.ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதும் அறிந்து மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐

  ReplyDelete