Friday, December 1, 2017

77. ஓர் இனிய தமிழ்த் திருமணம்


மலேசியாவிலிருந்து நான் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்று ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக நான் மலேசியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஓரிருமுறை வந்து செல்வது வழக்கம். நண்பர்கள் இல்லத்தில் நடைபெறும் பல விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாத சூழல் தான் அனேகமாக எனக்கு அமைந்துவிடும். நான் மலேசியாவிற்கு வருகின்ற விடுமுறை நாட்களில் பல சமூக நிகழ்ச்சிகளுக்காகவும், அலுவல்களுக்காகவும் எனது நாட்கள் செல்வாகிவிடுவதாலும் கூட சில குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத நிலை எனக்கு ஏற்பட்டு விடுவதுண்டு.

மலேசியாவிற்கு வந்தால்தான் தமிழ்த்திருமணங்களைக் காண முடியுமா என சிலருக்குக் கேள்வியும் எழலாம். ஜெர்மனியிலும் ஐரோப்பிய சூழலிலும் கூட எனது தமிழ் நட்புச் சூழலில் அவ்வப்போது நடைபெறுகின்ற திருமண நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் எனக்கு வந்து சேரும். ஆயினும் அத்தகைய நிகழ்வுகளில் அங்கு கலந்து கொள்ள எனக்கு நேர அவகாசம் கிடைப்பதில்லை. அலுவலகப் பணிகளிலும் தமிழ் ஆய்வுப் பணிகளிலும் மூழ்கி விட்டால் ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்றாகிப் போயிவிடும் சூழல் தான் இயல்பாக எனக்கு அமைந்து விடுகின்றது.

இந்த நிலையில் இம்முறை  எனது மலேசியப் பயணம் மிக சுவாரசியமாகத்தான் அமைந்து விட்டது. 2 வார விடுமுறை எடுத்துக் கொண்டு மலேசியா வந்து சேர்ந்தேன். ஆனால் திடீரென்று தமிழகத்தில் சில நிகழ்வுகள் ஏற்பாடாகியமையினால் எனது திரும்பிச் செல்லும் விமான டிக்கட்டை ரத்து செய்து விட்டு இந்தியா செல்லும் சூழல் எனக்கு ஏற்பட்டது. இப்போதெல்லாம் சில விமான நிறுவனங்கள் டிக்கட்டை மாற்றம் செய்யச் சொல்லிக் கேட்டால் ரத்து செய்வது மட்டும் தான் முடியும் என கறாராகச் சொல்லி விடுகின்றனர். ஆக, வேறு வழியில்லாமல் விமானப் பயண டிக்கட்டை ரத்து செய்து விட்டு தமிழகம் சென்று அங்குள்ள பணிகளை முடித்து விட்டு திரும்பும் போது மலேசியாவில் மேலும் சில நாட்கள் இருக்க வேண்டிய தேவை ஏற்படவே இன்னும் சில நாட்கள் இருந்து தேங்கிக்கிடக்கும் சில பணிகளை முடித்து விட்டுச் செல்வது என்று நினைத்து விட்டேன். இந்த இடைப்பட்ட வேளையில் நண்பர் திரு.ஓம்ஸ் தியாகராஜன் அவர்களின் புதல்வர் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு கிடைத்தது. நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் நான் கலந்து கொண்ட ஒரு திருமண நிகழ்வு இது என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக மலேசியாவில் நடைபெறுகின்ற திருமணங்கள் பெரிய ஆலயங்களிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ நடைபெறும். ஆனால் இந்தத் திருமணமோ பெரிதும் அறியப்படாத ஒரு செம்பனைத்  தோட்டத்தில், அங்கிருக்கும் ஒரு குல தெய்வக் கோயிலில் ஏற்பாடாகியிருந்தது. கோலாசிலாங்கூர் ஜெராம் தோட்டம் செம்பனைத் தோட்டங்கள் நிறைந்த ஒரு பகுதி.  அங்கு புக்கிட் மெர்பாவ் பகுதியில் யானை மலை என அழைக்கப்படும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி குலதெய்வ ஆலயம் ஒன்று இருக்கின்றது. அந்தக் கோயிலில் தான் இந்தத் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது என்பதை அறிந்து கொண்டபோது ஆச்சரியமும் இதனை நேரில் சென்று திருமண நிகழ்வுகளைக் கண்டு வர வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது.

காலை 9 மணிக்குத் திருமணம் என்பதால் கோலாலம்பூரிலிருந்து நண்பர்களுடன் ஒரு வாகனத்தில் காலை 7:30 மணி வாக்கிலேயே புறப்பட்டு விட்டோம்.  தமிழர்கள் வாழ்ந்த செம்பனைத் தோட்டம் தான் என்றாலும் கூட இன்று அதிகம் அறியப்படாத ஒரு பெயராக இப்பகுதி இருந்ததால் வாகனத்தில் GPS கருவியை பயன்படுத்தி முகவரியைக் கொடுத்து பயணிக்க ஆரம்பித்து விட்டோம். செல்லும் வழியெல்லாம் மலாய்க்காரர்கள் நிறைந்து வாழும் கிராமங்களும் ஆங்காங்கே மாரியம்மன், முருகன் கோயில்களும் கண்களில் தென்படவே செய்தன. இவ்வளவு தூரத்தில் இருக்கின்றதே. பொது மக்கள் இந்த இடத்திற்கு வந்து விடுவார்களா, என்ற ஐயத்தை மறைத்தது அங்கே வரிசை வரிசையாக வந்திருந்த ஏராளமான கார்களும் பேருந்தும்.

திருமணம் நடைபெற்ற கோயில் பகுதியில் இரண்டு பெரிய கோயில் வளாகங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை வரவேற்பது ஸ்ரீ வேங்கை முனி கருமாரியம்மன் ஆலயம். இது வடிவத்தில் ஒரு சீனர் கோயிலை ஒத்த அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் உள்ளே பல சன்னிதிகள் இருக்கின்றன. பெயர் தெரியாத பல புதிய கடவுளர்களின் சிலைகளோடு மலேசியத் தோட்டப்புரக் கோயில்களில் நமக்கு நன்கு தெரிந்த முனியாண்டி சாமி, பேச்சாயி அம்மன், மதுரை வீரன், சுடலை மாடன், சூலம் ஆகிய சன்னிதிகளோடு வேங்கை முனி சாமியின் சன்னிதியும் உள்ளது. இதில் அதிசயமாக ஒரு சன்னிதிக்கு மேலே இஸ்லாமியர்கள் வழிபடும் பிறை நிலாவும் சந்திரனும் இருக்கும் வகையில் ஒரு சன்னிதியும் உள்ளது. இந்த சன்னிதிக்குள் தர்கா போன்ற அமைப்பில், ஆனால் சிறிய வகையில் ஒரு கல்  வைக்கப்பட்டு வழிபடுவதும் உள்ளது. மதுரைவீரன் சன்னிதிக்கு முன்னர் பெரிய அமைப்பிலான ஒரு குதிரையும் அதனைச் செலுத்தும் ஒரு குதிரை வீரனது சிலையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் இருப்பது ஒரு மலையடிவாரப்பகுதி என்பதால் குரங்குகள் இங்கு ஏராளம் குவிந்திருக்கின்றன. உள்ளே சென்று சன்னிதிகளைப் பார்த்து வரும் போது இந்தக் குரங்குகள் வருவோரை எவ்வகை சேட்டைகளும் செய்து அச்சுறுத்தவில்லை. மாறாக ஆங்காங்கே தாவி ஓடி இந்தக் கோவில் சூழலை இனிதாக்குகின்றன.

இதற்கடுத்தாற்போல உள்ள மற்றொரு கோயில் தான் திருமணம் நடைபெற்ற மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி குலதெய்வ ஆலயம். இங்கு ஆலயத்தின் முகப்பிலேயே பெரிய விநாயர் சிலை இருக்கின்றது. கோயிலின் உள்ளே இடது புறம் காளியம்மன் சன்னிதி வைக்கப்பட்டுள்ளது.  கருவரையில் மிக அழகிய முறையில் அலங்கரிக்கப்பட்ட புதுமை படைப்பாக அங்காளபரமேஸ்வரி அம்மன் காட்சி தருகின்றார்.  நாம் பொதுவாகப் பார்த்துப் பழகிய வடிவிலிருந்து மாறுபட்ட வகையில் மேலும் ஒரு சன்னிதியில் 16 கரங்களுடன் அங்காள பரமேஸ்வரி இளம் வாலைக்குமரியாகவும் காட்சி தருகின்றார்.

நாங்கள் சென்றடையும் போது  திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாப்பிள்ளை டாக்டர்.தி.பழனீஸ்வரனும் மணமகள் டாக்டர்.த. நிஷாவும் மணமக்கள் கோலத்தில் சடங்குகள் செய்யப்படும் இடத்தில் அமர்ந்திருந்தனர். செவ்வாடை உடுத்திய பூசாரி ஒருவர்  தமிழில் சடங்கினை விவரித்துச் சொல்லி இரு வீட்டாருக்குமிடையிலான திருமணச் சடங்குகளை நடத்தி வைத்துக் கொண்டிருந்தார். வைதீக முறையில் வேதம் ஓதப்படவில்லை. மாறாக தமிழில் திருமண விளக்கம் வழங்கப்பட்டது. சடங்குகள் ஒவ்வொன்றையும் அதனைத் தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்லி, அதனை விளக்கி மணமக்களையும் அவர்கள் பெற்றோரையும் திருமணச் சடங்கில் ஈடுபடுத்தியிருந்தார் கோயில் பூசாரி ஐயா.  தமிழகத்தின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திலிருந்து செவ்வாடைத்தொண்டர்கள் சிலரும் இந்த நிகழ்வில் அருகிலிருந்து திருமண நிகழ்வினை வாழ்த்த வந்திருந்தனர்.  மஞ்சள் அரிசி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது. மங்கல நாண் மணமக்கள் பெற்றோர்கள் கைகளில் வழங்கப்பட்டது. வந்திருந்த அனைவரும்  மஞ்சள் அரிசி தூவ  மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் பூட்டினார். திருமணத்தின் முழு நிகழ்விலும் நாதஸ்வர இசைக்கச்சேரி வாசிக்கப்பட்டது. உள்ளூர் மலேசிய தமிழ்க்கலைஞர்களே இதில் நாதஸ்வர இசைக்கருவியை இசைத்தனர். நாதஸ்வர இசையை வாசித்த இருவரில் ஒருவர் பெண்மணி என்பதும் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு மெருகூட்டுவதாக அமைந்தது.

குலதெய்வ வழிபாடு என்பது பண்டுதொட்டு தமிழர் பண்பாட்டில் நிலைபெற்றிருக்கின்றது. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து மலேசியா வந்த தமிழ் மக்களில் சிலர் இன்றளவும் குலதெய்வ வழிபாட்டினைத் தொடர்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால், திருமணத்தைக் குலதெய்வக் கோவிலில் அழகிய தமிழ் மொழியில் நிகழ்த்தியமை மிகச் சிறப்பு. மலேசியத் தமிழர்கள் தமிழ் மொழியும் பண்பாடும் கலையும் அழிந்து வருகின்றதே என வருத்தப்படுவதை விடுத்து இது போல தங்கள் இல்லத் திருமணங்களைத் தமிழ் மொழியில் நடத்துவதும் தமிழர் பண்பாட்டு விசயங்களை ஒதுக்கி விடாமல் அவற்றை தங்கள் குடும்பங்களில் கடைபிடிப்பதும் மிக அவசியமான ஒன்றே.

மலேசியச் சூழலில் மிகப் புதிய அனுபவமாக இந்தத் திருமணம் எனக்கு அமைந்தது. அது மட்டுமன்றி நெடுநாட்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்காத நண்பர்கள் சிலரைப் பார்க்கவும் சந்தர்ப்பமாக இது அமைந்தது என்பதோடு  பல புதிய நண்பர்கள் அறிமுகமும் இந்த நிகழ்வில் கிட்டியது. திருமண நிகழ்வே ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்ளும் ஒரு மகிழ்வான நிகழ்வு தானே. இத்தகைய திருமண நிகழ்வுகள் நமது தமிழர் மரபின் ஆணி வேர்கள். வேர்களைப் பாதுகாப்போம். தமிழர் பரைனைப் போற்றுவோம்!




1 comment:

  1. இதுவரை அறியாத பல தகவல்கள். மிக்க நன்றி முனைவர் சுபா.

    ReplyDelete