Thursday, November 16, 2017

76. அந்தியூர் நடுகற்கள்



இறைவனுக்குப் பலி கொடுத்தல் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பொதுவாக இன்று மலேசிய சூழலில் நமக்குத் தெரிந்த வகையில் கூறுவதென்றால் முனீஸ்வரன், மாரியம்மன் போன்ற தெய்வங்களின் சன்னிதியில் நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு காரியம் கைகூட வேண்டும் என்ற எண்ணத்தில் கோழி அல்லது ஆடு ஒன்றினைப் பலி கொடுப்பது என்பது நமது வழக்கில் மலேசியாவில் இன்றும் இருப்பதுதான். அப்படிப் பலி கொடுக்கப்படும் ஆலயங்களாக இருந்து பலி கொடுப்பது நிறுத்தப்பட்ட ஆலயங்கள் சிலவும் இன்று இருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணமாக பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் சைவ முனீஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்.

பலி கொடுத்தல் என்பதன் அடிப்படையைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம். மனிதரின் வாழ்க்கை இன்ப துன்பம் நிறைந்ததாகவே இருக்கின்றது. மக்களின் வாழ்க்கை நிலை பல தேவைகளை உள்ளடக்கியதாக அமைகின்றது. மனிதர்களின் ஆசைகளும், எதிர்பார்ப்புக்களும் வளர வளர இன்ப துன்பங்களும் இணைந்தே வளர்கின்றன. தான் விரும்பும் ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்று விரும்பும் மனிதர் தம் விருப்பத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கும் போது தன் விருப்பத்தை அடைவது தனது சக்திக்கு மேற்பட்டதாக அமையும் என்ற எண்ணம் தோன்றுகையில் அதனை சாதிக்கக் கடவுளின் துணையை நாடுகின்றனர். கடவுள் தனது மனதில் உள்ள விருப்பங்களை அல்லது எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்தால் அதற்கு நன்றிக்கடனாகப் படையல் செய்து வழிபட்டு தனது நன்றியினை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இப்படி இறைவனுக்குப் படைக்கப்படுகின்ற படையல் பல நேரங்களில் தானிய வகை மற்றும் பழ வகையிலான உணவுகளாக அமைகின்றன. தமிழர் பண்பாட்டு வழக்குகளில் மக்கள் உண்பதற்காக தாம் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை இறைவனுக்காகப் படைப்பது என்பதும் ஒரு வழக்காக உள்ளது. சிலர் ஒரு சேவலை அல்லது ஒரு ஆட்டினை வளர்த்து வருவர். அந்தச் சேவலோ அல்லது ஆடோ இறைவனுக்காக நேர்ந்து விடப்பட்ட ஒரு விலங்கு என்ற வகையிலேயே வீட்டில் அனைவராலும் கவனிக்கப்படும். அந்தச் சேவலையோ ஆட்டினையோ வீட்டுத் தேவைக்காக மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். தக்க நாளில் அதனைப் பிடித்து மஞ்சள் நீரில் குளிப்பாட்டி அலங்கரித்து, தாம் படையலிட நினைக்கும் சாமியின் சிலைக்கு முன் வைத்து அதனைப் பலிகொடுத்து பின்னர் அதனைச் சமைத்து சாமிக்குப் படைத்து, உற்றார் உறவினருடன் சேர்ந்து சாப்பிடுவர். இத்தகைய வழக்கு பண்டைய காலம் தொட்டு வழி வழியாக வருவதைக் காண்கின்றோம்.

சாமியையும் தன்னைப்போல ஒரு மனிதருக்கு இருக்கின்ற குணாதிசியங்களோடு கருதும் மனம் மக்களுக்கு இருப்பதாலேயே இத்தகைய சிந்தனையுடன் கடவுளின் பெயரில் பலிகொடுத்து அதனை மக்கள் உண்ணும் வழக்கைக் காண்கின்றோம். கடவுள் மனிதர்களைப் போல ஒன்றினை எதிர்பார்த்துத்தான் ஒரு நற்பலனைத் தனது அடியாருக்கு வழங்குகின்றாரா என்று மக்கள் யோசிப்பதில்லை. அதே போல, சமைத்து படையலாக வைத்த உணவை இறைவன் சாப்பிடுகின்றாரா? இல்லை யார் அவற்றை உண்டு முடிக்கின்றார்கள் என்ற ரீதியிலும் மக்கள் சிந்திப்பதில்லை. கடவுளின் பெயரால் நடத்தப்படும் இத்தகைய பலிகள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. கோழியோ அல்லது ஆடோ, அல்லது மாடோ அல்லது எந்த விலங்காகினும், அதனைக் கடவுள் சாப்பிடுவார் என்ற பேதைமையான சிந்தனையுடன் பலி கொடுக்கத் தேவையில்லை. தான் சாப்பிட விரும்புவதும் தனது பெருமைக்காக விழா எடுப்பதும் தான் இத்தகைய நிகழ்வுகளின் வழி நடக்கின்றது. ஆனால் மனிதர்களோ இதனை நேரடியாகச் சொல்லிக் கொள்வதைத் தவிர்த்து, கடவுள் சாப்பிட விரும்புவதாகக் கூறி விலங்குகளைப் பலிகொடுப்பதும், அதனை ஒரு சடங்காக்கிப் பார்ப்பதும் அதில் மகிழ்வதும் ஒரு வித மாயைதான்.

கடவுளின் பெயரில் வீட்டு வளர்ப்புப் பிராணிகளைப் பலி கொடுத்தல் என்பது போல இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் ஒரு காரியம் கைகூடவேண்டும் என்று வேண்டிக் கொண்டு தன்னைத் தானே உயிர்ப் பலி கொடுத்துக் கொண்டு இறந்து போவதும் ஒரு வழக்கமாக இருந்தது. இதனைத் தலைப்பலி எனக் கூறுவர். நமக்கு இன்று கிடைக்கின்ற கல்வெட்டுச் செய்திகளும் இலக்கியச் செய்திகளும் போரில் தன் மன்னன் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் ஒரு வீரன் தன்னையே உயிர்த் தியாகம் செய்து கொண்டதைச் சான்று பகிர்கின்றன. தன் தலையைத் தன் ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டு, மற்றொரு கரத்தால் தனது தலையைத் தானே அறுத்துக் கொண்டு உயிர் விடுவது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைமுறையில் இருந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக இத்தகைய அர்ப்பணிப்புச் செயலைச் செய்தமைக்காக மக்கள் இத்தகைய வீரனின் நினைவாக அவனுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்கும் வழக்கத்தினைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இறந்த வீரனின் வீரச்செயலைக் காட்டும் வகையில் ஒரு கல்லில் அவ்வீரனின் புடைப்புச் சிற்பத்தைச் செதுக்கி அதனை வழிபட்டனர்.

இவ்வகை தலைப்பலி நடுகல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு சில நடுகல் சின்னங்கள் எழுத்துக்கள் ஏதும் பொறிக்கப்படாமல் இருக்கும். ஒரு சில நடுகல் சின்னங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும். சில, தனியாக ஒரு வீரன் மட்டும் தன் கழுத்தை வாளால் அறுக்கும் காட்சியுடன் இருக்கும். சில, ஒரு வீரன் தன் தலையை அறுத்துக் கொள்ளும் காட்சியுடன் ஒரு பெண்ணும் சிறிய வடிவில் அருகில் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கும். சில நடுகல் சின்னங்களில் வீரனுடன் வேறு விலங்குகளின் சிற்பங்களும் இணைந்த வகையில் செதுக்கப்பட்டிருக்கும்.

2015ம் ஆண்டில் நான் தமிழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகச் சென்றிருந்தபோது மூன்று நாட்கள் ஈரோடு மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நெடுங்காலமாக மக்கள் வழிபாட்டில் உள்ள ஆலயங்கள் சிலவற்றிற்கு ஆய்விற்காகச் சென்றிருந்தேன். அப்படி ஒரு ஆலயம் தான் அந்தியூரில் அமைந்திருக்கும் அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆலயம்.
அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆலயம் நன்கு புதுப்பிக்கப்பட்டு மக்கள் வெகுவாக வந்து செல்லும் ஒரு ஆலயமாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் வழக்கில் உள்ள மிகப் பழமையான தாய் தெய்வக் கோயில்களில் இதுவும் ஒன்று. கொற்றவை எனச் சங்க காலத்தில் அழைக்கப்பட்ட தெய்வமே பின்னர் பத்ரகாளியம்மன் என்ற பெயருடன் இன்று வழக்கில் அழைக்கப்படும் பெயராக அமைந்துள்ளது எனலாம்.

இக்கோயிலின் பின் பகுதியில் நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்களும் அண்ணன்மார் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை பின்னாளில் இக்கோயிலில் வழிபாட்டிற்காகச் சேர்க்கப்பட்டவையே. இவற்றைப் பார்த்து பதிவு செய்துகொண்டிருக்கும் போது ஆலயத்தின் பணியாளர் ஒருவர், கோயிலில் மேலும் சில சிற்பங்கள் இருப்பதாகவும் அவை கோயில் புனரமைப்பின் போது பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு ஒரு பகுதியில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். இச்செய்தி ஆவலைத் தூண்டவே அச்சிற்பங்களைப் பார்க்க வேண்டும், அவை எவ்வகை சிற்பங்கள் என ஆராய வேண்டும், என்ற என் ஆவல் எழுந்தது. முதலில் ஆலய நிர்வாகத்தினர் அதற்குச் சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கோயிலின் பின் பகுதியில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அச்சிற்பங்களை எனக்குக் காட்டினர். அதில் ஒன்று தலைபலி நடுகல் என்பதை அதனைப் பார்த்த போது அறிந்து கொண்டேன். மேலும் சில தெய்வ வடிவங்களின் சிற்பங்களும் அங்கே கிடத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நடுகல் சிற்பத்தையும் ஏனைய சிற்பங்களையும் ஆலய நிர்வாகம் தூய்மை செய்து அவற்றைக் கோயிலில் ஓரிடத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்றும், அது இக்கோயிலின் பழமையையும் இங்குக் கொற்றவைக்காக வீரர்கள் தன்னையே தலைபலி கொடுத்துக் கொண்டு மாண்டிருக்கின்றனர் என்பதையும், இவர்களின் நினைவாக இவ்வூர் மக்கள் அவ்வீரர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பி அவர்களை மரியாதை செய்து வழிபட்டு வந்துள்ளனர் என்பதை இன்று இக்கோயிலுக்கு வரும் மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்றும் கூறினேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நடுகல் சிற்பங்கள் கோயிலில் பத்திரப்படுத்தப்பட்டு மட்டுமே இருந்தன. இவ்வாண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று இக்கோயிலுக்குச் சென்று இந்த நடுகல் சிற்பங்கள் எவ்வகையில் இருக்கின்றன என்று கண்டு வர நேரில் சென்றிருந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் இளையோர் பேரவை குழுவினரும் என்னுடன் வந்திருந்தனர்.

கோயில் நிர்வாகத்தினருக்கு முன்னரே ஆய்வு நிமித்தம் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் அங்கு வரவிருப்பதைத் தெரிவித்து எங்களுடன் இந்த ஆய்வில் இணைந்து கொள்ள ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். கோயில் நிர்வாகத்தினர் இரண்டு நடுகல் நிற்பங்களைத் தூய்மை செய்து எண்ணைப் பூசி வைத்திருந்தனர். மிகச் சிறப்பாக செதுக்கப்பட்ட நடுகல் சிற்பங்கள் அவை. இரண்டுமே மாறுபட்ட வடிவில் அமைந்தவை. முதல் நடுகல் ஒரு வீரன் மட்டுமே தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டு மற்றொரு கரத்தால் தனது தலையை வாளால் வெட்டிக் கொள்வதைக் காட்டும் சிற்பம். மற்றொன்று, வீரன் ஒருவன் தன் தலையை வாளால் வெட்டிக் கொள்வது போலவும் அவனுக்கு வலப்பக்கம் கீழே ஒரு பெண்ணின் சிற்பமுமாக வடிக்கப்பட்ட சிற்பம். இது அனேகமாக தலைபலி கொடுத்துக் கொண்டு உயிர் நீத்த தன் கணவனுடன் தானும் தற்கொலை செய்து உயிர் மாய்த்துக் கொண்ட அவன் மனைவியினை நினைவு கூர்வதற்காக அமைக்கப்பட்ட சிற்பமே.

இந்த ஆய்வின் போது இந்த இரண்டு நடுகல் சிற்பங்களும் அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆலயத்திற்குச் சொந்தமானவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் இதற்குக் காரணம் பழமையான கொற்றவை வழிபாட்டில் வீரர்கள் தன்னையே தலைபலி கொடுத்துக் கொண்டு உயிர்ப்பலி கொடுத்தல் வழக்கில் இருப்பதையும் சுட்டிக் காட்டி விளக்கினேன். இந்தக் கோயிலிலேயே ஓரிடத்தில் இந்தப் புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது மாவட்ட அருங்காட்சியகத்தில் இவை ஒப்படைக்கப்பட்டு அங்கு இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தேன். கோயில் நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கையளித்தனர்.

தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் குறிப்பாக திருப்பூர், ஈரோடு கோவை மாவட்டங்களில் நடுகற்கள் அவ்வப்போது பொது மக்களாலும், வரலாற்று ஆர்வலர்களாலும் கண்டறியப்படும் தகவல்களைப் பற்றி நாம் அவ்வப்போது செய்தி ஊடகங்களின் வழியாக அறிய முடிகின்றது. இதே போல தொண்டை மண்டலத்திலும் குறிப்பாக பெண்ணையற்று நதிக்கரையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நடுகல் சிற்பங்கள் புதர்களில் மாட்டிக் கொண்டு கவனிப்பாரற்று கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக தொல்லியல் துறை இத்தகைய பாதுகாப்பற்ற புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றோம்.

தமிழர் வரலாற்றை நாம் அறிய வேண்டுமென்றால் புராதனச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை ஆராய்வதும் அவசியத் தேவை என்பதை நாம் அனைவருமே கருத்தில் கொள்வது அவசியமாகும்! 

No comments:

Post a Comment