மலேசிய மாநிலங்களில் மலாக்கா மாநிலத்திற்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. நெகிரி செம்பிலான் மாநிலத்தை வடக்கிலும், மேற்கிலும் தெற்கிலும் ஜொகூர் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்ட மாநிலம் இது. மலேசிய வரலாற்று மாநிலம் என்ற சிறப்புடன் ஐக்கிய நாடுகள் சபையினால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக வரலாற்றுப் பகுதி என அடையாளம் காணப்பட்டு 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது மலாக்கா.
பண்டைய மலேசியாவை எடுத்துக் கொண்டால், இன்று தீபகற்ப மலேசியா என நாம் குறிப்பிடும் பகுதியில் குறிப்பிடத்தக்க சில அரசுகள் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளன. இந்த நிலப்பகுதியானது வணிகக் கடல் வழிப்பயணத்தில் அமைந்துள்ளது என்பது மிக முக்கியமானதொரு காரணமாக அமைகின்றது. இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும், பசிபிக் பெருங்கடல் பகுதிக்கும் இடையே மிக நூதனமான அமைப்பில் மலேசிய தீபகற்பமும் இந்தோனீசியத் தீவுகளும் அமைந்துள்ளதைப் புவியியல் கண்ணோட்டத்தில் சிறப்பித்துக் குறிப்பிடலாம். இந்தச் சிறப்பு இந்திய வணிகர்களும் சீனா, கொரியா ஜப்பான் போன்ற தூரக்கிழக்காசிய நாடுகளிலிருந்து வணிகர்கள் கடல் மார்க்கமாக வந்து செல்லும் போது ஓய்வெடுக்கும் ஒரு நிலப்பகுதியாக அமைந்திருந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பண்டைய மலேசிய நிலப்பகுதியை ஆட்சி செய்த முக்கியப் பேரரசுகளாக வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுபவை ஃபூனான், ஸ்ரீவிஜயா, மஜபாகிட், கங்கா நெகாரா ஆக்கியவை . 11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரச் சோழனின் படற்படை தாக்குதல் மலாயா தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் அன்று முக்கியத் துறைமுகங்களுள் ஒன்றாக இருந்த கடாரத்தில், அதாவது இன்றைய கெடா மாநிலத்தில் நிகழ்ந்தது. ராஜேந்திர சோழன் ஸ்ரீவிஜயப் பேரரசைப் போரில் வென்றமைக்கு வெவ்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன என்றாலும் இப்பகுதியில் நிலைப்பெற்றிருந்த வணிகத்தைக் கையகப்படுத்தும் முயற்சியாகவும், அன்றைய மலாயாவின் வளங்களைக் கருத்தில் கொண்டு இப்பகுதியைத் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியாக சோழப்பேரரசு வைப்பதற்கும், தனது பேரரசை விரிவு செய்யும் முயற்சிகளில் ஒன்றாகவும் இம்முயற்சியைத் தயக்கமின்றிக் காணமுடிகின்றது.
கடாரத்தைக் கைப்பற்றினாலும் கூட இங்கே சோழ அரசு நிலைப்பெற்றிருந்தது ஏறக்குறைய 99 ஆண்டுகள் மட்டும் தான். படிப்படியாகத் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மலாயா தீபகற்பத்தில் சோழர் ஆதிக்கத்தைக் குறைத்து விட்டது. அதன் பின்னர் அரேபியர்களின் தாக்கத்தினால் இஸ்லாமிய மதம் கடாரப்பகுதியில் பரவ ஆரம்பித்ததன் விளைவாக அப்பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய பண்பாட்டுக் கூறுகளை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் 12ம் 13ம் 14ம் நூற்றாண்டுகளில் கெடா ஒரு பேரரசாகத் திகழவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அடிப்படையில் ஒரு மீனவர் கிராமமாக இருந்த மலாக்கா கடாரத்திலிருந்து தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியாகும் . 1377ம் ஆண்டில் இன்றைய இந்தோனீசியாவின் ஒரு பகுதியில் சிற்றரசராக இருந்த பரமேசுவரா, மஜபாஹிட் அரசின் தாக்குதலால் அங்கிருந்து தப்பித்து வெளியேறுகின்றார். இன்றைய சிங்கப்பூருக்கு வந்து அங்கே 1389 முதல் 1398 வரை ஆட்சி செய்கின்றார். அங்கேயும் அவரை மஜபாஹிட் அரசு ஆட்சி செய்ய விடவில்லை. சிங்கப்பூர் பகுதியையும் கைப்பற்றும் நோக்கில் படையெடுத்த மஜபாஹிட் அரசிடமிருந்து தப்பியோடி மலாக்காவிற்குத் தனது பரிவாரங்களுடன் வந்து சேர்கின்றார் மன்னர் பரமேசுவரா. பெர்த்தாம் நதிக்கரையில் 1402ம் ஆண்டு வந்தடைகின்றார். மலாக்கா தான் தன் புதிய ராஜ்ஜியத்தை அமைக்க ஏதுவான நகரம் என்ற நம்பிக்கையுடன் அங்கே முடிசூட்டிக் கொண்டு ஒரு மன்னராக ஆட்சியைத் தொடங்குகின்றார் பரமேசுவரா. மலாக்கா துறைமுகத்தை விரிவாக்குகின்றார். இந்தியா சீனா மட்டுமன்றி ஐரோப்பாவிலிருந்தும் வணிகர்கள் வந்து தங்கியிருந்து வணிகம் செய்து செல்லும் பெறும் துறைமுகப்பட்டினமாக மலாக்கா வளர்ச்சி பெருகின்றது . அரேபிய இஸ்லாமிய இளவரசியை மணத்து இஸ்லாமிய மதத்தைத் தழுவுகின்றார் பரமேசுவரா. இதனால் தனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்ள, மலாக்கா பேரரசு முழுமையான இஸ்லாமியப் பேரரசாக உருமாற்றம் பெற்றது.
1511 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோவாவிலிருந்து போர்த்துக்கீசியரான அல்ஃபான்சோ டி அல்புகர்க் மலாக்காவைப் பற்றி கேள்விப்பட்டு அங்கிருந்து கடல் பயணம் மேற்கொள்கின்றார். 18 கப்பல்களுடனும் 1200 போர் வீரர்களுடனும் வந்து மலாக்காவைத் தாக்கி கைப்பற்றுகின்றார். இவர் காலத்தில் மலாக்கா முற்றிலுமாக போர்த்துக்கீசியர் வசமாகியது. இந்தியாவிலும் பெரிதாக அறியப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் கி.பி. 1545, 1546, 1549 ஆகிய ஆண்டுகளில் மலாக்கா வந்து இங்கு கிருத்துவ சமயத்தைப் பரப்புவதற்காகப் பயணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மதமும் கிருத்துவ மதமும் இந்த அரசியல் மாற்றங்களினால் மலாக்காவிலும் மலாயாவிலும் முதன்மை பெற்ற நிகழ்வுகள் நடந்தன என்ற போதிலும் தமிழகத்திலிருந்து வருகை புரிந்த தமிழர்களும் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த சீன வணிகர்களும் தங்கள் இந்து சமய மற்றும் பௌத்த சமய வழிபாட்டுக்கூறுகளையும் மலாக்காவில் அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தனர். ஏற்கனவே மலாயாவில் இருந்த ஏராளமான இந்து மற்றும் பௌத்த ஆலயங்கள் போர்களினாலும் அரசியல் மாற்றங்களினாலும் பெருமளவு சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில் மீண்டும் ஒரு ஆலயம் அமைக்கும் முயற்சியாகத் தமிழகத்திலிருந்து மலாக்கா வந்து அங்கேயே தங்கி தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்த தமிழ் வணிகர்கள் குழு இங்கு ஒரு விநாயகர் ஆலயத்தை 1781ம் ஆண்டு அமைத்தது. இந்த ஆலயம் தான் இன்று நாம் மலாக்காவில் காணும் பொய்யாத விநாயகர் ஆலயம்.
அளவில் சிறியதுதான் என்றாலும் மலாக்கா நகரின் ஜோங்கர் ஸ்ட்ரீட் பகுதியில் நகர மையத்தில் வணிகத்தலங்கள் இருக்கும் கட்டிடங்களின் வரிசையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சுவாமியின் பெயர் ஸ்ரீ பொய்யாத வினாயகர்மூர்த்தி. இன்று இக்கோயில் மலாக்கா நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகின்றது. மலாக்காவிற்கு வந்து செல்லும் சுற்றுப் பயணிகள் பார்த்து வழிபட்டுச் செல்லும் ஒரு இடமாகவும் இது சுற்றுலா கையேட்டில் இடம்பெறுகின்றது.
ஸ்ரீ பொய்யாத வினாயகர்மூர்த்தி கோவிலில் கருவறையில் சிறிய வடிவத்திலான பிள்ளையார் சிலை வழிபாட்டில் இடம்பெறுகின்றது. கோவிலில் முருகன், மீனாட்சி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகளும் உள்ளன. கோவிலின் பின்புறத்தில் பழமையான ஒரு கிணறு உள்ளது. இது இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றது. மிகத் தூய்மையாக ஆலயம் பராமரிக்கப்படுகின்றது.
எனது அண்மைய பயணத்தில் மலாக்காவிற்குச் சென்றிருந்தபோது இக்கோவிலுக்கு நேரில் சென்று பார்த்து வந்தேன். தமிழகத்திற்கும் மலேசியாவிற்கும் இடையிலான தொடர்பு என்பது இன்றைக்கு நேற்று வந்த தொடர்பல்ல. இது பன்னெடுங்காலமாக் நீடித்து இருக்கும் தொடர்பு. இத்தொடர்புகளுக்குச் சாட்சியாய் அமைந்த சின்னங்கள் பல சீரழிக்கப்பட்ட நிலை இப்போது காணப்பட்டாலும் கூட இன்றைக்கு நம் கண்ணெதிரே இருக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்த 300 ஆண்டு பழமையான விநாயகர் ஆலயத்தை நாம் குறிப்பிட வேண்டும். மலேசியாவின் மலாக்காவிற்குச் செல்பவர்கள் இந்த வரலாற்றுப் பின்னணியையும் அறிந்து கொண்டு இக்கோவிலுக்குச் சென்று வருவது நமது பண்டைய தமிழ் மக்களின் முயற்சிகளைப் பெருமைப்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் அமையும் என்றே கருதுகிறேன்!
No comments:
Post a Comment