தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டமே வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த ஒரு மாவட்டம் எனத் தயங்காமல் கூறலாம். தமிழக பண்டைய வரலாறு எனப் பேச முற்படும் போது பலரும் பொதுவாக மதுரையையும் நெல்லையையும் பேசுவார்கள். ஆனால் விழுப்புரத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். விழுப்புரத்தின் சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பல புராதனச் சின்னங்கள் உள்ளன. அதில் மிகக் கணிசமான அளவிற்குச் சமண சமயம் சார்ந்த சின்னங்கள் இருப்பதைக் குறிப்பிடலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர்குன்று எனும் ஒரு சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து, தமிழ் மொழி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது.
இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை தமிழி (பிராமி) எழுத்திலிருந்து வட்டெழுத்தாகத் தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பைப் பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது. இந்த திருநாதர்குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான் ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது முக்கியமானதொரு சான்று அல்லவா?
இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர்நீத்தார் என்ற செய்தியையும் சொல்கின்றது. இது கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக்கூறலாம்.
மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது. அதே போல மேலும் பல்லவ காலத்துத் தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. இப்படி வரிசை வரிசையாகக் கல்வெட்டுக்கள் நிறைந்த ஒரு குன்றுப்பகுதிதான் இது. ஆனால் என்ன காரணமோ... இன்றளவும் தமிழக தொல்லியல் துறையினாலும் சரி, இந்தியத் தொல்லியல் துறையினாலும் சரி.. பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனை வேதனை என வருந்துவதா அல்லது குறைபட்டுக் கொள்வதா?
இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர்களுக்கே உரித்தான தனித்தனி சின்னங்கள் என்பன இல்லாமல் இவை காணப்படுகின்றன. மிக அழகியதொரு கலை வேலைப்பாடு இது. இப்படியும் ஒரு வடிவமா என முதன் முதலில் இதனைப் பார்த்தபோது நான் அதிசயித்துப் போனேன். இந்தக் கலைவடிவம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இதனைப் பற்றி அறிந்தோர் கூட மிகக் குறைவு என்பதையும் எனது அப்பகுதிக்கான பயணத்தின் போது அறிந்து கொண்டேன்.
சிற்பத் தொகுதி இருக்கும் கற்பாறையின் மேற்குப்பகுதியில் ஒரு குகை காணப்படுகிறது.இந்தக் குகைப்பகுதியில் சமண முனிவர்கள் தங்கி இருந்து இங்கே சமண சமயத்தை வளர்த்தனர்.
மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன. ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. பாறைகளை உடைத்துச் சேதப்படுத்தும் முயற்சி நடந்தபோது இங்கு மக்கள் ஒன்று கூடி அந்த முயற்சிகளைத் தடுத்தமையால் இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பகுதி பொதுமக்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
செஞ்சி விழுப்புரம் பதிவுகளுக்காக சென்னையிலிருந்து நாங்கள் புறப்பட்டதிலிருந்து எங்கள் வாகனப் பயணம் மிகச் சுவாரசியமாக இருந்தது. 2 நாட்கள் குறுகிய கால பயணமாக ஏற்பாடு செய்திருந்தேன். என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் இப்பயணத்தில் சேர்ந்து கொண்டனர். சென்னையில் இருந்த நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்த வாகன ஓட்டுநர் காலையில் 4 மணிக்கு எங்களை அழைக்க வந்து விட்டார்.
காரில் ஏறி அமர்ந்ததும் பயணத்தில் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி பேச ஆரம்பித்தோம். ஆனால் வாகன ஓட்டுநர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. எங்கள் கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருக்குச் செவிப்புலன் சற்று பாதிக்கப்பட்டிருப்பதுதான் எனத் தெரிந்து கொண்டோம்.
முதலில் எங்களிடம் அவர் ஏதும் பேசவுமில்லை. ஆனால் திண்டிவனம் வரும் வழியில் எங்களிடம் ஏதும் கூறாமல் சட்டென்று வாகனத்தை அவரே நிறுத்தினார். என்ன ஏதென்று பார்த்தால் அங்கிருந்த இரணியம்மன் ஆலயத்தில் தானே காசு கொடுத்து சூடம் கொஞ்சம் வாங்கி ஏற்றி காரின் முன் வைத்து சாமி கும்பிட்டார். நாங்களும் சாமி கும்பிட்டுக் கொண்டோம்.
வழியில் நாங்கள் பேசிக் கொண்டு வந்த விசயங்களை வாகனமோட்டி ஓரளவு கேட்டுக் கொண்டே வந்திருக்கின்றார். அவருக்குத் தயக்கம் நீங்கியிருக்க வேண்டும். தானும் எங்களுடன் கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் சில முயற்சிகளைச் செய்தார். திடீரென்று எங்களை நிறுத்தி அங்கு ஒரு கோயில் இருக்கின்றது.. போகனுமா என்பார்.. நாங்கள் ”நேரம் ஆகிவிட்டது.. மேல் சித்தாமூர் மடம் போகனும் .. ஆக நேராகச் செல்லுங்கள்” எனச் சொல்லியவுடன் புரிந்து கொண்டார். பின்னர் மேல்சித்தாமூரில் எங்கள் பதிவுகளை முடித்ததும் அவரே அங்கிருந்த திரௌபதி அம்மன் கோயிலில் வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு ”இந்தக் கோயிலையும் படம் பிடிங்கள்” என்றார். நாங்கள் அவரது ஆர்வத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். அவருக்காக என்று மட்டுமில்லை. உண்மையில் வித்தியாசமானதொரு கோயிலாகவும் அது இருந்தது. நாங்கள் உள்ளே சென்று புகைப்படங்கள் பிடித்துக் கொண்டு வந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. அவர் முகத்தில் தோன்றிய புன்னகை அதனை உணர்த்தியது.
அங்கிருந்து விழுப்புரம் செல்ல வேண்டும் என்று புறப்பட்டோம். வழியில் நிறுத்தி அங்கே ஒரு முனீஸ்வரன் இருக்கின்றார் பாருங்கள் எனச் சொன்னார். ”ஆகா.. இப்படியல்லவா நமக்கு உதவியாளர் தேவை” என அவரைப் பாராட்டிக் கொண்டே அங்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தோம். அன்று நாள் முழுதும் எங்களுடன் இணைந்து நான் செய்த பதிவுகளையெல்லாம் உற்று பார்த்து கவனித்துக் கொண்டே வந்தார்.
அன்று மாலை நாங்கள் எண்ணாயிரம் மலை பதிவை செய்து விட்டுப் இப்பதிவில் மேல் குறிப்பிட்ட திருநாதர்குன்று சென்று அங்குப் பதிவை முடித்து வீரானாமூர் இருளர் குடியிருப்பு பகுதிக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். மிகுந்த ஆர்வத்திலிருந்தார் எங்கள் திருவாளர் வாகனமோட்டியார். நாங்கள் திருநாதர்குன்று மலைப்பகுதிக்குச் செல்ல வயல் வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. ஆக, அவரிடம் நீங்கள் வாகனத்தை இங்கே விட்டு விடுங்கள். நாம் நடந்து செல்வோம் எனச் சொல்லி நடந்து சென்று விட்டோம். அவரும் எங்களுடன் மலைப்பகுதிக்கு நடந்தே வந்து சேர்ந்தார். பின்னர் பதிவினைச் செய்து முடித்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தோம். தூரத்தில் பார்த்தால் வயல் வரப்பில் ஓட்டிக் கொண்டே வாகனத்தை மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்து விட்டார் அந்த ஆர்வம் மிக்க வாகனமோட்டி.
வாகனம் அருகில் வந்து விட்டது என்பதால் அன்றைய பதிவிற்காக வந்திருந்த ஏனைய ஆய்வாளர்களிடம் நன்றி சொல்லி நாங்கள் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
ஆனால் ...
எங்களை ஏற்றிக் கொண்ட பின்னர் அவருக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் சேர்ந்திருக்க வேண்டும். வேகமாகச் செல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் எங்கள் வாகனமோட்டியார் வாகனத்தைச் சற்று ஓரம் திருப்பியதில் வாகனம் அப்படியே வயலுக்குள் இறங்கி விட்டது.
எங்களுக்கு விடையளித்துச் சென்ற ஆய்வாளர்களும் நண்பர்களும் எங்கள் நிலையைப் பார்த்து ஓடிவந்தனர். வாகனத்தை அப்படி இப்படி நகர்த்தினால் வாகனம் சற்றும் நகரவில்லை. பின்னர் அந்தக் கிராமத்தைச் சார்ந்தவர்களும், வயலில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மேலும் இருவரும் எங்களுக்கு உதவ வந்து சேர்ந்தனர்.
எங்களுடன் இருந்த தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் என எல்லோரும் பெரிய பாறைக்கல் ஒன்றை ஒரு சக்கரத்தின் கீழே வைத்து வாகனமோட்டியை ஓட்டச் செய்து ஒரு வழியாக வாகனத்தை வெளியே கொண்டு வந்தனர்.
எங்கள் வாகனமோட்டியோ வாகனத்தை மீட்டு விட்டோம் என்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்து வாகமோட்டினார். மாலை பதிவெல்லாம் முடிந்து இரவு செஞ்சி சேர்ந்து பின்னர் மறு நாளும் எங்களுடன் இருந்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடங்களுக்கெல்லாம் பத்திரமாக எங்களை இந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றார்.
எங்களுடன் வாகனமோட்டியாக வந்திருந்த வாகன ஓட்டுநரும் இந்தப் பயனத்தில் ஒரு வரலாற்று ஆர்வலராக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்தப் பயண அனுபவம் இப்போது நினைத்தாலும் மறக்க முடியாத குதூகலமான ஒரு அனுபவம். அந்தப் பயணத்தின் போது செய்யப்பட்ட வரலாற்றுப் பதிவு https://youtu.be/7Soskq3M3H8 என்ற பக்கத்தில் வீடியோ விழியக் காட்சியாக தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக மலர்ந்தது. இப்படிப் பல வரலாற்றுச் சின்னங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதும், வாய்ப்பமைந்தால் நேரில் சென்று பார்த்து வருவதும் நமது தமிழர் வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலுக்கு நிச்சயம் வழிவகுக்கும்!
அழகிய பதிவு. அன்றைய தினத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள்.மகிழ்ச்சி. நன்றிங்க சகோ..!
ReplyDeleteஅன்புடன்,
கோ.செங்குட்டுவன்.
Very well documented 👍
ReplyDelete