Wednesday, May 18, 2016

14. அக்னி சிறகொன்று கண்டேன்திரு.அப்துல் கலாம் அவர்களைத் தெரியாத தமிழ் மக்களே கிடையாது எனலாம். அவர் பெயரைக் கேட்கும் போதே அவரது புன்னகைப் பூத்த முகமும் இளையோர் அனைவரும் கல்வி கற்று சிறந்த குடிமக்களாக வாழவேண்டும் என்ற அவரது அறிவுரையும், அவர் உள்ளத்தின் அன்பும், கனிவுமே நம் எல்லோருக்கும் உடன் நினைவுக்கு வரும். 

இந்திய நாட்டின் 11-வது குடியரசுத்தலைவராக  2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித்த சிறப்பைப் பெற்றவர் திரு.அப்துல்.கலாம் அவர்கள். இந்திய நாட்டின் உயரிய அரசியல் பதவியை வகித்த அப்துல் கலாம் அவர்கள் மிக எளிமையான குடும்பத்தில் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். இவரது தந்தையார் திரு.ஜெனுலாபுதீன், தாயார் திருமதி.அஷியம்மா.  இருவரும் அன்பு நிறைந்த உதாரணத்தம்பதியர் என அண்டை அயலாரிடம் மதிப்புப் பெற்றிருந்தனர்.. இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்திலேயே இவர்கள் குடும்பம் வருமையில் வாடியதால் படிக்கும் போதே வேலை செய்து குடும்ப வருமையைப் போக்க தன் உழைப்பையும் நல்கியவர் திரு.அப்துல் கலாம். வீட்டில் வருமை இருந்த போதிலும் கூட தம் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கும் மேலாக பலரும் உணவு உண்ண வருவார்கள் என்றும்,  அனைவருக்கும் உணவு  பரிமாறும் தரும சிந்தனை கொண்டவர்கள் தமது பெற்றோர் என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.  பெற்றோரது அன்பும் கருணையும், பிறரை நேசிக்கும் மனமும் இயல்பாகவே இவருக்கு வாய்த்திருந்தது.

தனது அயராத முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும், கட்டுக்கோப்பான சிந்தனையினாலும் படிப்படியாக கல்விக்கூட தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்று தன் கல்வித்தரத்தையும் வாழ்க்க்கை நிலையையும் இவர் உயர்த்திக் கொண்டதோடு நாட்டின் உயரிய பதவியையும் பெற்றார். தமிழகத்தின் மெட்ராஸ் தொழில் நுட்பக்கழகத்தில் கல்வி கற்று பட்டம் பெற்று பாதுகாப்பு ஆய்வு வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக முதலில் தமது பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் இணைந்தார். 1980ம் ஆண்டில் ரோகினி துணைக்கோளை ஏவும் பணிக்கு தலைமையேற்று அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.  இந்த சாதனைக்காக அவருக்கு 1981ம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.

1989ம் ஆண்டு "அக்னி"  ஏவுகனையை விண்ணில் செலுத்தும் குழுவிற்கு திரு.அப்துல் கலாம் அவர்கள் தலைமை தாங்கினார். மே மாதம் 22ம் தேதி "அக்னி" வானில் செலுத்தப்பட்டது. இது மாபெரும் வெற்றி என்பதோடு உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு அணு ஆயுத வல்லரசு என்ற சிறப்புத்தகுதியைப் பெற்றுத்தந்தது. "அக்னி" ஏவுகணையை விண்ணில் செலுத்துவதற்கு முதல் நாள் பாதுகாப்பு அமைச்சரும் மேலும் சிலரும் திரு.அப்துல் கலாம் அவர்களும் மாலை உலாவச் சென்ற போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திரு.கே.சி.பந்த் அவர்கள் "கலாம்! ... அக்னி வெற்றியை கொண்டாடுவதற்காக நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றீர்கள்" என்று கேட்டிருக்கின்றார். அதற்கு பதிலளிக்கு முன்னர்.. "எனக்கு என்ன வேண்டும்? என்னிடம் இல்லாதது எது? எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கப்போவது எது? .." என இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்து விட்டு, அங்கே ஆய்வுக்கூடத்தில் நடுவதற்கு ஒரு லட்சம்  செடிகள் வேண்டும் எனக் கேட்டிருக்கின்றார்.  இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த பாதுகாப்பு அமைச்சர், "அக்னிக்காக பூமித்தாயின்  ஆசிகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.. நாளை நாம் வெற்றியடைவோம்" என்று சொன்னாராம். அதனை தனது சுயசரிதையான அக்னிச்சிறகுகள் நூலில் திரு.அப்துல் கலாம் குறிப்பிடுகின்றார்.

எவ்வளவு உயர்ந்த சிந்தனை இது என ஒவ்வொருவரையும் எண்ணிப் பார்க்க வைக்கும் செய்தி இது. 

திட்டமிட்டபடி "அக்னி"  விண்ணில் செலுத்தப்பட்டு அதன் வான் பயணத்தின் வெற்றி உறுதி என அறிவிக்கப்பட்டபோது தனது நாட்குறிப்பில் அன்றைய இரவு திரு.அப்துல் கலாம் அவர்கள் இப்படி எழுதுகின்றார். 

தீச் சகுனங்களைத் தடுத்து நிறுத்த
மேல் நோக்கிச் செலுத்தும் அம்சமாகவோ,
உனது பேராற்றலை வெளிப்படுத்தச் 
செலுத்தப்படுவதாகவோ
அக்கினியைப் பார்க்காதே.

அது நெருப்பு
இந்தியனின் இதய நெருப்பு.
அது ஒரு வெறும் ஏவுகளையன்று.
இந்த நாட்டின் எரியும் பெருமை.
அதனால் தான்  அதற்கு 
அத்தனை ஒளி.

எத்தகைய எழுச்சி தரும் வரிகள்!

சாதனையைப் படைக்கப் பிறந்தவர்கள் ஏற்றும் அக ஒளி அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் அனைவரிடத்தும் சூழ்ந்து நிச்சயம் ஒளி பரப்பத்தான் செய்யும்..

தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக 2002ம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்த வேளையில் அதி வேக ஸ்கேனர்களைக் கொண்டு எவ்வகையில் அரிய பழம் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்யலாம் என்ற ஒரு கலந்துரையாடலை தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்துறைப் பேராசிரியர் டாக்டர்.உதயகுமார் அவர்களுடன் நானும் டாக்டர்.நா.கண்ணன் அவர்களும் மேற்கொண்டிருந்தோம். அவ்வேளையில் அங்கே திரு.அப்துல் கலாம் அவர்கள் சிறப்பு பேராசியரியராக பதவி எடுத்துக் கொண்டு பணியாற்றிய காலகட்டம் அது. நாங்கள் இருந்த சமயத்தில்  அவர் அருகாமையில் தனது அலுவலகத்தில் இருப்பதாகத் தெரியவர தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அவரிடம் கூறி அறிவுரையும் ஆசிகளும் பெற அவரது அறைக்குச் சென்றோம்.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி செல்கின்றோமே என்ற தயக்கம் மனம் முழுவதும் இருந்தது. ஆனால் அவரைப் பார்த்துப் பேசிய மறு நொடியே தயக்கம் மறைந்து மிக அன்னியோன்னியமானதொரு கலந்துரையாடலாக அது அமைந்தது என்பதோடு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாளாகவும் அது பதிந்து போனது.

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் எமது தன்னார்வ தொண்டூழிய நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடுகள் திட்டங்கள் என்பன பற்றி நானும் டாக்டர்.கண்ணன் அவர்களும் திரு.அப்துல் கலாமுக்கு விளக்கிச் சொன்னோம். மிகப் பொறுமையாகவும் மிகுந்த ஆர்வத்தோடும் எங்கள் விளக்கங்களைக் கேட்டவர் ஓலைச்சுவடிகள் பற்றி குறிப்பிட ஆரம்பித்த போது இடைக்கிடையே தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சுக்கிடையே அடிக்கடி திருக்குறள் செய்யுட்களை உதாரணமாகச் சொல்லி பேசியது என்னுள் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு பொறியியல் விஞ்ஞானி என்ற போதிலும் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் தமிழ் நிலத்தின் வரலாற்றையும் உணர்வுப்பூர்வமாக மிக நேசிக்கும் ஒரு மனிதரை நேரில் பார்த்து பேசியது என்னுள்ளே பல மடங்கு எழுச்சியை எற்படுத்தியது. அடிப்படையில் கணினி அறிவியல் துறையே எனது துறை என்ற வகையில் கூடுதலாக தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளில் அதிலும் குறிப்பாக பழம் நூல்கள் பாதுகாப்பு, தமிழர் வரலாற்று புராதன சின்னங்கள் பாதுகாப்பு  என்ற வகையில் அப்போது ஈடுபட ஆரம்பித்திருந்த  எனக்கு  உறுதியான உந்துதலைத் தருவதாக அச்சந்திப்பு அமைந்தது. மிக உயரிய சாதனையைச் செய்த மாபெரும் விஞ்ஞானி என்ற கர்வம் ஏதும் இல்லாமல் தமிழ் மொழியின் பால் கொண்ட பற்றினாலும் ஆர்வத்தினாலும் எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளை ஆசீர்வதித்து நல்வாழ்த்துக்களை வழங்கினார். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இந்தியாவின் மில்லியன் நூற்கள் மின்னாக்கத் திட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையும் அங்கம் வகித்து நூறு தமிழ் நூற்களை நமது முயற்சியில் இத்திட்டத்திற்காக மின்னாக்கம் செய்து வழங்கினோம் என்பது பெருமையுடன் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவிசயம். 

அன்றைய சந்திப்பில் எங்களை மேலும் மகிழ்ச்சி படுத்தியது திரு.அப்துல் கலாம் அவர்கள் எனக்கும் டாக்டர். கண்ணன் அவர்களுக்கு அளித்த விருந்தோம்பல். அவருக்காக கொண்டு வரப்பட்டிருந்த உணவை எங்கள் இருவருடன் பகிர்ந்து கொள்ள மூவருமாக அன்று சேர்ந்து உணவருந்தினோம். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பேறு என்று தான் சொல்ல வேண்டும்.  அந்தச் சந்திப்பிற்குப் பிறகு திரு.அப்துல் கலாம் அவர்கள் கைப்பட தமிழ் மரபு அற்க்கட்டளையின் முயற்சிகளை வாழ்த்தி தாமே எழுதி அனுப்பிய  வாழ்த்துக் கடிதமும் எங்களுக்குக் கிடைத்தது. இது எமது தமிழ் மரபு அறக்கட்டளைக்குக் கிடைத்த மிக உயரிய பாராட்டுதல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அச்சந்திப்பிற்குப் பிறகு அவரது சுயசரிதை  Wings of Fire நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான அக்னிச்சிறகுகள் நூலை வாங்கி வாசித்தேன். கொண்ட குறிக்கோளில் வெற்றி காண வேண்டும் என்ற இதயத் தீயின் வெளிப்பாடு அந்த நூல் முழுவதும் இருப்பதை வாசிக்கும் போது ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் மட்டுமன்றி எனது தனிப்பட்ட வாழ்க்கையின் மேம்பாட்டிற்கும் அக்னிச்சிறகுகள் தரும் அனுபவக் கருத்துக்களும் ஊக்கச் சொற்களும் எனக்குத் துணையாக அமைந்தன. இந்த நூலை எப்போது எடுத்து வாசித்தாலும் திரு.அப்துல் கலாமின் எண்ணங்களின் வெளிப்பாடுகளும் சிந்தனைகளும் மனதில் எழுச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை.

இந்தப் பூவுலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது எண்ணங்களும் கருத்துக்களும் பலரது நெஞ்சத்தில் குடிகொண்டிருப்பதைப் போல தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அவர் உளமார வழங்கிய வாழ்த்துக்கள் எமது நோக்கங்களுக்கு துணையாகத் தொடர்கின்றன!

1 comment:

  1. அருமையான செய்தி சகோதரி..,தமிழ் மரபு அறக்கட்டளை மேலும் மேலும் சிறப்புற.,அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete