Wednesday, May 25, 2016

15.குன்றக்குடி குடைவரைக்கோயில்




இந்து தெய்வ கோயில்களின் அமைப்பு, காலம் காலமாக பல மாறுபாடுகளை உள்ளடக்கியதாக படிப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழக நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்து தெய்வ கோயில்கள் பலவகைப்படும். இன்று நாம் காணும் திறந்த வெளியில் அமைந்த குல தெய்வ சாமி வழிபாடாகட்டும், கோபுரங்களுடன் கூடிய பெரிய கட்டுமானங்களைக் கொண்ட கோயில்களாகட்டும், இவைஅ அனைத்துமே காலம் காலமாக பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்தன. இன்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னான கோயில் கலை பற்றி ஆராயும் போது அவை மரம், செங்கல், சுண்ணாம்பு, மணல்  போன்ற அடிப்படைப் பொருட்களைக் கொண்டு கபட்டப்பட்டதாக அமைந்திருப்பதை, நமக்கு கிடைக்கின்ற அகழ்வாராய்ச்சி தகவல்களிலிருந்து அறிகின்றோம். பல்லவர் ஆட்சி காலத்தில், உறுதியான மலை பாறைகளைக் குடைந்து  கோயில் அமைக்கும் தொழிற்கலை உருவானது. 

குடைவரைக் கோயில் என்றால் என்ன, என பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
குடைவரைக் கோயில் என்பது மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு உறுதியான பாறையைக்  குடைந்து அதில் சிற்பிகளைக் கொண்டு இறைவடிவங்களைச் செதுக்கச் செய்து, அக்குகைக்குள்ளேயே மண்டபங்களையும் அமைத்து தூண்களையும் செதுக்கி  அமைக்கப்படும் கோயில் அமைப்பாகும்.

தமிழகத்தில் இருக்கின்ற  புகழ்பெற்ற குடவரைக் கோயில்கள் வரிசையில் மகேந்திரப்பல்லவனால் அமைக்கப்பட்ட மண்டகப்பட்டு கோயில் காலத்தால் முந்தியதாக இன்று அறியப்படுகின்றது. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலும் ஒரு குடைவரை கோயில் தான். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் உருவாக்கிய குடைவரைக் கோயில்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றன. கழுகு மலையில் இருக்கும் வெட்டுவான் கோயில் பாறையைக் குடைந்தும் கூட இத்தனை சிற்பங்களை அமைக்க முடியுமா என்று நம்மை வியக்க வைக்கும் அமைப்பாக இருக்கின்றது. 

தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இத்தகைய காலத்தால் முந்திய குடைவரைக் கோயில்களில்  இதுவரை ஏறக்குறைய பத்துக்கும் குறையாத எண்ணிக்கையிலான குடைவரைக் கோயில்களைப் பற்றிய தகவல்களை இணைத்திருக்கின்றோம்.  அவற்றில் ஒன்று தான் குன்றக்குடியில் இருக்கும் ஒரு குடைவரைக்கோயில். 

குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் கூட உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் நம்மை வியக்க வைக்கின்றன. மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் இவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

கோயில் முழுக்க மலையைக் குடைந்து சிற்பிகள் உயரமான பெரிய சிற்பங்களை வடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல.  இச்சிறிய குடவரைக் கோயில் முழுதும் பல கல்வெட்டுக்கள் நிறைந்திருப்பதும் இக்கோயிலின் சிறப்பாக அமைகின்றது. குறிப்பாக "திருமகள் போல பெருநிலச் செல்வியும்" எனத் தொடங்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியைக் குறிக்கும் கல்வெட்டு, சோழ மன்னர்கள் செய்த தானங்கள் மற்றும் பல வரலாற்றுக் குறிப்புக்களை இன்றளவும் வெளிக்காட்டும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
இந்தக் குடவரைக் கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்திருப்பது சிவலிங்க வடிவம். மலையிலேயே பாறையைக் குடைந்து செதுக்கி இச்சிவலிங்க வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் குடவரைக் கோயிலில் ஒரு பக்கத்தில் வலம்புரி பிள்ளையாரின் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் உள்ளதைப் போலவே இந்தக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் சிலையும் வலம்புரிப்பிள்ளையார் வடிவமாக, இரண்டு கரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. 
பழமையான இந்தக் கோயில் கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று இங்குள்ள எழுத்துக்களின் தோற்ற அமைப்பைக் கருத்தில் கொண்டு கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் பின்னர் வந்த சோழ மன்னர்களும் இக்கோயிலை பராமரித்து இங்கே தங்கள் கல்வெட்டுச் செய்திகளையும் செதுக்கி வைத்து இக்கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடந்து வர ஆவண செய்திருக்கின்றனர்.
  
வெளியேயிருந்து பார்க்கும் போது ஒரு கோயிலாக மட்டும் இது தெரிந்தாலும் இக்கோயிலுக்குள் மூன்று கோயில்கள் அமைந்திருப்பதை உள்ளே சென்று காணும் போது அறியலாம். 
முதலில் அமைக்கப்பட்டுள்ள கோயிலில் மூலஸ்தானத்தில் இறைவன் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றார். வெளிப்பக்கச் சுவற்றில் பாறையைக் குடைந்தே ஒரு புறம் துர்க்கையின் வடிவமும் ஒரு புறம் விஷ்ணுவின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.சங்கு சக்கரத்துடன் உள்ள மிகப் பிரமாண்டமான திருமால் வடிவம் இது. நடந்து செல்லும் வகையில் இந்த திருமால் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. திருமால், துர்க்கை, இரண்டு சிலைகளுமே மிகப் பெரிதாக பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது குடவரைக் கோயில் சற்று எளிமையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவமே அமைந்துள்ளது. இதுவும் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவலிங்க சிலையே.
  
மூன்றாவதாக அமைந்துள்ள கோயிலில் முன் வாசல் பகுதியில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்திருக்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.குடவறை கோயில் படிகள் பாதி வட்டமாக (அர்த்தவட்டம்) அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இக்கோயிலில் தற்சமயம் மாத ப்ரதோஷத்தின் போது மட்டும் இங்கு பூஜை நடைபெறுகின்றது. மற்ற சமயங்களில் இக்கோயில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் குன்றக்குடி ஆதீனத்தின் மேற்பார்வையிலேயே தற்சமயம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ள குறிப்புக்களின் வழி முன்னர் இக்கோயில் மசிலீச்வரம் என்று அழைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 
நாங்கள் பதிவிற்காகச் சென்ற தினத்தில் முதலில் குன்றக்குடியில் ஆதீனகர்த்தரை சந்திந்து ஒரு பேட்டியை முடித்து விட்டு தொல்லியல் அறிஞர் முனைவர்.வள்ளி சொக்கலிங்கம், முனைவர்.கண்ணன்,முனைவர்.காளைராசன் நான் ஆகிய நால்வரும் இந்தக் கோயிலைப் பார்க்க வந்தோம். எங்களுக்கு உதவியாக கோயிலைத் திறந்து காட்டி உதவிட குன்றக்குடி மடத்திலிருந்து ஒரு உதவியாளரும் வந்திருந்தார்.

இந்தப் பதிவின் போது தொல்லியல், கல்வெட்டு , தமிழ் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற காரைக்குடி முனைவர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்களும் எங்களுடன் வந்திருந்ததால் கல்வெட்டுக்களை வாசித்து உடன் பொருளறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள், குலோத்துங்க சோழனின் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் ஆகியவற்றை டாக்டர் வள்ளி அவர்கள்  வாசிக்கக் கேட்டு பதிவு செய்தேன். இப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாஇப்பக்கத்தில் பல புகைப்படங்களுடனும் ஒலிப்பதிவு கோப்புக்களுடனும் வரலாற்றுப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 

இக்குகைக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டில் குன்றக்குடி என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. இது இவ்வூருக்கு அமைந்துள்ள பெயரின் பழமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் பாண்டி நாடு சோழர் ஆட்சியின் கீழ் இருந்ததால் இக்கல்வெட்டுக்கள் சோழ அரசரின் மெய்கீர்த்தி குறிப்புக்களோடு தொடங்குவதைக் காணமுடிகின்றது.
தமிழகத்தில்,பொதுவாக எங்கெங்கெல்லாம் சமண முனிவர்கள் தங்கியிருந்து சமணப் பள்ளிகள் அமைத்திருந்தார்களோ அங்கெல்லாம் இவ்வகைக் குடவரைக் கோயில்களைப் காணலாம். சைவ வைஷ்ணவ தெய்வ வழிபாடுகள் மேலோங்க ஆரம்பித்த காலங்களில் மன்னர்களின் ஆதரவும் இச்சமயங்கள் பெற்றதால்  சைவ வைஷ்ணவ தெய்வங்களுக்காக இவ்வகை பாறையைக் குடைந்த கட்டுமான அடிப்படையில் சிற்பிகளில் தேர்ந்த கைத்திறனைக் கொண்டு இவ்வகைக் குடைவரைக் கோயில்களை உருவாக்கியிருக்கின்றனர் 

இதே குடைவரைக் கோயிலின் முன் வாசல் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் மன்னர்களின் சிலைகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் சிற்பங்களின் வடிவங்களைப் பார்த்தே அரசர்களின் வடிவங்கள் இவை என்பதை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
இக்கோயிலுள்ள அனைத்து கல்வெட்டுக்களும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு மிக்க குடவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. கலைச்சிற்பங்களாக அமைந்திருக்கும் இறை வடிவங்களும் தமிழர் வரலாற்றை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் கல்வெட்டு ஆவணங்களும் நிறைந்துள்ள இக்குடவரைக் கோயிலைப் பற்றி பலரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment