Wednesday, March 9, 2016

4.பானையின் மேல் ஓவியமா?

Published 09.3.2016 - Tamil Malar (Malaysia)



மண்பாண்டங்களில் சமைத்தல் என்பது தமிழர்களாகிய நமக்குப் புதிதல்ல. இன்று  அயல்நாடுகளுக்குக் குடியேறிவிட்ட தமிழ் மக்களுக்கு சூழ்நிலை, வசதிகள் காரணமாக  மண்பாண்டங்களை வைத்து சமைத்து சாப்பிடுவதற்கும், ஏனைய வகையில் மண்பாண்டங்களை உபயோகப்படுத்துவதற்கும்  வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆயினும் ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மண்டங்களின் உபயோகம் என்பது கிராமப்புறங்களில் மிக அதிகமாகவே இருக்கின்றது. மண்பாண்டங்கள் உற்பத்தி செய்பவர்களையும் அவர்களது தொழில் முறையையும் ஒரு முறை நேரில் கண்டு பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரைக்குச் சென்றிருந்தேன். குடிசைத் தொழிலாக நேரில் மக்கள் எவ்வாறு மண்பாண்டங்களையும்  மண்ணினால் ஆன  வேறு சில பொருட்களையும் செய்கின்றார்கள் என்பதை அம்மக்களை நேரில் பார்த்து பேட்டி கண்டு   தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளேன். அது பற்றி பிரிதொரு முறை சொல்கின்றேன். இன்றைய பதிவில் 2002ம் ஆண்டு, அதாவது தமிழ் மரபு அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குப்பின் தமிழகத்திற்கு நான் சென்றிருந்த போது அங்கே மண்பாண்டங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஒரு ஆய்வைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றேன். 

மண்பாண்டங்கள் என்பன முன்பு, அதாவது சிந்து வெளி நாகரிக காலத்திலேயே புழக்கத்தில் இருந்தது என்பதையும், தமிழகம் முழுவதும் இன்றைக்கு 3000 ஆண்டுகள் எனும் கால அளவிலும் புழக்கத்தில் இருந்தன என்பது,  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட  அகழ்வாய்வுகளில் கிடைத்த மண்பாண்டங்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. 

கோயம்பத்தூருக்கு அருகே உள்ள பேரூர் பகுதியில் ஒரு கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த போது அதன் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட அகழ்ந்தெடுக்கும் பணியின் போது பல மண்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றன. அவை பேரூரில் இருக்கும் சைவ மடத்தில் அப்போது வைக்கப்பட்டிருந்ததோடு, கல்வெட்டு வாசிப்பிலும், தொல்லியல் ஆய்வுகளிலும் நிபுணத்துவம் பெறற சில அறிஞர்களின் உதவியோடு வாசிக்கப்பட்டு அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.  அந்த மண்பாண்டங்களின் மேல் கீறப்பட்டிருந்த எழுத்துக்களும் அதன் மேல் கீறப்பட்டிருந்த ஓவியங்களையும் ஆராயும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு நாள் பட்டறை ஒன்றினை நடத்தினோம். இது நிகழ்ந்தது 2002ம் ஆண்டில்!

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவரும் தொல்லியல் துறை சம்பந்தமான ஆய்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவரும், குமரிக்கண்டம் என்ர ஒரு நூலை எழுதியவருமான மறைந்த திரு.கொடுமுடி சண்முகம் அவர்கள் அச்சமயம் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலவைக் குழுவிலும் அங்கம் வகித்தார்.  அவரின் உதவியோடும்,   தமிழ் மரபு அறக்கட்டளையின்  தலைவர் டாக்டர்.நா. கண்ணனின் உதவியோடும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அங்கே ஒரு நாள் பட்டறை ஒன்றை இந்த ஆய்விற்காகவே ஏற்பாடு செய்திருந்தோம். டாக்டர்.நா. கண்ணன் பேரூர் சைவ மடத்திற்குச் சென்றிருந்த போது அங்கே பதிந்து வந்திருந்த பாணை ஓடுகளின் புகைப்படங்களை இந்த பட்டறையில்  மேற்கொண்ட ஆய்வில் பயன்படுத்தினோம்.

இவ்வாய்வில் இந்த  முயற்சிக்கு உதவுவதற்கு அப்போது தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர்.பத்மாவதி அவர்களும் மேலும் சில ஆய்வாளர்களும் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். இந்தப் பட்டறையில் வாசிக்கப்பட்டு அறிந்து கொள்ளப்பட்ட தகவல்கள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பிரத்தியேக  வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அத்தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர்,  http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html என்ற பக்கம் சென்று இவ்விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள் எனச் சொல்லும் போது அவை பொதுவாக சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுபவை என குறிப்பிட முடியாது. ஏனெனில் பண்டைய நாகரிகத்தில் ஈமச்சடங்கின் முக்கிய அம்சமாக விளங்கியவையாக மண்பாண்டங்களே திகழ்கின்றன. இது தமிழகத்தில் மட்டும் இருந்த ஒன்றல்ல. மாறாக உலகில் தோன்றிய பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் மண்பாண்டங்களுக்குள் மனித உடலை வைத்து ஈமக்கிரியை செய்வது என்பது மிக விரிவாக கையாளப்பட்ட ஒரு சடங்கு முறையாகவே இருந்திருக்கின்றது. நல்ல உதாரணமாக அமைவது எகிப்திய ஈமச்சடங்கு முறை. ஈமச்சடங்கில் மண்பாண்டங்கள் உபயோகித்தல் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்கின்ற பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் இன்றும் கடைபிடிக்கப்படுகின்ற ஒரு நிகழ்வாகத்தான் இருக்கின்றது. தமிழகத்தில் எடுத்துக் கொண்டாலோ, மண்பாண்டங்களின் உள் இறந்தவர் உடல்களை வைத்து புதைப்பது என்பது மிக விரிவாக வழக்கில் இருந்த ஒரு செயல்பாடாகவே கருதலாம். இதற்குச் சான்றாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில்  கிடைத்த மண்பாண்டங்களே அமைகின்றன. அண்மையில் செய்திகளில் பரவலாகப் பேசப்பட்ட மதுரைக்கு அருகாமைல் உள்ள கீழடி அகழ்வாய்விலும் இத்தகைய பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

எனது தமிழகப் பயணம் ஒன்றில் சென்னையில்  ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டபோது,  சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு பெரிய வெட்ட வெளியில் வரிசையாக பாதி உடைந்த நிலையிலான மண்பாண்டங்கள் தென்படுவதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இவை முதுமக்கள் தாழி எனப்படுவன. முதுமக்கள் தாழி என்பது மிகப்பெரிய வடிவிலான ஒரு மண்பானை. அதன் உள்ளே இறந்தவரை வைத்து அவர் பயன்படுத்திய அணிகலன்களையும் உள்ளே வைத்து மண்ணிற்குள் புதைக்கும்  முறையே  பண்டைய காலத்தில் ஈமச்சடங்கு முறையாக இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், இவ்வகையான இறந்தோரை மண்பாண்டங்களில் வைத்து புதைப்பதுவோ அல்லது அவர்களது எரியூட்டப்பட்ட உடலிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளையும் சாம்பலையும் பானைக்குள் வைத்து புதைப்பது என்பதுவோ தமிழகத்தில் என்று மட்டுமல்லாது பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் வழக்கில் இருந்திருக்கின்றன என்பதுதான். அசிரிய நாகரிகம், எகிப்து. மெசொபொட்டாமிய நாகரிகம் என்பனவற்றை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழகத்தில் நெடுங்காலமாக   மக்கள் வாழ்விடமாக குறிப்பிடப்படும் பகுதிகளில் பரவலாக அகழ்வாய்வுகள் நடத்தினால் மிக அதிக அளவிலான முதுமக்கள் தாழிகளைக் கண்டெடுக்கலாம். இதன்வழி மானுடவியல், சமூகவியல், தொல்லியல், குறியீடுகள் தொடர்பான ஆய்வுகள் எனப்பரவலான வகையிலான ஆய்வுகள் செய்வதற்கான நிலை ஏற்படும். 

தமிழக அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்ற மண்பாண்டங்களின் உடைந்த பகுதிகளில் இருக்கும் கீறல்களை ஆராயும் போது பொதுவாக இரண்டு வகைகளில் இக்குறியீடுகள் உருவாக்கப்பட்டமை பற்றி அறிய முடிகின்றது. முதலாவது, இந்த மண்பாண்டங்களை உருவாக்கி அதனை சுட்டு இறுக்கமாக ஆக்குவதற்கு முன்னரே பானையின் மேல் சில கீறல்கள் அமைப்பது. இரண்டாவது வகை, பானையை முழுமையாகத் தயாரித்த பின்னர் அதன் மேல் ஏதாகினும் பொருளைக் கொண்டு தீட்டப்படும் குறியீடுகள் என்ற வகையில் அமைவது. இதில் முதல் வகையில் அமைந்த குறியீடுகளோடு கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களின் மேல் இருக்கும் கீரறல்களை நன்கு காண முடிகின்றது என்பது முக்கியக் கூறு.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட  அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களின் மேல் உள்ள குறியீடுகளில் எழுத்துக்களும் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. எழுத்துக்களும் ஓவியங்களும்,  அல்லது எழுத்துக்கள் மட்டும்,  அல்லது ஒவியக் கீறல்கள் மட்டும் என்ற வகையில் இவை அமைந்திருக்கின்றன. ஓவியங்களாக இருக்கின்றனவற்றைக் காணும் போது  பெரும்பாலும் கோடுகள், அல்லது உருவ வடிவங்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. உருவ வடிவங்கள் எனப்படும்போது மரங்கள், விலங்குகள், சூரியன் போன்ற உருவங்களும் காணக்கிடைக்கின்றன.

இந்தப் பழைய மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களையும் கீறல்களையும் பார்த்தும் வாசித்தும் என்ன பயன் எனப் பலரும் நினைக்கலாம். தமிழர்தம் வரலாற்றை அறிந்து கொள்ள இவ்வகை ஆய்வுகள் மிக அவசியம். தமிழ் மொழியின் வளர்ச்சி, அக்கால நடைமுறைகள், அக்கால தமிழர் வாழ்வியல், அக்கால வணிகமும் பொருளாதார நிலையும் என்ற பல்வேறு தளங்களிலான விசயங்களை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ள இவ்வகை கண்டுபிடிப்புக்களும் அது தொடர்பான ஆய்வுகளும் மிக மிக அவசியம். அந்த வகையில்  மலேசிய சூழலிலும் தமிழர் தம் வரலாற்றை முறையாக அறிந்து கொள்ள முறையான அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் நிச்சயமாக இருக்கின்றது என்பதில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை!

1 comment:

  1. அருமைப் பதிவு..,தொடர் ஆய்வுகள் எதிநோக்குகிறேன்.,

    இனிய பாராட்டுக்கள்.

    ReplyDelete