Wednesday, March 2, 2016

3. எழுத்துக்களா இவை?



தமிழகத்துக்குச் செல்லும் மலேசிய தமிழ்  மக்கள் பெரும்பாலும் கோயில்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துவது என்பது தான் அடிக்கடி நாம் அறிந்த ஒன்று. அப்படிச் செல்வோர்   எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த கோயில்களான மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் போன்ற பெருங்கோயில்களுக்குச் செல்வதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது மட்டுமன்றி பலரது பயணத்திட்டத்தில் திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்து விட்டு ஏதும் வேண்டுதல் இருந்தால் மொட்டை போட்டுக் கொண்டு அங்கு கொடுக்கப்படும் லட்டுவை ருசித்து விட்டு பக்திப்பரவசத்தோடு வருவது என்பது பொதுவாகவே நாம் அறிந்த விஷயம்தான். தமிழகம் என்றால் இந்தக் கோவில்கள் மட்டும் தானா? என்போருக்கு மேலும் பல தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தின் வரலாற்றுப் பகுதி தருகின்றது. அதில் ஐகொந்தம் பகுதி பாறை ஓவியத்தைப் பற்றி சில தகவல்களை இந்தப் பதிவில் தருகின்றேன்.

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளுக்காகத் தமிழகம் சென்றிருந்தேன். அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கானப் பயணத்தில் நிகழ்ந்த சில விஷயங்களைப் பற்றிய தகவல்கள்தான் இன்றைய பதிவின் முக்கிய அம்சமாக அமைகின்றது. 

கிருஷ்ணகிரி எங்கே இருக்கின்றது? என கேட்பவர்களுக்கு... இந்தியாவின் கர்நாடக மானிலத்திற்குச் சற்று அருகேயும் ஆந்திர மாநிலத்துக்கு அருகேயும் இருக்கும் ஒரு வட பகுதி மாவட்டம் தான் இது. முன்னர் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து பின்னர் 2004ம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிந்த பகுதி இது.

கிருஷ்ணகிரியில் இருக்கும் பெண்ணையாற்றுப் பகுதி நடுகற்களைத் தேடிப்பார்த்து அவற்றைப் பதிவு செய்யவேண்டும் என்று பெரிய ஆவல் எனக்கு இருந்தது. அந்த விருப்பத்தை நண்பர்களுடன் பகிர்ந்த போது ஒரு சிறு மூன்று நாள் பயணத்தை எற்பாடு செய்வது என முடிவாகியது. கிருஷ்ணகிரியில் கணினி அலுவலகம் வைத்திருக்கும் செல்வமுரளியும் திருவண்ணாமலையில் பணிபுரியும் பிரகாஷூம் இந்தப் பயண ஏற்பாட்டில், செல்ல வேண்டிய பகுதிகளைப் பற்றிய தகவல்களை எனக்கு முன்னதாகவே மின்னஞ்சல் வழி அனுப்ப, அவற்றை ஆராய்ந்து, மூன்று நாட்களில் செல்லக்கூடிய இடங்களை நான் பட்டியலிட்டு, கூகள் மேப் வரைபடத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டிய தூரத்தையும் அதற்கான நேரத்தையும் கணக்கிட்டு தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டேன். அப்பயணத்தில் என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேரா.டாக்டர்.நா.கண்ணன் அவர்களும் இணைந்து கொண்டார்கள். எங்களோடு மேலும் அப்பகுதியில் வசிக்கும் தொல்லியல் ஆய்வாளர் திரு.சுகவனம் முருகன் அவர்களும் இணைந்து கொள்ள இந்த முதல் நாள் பயணம் மிக வித்தியாசமான ஒன்றாக எங்களுக்கு அமைந்தது.

இந்தப் பயணத்தின் முதல் நாள் காலையில் பெண்ணையாற்று நடுகற்களின் பதிவை முடித்து விட்டு மதிய வாக்கில் ஐகொந்தம் செல்வதாக நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.  அங்கிருக்கும் பாறை ஓவியங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது முக்கிய நோக்கமாக எனது பட்டியலில் இருந்தது. 

சரி, பாறை ஓவியங்கள் என்றால் என்ன என்ற கேள்வி எழலாம்.  இந்த பாறை ஓவியங்கள் எனப்படுபவை கற்கால மக்களின் எண்ணங்களை, பழக்க வழக்கங்களை, அவர்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் குறியீடுகள்.  இவை பார்ப்பதற்கு கோடுகளாகவும் சிறிய சிறிய ஓவியங்கள் போன்றும் தோற்றமளித்தாலும் இவை இன்று நாம் புழங்கும் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பான ஆரம்பகால வடிவத்தின் ஒரு தோற்றம் என்று சொல்லலாம்.  இத்தகைய மிகப்பழமையான பாறை ஓவியங்கள் தமிழகத்தில் பாறைகள்  சூழ்ந்திருக்கும் குன்றுகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன.  தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள பாறை ஓவியங்களை ஆராயும் போது அவை சடங்குகள் , நம்பிக்கைகள் தொடர்பானவையாக இருப்பதைக் காண்கின்றோம்.

தமிழக பாறை ஓவியங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்த முனைவர். இராசு.பவுன்துரை அவர்கள் தனது "பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்" என்னும் நூலில், எங்கெல்லாம் நடுகற்கள் அதிகமாக இருக்கின்றனவோ அங்கெல்லாம் இவ்வகை பாறை ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். இதனை ஊர்ஜிதப்படுத்துவது போலவே  இங்கே கிருஷ்ணகிரி ஐகொந்தம் பகுதியிலும் பெண்ணையாற்றுப் பகுதியில் மிக அதிகமாக நடுகற்களை நாங்கள் நேரில் சென்றிருந்த போது பார்த்து பதிவுகள் செய்தோம். காலையிலிருந்து மதியம் வரை பெண்ணையாற்று கோயில் பதிவு, பெண்ணையாற்று நடுகல் பதிவு என்றே எங்கள் நேரம்  கழிந்திருந்தது. 

செவிக்கு உணவில்லாத போது தானே வயிற்றுக்கு உணவு என்று சொல்லிக் கொண்டு நாங்கள் நடுகல் நடுகல்களாக தேடித்தேடி சென்று பதிவு செய்து கொண்டிருந்தோம். காலையில் ஆரம்பித்த பணி.. மதியமாகி விட்டது. ஆனாலும் மதிய உணவுக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் யாருமே யோசிக்கவில்லை. அதிலும் கூடவே திரு. சுகவன முருகன் அவர்கள் தொடர்ந்து பல விஷயங்களைக் காட்டிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்ததால் அந்த சுவாரசியத்தில் மதிய உணவு என்ற ஒரு விஷயத்தை நாங்கள் மறந்தே போயிருந்தோம்.

ஐகொந்தம் கோயில் அருகாமையில் ஒரு குகையில் இருக்கும் குகைப் பாறை ஓவியங்களைப் பார்க்கச் செல்வது எங்கள் பட்டியலில் இருந்ததால் அங்கே புறப்பட்டோம்.    சரி வைகுந்தம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஐகொந்தம்.. கேள்விப்பட்டதில்லையே? அதோடு ஐகொந்தம் என்ற பெயரே முதலில் எனக்கு மனதில் நிலைக்கவில்லை. ஒருவகையாக இந்தப் பெயரை ஓரிரு முறைச் சொல்லிப் பழகிக் கொண்டு மனதில் நிலைப்படுத்திக் கொண்டே வாகனத்தில் வந்த போது ஐகொந்தம் கோயில் வந்து சேர்ந்து விட்டோம்.

கோயிலில் அன்று சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. வைகுந்த ஏகாதசி தினத்திற்கு மறு நாள் அது. பெருமாள் கோயில் வேறு .. சொல்ல வேண்டுமா? கொஞ்சம் மக்கள் நடமாட்டமும் அப்போது இருந்தது. மிகப் புதிதான கோயில். அழகான படிக்கட்டுகள்.. பளிங்குக் கற்கள் கொண்டு செய்யப்பட்ட தரை.. அழகான இயற்கைச் சூழல். ரம்மியமான சுற்றுப் புறக் காட்சி.

ஐகொந்தம் குகைப்பாறைச் சித்திரங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு செல்வோமே என்று நினைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றோம். வழிபாடு முடித்து வெளியில் வந்தோம். வரிசையாக நான்கு பெண்கள் ஒவ்வொருவரும் தயிர்சாதம், புளியஞ்சாதம், பொங்கல், தேங்காய்சாதம் வைத்துக் கொண்டு பக்தர்களை அழைத்து உபசரித்து பிரசாதத்தை வழங்கினர். ஒவ்வொருவருக்கும் கிடைத்த பிரசாதம் ஒரு மதிய உணவு அளவுக்கு இருந்தது. நான்கு வகை சாதம். கேட்க வேண்டுமா? சலிக்காமல் வரிசையில் நின்று நான்கு வகை சாதத்தையும் தயங்காமல் பெற்றுக் கொண்டு கோயில் படியில் ஒரு இடத்தில் உட்கார்ந்துச் சுற்றுச் சூழலை ரசித்துக் கொண்டே சுவைத்து சாப்பிட்டோம்.

பெருமாள் அணுக்கிரகத்தில் அன்றைய மதிய உணவுக்காக நாங்கள் அல்லாடாமல் ஒரு விருந்தே அமைந்து போனது!

ஐகொந்தம் குகைப்பாறை  இக்கோயிலுக்கு அருகாமையிலேயே இருந்ததால் சாப்பிட்டு உடன் பதிவைத்தொடங்கி விட்டோம்.

பாறையின் குகைப்பகுதிக்கு உள்ளே சென்று பார்த்த போது அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை. தரைப்பகுதியில் அமர்ந்து கொண்டு மேல் நோக்கி வரையப்பட்ட நிலையில் இந்த ஓவியங்கள்  தீட்டப்பட்டுள்ளன. ஒற்றைக் கோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட கோடுகள், மனித உருவங்கள், முக்கோணக்குறியீடு, விலங்குகள் என பலவகை கீறல்கள் பாறையின் மேல் புறத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிப்பவை. 

அதோடு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இவற்றின் வர்ணம். பொதுவாக இதுவரை அடையாளம் காணப்பட்ட பாறை ஓவியங்கள்  வெள்ளை, சிவப்பு, காவி, கருப்பு ஆகிய வர்ணங்களில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இதில் இந்த ஐகொந்தம் பாறை ஓவியங்கள் வெள்ளை நிறத்திலானவை. பொதுவாக வெள்ளை நிறத்தில் அமைகின்ற குறியீடுகள் வேட்டைக் காலத்து நிகழ்ச்சிகளைக் குறிப்பவை என்று முனைவர்.இராசு.பவுன்துரை தனது நூலில் குறிப்பிடுகின்றார்.  இவ்வகை ஓவியங்கள் வேட்டையாடும் மனிதன், அவன் வேட்டையாடும் விலங்குகள், நடனத்தைக் குறிக்கும் குறியீடுகள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன.  இந்த வெள்ளை நிறத்தை,  வெள்ளைக் களிமண், சுண்ணாம்புக் கல் போன்றவற்றிலிருந்து பெருங்கற்கால மனிதன் தயாரித்திருப்பான் என்று கொள்ளலாம்.

இந்தப் பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் என்பதில் அய்யமில்லை. இந்த பாறை ஓவியங்களிலுள்ள ஒவ்வொரு உருவத்தைப் பற்றியும் ஆராய்ந்து பெருங்கற்கால மனிதர்கள் என்ன தகவலை இக்குறியீடுகளாக விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை அறிய வேண்டிய பணி ஆய்வாளர்களுக்கு உள்ளது. குறிப்பிடத்தக்க ஆய்வுகள் இந்த பறை ஓவியங்கள் தொடர்பாக வந்துள்ளன என்ற போதிலும் இது மேலும் தொடரவேண்டும். தமிழகத்தில்  கற்பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்னமும் பல அடையாளம் காணப்படாத குறியீடுகள் மறைந்திருக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன. அவை வெளிக்கொணரப்பட வேண்டும். 

ஆயினும், இந்த ஆய்வுகளுக்குப் பெரும் சவாலாக இருப்பது, தமிழகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் குவாரி  உடைப்பு சம்பவங்கள் தாம். இந்த கிருஷ்ணகிரிப்பகுதி பாறைகளும் இவ்வகை சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் இப்பகுதிக்குச் சென்றபோது பார்க்க நேரிட்டது. உடைந்த பாறைகளைப் பார்த்த போது "இவற்றில் இருந்து சிதைந்த வரலாற்று சான்றுகள் எத்தனையோ?"  என்ற சிந்தனை எழாமல் இல்லை.  தமிழகத்தின் வரலாற்றுப் புராதன சான்றுகளை அழிக்க அன்னிய நாடுகளின் படையெடுப்புக்கள் என்ற ஒரு நிகழ்வே தேவையில்லை. உள்ளூரில் இருக்கும்சுயநலம் கொண்ட ஒரு சிலரே போதும் என்பது தான் வருத்ததிற்குறிய,  நம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்க்கின்ற உண்மை!

3 comments:

  1. Are these all part of the Samana heritage of Tamizhs ? I want to make a pilgrimage..

    ReplyDelete
  2. Are these all part of the Samana heritage of Tamizhs ? I want to make a pilgrimage..

    ReplyDelete
  3. கல் குவாரிகளால்.,எத்தனை அரிய செல்வங்கள் அழிந்து போனதோ...?, வரலாற்றைப் பாதுகாக்க.,மீட்டெடுக்க.,தமிழ்ச் சமுதாயம் முனைதல் வேண்டும்.,அத்தகைய முனைப்பும்.,எண்ணமும்.,தமிழகத்தில் இன்று...மிகக்குறைவே.,என்பதுவே துயர்ச் செய்தி சகோதரி. தங்கள் பணிகளுக்கு.,தமிழகத்தில் என்னால் ஏதேனும் உதவ இயன்றால் மிக மகிழ்வேன் சகோதரி..,மீண்டும் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete