Wednesday, February 24, 2016

2. நாற்பது நூல்கள்.. ஒரே இரவில்!

தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண் - தமிழ் மரபு அறக்கட்டளை
​.....ஜெர்மனியிலிருந்து ஒரு மடல்.​ 
டாக்டர்.சுபாஷிணி




மார்ச் மாதம் மூன்றாம் நாள், 2013ம் ஆண்டு,  மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் பிரபந்தம், அந்தாதி, பிள்ளைத்தமிழ் ஆகியன அடங்கிய,  உ.வே.சா  அவர்கள் அப்போதைய திருவாவடுதுறை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிகர் விருப்பத்தின்படி,  1910ம் ஆண்டில் தொகுத்து முடித்து பதிப்பித்த, திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு நூலினை இரவு வேளையில் திருவிடைமருதூரில் ஒரு தங்கும் விடுதியில் மின்னாக்கம் செய்தது இன்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம்!

தமிழ்த்தாத்தா எனத் தமிழ் மக்களால் போற்றப்படும் உ.வெ.சா அவர்களின் "என் சரித்திரம்" நூலை வாசித்ததிலிருந்து அவரது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நூல்களை மின்னாக்கம் செய்து அந்தச் செந்தமிழ் இலக்கியங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்நூலகத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக வழங்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மனம் முழுதும் இருந்தது. 2007ம் ஆண்டில் ஒரு முறை தலபுராணங்களைத் தேடி மின்னாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். அதில் 21 சைவ தலபுராணங்களையும் நான்கு வைஷ்ணவ தலபுராணங்களையும் மின்னாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு செய்தோம். அந்தத் தொகுப்பை வலைப்பக்கத்தில் http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html எல்லோரும் சென்று வாசிக்கலாம். தமிழகத்தில் உள்ள கோயில் பல. அவற்றிற்கான தலபுராணங்கள் ஏதோ ஓரிடத்தில் எங்கேயாயினும் யாரிடமேயாயினும் இருக்கத்தான் செய்யும். அவற்றை தொடர்ந்து சேகரித்து வரவேண்டும். மின்பதிப்பாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் மனதில்  இருந்தது; இன்னமும் இருக்கின்றது. 

தலபுராணங்களின் மேல் ஆர்வம் கொண்டு நான் தேடுவதற்கும் அவற்றை மின்னாக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருப்பதற்கும் முக்கியக்காரணம் இருக்கின்றது. தலபுராணங்கள் என்பவை ஒரு ஆலயத்தின் வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பதிந்து வைத்திருக்கும் ஆவணங்கள்.  மிகைப்படுத்தப்பட்ட கதைகள் பல அவற்றில் இருந்தாலும் கூட ஏதாகினும் சிற்சில வரலாற்றுச் செய்திகளாவது அதில் கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

தலபுராணங்களில் சிலவற்றை திருத்தி எழுதி ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பும் தமிழ்ச்சிறப்பும் ஒருங்கே அமைந்த வகையில் வழங்கியவர்களில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மிக முக்கியமனவர். அவர் இயற்றிய தலபுராணங்கள் பல. தலபுராணங்கள் மட்டுமன்றி, பிள்ளைத்தமிழ் நூல்கள், அந்தாதி நூல்கள் எனப் பல நூல்கள் இவரது படைப்புக்களாக அமைந்திருக்கின்றன. ஆக, அவற்றை மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என்ற பேராவலும் மனதில் இருந்து வந்தது.

2013ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் இரு வாரங்கள் நான் களப்பணிக்காகத் தமிழகம் சென்றிருந்த போது, சோழ நாட்டுக் கோயில்களைப் பற்றிய பதிவுகளைச் செய்து வர வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். சோழ நாட்டில் அமைந்திருப்பதுதான் திருவாவடுதுறை. இங்கிருக்கும் திருவாவடுதுறை சைவ மடத்தில் தான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் ஆசானாக பதவி வகித்து வந்தார். ஆக இந்த மடத்தின் நூலகத்தில் அவர் நூல்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற திருவாவடுதுறை மடத்திற்குச் செல்வதையும் எனது பயணத்திட்டத்தில் இணைத்துக் கொண்டேன். 

ஆதீனத்துடன் தொடர்புள்ள நண்பர் ஒருவர் ஆதீன அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இன்ன தேதியில் அங்கு வருகின்றோம் என குறிப்பிட்டு ஏற்பாடு செய்தார்.  திருமடம்  செல்லும் போது எத்தகைய வழிமுறைகளைக் கையாள வேண்டுமோ..? என்ன சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளனவோ? என எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. திருமடம் செல்லும் பாதையை அடையும் போதே மனதில் ஒரு குதூகலம் எழாமல் இல்லை. “என் சரித்திரம்“ நூலை வாசித்து முடித்திருந்தபடியால் திருவாவடுதுறை நகர், ஆதீனம் என ஓரளவு மனதில் ஒரு கற்பனை ஊர் நிழலாடியது.

வாசலில் காரை நிறுத்தி திருமடம் செல்லலாம் என நாங்கள் நெருங்க எங்களை வாசலில் வந்து வரவேற்றனர் இரண்டு தம்பிரான்கள். இருவரையும் பார்க்கும் போதே அவர்களின் சைவ நெறி ஒழுக்கம் நன்கு வெளிப்படும் வகையில் ஒரு தோற்றம். ஆனால் அதனையும் கடந்து மலர்ந்த முகத்தின் புன்னகை அவர்கள் முகத்தில் தவழ்ந்தது. அப்போது அவர்களை புகைப்படம் ஏதும் நான் எடுக்கவில்லை எனினும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் கண் முன்னே அக்காட்சி தோன்றுகின்றது. முதலில் எங்களை வரவேற்று உபசரித்து திருநீறு வழங்கி வாசற்புற பகுதியில் அமர வைத்து அருந்த நீர் கொடுத்து உபசரித்தனர். என்ன அன்பு என வியந்து போனேன்! அந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்னர் தான் ஆதீனகர்த்தர் மறைந்தமையினால் புதிய ஆதீனத்தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் சென்ற சமயம் அவர்கள் பயணத்தில் இருந்ததாகவும் ஆனால் வரும் எங்களை உபசரிக்க சொல்லியிருந்ததாகவும் கேள்விப்பட்ட போது மேலும் சந்தோஷமடைந்தேன். நிச்சயமாக நினைத்த காரியம் நலமே நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்தது.

அன்றைய தினமே பிள்ளையவர்களின் சில தல புராண நூல்களை திருமடத்தின் நூலகத்திலேயே நான் கொண்டு சென்ற காமிராவிலேயே மின்னாக்கம் செய்தேன். மதியம் நூலகத்தில் தேடியதில் சில தலபுராணங்களை மட்டுமே காணும் நிலை கிடைத்தது. இன்னும் பல நூல்கள் கிடைத்தால் அவற்றையும் பதிவு செய்து விடலாமே என மனதில் ஏக்கம் நிறைந்தது. நூலகத்தில் சொல்லி வைத்து விட்டு பின்னர் எங்கள் சோழ நாட்டு கோயில் பதிவுகளைச் செய்ய நானும் நண்பர்களும் புறப்பட்டு விட்டோம். 

இறையருளின் கருணை..! இரவு நாங்கள் தங்கியிருந்த  இடத்திற்கே எங்களைத் தேடிக் கொண்டு ஆதீனப் புலவர்கள் இருவர் பிள்ளையவர்களின் பிரபந்த திரட்டு நூலோடு வந்து சேர்ந்தனர்.  இது நாற்பது நூல்கள் அடங்கிய ஒரு பெரிய தொகுப்பு. ஆனால் அவர்கள் கட்டளை,மறு நாள் இந்த நூலை மறவாமல் நூலகத்தில்  ஒப்படைத்து விட வேண்டும் என்பது. மறு நாள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி எங்கள் சோழனாட்டு கோயில் பதிவுக்காகக் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அதிகாலை ஐந்து மணிக்குப் பயணம் திட்ட மிட்டிருந்தோம். இருந்ததோ இரவு வேளை மட்டுமே. 

ஆக இரவு 11 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 3 மணி வாக்கில் முழு நூலையும் என் காமிராவினாலேயே மின்னாக்கம் செய்து முடித்தேன். சோர்வில் உடல் அலுத்துப் போனாலும் மனதில் குதூகலம் நிறைந்திருந்தது.

இந்த 40 நூல்களையும் மின்னாக்கம் செய்து தனித்தனியாக மின்னூலாகவும் செய்து 2013 முதல் 2014 வரை ஒவ்வொன்றாக வெளியிட்டுள்ளோம். நமது தமிழ் மரபு அறக்கடளையின் சேகரத்தில் இவை இடம்பெறுகின்றன. http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html என்ற வலைப்பக்கத்தில் இவற்றைக் காணலாம்.  இந்தப் பிரபந்தத்திரட்டிற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. அது யாதெனில், உ.வே.சாவினால் தொகுக்கப்பட்ட முதல் பதிப்பு என்ற சிறப்பு இந்த நூலுக்கு உண்டு.

இந்தப் பணியில் முழுமையாக நான் ஈடுபட்டு செய்து முடித்து நூல்களை வெளியிட்டாலும் கூட,  வெவ்வேறு வகைகளில் உதவிய அன்பர்கள் சிலரை மறக்க முடியாது. அவர்களை இத்தருணத்தில் நினைவு கூர்வது மிகத் தகும்.

திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்,  திருவாவடுதுறை ஆதீன அலுவகத்தினர், திருவாவடுதுறை ஆதீனப்புலவர்கள், குறிப்பாக திரு.குஞ்சிதபாதம், திருவாவடுதுறை ஆதீன நூலகர், திரு.சரவணன், திரு.சுந்தர்.பரத்வாஜ் ஆகியோர் இப்பணி சிறக்க  உதவியவர்கள். 

தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இருக்கும் இந்நூல்களைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பயன்படுத்தி தமிழாய்வில் ஈடுபட வேண்டும். பிள்ளையவர்களின் தமிழின் ஆழத்தை, சிறப்பை தொடர்ந்து ஆய்வுலகம் போற்றி வர வேண்டும் என்பதே என் தனிப்பட்ட அவா!


No comments:

Post a Comment