Thursday, January 31, 2019

95. நோர்வே நாட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு பயணம்



தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலைக் கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னணி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர் கடந்த ஐந்நூறு ஆண்டுகள் காலப்பின்னனியிலும் வணிகத்துடன், சமயம் பரப்புதல், பின்னர் அரசியல் ஆளுமையைச் செலுத்தியமை என்ற வகையிலும் ஐரோப்பியரின் செயல்பாடுகளைக் காண்கின்றோம். இக்காலகட்டங்களில் ஐரோப்பியர் ஆசியா வந்தது போல தமிழர்கள் ஐரோப்பிய நிலப்பகுதிகளுக்குச் சென்றமையைப் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைத்தாலும் அவற்றை ஆராய வேண்டியதும், குறிப்பிட வேண்டியதும் தமிழர் வரலாறு சார்ந்த ஆய்வுகளுக்கு அவசியமாகின்றது.

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கானத் தமிழர் புலம்பெயர்வு என்பது இலங்கையில் நடைபெற்ற போரின் காரணத்தாலும், உயர் கல்வி ஆய்வுகள் என்ற நோக்கத்தினாலும் ஏற்பட்டதைக் காண்கின்றோம். அப்படி தமிழர் பெருவாரியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நோர்வே குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

நோர்வே நாட்டிற்குத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டிற்கு முன்னர் வந்திருக்கலாம். ஆயினும் அது சார்ந்த குறிப்புக்கள் ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. கடந்த நூற்றாண்டில், இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில், முதலில் நோர்வே நாட்டிற்கு வந்து வாழ்ந்த தமிழர் ஒருவரைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ”குட்டி மாமா” என அன்புடன் அவரது உறவினர்களாலும் நண்பர்களாலும் அழைக்கப்படும் திரு.ஆண்டனி ராஜேந்திரன் தான் அவர். இலங்கையிலிருந்து தனது நண்பர் ஒருவருடன் புறப்பட்டு இந்தியா வந்து, பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில் தரைவழியாகப் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றார். லெபனான், துருக்கி மற்றும் ஏனைய நாடுகளை மோட்டார் சைக்கிள் பயணத்திலேயே கடந்து பின்னர் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். பின்னர் பொருளாதாரச் சிரமத்தை ஈடுகட்ட அங்கு சில மாதங்கள் ஒரு தங்கும்விடுதியில் பணிபுரிந்திருக்கின்றார். அங்கு அறிமுகமான நண்பர்களுடைய ஆலோசனையின் படி 1956ம் ஆண்டு நோர்வே நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். நோர்வே நாட்டில் மீன்பிடித்தொழில் தொடர்பான தகவல்களைப் பெறவும் கப்பல்களைக் கட்டும் தொழில்நுட்பம் பற்றியும் அறிந்து கொள்ளலாம் என நண்பர்களின் ஆலோசனை அமைந்ததால் நோர்வேக்கு புறப்பட்டிருக்கின்றார் என்பதை அறிகின்றோம்.

மீன்பிடித்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழிலுக்கு நோர்வே பிரசித்திபெற்ற நாடு என்பதை அறிந்து கொண்டார். நோர்வே நாட்டிற்கு வந்த திரு.ராஜேந்திரன் நோர்வேஜியன் மொழியைக் கற்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஒரு நோர்வே இன பெண்மணியின் அறிமுகம் ஏற்படவே அவரையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒருவர் இலங்கையில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி. திரு,ராஜேந்திரன் இலங்கைக்குத் தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து தங்கியிருந்ததோடு இலங்கை-நோர்வே ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளைத் தொடங்கியிருக்கின்றார் என்பதும் சுவாரசியமான ஒரு செய்தி.

இலங்கைக்கு வந்தவர் அங்குத் தனது நண்பர்கள் சிலருக்கு தான் நோர்வே நாட்டில் கற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கப்பல் கட்டும் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றார். அவர்களில் சிலர் இவருடன் நோர்வே நாட்டிற்கு வந்து பின் நோர்வே நாட்டிலேயே தங்கிவிட்டனர். இலங்கை அரசின் அனுமதியுடன் ஒரு தொழிற்சாலையை இலங்கையில் உருவாக்கியிருக்கின்றார். SINOR என்ற பெயருடன் 1968 வாக்கில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இந்தத் தொழிற்சாலை நெகிழி கப்பல்களையும், மீன் பிடிக்கும் வலைகளையும் உருவாக்கும் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. இதன் வழி இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அங்கு இத்தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது. முதலில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட பின்னர் இன்று கொழும்பில் இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இலங்கையில் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தாலும் திரு,ராஜேந்திரன் நோர்வே நாட்டிற்கே வந்து தங்கி விட்டார். இன்றைய காலகட்டங்களைப் போல கடவுச்சீட்டு கெடுபிடிகள் இல்லாத காலகட்டமாகவே அது இருந்திருக்க வேண்டும்.

இதில் மேலும் ஒரு சுவாரசியமான செய்தி என்னவென்றால், இலங்கையிலிருந்து முதன் முதலில் தரைவழி பயணத்தைத் தொடங்கியபோது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இங்கிலாந்து வரும் போது பழுதடைந்து விடவே அவரது பயணம் தடைபட்டது. அவர் நோர்வே நாட்டில் உதவி கேட்க, அவருக்கு நோர்வே நாட்டில் ஒரு மோட்டார் சைக்கிளை பரிசளித்திருக்கின்றனர். இந்த புதிய மோட்டர் சைக்கிளில் மீண்டும் நிலவழியாகவே இவர் பயணம் செய்து இலங்கைக்கு ஓரு பயணம் மேற்கொண்டிருக்கின்றார். இதனைப் பார்க்கும் போது மோட்டார் சைக்கிளில் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரவேண்டும் என்று அவர் மனதில் இருந்த தீவிர ஆர்வத்தை நம்மால் ஊகிக்க முடிகின்றது அல்லவா?

திரு.ஆண்டனி ராஜேந்திரன் தனது 58வது வயதில் காலமானார். நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் வரலாற்றில் முக்கியத்துவம் படைத்தவராக இவர் திகழ்கின்றார். இவர் பயணத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்றும் இலங்கையில் அவரது மனைவியின் வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவி சில மாதங்கள் இலங்கையிலும் சில மாதங்கள் நோர்வே நாட்டிலும் வாழ்கின்றார் என்று அறிகின்றோம்.

இவரது உறவினர் திரு.ஜெயாநந்தன் அவர்களை அண்மையில் நான் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்றிருந்த போது சந்திக்க நேர்ந்தது. திரு.ஜெயாநந்தன் நோர்வே நாட்டில் இன்று நாற்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். அவர் கூறிய தகவல்கள் புகைப்படங்கள் ஆகியன தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் விழியப் பதிவு பேட்டியாக வெளியிடப்பட்டது. அப்பேட்டியை https://youtu.be/CpIt7les8NE என்ற யூடியூப் பக்கத்தின் வழி இணையத்தில் காணலாம்.

திரு.ஜெயாநந்தனும் அவரது சில நண்பர்களும் 1979ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடக்கினர். மொத்தமாக பதினேழு பேர், அதாவது ஒன்பது இலங்கைத் தமிழரும், ஐந்து இந்தியத் தமிழரும், இரண்டு மலேசியத் தமிழரும் இனைந்து இக்காலகட்டத்தில் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நோர்வே தமிழ்ச்சங்கம் நோர்வே வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழர் கலைகளையும் பண்பாட்டையும் நோர்வே மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையிலும் செயல்பட்டது. இன்று அதன் நோக்கம் மேலும் பல செயல்பாடுகளுடன் விரிவடைந்துள்ளது.

நாற்பதாவது ஆண்டினை எட்டிப்பிடித்திருக்கும் நோர்வே தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டது இந்த அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவாக அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்பாகவும் அமைந்தது. தமிழ் மொழி வளர்ச்சி, கலை, பண்பாடு, விளையாட்டுப் போட்டிகள் என்பது மட்டுமல்லாது சமூக நல நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்திச் செயல்படுகின்றது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் பொருளாளராகச் செயல்படும் திரு.வேலழகன் வரலாற்று ஆவணங்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். இவரது சேகரிப்பில் உள்ள ஆவணங்களுள் யாழ்ப்பாணம், மற்றும் மலையகம் சார்ந்த நூறாண்டுகளுக்கு மேலான அஞ்சல் அட்டைகள், இலங்கை வரப்படங்கள், காசுகள், ஈய, வெண்கலப் பொருட்கள் ஆகியவையும் அடங்கும். இவரது சேகரிப்புக்கள் எனது நோர்வே நாட்டிற்கான இந்த அண்மைய பயணத்தின் போது மின்பதிவாக்கப்பட்டு அவை ஒவ்வொன்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையப்பக்கத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன.

ஏறக்குறைழ ஐந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நோர்வே நாட்டில் இன்று ஏறக்குறைய 13,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் சீரிய தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் வரவேற்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது; பாராட்டுதலுக்குரியது. நார்வே வாழ் தமிழ் மக்களுக்கும் நார்வே இன மக்களுக்கும் இடையிலான பாலமாகவும் இந்த அமைப்பு திகழ்கின்றது. வெற்றிகரமான நாற்பதாவது ஆண்டின் தன் பயணத்தைத் தொடரும் நோர்வோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள்.









1 comment:

  1. அருமை சகோதரி., கண்டேன் காணொளியும்., அபூர்வ மனிதர்., அரிய தகவல்கள்.

    ReplyDelete