Thursday, January 11, 2018

80. அரண்மனைக்காரர்களா, ஆர்மேனியர்களா..?


வணிகப்பாதைகள் உள்ள ஊர்களுக்கெல்லாம் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வணிகர்கள் வந்தார்கள். பலர் வந்து வணிகம் செய்து திரும்பினார்கள். சிலர் தாங்கள் புதிதாக வந்த ஊர்களிலேயே தங்கி விட்டனர். தங்கியவர்கள் புதிய ஊர்களில் உள்ள பண்பாடு மொழி கலை, சமயம் என அனைத்தையும் முற்றும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதில்லை. எங்கே சென்றாலும் தனது மொழி, பண்பாடு, கலை, சமயம், வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றை தாங்கள் செல்லும் புதிய நிலப்பகுதியிலும் பரவச் செய்வதைத் செய்திருக்கின்றனர்; செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் இத்தகைய முயற்சிகளைச் செயல்படுத்துவது எனச் சொல்லி விடமுடியாது. எல்லா இன மக்களும் இதனை இயல்பாகச் செய்வதைத் தான் இன்றைய வரலாறு நமக்கு வெளிச்சப்படுத்துகின்றது.

நான் பிறந்து வளர்ந்தது பினாங்கு மாநிலத்தில் தான். அங்கு ஜோர்ஜ்டவுன் பகுதில் ஆர்மேனியன் சாலை என்ற ஒரு சாலை இருக்கின்றது. சீன வணிகர்கள் நிறைந்த பகுதியாக இப்பகுதி தற்சமயம் இருக்கின்றது. இதற்கு ஏன் ஆர்மேனியன் சாலை எனப் பெயர் வைத்திருக்கின்றார்கள் என நான் முன்னர் பல முறை யோசித்ததுண்டு.

19ம் நூற்றாண்டில், அதாவது 1808ம் ஆண்டு வாக்கில் ஆர்மேனிய வணிகர்கள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு பினாங்குக்கு வந்திருக்கின்றனர். பினாங்கு ஒரு தீவு அல்லவா? இங்கே உள்ள பினாங்கு துறைமுகம் கடல் வழிப்பயணத்தின் மிக முக்கிய துறைமுகமாக பல ஆண்டுகளாகப் புகழ்பெற்ற ஒரு பகுதி. இன்றைக்கும் கூட இங்கு வந்து தங்கிச் செல்லும் கப்பல்கள் இக்கடல்பகுதியின் வணிக வளத்தை நமக்கு வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆக, பினாங்குக்கு அன்று வந்த ஆர்மேனியர்கள் பெருமளவில் வீடுகள் கட்டிக்கொண்டு பினாங்கில் தங்கிய சாலைதான் இன்று ஆர்மேனியன் சாலை என அழைக்கப்படும் பகுதி. இங்கே ஆர்மேனிய கிருத்துவ தேவாலயம் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்திருக்கின்றனர். 1937 வாக்கில் இந்தத் தேவாலயம் சிதைத்து அழிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இங்கு வந்து வாழ்ந்த  ஆர்மேனியர்கள் ஹோட்டல்கள் கட்டியிருக்கின்றனர். பினாங்கின் ஜோர்ஜ் டவுன் என்றால் E&O Hotel (The Eastern & oriental Hotel) பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கண்களைக் கவரும் கலை நயத்துடன் பினாங்கில் 1885ம் ஆண்டு ஆர்மேனியர்களான சார்க்கீஸ் சகோதரர்களால் கட்டப்பட்ட ஒரு தங்கும்விடுதிதான் இது. பள்ளி நாட்களில் E&O Hotel அருகாமை பகுதிகளில் செல்லும் போதெல்லாம் இதன் கட்டட அமைப்பை நான் மிக ரசித்துப் பார்ப்பதுண்டு. இதுதான் பினாங்கில் ஆர்மேனியர்கள் பின்னணியோடு இன்றும் தொடரும் வரலாறு.

தமிழகத்திற்கும் ஆர்மேனியர்கள் வந்திருக்கின்றார்கள். வணிகம் செய்திருக்கின்றார்கள். வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கின்றார்கள். தேவாலயம் கட்டி வழிபட்டிருக்கின்றார்கள். ஆம். அத்தகைய ஒரு தேவாலயத்திற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் சென்றிருந்தபோது சென்று பார்த்து அதன் வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அருகே ஆர்மேனியன் சாலை என்று ஒரு சாலை இருக்கின்றது. நான் ஒரு அலுவலாக அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது, சென்ற இடத்தில் கோப்புக்களைச் சரிபார்க்க நேரம் எடுக்கும் என ஒரு அதிகாரி தெரிவித்ததால் இருந்த நேரத்தில் அப்பகுதியைச் சுற்றி பார்க்கலாம் எனக் கிளம்பியபோது நண்பர் ஒருவர் அப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புடன் ஒரு புராதனச் சின்னமாகிய 18ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்று இருப்பதைப் பற்றி முன்னர் கூறியது நினைவுக்கு வந்தது. ஆக, அதனைத் தேடிச் செல்வோம் என வழியில் இருந்தோரை ஆர்மேனியன் சாலை எங்கிருக்கின்றது எனக் கேட்டு அப்பகுதிக்குச் சென்று சேர்ந்தேன்.

ஆர்மேனியன் சாலையின் இருபுறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. முதலில் என்னால் இந்தத் தேவாலயத்தை அடையாளம் காண முடியவில்லை.  தேவாலயத்தைக் காணாது சற்று தூரம் நடந்து சென்று விட்டேன். பின்னர் வழியில் சென்ற ஒருவரைக் கேட்டு மீண்டும் அதே தெருவில் நடந்து வந்து அந்தத் தேவாலயத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்று ஓரளவு சுற்றிப் பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்தேன்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆரம்பக்கால வடிவமாகிய ஜான் கம்பெனி காலத்திலேயே, தமிழகப் பகுதியில் அவர்களோடு வியாபாரம் செய்தவர்கள் ஆர்மேனியர்களும் யூதர்களும் தான் என்ற தகவல்களோடு மேலும் ஆர்மேனியர்களின் அன்றைய தமிழகச்சூழல் பற்றிய சில குறிப்பிடத்தக்கச் செய்திகளைத் தமது மதராசப்பட்டினம் நூலில் பதிந்திருக்கின்றார் கடலோடி நரசய்யா.  மெட்ராஸைப் பற்றி வரலாற்றுத் தகவல்களை வழங்கும் நல்லதொரு நூல் இது.

ஆர்மேனியர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு இன்றைக்கு 300 ஆண்டுகள் மட்டுமே என நினைத்து விடக்கூடாது. இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்கள், வாஸ்கோட காமா இந்தியா வந்து 'இந்தியாவைக் கண்டுபிடித்தேன்' என அறிவிப்பு செய்வதற்கு முன்னரே, அதாவது கி.பி. 780ல் மேற்கு கடற்கரையில் வந்திறங்கியிருக்கின்றார் 'தோமஸ் கானா'. அவர் அங்குக் 'கானா தோமா' என அறியப்பட்டிருக்கின்றார். ஆர்மேனிய மொழியில் இதற்கு தோமா பாதிரி என்று பொருள். தமிழகப் பகுதியில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த முன்னோடிகளில் இவரும் ஒருவராக அறியப்படுகின்றார்.

சரி..  உலக வரலாற்றில் ஆர்மேனியர்களைப் பற்றியும் சற்று தெரிந்து கொள்வோமே!

ஆர்மேனியா துருக்கிக்கு மேற்கே உள்ள நாடு. துருக்கியால் மிகப் பெரிய மனிதக்குல நாசத்தை அனுபவித்த ஒரு நாடு என்றும் சொல்லலாம். ஜோர்ஜியா, அஜீர்பைஜான், ஈரான் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டது. அதோடு கிருத்துவ மதம் உருவாகிய காலகட்டத்தில் கிருத்துவ மதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்டு முதன் முதலில் அறிவித்த நாடு ஆர்மேனியா. இது நிகழ்ந்தது கி.பி.4ம் நூற்றாண்டில், அதாவது கி.பி 40 தொடங்கி  பல பகுதிகளுக்குக் கிருத்துவ மதம் பரவி வந்த வேளையில் ஆர்மேனியாவை ஆண்டுவந்த மன்னன் மூன்றாம் ட்ரீடாஸ் (Tiridates III of Armenia (238–314)) நாட்டில் அதிகாரப்பூர்வ மதமாக கி.பி. 301ம் ஆண்டு பிரகடனப்படுத்தினார். அதன் பின்னர் பைஸண்டைன் ஆட்சி, அதன் பின்னர் ஒட்டோமான் பேரரசின் கீழ் வீழ்ச்சி, 20ம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் துருக்கி நிகழ்த்திய மிக மோசமான இனப்பேரழிவால் பாதிக்கப்பட்டு, பின்னர் ரஷியாவுடன் இணைந்து, பின்னர் 1991ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு தான் ஆர்மேனியா.

பண்டைய பேரரசுகள் பல தோன்றி மனித குல நாகரிகம் செழித்த பகுதிகளில் இதுவும் ஒன்று. ஆனால் மிக மோசமாகப் போர்களால் சிதைக்கப்பட்ட ஒரு நாடு என்பதுவும் உண்மையே. ஆயினும் ஆர்மேனியர்கள் உலகம் முழுவது வணிகத்தில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படும் ஒரு இனமாகவே தம்மை நிலைப்படுத்தியிருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

தமிழகத்தின் மெட்ராஸ், வணிகர்களுக்கு ஒரு சுவர்க்கபுரி அல்லவா?  வணிகத்திற்காக ஆர்மேனியர்கள் மெட்ராஸில் 1660 வாக்கில் குடியேறியிருக்கின்றனர். இதனை உறுதிப் படுத்தும் வகையில் மெட்ராஸில் உள்ள ஒரு ஆர்மேனியரின் 1663 ஆண்டு பொறிக்கப்பட்ட கல்லறை ஒன்று சின்னமலைப் பகுதியில் இருந்தது,. வணிகர்களாக வந்தவர்கள் சிலர் மெட்ராஸிலேயே தங்கி வாணிபம் செய்யத் தொடங்கினர். ஆங்கிலேய அரசுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தாதவகையில் இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருந்தபடியால் ஆங்கிலேயர்கள் இவர்கள் தங்குவதற்காக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இருக்கும் பகுதியில் ஒரு பகுதியை அன்று வழங்கினர். அங்கு தான் இன்றும் இந்தத் தேவாலயமும் இருக்கின்றது.

இந்தத் தேவாலயம் மட்டுமன்றி ஆர்மேனியர்கள் 1820ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தையும் மெட்ராஸில் கட்டியிருக்கின்றார்கள். ஜாவா ஜார்ஜ் மானுக் என்ற ஒரு செல்வந்தர் 30,000 ரூபாய்களை இந்தப் பள்ளிக்கூடத்திற்காக தானம் செய்தார்   என்று தெரிகிறது. ஆனால் மெட்ராஸிலிருந்த ஆர்மேனியர்களின் எண்ணிக்கையோ குறைவு. ஆக, படிப்படியாக மாணவர்கள் குறைந்து 1889ம் ஆண்டில் இப்பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

ஆர்மேனியர்கள் ஆரம்பித்த முதல் பத்திரிக்கையும் மெட்ராஸில் தான் தொடங்கப்பட்டது என்பதும் ஆச்சரியம் அளிக்கும் உண்மை. பாதிரியார் ஹாரோஷியன் ஷிமவோனியன் என்பவர் அஸ்டார் என்ற பெயரில் முதல் ஆர்மேனியன் சஞ்சிகையைத் தொடங்கியிருக்கின்றார். இது குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டது. பின்னர் 1796ல் நிறுத்தப்பட்டது. ஒரு அச்சகத்தை மெட்ராஸில் நிறுவி அங்கு இச்சஞ்சிகையையும் மேலும் சில நூற்களையும் ஆர்மேனிய மொழியில் அச்சடித்து விற்றிருக்கின்றனர். இதே அச்சகத்தில் பெர்சிய மொழியிலும் நூல்கள் அச்சுப்பதிப்பு செய்யப்பட்டன. பெர்சிய மொழியில் முதல் அச்சுப்பதிப்பாக்கம் நடந்த இடமும் மெட்ராஸ் தான். அக்கால கட்டத்தில் ஆர்மேனியர்கள் தொடக்கிய மூன்று அச்சகங்கள் செயல்பாட்டில் இருந்தன என்பதுவும் 19ம் நூற்றாண்டின் இறுதிக்குள் இவை செயல்பாடில்லாமல் மூடப்பட்டன என்றும் அறிய முடிகின்றது.

இன்றைய சென்னையில் ஆர்மேனியன் சாலையைக் குறிப்பிடுவோர் 'அரண்மனைச் சாலை' என்று சொல்லிச் செல்வதால் ஆர்மேனியன் என்ற சொல் வழக்குக் குறைந்து 'அரண்மணைத்தெரு' என்ற வழக்கு வந்துவிட்டது. எதற்காக அரண்மனைத் தெரு என அழைக்க வேண்டும், எனக் கேட்டால் அவர்களுக்கு அதற்கான பொருள் தெரியாது.. 'அது யாருக்குத் தெரியும்?' என கைகளை விரித்துச் சொல்லி விட்டுச் சென்று விடுவர். இப்படி காரணம் தெரியாமல் ஊர்களின் பெயரையும் சாலைகளின் பெயரையும் மாற்றி அழைப்பதும் வரலாற்றை மறையச் செய்யும் ஒரு செயல்பாடாகத்தான் காண வேண்டியுள்ளது.

மெட்ராஸில் உள்ள ஆர்மேனியன் தேவாலயத்திற்கு நான் சென்ற போது மதியம் ஏறக்குறைய இரண்டு மணி இருக்கும். கொளுத்தும் வெயில். வாசலை மறைத்திருக்கும் கடைகளைத் தாண்டி உள்ளே செல்லும் போது தேவாலயத்தின் வாசல்பகுதியில் தேவாலயம் கட்டப்பட்ட ஆண்டு 1712 என்ற குறிப்பு இருப்பதைக் காணமுடிந்தது . முழுவதும் வெள்ளை நிறத்தினாலான தேவாலயம். உள்ளே சிறிய தோட்டம் ஒன்றும் உள்ளது. வலது புரத்தில் தேவாலயம்.  மிக எளிமையான வகையில் கட்டப்பட்ட அமைப்புடன் கூடிய அழகிய தேவாலயம் இது. சுவர்களில் இப்பகுதியில் வாழ்ந்த ஆர்மேனியர்களில் முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய காட்சி என சுவரில் மாட்டி வைத்திருக்கின்றனர். இங்கே உள்ளே வந்து பார்த்தால் வெளியே உள்ள சாலைகளும் ஆர்மேனியன் சாலையின் வியாபாரிகளும் இல்லாத, இன்றைக்கு 200 ஆண்டுகள் பின்னோக்கி வந்த உணர்வினைப் பெறக்கூடிய வகையில் இந்த அமைப்பு மாறாது அழகாகப் பேணப்படுகின்றது.

மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்த இந்தச் சாலையில் இப்படி ஒரு புராதனச் சின்னமா, என என்னை வியக்க வைத்தது இந்த 300 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயம். மதிய நேரத்து வெயிலில் இப்பகுதியில் சுற்றி அலைந்து தேடி கண்டுபிடித்துப் பார்த்ததில் ஏற்பட்ட களைப்பு தீர, இந்தத் தேலாயத்திற்கு எதிர்புரம் இருக்கும் ஒரு உணவகத்தில் ஜிகிர்தண்டா வாங்கி அருந்தி என் களைப்பைப் போக்கிக் கொண்டேன்.

'சென்னையில் அப்படி என்ன இருக்கின்றது பார்ப்பதற்கு?' எனச் சொல்லும் சில நண்பர்களை நான் அறிவேன். அறியப்படாத தமிழகத்தில், அறியப்படாத மெட்ராஸ் என்ற ஒரு பகுதி இருக்கின்றது, என்பதை அறிந்து கொள்வதோடு ஆவணப்படுத்தவும் வேண்டும்.  அதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமையும்.No comments:

Post a Comment