Thursday, November 2, 2017

75. பள்ளிகளில் தொல்லியல் அறிமுகம்



இன்றைய இளம் தலைமுறையினர்தான் நாளை நமது தமிழர் மரபினைக் காக்கும் தூண்கள். இந்தச் சிந்தனையைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை, ஆரம்பக்காலம் தொட்டு தமிழகத்திலும் மலேசியாவிலும் அவ்வப்போது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சி நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளோம். தமிழர் வரலாற்றையும் மரபையும், பண்பாட்டையும் பற்றிய தரமான செய்திகளை மாணவர் சமுதாயத்திற்குக் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இந்தச் செயல்பாடுகள் அமைகின்றன.

மலேசிய சூழலில் இளம் வயது பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சவால்கள் நிறைந்த ஒன்றுதான். அதிலும் குறிப்பாக 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல் 5ம் படிவம் முடித்து உயர்கல்விக்கூடம் செல்லும் வரையில் குழந்தைகளைப் பராமரிப்பதும் கண்காணிப்பதும் பெற்றோருக்கு மிகுந்த சிரமம் நிறைந்த ஒன்று. சமூகத்தில் பெருகிவரும் குண்டர் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் போன்றவற்றினால் சீரழிந்த இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை தமிழ்ச்சமூகத்தில் உயர்ந்து கொண்டேயிருக்கின்றது. பெற்றோர் மிகுந்த கண்காணிப்புடன் இருக்கும் சூழலிலும் கூட சில இளம் மாணாக்கர்கள் வழி தவறிப்போய்விடும் நிலமை ஏற்பட்டு விடுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் தோட்டப்புறங்களில் மட்டுமன்றி நகர்ப்புறங்களிலும் கூட குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மிகச் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு இளம் சிறார்களைக் கவரும் தந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வழி இந்த இளம் பிஞ்சுகளின் வாழ்க்கைப் பாதையை தடம்புரளச் செய்து விடுகின்றனர். தொடர்ந்து வரும் இத்தகைய சமூக அவல நிலையை மனதில் கொண்டு சமூக அமைப்புக்கள் பல மாணவர்களுக்கு முன்னேற்றப்பாதையைக் காட்டும் வகையிலும் கல்வியில் ஆழமான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலுமான நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. இவை வரவேற்கத்தக்க முயற்சிகளாகும்.

பள்ளிப்பாடங்களைக் கற்பதும் பரீட்சைக்குத் தயார்படுத்துவதும் மட்டுமே மாணவர் அறிவு வளர்ச்சிக்குப் போதுமானவை என்று முடிவு செய்து விட முடியாது. வெளி உலக, சமகால அறிவியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் நிகழும் நடப்புச் செய்திகளை மாணவர் தொடர்ந்து அறிந்து வருவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதும் மாணவர்கள் திறமையுடன் செயல்படுவதற்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைச் சிறப்புடன் அமைத்துக் கொள்வதற்கும் கட்டாயமாக அடித்தளம் அமைக்கும்.

தொல்லியல் துறை, அகழ்வாய்வுகள் என்பது பற்றின ஒரு அறிமுக நிகழ்வு ஒன்றினை மாணவர்களுக்கு வழங்குவது அவர்கள் இத்துறையைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்ற கருத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை கோலாலம்பூரில் இயங்கும் MENCO அமைப்புடன் இணைந்து கடந்த சனிக்கிழமை 28.10.2017 அன்று பத்துமலை தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். பள்ளியில் பயிலும் 4ம், 5ம், 6ம் வகுப்பு மாணவர்கள் பங்கு கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. பள்ளியின் முழு ஒத்துழைப்பும் இந்த நிகழ்விற்கு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் துறை என்பது மனித சமூகத்தின் பண்டைய வாழ்க்கை முறையை முறையான ஆராய்ச்சிகளின் வழி அறிந்து கொள்வதாகும். அகழ்வாராய்ச்சிகள் என்பன நிலத்துக்குக் கீழே அகழ்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்வது. நிலத்தின் அடித்தளத்தில் புதைந்து கிடக்கும் அப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், சான்றுகள், எலும்புக்கூடுகள் என்பன பற்றிய அறிமுகமும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் உலக மனிதர்களின் வாழ்வியலை இன்று காலத்தால் பின்னோக்கி இட்டுச் சென்று வாழ்வியலை விளக்கும் கருவியாக அமைகின்றன என்ற விளக்கமும் இந்த நிகழ்வில் மானவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், உலக நாடுகளில் இதுவரை நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் மிகப் பிரபலமாகக் கருதப்படுவன பற்றிய செய்திகள் விளக்கப்படங்களுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

அகழ்வாராய்ச்சிகள் என்பன முறையாக என்று தொடங்கப்பட்டது என்பது உறுதியாகக் கூறப்பட இயலாத போதிலும், ஐரோப்பாவில் பிரன்சுக்காரர்களும், ஜெர்மானியர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் நாடுகளில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகளைக் கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்த்தியிருக்கின்றனர். இன்று உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து தொல்லியல் அகழ்வாய்வுத்துறைகளிலிருந்தும் பயிற்சி பெற்ற பல ஆராய்ச்சியாளர்கள் தொல்லியல் ஆழ்வுகளையும் அகழ்வாய்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

உலக அகழ்வாய்வு நிகழ்வுகளில் மிகப் பிரபலமானவை எனக் கருதப்படுபவனவற்றுள் போம்பேயி (Pompeii) அகழ்வாய்வும் ஒன்று. எரிமலை வெடிப்பின் போது லாவா கசிவினால் முற்றும் முழுதுமாக அழிக்கப்பட்ட ஒரு கிராமம் நிலத்தடியில் புதைந்து போனது. இது நிகழ்ந்த காலம் கி.மு 79. மிகப் பழமையான இந்த ரோமானிய நகரம் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விட்ட நிலையில் அகழ்வாய்வின் வழி இந்த நகரம் கண்டெடுக்கப்பட்டது. எரிமலைக் கசிவினால் சிதைந்த மக்களின் உடல், வீடுகள், சிற்பங்கள், மண்பாண்டங்கள், கோயில் போன்றவை இந்த ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டன. எரிமலை வெடிப்பினால் வெளிப்பட்ட தூசித் துகள்கள் முழுமையாக மூடி அதன்மேல் எரிமலை வெடிப்பினால் வெளிப்படும் நெருப்புக் குழம்பு அதனை மூடியமையினால் அதன் கீழ் அகப்பட்டுக்கொண்ட மனிதர்கள் அனைவருமே இந்த நிகழ்வின் போது இறந்து போயினர். உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் அந்த நகரின் கட்டமைப்பு உடைந்து நொறுங்காமல் முழுமையாக 2000 ஆண்டுகள் இருந்திருக்கின்றது என்ற உண்மை அகழ்வாய்வில் தெரிய வந்தது. ஒரு பண்டைய ரோமானிய நகரில் மக்கள் வாழ்வு, பண்பாடு, நகர அமைப்பு, கோயில் வழிபாடு என்பன எவ்வாறு அமைந்திருந்தன என்பதை ஒருவர் அறிந்து கொள்வதற்கு மிகச் சரியான முக்கியச் சான்றாக இந்த அகழ்வாராய்ச்சி அமைந்தது.

ஐரோப்பிய தொல்லியல் துறையினர் கடந்த 300 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாடுகளில் எகிப்தினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆரம்பக் காலத்தில் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்ற குறிக்கோளுடன் தனியார் சிலர் எகிப்தில் குழுவாகச் சென்று பாலைவனத்தின் ஊடே பயணித்துப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் அவற்றைக் கண்டு அஞ்சி ஒதுங்காது அகழ்வாராய்ச்சிகளைச் செய்தனர். நிலத்துக்குக் கீழே இறந்து போன பண்டைய எகிப்திய மன்னர்களின் உடல்களோடு புதைக்கப்படும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் பொருட்களையும் எடுத்து வந்து அவற்றைப் பணக்காரர்களிடம் விலைபேசி விற்று செல்வந்தர்களாயினர். ஆனால் பின்னர் அரசு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய பின்னர் அகழ்வாராய்ச்சிகள் என்பன தொல்லியல் துறையைச் சார்ந்த வகையிலோ அல்லது பல்கலைக்கழகங்களைச் சார்ந்த வகையிலோ மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் செயல்பாட்டிற்கு வந்தன.

உலக வரலாற்றில் மனித இனம் மிக நீண்ட நெடிய காலங்கள் வாழ்ந்த பகுதிகளில் தனிச்சிறப்பு பெறும் நாடாக எகிப்தினைக் கூறலாம். இங்குக் கடந்த 3 நூற்றாண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் வழி எகிப்தின் நீண்ட நெடிய வரலாறு உலகில் வெளிச்சத்திற்கு வந்தது. பிரமிக்க வைக்கும் பிரமிடுகள், 5000 ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்து ஆட்சி செய்த மன்னர்கள், அதாவது மம்மி என அழைக்கப்படும் ஃபாரோக்களின் பதப்படுத்தப்பட்ட உடல், கருமக்கிரியை சடங்குகள், எகிப்தியர்களின் பண்டைய ஹீரோகிலிப்ஸ் எழுத்துக்கள், கோயில் கட்டுமானத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒபிலிஸ்க் என்ற செங்குத்தான நீண்டு உயர்ந்த கல் வடிவம், அரசாட்சி முறை, நைல் நதிக்கரை வணிகம், தொழில், அடிமைகள் வாழ்வு, கிரேக்கத்துடனான தொடர்புகள் போன்ற பல்வேறு தகவல்கள் கிடைத்தன. உலக வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு இந்தத் தகவல்கள் பெரும் பங்காற்றின. எகிப்திய தொல்லியல் அகழ்வாய்வுகளில் குறிப்பிடத்தக்கவை பல. அதில் ஒன்றுதான் தூத்தான்காமுன் என்ற ஒரு இளம் அரசனின் பதப்படுத்தப்பட்ட உடலும் அதனைச் சுற்றி வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட கல்லறையும். கல்லறை எனும் போது நம் மனதில் எழும் வடிவத்தோடு எகிப்திய ஃபாரோக்களின் கல்லறைகளை நாம் ஒப்பிடக் கூடாது. ஃபாரோக்களின் கல்லறைகள் பல தளங்களாக அமைக்கப்பட்ட ஒரு வீடு போன்றும் அதன் அறைகளுக்கும் மன்னருக்குத் தேவைப்படும் என அவர்கள் நினைக்கும் அனைத்துப் பொருட்களும் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். மன்னரின் உடலைப் பதப்படுத்தி வெள்ளை துணியால் சுற்றி, தங்க ஆபரணங்களினால் அலங்கரித்து விலையுயர்ந்த கற்களைக் கொண்டு தங்கத்திலும் வெள்ளியிலும் இழைத்துத் தயாரிக்கப்பட்ட அலங்காரப்பொருட்கள் சூழ, மிகுந்த கலை அழகுடன் தயாரிக்கப்பட்ட மரப்பெட்டிக்குள் வைத்திருப்பார்கள். அந்த மரப்பெட்டியை ஒரு தேரில் ஏற்றி அதனைச் சுற்றிலும் மன்னர் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களையும் இணைத்தே வைத்திருப்பர். அத்தகைய ஒரு கல்லறை 1922ம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர், ஜோர்ஜ் ஹெர்பெர்ட் என்ற இரண்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்ட போது உலகளாவிய அளவில் ஆச்சரியத்தையும் கவனத்தையும் இக்கண்டுபிடிப்பு பெற்றது. இந்த நிகழ்வே எகிப்திய ஃபாரோக்களின் கல்லறை அமைப்பைப் பற்றிய தெளிவை உலகுக்கு வழங்கியது எனலாம். இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மன்னர் பரம்பரையினரின் கல்லறைகளை ஒப்பிடும் போது அளவில் இக்கல்லறை சிறிதுதான் என்றாலும் கூட, இதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த அணிகலன்களும் மன்னர் தூத்தான்காமூனின் பதப்படுத்தப்பட்ட உடலில் முகத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த தங்க முகமூடியும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இன்று எகிப்தின் தலைநகர் கைரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்தப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆயினும் அவ்வப்போது உலகின் பல நாடுகளுக்கு நடமாடும் கண்காட்சியாக இந்தக் கல்லறையின் சில பொருட்கள் வரவழைக்கப்பட்டு உள்ளூர் மக்களுக்கு அவை கண்காட்சியாக காட்டப்படுகின்றன.

சிந்து சமவெளியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் அங்கு நாகரிகம் பெற்ற மனிதர்கள் வாழ்ந்தனர் என்றும், அவை இன்றைக்கு 2500 ஆண்டுகள் வாக்கில் இருந்த ஒரு சமூகம் என்றும், மிக உயர்ந்த வாழ்வியல் கலாச்சாரத்தைப் பேணிய ஒரு சமூகம் என்றும் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல், மற்றும் அகழ்வாய்வுகள் சான்றளித்தன. அங்குக் கண்டெடுக்கப்பட்ட எழுத்துருக்களைப் பற்றிய ஆய்வு அது தமிழ் மொழிதான் என்பதை உறுதிப் படுத்துவதாகவும் அமைந்தது. தமிழகத்தில் அண்மைய அகழ்வாராய்ச்சிகளாகக் கருதப்படும் கீழடி இன்றைக்கு 2200 ஆண்டுகள் வாக்கிலான தமிழர் நாகரிகத்தை உலகுக்குக் காட்டும் ஆராய்ச்சியாகத் திகழ்கின்றது.

மலேசியாவில் தமிழர்கள் பெருமைப்படத்தக்க வகையில் இருப்பது பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சிகள். கி.பி.5ம் நூற்றாண்டு தொடங்கி இங்கு லங்காசுக்கா, ஸ்ரீ விஜயா அரசுகள் அமைத்த பௌத்த, இந்து மத ஆலயங்கள், அதன் பின்னர் கி.பி 11ம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் படையெடுப்பிற்குப் பின்னர் இங்கு அமைக்கப்பட்ட சிவன் கோயில்கள் பலவும் இந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. ஏறக்குறைய 22 கோயில்கள் இதில் அடையாளம் காணப்பட்டன. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் கெடா மாநிலத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதே போல, பேராக் மாநிலத்தில் பெருவாஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு கி.பி 5-11 வரை இங்கு ஆட்சி செலுத்திய கங்கா நெகாரா அரசினைப் பற்றிய செய்திகளை உலகுக்கு வெளிச்சப்படுத்தியது. லங்காசுக்கா, ஸ்ரீ விஜயா அரசுகள் இருந்த போதே சமகாலத்தில் மிகுந்த பலத்துடன் ஆட்சி அமைத்திருந்த ஒரு இந்து அரசு தான் இந்தக் கங்கா நெகாரா அரசு. ராஜேந்திர சோழனின் கி.பி 11ம் நூற்றாண்டு படையெடுப்பினால் இந்த அரசு அழிந்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த தெய்வ வடிவின் சிற்பங்கள், கோயில்கள், மக்கள் பயன்பாட்டில் இருந்த பொருட்கள் ஆகியன இன்று பெருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய விளக்கங்களை வழங்கியபோது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருமே குறிப்புக்களை எடுத்துக் கொண்டனர். இடைக்கிடையே மாணவர்கள் வழங்கப்பட்ட செய்திகளை எவ்வளவு உள்வாங்கியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவர்கள் அவற்றிற்குச் சரியான விடையளித்ததோடு இந்த நிகழ்வினால் தாங்கள் அறிந்து கொண்ட விசயங்களையும் அழகாக விவரித்துப் பேசினர். மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் மொழியில் வரலாற்றுச் செய்திகளை உள்வாங்கி அதனைச் சிந்தித்து தாமே இயல்பாக விவரிக்கும் வகையில் செயல்பட்டனர். இது பாராட்டுக்குரியது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு மாணவருமே எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக தாம் வளர வேண்டும் என்ற கனவினை இந்த நிகழ்வில் விதைத்தோம். அந்தக் கனவுகளோடு இந்த மாணவர்கள் நிச்சயமாக இயங்குவார்கள். எதிர்காலத்தில் உலகம் போற்றும் அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உண்டு!








No comments:

Post a Comment