Friday, October 27, 2017

74. மாயனைக் கண்டேன் - கொங்கர்புளியங்குளம்தமிழ் நிலத்தின் ஐந்திணையைக் குறிப்பிடும் போது,

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(அகத். 5)
என்கின்றது தொல்காப்பியம். ஒவ்வொரு நிலத்திற்கும் அந்த நிலத்தின் தன்மைக்கேற்ற ஒரு கடவுள் என வகைப்படுத்தும் செய்யுள் இது. இதில் சுட்டப்படும் மாயோன் என்ற சொல்லை ஆராயும் போது கருப்பு, கரியோன் எனப் பொருள் கொள்ளலாம். முல்லை நிலத்தின் தெய்வமாக இந்த மாயோன் சுட்டப்படுகின்றான்.

மற்றொரு கோணத்தில் காணும் போது மாயன் வழிபாடு என்பது தமிழகத்தில் இன்றும் வழக்கில் இருக்கின்ற ஒரு பழமையான நாட்டுப்புற வழிபாட்டுக் கூறு என்றும் அறியலாம். பொதுவாக கிராமங்களில் உள்ல மாயன் கோயிலில் ஒரு செங்குத்தான கல்லை வைத்து அக்கல்லைக் கடவுளாக உருவகித்து மாலைகள் பூசைப் பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்படுகின்றது. மனித உருவத்தை ஒத்த கடவுள் வடிவங்கள் இங்கே இல்லை. மூலஸ்தானம் அல்லது கருவரை என குறிப்பிடப்படும் பகுதியில் இருப்பது ஒரு செங்குத்தான கல் மட்டுமே. இந்த மாயன் வழிபாட்டினை நினைக்கும் போது நம் சிந்தனையில் தென் அமெரிக்காவில் குறிப்பாக மெக்சிகோ, குவாட்டமாலா போன்ற நாடுகளில் இன்றைக்கு 4000 ஆண்டு வாக்கு எனக் கணக்கிடப்படும் மாயன் கலாச்சாரம் நினைவுக்கு வரலாம். பண்டைய மரபுகளில் இருக்கும் பல சடங்கு முறைகளில் இத்தகைய ஒற்றுமைகளை அதிகம் காணலாம். இவை ஆராயப்பட வேண்டியவை.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் நான் சில நாட்கள் மதுரையில்  இருந்தேன். மதுரை மாநகரமும் அதன் புறநகர் பகுதிகளும் தமிழர் தொல் மரபுகள் வேரூன்றி இருக்கும் தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று. மதுரையில் எந்த சிற்றூருக்குச் சென்றாலும் அங்கே ஏதாவது ஒரு தொல்மரபுச் சின்னம் நம் ஆய்வில் தென்படாமல் போகாது. அந்த அளவிற்கு மதுரை மனிதக் குலம் மிக நீண்ட காலம் வாழ்ந்த ஒரு நிலப்பகுதியாகத்தான் திகழ்ந்திருக்கின்றது. அதுமட்டுமா?

தமிழர் நாகரிகத்தினை உலகுக்குப் பறைசாற்றும் அண்மைய கீழடி அகழ்வாய்வுகள் நமக்குக் காட்டுவது இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்றைக்கு 2500 ஆண்டுகள் முன்னரான காலகட்டத்திலேயே மிக நுட்பமான அறிவு வளர்ச்சியைப் பெற்றவர்களாகவும், உயர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் கட்டுமானக் கலைகளைச் செய்தோராகவும், கலையை வளர்த்தோராகவும் உலகின் ஏனைய பகுதிகளைச் சார்ந்த வணிகர்கள் வந்து தங்கியிருந்து வணிகம் செய்து சென்ற வளம் மிக்க ஒரு பகுதியாகவும் இப்பகுதி இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

மதுரையில் நான் சென்று பார்த்து ஆராய்ந்து பதிவுகள் செய்வதற்கென்று ஒரு நீண்ட பட்டியல் அமைத்திருந்தேன். அதில் ஒன்றுதான் கொங்கர்புளியங்குளம் என்னும் சிற்றூர். மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.

இந்தக் கொங்கர்புளியங்குளம் சமண புராதனச் சின்னங்கள் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியுமாகும். ஆதலால் இங்குள்ள மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள அச்சின்னங்களைப் பதிவு செய்து வருவோம் எனத் திட்டமிட்டிருந்தேன். என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் முனைவர்.ரேணுகாதேவி, முனைவர்.பசும்பொன், சகோதரர் உதயன் ஆகியோர் வந்திருந்தனர். மூவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள். ஆக இரண்டு மோட்டார்சைக்கிள்களில் நால்வரும் பயணம் செல்வோம், அப்போதுதான் மலையடிவாரம் வரைச் செல்ல வசதியாக இருக்கும் என முடிவானது.

கொங்கற்புளியங்குளம். பண்டைய தமிழ் மக்களின் தொல் மரபுகள் தொடர்ச்சியாக இன்றும் பேணப்பட்டு வரும் ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பகுதி. இன்று காண்பதற்குப் பாறையும் புதர்களும் தானே இருக்கின்றன என நினைப்போர் உள்ளே சென்று பார்த்தால் வளமான தமிழர் தொல் பழம் மரபுகள் இன்று உயிர்ப்புடன் இங்குத் தொடர்வதை அறியலாம்.

பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். ஆங்காங்கே ஓரிரு வீடுகள். அதனைச் சுற்றிலும் சிறிய பயிர் தோட்டங்கள், ஆடுகள், கோழிகள் மாடுகள் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்பட்டது. நாங்கள் பயணம் செய்து வந்த மோட்டார் சைக்கிள்களை ஓரமாக வைத்து விட்டு பாறை இருக்கும் பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.

நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புற வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்கே இன்றும் தொடர்கின்றது. மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் கோயில் அது. கோயிலைக் காணும் போதே மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சிறிய கோயில் இருப்பதைக் கண்டேன்.

இந்த மாயன் கோயிலுக்கு வடகிழக்குப் பகுதியில் சற்று தூரத்தில் ஒரு சிறிய கொட்டகை ஒன்றினை அமைத்திருக்கின்றார்கள். இது இறந்தோரை எரிக்கும் ஒரு சுடலை. இங்கு மக்கள் இறந்தவர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பலையும் எலும்புத் துண்டுகளையும் எடுத்துச் செல்லும் மரபு இன்றும் தொடர்கின்றது. நாங்கள் சென்றிருந்த போது ஓரிரு நாட்களுக்கு முன்னர் வந்து எரியூட்டிச் சென்றதற்கான தடயங்கள் காட்சியளித்துக் கொண்டிருந்தன. அதனைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நாகமலை பாறைப்பகுதியை நோக்கி நடக்கலானோம்.

இந்தக் கோயிலுக்கு பின்னால் உள்ள பாறையில் தான் இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சமண முனிவர்கள் தங்கியிருந்து பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வியும் கலையும் செழிக்கச் செய்துள்ளனர். அவர்களின் வாழ்விடமாக இங்குள்ள குகைத்தளம் அமைந்திருந்தது. அங்கு முனிவர்கள் தங்க இடம் அமைத்துக் கொடுத்த நல்லுள்ளங்களின் பெயர்களைப் பண்டைய தமிழ் எழுத்துக்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர். இந்தச் சான்றுகளைக் கொண்டிருக்கும் இப்பாறைப்பகுதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியைப் பற்றி அறிந்தபோதே எழுந்தது. மூன்று கல்வெட்டுக்கள் தனித்தனியே உள்ளன என்றும் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் உள்ளது என்றும் அறிந்திருந்தேன். ஒரு சிறிய பாறையில் இவை அனைத்தும் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் அந்தப் பாறைப்பகுதியில் நான் கண்ட காட்சியோ பிரம்மாண்டமான ஒரு காட்சியாக என்னை வியப்பில் ஆழ்த்தியது.

முதலில் அப்பாறையின் மேல் தளத்திற்கு எப்படிச் செல்வது என் வியந்து நின்று விட்டோம். பின்னர் அங்கே தமிழகத் தொல்லியல் துறை அமைத்துள்ள இரும்புப் படிகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டோம். வழி முழுதும் முற்புதர் மண்டிக் கிடந்தது. புதரை அகற்றியவாறு அதனைக் கடந்து செல்வது பெரும் சவால்தான். செல்லும் போது முட்கள் நம் கைகளையும் கால்களையும் நன்கு பதம் பார்த்து விடும். ஆனாலும் பாறையில் ஏறி மேலே உள்ள புராதனச் சின்னங்களைக் காண நமக்கெழும் ஆர்வம் இந்த வலியையும் மறக்கச் செய்யும்.

படிகளின் மேலேறி பாறையின் மேற்பகுதிக்கு வந்த உடன் நமக்கு முதலில் தென்படுவது வரிசை வரிசையாக அங்கே பாறையின் குகைத்தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கற்படுக்கைகள் தாம். ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இங்கே உள்ளன. முனிவர்கள் அமர்ந்து தியானம் செய்யவும் படுத்து உறங்கவும் இந்தக் கற்படுக்கைகளை அமைத்திருக்கின்றனர். இந்தப் படுக்கை பகுதிக்குப் பின்னர் இருளான குகைப்பகுதி தொடங்குகின்றது. அதன் உட்பகுதியிலும் சில கற்படுக்கைகள் காணப்படுகின்றன.

இங்குள்ள குகைப்பகுதி இயற்கையான குகைத்தளமாகும். இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும் நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்தும் பெரிது பெரிதாக நன்கு வாசிக்கக்கூடிய வகையில் தொல்தமிழ் எழுத்து வடிவமான தமிழி எழுத்துக்களில் செதுக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் தமிழில் செதுக்கிய வாசகங்களை இன்று நாம் நம் கண்களால் காண்கின்றோமே என நினைக்கும் போது நம் மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை எனலாம்.

இங்கு செதுக்கப்பட்டுள்ள மூன்று கல்வெட்டுக்களுமே இப்பகுதியில் வாழ்ந்த சமண முனிவர்களுக்கு அமைக்கப்பட்ட இந்த கற்படுக்கை மற்றும் குகை அமைப்பு சீரமைப்பினை ஏற்படுத்தியோரைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் தாம். பண்டைய காலத்தில் செய்திகளைக் கல்வெட்டுக்களில் பொறிக்கும் மரபு தான் இருந்தது என்பதால் இந்த முறையைப் பயன்படுத்தி அந்த நிகழ்வை வரலாற்றில் இடம் பெறும் நிகழ்வாக மாற்றியிருக்கின்றனர். இத்தகைய கல்வெட்டுக்கள் தாம் இன்று நாம் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ளவும் தமிழின் வரி வடிவின் பரிணாம மாற்றத்தை அறிந்து கொள்ளவும் நமக்குத் துணை புரியும் தரவுகளாக அமைகின்றன.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகளுமாகும்.

இந்த முக்கியப் புராதனச் சின்னத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத சுயநலவாதிகள் இங்கே பாறை உடைப்புப் பணிகளைத் தொடங்கி சில பகுதிகளை சேதப்படுத்தி விட்டனர். ஆயினும் இது பொதுமக்களால்  தடுக்கப்பட்டு, இன்று கொங்கர்புளியங்குளம் புராதனச் சின்னங்கள் நாம் பார்த்து நம் வரலாற்றின் பழமையை நினைத்துப் பெருமைகொள்ளும் வகையில் இங்குள்ளன.

இங்கு வந்து செல்வோர் தங்கள் பெயர்களை கீறியும், கற்படுக்கைகளைச் சிதைத்தும் இச்சின்னங்களை அழிப்பது வேதனைக்குரிய விசயமாகும். இவை நம் மரபினை உலகுக்குக் காட்டும் சொத்துக்கள் என்று மனதில் உணர்ந்தால் இவற்றைச் சேதப்படுத்தும் எண்ணம் மனதில் எழாது. இதனை மனதில் கொண்டு இந்த வளம் மிக்க பகுதியை நமது பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றென உணர்ந்து பெருமை கொள்வோம்.


No comments:

Post a Comment