Thursday, August 24, 2017

68. பெர்லிஸ் மாநிலக் கோயில்கள்


கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து கலாச்சார வளம் சேர்ப்பவர்கள் தாம் நம் தமிழ்மக்கள். மலேசியாவை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற கிள்ளான், கோலாலம்பூர், பினாங்கு, பேராக் மாநிலம், ஜொகூர், கெடா ஆகிய மாநிலங்களில் ஏராளமான இந்து சமயக் கோயில்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால் மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் சிறிய மாநிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?

பெர்லிஸ் மாநிலத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. அவை,
- கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம்
- கங்காரிலேயே உள்ள ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலயம்
- ஆராவ் நகரிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்
- பாடாங் பெஸார் நகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்
ஆகிய நான்குமாகும்.

ஆராவ் பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரம். இங்கு தான் பெர்லிஸ் சுல்தானின் அரண்மனையும் ஏனைய அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இங்குச் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குள் தான் புதிதாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


பாடாங் பெஸார் நகர் தாய்லாந்தின் எல்லையில் அமைந்த நகரம் . இங்கு மீனாட்சியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்பதனால் விரிவாக இப்பதிவில் குறிப்பிட இயலவில்லை.

அடுத்ததாக, கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயத்தைச் சொல்லலாம் . இந்த ஆலயத்தின் பக்கத்திலேயே தான் ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. ஆக இரண்டையுமே பக்கத்திலேயே பார்க்கலாம்.


கங்கார் ஒருமுக்கிய நகரம் என்ற போதிலும் பசுமை எழில் கொஞ்சமும் குறையாத ஒரு நகரம் என்பதை இங்கு சென்றிருக்கும் அனைவரும் அறிந்திருப்போம். இந்த ஆறுமுக சாமி கோயில் பசுமையான சிறு குன்று போன்ற ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. கங்கார் நகரின் முக்கிய சாலையைக் கடந்து உள்ளே சென்றால் சுலபமாக இக்கோயிலை நாம் கண்டுபிடித்து விடலாம்.


கங்காருக்கு நான் சென்ற போது மதியமாகியிருந்தது. ஆக ஆலயம் பூட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனாலும் ஆலயத்தின் வாசல் திறந்திருந்தது. அத்துடன் வாசலில் வந்து நின்ற என்னைப் பார்த்த ஆலய பொறுப்பாளர் ஒருவர் ஆலயத்தின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று தேநீர் பானமும் பழங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தார். இதுதானே மலேசியர்களுக்கே உள்ள தனித்துவமான விருந்துபசாரப் பண்பு!

அவருடன் மேலும் சிலரும் என்னுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கோயில் பற்றிய தகவல் அடங்கிய சிறு கையேடு, மாசி மகம் திருவிழா அழைப்பிதழ் ஆகியவற்றோடு ஒரு தேவார பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றையும் எனக்கு வழங்கினர்.

பெர்லிஸ் நகரில் அமைந்திருக்கும் ஒரே முருகன் கோயில் இது தான். ஆறு முகங்களுடன் கூடிய ஆறுமுகசாமியாக இங்கே இறைவன் கருவறையில் வள்ளி தேவயானையுடன் அமைந்திருக்கின்றார். மூலமூர்த்தியின் சிலை கருங்கல்லால் அமைக்கப்பட்ட சிலையாகும்.

பெர்லிஸ் மாநிலத்தில் இக்கோயில் அமைக்கும் எண்ணம் முதலில் 1965ம் ஆண்டு வாக்கில் தான் எழுந்துள்ளது. இப்பணியில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில், மறைந்த திரு.எம்.கே.கோவிந்தசாமி அவர்கள், மறைந்த திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மறைந்த திரு.வி.கோவிந்த சாமி நாயுடு அவர்கள், மறைந்த திரு.கே.ஜி.ராவ் அவர்கள் மற்றும் மறைந்த திரு. அழகுமலை ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இக்கோயில் அமைப்பதற்கான முதல் சந்திப்பினை இவர்கள் ஆராவ் நகரிலிருக்கும் மறைந்த திரு. எஸ் சதாசிவம் அவர்கள் இல்லத்தில் 3.6.1965 அன்று நடத்தினர். கங்கார் நகரில் ஒரு இந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இச்சந்திப்பின் வழி முதன் முதலாக அக்கலந்துரையாடலின் போது உருவாக்கம் கண்டது.


இதனை அடுத்து 2.7.1965 அன்று பெர்லிஸ் மாநிலத்திலுள்ள இந்துக்கள் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தில் ஒன்று கூடி இந்தக் கருத்து பற்றி விரிவாக கலந்தாலோசித்தனர். இக்கூட்டத்தினை மறைந்த டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கின்றார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் பினாங்கு மாநிலத்திற்குத் தொழில் நிமித்தம் மாற்றலாகிச் சென்றதால் மறைந்த திரு.வி.கே.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு கோயில் கட்டும் இப்பணியை ஆரம்பித்திருக்கின்றனர். ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மாநில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மாநிலத்தில் மிக முக்கிய இந்து ஆலயமாகத் திகழ்கின்றது என்பது போன்ற தகவல்களை கோயில் கையேட்டு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் எனப் பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட போது கோயிலை அமைப்பதற்காகத் திரு.எஸ்.பி.எல்.பி.பழனியப்பா செட்டியார் அவர்கள் தனது நிலம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள். அந்த இடம் கோயில் அமைப்பதற்கு ஆகம முறைப்படி சரியான இடமாக அமையாமல் போனதால் வேறு வகையில் உதவும் பொருட்டு இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி ஸ்ரீ ஆறுமுக சுவாமி, வள்ளி, தேவயானை, மயில் வாகனம், பலி பீடம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான அனைத்துச் செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அத்துடன் தனது மூதாதையர் பர்மாவில் வழிபாட்டுக்கு வைத்திருந்த தேக்கு மரத்தில் சட்டமிடப்பட்ட தண்டாயுதபாணி படம் ஒன்றினையும் இவ்வாலயத்தில் வைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தற்போது ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் பெர்லிஸ் மாநில அரசுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்த இடத்தை பெறுவதற்காக மாநிலத்தின் முதலமைச்சரை இந்த ஆலயப் பணிக் குழுவினர் அணுகினர். மத்திய அரசிடமிருந்து $25,000.00 (மலேசிய வெள்ளி) நன்கொடையும் இக்கோயிலை அமைப்பதற்காகக் கிடைத்தது. இதற்கு மாநில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமத் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றார். இடம் கிடைத்ததும் சேற்றுப் பகுதியாக இருந்த அவ்விடத்தை மணலால் கொட்டி நிரப்பி அதனைச் சரியான நிலைக்கு மாற்றினர் கங்காரிலும் ஆராவ் பகுதியிலும் வாழ்ந்த இந்து மக்கள்.

இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா 11.7.1968ம் ஆண்டு துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் கட்டுமாணப்பணிகள் தொடங்கப்பட்டதும் பொருளாதாரப் பிரச்சனைகள் எழுந்த போது மாநில முதலமைச்சர் அவர்கள் மேலும் $15,000 (மலேசிய வெள்ளி) மாநில பொறுப்பிலிருந்து ஏற்பாடு செய்து உதவியிருக்கின்றார். அத்துடன் நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளிலிருந்து மேலும் கிட்டிய தொகையில் கோயிலின் முழு கட்டுமானப்பணியும் நிறைவு பெற்றிருக்கின்றது.

கட்டுமாணப்பணிகள் முடிவுற்று 14.6.1970 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகசாமி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்தை அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் மாநில முதலமைச்சர் டத்தோ ஷேக் அகமது அவர்கள் காலை மணி 11.15க்கு திறந்து வைத்துச் சிறப்பு செய்திருக்கின்றார்.

28.1.1972 அன்று இவ்வாலயத்தின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற்று அதில் மறைந்த திரு.வீ.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் ஆலயத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் தலைமையிலான குழு முக்கியப் பணியாக ஆலயத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பும் திட்டத்தை திறம்பட செய்து முடித்துள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வைகாசி விசாகத் தேர் திருவிழாவிற்காக ஸ்ரீ ஆறுமுகசாமியின் பஞ்சலோக சிலை ஒன்றினை வாங்க முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் அமைக்கப்பட்டது.

இக்கோயிலுக்குத் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளும் வந்து சிறப்பித்திருக்கின்றார் என்பதுவும் ஒரு பெருமை தரும் செய்தி. 15.12.1981 அன்று முதன் முதலில் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது. 1983ம் ஆண்டு திரு.வி. கோவிந்த சாமியின் மறைவுக்குப் பின்னர் மறைந்த திரு.அழகுமலை அவர்கள் ஆலய தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் 1987ம் ஆண்டு நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டத்தில் திரு.ராமையா நரசிம்மலு நாயுடு அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவ்வாலயத்திற்கு மீண்டும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1982ம் ஆண்டு வருகை புரிந்து ஆன்மீகச் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்.

2002ம் ஆண்டு இக்கோயிலின் பெயர் ஸ்ரீ ஆறுமுகசாமி தேவஸ்தானம் எனப் பெயர் மாற்றம் கண்டது. அதே ஆண்டு இக்கோயில் முழுதும் சீரமைக்கப்பட்டு 11.9.2002ம் அன்று மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்பட்ட $200,000.00 (மலேசிய வெள்ளி) பொது மக்கள் வழங்கிய நன்கொடையின் வழி சேகரிக்கப்பட்டது.

இக்கோயிலின் தேர் இலங்கையிலிருந்து (கொழும்பு) ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. தேக்கு, மஹொகானி, சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் இது. இலங்கையிலிருந்து தயாரித்து கொண்டுவரப்பட்ட தேரின் தனித்தனி பாகங்களைத் திரு.ஜெயகாந்தன் என்பவர் ஆலயத்திலேயே இருந்து அவற்றை பொறுத்தி முழுமைப்படுத்தி முடித்திருக்கின்றார். 31.5.2004 அன்று ஆலயத்தில் ஒரு பொன்னாலான வேல் மட்டும் வைத்து இத்தேரினை ஆலயத்தைச் சுற்றி வலம் வரச் செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2.6.2004 அன்று ஆலயத்தில் மிகச் சிறப்பான முறையில் ஷண்முக அர்ச்சனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் திருமதி.சுசீலா ராமையா என்பவர் இவ்வாலயத்தில் தற்போதுள்ள 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகளை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இச்சிலைகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை. இந்தச் சிலைகளே தற்சமயம் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில் ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி சிலைகளை வைத்து முதன் முதலாக 2.6.2004 அன்று முதல் முறையாக இத்தேர் கங்கார் நகரை வலம் வந்தது. பினாங்கு மாநிலத்திலிருந்து ஏற்பாடு செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு காளைகள் இந்தத் தேரினை இழுத்துச் சென்றன. இத்திருவிழாவும் ஆலய பூஜை வைபவங்களும் ஆலய ஆகம முறைப்படி செய்விக்கப்பட்டிருக்கின்றன.

வைகாசி விசாக விழாவோடு, கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

மலேசியாவைப் பொறுத்தவரை பொதுவாகவே ஆலயத்திருப்பணிகளுக்கு ஆதரவு தர பொது மக்கள் என்றும் தயங்குவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆலயங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், கலாச்சாரப் போட்டிகள் போன்றவை மக்கள் தரும் நன்கொடைகள் சமூக ஆர்வலர்களின் உழைப்பு ஆகியவற்றால் நிகழ்த்தப்படுபவை தான். பெரும்பாலான ஆலயங்களில் ஆலயப் பொதுக் குழு, இளைஞர் குழு, மகளிர் குழு என தனித்தனி பிரிவுகளை அருகாமையில் உள்ள மக்களாகவே சேர்ந்து உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதில் குறிப்பாக ஆலயத் துப்புரவுப் பணி, திருவிழா ஏற்பாடுகள், கலாச்சார போட்டிகள், பொங்கல் திருவிழா ஏற்பாடுகள், ஆலய பஜனைக் குழுவினர் என அமைந்திருக்கும். பலர் தங்கள் வார இறுதி நாட்களையும் வெள்ளிக் கிழமையையும் இவ்வகை பணிகளுக்காக ஒதுக்குவதும் உண்டு. முன்னர் மலேசியாவில் இருந்த காலகட்டத்தில் எனது அனுபவத்திலேயே இவ்வாறு பல நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன். அவை அனைத்தும் மனதை விட்டு அகலாத இனிய நிகழ்வுகளாக இருக்கின்றன.

பெர்லிஸ் மலாய்க்காரர்கள் வாழும் மாநிலமாயிற்றே என நினைக்கும் நம்மில் பலருக்கு இச்சிறிய மாநிலத்திலேயே இத்தகைய சிறப்பு மிக்க ஆலயங்களும் உள்ளன. அவற்றைப் பேணிக்காக்கும் தமிழர்கள் இங்கே வாழ்கின்றனர் என்ற செய்து மகிழ்ச்சி தரும் செய்தி அல்லவா?


1 comment:

  1. மிக்க மகிழ்ச்சியான செய்தி சகோதரி.., நன்றி மலர்கள்.

    ReplyDelete