Tuesday, August 22, 2017

67. மந்திரவாதிகளும் சாமியாடிகளும்



மந்திரவாதிகள், தந்திரவாதிகள், குறி சொல்வோர்கள், சாமியாடிகள் என்ற பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் நம்மில் பெரும்பாலோருக்கு இவர்கள் அதீத சக்திகளோடு தொடர்புடையோர் என்ற சிந்தனை எழுவதுண்டு.மலேசிய தமிழ்  சமூகத்துச் சூழலில் இத்தகைய குறி சொல்வோரும் சாமியாடிகளும் மக்களின் வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.   குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவென்றால் கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கே மந்திரித்துத் தரும் நீரை குழந்தைக்குத் தருவதும், ஏதாவது மனச் சங்கடங்களென்றால் மந்திரவாதியையோ சாமியாடியையோ சந்தித்து அருள் வாக்கு கேட்பதும் தமிழ்ச் சமூகத்துச் சூழலில் வழி வழியாக வருகின்ற வாழ்க்கை முறைகளில் கலந்து காணப்படுவது தான்.

என் இளமைக் காலத்து மலேசிய பின்னனியில், அங்கு பிறந்து வளர்ந்த காலங்களிலேயே தமிழ்ச் சமூகம் மட்டுமல்லாது, மலாய் சமூகமும் மந்திரம் தந்திரம் என்ற வகையில் ஆர்வம் காட்டும் நிலையை அனுபவத்தில் பார்த்ததுண்டு.  பயத்தின் அடிப்படையில் தமக்குத் தேவைப்படும் சில விஷயங்களை வேற்றுலக சக்திகளின் துணை கொண்டு அறிந்து கொள்ளவும் அச்சக்திகள் தமக்கு உதவும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் சில குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவும் மக்கள் இவ்வகை மந்திரவாதிகளை நோக்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்திய கிராமப்புரங்களில், கிராம தெய்வ வழிபாட்டில் குறி சொல்பவர் வருவது போல மலேசியாவின் பல மாகாணங்களில் அதிலும் தமிழர்கள் அதிகமாக குடியேறி வாழ்கின்ற பகுதிகளில் இவ்வகைச் சாமியார்கள் ஓரிருவர் இருப்பது வழக்கம். சாமியாடிகளை மாதத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை மாலையில் அல்லது நள்ளிரவில்  பார்க்கச் சென்று அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்தையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்து வருபவர்கள் பலர் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகைய வழக்கங்கள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதால் தான் இத்தகைய சாமியாடிகளும் குறி சொல்வோரும் இன்றைய காலகட்டத்திலும் மிக அதிகமாக மலேசியாவில் இருக்கின்றனர்.

சாமியாடிகள் என அழைக்கப்படும் இவ்வகைச் சாமியார்கள் பொதுவாக முனீஸ்வரன், காளியம்மன், வீரபத்திரன், பேச்சியம்மன் போன்ற கிராம தெய்வங்களின் கோயிலைக் கட்டி அக்கோயிலின்  அருகாமையிலேயே ஒரு சிறு அலுவலக அறை போல ஒன்றினை உருவாக்கி வைத்திருப்பார்கள். இந்த அலுவலக அறையில் வாரத்திற்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ இவர்கள் பொது மக்களுக்குக் குறி சொல்லும் நாட்களாக அறிவித்திருப்பார்கள். குறிப்பாக செவ்வாய் வெள்ளிக் கிழமைகளாக இவை இருக்கும்.

குறி பார்த்து தனது தேவைகளை அறிந்து கொள்ளவோ செயல்படுத்திக் கொள்ளவோ விரும்புபவர்கள் முன் கூட்டியே தங்கள் வருகையைப் பற்றி இந்தச் சாமியாடி பூசாரிக்குத் தெரிவித்து விட வேண்டும். இது தற்காலம் நாம் உளவியல் மருத்துவரைச் சென்று பார்க்க அப்போய்ண்மெண்ட் ஏற்பாடு செய்து விட்டுச் செல்வது போல. சாமியாடியைப் பார்க்க வர விரும்புபவர்கள் என்னென்ன பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விஷயம். பட்டியல் அங்குள்ள கோயிலின் தெய்வ வடிவத்திற்கு ஏற்ற வகையில் மாறுபடும்.

உதாரணமாக முனியாண்டி சாமி கோயில் பூசாரி சாமியாடியாக இருப்பார் என்றால் அவருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்ல வாழைப்பழங்கள், எலுமிச்சைப்பழங்கள், வேஷ்டித்துண்டு, கள், மதுபாணம்,சுருட்டு,  வெற்றிலை பாக்கு என ஒரு பட்டியல் இருக்கும். மாரியம்மன் அல்லது காளியம்மன் கோயிலாக இருந்தால் காணிக்கையாகப் பூ பழங்களுடன், சேலை, பூமாலை என  பெண் தெய்வத்திற்கு ஏற்ற பொருளும் சூடம், சாம்பிராணி, வெற்றிலை போன்ற பொருட்களையும் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.  இதற்கு மேல் கட்டணமாக பணமும் வைக்க வேண்டும்.

பொதுவாகவே சாமியாடி எனப்படுபவர் குறி சொல்லவருவதற்கு முன்னரே ஒரு உதவியாளர் வழியாக வந்திருப்பவரின் நிலமையை நன்கு கேட்டறிந்து கொள்வார். சில வேளைகளில் நேரடியாகவே தன் பக்தர்களின் குறையைக் கேட்க ஆரம்பித்து விடுவார். பக்தர்களும் தங்கள் மனக்குறையைச் சொல்லி தங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள்.  சாமியாடிகளாக இருப்போருக்கு முதலில் தன்னிடம் அருள்வாக்கு பெற வந்திருப்பவர் எந்த வகை மனக்கஷ்டத்தைக் கொண்டிருக்கின்றார் என அறிய வேண்டியது மிக அவசியம். ஆரம்பத்தில் அவர் சேகரிக்கும் தகவல்களைக் கொண்டுதான் அவர் வந்திருப்பவருக்கு தனது தீர்வுகளைச் சொல்ல முடியும்.

சாமியாடி குறி சொல்ல தயாராகுமுன் அவர் அருள் நிலைக்குச் செல்ல உதவும் வகையில் இசைக் கருவிகள் இசைக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வில் தவறாமல் உடுக்கை ஒலி எழுப்புதல் இடம்பெறும். சாமியாடி அருள் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் அவரது உடலின் அங்க அசைவுகள் இருக்கும். அருள் நிலைக்கு வந்த பின்னர் அருள் வாக்கு கேட்க வருபவரிடம் அவரது தேவையைக் கடவுளிடம் தாம் கூறுவதாக சாமியாடி பாவனை செய்வார். பின்னர் கடவுள் தம் உடலில் ஏறி விட்டது போன்று ஒரு பாவனையைச் செய்வார். உடலைச் சிலிர்த்துக் கொள்வார். பேச்சு மிக ஆக்ரோஷமாகவும் உரத்த ஒலியுடனும் இருக்கும்.  வந்திருப்பவருக்கு என்ன பதிலைச் சொன்னால் அவரிடம் தன் மேல் ந்மபிக்கையை மேலும் மேலும் உயர்த்தலாம் என்ற வித்தையை சாமியாடி மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பார். அந்தத் திறமையினைக் கொண்டு, சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லி, அதனை சாமியே நேராக தன் உடலில் வந்து அமர்ந்து கொண்டு கூறியதாகச் சொல்லிவிடுவார்.  அதோடு அந்தத் தீர்வுக்குப் பரிகாரமாக  அவர் செய்ய வேண்டிய பரிகாரங்களைப் பற்றிய விளக்கங்களையும் தந்து முடிப்பார். 


இந்த முழு நிகழ்வினையும் உற்று நோக்கினால் இது  ஒரு வகையில் தற்கால  சைக்கோ தெராபி போன்ற ஒரு விஷயம்தான் என்பது புலப்படும். மனிதர்கள் தம் மனதில் உள்ள வேதனையான, ரகசியமான சில செய்திகளைக் கூறி ஆறுதல் தேட நம்பிக்கையான நபர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் பல நேரங்களில் நம் மனக்குறைகளைக் காது கொடுத்துக் கேட்டு ஆறுதல் சொல்ல தக்க உறவினர்களோ நண்பர்களோ நமக்குக் கிடைப்பதில்லை. அவ்வாறான சூழலில் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுக்கும் வழிதான் ஜோதிடம், குறி சொல்லுதல், சாமி பார்த்தல் என்பவை. 
தங்கள் மனக்குறைகளைக்  கடவுளிடம்  பறிமாறிக் கொள்ளும் வகையான  நம்பிக்கையில் சாமியாடியை இறைவனாகப் பாவித்து வணங்கி தங்கள் குறைகள் தீரும் என இத்தகையோர் நினைக்கின்றனர்.

இதே போல ஆனால் சற்று மாற்றங்களுடன் அமைந்ததுதான் மலாய் இன மக்களின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்து காணப்படும் போமோ (Bomoh)  எனப்படும் மந்திரவாதிகள். இந்த போமோக்களை ஆங்கிலத்தில்  medicine man  எனக் கூருவது பொருந்தும்.


இந்த மலாய் போமோக்களில் வெவ்வேறு விதமான போமோக்கள் இருக்கின்றனர். சிலர் தங்கள் தொழிலை மிகக் கவனமாக கையாள்வதுடன் பொறுப்பு மிகுந்தவர்களாகவும் தம்மை நாடி வருபவர்களின் குறை தீர்க்கும் முயற்சிகளை மட்டுமே செய்பவர்களாகவும் இருப்பர். ஒரு சிலரோ மந்திர தந்திர சக்திகளை தீமைகளுக்குத் தயாரித்து உருவாக்கி பிறருக்கு  கெடுதல் ஏற்படுத்த இவர்களை  நாடி வருவோருக்கு உதவுபவர்களாக தீய சிந்தனைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மலேசிய நாடு முழுமைக்கும் இத்தகையோர் பலரை ஆங்காங்கே காணலாம். அதிலும் குறிப்பாக வளர்ச்சி குன்றிய மாநிலங்களான கிளந்தான் திரங்கானு, பஹாங் ஆகிய மாநிலங்களில் கிராமத்துக் கிராமம் போமோக்கள் இருக்கின்றனர். இன்றைய காலச் சூழலில் கூட பலர் போமோக்களுக்கு    முக்கியத்துவம் கொடுத்து மரியாதை செலுத்துவதையும் அவர்கள் மேல் அச்சத்துடன் இருப்பதையும் காணமுடிகிறது .  இத்தகையோர்  கிராமங்களில் சமூகத்தின் பார்வையில் முக்கிய அங்கத்தினர் என்ற கௌரவத்துடன் வலம் வருபவதையும் அறிய முடிகின்றது.


போமோக்களாகும் தகுதி அனைவருக்கும் கிடையாது எனவும் அத்தகைய சக்தி படைத்தோர் மட்டுமே போமோ தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை மலாய் மக்களிடையே உண்டு. இது கற்று பயிற்சியின் மூலம் பெறப்படும் ஒரு சக்தி இல்லையென்றும் கடவுளே சிறப்பான ஒரு சக்தியை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே அளித்திருக்கின்றார் என்றும் அவர்களே போமோக்களாக அமைய முடியும் என்பது இத்தகையோர் நம்பிக்கை. 


இந்த போமோக்களும் தமிழக பாரம்பரிய மந்திரவாதிகளைப் போல ஏதாவது ஒரு தாள இசைக்கருவியைப் பயன்படுத்தி ஒளி எழுப்பி ட்ரான்ஸ் எனப்படும் அருள் நிலைக்குச் செல்வதையே முதல் படியாக வைத்திருக்கின்றனர். சாம்பிராணிப் புகை,  வாசணைத்திரவியங்கள் என போமோக்கள் பொது மக்களுக்குக் காட்சியளிக்கும் அறை வித்தியாசமான, அதே வேளை அச்சமூட்டும் தன்மையுடன் அமைந்திருக்கும். இந்த வாசனைத்திரவியங்களின் சுகந்தமும் தாளக்கருவியின் இசையும் போமோவை ட்ரான்ஸ் நிலைக்கு இட்டுச் செல்லும். போமோக்களைப் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் உடல் நலக்குறைவுக்குத் தீர்வு காணவும், போமோக்கள் தருகின்ற மருந்துகளை வாங்கி தங்கள் பிணிகளைத் தீர்த்துக் கொள்ளவும் வருவதே சகஜம். சில போமோக்கள் குறிப்பிட்ட சில உடல் உபாதைகளை மட்டுமே போக்கும் திறன் படைத்தவர்கள் எனப் புகழ் பெற்றிருப்பர். ஒரு சிலரோ பிணிகளைத் தீர்ப்பதோடு துயரத்திற்கு வடிகால் தேடும் முயற்சிகளுக்கு உதவுபவர்களாகவும் அமைந்திருக்கின்றனர். 


தற்கால விஞ்ஞான மருத்துவ முன்னேற்றத்தில் நோய்களுக்குப் பல தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இவ்வகை சாமியாடிகளையும், போமோக்களையும் மட்டுமே நம்பியிருக்கும் மக்களும் இருக்கின்றனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையே. நம்பிக்கையே வாழ்க்கைக்கு அடிப்படை. இவ்வகை நிகழ்வுகளில் மக்கள் எதனை நம்புகின்றார்களோ அதிலேயே அவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வினைத் தேடி மன அமைதி அடைந்து விடுகின்றனர். 

 நேஷனல் ஜியோகிராபி இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மங்கோலியாவில் இன்னமும் வழக்கத்தில் உள்ள ஷமான் வழக்கங்களைப் பற்றி மிக விரிவாக ஒரு கட்டுரை வந்திருந்தது. தமிழக, மலாய் இனத்து மக்களின் சமூகத்தில் கலந்து ஒன்றாகிவிட்ட சாமியாடிகள் போன்றோர் மங்கோலிய இன மக்களின் வாழ்க்கையிலும் இருக்கின்றனர்.  இங்கு மட்டுமல்ல. உலகின் பல கலாச்சாரங்களிலும் பண்பாட்டிலும் அதிலும் குறிப்பாக நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு அம்சங்களிலும் தென்படும் ஒரு கூறாக இது அமைகின்றது.  சாமியாடிகளும் மந்திரவாதிகளும் உலகின் அனைத்து இன சமூகத்திலும் அங்கம் வகிக்கும் ஒரு குழுவினர் என்பதை எனது அனுபவத்திலும் வாசிப்பிலும் அவ்வப்போது காண்கின்றேன். மனிதர்களும் அவர்களது தேவைகளும் உலகின் எந்த மூலையாகட்டும்.. ஆழ ஆழ தேடிச் சென்றால் அடிப்படையில் ஒன்று தான் என்பதை தான் இவை நமக்கு உணர்த்துகின்றன.

சாமியாடுபவர்களும் மந்திரவாதிகளும் சாதாரண மனிதர்கள் தான். இத்தகையோரில் பெரும்பாலோருக்கு இது தான் வருமானம் கொடுக்கின்ற தொழில். ஆக, ஒவ்வொரு முறையும் தன்னிடம் குறி கேட்க வரும் பக்தர்களின் வழி இச்சாமியாடிகள், பெரும்பாலான மனிதர்களைத் தாக்கும் பிரச்சனைகளைப் பற்றிய விரிவான தகவல்களைத் தங்கள் தினசரி அனுபவங்களினால் பெருகின்றனர். அந்த அனுபவங்களைக் கொண்டு தம்மிடம் நல்ல ”பலன்” கேட்க வருவோரிடம் அவர்களுக்குத் தேவையான பதிலை அளிக்கின்றனர். பதில் ஒரு சில  வேளைகளில் சாதகமாகவும் சில வேளைகளில் எதிர்மறையாகவும் அமைவதுண்டு. எதுவாகினும் பரிகாரம் செய்ய வேண்டும் எனச் சொல்லி  பணத்தை பறிப்பதே பெரும்பாலான சாமியாடிகளின் செயலாக அமைந்து விடுகின்றது. இதற்கு மேல் போ குழந்தை வருழ்ம் தருவதற்காக சிறப்பு பூசை செய்கின்றோம் எனச் சொல்லி இளம் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றிச் செல்லும் சில சாமியாடிகளும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை அவ்வப்போது நமக்குக் கிட்டும் செய்திகள் வழியாகவும் அறிகின்றோம். பொதுமக்களாகிய நாம் தான் எது தமிழர் பாரம்பரிய, எது தமிழர் வழிபாடு, பண்பாடு என தீர சிந்தித்து இவ்வகையான ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். மனிதர்களாகிய நம்மில் பலருக்கு இருக்கின்ர பிரச்சனைகளை நாம் ஒருவருக்கொருவர் பேசி சுமுகமாகத் தீர்ந்துக் கொண்டாலே பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும்.  ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்களால் தான் பல பிரச்சனைகளே எழுகின்றன!!

No comments:

Post a Comment