Thursday, August 10, 2017

66. செக் நாட்டில் தமிழ்ஐரோப்பிய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க வகையிலான தமிழ்ப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் தமிழறிஞர்கள் சிலர் இருக்கின்றனர். செக் நாட்டின் தலைநகரான அழகிய ப்ராக் நகரில்  அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகவும் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும் எனது இனிய நண்பருமான மறைந்த பேராசிரியர் வாச்சேக் அவர்களும் அந்த வரிசையில் ஒருவராக இடம்பெறுகின்றார்.

பேராசிரியர் முனைவர் வாச்சேக் அவர்கள் 1943ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி பிறந்தார். செக் நாட்டில் கல்வி கற்று பின்னர் தமிழகம் வந்து மதுரையில் தமிழ் கற்றார்.

அவருடைய பெயரை அவ்வப்போது நான் கேள்விப்பட்டிருப்பினும் முதன் முறையாக நான் அவரை நேரில் பார்த்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு 2015ம் ஆண்டு கிட்டியது. 2015ம் ஆண்டில்  பாரீசில் நடைபெற்ற ”ஐரோப்பாவில் தமிழ்” என்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க வந்திருந்த பேராளர்களில் அவரும் ஒருவர். 70 வயதைக் கடந்திருந்தாலும் கூட மிகுந்த ஆர்வத்துடன் எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொண்டும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் சுறுசுறுப்புடன் அந்தக் கருத்தரங்க நிகழ்வில் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். என்னை அவருக்கு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அறிமுகம் செய்து வைத்தபோது, புன்னகை பூத்த முகத்துடன்  இனிய தமிழில் “வணக்கம், நலமாக இருக்கின்றீர்களா..?” என ஐரோப்பிய ஒலிகலந்த தமிழில் அவர் என்னை நோக்கிக் கேட்டது இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை.

ஒரு வகையில் இவரை பன்மொழி அறிஞர் என்றும் குறிப்பிடலாம். ஏனெனில், செக் மொழி, ஆங்கிலம், ஜெர்மானிய மொழி ஆகியவற்றோடு,  தமிழும், இந்தியும், சமஸ்கிருதமும் பேசக் கற்றவர் இவர். தமிழையும்  சமஸ்கிருத மொழியையும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குக்  கற்றுக் கொடுத்து  தமிழ் அறிந்த சில செக் மாணவர்களையும் இவர்  உருவாக்கியிருக்கின்றார். மாணவர்களின் கற்றல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதனை மனதில் கொண்டு அவர்கள் நேரடி களப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்று திட்டமிட்டு சில முறை மாணவர்களுடன் தமிழகத்திற்குக் களப்பணிகளுக்கும் வந்திருக்கின்றார்.  இடையே பல்கலைக்கழகம் ஏற்படுத்திய  பொருளாதார நிபந்தனைகளால்  பணி காரணமாக மங்கோலிய மொழியையும் கற்றுக்கொண்டு மாணவர்களுக்குத் தாம் அம்மொழியைப் போதிக்க வேண்டிய சூழ்நிலை இவருக்கு உருவானது.   ஆயினும், மங்கோலிய மொழியைக் கற்றுக் கொண்ட இவர், தனது தொடர்ச்சியான ஆராய்ச்சிக்களின் வெளிப்பாடாக, மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது, என்று ஆர்வத்துடன் என்னுடன் பேசுகையில் குறிப்பிட்டதை நான் நினைவு கூறத் தான் வேண்டும்.

பாரீசில் நடைபெற்ற ”ஐரோப்பாவில் தமிழ்” என்ற மாநாட்டில், தமிழ் மக்கள் செய்ய வேண்டிய ஆய்வுகளில் மங்கோலிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வும் மிகத் தேவை என்ற கருத்தை தனது மாநாட்டு கட்டுரையில் முன் வைத்து அவர் பேசினார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் உள்ள மொழிக்கூறு ஒற்றுமை பற்றி தமிழ் மரபு அறக்கட்டளை சில முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றோம். கொரிய மொழி போல, மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள  மொழிக்கூறு ஒற்றுமைகளை ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை ஒதுக்கி விட முடியாது.

தமிழக பல்கலைக்கழகங்களில் இயங்கும் தமிழ்த்துறையும் தமிழ் நாட்டில் இயங்கும்  உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இந்தக் கருத்தை சீரிய முறையில் நோக்க வேண்டும் என இந்தப் பதிவின் வழி தமிழ் மரபு அரக்கட்டளை முன்வைக்க விரும்புகின்றது. ஏனெனில், தமிழ் மொழியுடன் மங்கோலிய மொழிக்கு இருக்கக் கூடிய ஒற்றுமைகள் பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராய்வது, இரு பெறும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பினை அரிய வாய்ப்பளிக்கும். சமூக, பண்பாட்டு, வரலாற்றுப் பார்வையில் இந்த ஆய்வுகள் வடிவமைக்கப்பட்டு செய்லபடுத்தப்படவேண்டியது அவசியம்.

பேராசிரியர். வாச்சேக் அவர்கள்  இந்த மொழிக்கூறு ஒற்றுமை தொடர்பான அடிப்படை தரவுகளை தனது ஆய்வுகளின் வழி சேகரித்திருக்கின்றார். அந்த ஆய்வுகளைக் கண்டறிந்து, அவற்றை வாசித்து, ஆராய்ச்சி மாணவர்களை ஆய்வுப்பணிகளில் அமர்த்தி இவ்வகை ஆய்வுகளைத் துவக்க வேண்டியது மிக மிகத்தேவையான ஒன்று.  அதுவே பேராசிரியர். வாச்சேக் போன்ற ஆய்வாலர்கள் இதுகாறும் செய்து, நமக்காக விட்டுச் சென்றிருக்கும் ஆய்வுகளுக்குச் சீரிய முறையில் மதிப்பளிக்கும் ஒரு செயலாக இருக்கும் என்று கருதுகிறேன்.னான் பேராசிரியர். வாச்சேக் அவர்களை முதன் முதலில் அந்தக் கருத்தரங்க நிகழ்வில் சந்தித்த போது, தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம், அதனை எப்போது ஆரம்பித்தோம், எவ்வகையான செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன என பல்வேறு தகவல்களை நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். மிகுந்த ஆர்வத்துடன் எல்லா தகவல்களையும் உள்வாங்கிக் கொண்டார் பேரா.வாச்சேக். ”நாம் நிச்சமாக சார்ல்ஸ் பல்கலைக்கழக மத்தியகிழக்காசிய துறையில் பயில்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் சில நடவடிக்கைகளைத் திட்டமிடவேண்டும் என்று இருவரும் பேசிக் கொண்டோம். அதே கருத்தரங்க நிகழ்வில் பேரா.வாச்சேக் அவர்களை ஒரு விழியப் பதிவு பேட்டியும் செய்திருந்தேன். முழுதும் தமிழிலேயே அமைந்த சிறிய 15 நிமிட  பேட்டி அது.  அப்பேட்டியில் தனக்த் தமிழ் மொழி எவ்வகையில் அறிமுகமானது என விளக்கி தனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியரைப் பற்றிய தகவல்களை வழங்கியதோடு தனது ஆய்வுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் http://video-thf.blogspot.com/2015/10/tamil.html என்ற தொடுப்பின் வழி இந்த விழியப் பதிவு பேட்டியை அனைவரும் கேட்கலாம்.


பேராசிரியர் வாச்சேக் போன்ற ஐரோப்பிய தமிழறிஞர் சிலரது முயற்சிகள் தொடர்வதால் தான் தமிழ் மொழி ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் ஒலிக்கின்றது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இன்றைய காலகட்டத்தில் மொழி ஆய்வு என வரும்போது ஆசிய நாடுகளின் மொழிகளில் தமிழ் மொழியும் சில பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடமாக இருந்தது, இருக்கின்றது என்றால் அதற்கு இத்தகைய சான்றோர் சிலரது உழைப்பு காரணமாகவும் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

17 வயதில் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் பேரில் சமஸ்கிருதம், இந்தி எனப் படித்தவர் டாக்டர். கமில் சுவாலெபல் அவர்களின் தூண்டுதலினால் தமிழ் கற்றதாகச் சொல்கின்றார். பின்னர் மதுரையிலிருந்து செக் நாட்டிற்கு கலாச்சார பிரதிநிதியாக வந்திருந்த திருமதி.தியாகராஜன் என்பவரின் அறிமுகம் இவருக்கு ஏற்பட்டது.  அவர் வழியாக சங்கத்தமிழ் பற்றி அறிந்து கொண்டார். அவருடன் இணைந்து சங்கத்தமிழ் கற்றதைத் தன்னால் மறக்க முடியாத அனுபவமாக நினைவில் கொண்டிருந்தார் பேராசிரியர்.வாசேக். ஆனால் துரதிஷ்டவசமாக  தமிழகத்தில் நடந்த ஒரு  வாகன விபத்தில் பலியானார் திருமதி.தியாகராஜன். அது தனக்கு ஒரு மிகப் பெரிய இழப்பாக அமைந்தது என்பதை எமது பேட்டியின் போதும் பேராசிரியர் வாசேக் நினைவு கூறியபோது மனம் கனத்தது.

திருக்குறளை விரும்பாதார் யார். அதிலும் தமிழகத்து வந்து சென்ற ஐரோப்பியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழ் கற்ற ஐரோப்பியர்கள் எல்லோருக்குமே பிடித்த  தமிழ் நூல் பட்டியலைத்தரச் சொன்னால்  அதில் சந்தேகத்துக்கு இடமின்றி முதலில் இருப்பது திருக்குறள் தான். அதனால் தான் கடந்த சில நூற்றாண்டுகளாக  தமிழகம்  வந்து தமிழ் கற்ற ஐரோப்பிய அறிஞர்கள் திருக்குறளை லத்தின், ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கிலம் எனத் தங்கள் மொழிகளில் ஆர்வத்துடன் மொழிபெயர்த்தனர். இவர்களைப் போலவே பேராசிரியர் வாச்சேக் அவர்களுக்கும் பிடித்த ஒரு தமிழ் எனும் போது திருக்குறளை உடனே அவர் நினைவு கூர்ந்தார். அப்பேட்டியின் போது, திருக்குறளில் உங்கள் மனம் கவர்ந்த ஒரு குறள் யாது என நான் கேட்ட போது, முகம் மலர
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவந்தற்று “
என்ற குறளைக் கூறி அதன் பொருளையும் கூறினார்.

சங்க இலக்கிய நூல்களோடு கல்கியின் வரலாற்று  நூல்களையும் வாசித்து மகிழ்ந்தவர் அவர் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவரை பேட்டி செய்தபோது ”சங்க இலக்கியத்தில் ஆடு” என்ற சொல்லின் பொருள் எதைக் குறிப்பிடுகின்றது எனத் தான் ஆராய்ச்சி கொண்டிருப்பதாகவும் அது விரைவில் வெளிவரும் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அந்தச் சந்திப்பிற்குப் பின்னர் நான் பேராசிரியர்.வாச்சேக் அவர்களுடன் சிலமுறை தொலைபேசித் தொடர்பில் இருந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் அவர் மாணவர்கள் தமிழகத்தில் களப்பணி மேற்கொள்வது  பற்றி திட்டமிட்டிருந்தோம். அதனைப் பற்றிய ஏற்பாட்டு விசயங்களைப் பற்றிப் பேசி ஒரு முறை நான் ப்ராக் நேரில் வரும் போது அவரது மாணவர்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால் அது நிகழும் முன்னரே இயற்கை அவரை அழைத்துக் கொண்டது.  ஆம். பேராசிரியர் வாச்சேக் அவர்கள் இவ்வாண்டு ஜனவரி 23ம் தேதியன்று காலமானார்.

இந்திய அரசின் உயரிய விருதான “குறள் பீடம்” விருதினை 2012ம் ஆண்டு இவர் பெற்றார். பேராசிரியர்.வாச்சேக் அவர்களின்  மறைவு தமிழுக்கு  இழப்பு என்பதுடன்  ஐரோப்பிய தமிழ் சூழலில் ஒரு மாபெரும் இழப்பு என்றே நான் கருதுகிறேன். பன்மொழிப் புலமையும் ஆராய்ச்சி நேர்மையும், மாண்பும், இனிதாக உறவாடும் பண்பும் கொண்ட பேராசிரியர் வாச்சேக் தமிழ் கூறும் நல்லுலகின் தமிழ்ச்சான்றோர் வரிசையில் இடம்பெற்று  என்றும் நம் நினைவில் இருப்பார்.


1 comment:

  1. பேராசிரியர் வாச்சேக் அவர்களைப் பற்றிய இந்தப்பதிவு, அரிய தகவல்களைத் தருகிறது சகோதரி.,அய்யா அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வதும், ஆய்வுகளை மேற்கொள்வதுமே, அவர்தம் பெயருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என்ற உங்கள் கருத்தே மிகச்ச்சரியானதாகும். பேராசைரியர் வாச்சேக் அவர்களுக்கு தமிழுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

    ReplyDelete