Sunday, February 26, 2017

46.டெக்சாஸ் மாநிலத்தில் தமிழ் வளர்கின்றது
டெக்ஸாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரிலிருந்து ஸ்டுட்கார்ட் நகருக்குத் திரும்பி வரும் வழியில் விமானப்பயணத்தின்போது  இப்பதிவை எழுதுகின்றேன். இம்மாதம் 10ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரிலும் மற்றும் அதன் தலைநகரமான ஆஸ்டின் நகரிலும், மற்றுமொரு அழகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான சான் அந்தோனியோவிலும் இருந்து, இப்பகுதிகளில் இயங்கும் அமைப்புக்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும்  தமிழ்ச்சங்கங்களின்  நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு வரலாற்றுப் பாதுகாப்புப் பணிகளைப் பற்றிய செய்திகளை இங்கே வாழ்கின்ற தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நல்லதொரு  வாய்ப்பாகவும் இது எனக்கு அமைந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாகத் திருக்குறள் போட்டிகளை நடத்தி, விரிவான வகையில் தமிழ் குழந்தைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியை டல்லாஸ் நகரில் இயங்கும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை செய்து வருகின்றது. கடந்த ஆண்டு, அதாவது 2016 ஜூலை மாதம் நான் நியூ ஜெர்ஸி நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய ஆண்டு நிகழ்வில்  உரையாற்றும் வாய்ப்பு அமைந்த போது, இந்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர்களாகிய திரு.வேலு, திருமதி.விசாலாட்சி வேலு ஆகிய இருவருடனும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இந்த ஆண்டு இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு விழா நடைபெற உள்ளதாகவும் அதில் சிறப்பு விருந்தினராக  நான்  கலந்து கொள்ளவேண்டும் என்றும் என்னை இவர்கள் இந்த நிகழ்விற்காக அழைத்திருந்தனர்.

ஜனவரி 28ம் தேதி அன்று திருக்குறள் மனனப் போட்டி, திருக்குறள் கட்டுரை எழுதும் போட்டி ஆகியன நடத்தப்பட்டு ஏறக்குறைய இந்த நிகழ்விற்காக 8600 முறை திருக்குறள் ஓதப்பட்டுள்ளது என்பதை அறிந்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.  11.2.2017 அன்று  காலை தொடங்கி நான்கு படி நிலைகளில் திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பின்னர் திருக்குறளின் பொருள் விளக்கமாக   பொருட்காட்சி போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெற்றோரின் துணையுடன் குழந்தைகள் இக்காட்சிப் பொருட்களை ஏற்பாடு செய்திருந்தாலும், மிக அழகாக தாங்கள் கற்ற குறளையும் அதனைத் தாங்கள் எவ்வாறு பொருளுடன் புரிந்து கொண்டு விளக்க முடியும் என்றும் நிகழ்த்திக் காட்டினர்.

குழந்தைகளில் பெரும்பாலோர் தட்டுத்தடுமாறி தமிழில் பேசினாலும், திருக்குறளைத் தமிழிலேயே எழுதி வாசித்ததைப் பார்த்தபோது நான் உண்மையில் மனம் மகிழ்ந்தேன். அதுமட்டுமன்றி அக்குறளின் பொருளைத் தக்க உதாரணங்களோடு அவர்கள் விளக்கும் போது எவ்வகையில் திருக்குறளைப் பற்றிய அவர்களது புரிதல்  இருக்கின்றது என்பதனையும் என்னால் அறிய முடிந்தது. பொருளுணர்ந்து சொல்வது தானே பயன். இதனை சாஸ்தா அறக்கட்டளைச் சாதித்துக் காட்டியிருக்கின்றது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தப் போட்டிகளுக்குப் பின்னர் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கத்தில், மூன்று சொற்பொழிவாளர்களின் உரைகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் பெரியோர்கள் வந்து கலந்து கேட்டு பங்கெடுத்துக்கொண்டனர் . இந்த கருத்தரங்கில் கலிபோர்னியாவைச் சேர்ந்த திரு.நா.உதயபாஸ்கரன், ஹூஸ்டனைச் சேர்ந்த திரு.கரு.மலர்ச்செல்வன் ஆகியோருடன் எனது சொற்பொழிவும் இடம்பெற்றது.

எனது உரையில் திருக்குறளின் ஐரோப்பிய மொழிகளிலான மொழிபெயர்ப்புக்கள் பற்றிய தகவல்களைக் காட்சிப்படங்களுடன் விளக்கமளித்தேன். எனது உரைக்குப் பின்னர் எழுந்த கேள்விகளும், கருத்துக்களும் வந்திருந்தோர் இத்தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் உள்வாங்கிகொண்டிருப்பதை எனக்குப் புலப்படுத்தியது. இது எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் நான் டெக்ஸாஸ் மானிலத்தில் இருந்த  ஒரு வார காலத்தில் இங்கு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழிக்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ப்ளேனோ தமிழ்ப்பள்ளி, மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அமைப்பாளர்களுடன் உரையாடியபோது அவர்கள் தொடர்ச்சியாக தமிழ்ப்பள்ளிகளைத்  தொய்வின்றி வாரா வாரம் நடத்தி வருவதைப்பற்றியும், குழந்தைகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் பற்றியும், பயன்படுத்தப்படும் பாட நூற்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.

ஆஸ்டின், சான் அந்தோனியோ ஆகிய பகுதிகளில் அங்கு இயங்கும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ச்சங்கங்கள் என்னை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தன. அந்த  சந்தர்ப்பங்களில் இப்பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் சில தகவல்களைப் பெற முடிந்தது.

வட அமெரிக்காவைப் பொருத்தவரையில் பொதுவாகவே இங்கே தமிழ்ப்பள்ளிகளைத் தமிழகத்திலிருந்து இங்கு தொழிலுக்காக வந்து  இங்கேயே தங்கி விட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்னெடுத்து நடத்துகின்றனர். இப்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிவோர் தன்னார்வலர்களாக தம்மை இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் பெற்றோர்களே. ஒருங்கிணைக்கப்பட்ட பாட நூற்கள் என்ற வகையிலான முயற்சிகள் தொடர்கின்றன என்ற போதிலும் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்துச் செயல்படுகின்றன. இந்த முயற்சிகளில் தன்னார்வலர்களாகச் செயல்படும் பெற்றோர்களின் பங்கு வியக்கத்தக்கதாயிருக்கின்றது.

மிகுந்த அர்ப்பணிப்புத் தண்மையுடன் சில பெற்றோர்கள் செயல்படுகின்றனர். தம் பிள்ளைகள் மட்டுமல்லாது ஏனைய குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் பயன்படும் வகையில் நடமாடும் நூலகத்தைச் சிலர் நடத்துகின்றனர். சிலர் வாரம் ஒரு வாசிப்பு பகுதி என தேர்ந்தெடுத்து அவற்றை வாட்ஸப் தொடர்பு சாதனம் வழி பகிர்கின்றனர். சிலர் திருக்குறள் விளக்கங்களை வாட்ஸப் செய்திப்பகிர்வாக தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.

தன்னார்வலர்கள் முயற்சிதான் என்ற போதிலும் அதில் கட்டுக்கோப்பும், பொறுப்புணர்ச்சியும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர்களாகப் பலர் செயல்படுகின்றனர். அயல் நாட்டிற்கு, அதிலும் அமெரிக்கா என்ற பொருளாதார வளர்ச்சியும் பலமும்  பெற்ற நாட்டிற்கு தாங்கள் புலம்பெயர்ந்து விட்ட போதிலும், தமிழ் மொழி தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்ற முனைப்புடன் இவர்கள் செயல்படுகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஈடுபாடு அல்லது பெற்றோருக்கு மட்டும்தான் ஈடுபாடு என்ற நிலை அன்றி குழந்தைகளும் இவ்வகை நடவடிக்கைகளில் முழு மனதுடன் ஈடுபடும் அழகான அனுபவத்தை இங்கே நேரில் கண்டு மகிழ்ந்தேன். அத்தகைய அழகிய குடும்பம் தான் நண்பர் விசாலாட்சி வேலு தம்பதியரின் குடும்பமும். தங்கள் பெற்றோரின் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மற்றும் அவர்கள் மேற்பார்வையில் இயங்கும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆகியற்றில் இவர்களது இரு குழந்தைகளான ரம்யா, ராமு ஆகிய இருவரின் ஈடுபாடும் முழுமையாக இருக்கின்றது. இப்படி மேலும் சில குடும்பங்களையும் காணும் வாய்ப்பு கிட்டிய போது நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற முதுமொழி நினைவில் எழுந்தது.

திருக்குறள் மனனப் போட்டியில் இந்த ஆண்டு 1330 குறளையும் ஒப்புவித்து சிறப்பு பரிசினைத்தட்டிச் சென்ற செல்வி சீதா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை என்பது சொன்னால் தான் நமக்குத் தெரியும். மிகச் சரளமாகத் தமிழில் உரையாடவும், மேடையில் பேசவும் திறமைப்பெற்ற இப்பெண்ணிற்கு அவள் தமிழ் மொழி வளர்ச்சியில் மிக உறுதுணையாக இருந்து வரும் அவளது பெற்றோர்கள் சாந்தி, பாலாஜி தம்பதியர் பாராட்டுதலுக்குறியோர். இப்படி தங்கள் குழந்தைகளின் தமிழ் மொழிக்கல்விக்காகச் செயல்படும் பெற்றோரைச் சந்திக்கும் போது அயல் நாட்டிற்குச் சென்றாலும் தமிழை அவர்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள்  என்ற நம்பிக்கை உரம் பெறுகின்றது.

வட அமெரிக்காவில் இயங்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகள் மட்டுமன்றி ஐரோப்பா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளிலும் தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படுகின்ற பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு தொடர்பான செய்திகளை உட்புகுத்த வேண்டியது மிக அவசியம். சான் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியும் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய எனது சொற்பொழிவு நிகழ்வில் இந்தச் செய்தியை நான் முன்வைத்து உரையாற்றினேன்.

தமிழ் எழுதவும் வாசிக்கவும் படிக்கும் குழந்தைகள் தமிழர் வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் செய்திகள் பாடத்திட்டங்களில் அமைய வேண்டும். உதாரணமாக தமிழ் மொழியின் எழுத்தின் ஆரம்பகால வடிவங்களான தமிழி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள் ஆகியன பற்றியும் அவை படிப்படியாக இக்காலத்தில் நாம் அறியக்கூடிய வகையில் அமைந்திருக்கும் தமிழ் எழுத்து வடிவம் பற்றியும் சிறிய அறிமுகத்தை உயர் படிநிலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். அத்தோடு, தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்த ஆரம்பகால அச்சுப்பதிப்பு முயற்சிகள் பற்றி விவரித்து எவ்வகையில் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் நூல்கள் படிப்படியாக அச்சு வடிவம் பெற்றன என்ற தகவல்களையும் பாடத்திட்டங்களில் ஓரளவு புகுத்தலாம். தமிழ் மண்ணில் ஆட்சி செலுத்திய பாண்டிய, சேர, சோழ, பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றியும், கட்டப்பட்ட கோயில்களைப் பற்றியும் சுவாரசியமான சிறிய கதைகளை உருவாக்கி அவற்றைப் பாடத்திட்டத்தில் இணைக்கலாம். சங்கப் பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து   அக்காலத்தில்  தமிழகத்துடன் ரோமானிய, கிரேக்க யவனர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் பற்றியும் அக்காலத்தில் புகழுடன் இயங்கிய கடற்கரை துறைமுகப்பட்டினங்கள் பற்றியும் தமிழர்களின் பண்டைய கடல் மார்க்கப் பயணங்கள் பற்றியுமான செய்திகளைத் தங்கள் பாடத்திட்டத்தில் இணைக்க முயற்சி எடுக்கலாம்.

தமிழ் மொழியை மட்டும் கற்கும் இளையோர் ஓரளவு பேசும் திறனைத் தக்க வைத்துக் கொள்வர். ஆனால், தமிழ் மொழியோடு தமிழர் வரலாற்றையும் சேர்த்தே கற்கும் குழந்தைகள் தமிழ் மொழி அறிந்தவர்களாகவும் தமிழ் உணர்வு நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற கூற்று இன்று பொய்யாகிவிட்டது. உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களில் குறிப்பிடத்தக்கோர் மேற்கொள்கின்ற சீரிய முயற்சிகளால் தமிழ் அழகாக வளர்ந்து  விரிவான வளர்ச்சியைக் கண்டு வருவதை எனது பல நாடுகளுக்கானப் பயணங்களின் போது நான் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களின் வழி அறிகின்றேன்.

டெக்ஸாஸ் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் வழியாக  அடுத்த  தலைமுறைக்குத்  தமிழ் மொழியை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தன்னார்வலர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றோம். தங்கள் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாற்றுச் செய்திகளை இணைக்க விரும்பும் தமிழ்ப்பள்ளிகள், எமது தமிழ் மரபு அறக்கட்டளையின்  முகநூல் பக்கமான Tamil Heritage Foundation, மற்றும் Subashini THF வழியாகத் தயக்கமின்றி தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் மொழியும் தமிழர் வரலாறும் நம் இரு கண்கள்!!

No comments:

Post a Comment