Wednesday, February 17, 2016

1. இப்படித்தான் தொடங்கியது..!

தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண் - தமிழ் மரபு அறக்கட்டளை
​.....ஜெர்மனியிலிருந்து ஒரு மடல்.​
டாக்டர்.சுபாஷிணி




ப்ராக் - கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் நாட்டின் தலைநகரம். வரலாற்று சிறப்பு மிக்க ஐரோப்பிய நகரங்களில் தனக்கென சில தனித்துவங்களைக் கொண்டிருக்கும் பிரமாண்ட நகரம் இது. 1999ம் ஆண்டு -  நான் ஜெர்மனி எஸ்லிங்கன் நகரில் பல்கலைக்கழகத்தில் கணினி இயந்திரத்துறையி​ல் முதுகலை ஆய்வில் ஈடுபட்டிருந்த கால கட்டம் அது. ஜூலை மாதம் கல்லூரி விடுமுறையில் ஓய்வாகக் கிடைத்த 3 நாட்கள் விடுமுறையில் ஏனைய சில மாணவ நண்பர்களோடும் இரண்டு பேராசிரியர்களோடும் ரயில் வண்டியில் இந்த பழமையான நகரின் வரலாற்றுச் சிறப்பை அறிந்து வர புறப்பட்டு விட்டோம்.

ப்ராக் ஒரு நாளில் பார்த்து முடித்து விட முடியாத வகையில் ஒரு பெரும் நகரம். ஓரிரு இடங்களைப் பார்த்து விட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நேஷனல் ஆர்க்கைவ் கட்டிடத்தைக் காண வந்திருந்தோம். உள்ளே சென்று பார்வையிட்டுக் கொண்டு வந்த என்னை மிகக் கவர்ந்தது ஒரு பகுதி.

மிகச் சாதாரண கண்ணாடி மேசைக்குள் பெரிய அளவில் தோலினால் தயாரிக்கப்பட்ட அட்டைகளுக்கு மத்தியில் கட்டுத்தாட்களில் கருப்பும் சிவப்புமான ஓவியம் போன்ற எழுத்துக்களில் பைபிளின் லத்தீன் வடிவ நூல் அது. இந்த நூலின் ஆண்டு 13ம் நூற்றாண்டைக் குறிப்பதாக இருந்தது. 17 ஆண்டுகள் கடந்தோடி விட்டன. ஆனாலும் கூட இன்றும் கண்களை மூடி யோசித்தால் ப்ராக் நகரில் அந்த ஆர்க்கைவ் கட்டிடத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் இந்த நூல் என் மனக்கண்ணில் வந்து செல்கின்றது.

வீட்டிற்குத் திரும்பி வரும் போதும் சரி,  வந்த பிறகும் சரி, மனதில் இந்த நூலின் காட்சியே எனக்கு ஓடிக் கொண்டிருந்தது. லத்தீனில் இங்கு ஐரோப்பாவில் இருக்கும் இந்த நூல் போல பழமையான தமிழ் நூல்கள் இருக்குமா?
இப்போது அவை காணக் கிடைக்குமா? எங்கே சென்றால் காணலாம்..? என்ற கேள்விகள் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.

மலேசியாவில் இளம் வயதில் என் அன்னையாரின் சேகரிப்பில் 100க்கும் மேற்பட்ட நூல்களை அவரது சேகரிப்பிலிருந்து வாசித்திருக்கின்றேன். சில ஓலைச்சுவடிகளை,  அதிலும் குறிப்பாக சித்த மருத்துவம் தொடர்புடைய சுவடிக்கடுக்களை அவரது சேகரிப்பில் பார்த்த நினைவு என் மனதில் நிழல் போல இன்றளவும்  நினைவில் உள்ளது.

இப்படி தமிழில் பழம் நூல்கள் இருக்குமா..?
பனை ஓலைச்சுவடிகள் தான் நம் பழம் நூல்களா?
வேறு எந்தெந்த வடிவங்களில் தமிழின் இலக்கிய வடிவங்களும் வரலாற்று ஆவணங்களும் மக்கள் தொடர்புக்கருவிகளாக இருந்த மொழியையும் பதிவாக்கப் பயன்பட்டன என்ற கேள்விகள் தொடர்ந்து என்னை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன.

ஜெர்மனியில் அச்சமயம் எனக்கு அறிமுகமாகியிருந்த பேராசிரியர். டாக்டர். நா.கண்ணனுடன் இது தொடர்பாக உரையாடும் சந்தர்ப்பம் பல வாய்த்த போது அடிப்படையில் தமிழகத்து மதுரைக்காரரான அவர் 'தமிழகத்தில் ஆங்காங்கே பலரது சேகரிப்பில்  ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. இவை தமிழின் இலக்கிய வளங்கள்' என்று தமிழக நிலவரத்தை எனக்குத் தெரிவித்தார்.

அதே காலகட்டத்தில் தமிழ் நூல்கள் பாதுகாப்பில் முனைப்புடன் செயல்பட்டு வந்த மதுரை திட்டத்திலும் எனக்கும் பேராசிரியர் கண்ணனுக்கும் ஈடுபாடு இருந்தமையால் சுவிசர்லாந்தில் இருக்கும் டாக்டர்.கல்யாணசுந்தரத்துடனும் தொடர்பில் இருந்தோம். ஒத்த சிந்தனையுடையவர்கள் இணைந்து பேசுவது நல்ல சில கருத்துக்கள் வளர உதவும் என்ற வகையில் தொடர்ந்து மின்னஞ்சல் வழியாக மூவரும்  இந்தத் தமிழின் இலக்கிய பொக்கிஷங்களை எவ்வகையில் நாம் இணைய வெளியில் பாதுகாக்கலாம் என எங்கள் மடலாடை தொடர்ந்து கொண்டிருந்தோம்.

ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு. ஈஸ்டர் புனிதவெள்ளி விடுமுறை காலத்தில் அப்போது நான் வசித்துக் கொண்டிருந்த போப்லிங்கன் நகரத்து அப்பார்ட்மெண்டி​ற்கு  பேராசிரியர். கன்ணனும் டாக்டர். கல்யாணசுந்தரமும் வந்திருந்தனர். இரண்டு நாட்கள் நாங்கள் தொடர்ந்து பேசியதில் மின்னுலகில் தமிழின் தொண்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாக்க இணையத்தில் ஒரு மிண்வெளி நூலகம் அமைப்பதே சிறப்பாகும் என முடிவு செய்தோம்.

இந்தக் கருத்தாக்கத்தை விரிவு செய்து அதனை 2001ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உத்தமம் இணையக் கருத்தரங்கில் கட்டுரையாகச் சமர்ப்பித்தோம். ​இது கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட வருகையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. 2001ம் ஆண்டு, ஆகஸ்ட் ​27ம் தேதி  தமிழ் மரபு அறக்கட்டளை எனும் இக்கருத்தாக்கம் தமிழ் ஆர்வலர்களின் ஆசியைப் பெற்றது. அடுத்த சில நாட்களில் மின்சுவடி எனும் யாஹூ மடலாடற்குழு ஒன்று அமைக்கப்பட்டு இக்கருத்து இணைய வெளியின் வழி தமிழர்களை ஒன்றினைத்து தொடர்ந்து செயல்பட ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கமும் அதே ஆண்டில் தொடங்கப்பட்டது.

​இப்படி 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் மரபுஅறக்கட்டளை 14 ஆண்டுகளைக் கடந்து இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் ஆண்டினைத் தொட்டிருக்கின்றது. இந்தப் பதினைந்து ஆண்டு காலங்களில் இந்தத் தன்னார்வ தொண்டூழிய நிறுவனம் செய்து முடித்துள்ள செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தமிழர் பெருமைப் படத்தக்கன என கூறிக்கொள்வதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.

நாம் ஆரம்பகால நிலையில் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லாத வகையில், தமிழ் மரபு அறக்கட்டளையில் மின்னாக்கம் செய்யப்படுகின்ற நூல்களோ, ஒலிப்பதிவுகளோ, வீடியோ பதிவுகளோ.. அவை எவ்வகையினதாயினும், அவை இலவசமாகவே இணையத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக வழங்கப்படுகின்றன.  தொண்மையான தமிழின் இலக்கியங்களும் வரலாற்றுத் தகவல்களும், ஆவணங்களும் எல்லா தரப்பு மக்களும் பயன்படும் வகையில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் தலையாய நோக்கமாக அமைகின்றது.

ஞானம் என்பது உலக மக்களுக்குப் பொதுவானது இதனை 'இன்னாருக்குத்தான் கொடுக்கலாம்' என வரையறை செய்த காட்டுமிராண்டித்தனமான காலம் மாறி இன்றைய தகவல் யுகத்தில் எல்லா தகவல்களும் எல்லோருக்கும் நொடிப் பொழுதில் இணையத்திலேயே கிடைக்க தொழில் நுட்பம் எளிதான வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது. வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த வாப்பினைப் பயன்படுத்தி தமிழர் அறிவுக்கருவூலங்களைத் தேடி, மின்னாக்கம் செய்து பாதுகாத்து  வழங்குகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை.


தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒவ்வொரு திட்டத்திலும் ஈடுபடும் போது எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமானவை. அவை ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கும் போதே மனதிற்குள் எண்ண மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசுகின்றன.

எனது தமிழ் மரபு அரக்கட்டளை பணிகளின் போது நான் சந்தித்து அறிமுகம் செய்து கொண்ட மக்கள் பலர்!
கிடைத்த அனுபவங்கள் பல.!
சென்ற இடங்கள் பல!
கண்ட காட்சிகள் பல!
ஒவ்வொன்றுமே பதிந்து வைக்க வேண்டிய ஆவணக்குறிப்புக்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு அனுபவத்தைச் சொல்கின்றேன். என்னுடன் தொடர்ந்து இக்கடிதத்தில் பயணிக்க வாருங்கள்.

நம் வரலாற்றுப் பயணத்தைத்தொடர்வோமா..?


No comments:

Post a Comment