Thursday, August 16, 2018

90. கல்லிலே கலைவண்ணம் - திருச்சி குடைவரைக்கோவில்மலேசியாவிலிருந்து தமிழகம் செல்ல விரும்புவோருக்குத் தற்சமயம் சென்னை மட்டுமன்றி மதுரைக்கும் திருச்சிக்கும் விமான சேவைகள் கோலாலம்பூரிலிருந்தும் பினாங்கிலிருந்தும் கிடைக்கின்றன. திருச்சிக்குச் செல்லும் மலேசியத்தமிழர்களில் பெரும்பாலோர் தவறாமல் செல்வது திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலும் ஸ்ரீரங்கம் கோவிலும் தான். காவேரி பாயும் திருச்சியிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நாம் கண்டு மகிழவும் அறிந்து கொள்ளவும் ஏராளமான வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் உண்டு.

இன்று நாம் திருச்சி என அழைக்கும் இந்த ஊர் தேவாரப்பாடல்களில் சிராப்பள்ளி எனக் குறிப்பிடப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்புக்கள் மிகைந்து கிடப்பதாலோ என்னவோ திருச்சிராப்பள்ளி எனச் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது இந்த நகர். பள்ளி என்ற சொல், சமண பின்புலத்தைக் காட்டும் குறியீட்டுச் சொல். இங்கு பண்டைய காலத்தில் சமண கல்விக்கூடங்கள் நிறைந்திருந்தன. திருச்சி புனிதவளனார் கல்லூரியில் துணை நூலகராகப் பணியாற்றிய அ.ஜெயக்குமார் அவர்கள் தமது சரித்திரம் சந்தித்த திருச்சிராப்பள்ளி என்ற கட்டுரையில் 'சிரா என்ற பெயர்கொண்ட சமண முனிவர் இங்கு வாழ்ந்து பள்ளி அமைத்து சேவையாற்றி வந்தார்' எனக்குறிப்பிடுகின்றார். இதே கட்டுரையில் 'சிராப்பள்ளி என்பது சிரா என்ற சமண முனிவர் வாழ்ந்த ஒரு தவப்பள்ளியாக இருந்தது என்றும், பின் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (கி.பி.600-630) அதை இடிக்க வைத்து அந்த இடத்தில் சிவன் கோவில் ஒன்றை எழுப்பினான் என்றும் அது சிராப்பள்ளி என அழைக்கப்பட்டதென்றும், அக்கோயிலின் பெயரே பின் நகரத்தின் பெயராகவும் அழைக்கப்பட்டதென்றும்' வரலாற்றிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் குறிப்பிடுவதையும் காண்கின்றோம். (நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி, 2002)

திருச்சிராப்பள்ளி பாண்டிய, சோழ, பல்லவ, ஹோய்சாள, விஜயநகர மன்னர்களாலும் பின்னர் முகம்மதிய நவாப்புகளாலும், அதன் பின்னர் ஆங்கிலேயர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட நகரம். இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகத் திகழும் திருச்சி முன்னர் சிறியதொரு நகரமாகவே காணப்பட்டது. இன்று அறியப்படாத சிறு நகராக உருமாறியிருக்கும் உறையூர் தான் முன்னர் பெரிதும் அறியப்பட்ட ஒரு நகரமாக இருந்தது.   பிற்கால சோழ மன்னர்களில் சோழன் விஜயாலயன் காலம் வரை உறையூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து சோழ மன்னர்கள்  தஞ்சாவூர், பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம் என தமது தலைநகரங்களை மாற்றிக் கொண்டனர் என்பது வரலாறு. இந்த வரலாற்றுப் பெறும் சிறப்புக்களை இழந்து போன நகரமாக இன்று உறையூர் மாறிய சூழலில் அதன் அருகாமையில் இருக்கும் திருச்சி இன்று மாபெரும் நகரமாக வளர்ச்சி கண்டிருக்கின்றது.

இன்று நாம் தமிழகத்தில் காண்கின்ற கோயில் கட்டுமான அமைப்பிற்கு முன்னோடியாக இருப்பது குடைவரைக் கோயில்கள் எனலாம். இதற்கு முன்னர் மண்ணினாலும், மரத்தாலும், விரைவில் அழிந்து போகக்கூடிய வேறு பொருட்களினாலும் உருவாக்கப்பட்ட கோயில்கள் விரைவில் சேதப்படுவதற்கு ஒரு மாற்றாக குடைவரைக்கோயில்கள் எனும் அமைப்பு தமிழகத்தில் கி.பி 6 முதல் உருவாகத் தொடங்கியது எனலாம். அவ்வகையில் திருச்சியில் உள்ள கோயில்களில் குடைவரைக்கோயில்கள் என எடுத்துக் கொண்டால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஐந்து குடைவரைக்கோயில்கள் இருக்கின்றன. இரண்டு குடைவரைகள் மலைக்கோட்டை குன்று பகுதியிலும், இரண்டு திருவெள்ளரையிலும் ஒன்று திருப்பைஞ்ஞீலியிலும் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு குடைவரைக்கோயிலைப்பற்றியதுதான் இக்கட்டுரை.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் இந்தக் குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது.

இந்த வீதிக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தெரு எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்து வளர்ந்த ஊர் இது என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதே சாலையில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான மௌனமடம் ஒன்று இருக்கின்றது. இந்தத் தெருவில் வரும் போது குறுக்கு வீதி ஒன்று வரும். அது பல்லவர் குகைக்கோயில் தெரு, மலைக்கோட்டை, 11வது வார்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வீதியில் தொடர்ந்து நடந்தால் மலைக்கோட்டைப் பாறையின் சரிவில் இடதுபுறத்தில் இக்குடைவரைக் கோயிலைக் காணலாம்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு குடைவரைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.

கீழேயுள்ள இக்குடைவரைக்கோயில் அளவில் பெரியது. இந்தியத் தொல்லியல் துறை இது பல்லவன் மாமல்லன் காலத்துக் கோயில் எனக்குறிப்பிடுகின்றது. இது பாண்டியர் காலத்துக் குடைவரை என சில ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். அனேகமாக இக்குடைவரைக் கோயில் நரசிம்மபல்லவன் காலத்து கலைப்பாணியாக இருக்கலாம் என்றும் கருதலாம்.

குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவறையின் முன் வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேல் வரிசையாகப் பூதகணங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுற கருவறையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.

கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவரை அமைந்திருக்கின்றது. இச்சிற்பங்களில் சிலவற்றின் முகப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்தக் குடைவரைக் கோவிலில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இக்குடைவரையில் இருக்கும் கொற்றவை அல்லது துர்க்கையின் உருவம் முழுமைபெறாத வடிவில் உள்ளது. நான்கு கரங்களுடன் கொற்றவை காட்சி தருகின்றார். கொற்றவையின் பாதத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும், அதில் ஒருவர் தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டும் மறு கரத்தால் கழுத்தை வாளால் வெட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இது கொற்றவைக்குத் தன்னை வீரன் ஒருவன் பலி கொடுத்துக் கொள்ளும் காட்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வகை நவகண்ட சிற்பங்கள் குடைவரை கோயிலிற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இதனை அடுத்து கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒளிவட்டத்துடன் கூடிய சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம், கழுத்தணி என ஆபரணங்களுடன் இச்சிற்பம் உள்ளது. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இச்சிற்பம் உள்ளது . தனது ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியவண்னமும் மறு கரத்தில் அக்க மாலையை ஏந்தியவண்ணமும் இச்சிற்பம் அமைந்திருப்பது சிறப்பு.

னெடிய புடைப்புச் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த இக்குடைவரைக் கோயிலைப் பற்றிய ஒரு பதிவினைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுல்ளோம். அதனை https://youtu.be/7BfeC3NjW54 என்ற இணைய முகவரியில் காணலாம்.

தமிழகக் கோயிற் கலையில் குடைவரைக் கோயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. கற்றளிகள் உருவாக்கப்படுவதற்கு முன் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட இத்தகைய கோயில்கள் பல இன்றும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன. பல்லவர்களும் பாண்டியர்களும் எடுப்பித்துப் போற்றிப்பாதுகாத்த இத்தகைய கலைக்கோயில்கள் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புக்களாகும். இத்தகைய குடைவரைக்கோயில்களில் வழிபாட்டில் உள்ள கோயில்களில் சில பாதுகாப்பான சூழலில் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.


1 comment:

  1. news 18 தமிழ்நாடு - தமிழர் பண்பாடு, வாழ்வியல் பற்றி அறிய ஒரு அரிய நிகழ்ச்சி

    https://www.youtube.com/playlist?
    list=PLZjYaGp8v2I9pgqaIQoTtjVsTSjtpUd3F

    ReplyDelete