Wednesday, August 1, 2018

89. டல்லாஸ் நகரில் தமிழுக்குத் திருவிழா



டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 31வது விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்று பின் வாஷிங்டன் டிசி, மேரிலாண்ட், விர்ஜீனியா ஆகிய பகுதிகளிலும் தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 10ம் தேதி வரை எனக்கு அமைந்தது.

தமிழுக்குத் திருவிழாக்கள் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் எல்லா நாடுகளிலும் நடப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பு. இந்த விழாக்களில் தனித்துவமும் மிகுந்த சிறப்பும் கொண்டது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பேரவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து நடத்தி வரும் பேரவை விழா. அந்த வகையில், இவ்வாண்டு பேரவையின் 31ம் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாக, தமிழர் பெருமை கொள்ளும் வகையில் நடந்து முடிந்துள்ளது.

2016ம் ஆண்டுக்குப் பின்னர் 2ம் முறையாகத் தமிழ மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் எமது தொடர் முயற்சிகளைப் பற்றியும் இந்த 31வது பேரவை விழாவில் உரையாற்ற எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை மகிழ்வுடனும் பெருமையுடனும் நினைத்துப் பார்க்கின்றேன். எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் மீது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை கொண்டிருக்கும் அன்பும்
நம்பிக்கையும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த ஆண்டு பேரவை விழா தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வின்றி, ”மரபு, மகளிர், மழலை” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

நிகழ்வின் மைய அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோயிலின் வடிவம், மாநாடு நடைபெற்ற அரங்கில் நடுநாயகமாகத் திகழ்ந்தது. இதனை உருவாக்க விழா ஏற்பாட்டுக் குழுவினர் அளித்த உழைப்பை நன்றி கூறி பாராட்டுவது தகும். இந்தக் கோயில் மாநாட்டு நிகழ்வுக்குப் பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் திரு.கண்ணப்பன் உருவாக்கியிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலை நாகரிகத்தில் மூழ்கி தமிழையும் தமிழ் பண்பாட்டையும் மறந்து விட்டனர் என்ற மேம்போக்கான கூற்றினைப் பொய்யாக்கி, தமிழ் செழிப்புடனும் வளமுடனும் வாழ்கின்ற இடங்களில் அமெரிக்காவிற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று பறைசாற்றியது இந்தப் பேரவையின் தமிழ்த்திருவிழா.

பேரவையின் மாநாடு, அமெரிக்கத் தமிழர்களின் தொழில்நுட்ப ஈடுபாடு, அதில் தமிழ் மக்களின் வெற்றிப்பாதைகள், முயற்சிகள் என்பனவற்றை விவரிக்கும் வகையில் தொடங்கியது. பின் மாலை நேர மாபெரும் விருந்து. பின்னர் அதனைத் தொடர்ந்த அடுத்த இரு தினங்கள் தமிழ் மொழி, கலை, வரலாறு, பண்பாடு, சமூகம் என்ற வகையில் தன் பார்வையைக் குவிப்பதாக அமைந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கிலும் சரி, பின்னர் மாலையில் தொடங்கப்பட்ட விருந்து நேரப் படைப்புக்கள், மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கிய சிறார்கள், உச்சரிப்புச் சிறப்புடன் பேசி தமது திறனை நன்கு வெளிப்படுத்தினர். அடுத்த தலைமுறையைச் சரியாக உருவாக்குவதுதான் இந்தத் தலைமுறையின் தலையாய கடமை என்பதற்குச் சான்றாக இது அமைந்தது.

மாலை நேர விருந்து தொடங்கி ஒவ்வொரு நாள் உணவும் தமிழர் கலாச்சார உணவாக அமைந்திருந்தது. மாநாடு நடைபெற்ற அரங்கில் எட்டு இடங்களில் உணவு வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையைச் சற்று சமாளிக்கக்கூடியதாகவே இருந்தது. சுவையான உணவினைத் திறமையாக வழங்கிய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.

பல அமர்வுகள் ஒரே நேரத்தில் அமைந்திருந்தன. 'எந்த அமர்விற்குச் செல்வது எதனை விடுவது?' என்பது தான் எனக்குப் பிரச்சனையாகிப் போனது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்திற்கும் தொடர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பான அமர்வுகளில் நானும் கலந்து கொண்டேன். பல புதிய செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணை
அமர்வுகள் எனக்கு உதவின.

மாநாட்டின் ஆரம்ப நாள் தொடங்கி நிகழ்ச்சியில் பறையோசை கேட்டுக் கொண்டிருந்தது. ஆடாத கால்களையும் ஆட வைக்கும் தன்மைகொண்டது அல்லவா பறையிசையும் நடனமும். மேலும் பரதக்கலையில் சிறந்த கலைஞரான நர்த்தகி நடராஜனையும் வரவழைத்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருந்தனர் பேரவை ஏற்பாட்டுக் குழுவினர். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கூத்துக் கலை, நாடகம் என தமிழர் கலைவளத்தின் பல பரிமாணங்களை வந்திருந்தோர் கண்டு மகிழ்ந்தோம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு வெற்றியடைந்ததைப் பாராட்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக, கனடா டொரொண்ட்டொ, போஸ்டன், ஹூஸ்டன் என தொடரவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு நிகழ்வும் பயனுள்ளதாக அமைந்தது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாடுகள், பேரவையின் 32வது விழா பற்றிய கலந்துரையாடல் என்பன பயனளிப்பதாக அமைந்தன. அரசியல் கலப்பின்றியும் தலையீடு இன்றியும் இது நடைபெறும் என பேரா.மருதநாயகம் இந்த வரவிருக்கும் மாநாடு பற்றி கூறியது வரவேற்கத்தக்க ஒன்று. இங்கு மட்டுமல்ல, பொதுவாகவே தமிழ் ஆய்வு மாநாடுகளில் அரசியல் அமைப்புக்களின் ‘மரியாதை நிமித்த’ தலையீடுகளைத் தவிர்ப்பதே சாலப் பொருந்தும். தமிழ் ஆய்வுக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் ஆய்வாளர்களால், ஆய்வு நோக்கத்தோடு மட்டுமே முன்னெடுக்கப்படும் முயற்சிகள் உலகெங்கும் பெறுக வேண்டும்.

நெசவாளர்களின் மனிதகுலத்திற்கான பங்களிப்பான கைத்தறி தயாரிப்புகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக எனது முதல் நிகழ்ச்சி இந்தப் பேரவை விழாவின் விருந்து நிகழ்ச்சியில் அரங்கேறியது. கைத்தறி தமிழர் உலகிற்கு அளித்த பண்பாட்டுச் சிறப்பு என்பதோடு ஆசிய நாடுகள் எங்கும் தமிழக நெசவுத் தொழில்நுட்பமே பரவியது என்பதையும் இந்த நிகழ்வில் வலியுறுத்த எனக்கு வாய்ப்பு அமைந்தது. அதனை அடுத்து தற்செயலாக ஏற்பாடாகிய ஒரு அமர்வில் தமிழகத்தில் இஸ்லாமிய மரபுகளின் வரலாற்றுப் பதிவுகள் பற்றிய உரையை வழங்கினேன். பேரவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய இணை அமர்வில் தமிழ் ஆவணப் பாதுகாப்பிற்கான அவசியம் பற்றி வந்திருந்த ஆர்வலர்களோடு பேச வாய்ப்பமைந்தது.

ஏராளமான பேஸ்புக் நண்பர்களை நேரில் பார்த்து அறிமுகம் செய்து கொண்டதும், கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களில் சந்தித்த நண்பர்கள், உலகின் ஏனைய நாடுகளில் தமிழ்ப்பணி ஆற்றும் தமிழார்வலர்களையும் சந்தித்தது போன்ற நிகழ்வுகள் குடும்ப உறவுகளைச் சந்தித்தது போன்ற மனமகிழ்ச்சி அளித்தது. பல புதிய நண்பர்களை எனக்கு இந்தப் பேரவை விழா உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. என்னைப் போலவே வந்திருந்த பலரும் உரையாடி மகிழ்ந்த காட்சிகளை ஆங்காங்கே காண முடிந்தது.

மாலை நேர இசை நிகழ்ச்சிகளைப் பாடகர் கார்த்திக்கும் ஏனைய தமிழ்த்திரையுலக கலைஞர்களும் பிரமாண்டமாக்கினார்கள், ஏறக்குறைய 5500 பேர் கலந்து கொண்டதால் அரங்கமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காட்சியளித்தது.

இவ்வாண்டும் 31வது பேரவை விழாவை வெற்றிகரமான ஒரு விழாவாக ஆக்கியமையில் பெரும் பங்கு இந்த ஏற்பாட்டுக் குழுவையே சாரும். இக்குழுவிற்குத் தலைமையேற்ற திரு.கால்ட்வெல் மற்றும் அவரது குழுவினருக்கும், கடந்த ஆண்டு பேரவையின் தலைமைப் பொறுப்பேற்ற திருமதி செந்தாமரை, திரு.நாஞ்சில் பீட்டர் ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன். தமிழ் மரபு அறக்கட்டளையோடு இணைந்து கைத்தறி நெசவுக்கலை நிகழ்ச்சிக்காகக் கடுமையாக உழைத்த அனைத்து சகோதரிகள், கைத்தறி அணிவகுப்பில் கலந்து கொண்ட இளம் பெண்கள் அனைவரது ஒத்துழைப்பும் பாராட்டுதலுக்குரியது. பேரவை ஏற்பாட்டுக் குழுவின் பல்வேறு குழுக்களில் பணியாற்றிய தன்னார்வத்தொண்டர்கள் பல நாட்கள் இரவு பகல் எனப்பாராது இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் பதிகின்றேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு, ஆவணப்பாதுகாப்பு, நடவடிக்கைகளும் வெளியீடுகளும் வழக்கம் போல் தொடரும். அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும், அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள பேரவையின் 32வது விழாவிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் தமிழ் முயற்சிகளை வாழ்த்துவோம்!






No comments:

Post a Comment