ஐரோப்பாவின் ஜெர்மனி, டென்மார் ஆகிய இந்த இரு நாடுகளுக்கும் தமிழகத்தின் இந்தக் குறிப்பிட்ட தரங்கம்பாடி என்ற நகருக்கும் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் தொடர்புகள் இருக்கின்றன என்பதை எனது தேடல்களின் வழி அறிந்து கொண்டேன். இவ்வளவு வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டிருக்கும் இந்த தரங்கம்பாடி என்னும் நகருக்குச் சென்று நேரில் இந்த நகரைக் கண்டு ஆராய வேண்டும், இந்த நகரைப் பற்றில் நேரடி அனுபவம் பெறவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. ஆயினும் சில ஆண்டுகள் இந்த முயற்சி தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது. 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வடலூருக்கு ஒரு களப்பணிக்காக நான் சென்றிருந்தபோது இந்த நகருக்குச் செல்லும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன்.
என்னுடைய தரங்கம்பாடி பயணத்தில் வடலூர் நண்பர்கள் சிலரும் இணைந்து கொண்டனர். எங்கள் பயணம் வடலூரிலிருந்து தொடங்கியது. வடலூரிலிருந்து தரங்கம்பாடிக்கு ஏறக்குறைய என்பது கிமீ தூரம். வடலூரிலிருந்து புறப்பட்டு சாத்தப்பாடி, புவனகிரி, சிதம்பரம், சிவபுரி, சீர்காழி, திருக்கடையூர், சாத்தங்குடி ஆகிய ஊர்களைக் கடந்து தரங்கம்பாடி வந்தடைந்தோம். வழியில் எங்கள் பயணத்தில் பெருமாள் ஏரியைக் கடந்து பின்னர் கொள்ளிடம் நதியைக் கண்டு ரசித்தவாறே எங்கள் பயணம் அமைந்தது. தரங்கம்பாடியிலிருந்து வடக்கு நோக்கி கடற்கரையோரத்தில் பயணம் செய்தால் இலக்கிய காலத்திலிருந்து நாம் நன்கறிந்த பூம்புகார் நகரை வந்தடையலாம். தரங்கம்பாடியிலிருந்து பூம்புகார் ஏறக்குறைய 25 கி.மீ தூரம் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை நகரம்.
தமிழகத்தில் உள்ள இந்தத் தரங்கம்பாடி என்னும் கடற்கரை நகரத்திற்கும் ஐரோப்பாவின் டென்மார்க்கிற்கும் ஜெர்மனிக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவாரசியமான வரலாறு.
ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தமிழகத்தின் தரங்கம்பாடியில் தான். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை துறைமுகமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.
லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் ஜெர்மானியரான பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். தரங்கம்பாடியில் ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு ஒரு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் கி.பி18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.
தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் இன்று பாதுகாக்கப்படுகின்றன.
1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்குத் தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார்.
1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சையை அச்சமயம் ஆண்டு கொண்டிருந்த அச்சுதநாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் டென்ஸ்போர்க் கோட்டை இங்கு அமைக்கப்பட்டது
1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது.
வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு அப்பகுதியில் வர்த்தகம் நடத்திக்கொண்டிருந்த போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை.
டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.
தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன. வணிகம் செழித்த ஒரு பகுதியாக இப்பகுதி சங்க கால இலக்கியங்களின் குறிப்புக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்பது இந்த நகரின் சிறப்பை விளக்கும் வகையில் அமைகின்றது.
இங்கு டேனீஷ் கோட்டைக்கு வருபர்கள் அதன் இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயிலைக் காணலாம். இக்கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது.
அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினென் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது.
1712ம் ஆண்டு சீகன்பால்க் உருவாக்கிய தரங்கம்பாடி அச்சுக்கூடம் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. காலணித்துவ ஆட்சியின் போது படிப்படியாக அச்சு நூல்கள் உலகமெங்கும் உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தில் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடம் இயங்கியது என்பது சிறப்பல்லவா?
இங்கிலாந்தில் இயங்கி வந்த லூத்தரன் சமய அமைப்பு பாதிரியார் சீகன்பால்கின் பணிகளுக்கு உதவும் வகையில் ஜெர்மனியிலிருந்து ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி 1711ம் ஆண்டு கப்பலில் அனுப்பியது. அக்கப்பல் பிரஞ்சுக்கடற்படையால் தாக்கிக் கைப்பற்றப்பட்டு சிலகாலங்களுக்குப் பின் அக்கப்பலும் அதில் பயணித்தோரும் விடுவிக்கப்பட்டு தரங்கம்பாடிக்கு 1712ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்தடைந்தது. இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தின் முதல் வெளியீடாக ஹாலே கல்விக்கூடத்து தலைமை இயக்குநர் பேராசிரியர் ஃப்ராங்கே அவர்களின் நூல் போர்த்துக்கீசிய மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளிவந்தது. அடுத்ததாக 1713ம் ஆண்டில் மேலும் சில கிருத்துவ சமய சார்பு நூல்கள் போர்த்துக்கீசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன. தமிழ் மொழியில் இந்த அச்சுக்கூடம் இயங்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் உணர்ந்ததால் தமிழ் அச்சு எழுத்துகள் உருவாக்கும் பணி ஜெர்மனியில் தொடங்கியது. சீகன்பால்க் அவர்கள் உருவாக்கியிருந்த லத்தீன்-தமிழ் இலக்கண நூலின் வழி தாங்கள் அறிந்து கொண்ட தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இப்பணி தொடங்கப்பட்டு தமிழ் அச்செழுத்து உருவாக்கம் நிறைவு பெற்றது. புதிதாக உருவாக்கிய அச்சு எழுத்துக்களையும் ஒரு புதிய அச்சு இயந்திரத்தையும் கப்பல் வழி தரங்கம்பாடிக்கு ஹாலே கல்வி நிறுவனம் அனுப்பியது. இந்த முயற்சியின் வழி சீகன்பால்க் தொடங்கிய தரங்கம்பாடி அச்சகம் தமிழில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. வீரமாமுனிவர் என நன்கு அறியப்பட்ட C.J.Beschi அவர்கள் இந்த அச்சுக்கூடம் வந்தார் என்றும் அவரது நூல்களும் இங்கு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப் பல வரலாற்றுச் செய்திகளைத் தன்னுள்ளே கொண்டு இன்று பெரிதும் பேசப்படாத ஒரு நகராக தரங்கம்பாடி திகழ்வது ஆச்சரியம்தான். இப்பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள், மாசிலாமணீஸ்வரர் ஆலயம், டேன்ஸ்பூர்க் கோட்டை என இந்த நகரில் பார்ப்பதற்கு ஏராளமானவை உள்ளன. இதனை வெளிப்ப்டஹ்ட்தும் வகையில் தமிழுக்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள தொடர்பினை வெளிக்காட்டும் வகையிலான ஒரு விழியப் பதிவை அண்மையில் தமிழ் மரபு அறக்கட்டளை வ்ளியீடு செய்திருந்தோம். அதனை https://youtu.be/FM6Wmzkrjmc என்ற பக்கத்திலிருந்து கண்டு மகிழலாம்.
நூல்கள் மட்டும் நமக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுப்பதில்லை. நகரங்களும் நம்மோடு வரலாறு பேசக்கூடிய வல்லமை பெற்றவையே!

















