Thursday, January 25, 2018

81. கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணற் சின்னங்களும்





தொல்பழமை பற்றிய தேடல் மிக சுவாரசியமானது. வரலாறு என்பதே இன்றைக்கு முன் சில காலம், அதற்குச் சில பல காலம்,  எனக் காலத்தால் பின்னோக்கிச் சென்று, அந்த ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்களைச் சேகரித்து அதனை ஆராய்வது எனக் கொள்ளலாம். இவ்வகையில் சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு வரலாற்றை எழுதும் முயற்சிகள் காலங்காலமாய் நிகழ்ந்து வருகின்றன.

தொல்லியல் சான்றுகளாய் இன்று உலகம் முழுதும் ஆய்வாளர்கள் கருத்தில் கொள்வதாகச் சிலவற்றைக் கூறலாம். உதாரணமாக, நிலத்தின் அடியில் தோண்டும் போது கிடைக்கின்ற மண்பாண்டங்கள், அவற்றின் மேல் உள்ள கீறல்கள், பல்வகை பொருட்கள், கட்டிட கட்டுமானத்தின் எச்சங்கள் என்பவற்றைக் கூறலாம். மேலும், இன்றும் நமக்குக் காட்சி தரும் வழிபடு தலங்கள், சின்னங்கள், அதில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியனவற்றையும் கூறலாம். இதேபோல, குன்றுகளிலும் மலைகளிலும் பாறைகளின் மேலோ அல்லது அடியிலோ கீறப்பட்ட ஓவியங்களையும் குறியீடுகளையும் இத்தகைய சான்றுகளாகச் சொல்லலாம். இவற்றோடு ஓலைச்சுவடிகள், பட்டுத்துணியின் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், பாப்பிரஸ் இலைகளைக்கூழாக்கி அவற்றைத் தாளாக்கி அதன் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் போன்றவற்றையும் கூட இவ்வகைச் சான்றுகளாக நாம் கொள்ளலாம்.

தமிழர் வரலாற்றை ஒரு வரியில் கூறிவிடுவது என்பது இயலாத காரியம். ஏனெனில் தமிழ்ச் சமூகம் இனக்குழுக்களால் பலவாறு தமக்குள்ளே சடங்குகள், சட்டங்கள், பண்பாட்டுக் கூறுகள், வாழ்வியல் நெறிகள், கலைகள் என வளர்ந்தவை. மிகப்பல தனித்துவக்கூறுகளை உள்ளடக்கியவை. இந்த வேறுபாடுகள் தமிழர் நாகரிகத்திற்கு வளம் சேர்ப்பவை. 

எனது ஒவ்வொரு வரலாற்றுத் தேடல் பயணத்திலும் புதுமையான செய்திகள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எனது தமிழகத்தின் மதுரைக்கான பயணமும் அமைந்தது.

மதுரை குன்றுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதி. இங்குள்ள பாறைகள் மிக உறுதியானவை. இங்கு தான் பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக குன்றுகளில் பாறைகளைத் தகர்த்து குவாரி கல் உடைப்பு பல முறை நடந்துள்ளது என்பதையும் வேதனையுடன் பதிய வேண்டியுள்ளது.

இந்தக் குன்றுகளும் இயற்கையாக அமைந்த பாறைகளும் இருக்கும் பகுதி, இன்றைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் ஒரு நிலப்பகுதியாகும். உண்மையில் சொல்லப்போனால், முழுமையான தொல்லியல் ஆய்வுகள் மதுரையில் முழுமையாக இன்று வரை நிகழ்த்தப்படவில்லை என்றே கூறவேண்டும். கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளே இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரான நாகரிக வளர்ச்சி பெற்ற ஒரு சமூகம் அப்பகுதியில் வாழ்ந்தமையை பிரதிபலிக்கின்றது. இதே போல மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் தொல்பழங்காலம் தொட்டு சங்ககாலம், சமீபத்திய காலம் வரையிலான பல ஆய்வுகளுக்கான ஆதாரங்களைத் திரட்டக்கூடிய வாய்ப்புக்கள் நிச்சயம் பெருகும்.

இப்படி மதுரையில் அமைந்திருக்கின்ற பாறைப்பகுதிகள் பொதுவாகவே மக்கள் வந்து தங்கியிருந்த வாழ்விடப் பகுதிகளாகவே இருந்திருப்பதை அறிய முடிகின்றது. மாங்குளம், அரிட்டாபட்டி, கீலவளவு, மேலவளவு, கீழ்க்குயில்குடி என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகைய ஒரு பாறை பகுதி ஒன்று கருங்காலக்குடி எனும் சிற்றூரில் இருக்கின்றது. மதுரையிலிருந்து மேற்கே ஏறக்குறைய 40கிமி தூரத்திலுள்ள ஒரு சிற்றூர் இது. எனது வரலாற்றுப் பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்தபோது இங்குள்ள புராதனச் சின்னங்களை நான் பதிவு செய்து அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக  2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியீடு செய்திருந்தேன்.

சமணத்துறவிகள் வந்து தங்கியிருந்ததாக அறியப்படும் இடங்களில் சில பொதுக்கூறுகள் உள்ளன. அத்தகைய பகுதிகளில் பாறைப்பகுதியில் தரைப்பகுதியில் படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கும். அதன் மேல்பகுதியில் உள்ள பாறையின் மேல் தமிழி (பிராமி) எழுத்துக்கள் வெட்டப்பட்டிருக்கும். மழை நீர் குகைக்குள் செல்லாதவாறு காடி என அழைக்கப்படும் விளிம்பு பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இன்று தென்படவில்லையென்றாலும் முன்னர் இங்கே பள்ளிக்கூடங்களை அமைத்து சமணத்துறவிகள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கல்வியைப் புகட்டியமை போன்ற  சமூக நடவடிக்கைகளும் இப்பகுதியில் நிகழ்ந்திருக்கும். இந்த அத்தனை கூறுகளும் உள்ள பகுதிதான் கருங்காலக்குடி.

கருங்காலக்குடிக்கு என்னுடன் தொல்லியல் அறிஞர்கள் டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.பத்மாவதி, மொழியியல் அறிஞர் டாக்டர்.ரேணுகாதேவி ஆகியோர் உடன்வந்திருந்தனர். நாங்கள் சென்ற நேரம் மதியம். வெயில் மிக அதிகமாகவே இருந்தது. வாகனத்தைத் தூரத்தில் நிறுத்தி விட்டு அப்பாறை பகுதிக்குச் சென்றோம். இப்பகுதி தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதி என்பதற்கு அடையாளமாக வாசல் பகுதியில் தகவல் குறிப்பு வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் போது முதலில் நம் கண்ணுக்குத் தென்படுவது ஒரு பாறையின் மேல் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று. முக்குடைகள் இல்லாமல் தனியே தீர்த்தங்கரர் மட்டும் உள்ளது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் கீழ் இரண்டு வரியில் ”ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த சிற்பம்” இது என வட்டெழுத்து தமிழில் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது கி.பி.9-10ம் நூற்றாண்டு வாக்கில் சமணத்திற்கு  மறுமலர்ச்சி ஊட்டிய அச்சணந்தி முனிவர் வடித்த சிற்பம். இதே போன்ற ஒரு வடிவம் அரிட்டாபட்டியிலும் இருக்கின்றது.

இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் வரிசை வரிசையாக ஏறக்குறைய முப்பது கற்படுக்கைகள் குகைப்பகுதிக்குக் கீழே செதுக்கப்பட்டுள்ளன. சிறிய தலைப்பகுதி மேடு போன்ற அமைப்புடன் ஒரு நபர் படுத்துறங்கும் வகையில் இக்கற்படுக்கைகள் அமைந்திருக்கின்றன.  இதற்கு மேல் உள்ள பாறையில் ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய சமண அறப்பள்ளியைப் பற்றிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழி எழுத்தில் எழுதப்பட்டது. இதன் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது.

இப்பாறைக்குப் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கப்பட்ட படிகள் இருக்கின்றன. அப்படிகளின் வழி ஏறி மேலே பாறை பகுதிக்குச் சென்றோம். அப்பாறை பகுதிக்குச் செல்வது, அதிலும் உச்சி வெயில் கொளுத்தும், போது பாறையில் காலணி இல்லாமலோ அல்லது போட்டுக் கொண்டோ... எப்படி செல்வதென்றாலும் சிரமம் தான். எப்படியோ ஒரு வழியாக வரிசை வரிசையாக இருந்த பாறைகளின் மேல் ஏறி ஒரு பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இங்கு தான் தொல்பழங்குடிமக்கள் வாழ்விடப்பகுதியாக இது அமைந்திருந்தபோது அவர்கள் எழுதி வைத்த பாறை குறியீடுகள் இருக்கின்றன.

இங்குள்ள பாறை குறியீடுகள் வெள்ளை நிறத்தில் பாறை மேல் கீறப்பட்டவை. இந்த வெள்ளை நிறம் என்பது சுண்ணாம்புக் கலவையும், மூலிகையும் குழைத்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தப் பொருளைக் கொண்டு பாறையில் பண்டைய மக்கள் ஓவியங்களாகவும், கோடுகளாகவும் செய்திகளைப் பதிந்து வைத்துச் சென்றுள்ளனர். இப்பகுதியில் நான் பார்த்து பதிவு செய்த குறியீடுகள்  ஏறக்குறைய 4000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் அறிஞர்களால் அடையாளப்படுத்தப்படுபவை. ஆக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குள்ள இன்று கிடைக்கின்ற முக்கியச் சான்றாக இந்தப் பாறை ஓவியங்கள் அமைகின்றன.

உலகம் முழுவதுமே பழமையான நாகரிகங்கள் இருந்த பகுதிகளில் பாறைகளின் மேல் தீட்டப்பட்ட குறியீடுகளும் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிஸர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்து அதிரம்பாக்கம், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வகை பாறை குறியீடுகளும் ஓவியங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இவை எவ்வகையில் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு ஆய்வுகள் தொடர்கின்றன என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.

கருங்காலக்குடியில் இப்பாறைகள் இருக்கும் பகுதியில் இன்று மக்கள் குடியிருப்பு இல்லை. இப்பகுதி புராதனச்சின்னம் இருக்கும் பகுதியாகப் தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுக்கப்படுகின்றது. இத்தகைய புராதனச் சின்னங்கள் தான் தமிழகத்தில் தமிழர் வரலாற்றை நாம் புரிந்து கொள்ள நமக்கிருக்கும் தரவுகள். இவற்றிற்குச் சேதம் ஏற்படாமல் அங்குச் செல்லும் நாமும் அவற்றை சேதப்படுத்தாமல் இவற்றைப் பார்த்து ரசித்து வரவேண்டும்.

மதுரையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் புராதனச் சின்னங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு பகுதி. அங்கு நம் வரலாற்றுத் தேடுதலுக்கு இன்னும் பல அதிசயங்கள் காத்திருக்கின்றன!.

1 comment:

  1. மிக அருமை. 4000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல் தமிழர்கள் விட்டுச்சென்ற குறியீடுகள்...
    முனைவர் சுபா அவர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.பத்மாவதி, மொழியியல் அறிஞர் டாக்டர்.ரேணுகாதேவி அவர்கள் இம்முயற்சிகளுக்கு ஆற்றும் அரும்பங்கு சிறப்பிற்குரியது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete