Thursday, July 20, 2017

64. ராஜராஜன் கட்டிய திருவாலீஸ்வரம்



அமரர் கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலைப் பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் வாசித்திருக்கலாம். இப்புதினத்தை வாசித்து அதன் கதாநாயகனான அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். அருள்மொழிவர்மன் என்பது ராஜராஜனுக்கு உள்ள மற்றுமொரு பெயர். 

பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக் கோயிலை மாமன்னன் ராஜராஜன் கட்டுவதற்கு முன்னர் அவன் மேலும் சில கோயில்களைத் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் கட்டியுள்ளான். ராஜராஜன் கட்டிய கோயில்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அதன் உட்பொருளாக இருப்பது, சிறந்த சிற்பிகளைக் கொண்டும் தனது போரில் தோல்வியுற்று அடிமைகளாக்கப்பட்டோரை வேலை வாங்கியும் கட்டுவிக்கப்பட்டக் கோயில் என்பதே பொருந்தும். ராஜராஜன் பல கோயில்களை கட்டுவித்ஹ்டிருந்தாலும் அவனது ஆட்சிக் கால தொடக்கத்தில் அவன் எழுப்பிய முதல் கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனா நதியின் தென்கரையில் அமைந்திருக்கின்றது திருவாலீஸ்வரம். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லினால் எழுப்பப்பட்ட இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் மாதிரியாக அமைக்கப்பட்ட கோயில் என்பதுடன் இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் ராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது. 

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நில நீர் மேலாண்மையா என நாம் வியக்கத்தக்க வகையில் தனித்தனியாக அவற்றை முறைமைப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தான் ராஜராஜன். ராஜராஜனுக்கு முன்னர் பல்லவ மன்னர்கள் காலத்திலும் மிக விரிவான நீர் வள மேலாண்மை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே . தன் நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டுமென்றால் மக்களின் அடிப்படையான தேவைகளான உழவு, உணவு, வாழ்க்கை நிலை ஆகியவற்றை மேம்படுத்தினால் நாட்டில் பஞ்சமும் வறுமையும் இருக்காது. மக்கள் மன நிறைவுடன் இருந்தால் அது அரசுக்கு நன்மையல்லவா? உள்ளூரில் மக்கள் மன நிறைவுடன் வாழும் போது அங்குச் செல்வமும் கலைகளும் செழிக்கும். மன்னரின் ஆட்சியும் விரிவாகும். இப்படி மக்களின் மன ஓட்டத்தையும் அவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு ஆட்சி செய்ததால் தான் ராஜராஜன் இன்று ஆசிய நாடுகளில் புகழ்மிக்க ஆட்சி செலுத்திய மன்னர்களில் ஒருவராக இன்றளவும் பேசப்படுகின்றார். 


ராஜராஜ சோழன், தான் இளவரசராக இருந்த காலம் தொட்டு நெடுங்காலம் பல போர்களில் பங்கெடுத்து அரசாட்சி பற்றிய பயிற்சி பெற்று அரியணையில் ஏறியவன். மன்னன் இரண்டாம் சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசியான வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். சோழர் வரலாற்றில் ராஜராஜன் அரியணையில் ஏறிய நாள் முதல் அடுத்த 100 ஆண்டுகள் என்பவை சோழ மன்னர் பரம்பரையினரின் பொற்காலம் என வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமது சோழர்கள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ராஜராஜனின் முதலாம் மகன் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில், சோழ ராஜ்ஜியத்தை இலங்கை மட்டுமன்றி சுவர்ணபூமியாகிய கடாரத்தையும் கைப்பற்றி சோழர்களின் ராஜ்ஜியத்தை விரிவாக்கினான். 

ராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன் என்பது இவனுக்கு அமைந்த தனிச்சிறப்பு. இவனது போர் பற்றிய வெற்றிச் செய்திகளை தெளிவாகக் கூறும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு ஆகும். 

பாண்டிய மன்னர்களும். பல்லவ மன்னர்களும் தாம் பிறருக்கு அளித்த தானங்களைப் பற்றிய ஆவணக்குறிப்புக்களைச் செப்பேடுகளில் பொறித்தனர். அதில் தமது முன்னோர் வரலாற்றினையும் எழுத வைத்தனர். அந்த வகையில் சோழப்பாரம்பரியத்தில், தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து அதனை விளக்கும் மெய்க்கீர்த்திகளைத் தமிழில், தான் சொல்லவிரும்பும் செய்திக்கு முன் தொடக்கத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவன் ராஜராஜன். ராஜராஜனின் அதே முறையையே ஏனைய பிற சோழ மன்னர்களும் தமது கல்வெட்டுக்களில் பின்பற்றினர் என்பதை இன்று நாம் தமிழகத்து சோழர் காலத்து ஆலயங்களைக் காணும் போது அறியலாம்/. இந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்றுச் செய்திகளையும் அக்காலத்தில் அம்மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த போர் பற்றிய செய்தியையும் உட்படுத்திய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவையே இன்று இம்மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை ஆராய்ந்து அறிய உதவுவனவாக உள்ளன. 

ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த படைபெடுப்பு போர் நிகழ்வுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஈழத்தைக் கைப்பற்றிய ராஜராஜன் சிவனுக்கு அங்கு ஒரு கற்றளியை அமைத்தான். பொலன்னறுவை நகரில் இன்றும் இக்கோயில் இருக்கின்றது. ராஜராஜனின் அரசியல் நிர்வாகத்திறன் இன்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. 

நிலவரியை ஏற்படுத்தி, அதற்காக நாடெங்கிலும் நிலங்களை அளந்து , நிலத்திற்கேற்ப வரி அமைத்து நிர்வாகத்தை நடத்தினான். நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை மேற்பார்வைக்காக அமைத்து கிராம சபைகளை அமைத்தான், தனது நிலப்படையையும், கடற்படையையும் வலுவாக்கினான். 

இப்படிச் சிறப்பாக ஆட்சி செய்த ராஜராஜன் கட்டிய திருவாலீஸ்வரம் கோயிலின் விழியப் பதிவினை கடந்த வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு செய்தோம். அந்த விழியக் காட்சிப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே காணலாம் http://tamilheritagefoundation.blogspot.de/2017/07/2017_15.html​. 

இப்பதிவில் என்னுடன் இணைந்து கொண்ட ஆய்வறிஞர்கள் இருவரும் தமிழகத்தில் அவர் தம் துறைகளில் புகழ்பெற்றவர்கள். இக்கோயிலின் சிற்பக்கலை உருவாக்கத்தைப் பற்றி விவரிக்கும் பேராசிரியர் ஓவியர் சந்ரு ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்ப கண்காட்சியில் உலக அளவில் 2ம் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றவர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான கண்காட்சியில் தம் கலைத்திறனுக்காக முதல் இடத்தைப் பிடித்தார். 
எழுத்தாளர், கவிஞர், ஓவியர் சிற்பி, பேராசிரியர் எனப் பன்முகப்புலமை கொண்ட இவர் இந்தியா முழுதும் பயணித்து கோயில்கள், கலைக்கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பெருமைக்குரியவராவார். 

இந்தப் பதிவில் ராஜராஜனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை நமக்காக மிக விரிவாக விளக்கும் தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டியல் அறிஞர் டாக்டர். பத்மாவதி அவர்கள் நீண்டகால ஆய்வுலக அனுபவம் பெற்றவர். தமிழகத்தின் ஏறக்குறைய எல்லா பழம் கோயில்களையும் பார்த்து அதன் கல்வெட்டுக்களை வாசித்து ஆய்வு செய்தவர் என்ற சிறப்புக்குரியவர். இப்பதிவில் இவர் வழங்கும் செய்திகள் இவரது விரிவான ஆய்வுத்துறை அனுபவத்தை வெளிப்படுத்துவதை இந்த வீடியோ காட்சியைக் காண்பவர்கள் உணரலாம். 

தமிழகத்து வரலாற்றுப் பதிவு, அதிலும் சிற்பக்கலை பற்றிய ஒரு பதிவு தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக அமைய வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பமாக இருந்தது. இந்த என் விருப்பத்தை நான் தமிழகம் செல்வதற்கு முன்னரே தமிழக நண்பர் திரு.சன்னா அவர்களுக்குத் தெரிவித்த போது பேரா. ஓவியர் சந்ரு தான் இதற்கு மிகப் பொருத்தமானவர் என்று கூறி எனக்கு அவரை அறிமுகமும் செய்து வைத்தார். தமிழகம் வந்து விடுங்கள். நான் ஒரு நாள் உங்களோடு இருந்து பதிவுகளைச் செய்வதில் உதவுகிறேன்” எனக் கூறியிருந்தார் ஓவியர் சந்ரு. நான் மலேசியாவில் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்வுகளை முடித்து தமிழகம் வந்ததுமே தொலைப்பேசி வழியாக அவருடன் உரையாடி தேதிகளை உறுதி செய்து கொண்டேன். 

அம்பாசமுத்திரம் செல்வதற்கு எனக்கு மிக அதிகமாக உதவியவர் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கருணாகரன் தான். அவர் வீட்டில், அதாவது முன்னர் ஆஷ் துரை இருந்தாரே அந்த மாளிகையில் தான் காலையில் எனக்குக் காலை உணவு வழங்குவதாக ஏற்பாடாகியிருந்தது. அவர் மனைவியின் அன்பு உபசரிப்பில் உண்மையிலேயே அதிகமாகச் சாப்பிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இருவரது நல்ல விருந்துபசரிப்பில் மகிழ்ந்தேன். அது முடித்து புறப்படுகையில் வழியில் டாக்டர். பத்மாவை அவரது உறவினர் இல்லத்தில் ஏற்றிக் கொண்டு ஓவியர் சந்ருவின் இல்லம் சென்றோம். 

ஆனால் அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது அப்போதுதான் தெரிந்தது. அது ஒரு வகை சித்த மருத்துவக்கூடம். மருத்துவமனையில் அனுமதி வாங்கிக்கொண்டு எங்களுடன் வந்து விட்டார். முதலில் அவர் வீட்டிற்குச் சென்றோம். அங்கே சென்றதும் தான் தெரிந்தது. வீட்டோடு இணைத்த வகையில் ஒரு சிற்பக் கல்லூரியையும் கட்டி நடத்திக்கொண்டிருக்கின்றார். சிற்பங்களை அங்கேயே செய்வது, வகுப்பு நடத்துவது என நிகழ்வுகள் நடக்கின்றன. 

அங்குப் போகும் போது தான் தெரிந்தது அம்பாசமுத்திரம் சாதாரண ஒரு ஊர் அல்ல. காலடி வைத்தாலே மனதில் அமைதியும் சாந்தமும் வந்து விடுகின்றது. இயற்கை எழில் அப்படி நிறைந்து கிடக்கின்றது இந்த ஊரில். கோயிலை நாங்கள் மூவரும் அடையும் முன்னரே அரசு ஊழியர்கள் சிலர் எங்களுக்கு உதவ அங்கு வந்தனர். முழு பதிவு முடியும் வரை எங்களுடன் இருந்து எங்களுக்கு மதிய உணவையும் ஏற்பாடு செய்து கொடுத்து எங்களைச் சாப்பிட வைத்து பின் அவர்கள் சென்றனர். இந்த அனைவரின் உதவியோடும் தான் திருவாலீஸ்வரம் கோயில் பற்றிய வரலாற்றுப் இந்த வரலாற்றுப் பதிவு சாத்தியமாகியது. 

தமிழகத்தின் நெல்லைக்கு மலேசிய அன்பர்கள் பலர் சென்றிருக்கலாம். நெல்லையிலிருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குள் அடைந்து விடலாம் அம்பாசமுத்திரம் என்ற இந்தச் சிற்றூரை. இந்த ஊர் மட்டுமல்ல. இதன் அருகாமையில் இருக்கும் ஏனைய சிற்றூர்களும் வரலாற்று ஆர்வார்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய வகையிலான அருமையான கோவில்களும் சின்னங்கள் நிறைந்தவை பசுமையும் குளுமையும் இந்த ஊர்களுக்கு அமைந்திருக்கும் இயற்கை அன்னையின் கொடை. சென்று பார்த்து வாருங்களேன்!நெல்லையில் அல்வாவை சுவைத்தவாறு கோயில்கலின் வரலாற்றையும் அறிந்து வருவது சிவையான அனுபவமாக நிச்சயம் அமையும். 

1 comment:

  1. அரிய பதிவுகள்.., அன்பார்ந்த நன்றிகள் சகோதரி

    ReplyDelete