Thursday, July 14, 2016

21.கூத்துக்கலை - புரிசை




சினிமா ​ஊடகம் மிகப் ​பிரபலமடைந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் பண்டைய கூத்துக்கலை​யானது ​மக்கள் மத்தியில் பிரபலம் குன்றித்தான் போய் விட்டது. ஆனாலும் கூட வழி வழியாக இக்கலையைப் பாதுகாத்து இக்கலை அழியாமல் கூத்துக்கலைப் பள்ளிகள் தமிழ​க​த்தில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

கூத்துக்கலை என்பது ஒரு வகையான நாடகபாணி தான். இக்கலையில் ஈடுபடும் கலைஞர்கள் பொதுவாக அபார நடிப்புத் தி​ற ​மையுடன் பாடல் பாடக் கூடியவராகோ, நடன​ங்க​​ள் ஆடக்கூடியவராகவோ இ​சைக்​​ ​கருவிகளை வாசிக்கக் கூடியவர்களாகவோ இருப்பர். பொதுவாக தமிழக இலக்கிய உலகில் பிரபலமான புராணக் கதைகளும் இலக்கியங்களின் மையக் கதைகளும் கூத்துக்களில் பிரபலமாக இடம்பெறுவனவாக அமைகின்றன. பண்டைய கதைகளை பயன்படுத்துவதை விட்டு சமகால சமூ​க​ ​ விசயங்களை மையப்படுத்தி கூத்துக்கான கதைக்களத்தை அமைக்கும் கூத்துக் கலை பட்டறைகளும் தமிழகத்தில் இயங்குகின்றன. கூத்துக்கலயை பயிற்சி செய்வது, அதனை மேடைகளில் நடித்து மக்களை மகிழ்விப்பது என்பது மட்டுமன்றி அதனை ஆர்வமுள்ளோருக்கு பயிற்றுவிக்கும் பணியையும் கூத்துக்கலையை வளர்க்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்படி உள்ள ஒரு கூத்துக்கலை வளர்க்கும் பள்ளிக்குச் சென்று அங்கே​ ​ஒரு பதிவினைச் செய்ய வேண்டும் என்​ற​ முயற்சியில் ஈடுபட்ட போது மூன்று வெவ்வேறு வகையான கூத்துக்கலை ஆசிரியர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுகளுக்காக நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அப்படி கூத்துக்கலையை இன்றும் தமிழகத்தில் வளர்த்து வரும் ஒரு பிரபலமான கலைஞர் தான் திரு.துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் அவர்கள்.

​தமிழகத்தின் ​திருவண்ணாமலை​யும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள கிராமங்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சான்றுகளைக் கொண்டிருக்கும் வளமான ஒரு பகுதி. அங்கு ​ ​வரலாற்றுச் சான்றுகளை​​ பதிவுகள் செய்வதற்காக நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தேன். 2011ம் ஆண்டு அது. திருவண்ணாமலைக்கு அருகே இருக்கும் ஒரு சிற்றூர் புரிசை. புரிசை என்றாலே தமிழகத்தில் கூத்துக்கலைக்கு புகழ்பெற்ற ஒரு ஊர் என்பது பலரும் அறிந்த ஒரு விசயம் தான்.

புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களை பேட்டி செய்யும் வாய்ப்பு அமைந்தது. இவரைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதோடு இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்துப் புகை​ப்பட​​ங்களும் எடுத்து வந்து அவற்றை ஒரு விரிவான பதிவாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் பதிவாக்கினேன். ​அப்பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே http://www.tamilheritage.org/thfcms/ என்ற பக்கம் சென்று அதில் வரலாறு எனும் பகுதிக்குச் சென்று அதில் திருவண்ணாமலை எனும் பக்கத்தைத் திறந்தால் காணலாம். இப்பகுதியில் ஒலிப்பதிவு பேட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

​கண்ணப்ப தம்பிரான் கூத்துக்கலை பயிற்சிப்பள்ளி ​அழகிய எளிமையான முறையில் அமைந்த ஒரு குடில். ​ பள்ளி வளாகத்தின் உள்ளே ​கண்ணப்ப தம்பிரான் அவர்களின் பெரிய நிழற்படம் ஒன்று சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி செய்வதற்காக சில நாடக உபகரணங்களும் இந்தப் பள்ளியில் உள்ளன. இந்த குடிலுக்கு உள்ளே நுழைவதற்கு முன் வாசலின் இடது புறத்தில் இந்தப் பள்ளி திறந்து வைக்கப்பட்டதை ஒட்டிய தகவல் கல்லில் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

​கூத்துக்கலையைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுவதைப் பற்றி தெரிவித்ததும் ஒரு பேட்டியளிக்க சம்மதித்தனர்.

​தற்சமயம் இந்த ​புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தலைவராக இருப்பவர் ​​கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்கள். இவரது தலைமுறையில் இவர் ஐந்தாமவர். பரம்பரை பரம்பரையாக தெருக்கூத்து கலையை வளர்க்கும் கலைஞர்களின் பாரம்பரியத்தில் வருபவர். இவர் தந்தையார் திரு. கண்ணப்ப தம்பிரான் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பின்னர் இவர் இம்மன்றத்திற்குத் தலைமையேற்று இந்தக் கலையை தொடர்ந்து வளர்த்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த நான்கு வருடங்களாக ஒரு பயிற்சிப் பள்ளியை அமைத்து அதில் ஆர்வமுள்ளோருக்கு தெருக்கூத்து பயிற்சி வழங்கி வருகின்றார்.

வார இறுதி நாட்களில் தொடர்ந்து 15 வாரங்கள் என்ற வகையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. சிறு குழந்தைகளுக்கான பயிற்சிகளும் அதில் இடம்பெறுகின்றன.

மஹாபாரதம் தவிர்த்து ராமாயணக் கதைகள், பாரதியின் பாஞ்சாலி சபதம், தெனாலி ராமன் கதைகள் போன்றவை தெருக்கூத்து கதைக்கருவாகப் பயன்படுத்தப்படுகின்றது.​ இந்தக் கூத்துக் கலைக் குழுவினர் கொலம்பியாவில் நடைபெற்ற ஐந்தாவது உலக நாடக மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். ப்ரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே தெருக்கூத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றியிருக்கின்றனர். தமிழகத்தில் புரிசையில் மட்டுமன்றி சிங்கப்பூரிலும் தெருக்கூத்து பயிற்சியை நடத்திவருகின்றார்​ ​கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்கள்​.

துரைசாமி தம்பிரான் காலத்தில் தோல்பாவை ஆட்டமாக ஆரம்பித்த இந்தக் கலை பின்னர் தெருக்கூத்துக் கலையாக உருவெடுத்து மாற்றம் கண்டிருக்கின்றது. தற்சமயம் இக்கலை மக்களின் கவனத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்றே இவர் குறிப்பிடுகின்றார்.

காலத்திற்கேற்றவாறு மாற்றங்களைப் புகுத்துவதோடு மக்கள் மத்தியில் இக்கலையைக் கொண்டு செல்ல உழைக்கும் இவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.​ சினிமா என்ற ஊடகம் எல்லாத் தரப்பு மக்களையும் ஈர்த்து விட்ட இக்காலச் சூழலில் கூத்துக்கலை போன்ற பண்டைய மகிழ்கலைகள் எதிர் நீச்சல் போட்டு சமாளிப்பதுதான் நிதர்சனம். அந்த வகையில் பல சிரமங்களுக்கிடையில் தான் இவ்வகை பள்ளிகள் தங்கள் முயற்சிகளைத் தொடர்கின்றன.

​கூத்துக்கலையைப் பற்றிய அடிப்படையை அறிந்து கொண்டவர்கள் இதன் சிறப்பினை மறுக்க முடியாது. விரிவாக இக்கலை மக்கள் மத்தியில் பிரபலமடையும் போது இக்கலை மேன்மேலும் வளர நல்ல வாய்ப்பு அமையும். மலேசிய சூழலில் கூத்துக்கலைக்கு இது காறும் வாய்ப்பு என்பது அமையாத சூழலே நிலவுகின்றது. கலைகளில் ஆர்வம் உள்ளோர் இத்தகையை கூத்துக்கலைப் பயிற்சிகளை மேற்கொண்டு மலேசிய சூழலில் இக்கலையை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். மிக வளமிக்க கலை இது. இதன் புகழ் மங்காமல் வளர்க்க வேண்டிய பணி மலேசிய தமிழர்களுக்கும் உண்டு.​

2 comments:

  1. முத்தமிழின் மூன்றாம் பாகம் “ கூத்து “.,அது குறித்த கலை அழியாது காப்பவர்க்கும்.,அறியச் செய்த தங்களுக்கும்.,கலைத் தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது சகோதரி...வாழ்த்துக்கள்.

    ReplyDelete