தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பதிவுகளைச் செய்வதற்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நான் கடந்த ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் சென்று வருகின்றேன். 2009ம் ஆண்டில் நெல்லைப் பகுதிக்கான என் பயணத்தில் பாஞ்சாலங்குறிச்சியும் இடம்பெற்றிருந்தது. பாஞ்சாலங்குறிச்சியின் நாயகன் நாம் எல்லோரும் நன்கறிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அல்லவா? அவருக்கு அங்கே ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டிருப்பதாகவும் அதனை நேரில் சென்று பார்த்துப் பதிவு செய்து அச்செய்திகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் பதிய வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட நெல்லை வட்டார நண்பர்கள் சிலருடன் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டேன்.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில். இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில். இதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில். இதனைக் கடந்து மேலும் பயணித்தால் நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில். இந்த ஐந்து தோரண நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது. முதற் பார்வையிலேயே நம் கவனத்தை ஈர்க்கும் அழகான ஒரு சிறு கோட்டையாக இதனைக் கட்டியுள்ளனர்.
எனது அந்தப் பயணத்தில், நான் திருநெல்வேலி புறப்படுவதற்கு முன் சென்னையில் இருந்த நாட்களில் இருமுறை தொல்லியல் ஆய்வு நிபுணர் முனைவர்.நாகசாமி அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முனைவர்.நாகசாமி அவர்கள் என்னிடம் தனது வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் தாம் நிகழ்த்திய அகழ்வாய்வு தொடர்பான ஆய்வு விபரங்களை இந்தச் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. முனைவர்.நாகசாமி அவர்கள் தொல்லியல் துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் முதன் முதலாக அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஆய்வுப் பகுதி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த இந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இருந்த இடம் தான்.
கட்டபொம்மன் வாழ்ந்த சமயத்தில் அவன் கட்டிய கோட்டை செங்கல்லால் கட்டப்பட்டது. அவன் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை பகுதிகளெல்லாம் அந்த மாளிகைப் பகுதிகளிலேயே இருந்திருந்ததையும் இவரது ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அமைச்சர்களும் அறிஞர்களும் அமர்ந்து ஆலோசனை செய்யும் இடங்களெல்லாம் இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடிபாடுகளுக்கிடையில் கிடைத்த பானை ஓடுகள், கண்ணாடி சீசாக்கள் முதலியனவற்றைச் சேகரித்து பாதுகாத்திருக்கின்றது இந்த ஆய்வுக் குழு.
சிதைக்கப்பட்ட அந்த இடம் அப்படியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் தான் இந்த அழகிய மணி பண்டபத்தை எழுப்பியிருக்கின்றார்கள்.
மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் உடனே இருப்பது சித்திரக் கூடம். இதற்கு உள்ளே சென்றால் மேலும் ஒரு சிறிய கூடம் ஒன்று இருக்கின்றது. அதன் மையத்தில் மிகக் கம்பீரமான வடிவத்தில் வீர பாண்டிய கட்டபொம்மனின் சிலை ஒன்று பிரமாண்டமாக வடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றது. சித்திரக்கூடத்தில் பாஞ்சாலங்குறிச்சி நாயகனின் கதை சொல்லும் சித்திரங்கள் சுவர்களில் மிக அழகாகத் தீட்டப்பட்டு அதன் கீழே தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கட்டபொம்மன் மூதாதையினர், இன்றைய ஆந்திர தேசத்து தெலுங்கு இன மக்கள். அவர்கள் நாயக்க மன்னர் காலத்தில் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டவர்கள். பாஞ்சாலங்குறிச்சியைத் தனது கோட்டைக்கான இடமாக கட்டபொம்மன் வம்சத்தினர் தேர்ந்தெடுத்தமைக்குப் பொதுவாக ஒரு கதை கூறுகின்றனர்.
ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டையை அமைத்தனராம் கட்டபொம்மன் மூதாதையினர்.
அவரது பாட்டனார் ஆட்சிப் பொறுப்பை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அவரது 30வது வயதில் வழங்கியிருக்கின்றார். தனது பாட்டனார் பாஞ்சாலன் ஞாபகமாக இந்தப் பகுதிக்குப் பாஞ்சாலங்குறிச்சி என்று பெயர் சூட்டினாராம் கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ஆட்சியின் போது ஆறு ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டாமலேயே இருந்திருக்கின்றார். இதனை அறிந்த ஆங்கிலேய அதிகாரி இவரிடம் வரி கட்டும் படி கோரி செய்தி அனுப்புகின்றார். வரி கட்ட முடியாது என்று தெரிவித்து கட்டபொம்மன் மறுக்கின்றார்.
ஜாக்சன் துரை என்பவர் 10.9.1790ல் தனது ஆட்களை அனுப்பி கட்டபொம்மனை அழைத்து வந்து கட்ட வேண்டிய பாக்கி வரியை கட்டாததன் காரணத்தை அறிய விசாரணை நடத்துகின்றார். இந்த விசாரணை நடைபெறும் போது கட்டபொம்மன் தந்திரமாக தனது வாளால் அவரைத் தாக்கி விட்டுத் தப்பித்து ஓடி விடுகின்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பித்துப் ஓடினாலும் இவரது கணக்குப்பிள்ளை தாணாபதிப்பிள்ளை பிடிபட்டு விடுகின்றார். இவரைப் பிடித்து ஆங்கில அரசாங்கம் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கின்றார்கள். கணக்குப்பிள்ளை பின்னர் விடுதலை செய்யப்படுகின்றார். கட்டபொம்மனும் அவரது மனைவியும் சில வீரர்களுடன் ஒட்டப்பிடாரத்துக்கு அருகில் சாலிகுளம் என்னும் இடத்தில் தங்கியிருக்கின்றார்கள். அப்போது அனைத்துப் பொறுப்பும் மந்திரி தானாபதி பிள்ளைக்குப் போய் சேர்கின்றது.
திருச்சியில் தன்னை சிறைபிடித்து வைத்ததை மனதில் வைத்து அதற்காகப் பழிவாங்க வேண்டும் என்றும் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான தபால் போக்குவரத்தைத் தடை செய்து விடுகின்றார் மந்திரி தானாபதிப்பிள்ளை.
எட்டயபுரம் ஜமீனோடு ஒப்பிடும் போது கட்டபொம்மனின் அரசாங்கம் சிறியதே. ஆக ஆங்கிலேயர்கள் எட்டயபுர ஜமீன் ஆதரவோடு கட்டபொம்மன் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
கட்டபொம்மன் சிறந்த முருக பக்தர் என்றும் திருச்செந்தூரில் திருவிழா நடைபெறும் போது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்று விடுவார் என்றும் இங்குக் குறிப்புக்கள் உள்ளன. அந்த நேரத்தில் கோட்டையைத் தாக்கினால் கோட்டையைக் கைபற்றிவிடலாம் என்று ஆங்கில அரசு திட்டமிடுகின்றனர். 5.9.1799 அன்று பானர்மேன் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி தன் வீரர்களுடன் கோட்டைக்கு வருகின்றார். அந்தச் சமயம் கட்டபொம்மன் கோட்டையில் இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டையை இடித்து உடைத்து தரை மட்டமாக்கி விட்டுச் சென்று விடுகின்றனர்.
இப்படி தரை மட்டமாக்கிய பின்னர், மந்திரி தாணாபதிப்பிள்ளையின் ஆலோசனையைக் கேட்டு தம்பி ஊமைத்துரையையும் அழைத்துக் கொண்டு புதுக்கோட்டைக்குச் சென்று விடுகின்றார் கட்டபொம்மன்.
9.9.1799ல் கட்டபொம்மன் தனது இடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டார் என்ற தகவல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் செல்கின்றது. கட்டபொம்மன் இல்லாததால் கோட்டைப்பகுதியை இடித்து உடைக்க உத்தரவிடுகின்றார்.
கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த புதுக்கோட்டை மன்னர் விசயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத் தெரிவிக்கின்றார். தகவல் கிடைத்த ஆங்கிலேயர்கள் அங்குச் சென்று கட்டபொம்மனை புதுக்கோட்டையில் கைது செய்து விடுகின்றார்கள். கைது செய்து அங்கிருந்து கட்டபொம்மனைக் கயத்தாறு கொண்டு செல்கின்றார்கள். அங்கு அவரை விசாரணை செய்கின்றார்கள். விசாரணையின் அடிப்படையில் 16.10.1799 அன்று அவரைப் புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்தரவிடுகின்றார்கள்.
கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பின்னர் ஆங்கிலேய அரசு கட்டபொம்மனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பொது மக்களையும் சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும் ஒருவர். இவர் சிறையிலிருந்து தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி வருகின்றார்.
திரும்பி வந்ததும் அங்குள்ள மக்களை ஒன்று திரட்டி மீண்டும் முதலில் கோட்டை இருந்த இடத்திலேயே ஒரு கோட்டையையும் கட்டி விடுகின்றார் ஊமைத்துரை. இந்தச் செய்தி ஆங்கிலேயர்களுக்கு எட்டுகின்றது. மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்கின்றது. ஊமைத்துரைக்குத் துணையாக இருந்து படைக்கு தலைவராக இருந்து போராடுகின்றார் வெள்ளயத்தேவன். ஊமைத்துரை கட்டிய கோட்டையைப் பீரங்கிகளை வைத்து ஆங்கிலேயர்கள் உடைத்து தரைமட்டமாக்கி விடுகின்றனர்.
இப்படி மீண்டும் மீண்டும் அழிவுக்கு உட்பட்ட கோட்டைப்பகுதி இன்று தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. கட்டபொம்மன் பெயர் சொல்லும் மண்டபமும் அவன் வழிபட்ட வீரஜக்கம்மா கோயிலும் அருகிலேயே இருக்கின்றன.
பாஞ்சாலங்குறிச்சியின் தவிர்க்க முடியாத நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைச் சிறப்பிக்கும் இந்த மணிமண்டபம் சிறப்பான ஒரு வரலாற்றுச் சின்னம் தான்!
முதல் முறை வரிகட்டுவார் பிறகு ஏற்பட்ட பஞ்சத்தால் வரிகட்டமுடியாத சூழல் இருப்பதை தெறிவிக்க தானாதிபிள்ளையை வாய்தா கேட்டுவரும்படி அனுப்புவார் கெட்டிபொம்முலு என்கிற கட்டபொம்மன்..தானாதிபிள்ளையே வாய்தாவிற்க்கு பதிலாக போரை வாங்கி வருவார்..தானாதிபிள்ளை யோசனையை கேட்டுதான் ஓடி ஒழிந்தார் என்பதற்க்கு ஆதாரம் உள்ளதா..?
ReplyDeleteமுதல் முறை வரிகட்டுவார் பிறகு ஏற்பட்ட பஞ்சத்தால் வரிகட்டமுடியாத சூழல் இருப்பதை தெறிவிக்க தானாதிபிள்ளையை வாய்தா கேட்டுவரும்படி அனுப்புவார் கெட்டிபொம்முலு என்கிற கட்டபொம்மன்..தானாதிபிள்ளையே வாய்தாவிற்க்கு பதிலாக போரை வாங்கி வருவார்..தானாதிபிள்ளை யோசனையை கேட்டுதான் ஓடி ஒழிந்தார் என்பதற்க்கு ஆதாரம் உள்ளதா..?
ReplyDeleteஅருமை கூறிய விதம்.... நன்றி
ReplyDelete