Thursday, December 29, 2016

​42. வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை



கரூரில் ஒரு கல்லூரியில் எனது சொற்பொழிவு நிகழ்வை முடித்து சில தினங்களுக்கு முன்னர், அதாவது 22 டிசம்பர் காலையில் தென் தமிழகத்தின் கலைவளமும் தமிழ் வளமும் பொருந்திய நெல்லைச் சீமையை வந்தடைந்தேன். அன்று காலைத்தொடங்கி நெல்லைச்சீமையில் பல சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் வரலாற்று ஆவணப்பதிவுகளுக்காக என் பயணம் அமைந்திருந்தது. இடையில் இரு நாட்கள் தூத்துகுடியில் மீனவர்கள் வாழ்க்கையையும் நெசவுத்தொழிலில் ஈடுபடும் மக்களையும் சந்தித்து சில பதிவுகளைச் செய்திருந்தேன்.

திருநெல்வேலியில் இந்த ஆண்டு எனது வரலாற்றுப்பதிவுகள் பன்முகத்தன்மைக் கொண்டவையாக அமைந்தன.
அம்பாசமுத்திரத்தில், ராஜராஜன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே மன்னன் கட்டிய திருவாளீஸ்வரம் கோயிலின் பதிவிலிருந்து எனது வரலாற்றுப் பதிவு தொடங்கியது. ராஜராஜசோழன் பெரிய கோயிலில் புதிய கட்டிட பாணியை அறிமுகப்படுத்துவதற்கு முன்னராக வழக்கில் இருந்த பராந்தக சோழனின் காலத்திய கோயில்கட்டுமானத் தோற்றத்துடன் கூடிய வகையில் அமைக்கப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலில் சில சிற்பங்களை ஓவியர் சந்துருவுடனும் டாக்டர்.பத்மாவதியுடனும் இணைந்து ஆய்வு செய்து அதனைப் பதிவாக்கினோம். இக்கோயிலின் விமானத்தில் இருக்கும் சிவன் பார்வதி சிற்பமும், அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் மற்றும் ஏனைய ஒவ்வொரு சிற்பங்களும் சிற்பக்கலை மாணவர்களுக்கு ஒரு இனிய விருந்து எனலாம். இவற்றை உருவாக்கிய சிற்பி அவ்வடிவங்களை முழுமையாக தமது மனக்கண்ணில் உருவாக்கி, தமது படைப்பின் முழு பரிமானத்தையும் உணர்ந்து பின் அவற்றை செதுக்கியிருக்கின்றார். சிற்பங்களின் ஒவ்வொரு பாகமும் இதற்குச் சான்று பகர்கின்றன.

இந்தக் கோயிலின் வெளிப்புறச்சுவற்றில் ஏராளமான வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டுக்களும் உள்ளன. வட்டெழுத்துக்குப் பரிச்சயம் பெற்ற பாண்டிய தேசத்தில் சோழமன்னன், தான் பதிந்து வைக்க நினைத்த செய்திகளை, அங்கே பரிச்சயமான வட்டெழுத்து எழுத்துரு முறையிலேயே செய்திருக்கின்றான் என்பது ஒரு சிறப்பு.

இதற்கு அடுத்தார்போல செய்யப்பட்ட பதிவு ஓவியக்கலைக்குச் சிறப்பு தரும் திருப்புடைமருதூர் ஆலயத்தில் செய்தோம். இதுவும் அம்பாசமுத்திரத்தில் அமைந்திருக்கும் ஒரு கோயில் தான். நான் இதுவரைக் கேள்விப்படாத அதிசயமாய் இந்தக் கோயில் அமைந்திருந்தது. இதற்குக் காரணம், இக்கோயிலின் முன்புற கோபுரத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கவின் மிகு சித்திரக்கூடம்தான்.இந்தச் சித்திரக்கூடம் ஐந்து தளங்களில் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும்  சுவர் ஓவியங்கள் கதை சொல்கின்றன. காவியம் படைக்கின்றன. மூலிகை செடிகளினால் உருவாக்கப்படும் வர்ணங்களைக் கொண்டே சித்திரங்களைத் தீட்டியிருக்கின்றனர் இவற்றை உருவாக்கிய ஓவியர்கள். அதுமட்டுமா? சித்திரங்கள் சுவர்களை அலங்கரிப்பது போல  சுவர்களுக்கு இடையில் மர வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் மரச்சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்படைப்பு இது. தமிழர்களின் தச்சு வேலைப்பாட்டு கலைத்திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

நெல்லைச் சீமையைச் சிறப்பித்துச் சொல்வது  என்றால் திருநெல்வேலி அல்வாவை நினைக்கும் நமக்கு நெல்லைச் சீமை ஒரு கலைப்பொக்கிஷம் என்பது தெரியாமல் தான் இருக்கின்றது.  நெல்லையின் அம்பாசமுத்திரம், மன்னார்கோயில், பாபநாசம், சேரன்மாதேவி போன்ற கிராமங்கள் எண்ணற்ற கலைச்செல்வங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றன.  வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் மட்டும் தான் இப்பகுதியில்  நிறைந்திருக்கின்றன என்பதல்ல;  பச்சை பசேலென கம்பளி விரித்தார்போல நீண்ட தொலைவிற்கு விரிந்திருக்கும் வாழைத்தோட்டங்களும் தென்னை மரங்களும், நெற்பயிர்களும் இப்பகுதியின் வளத்தை பார்ப்போருக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. தாமிரபரணியின் கொடையாக இந்தப் பசுமை கண்களையும் மனதையும் நிறைக்கின்றது.

நெல்லையின் மேற்குக்கோடியில் அமைந்திருக்கும் பாபநாசம்  கிராமத்திற்கும் நான் இந்தப் பயணத்தின் போது சென்றிருந்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மேற்பார்வையில் இயங்கும், குன்றக்குடி ஆதீனத்தின் திருவள்ளுவர் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கினை இந்த ஆண்டு 23ம் தேதி நிகழ்த்தினோம். இந்தகருத்தரங்கை முடித்து பின்னர் மதியம் இங்குள்ள மலைப்பகுதிக்குச் செல்வதும் எனது பயணத்தில் ஒரு அங்கமாக இடம் பெற்றிருந்தது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கருணாகரனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதால் காட்டுக்குள் சென்று பழங்குடி மக்களைச் சந்திக்கச் செய்ய வேண்டிய ஏற்பாட்டில் எந்த வகைப்பிரச்சனைகளோ சிரமமோ ஏற்படவில்லை. மாறாக பதிவுகள் அனைத்தும் சிறப்பாக செய்யும் வகையில் சூழலும் அமைந்திருந்தது. இங்குள்ள பழங்குடி மக்கள் காரையூர் காணி மக்கள் எனப்படுபவர்கள். இவர்களது பூர்வீகம் இன்றைய கேரளாவின் மேற்குப்பகுதி. இவர்கள் இன்று தமிழ் மொழி பேசினாலும் கூட இவர்களது சமூகத்தில் இருக்கும் வயதில் மூத்தோர் இன்றளவும் காணி மொழியும் பேசுகின்றனர். அத்தோடு மலையாளமும் தமிழும் கலந்த வகையிலான ஒரு மொழியையும் இவர்கள் பேசுகின்றனர். இவர்களது காணி மொழிக்கு எழுத்துரு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது இந்த காணிமக்கள் குடியிருப்புப்பகுதிக்கான பயணத்தின் போது  அவர்களது வாழ்வியல் கூறுகள், மொழி, உணவு வகை, தொழில், இறைவழிபாடு, இன்றைய சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற தகவல்களைக் கேட்டுப் பெற்று பதிவாக்கினோம்.

நெல்லைச்சீமையில் இஸ்லாமிய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.  இங்குதான் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் இருக்கின்றார். இவரது படைப்புக்களைப் பற்றிய பேட்டி ஒன்றினைச் செய்து விட வேண்டும் என்ற பேராவலுடன் அவரை அணுகியபோது, மிகுந்த உடல் நலப்பிரச்சனைக்கு இடையேயும் கூட தம்மால் முடிந்த அளவு தகவல்களைச் சொல்லியதோடு அவரது நாவல்களில் நான்கினை எனக்குப் பரிசாகவும் அளித்தார். இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் உண்மை மனிதர்கள் என்பதோடு கதைகளில் வரும் காட்சிகளில் இடம்பெறும் இயற்கைச்சூழலும் கூட இவரது கண்களின் பார்வைக்குள் சிக்கிய காட்சிகள் தாம் என்பது தனிச்சிறப்பு. இவர் வீட்டு வாதாங்கொட்டை மரமும் மாங்காய் மரமும் அதன் இலை, கிளை காய்களும் கூட இவரது கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை இவரது குடும்பத்தார் சொல்லக்கேட்டு வியந்தேன்.

நெல்லையில் வாழும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு.திவான் அவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பல்தரப்பட்ட தரமான நூல்களை வழங்கியிருக்கும் எழுத்தாளர், ஆய்வறிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். இவரோடு உரையாடி பேட்டி ஒன்றினை பதிவாக்கியபோது இவரது தீவிர ஆய்வு முயற்சிகள் பற்றி அறிந்து வியந்தேன். புத்தகக் குவியலாய் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூற்கள் நிறைந்த தன் வீட்டில் நூற்களுடன் ஐக்கியமாகி வாழும் இவரைப் போன்றோரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை ஆய்வுலகம் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.

நெல்லை மாவட்டத்துக்குச் சற்று வெளியே சீவலப்பேரி எனும் சிற்றூருக்கு அருகில் இருப்பது மருகால்தலை எனும்  கிராமம். இங்குத் தமிழகத்  தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படும் ஒரு தமிழி கல்வெட்டு இருக்கும் பகுதிக்குத் தமிழ் மரபு அறக்கட்டளைக் குழுவினருடன் சென்றிருந்தேன். பாறைகள் நிறைந்த ஒரு பகுதி இது. இதில் பெரிய தமிழி எழுத்துக்களில் இங்கு  கி.மு1ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இருக்கின்றது. இந்தக் கல்வெட்டினையும் அதன் கீழ் இருக்கும் கற்படுக்கைகளையும் பார்த்து பதிவுகள் செய்து கொண்டோம். இங்கே இருந்த பாகுபலியின் சிற்பம் சேதம் செய்யப்பட்டதாகவும் அது அருகாமையிலேயே பாறையின் மேல் இருக்கும் உச்சிக் கோயிலில் இருப்பதையும், அது இப்போது சாஸ்தா, அதாவது ஐயனாராக வழிபடப்படுவதையும் பற்றிய செய்திகளையும் தொகுத்துப் பதிந்து கொண்டோம்.

நெல்லைச் சீமை செல்லுமிடமெல்லாம் வரலாற்றுப்பொக்கிஷங்கள் நிறைந்ததாய் காட்சியளிக்கின்றது.  முற்றிலும் அறியப்படாத தமிழகம் தான் தற்சமயம் நாம் அறிந்த தமிழகம் என்பதும் இப்படி அறியப்படாத பல கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டியது ​ ​அவசியம்​ ​என்பதும் முக்கியமாகின்றது.

Wednesday, December 21, 2016

41. சென்னையில் வர்தா



தமிழகத்தில் கடந்த வாரம் எனக்கு அமைந்த அனுபவம் மறக்க முடியாதது.

நான் தமிழகம் வந்த நாளில், சென்னை மற்றும் சென்னைக்கு அருகாமையில் உள்ள கடலோரப்பகுதிகளில் வார்தா புயல் கடந்து செல்லும் அபாயம் இருப்பதாக அறிவிப்புக்கள் வந்த வண்ணமிருந்தன.  ஞாயிற்றுக் கிழமை அதாவது 12ம் தேதி மாலை நான் பனுவல் புத்தக நிலையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நிகழ்ந்த கல்வெட்டுப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நண்பர்கள் அன்று மாலையே கன மழை பெய்யவிருப்பதாகவும், புயல் அனேகமாக அன்று மாலையே கூட ஆரம்பிக்கலாம் என்றும் கூறி எச்சரிக்கையளித்தனர். நானும் என் உடன் வந்த நண்பர்களும் மாலை ஐந்தரை வாக்கில் அங்கிருந்து புறப்படும் போது வானிலை மேகமூட்டமாக ஆகிக்கொண்டிருந்தது. ”வேகமான புயல் தாக்குவதற்குச் சாத்தியம் இல்லை; மழை மட்டும் சில இடங்களில் சேதத்தை உண்டாக்கிவிட்டு செல்லலாம்” என என் உடன் வந்த நண்பர்கள் கூறிக் கொண்டிருந்தனர். அன்று மாலையே மழை பெய்யத்தொடங்கி விட்டது.

திங்கள்கிழமை அதிகாலை நான் பாண்டிச்சேரி செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். அங்குத் தமிழ் ஆர்வலர்கள் சிலரையும் வரலாற்று ஆர்வலர்கள் சிலரையும் சந்தித்துக் கலந்துரையாடுவது, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு எனது ஆய்வுகளுக்காகத் தகவல் சேகரிப்பது என்பன என் பட்டியலில் இருந்தன.
சென்னை துறைமுகத்தில்,  வரப்போகும் அபாயத்தை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கைக்குறியீட்டை 10க்கு உயர்த்திவிட்டனர்.  பாண்டிச்சேரியில் என் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த நண்பர், புயலின் அளவு அபாயகரமானதாக மாறிக் கொண்டிருப்பதனால்பாண்டிச்சேரிக்குச் செல்வது ஆபத்தானதாக முடியும் எனச் சொல்ல, அங்கே செல்லும் திட்டத்தை மாற்றிக் கொள்வதே சரியாக இருக்கும் என முடிவு செய்து மறுநாள் நிகழ்வுகளை மாற்றம் செய்து கொண்டேன்.

திங்கட்கிழமை காலை நான் தங்கியிருந்த திருவான்மியூர் பகுதியில் காலை ஒன்பது மணி தொடங்கி மழைப்பொழிவின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. புயல் சென்னையின் கடற்கரையோரப்பகுதியை நெருங்கத் தொடங்கியதும் படிப்படியாகக் காற்று அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அன்று மாலை வரை இதே நிலை தான். இடையில் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரத்தைப் பாதுகாப்புக் கருதி தடைசெய்து விட்டனர்.

புயலின் முதல் கட்டமானது சென்னையைக் கடந்ததாகச் செய்தி வந்து கொண்டிருந்தது. மாலை மழை பொழிவு சற்று குறைய ஆரம்பித்தவுடன் நான் வெளியில் சென்று நிலமையைப் பார்த்து அறிந்து கொள்ள விரும்பிச் சென்றேன். வெளியே காணும் இடமெல்லாம் மரக்கிளைகள் உடைந்து கிடந்தன. நான் தங்கியிருந்த பகுதி பல அடுக்குமாடி வீடுகள் நிறைந்த பகுதியாக இருந்தமையால் இடைக்கிடையே இருந்த மரங்களின் கிளைகள் எல்லா பக்கங்களிலும் உடைந்து விழுந்து கிடந்தன. வாகனங்களின் மேல் விழுந்து கிடந்த கிளைகளை மக்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் சாலைகளில் உடைந்து விழுந்து கிடந்த மரங்களை வெட்டி சாலை ஓரங்களில் தள்ளி வைத்து வாகனங்கள் செல்வதற்கு வழி செய்து கொண்டிருந்தனர். இப்படி மக்கள் வெளியே வந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு,  தங்களால் முடிந்த வகையில் சாலைகளை பயன்படுத்தும் வகையில் காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அன்று மாலை மீண்டும் புயல் காற்று தொடங்கியது. அன்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் என்னால் எந்த நடவடிக்கைகளையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை நினைத்து சென்னையில் இருப்பதை விட மதுரைக்குச் சென்றால் அங்கே தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிகளைத் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே தொடங்கி விடலாம் என முடிவு செய்து கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

மதுரையில் நான் தொடர்பு கொண்ட நண்பர்கள் எனக்கு மறுநாள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வைகை துரித ரயில் வண்டியில் எனக்கு மதியம் ஒன்றரைக்கானப் பயண டிக்கட்டை பதிவு செய்து தகவல் தெரிவித்தனர். பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்து விட்டதில் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது.

மறுநாள் காலை ஏழு மணிக்குப் பின்னர் தொலைபேசி இணைப்புக்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டமையால் என்னால் யாரையும் தொலைபேசி வழி தொடர்பு கொள்ள இயலவில்லை. எனக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களைப் புதிய பணமாக மாற்றித் தருவதாகச்சொல்லியிருந்த நண்பரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.  இன்று நிச்சயம் நாம் சீக்கிரம் புறப்பட்டால் தான் ரயில் நிலையம் செல்ல முடியும் என யோசித்து காலை 11 மணி வாக்கில் நான் புறப்பட்டு விட்டேன். தொலைபேசியிலோ அல்லது வெளியில் சென்று டாக்சியை அழைக்கவோ இயலாத சூழல் என்பதால் ஒரு ஆட்டோவை நிறுத்தி அவரிடம் பேசி 400 ரூபாய்க்கு சம்மதிக்க வைத்து அதில் புறப்பட்டு விட்டேன்.

திருவான்மியூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சாலைகளின் இரு புறங்களிலும் சாலையெங்கும் மரங்கள் விழுந்து வேறோடு பிடுங்கப்பட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல கடைகள்,  விழுந்த மரங்களால் சேதமடைந்து போயிருப்பதையும் வழியெங்கும் பார்த்துக் கொண்டே சென்றேன்.

இந்தப் புயலால் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது என்பதை நேரில் நான் காண முடிந்தது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் புயல் ஏற்படுத்திய பலத்த காற்றினால் வேறொடு பிடுங்கி வீழ்ந்து விட்டன. மற்ற மாவட்டங்களில் ஏறக்குறைய மூன்று லட்சம் மரங்கள் நாசமாகின. மரங்கள் மட்டுமன்றி இந்தப் புயலின் போது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புயல் ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு சென்னையில் மின்சாரத்தடை ஏற்பட்டதோடு தொலைப்பேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலாத இக்கட்டான சூழல் உருவானது என்பதும் இந்தப் புயல் விட்டுச் சென்ற பெரும் பாதிப்பு எனலாம்.

நான் எழும்பூர் நிலையம் வந்தடைந்த போது எனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஒன்றரை மணிக்குப் புறப்படுவதாக இருந்த ரயில் வண்டிப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வர, தகவல் மையத்திற்குச் சென்று கேட்க, அனேகமாக அடுத்த இரு நாட்களுக்கு ரயில் பயணம் சந்தேகம் தான் என்ற தகவலே கிடைத்தது. இந்தச் சூழலில் பேருந்திலே மதுரைக்குச் செல்வதுதான் உதவும் என முடிவெடுத்து பேருந்து நிலையம் சென்று டிக்கட்டைப் பெற்று பின் பேருந்து புறப்பட ஆரம்பித்த பின்னர் தான் எனக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. அதுவரை என மனதில் மதுரைக்குச் செல்வது சாத்தியப்படுமா என்ற ஐயமே அதிகமாக இருந்தது.

இந்தச் சூழலை மேலும் சிரமமாக்குவதாகத் தமிழகத்தில் பணப்பிரச்சனை அமைந்தது. ஏற்கனவே நான் வந்திறங்கிய முதல் நாள்  அன்றே வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் நான் சிரமப்பட நேர்ந்தது. அது மட்டுமல்லாது புயலுக்கு முன்னரே கூட வங்கி அட்டைகள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் ஒரு சில இடங்கலில் கணினி கோளாறினால் பயன்படுத்த முடியாத சூழலும் அமைந்தது.  சென்னையிலும் புயலினால் பாதிக்கபப்ட்ட இடங்களிலும் இந்தப் பணம் தொடர்பான பிரச்சனையானது, மேலும் நிலமையை மோசமாக்குவதாகவே அமைந்தது.

வீடுகள் சேதப்பட்டோர் முதல் பொதுவாகவே மக்கள் அனைவரும்  அவசர தேவைக்கு பணத்தினை வங்கிகளிலிருந்து எடுக்க முடியாது திண்டாடிப்போயினர்.  ஏறக்குறைய ஒரு வாரமாகிவிட்ட சூழலில் சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்கள் இன்னமும் முற்றிலுமாக சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.  இந்த இயற்கை பேரிடரின் போது உடைந்து விழுந்த மரங்களை அப்புரப்படுத்தி சாலையைத் தூய்மைப்படுத்திய நகராண்மைக்கழகத் தொழிலாளர்களின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளை முடித்து பாரதியார் பல்கலைக்கழக நிகழ்வில் உரையாற்ற கோயமுத்தூர் வந்திருக்கின்றேன். எனது முதற்கட்டப்பணிகளை முடித்து இன்னும் ஒன்றரை வாரத்தில் சென்னை திரும்பும் போது நிலைமை ஓரளவு சீர்பட்டிருக்கும் என நம்புகின்றேன்.

Wednesday, December 14, 2016

40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை




நீர் வளமும் நில வளமும் மிக்க செழிப்பான ஒரு நாடு தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள், மக்கள் வாழ்விற்கு ஆதாரம் விவசாயம் என்பதை நன்குணர்ந்து நாட்டு மக்கள் நலம் வாழ நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தைப் பராமரித்தனர். தமிழகத்தின் பல சிற்றூர்களுக்கும்  கடந்த சில ஆண்டுகளாக நான் பயணம் செய்து அதன் பல பரிமாணங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். என்னை வியப்பில் ஆழ்த்தும் இயற்கை அம்சங்களில் இங்கு பல ஊர்களில் காணக்கூடிய ஏரிகளும் குளங்களும் அடங்கும். அப்படிப் பல தென்படினும்,  பல ஏரிகள் தூர் வாரப்படாமல் சேதப்பட்டுப்போய் கிடப்பதும், பல ஏரிகளில் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டு ஏரிகள் காணாமல் போன அவலங்களும் நடந்திருப்பது இயற்கைக்கு மனிதர்களால்  ஏற்பட்டிருக்கும் ஒரு பேரழிவு.   2015ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பிற்குப் பின்னரும் கூட,  ஏரிகளும் ஏனைய நீர்வளங்களும்  முறையாக  பாதுகாக்கப்படாத  ஒரு சூழல் தொடர்கின்றதே என்பது இயற்கை அழிக்கப்படுவதையும் அதனால் எழும் கடும் சேதங்களையும், அரசும் நில அமைப்பைப் பாதுகாக்கும் அமைப்புக்களும் இன்னும் உணரவில்லையே என்பதை  காட்டுவதாக இருக்கின்றது.  இந்தச்சூழலில், இயற்கையின் ஒரு அங்கமான நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என குரலெழுப்பும் பல தன்னார்வலர்களின் குரல்களோ, பொது மக்களின் வேண்டுதல்களோ பாதுகாப்பினை முறைப்படுத்தும் பங்கினை ஆற்றும் முக்கியமான அரசு அமைப்புக்களுக்குச் சென்றடைவதில்லை என்பதனையும் காண்கின்றோம்.

நீர்வளங்கள் எனப்படுவனவற்றுள் ஏரிகள், குளங்கள் போல ஆறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல நாடுகளில் மனித நாகரிகம் செழித்து வளர்ந்த பகுதிகளாக ஆற்றங்கரைப்பகுதிகளே அடையாளம் காட்டப்படுகின்றன.  தமிழகத்தின் காவிரி, வைகை, தாமிரபரணி போல முக்கியம் வாய்ந்த ஒரு ஆறு பாலாறு. தொண்டைமண்டலப்பகுதியில் கிளைத்து ஓடும் ஆறு இது. இதற்கு    கொசத்தலையாறு , கொற்றலையாறு என்றும் பெயர்கள் உண்டு. இதற்கு குறத்தியாறு என்றும் ஒரு பெயர் இருக்கின்றது என்ற செய்தியை அந்த ஆற்றின் வழி வழி நாட்டார் கதைகளை மையமாகக் கொண்டு இந்த ஆற்றிற்கு ஒரு காப்பியத்தை வடித்திருக்கும் எழுத்தாளர் கௌதம சன்னாவின் நூலின் வழி நான் அறிந்து கொண்டேன்.

இந்த  நாவலை வாசிக்கத் தொடங்கியபோது  முதலில் என்னை திகைக்க வைத்தது இந்த நாவலின் மொழி நடை. அன்றாட இயல்பான மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையில் இது படைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை எடுத்து வாசிக்கும் முன் வாசகர் தம்மை அதனுள் பிரவேசிக்கத் தயார் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். நூலின் வரிகள் ஒவ்வொன்றும் வாசிப்போரைத் தனி ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய தன்மை படைத்தவை. நூலை அதன் மொழி நடையில் வாசித்துக் கொண்டு, அதன் கதை மாந்தர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினால், அது அழைத்துச் செல்லும் உலகங்களில், அது சொல்லும் எல்லா அனுபவங்களையும் நேரில் உணரும் வகையில், நாவலின் ஒவ்வொரு பக்கமும் நிகழ்வின் காட்சிகளைப் படம் பிடித்தார் போல அமைத்திருக்கின்றார் இதன் ஆசிரியர். பிரமிக்க வைக்கும் ஒரு எழுத்து நடை இது.

அரசகுல வரலாற்றை சிலர் எழுதுகின்றனர். வீரமிக்கச்செயல் புரிந்தோரின் வரலாற்றைச் சிலர் நாவலாக வடிக்கின்றனர். சாமானிய மனிதர்களைப் பற்றி ஒரு சிலரே எழுதுகின்றனர்.  மனிதர்களை மையப்படுத்திய உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில்  இயற்கையைப் பொருளாகக் கொண்டு, அதனையே கதையின் மையப்புள்ளியாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு காப்பியமாகத் திகழ்கின்றது குறத்தியாறு நாவல். முன்னர் பாலாறு என அழைக்கப்பட்ட ஆறு இன்று கொற்றலை அல்லது கொசத்தலை ஆறு என மக்கள் வழக்கில் அமைந்துவிட்டது. இந்த ஆறு உருவாகி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கலாம். இந்த ஆற்றிற்க்கு என அமைந்த தொண்மக் கதைகள் பல இருந்திருக்கின்றன; அவற்றுள் சில மறைந்திருக்கலாம். இந்தக் கதைகள் அனைத்தும் இந்த மண்ணுக்கே உரியவை. இதன்  நுணுக்கமான நிகழ்வுகளுக்கு  கற்பனைகளையும் உட்புகுத்தி புதிய பரிமாணத்தை வழங்குவதாக அமைகின்றது இந்த நாவல்.   இந்தத் தொண்மக்கதைகள் வழியாக இந்த ஆற்றிற்குக் குறத்தியாறு என்று ஒரு பெயரும் இருந்தது என அறியமுடிகின்றது.

தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ  கோயில்கள். அவற்றின் வரலாறுகள் வேறுபடுபவை.  கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்கு அவர்களின் புராணத்தைப் பாடும் கதைகளும் இணைந்தே பிறக்கின்றன. இவை நாட்டார் கதைகள் என அறியப்படுபவை. இந்த நாட்டார் கதைகள் பெரும்பாலும் வாய்மொழிச் செய்திகளாக வருபவை. இவை பலகாலங்களாக அந்த நிலப்பகுதியின் வரலாற்று அம்சங்களை உள்வாங்கி சிலவற்றை இணைத்துக் கொண்டும், சிலவற்றை உதறிவிட்டும், விரிந்தும் சுருங்கவும் கூடிய தன்மை படைத்தவை.

தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகம் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு கிராமமும், ஊரும்  தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக்  கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும்   அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த  கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.

குறத்தியாறு,  ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு  காப்பியம். இதன் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையும், சொல்வளமும் இதற்கு காப்பிய இலக்கிய வகைக்கான அங்கீகாரத்தை வழங்கும் எனக்கருதுகின்றேன்.   இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. இதில் வரும் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை அறிய முயல்வது என்பது ஒரு வகை ஆய்வாக அமையும் என்றாலும்  இக்கதை விட்டுச் செல்லும் செய்திகளை ஆராய்வது சுவாரசியமான ஆய்வாக அமைகின்றது.  அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள் என்பதை அறிந்த போது இந்தப் பகுதிக்கு ஒரு வரலாற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு எழ இதனை நாவலாசிரியர் திரு,கௌதம சன்னாவிடம் தெரிவித்த போது அதற்கு ஆவன செய்து நான் இந்த ஆற்றையும் இந்த நாவலின் நாயகியான குறத்தி இன்று வழிபடப்படுகின்ற  கோயிலையும் பார்த்து வர ஏற்பாடுகள் செய்திருந்தார். இன்று  அங்காளபரமேஸ்வரி  என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர் என்பதை இந்த நேரடி வரலாற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டு, அத்தகவல்களையும் இந்த அம்மனைச் சுற்றி நிகழும் பூசைகள் சடங்குகள் ஆகியனவற்றைப் பற்றியும் ஒரு விழியப்பதிவாக வெளியிட்டேன்.

சாமிகள்  உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு  கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில்  ஒவ்வொரு கிராமங்களிலும் பல  சடங்குகள் நிறைந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழகத்தை விட்டு மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தங்கள் கிராமத்து கடவுளர்களைத் தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளுக்குக் கொண்டு வந்து கோயில்கள் கட்டி வழிபாடு செய்வதை இன்றும் மலேசியா முழுவதும் பார்க்கின்றோம். முனியாண்டி சாமி, வீரபத்திரன், காளியம்மன், பேச்சியம்மன், சுடலை மாடன் போன்ற தெய்வங்கள் இப்படி தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தெய்வங்களே. தாயகத்தில் தங்கள் இறை உணர்வு சார்ந்த நம்பிக்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் அதே தெய்வங்களே புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடும் தெய்வங்களாக மலேசிய,சிங்கை மண்ணில் இடம்பெறுகின்றார்கள்.

குறத்தியாற்றின் வரலாற்றினை நோக்கும் போது,  வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள் என்பதைக் காண்கின்றோம். நான் எனது களப்பனிக்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த போது கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள், பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவின் போது எனக்கு விளக்கமளித்தார்கள். அவற்றை ஒரு குறும்படமாகத் தயாரித்துத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தேன். கிராமங்களில் தொன்மக்கதைகள் கதைகளாகவே இருந்து படிப்படியாக மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விடாமல், மாற்று உருவம் பெற்று வேறொருவகையில் நீளும் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கோயில் அமைந்திருப்பதை இந்தப் பதிவிற்கான ஆய்வில் நான் அறிந்தேன். இப்படி ஏராளமான சம்பவங்கள் நாம் இருக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சொந்தமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் பதிகின்றோமா? ஆவணப்படுத்துகின்றோமா? அவற்றிற்கான ஒரு விளக்கத்தினைத் தரும் ஆய்வுகளை முன்னெடுக்கின்றோமா என்னும் கேள்விகள் முக்கியமானவை.

குறத்தியாறு நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு.  ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வணங்கப்பட்டு வரும்   நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா. மலேசியத் தமிழ் எழுத்துலகில் இத்தகைய நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனக் கருதுகின்றேன். மக்களின் வாய்மொழிச் செய்திகளின் தகவல் களஞ்சியங்கள் இலக்கிய அங்கீகாரம் வழங்கப்படாமல், பதிவு செய்து  ஆராயப்படாமலேயே போய்விடுவதால் ஏற்படக்கூடிய இழப்பு என்பது வரலாற்றுப் பார்வையில் மிகப்பெரிது.  மக்கள் வாழ்வியல் செய்திகளை அந்த நிலத்தின் நாட்டார் கதைகளுடன் இணைத்து வழங்கும்  இத்தகைய தரமான படைப்புக்களை மலேசிய வாசகர்கள்  அறிந்து கொள்வதன் வழி நாவல் அல்லது காப்பியப்படைப்புக்களை இக்கால சூழலில் மாற்றுக்கோணத்தில் உருவாக்கும் உத்திகளை பரிச்சயம் செய்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் கிட்டும்.  இந்த நாவலின் எழுத்து நடை கவிதை நயத்துடன் கூடிய இலக்கிய வகையாக அமைந்திருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களின் தரம் உயர்வாக அமைய வேண்டியதும் வாசகர்கள் தங்கள் வாசிப்புத்திறத்தினை உயர்த்திக் கொள்வதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத்  தேவையே! 

Wednesday, November 30, 2016

39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்




தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை இன்றும் நமக்கு காட்டுவனவாக அமைந்திருக்கும் கோயில்கள் பல. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக அமைந்திருப்பவை மகாபலிபுரத்து குடைவரைக் கோயில்களும் காஞ்சிபுரத்து ஸ்ரீ கைலாசநாதர் கோயிலும். இது மட்டுமன்றி விழுப்புரம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகியவற்றுடன் பனைமலை தாளபுரீஸ்வரர் ஆலயமும் பல்லவ மன்னர்களின் கோயிற்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவை.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப்புராதனச் சிறப்பு மிக்க இடங்களின் பதிவுகளைச் செய்யத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுயினர் சென்றிருந்தோம். அந்தப் பட்டியலில் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தின் பெயரையும் இணைத்திருந்தேன். இந்தக் கோயில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கோவில்களும் கலைகளும் நீர் மேலாண்மையும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்ச்சியுர்றமைக்குச் சான்றாகத் திகழ்பவை.


செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்றது "பனைமலை". இது விவசாய நிலப்பகுதி நிறைந்த ஊர் என்றாலும் பாறைக்குன்றுகள் நிறைந்த ஒரு பகுதி. இங்குள்ள மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்று பெரிய ஏரி அமைந்துள்ளது. இது இரண்டாம் நரசிம்மன் அல்லது ராசசிம்மன் என அழைக்கப்படும் பல்லவ மன்னனால் அமைக்கப்பட்டது. இந்தக் கற்பாறை மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே இன்றும் காட்சியளிக்கின்றது பனைமலை.


வயல்பகுதியைக் கடந்து ஏரிப்பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் பெரிய பாரைக்குன்று இருக்கும்பகுதியில் கற்பாறைமலைமேல் அமைந்திருப்பதுதான் தாளகிரீஸ்வரர் ஆலயம். இது பல்லவர் கால கட்டுமானக் கலைக்குச் சிறப்பைப் சேர்க்கும் ஆலயங்களின் வரிசையில் தனி இடம் பெறும் ஒரு கோயில். ஆலயத்திற்குச் செல்லுமுன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் முதலில் நமக்குத் தெரிவது ஒரு பிள்ளையார் கோயில். பாறையை முற்றிலுமாக குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இது. ஆயினும் முன்பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களும் உள்ளன இதன் உள்ளே பெரிய பிள்ளையார் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் பாறைசுவற்றில் மூஞ்சுறு வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து தொடங்கி மேல் நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். செங்குத்தான மலையில் ஏறுவதற்குப் பாறைகளையே படிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு சுரங்கப்பாதையின் வாயில் பகுதி தெரிகின்றது. இச்சுரங்கப்பாதை மேலே இருக்கும் கோயில்வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை தற்சமயம் புதர்கள் மண்டிக்கிடப்பதால் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றது.

படிகளைக் கடந்து செல்லும் போது பாறைகளுக்கிடையே குடைந்து சுனைகள் இருப்பதைக் காண முடிகின்றது. பெரிய குளங்களும் பாறைகளுக்கு இடையில் இருக்கின்றன. நீர் தேங்கி இருக்கும் குளங்களில் அல்லியும் தாமரைச்செடிகளும் நிறைந்திருக்கின்றன.

இந்தக் கோயிலை முதலில் பார்ப்பவர்கள் இது வெவ்வேறு காலத்து கட்டுமானங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கும் நிலையைக் காணலாம். இந்தக் கோயிலில் உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் ஏனைய இடங்களில் பல்லவர்களுக்குப் பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் கோயில் கட்டுமானப் பகுதியில் சீரமைப்பிற்காக மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். ஆங்காங்கே ஆலயத்தில் சுதைப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பல இடங்கள் உடைந்த நிலையில் இருக்கின்றன . இக்காரணங்களினால் மாறுபட்ட கட்டிட அமைப்புக்களை இடைக்கிடையே இருப்பதைக் காண முடிகின்றது.


கோவிலைச் சுற்றியும் எல்லாப் பகுதிகளிலும் ராஜசிம்ம பல்லவனுடைய காலத்து நிகழ்வுகளைக் கூறும் நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம். இவற்றில் பல நன்கு வாசிக்கக் கூடிய வகையிலேயே இருக்கின்றன. இன்றும் வாசிக்கக்கூடிய வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கருவறையின் தெற்குப் பக்க படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தத் தமிழ்க் கல்வெட்டுகள் பிற்காலத்தைவை.


தமிழகத்தின் காஞ்சிபுரம் அதன் கோயில்களுக்குப் புகழ்பெற்ற ஒரு நகரம். இங்குள்ள காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் ராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில். பல்லவ மன்னர்கள் இசை, நடனம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் எனக் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.


இந்தக் கோயிலின் விமானத்தின் உட்புறமோ, கருவறையிலோ இன்று ஓவியங்கள் எவையும் முழுமையாகக் காண முடியவில்லை. எனினும், விமானத்தைச் சுற்றி வரும் போது, கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஒரு சன்னிதியில் மட்டும் உள்ள ஓவியம் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தச் சன்னிதி உயரமாக ஏறக்குறையத் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியின் உள்ளே சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்கள்.

ஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகின்றன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது. சன்னிதிக்கு உள்ளே மறைவாக இந்த ஓவியம் இருப்பதால் தான் இன்றளவும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் முற்றிலும் சிதைவுறாமல் தப்பியுள்ளது எனக் கூறலாம். உமையம்மை தனது ஒரு காலை சிறிய மேடை மேல் நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி ஒயிலாக நின்ற கோலத்தில் இந்த ஓவியத்தில் காட்சி தருகின்றார். தெய்வீக எழில் நிறைந்த இந்த ஓவியம் இந்திய ஓவியக் கலைக்குச் சிறப்பைச் சேர்ப்பது.

இந்த ஆலயத்தின் வாயில் பகுதியிலிருந்து நோக்கினால் சிவலிங்க வடிவத்தை உமை பார்ப்பது போல் இக்காட்சி தோன்றும். இதே சன்னிதியின் மேற்பரப்பில் ஓவியங்கள் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளன.

மலைப்பகுதியிலிருந்து கீழிரங்கும் பகுதியில் கீழே நாட்டார் வழிபாட்டுத் தெய்வ வடிவங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர். சப்த கண்ணிகளின் உருவங்கள் கற்களால் அமைக்கப்பட்ட வகையில் காட்சியளிக்கின்றன. இதன் அருகில் உள்ள ஒரு குகையில் துர்க்கை அம்மனின் கருங்கற்சிலை ஒன்றும் உள்ளது.

இந்தக் கோயிலையும் அதன் சூழலையும், பல்லவ மன்னன் ராசசிம்மப்பல்லவன் உருவாக்கிய இந்த ஆலயத்தில் இருக்கும் உமை அம்மை ஓவியத்தைப் பற்றியும் விளக்கும் விழியப் பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப் பிரிவில் காணலாம்.

பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய புராதனச் சின்னம். தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் கோயிலாக இக்கோயில் உள்ளது. ஆயினும், இங்குள்ள ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

Thursday, November 24, 2016

38. தஞ்சை பெரிய கோயில்



மலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் அனைவரது சுற்றுலா தலங்களுக்கான பட்டியலிலும் தவறாது இடம்பெறும் ஒரு இடம் என்னவென்றால் அது நிச்சயமாகத் தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற பெரிய கோயில் தான். அதனை ஏன் பெரிய கோயில் என அழைக்கின்றோம?  இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா? என்றால் சுற்றளவிலும் பரப்பளவிலும் பெரிய விரிவான ஏனைய கோயில்கள் இருந்தாலும், தென் இந்தியாவில் இருக்கும் மிக உயர்ந்த கோயில் விமானப்பகுதியைக் கொண்ட கோயில் இது என்பதால் இந்தக் கோயிலுக்குப் பெரிய கோயில் என்ற ஒரு தனிச்சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. 

90ம் ஆண்டுகளில் ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் இணைந்து ஏனைய சில மலேசிய நண்பர்களும் என இக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது கோயில் கருவறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்று மலர் தூவி வழிபடச் செய்தார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நான்கு முறைகள் நான் இந்தப் பெரிய கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அதில் ஒருமுறை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பிரத்தியேகப் பதிவைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றிருந்தேன். நண்பர் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் என்னை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்குத் தொலைப்பேசி வாயிலாக அறிமுகப்படுத்தி வைக்கக், கோயிலுக்கு நான் சென்றதுமே என்னை இன்முகத்துடன் வரவேற்று தஞ்சை பெரிய கோயில் பற்றிப் பல வரலாற்றுத் தகவல்களை அவர் கூறினார். அவை ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கல்வெட்டு ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு ராஜராஜேச்சுவரம், தஞ்சாவூர் எனக் குறிப்பிடத்தக்க நூற்களின் ஆசிரியர் என்ற சிறப்புக்களைக் கொண்டவர். இன்றும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர் இவர். 

இந்தக் கோயிலுக்கு பிரஹதீவரம், என்ற பெயருடன் இராஜராஜேச்வரம் என்ற பெயர்களும் உண்டு. 

ஆரம்பத்தில் எந்த மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது அறியப்படாமலேயே இருந்தது. 1886ம் ஆண்டில் அக்கால ஆங்கிலேய அரசு திரு.ஹூல்ஸ் என்ற ஜெர்மானிய ஆய்வறிஞரைத் தமிழகத்தில் கல்வெட்டாய்வாளராக நியமித்தது. இவர் பெரிய கோயிலின் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக்கோயிலைக் கட்டிய அரசன் முதலாம் இராசராசனே என அறிவித்தார். பின்னர் 1892ல் திரு.வெங்கையா பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுக்கள் என்னும் நூலில் இரண்டாம் தொகுதியில் இடம்பெறும் முதல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள 
"பாண்டிய குலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் 
தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் "
என்னும் கல்வெட்டினால் இச்செய்தி மேலும் உறுதியானது. 

இந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களும் இக்கோயில் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் அறிகின்ற பெயர்களாக தலைமைக் கட்டடக் கலைஞனான வீரசோழன் குஞ்சரமல்லன் ராசராசப் பெருந்தச்சன், இரண்டாம் நிலை கட்டடக் கலைஞனான மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன் மற்றும் மேலும் ஒரு இரண்டாம் நிலைப்பெருந்தச்சனாகிய இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகிய பெயர்களைக் கூறலாம். 

இக்கோயிலின் ஏனைய கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களின் படி மாமன்னனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார், மகன் இராஜேந்திர சோழன், ராஜராஜனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர், சைவ ஆச்சாரியார் அல்லது தலைமை குருக்களான பவனபிடாரன், சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்ற பெயர்களும் அவர்கள் தொடர்பான செய்திகளும், இன்னும் ஏனைய பல செய்திகளும் உள்ளன. 

இராஜராஜேச்சுரத்தின் நுழை வாசலில் அமைந்திருக்கும் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகின்றது. ராஜராஜனின் காலத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில்கள் அனைத்தும் உயரங் குறைந்த கோபுரங்கள். முதன் முறையாக உயரமாக அமைக்கப்பட்ட கோயில் கோபுரம் என்றால் அது பெரிய கோயிலில் உள்ள இந்த கேரளாந்தகன் நுறைவாயில் கோபுரம் தான். கி.பி988ம் ஆண்டில் கேரள நாட்டிலுள்ள காந்தளூர்ச்சாலையை (அதாவது இன்றைய திருவனந்தபுரம் அருகில் உள்ள பகுதி ) வென்றமையால் கேரளாந்தகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். அதன் நினைவாக இந்த நுழைவாயில் கேரளாந்தகன் நுழைவாயில் எனப்பெயரிடப்பட்டது. மிக அகலமான அதிட்டானத்தின் மேல் இக்கோபுரம் எடுப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் கருங்கற் வேலைப்பாடுகளும் சுதையினால் செய்யப்பட்ட சிற்பங்களும் சேர்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் வடபகுதி முழுவதும் சதாசிவ மூர்ஹ்ட்தியின் சிற்பங்களே நிறைந்திருக்கின்றன. 

இந்த நுழைவாயிலைக் கடந்து சென்றால் அடுத்து வருவது இராசராசன் திருவாயில். இப்பகுதியில் மிகப்பெரிய உருவத்தில் கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி ஒன்று உள்ளது. இது பிற்காலத்தில், அதாவது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ராசராசன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி கோயிலினுள்ளே திருச்சுற்று மாளைகையில் வராகி அம்மன் கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 

பெரிய கோயிலின் இராசராசன் திருவாயில் முழுவதும் பல சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. சிற்பத்தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புராணக் கதையை விளக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாக திரிபுரத்தை சிவபெருமான் தகனம் செய்து பின் அந்த அசுரர்களுக்குக் காட்சி அளித்தமையைக் காட்டுவதாக உள்ளது. இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் இருக்கும் துவாரபாலகர் வடிவம் தான் உலகிலேயே மிகப் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள். இப்பகுதியிலேயே சண்டீசர் கதைத் தொகுப்பாக ஒரு சிற்பத் தொகுதி ஒன்று உள்ளது. அதில் விசாரசர்மன் (சண்டீசர்) மழுவால் தன் தந்தையின் காலை வெட்டும் காட்சியும் பசுக்கூட்டமும் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவர திருக்கலியாணக் காட்சிகள் சிற்பத்தொகுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கடுத்தார்போல, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைத் தழுவுவது போன்ற காட்சி சிற்பத்தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் தொடர்ச்சியாக வள்ளியை மணமுடிக்கும் முருகன் கதையை விளக்கும் சிற்பத் தொகுப்பு அமைந்துள்ளது. இப்படி வரிசையாகப் பல புராணக்கதைகளைச் சிற்பங்களாக வடித்ஹ்டு அமைத்துக் கொடுத்திருக்கின்றனர் இக்கோயிலைக் கட்டிய சிற்பிகள். சிற்பக்கலைக்கூடமாக இது இன்று நம் கண்முன்னே திகழ்கின்றது. 

தஞ்சைப் பெரியகோயிலின் விமானப்பகுதியே சதாசிவ லிங்கமாக வடிக்கப்பெற்றது. இதனைக் காட்ட மாமன்னன் இராஜராஜன் சதாசிவ வடிவத்தின் ஐந்து திரு உருவங்களையும் தனித்தனியே வடித்து அதற்கேற்ற திக்குகளில் பிரதிட்டை செய்து வழிபாடு செய்துள்ளான். பல மைல் தூரத்திலிருந்து பார்க்கும் போதே சதாசிவலிங்கமாகக் காட்சியளிக்கும் பெரிய கோயில் ஸ்ரீவிமானத்தை நன்கு காணலாம். 

சிற்பங்கள் மட்டுமே இக்கோயிலில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். கலாரசிகனான ராஜராஜன் இக்கோயிலின் கருவறை இரு சுற்றுச் சுவர்களுக்கு இடையே உள்ள சாந்தாரம் எனும் சுற்றுக்கூடத்தில் ஓவியங்களை தீட்டச் செய்துள்ளான். இந்த ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 

இக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் நுண்ணிய கட்டுமானச் சிறப்பைக் கொண்டவை. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது உலக அளவில் தமிழர் கட்டுமானக் கலையின் சிறப்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்ததொரு வாழும் ஆவணமாகத் திகழ்கின்றது. இந்தத் தகவல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப்பிரிவில் உள்ளன. இக்கோயிலைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் உள்ள முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது இராஜராஜேச்சுவரம் என்ற நூலையும் தரவிறக்கி வாசிக்கலாம். 

Wednesday, November 16, 2016

37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு



நமது இருப்பிடத்தின் முகவரியைத் தரவேண்டுமென்றால் எந்த நாட்டில் எந்த நகரத்தில் வசிக்கின்றோம் என்பதைக் கட்டாயம் நாம் தெரிவித்துத்தான் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நகருக்கும் அவை தோன்றிய காலம், அதன் வரலாறு பற்றி பொதுவாக நாம் யோசிப்பதில்லை. நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள ஏறக்குறைய அனைவருமே முக்கியத்துவம் காட்டுவதில்லை, ஒரு சில வரலாற்றுப் பிரியர்களைத்தவிர. இன்றைக்கு நாம் வசிக்கும் நகரங்கள் பன்னெடுங்காலமாக அதே பெயரில் அதே அமைப்பில் அதே அளவில் இருந்ததில்லை. நகரங்களின் பெயர்களும் காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வந்துள்ளன, அளவில் கூடியும் குறைந்தும் மாற்றம் கண்டிருக்கின்றன. ஒரு சில நகரங்கள் பலபல பெயர்களில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வதும் அறிந்து கொள்வது என்பதுவும் வரலாற்றுத்துறையில் அடங்குவதுதான்.

நமக்கு இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உலகின் மிகப்பழமையானதும் மக்கள் வாழ்ந்த நகரங்களாகவும் அறியப்படும் நகரங்களின் வரிசையில் பாலஸ்தீன நாட்டின் ஜெரிக்கோ, லெபனான் நாட்டின் பிப்லோஸ் மற்றும் பெய்ருட், சிரியாவின் அலெப்பொ மற்றும் டமாஸ்கஸ், ஆப்கானிஸ்தானின் பால்க், ஈராக்கின் கிர்க்குக் மற்றும் அர்பில், துருக்கியின் காஸியாந்தெப் மற்றும் கோப்பெக்லி தீப், பல்கேரியாவின் ப்ளோவ்டிவ், எகிப்தின் ஃபையூன், ஈரானின் சூசா, கிரேக்கத்தின் ஏதன்ஸ் மற்றும் தீப்ஸ், ஸ்பெயினின் காடிஸ், இந்தியாவின் வாரனாசி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழகத்தில் நாம் பொதுவாக அறிந்திருக்கும் நகரங்கள் சிலவற்றுள் திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி , காரைக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல், திண்டிவணம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என சில நகர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் சென்னை என நாம் அறிந்த ஊரின் அன்றைய பெயர் மதராசபட்டினம். இந்த நகரின் வரலாற்றினை எழுதியவர் கடலோடி என அழைக்கப்படும் திரு.நரசய்யா அவர்கள். இவரது ஆய்வில் இந்த நூலைப்போன்றே ஆலவாய் என்ற மற்றொரு நூலும், ஏனைய பல புனைகதைகளும், கட்டுரை நூல்களும் கடித இலக்கிய நூல் ஒன்றும் வெளிவந்துள்ளன. திரு.நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக இருந்து நமது வரலாற்று ஆய்வுப்பணிகளில் தம்மை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைத்துக் கொண்டவர்.

"மதராசப்பட்டினம் - ஒரு நகரத்தின் கதை 1600-1947" என்ற தலைப்பில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் சாந்தோம் அல்லது கோரமண்டலம் எனப்படும் பகுதியைப்பற்றிய அறிமுகமும் வரலாறும், மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் வருகை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நிர்மாணிப்பு சீரமைப்பு அவை பற்றிய ஆவணங்கள், அக்கால வழக்கில் இருந்த நீதிமுறைகள் மற்றும் நீதிபதிகளும் அன்று முக்கியப் பிரச்சனையாக தலைதூக்கிய வலங்கை இடங்கை பிரச்சனைகள் மற்றும் கிறிஸ்துவ மத சம்பந்தமான பிரச்சனைகள் பற்றியும் மதராசில் துபாஷிகள், தொலைப்பேசி பயன்பாடு, பொது போக்குவரத்துப் பயன்பாடு போன்ற தகவல்களும் மதராசப்பட்டினத்தில் நிகழ்ந்த அடிமை வியாபாரமும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் நடத்திய வர்த்தகச் செய்திகளும், மதராசப்பட்டிணத்திற்குப் பெருமை சேர்த்த பெரியோர் மற்றும் பெண் ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்து கல்வி முறை அமைப்பு, மதராசப்பட்டினத்தின் மாநகராட்சி முறை, மதராச பட்டினத்துக் கோயில்கள் மற்றும் ஏனைய சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள், மதராசப்பட்டினத்து சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என பதின்மூன்று அத்தியாயங்களில் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக இந்த நூலைத் திரு.நரசய்யா படைத்திருக்கின்றார்.

இந்த நூலை தாம் எழுத நேர்ந்தமையைப் பற்றியும் இதன் சிறப்புக்களை அவர் விவரிக்கும் பிரத்தியேக ஒலிப்பதிவு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் வரலாற்றுப்பக்கத்தில் உள்ள மதராசப்பட்டினம் என்ற தலைப்பிலான பக்கத்தில் உள்ளது. இந்தப் பேட்டியை தொலைப்பேசி வழியாக  2008ம் ஆண்டில் நன பதிவு செய்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். இந்தப் பேட்டிகளைக் கேட்பதன் வழி திரு.நரசய்யா தம் குரலிலேயே மதராச பட்டினம் தொடர்பான கருத்துக்களை வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதைக் கேட்கலாம்.

மயிலாப்பூர் இன்று கபாலீசுவரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி கோயிலுக்காகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்கின்றது. இதன் அருகில் இருக்கும் சாந்தோம் பகுதி இன்று சாந்தோம் தேவாலயத்தின் புகழைச்சொல்வதாக அமைந்திருக்கின்றது. 16 ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா தலைமையிலான குழு கேப்ரியல் என்ற கப்பலில் பயணித்து இந்தியா வந்தமையைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த முதல் பயணத்தின் பின் மீண்டும் தொடர்ந்த கடற்பயணங்களில் படிப்படியாக வர்த்தக நோக்கத்துடனும் பின்னர் மதம் பரப்பும் நோக்கத்துடனும் போர்த்துக்கீசியர்கள் வருகை என்பது தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்தது. சாந்தோம் பகுதியில் 1522க்கு முன்னர் போர்த்துக்கீசியர்கள் தமது ஆட்சியை நிறுவவில்லை என்ற போதிலும் சாந்தோமிற்கு அருகில் இருக்கும் லஸ் சர்ச் எனப்படும் தேவாலயம் 1516ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே உள்ள சாசனக் கல்லில் உள்ள தகவலின் படி அறிந்து கொள்ள முடிகின்றது.

சாந்தோமைப்பற்றி குறிப்பிடும் போது செயிண்ட் தோமஸ் பாதிரியாரைப்பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியமாகின்றது. ஏசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்கள் பலவாறாகப் பிரிந்து பல தேசங்கள் சென்றதாகவும் அவர்களின் வழி வந்த ஒருவர் இந்தியா வந்து அதிலும் சாந்தோம் என அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்ததாகவும், செயிண்ட் தோமஸ் எனும் அவரது பெயரே சாந்தோம் என மாற்றம் கண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் தாம் என்றாலும் இவை குறிப்பிடப்படவேண்டியனவே என்பதை மறுப்பதற்கில்லை. வரலாற்று ஆவணங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய போர்ச்சுக்கல் மன்னனான இரண்டாம் பிலிப்பின் வேண்டுகோளின்படி, போப் அவர்களால் 1606ம் ஆண்டில் நிறுவப்பட்டதுதான் டயோசிஸ் ஆஃப் சாந்தோம். பின்னர் இப்பகுதிக்குள் மயிலாப்பூரும் இணைந்தது. இந்த டயோசிஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் இருந்த பழைய சர்ச்சுக்களும் இந்து சமயக் கோவில்களும் சமண சமயக் கோயில்களும் இடிக்கப்பட்டன. இங்கு புதையுண்ட பகுதிகளைத் தோண்டியபோது சமணர்களின் நேமிநாதர் ஆலயத்தின் எச்சங்கள் இங்கே கிடைத்தன என்றும் இவை அருங்காட்சியகத்தில் தற்சமயம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அறிகின்றோம். இன்று சாந்தோமில் இருக்கும் கதீட்ரல் 1896ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.

போர்த்துக்கீசியரின் ஆளுகைக்கு ஏறக்குறைய வந்திருந்த சாந்தோம் பகுதி, பின்னர் ஆங்கிலேயர் வசம் கைமாறியது. வணிகர்களாக மதராசபட்டினம் வந்த ஆங்கிலேயர்கள் முன்னர் இங்கே வணிகம் செய்து கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களை விரட்டி விட்டு தமது ஆளுமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டனர். எந்தப் போருமின்றி வணிக முயற்சிகளினால் சிறிது சிறிதாக முன்னேறி மதராசபட்டினத்தைப் படிப்படியாக தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள்.

1600ம் ஆண்டின் இறுதி நாளில் தான் இங்கிலாந்தில் கிழக்கிந்திய கும்பினி உருவாக்கப்பட்டது. 1608ம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் சூரத்தில் கால் பதித்து மன்னர் ஜஹாங்கீரின் ஆசீர்வாதத்தைப் பெற்று தங்கள் வணிகத்தை படிப்படியாக விரிவாக்கினர். பின்னர் தமது திகாரத்தை நிலை நாட்டத்தொடங்கினர். வணிகத்திற்காக தனியே வந்தவர்கள் பின்னாளில் குடும்பத்துடன் வந்து குடியேறவும் தொடங்கினர். அப்படி வந்த ஆங்கிலேயர்களுக்கு முதலில் அவர்களை ஈர்த்தது மதராசபட்டினம் தான்.

கிழக்கிந்திய கம்பெனிகள் அடிமைகளை வாங்குவது விற்பது என்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன. அடிமைகள் வேறு நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாக வணிகப்பொருட்களாக அனுப்பப்பட்டனர். இந்த நூலில்  உல்ள குறிப்புக்களின் படி மதராசப்பட்டினத்தில் இந்த அடிமை வணிகத்திற்கு நல்ல சலுகைகள் இருந்தமையும் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு அடிமைக்கும் சுங்க வரி மதராசபட்டினத்தில் மற்ற கரையோர துறைமுகங்களைக் காட்டிலும் குறைவு என்றும் , இதனைக் கண்காணிப்பவர் ஒரு இந்தியர் என்றும், 1711ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு அடிமை பதிவுக்கும் வரி 6 ஷில்லிங் 9 பென்ஸ் என வசூலிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த வணிகத்தை நடத்தியவர்கள் முக்கியமாக டச்சுக்காரர்கள் என்றும் அவர்கள் மதராச பட்டிணத்தில் உள்ளூர் புரோக்கர்களை நியமித்து அடிமைகளைப் பிடித்து மதராஸ் துறைமுகப்பட்டினம் வழியாக அனுப்பினர் என்னு தகவல்களையும் இந்த நூலில் அறிய முடிகின்றது.

மதராசபட்டினத்தில் பஞ்ச காலத்தில் அடிமை வியாபாரம் என்பது மிக மோசமான நிலையில் இருந்தது. 1646ல் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இந்தோனிசியா சென்றிருக்கின்றது. கிடைத்த ஆவணங்களில் அவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியத் தகவல் தான்.

"இந்தச் சிறிய கப்பலில் 400க்கும் மேலான அடிமைகள் வந்தனர். பசியால் வாடிக்கொண்டிருந்த அவர்கள் நிற்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர். கப்பலிலிருந்த அந்த பலகீனர்கள் தவழ்ந்தே இறங்கினர். பாதி விலைக்குத்தான் அவர்கள் விற்கப்பட்டார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் அவர்கள் தமது நாட்டில் சாவதை விட வெளிநாட்டிலிருந்து கொண்டு அடிமைகளாக வாழ்வதே போதும் எனக் கப்பலில் வந்துள்ளார்கள்".

இப்படி மதராச பட்டினம் பற்றிய பலபல வரலாற்று நிகழ்வுகளைப் பதிந்திருக்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இந்த நூலை வழங்கி இருப்பதோடு விரிவான ஒலிப்பதிவு பேட்டிகளாகவும் பல தகவல்களை திரு.நரசய்யா வரலாற்றுப்பிரியர்களுக்காக வழங்கியுள்ளார். இந்த நூல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாட நூலாக சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு நூல் என்பதே எனது கருத்து. வரலாற்று மாணார்களுக்கு மதராசப்பட்டினத்தை பற்றிய விரிவான புரிதலை இந்த நூல் வழங்கும் என்பதோடு இதே போல ஏனைய நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாகவும் அமையும். இத்தகைய அரிய வரலாற்று முயற்சிகளைப்பற்றி விரிவாக வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்வதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக அமைகின்றது . 

Thursday, November 10, 2016

36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்



இடைவிடாத பணிகளுக்கிடையேயும் தொடர்ச்சியான பயணங்கள் தரும் களைப்பையும் மீறி என் மனதில் புதிய உற்சாகத்தைத் தரும் வகையில் எனது அண்மைய டென்மார்க் வியன் நகருக்கான பயணம் அமைந்திருந்தது. டென்மார்க்கின் வியன் நகரில் நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கலை இலக்கிய விழாவிலும் அதற்கு மறுநாள் நடைபெற்ற இயக்கத்தின் நிர்வாகக்குழு சந்திப்பிலும் கலந்து கொண்டு இன்று பில்லுண்ட் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட ப்ரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸின் வழி இல்லம் திரும்பும் போது இப்பதிவினை எழுதுகின்றேன்.

இந்த ஆண்டு மே மாதம் நான் சில நாட்கள் என் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு டென்மார்க் நகரின் தலைநகரமான கோப்பன்ஹாகனுக்குப் பயணித்திருந்தேன். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமைத்திருந்தேன். கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துச் சுவடிகளையும் ஏனைய சில ஆவணங்களையும் மின்னாக்கம் செய்வது என் நோக்கமாக இருந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் இவை. இவற்றில் முப்பத்தெட்டு ஓலைச்சுவடிக்கட்டுக்களை நான் அப்பயணத்தின் போது மின்னாக்கம் செய்து முடித்திருந்தேன்.அந்த நடவடிக்கைத் தொடர்பான தகவல்களை நான் இணையத்தில் பகிர்ந்து கொண்ட போது அதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் நண்பர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் என்பதோடு, டென்மார்க் கிளையின் பொறுப்பாளர் என்ற பொறுப்பிலும் இருப்பவர் இவர். நவம்பர் மாதம் ஒரு கலைவிழா ஒன்றினை தாம் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடையே இந்த அரிய ஓலைச்சுவடிகளைப்பற்றி நான் செய்திகள் பகிர்ந்து உரையாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முதலே எனக்குத் தெரிவித்து விட்டார். அன்புக்கட்டளை இது. அதிலும் நான் தொடர்ச்சியாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஒரு துறை, இந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழகப்பயணமும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்ப்பணிகளும், அதில் டேனிஷ் அரசின் தாக்கமும் என்பது. ஆக இதனை டென்மார்க் வாழ் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு நிறைந்த மனமகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்பதாலும் ஆர்வத்துடன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

டென்மார்க் 400க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. ஜெர்மனியின் வடபகுதியில் நீண்ட தீபகற்ப நிலப்பகுதியும்,, ஓடென்சீ என்ற தீவும் கோப்பன்ஹாகன் இருக்கும் மற்றொரு தீவும் பூகோள வரைபடத்தில் அடையாளங்களான பெரிய நிலப்பகுதிகள். இந்தப் பெரிய நிலப்பகுதிகளுக்குச் சுற்றுப்புரத்தில் பல தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.

டென்மார்க்கின் மக்கள் தொகை ஏறக்குறைய 6 மில்லியன் தான். இதில் தமிழ் மக்கள் 11,000 பேர் வாழ்கின்றனர். டென்மார்க் தமிழர்கள் ஏறக்குறைய அனைவருமே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள்தான்.தாயகமான  இலங்கையில் போர் ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு நாடு கிடைக்குமா எனத்தவித்த சில தமிழ் மக்களுக்கு டென்மார்க் நல்லதொரு புகலிடமாக அமைந்தது. தாயகத்தின் மனித உரிமை மீறல்கள் டென்மார்க்கின் குளிர் சீதோஷ்ண நிலையை மக்கள் மறந்து தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டு தொடர வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்துள்ளது. போர்க் காலத்தில் வந்தவர்கள் மட்டுமன்றி அதற்கும் முன்னரே தொழிற்துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் எனச் சிந்தித்து டென்மார்க் நோக்கி வந்து பின்னர் இந்த நாட்டின் நிலை பழகிக்போக இங்கே தங்கள் குடும்பங்களை அமைத்து டென்மார்க்கிலேயே நிரந்தரமாகக் குடியேறிய தமிழர்களும் இங்கு கணிசமாக இருக்கின்றனர்.

தாயகத்தில் பழகிய சுற்றத்தார் இல்லை; அன்றாட வாழ்வில் அங்கமாகும் உணவு, வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் பழகிய பண்பாட்டு அடையாளங்களை விட்டு புதிதாகக்குடியேறிய நிலத்திற்குச் சொந்தமான அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டு தங்கள் புதிய வாழ்க்கையை இங்கு டென்மார்க் மட்டுமல்ல, உலகின் எந்தெந்த நாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனரோ அங்கெல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது.தமிழர் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ விரும்பினாலும் புதிதாக வந்து குடியேறியுள்ள நாட்டின் சீதோஷ்ண நிலையின் தன்மைக்கேற்பவும் வாழ வேண்டிய சூழலில் இருப்பதாலும் துரித வாழ்க்கையில் பொருளாதாரம் ஈட்ட பல்வேறு வகையான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும் தாங்கள் வாழும் இடத்திற்கேற்ற குளிர்கால உடையணிந்து வாழ வேண்டிய நிலைதான் உள்ளது.  இத்தகைய சூழலில் தாயகத்தில் போர் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் காயங்களாக மனதில் மறையாத நிலையிலும் வாழ்ந்து பழகிய சூழல் கொடுத்த இயல்புத்தன்மை இழந்த நிலை புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்குமே ஒரு தீராத ஏக்கம் தான். இந்தச் சூழலுக்கு நிரந்தரத்தீர்வு என்று ஒன்று இல்லாத போதிலும் அதன் ஏக்கத்தைக்குறைக்கும் ஒரு வழியாக தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் என்பன அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்றன. இப்படித் தமிழ் மக்கள் ஒன்றுகூடும் போது தமிழர் பாரம்பரிய ஆடைகள் அணிவதும், தமிழர் கலை கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இசை, கூத்து நடனம் என மகிழ்வதும், தமிழில் பேசி மனம் மகிழ்வது என்பதுவும் வடிகாலாக அமைகின்றன.

உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளை நடத்திய கலை இலக்கிய விழா இந்தச் சூழலை மிகத் தெளிவாகக்காட்டும் கண்ணாடியாக அமைந்திருந்தது. இதில் முக்கிய அம்சங்களாக உலகின் பல நாடுகளில் சிதருண்டு கிடந்தாலும் தமிழால் இணைந்த கலை ஜாம்பவான்கள், வந்து கலந்து கொண்டதும், உலகத் தமிழருக்குத்தேவையான தகவல்கள் சொற்பொழிவுகளாக வழங்கப்பட்டமையும், புலம்பெயர் வாழ்வில் பலருக்கு அமைந்த அல்லல்களை வெளிப்படுத்தும் குறும்படம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழரின் தாயகம் எது என்ற கேள்வி இத்தகைய சூழலில் நம் முன்னே நிற்கின்றது.

புலம் பெயர்ந்து வந்துவிட்ட சூழலில் புதிய நிலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்கின்ற நாடே தாயகமாகின்றது. தமிழ்மொழி அறிவினைச் சில குழந்தைகள் பெற்றோரிடம் கற்கின்றனர். தனி நபர்களும் தமிழ்ச்சங்கங்களும் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கின்றனர். ஆயினும் கூட தமிழ்மொழியில் ஆர்வம் என்பது ஒரு சிலருக்கே ஏற்படுகின்றது என்பதோடு அதனைப் பயன்பாட்டில் கொள்வதும் குறைவாகவே உள்ளது என்பது நிதர்சனம்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றனர் தமிழ் நாட்டுத்தமிழர்கள் என வருந்தும் அதே வேளை, டோய்ச் கலந்த தமிழ், பிரன்சு கலந்த தமிழ், இத்தாலி கலந்த தமிழ், ஸ்பேனிஷ் கலந்த தமிழ், டேனிஷ் கலந்த தமிழ் எனத் தமிழ் மொழி பேச்சு வழக்கில் கலவையின் பிரதிபலிப்பாக ஒலிக்கும் நிலையைப் பார்க்கத்தான் செய்கின்றோம்.

இந்தச் சூழலில் தமிழ் மொழி பயன்பாடு, தமிழர் வரலாற்றில் ஆர்வம், தமிழர் மரபைக்காத்தல் என்பன எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்த வண்ணமே இருக்கின்றது.

டென்மார்க்கை பொறுத்தவரை இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இளம் வயதில் இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த குழந்தைகளும் இங்குள்ள சூழலுக்குள் தங்களை முழுதும் ஐக்கியப்படுத்திக்கொண்டு விட்டனர்.தாயகத்தைப்பிரிந்த துயரம் என்பது அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக இல்லை ஆனால் தம் பெற்றோரின் தாயகம் இலங்கை அல்லது இந்தியா என்ற சிந்தனை மட்டும் மனதில் இருக்கின்றது. தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் முழுமையான பிரஜையாக அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தம்மை உயர்த்திக் கொள்தல் என அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு  வாழ்க்கையில் வெற்றி காண வேண்டியது அவசியம். அதே வேளை தங்கள் தமிழர் மரபை மறவாத தமிழ்மக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போது அனைத்துலகத் தமிழர்களாக மாறியுள்ளனர். இவர்களது கலாச்சாரமானது தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கலாச்சாரத்தையும் பண்புகளையும் உள்வாங்கியதொரு கலாச்சாரமாக புது வடிவமெடுத்துள்ளது. இது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே.மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் மனித வாழ்க்கை. மாற்றங்கள் தரும் சவால்களும் அதன் வழி நாம் பெறும் பரிணாம வளர்ச்சியும் தான் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படிப்பார்க்கும் போது டென்மார்க்கின் இரண்டாம் தலைமுறை ஆரோக்கியமானதொரு பாதையில் நடைபோட்டுச் செல்வதை நான் காண்கின்றேன். அத்தகைய சூழலில் அவர்களுக்குத் தொடர்ச்சியாக தமிழர் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றையும், தமிழ் மொழியின் சிறப்புக்களையும் வழங்க வேண்டியது பெற்றோர் கடமை என்றாலும், உலகளாவிய சமூக இயக்கங்களின் பங்கும் இதில் முக்கியப் பங்களிக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்த வகையிலான நோக்கத்தை முன்னெடுத்துத்தான் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறவேண்டும். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இந்த இயக்கம் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அன்றாட அலுவல்களுக்கிடையேயும் தமிழ் மொழி கலை கலாச்சாரம் என நினைத்து, தாய்மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்க விழா எடுத்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக இரவு பகல் பாராது, பசி தூக்கம் பாராது, வந்திருந்த அனைத்துப் பேராளர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து சிறப்பு செய்த திரு.தர்மகுலசிங்கம்-பவானி தம்பதியரின் சேவையை வாழ்த்தி மகிழ்கின்றேன். இக்கலைவிழாவில், என்னைச் சிறப்பித்து ”தமிழ் மரபு நட்சத்திர நாயகி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர் டென்மார்க் கிளையினர். அவர்களது ஆர்வத்தைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன். 

Thursday, November 3, 2016

35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்




தமிழகத்தில் எனக்குத் தனிப்பட்ட வகையில் என் மனதைக் கவரும் சில ஊர்கள் உண்டு. அதில் காரைக்குடியும் அடங்கும்.

2012ம் ஆண்டு தான் முதன் முறையாக காரைக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதனை முடித்து சில வரலாற்றுப் பதிவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்கள் காரைக்குடியில் இந்தப் பயணத்தின் போது நான் இருந்தேன். எனது காரைக்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாளில் சில இடங்களுக்குச் சென்று வரலாற்றுப்பதிவுகள் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தப் பயணத்தின் போது முழு ஏற்பாட்டு உதவிகளையும் நண்பர் முனைவர். காளைராசன் செய்து உதவினார். அன்று மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே திரு.காளைராசன் எடுத்து வைத்திருந்தார். ஆக இரவு எட்டுக்குள் அருகாமையில் உள்ள ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாற்றுப் பதிவுகள் செய்து வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.

இருக்கின்ற நேரத்தில் எங்குச் செல்லலாம் என யோசித்த போது தகுந்த இடங்களைக் கண்டறிய வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். அருகாமையில் உள்ள சில இடங்களைப் பரிசீலித்தோம். திருப்பத்தூர் செல்லலாமா என்ற எண்ணமும் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். எங்களுடன் இப்பயணத்தில் இனைந்து கொண்ட பேரா.முனைவர்.நா.கண்ணனுக்கு அவரது சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது. பயணம் எங்குச் செல்வது என முடிவானதும் சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி. டாக்டர்.வள்ளி இப்பகுதியில் கல்வெட்டாய்வுகள் செய்தவர் என்பதனை இவ்வேளையில் குறிப்பிடுவது அவசியம்.

திருமலை என்ற ஊரின் பெயரைக் கேட்டால் பெரும்பாலோர் குழம்புவது இயல்புதான்.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருமலையோ என சிலர் நினைக்கக்கூடும்.
இன்னும் சிலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமணத்தலமோ என்றும் நினைக்கலாம். ஆனால், இந்தத் திருமலை இருப்பது காரைக்குடிக்கு ஏறக்குறைய 49 கிமீ மேற்குப்பக்கத்தில். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் பட்டி வந்து பின்னர் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய நகரங்களைக் கடந்து வந்தால் திருமலையை வந்தடையலாம். திருமலையை நாங்கள் வந்தடைவதற்குச் சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் செபயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் இது. வயல்வெளியின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு இதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள். தாமரை மலர்கள் நிறைந்த குளம். அக்குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி நகரங்களின் சாயம் ஏதும் பூசப்படாத எளிமையான கிராமம் தான் திருமலை.

தமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். இந்தத் திருமலைப்பகுதியில் இந்தப் பதிவின் போது நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவுகளாக குறிப்பிடத்தக்க விசயங்களைப் பதிந்து வந்து வெளியீடு செய்தேன். அதில்


  • பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் 
  • மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில் 
  • குகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் 
  • மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன் 
  • கோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள் 
  • பாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள் 
  • அங்குச் சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள் 
  • அந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம் 

என்பன இடம் பெற்றிருக்கின்றன.

எங்களின் இந்தக் களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)

முதலில் கோயிலுக்குள் சென்று இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம். டாக்டர்.வள்ளி கால் வலியினால் வருந்திக்கொண்டிருந்தமையினால் அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்து இணைந்து கொண்டனர். முதலில் கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இப்படித்தான் பல முறை எனது களப்பணிகளில் நிகழ்ந்துள்ளது. நான் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஆர்வத்துடன் இப்பதிவுகளைக்கவனிக்கும் சிறார்களும் இளையோரும் பெரியோரும் தாமும் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் கதைகளையும் சொல்லிக் கொண்டே வருவார்கள். சிலர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்கள். எப்படியாகினும் அன்று என்னுடன் வந்து இணைந்து கொள்வோர், ஏதாவது ஒரு வகையில் தாமும் புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை புரிந்துகொள்வர்.

பாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாகப் பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.

முதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் அதே ஆண்டு கிருஷ்ணகிரியில் பார்த்த வகையில் அமைந்த குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை பதித்த உருவங்கள் வரையப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற மனித வடிவங்கள் அவை. எகிப்தில் இரண்டு வாரக் கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்தமையால் இந்த உருவங்கள் அதே வடிவில் இருப்பதை உணர்ந்தேன். வித்தியாசம் இல்லாமல் அதே வகையிலான உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாகக் கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள் பாறைகளில் இருந்தன. ஆச்சரியப்பட்டுப் போனேன்.

பின்னர் அவற்றைப் பார்த்து அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டுமேலும் நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள் இருந்தன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம். மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடியச் செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.

சமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் அங்கு வரும் மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை? நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்? எனச் சொல்லி வருந்தினோம்

இப்படி யோசித்து பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.

அப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம். எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குரிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனைக் கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.

அவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.

நாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

நாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.

நான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தைக் காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படிவரலார்றுத் தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.
பாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் திரு.காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்!

அவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர். இதனைப் பற்றிய விபரங்களை மற்றொரு பதிவில் விளக்குகின்றேன். 

Thursday, October 27, 2016

34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்



தாயகத்திலிருந்துப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்சமயம் உலகமெங்கும் வாழ்கின்றனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி நமக்குக் காலம் காலமாக நன்கு பரிச்சயமான ஒன்று தான். இன்று நாம் கடல் மார்க்க பயணங்களைப் பற்றிப் பேசுகின்றோம். இன்றைக்கு சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களான கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணத்தையும், வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணத்தையும் ஜேம்ஸ் குக் மேற்கொண்ட கடற்பயணங்களையும் பற்றி நாம் நிறைய வாசித்திருப்போம். இத்தகைய விரிவான கடற்பயணங்களை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பண்டைய தமிழ்மக்கள் மேற்கொண்டனர் என்பதற்குச் சான்றாக பல தொல்லியல் அகழ்வாழ்வுகள் நமக்குச்சான்றுகளைத் தருகின்றன. இப்படிப் பயணித்த ஐரோப்பியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் தக்க முறையில் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தி, பாதுகாத்து வந்தமையால் அவர்களது பயணங்களும் அவை நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் உலக அளவில் எல்லோரும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக அமைந்துள்ளன,

ஐரோப்பியர்கள் போல தமிழர்கள் கடற்பயணம் மேற்கொள்ளவில்லையா? எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் இருப்போம். அப்படி எழும் கேள்விகளுக்கு விடைக்கான முற்படும் போது சிதறல்களாக பலபல தகவல்கள் நமக்கு ஆய்வுகளில் கிட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வுகளே இத்தகைய முயற்சிகளுக்கு பெரும் வகையில் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. அதோடு ஏனைய நாட்டிலிருந்து வந்து சென்ற வணிகர்களின் குறிப்புக்களிலிருந்து அக்காலச் சூழலை அறியக்கூடியதாக் இருக்கின்றது.

பொதுவாகவே தமிழகம், தமிழர் நாகரிகம் என ஆராய முற்படுபவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது ஆவணச் சான்றுகளே. தகவல்களை முறையாகக் குறிப்பெடுத்து எழுதி வைக்கும் பழக்கமும், ஆவணப்படுத்தும் எண்ணமும் பதிந்து வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் தமிழர் மரபில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் பல நூல்கள், அவற்றை எழுதியவர் யார் என்றே தெரியாத ஒரு நிலையும் இருப்பதை ஏடுகளை வாசித்தறிவோர் பலர் அனுபவித்திருக்கலாம். இத்தகைய போக்குகள் வரலாற்றாய்வாளர்களுக்குப் பெரும் சோதனைகளாக அமைந்து விடுகின்றன. ஔவையார்களில் பல ஔவைகள், அதியமான்களில் பல அதியமான்கள், கபிலர்களில் பல கபிலர்கள் என ஒன்றிற்கு மேல் என ஒரே பெயரில் சிலர் குறிப்பிடப்படுவதும், அவை உருவாக்கப்பட்ட காலநிலையை சரிவரக்கணிப்பதில் அவை ஏற்படுத்தும் சிக்கல்களையும் பற்றி நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இதே நிலை தான் கடல்சார் பயணங்களிலும் எனலாம். நமக்குத் தமிழ் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய சான்றுகள் என்பன அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் தான் என்று அமைகின்றன. உதாரணமாக, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அண்மைய கால கீழடி அகழ்வாய்வுகள் ஐரோப்பியர்கள் இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டமையை எப்படி சான்று பகர்கின்றனவோ,  அதே போல, கிரேக்கம், துருக்கி, போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களின் ஓடுகளும் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அக்காலத் துறைமுகப்பகுதிகளிலிருந்து விரிவாகப் பயணித்து கிழக்காசிய நாடுகளில் வணிகத்தையும் பௌத்த, இந்து சமயத்தைப்பரப்பியதன் விளைவை அந்த நாடுகளில் இன்றளவும் காண்கின்றோம். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டாலோ காலம் காலமாக கடற்பயணங்களின் காரணத்தால் தமிழ் மக்கள் ஐரோப்பிய பெரு நகரங்களுக்கு வந்து சென்றிருக்கின்றனர்; ஒரு சிலரோ இங்கே தங்கி உள்ளூர் மக்களுடன் மக்களாகக் கலந்து தங்கிவிட்டனர்;

பிரான்சை எடுத்துக் கொண்டால் கடந்த முந்நூறு ஆண்டுகளில் இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்தும் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக வந்து இங்கே வாழ்கின்றனர். இன்றளவும் இப்படிப்புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றது. அப்படிப் புலம்பெயர்ந்து பிரான்சு வந்தவர்கள் பெருவாரியாக இருப்பது பிரான்சின் தலைநகரமான பாரீசில். ஆயினும் பாரிசுக்கு வெளியே ஏனைய பெரு நகரங்களிலும் பாரிசுக்கு வெளியே கிராமங்களிலும் தமிழர்கள் குடியிருப்பு என்பது பெருகி உள்ளது. தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு காண வேண்டும் என்ற சிந்தனையை மனதில் கொண்டு புலம் பெயர்ந்தாலும் புதிதாகத்தாம் பெயர்ந்த நிலப்பகுதியில் தங்கள் பண்பாட்டு மரபு, மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரிய ஒரு விசயமே.

அப்படியொரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கடந்த வாரம் கிட்டியது. பாரீசிற்கு வெளியே தெற்கே புறநகர்ப்பகுதியில் இருக்கும் எவ்ரி கிராமத்தின் கலை கலாச்சார மன்றம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் கடந்த 23ம் தேதி அக்டோபரில் நிகழ்த்தியது. இதில் சிறப்பு சொற்பொழிவை வழங்க இந்த அமைப்பு என்னை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வில் அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ்த்தொண்டு செய்யும் பத்து புலம்பெயர்ந்த தமிழர்களைக் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் என்னையும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிக்காகக் கவுரவித்துச் சிறப்பித்தார்கள். புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் மொழி, கலை, மரபுகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களை  எடுத்துக் கூறி எனது சொற்பொழிவு ஒன்றினையும் இந்த நிகழ்வில் நிகழ்த்தினேன்.


ஒரு இனத்தின் அடையாளமாக இருப்பவை அந்த இனத்தின் பண்பாட்டுக்கூறுகளாக அமைந்திருக்கும் உடை, உணவு, சடங்குகள், மனித உறவுகளுக்கு இடையிலே நிலவும் தொடர்பு, குடும்ப அமைப்பு , தொழில்கள், தத்துவம், இறைவழிபாடு என்பன. தாயகத்தில் பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியுற்று, நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் அங்கம் வகிப்பது இப்பண்பாட்டுக் கூறுகளே. இயல்பாக நம் தாயகத்தில் நமக்கு அமைந்திருக்கும் இக்கூறுகள் தாய் நிலம் விட்டுப் பெயர்ந்து புலம் பெயர்ந்து புதிய நாடுகளுக்கு வரும் போது கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அதுவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் எனும் போது இது வேறு விதமாகவே அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கூறுகளாக இருப்பவை அவர்கள் திருவிழாக்களில் அல்லது தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் அணியும் உடைகள், தமிழ்ச்சினிமா பாடல்கள், ஆடல்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அமைந்துவிடுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் நிகழ்கின்ற ஏறக்குறைய 95% தமிழ் நிகழ்வுகள் சினிமா பாடல்களையும், ஆடல்களையும் நடிக நடிகையர்களையும் முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சினிமா ஊடகம் என்பது மட்டுமே தமிழர் அடையாளத்தை உலகளாவிய வகையில் எடுத்துச் சென்றிருக்கின்றது. இதனைச் செய்வதில் தான் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சாதனைப்புரிந்திருக்கின்றார்கள் எனக் கருத வைக்கின்றது நாம் காணும் நிகழ்வுகள். இது ஆரோக்கியமான ஒரு விசயமல்ல. திரைப்பட பாடல்களும், அதில் கூறப்படும் விசயங்களும் ஆடல்களும் மட்டும் தமிழ்க்கலாச்சாரத்தின் பிரதிநிதிகளல்ல. அயல்நாடுகளில் வாழும் போது பிள்ளைகளுக்குச் சரியாக தமிழ் மொழியையும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டு சேர்க்க முடியவில்லையே என வருந்தும் அனைவரும் தாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழி தொடர்பான விசயங்களில் தம்மை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டிருக்கின்றோம்? எத்தனை நூல்களை வாசிக்கின்றோம்? எத்தகைய நூற்களை வாசிக்கின்றோம்? எத்தகைய தன்மை கொண்ட தமிழ் மொழி தொடர்பான விசயங்களைக் கலந்துரையாடுகின்றோம் என தம்மைத்தாமே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் வளர்க்க முனையும் நாம் ஒவ்வொருவரும் நம்மை, நம் தமிழ் மொழி அறிவை விசாலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்வதும் அவசியமே..

பிரான்சைப் பொறுத்தவரை இங்கே தமிழ் மக்கள் என்றால் அது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பாண்டிச்சேரி தமிழ் மக்களாக இருப்பர் ; அல்லது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களாக இருப்பர். இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே நட்பு பாராட்டுதல் என்பது நல்ல முறையில் இருந்தாலும், தமிழ் இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்மன்றங்கள் என்பன தனித்தனியாகத் தான் இயங்குகின்றன. இலங்கைத்தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் அல்லது பாண்டிச்சேரி தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் என இரு பிரிவாகத்தான் தமிழ் மக்கள் இங்கே பொதுத்தளத்தில் செயல்படுகின்றனர், ஒரு சில  விதிவிலக்குகளைத்  தவிர்த்து. இது இக்காலத் தலைமுறையினருக்கு அதிலும் குறிப்பாக அன்னிய நாட்டில் தமிழ் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைய விரும்பும் இளையோருக்குக் குழப்பத்தை நிச்சயம் மேற்படுத்தும் ஒரு செயல்பாடாகத்தான் அமையும். இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரிவினைப்   படிப்படியாக ஏற்படுத்தக்கூடிய பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு சங்கங்கள் இயங்க வேண்டும். இது, இத்தகைய சங்கங்களை நடத்துவோர் முன் நிற்கும் பெரும் உளவியல் சவாலாகவே நான் காண்கின்றேன்.

இத்தகைய விசயங்களை அவதானித்து, தமிழர் என்ற ஒரு இன அடையாளத்தைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று கூட வேண்டும். ஒற்றுமையே பலம். இதனை வாய்ச்சொல்லில் சொல்லி மகிழ்வதை விடச் செயலில் நடத்திக் காட்டி தமிழராகச் சாதனைகளை அயலகத்திலும் நாம் புரிந்து மேன்மை அடைய வேண்டும்!

Wednesday, October 19, 2016

33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை




தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்து 17ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்து வந்த பாதையில் ஏராளமான களப்பணிகள் நமது சான்றுகளாக நமது வலைப்பக்கத்தில் நிறைந்திருக்கின்றன. நேரடி களப்பணிக்குச் சென்று வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி அவற்றை வெளியிடுவதும் அவை தொடர்பான கலந்துரையாடலை வளர்ப்பது, தக்கச் சான்றுகளை மையமாக வைத்து ஆய்வுகளை மேற்கொள்வது என்பது எமது தலையாய பணியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் கருத்தரங்கங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுதல், மின்னாக்கப் பட்டறைகளை ஏற்பாடு செய்து மாணவர்களும், ஆர்வலர்களும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் வாய்ப்புக்களை அமைப்பது என்ற ரீதியில் பல நிகழ்வுகளை நாம் செய்து முடித்துள்ளோம். அத்தகைய ஒரு நிகழ்வினைப் பற்றியதுதான் இன்றைய இந்தப் பதிவு.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் பலர் வாழும் நாடுகளும் ஒன்று சுவிஸர்லாந்து. இந்த சுவிஸர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்று சூரிச். சுற்றுலாத்தலம், வர்த்தகப் பெருநகரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் வாழும் நகர் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட நகரம் சூரிச். இங்கே 2008ம் ஆண்டில் தமிழ்மொழியில் கணினிக்களம் என்னும் ஒரு அமைப்புடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து 'அறிவியல் அரங்கம்' எனும் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். சுவிஸர்லாந்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆர்வம் உள்ள தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அறிவியல் அரங்கம் என்று அறிவித்த பின்னரும், கூத்து, பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் இருக்காது என்று தெரிந்தும் 100 பேருக்கு மேல் தமிழ் ஆடவர், பெண்கள், சிறுவர்கள் என பெருவாரியாகப் பல இந்த நிகழ்விற்கு வந்திருந்தது கலந்து கொண்டனர்.

மாலை 3 மணிக்கு முதலில் தொடங்கிய சொற்பொழிவு நிகழ்வு மாலை 6 மணிக்கு முடிந்த பின்னர் ஓரு கணினித்தமிழ் தொடர்பான இணையப்பட்டறையையும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது இரவு 10 மணி வரை நடைபெற்றது. வந்திருந்தோர் ஆர்வம் குறையாது, மிகப் பொறுமையாய் இருந்து நாங்கள் வழங்கிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு
கேள்விகள் கேட்டு பின் 'மீண்டும் இது போல் ஓர் நிகழ்வு' சுவிட்சர்லாந்தில் நிகழ வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தமை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அமைந்தது.

1990ம் ஆண்டுகளின் ஆரம்பம் தொடங்கி இணைய உலகில் தமிழ்ப்பயன்பாடு என்பது மிகத் தீவிரமாக வளர ஆரம்பித்த காலம் மிகச் சுவாரசியமான நிகழ்வுகள் அடங்கிய காலம். ஒருங்குறி எழுத்துருக்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில் சில தனி நபர்களின் முயற்சியில் கணினி பயன்பாட்டிற்கான தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் கண்டன.  அச்சமயம் எனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்து மலேசியாவில் ஒரு கல்லூரியில் கணினித்துறை விரிவுரையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மலேசிய, சிங்கையில் திரு.முத்து நெடுமாறன், திரு கோவிந்தசாமி, தமிழ்னெட் நிறுவனர் பாலாபிள்ளை மற்றும் பலர் எழுத்துவாக்கம், இணையப் பதிப்பு என முயன்று கொண்டிருந்த வேளையில், ஐரோப்பாவில் மதுரைத்திட்டம் என்ற ஒரு கருத்தினை சில நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி அதனைச் செயல்படுத்திக் கொண்டிருந்த முனைவர்.கு.கல்யாணசுந்தரம், மற்றும் முனைவர்.நா.கண்ணன் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான் ஐரோப்பாவிற்கு மாற்றலாகி வந்த பின்னர் தமிழ்க்கணினி தொடர்பான எனது முயற்சிகள் இவர்களுடன் இணைந்ததாகவே அமைந்திருந்தது. தமிழ் நூல்கள் பாதுகாப்பு என்பது பற்றி அச்சமயத்தில் விரிவாக உரையாடியிருக்கின்றோம். அப்படித் தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடல்களின் வழியாகத் தமிழ் நூல் மின்னாக்கம் தொடர்பான பல முயற்சிகள் பற்றிய கருத்துருவாக்கங்கள் 2000ம் ஆண்டின் தொடக்கம் தொடங்கி நிகழ்ந்தன. அதில் என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் தமிழ் மரபு அறக்கட்டளையின் உருவாக்கத்தில் இணைந்தவர்கள். 2001ம் ஆண்டு கருத்தளவில் தொடங்கி பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மரபு அறக்கட்டளையில் தொடங்கப்பட்டன. அது இன்று மேலும் செப்பனிடப்பட்ட வகையில் சீரிய பல முயற்சிகளை உள்ளடக்கியதாக வடிவெடுத்துத் தொடர்கின்றது.

அந்த வகையில் இந்த சூரிச் நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதினிதித்து என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவினையும் கணினிப்பட்டறையையும் நடத்தி முடித்தோம். அது ஒரு இனிமையான நிகழ்வாகவே அமைந்திருந்தது.

தமிழில் 'அறிவியல் அரங்கம்' என்ற பெயரைக் கேட்டதும் பொது மக்கள் வந்து கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எங்களுக்கு எழாமலில்லை. இந்த நிகழ்ச்சியின் முழு ஏற்பாட்டுப் பொறுப்பினையும் கணினிக்களம் மாத சஞ்சிகையின் ஆசிரியர் திரு.நாகந்தனும், சூரிச் திரு.சரவணபவானந்த குருக்களும் ஏற்று திறம்பட இந்த நிகழ்வை நடத்திக்காட்டினர். புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் தமிழ் நிகழ்ச்சிகள் என்றால் நடனமும், பாடல்களும் சினிமா துறை சார்ந்த நிகழ்வுகளும் தான் இருக்கும் என்ற பொதுவான நம்பிககியை உடைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்பசமாக இரண்டு விஷயங்களை உட்புகுத்தியிருந்தோம். முதலாவது நோக்கம், கணினிக்களம் என்ற மாத சஞ்சிகையினை அறிமுகம் செய்தல். அடுத்தது, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியவற்றின்தமிழ்க்கணினி சார்ந்த முயற்சிகளைச் சூரிச் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகியன.

கணினிக்களம் மாத சஞ்சிகையைப் பற்றிய ஆய்வுரையாக எனது உரையும் முனைவர்.கு.கல்யாணசுந்தரத்தின் உரைகளும் அமைந்திருந்தன. அதனூடாக, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியற்றைப் பற்றிய தகவல்களையும் இணைத்து வழங்கினோம். மூன்றரை மணி நேரப் புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் சிறிய ஓய்வுக்குப் பின்னர் மாலை ஏழு மணிக்கு இரண்டாம் பகுதியாகியக் கணினி பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முனைவர்.நா.கண்ணனின் பொது விளக்கத்துக்குப் பின்னர், நான் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப் பணிகள் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கினேன். எவ்வகையில் மின்னாக்கப் பணிகள் அச்சுப் பதிவு, ஓலைச் சுவடியை வருடிப் பாதுகாத்தல், மற்றும் ஒலிக் கோப்புக்களைச் சேகரிக்கும் முறைகள் எனத் தொழில்நுட்ப விஷயங்களை என் உரையின் போது பகிர்ந்து கொண்டேன். அடுத்ததாக முனைவர்.கு.கல்யாணசுந்தரம் மிக விரிவாகக் கணினியில் தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சியைப் பற்றி, 1997 முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பற்றிய தகவல்களை வழங்கினார். ஏறக்குறை இரவு 9:45க்கு கேள்வி பதில் அங்கம் ஆரம்பித்து மேலும் அறை மணி நேரத்திற்குப் பின்னர் இந்தப்பட்டறையை நிறைவு செய்தோம்

சூரிச் நண்பர் திரு.மலைநாடன் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். அவரது தொடர்ந்த பணிகளுக்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து செயலாற்றியமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சி நல்ல முறையில் ஏற்பாடாகி நடைபெற்றது என்பது ஒரு புறமிருக்க இணையத்தின் வழியும் தொலைப்பேசி வழியும் மட்டுமே தொடர்பில் அறிமுகமாகியிருந்த ஐரோப்பிய வாழ் நண்பர்கள் சிலரை இந்த நிகழ்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. சூரிச் நகரில் இது ஒரு மிகப் புதிய நிகழ்வு. மேலும் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடை பெறும் போது ஐரோப்பியவாழ் இளம் தலைமுறையினருக்கு தமிழ்க்கணினி, வரலாறு தொடர்பான விஷயங்களில் நல்ல அறிமுகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இலங்கை மற்றும் தமிழாக்த்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நிகழ்வுகள் என்றால் பெரும்பாலும் நடனம் இசை, திரைப்பட துறைச்சார்ந்த நிகழ்வுகள் என்பனவே பெருவாரியாக ஆக்கிரமித்திருக்கும் நிலையை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் கூடத் தொடர்ந்து தொய்வில்லாது, பல தன்னார்வலர்களும் இயக்கங்களும் தமிழ் மொழி தொடர்பான, நிகழ்வுகளைச் செய்து இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழி அன்னியப்பட்டுவிடாத வகையில் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்பன ஐரோப்பாவின் பெருநகர்களான லண்டன், பாரிஸ், டூசல்டோர்ஃப், பெர்ன், ச்சூரிச், பெர்லின் போன்ற நகரங்களில் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன . இவை பாராட்டுதலுக்குரிய முயற்சிகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவையே இங்கே ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு தக்க வகையில் தமிழ் மொழி மற்றும் வரலாறு சார்ந்த பற்றுதலையும், ஆர்வத்தையும் கொண்டு செல்லக் கூடிய முயற்சிகளாக நான் காண்கின்றேன்.

அத்தகைய சீரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைக்கும் அனைத்து ஐரோப்பிவாழ் தமிழ்ச்சங்கங்களுக்கும் தனி நபர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகுக! 

Wednesday, October 12, 2016

32.பேராசிரியர்.டாக்டர்.ரெ.கா



திங்கட்கிழமை காலை எனக்கு மலேசிய நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என் இளம் வயது முதல் நன்கறிந்த நண்பர், பேராசிரியர்.டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தான் அது. 

பினாங்கு எழுத்தாளர் சங்கம் எனக்கு மலேசிய தமிழ் இலக்கிய ஆளுமைகளை இளம் வயது முதல் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கியிருந்தது. என் தாயார் ஜனகா சுந்தரம் அவர்கள் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவைக்குழுவில் இருந்தவர். என் இளம் வயது முதலே இந்தச் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய பல தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் நான் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அதில் என் அன்னையார் வழியாக நான் அறிந்து கொண்டவர்களில் ஒருவர் தான் பேராசிரியர். டாக்டர். ரெ,கா அவர்கள். 

சுங்கைப்பெட்டாணி நகரில் பிறந்து மலேசியாவில் உயர்கல்வியை முடித்து பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் இவர். பல்கலைக்கழகப்பணி மட்டுமே என்றில்லாது தனது ஆர்வத்தைச் சமூக நலனை முன்வைத்து, பினாங்கில் இயங்கிய அமைப்புக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் டாக்டர்.ரெ.கா. மலேசிய இந்து சங்கம், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆகியவை இவற்றுள் சில. 

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தமிழ்ப்பிரிவு நடத்திய பல கருத்தரங்கங்களில் டாக்டர். ரெ.கா அவர்களது சொற்பொழிவுகளை நான் கேட்டிருக்கின்றேன். அம்மாவின் சொற்பொழிவுகளும் பேராசிரியர் ரெ.காவின் சொற்பொழிவும் என்னை பொதுப்பேச்சுக்களுக்குத் தயார் செய்ய ஒரு வகையில் உதவின என்பதை என்னால் மறுக்கமுடியாது. ஆங்கிலச் சொற்கள் கலக்காது சரளமாகத்தமிழ் பேசும் கலையை இவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன். மிகத்தெளிவான உச்சரிப்புடன், மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆய்வு நெறியை மனதில் வைத்தும் இவரது சொற்பொழிவுகளும் கருத்தரங்க உரைகளும் இருக்கும். 

தமிழ்மொழி மட்டுமன்றி இசை, நடனம் என பாரம்பரியக் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவராக டாக்டர்.ரெ.கா அவர்கள் திகழ்ந்தார்கள். பாரம்பரிய கர்நாடக இசைப்பிரியர் இவர். இசையின் மீதிருந்த தீராத ஆர்வத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாவிற்குத் தவறாமல் சென்று விடுவார். அவ்வப்போது நான் தொலைப்பேசி வழியாகப் பேசும் போது தான் கேட்டு மகிழ்ந்த இசைக் கச்சேரிகள், கீர்த்தனைகள் பற்றி என்னிடம் அவர் பேசியதும் உண்டு. 

தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்திலிருந்து இந்த அமைப்பின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். 2001ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தேவைபற்றி பேசி அதனை நிலையான ஒரு அமைப்பாக உருவாக்கினோம். அன்று தொடங்கி இன்று வரை எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் அங்கம் வகித்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். 

மலேசிய வரலாறு, அதிலும்குறிப்பாக தமிழ் இலக்கிய வரலாறு எனும் போது டாக்டர்.ரெ.கா அவர்களது நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனதுண்டு. அவரது அனுபவங்களையெல்லாம் பதிந்து வைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் மலேசியாவிற்கு இருவார விடுமுறைக்குச் சென்றிருந்த போது அவரை ஒரு விழியப் பதிவு பேட்டி செய்ய விரும்புவதாகச் சொல்லி 20ம் நூற்றாண்டு மலேசியா பற்றி விவரிக்கச் சொல்லிக் கேட்டேன். எப்போதும் போலவே என்னை ஆர்வத்துடனும் அன்புடனும் வரவேற்று உபசரித்து நீண்ட நேரப்பேட்டி ஒன்றினையும் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். இப்பேட்டியில், 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை, மலேசியத் திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள், மலேசிய தமிழ் பத்திரிக்கைகள், மலேசியாவில் பெரியார் ஏற்படுத்திய திராவிடர் கழகத் தாக்கத்தால் விளைந்த தமிழ் முயற்சிகள், தமிழர் திருநாளும் திரு.கோ.சாரங்கபாணியும், இசை ஆர்வம், தன் சகோதரர் ரெ.சண்முகம், மலேசியாவில் இந்தியர்களுக்கான என்ற அடையாளம், மலேசிய இலக்கிய முயற்சிகள், இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள், மலேசியாவில் வெளிவந்த முன்னோடி நாவல் படைப்புக்களான பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை, மலேசியாவில் ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்களின் நிலை, மலேசியாவில் தற்காலத் தமிழர்களின் நிலை, மலேசியத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி, மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் எனப் பல கோணங்களில் தனது அனுபவக் கருத்துக்களைப் பதிந்திருக்கின்றார். 

அந்தப்பேட்டியை மலேசியத் தமிழர்களின் வரலாற்றை மிகுந்த யதார்த்தத்துடன் கூறும் மிகச் சிறந்த ஆவணமாகக் கருதுகிறேன். அப்பேட்டியை ஏற்பாடு செய்து அதனை நான் பதிந்து தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக வெளியிட்டமைக்காகவும் பெருமை கொள்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று ஆவணச் சேகரிப்புக்களில் இது தனிச்சிறப்பு பெற்றிருக்கும் ஒரு பதிவு இது எனக்கூறுவது மிகையன்று. 

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கோலாலம்பூரில் கணியாழிக்கு பொன்விழா எடுக்க ஏற்பாடு செய்த போது பொன்விழா மலரில் டாக்டர்.ரெ.கா அவர்களின் எழுத்தும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என ஆசைப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு நான் கேட்டுக் கொண்டபோது அவரது உடல் நிலையை ஒரு காரணமாககூறாமல் விரைந்து ஒரு படைப்பாக்கத்தை எனக்கு அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகத் தனது உடல் நிலையை அவர் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இயங்கினார் என்பதை அந்த ஒரு உதாரணமே சான்று சொல்லும். 

நான் ஜெர்மனிக்கு உயர்கல்வியைத் தொடரச் சென்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவிற்கு விடுமுறைக்குத் திரும்பும் போது ஏதாவது ஒரு நிகழ்வில் டாக்டர்.ரெ.கா அவர்களை நான் சந்திப்பதுண்டு. அது அனேகமாகத் தமிழ் மொழி தொடர்பான கருத்தரங்கமாக இருக்கும். என்னை அவர் வாழ்த்திப் பாராட்டி ஊக்கம் கொடுக்கும் சொற்களைக் கூறி மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 

விடுமுறையில் நான் மலேசியா செல்லும் போது அவரது நாவல்கள், நூற்கள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால் தவறாது எனக்கு ஒரு நூலை வழங்கி விடுவார். அதோடு நிற்காது நூலுக்கு ஒரு விமர்சனம் தருமாறும் அன்புக்கட்டளையிட்டுவிடுவார். அந்த வகையில் அவரது நாவல்களான சூதாட்டம் ஆடும் காலம், காதலினால் அல்ல, இன்னொரு தடவை, அந்திம காலம் ஆகியனவற்றை வாசித்து நூல் விமர்சனமும் அவருக்கு வழங்கியிருந்தேன். தொலைப்பேசியில் உரையாடும் போது அவரது படைப்புக்களில் உள்ள மையக் கருத்துக்கள், கதாமாந்தர்களின் தன்னியல்புகள், கதைக்களம் என என் மனதில் பதிந்த விசயங்களைப் பற்றிச் சொல்வேன். ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வார். 

மலேசியாவில் இலக்கியப்படைப்புக்களின் தரம் பற்றிய அவரது அவதானம் கூர்மையானது. உள்ளூர் படைப்புக்கள், அவை மண்வாசனையோடு இருக்கின்றனவா என்பதைப் பற்றிய அக்கறை கொண்டவர் அவர். ஆக்கப்பூர்வமான விமர்சனக் கருத்துக்களைத் தயங்காது உரக்கச் சொல்லக்கூடியவர். பல்வேறு இலக்கியப்படைப்புக்களுக்குத் தான் எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து விமர்சன முகம் என்ற தலைப்பில் ஒரு நூலினையும் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் அவர் விமர்சனம் என்பதைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார். " ... அடுத்தவர்களின் படைப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் போது இப்படி விமர்சனம் செய்வது ஒரு கட்டாயமாகவே ஆகிவிடுகின்றது. அதிலும் சிறந்த படைப்புக்களின் நுணுக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்வதென்பது ஒரு தீவிரமான அறிவுப்பயணம் ஆகிவிடுகின்றது. படைப்பின் பரிமாணங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து புரிந்து கொள்ளும் போது என் மனமும் அறிவும் விரிவடைவதையும் நான் காண்கின்றேன். ஆகவே விமர்சனம் என்பது பயனுள்ள ஒரு செயல் என்றே தெரிகின்றது" எனக் குறிப்பிடுகின்றார். 

நான் இறுதியாக தொலைப்பேசியில் உரையாடி ஏறக்குறை நான்கு மாதங்கள் இருக்கலாம். உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தாலும் அவரது தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பதை என்றும் மாற்றம் பெறாத அவரது குரலின் வழி கேட்டு நான் உணர்ந்தேன். அந்த உரையாடலின் போது தாம் ஒரு நூலினை எழுதிக்கொண்டிருப்பதைப் பற்றி சில விபரங்கள் குறிப்பிட்டார். எப்போதும் போல தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசி மகிழ்வதோடு மறைந்த எனது தாயார் ஜனகா பற்றியும் பேசாமல் எங்களது உரையாடல் இருந்ததில்லை. இறுதியாக நான் டாக்டர்.ரெ.கா அவர்களைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் மரபு அறக்கட்டளையும் தமிழ் மலர் நாளேடும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கணையாழி பொன்விழா நிகழ்வில் சந்தித்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வு என்பதற்காகவே எமது அழைப்பை ஏற்றுக் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று வந்து, கலந்து கொண்டுசிறப்பித்தார். அன்று அந்த நிகழ்வில் அவரைப்பார்த்துப் பேசிய நினைவுகள் பசுமை குறையாமல் இருக்கின்றன. 

ஒரு பேட்டியில் டாக்டர்.ரெ.கா அவர்களை ஒரு நிருபர் கேட்கின்றார். "தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் எதிர்கால இலக்கு என்ன ?", என்று. அதற்கு அவரது பதில் , "தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதுதான்." இலக்கியம் படைக்க வேண்டும் . அதிலும் மலேசிய மண்வாசனை நிறைந்த படைப்பாகதமது படைப்பு இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடித்தவர். 

டாக்டர்.ரெ.காவிடம் நான் செய்த "20ம் நூற்றாண்டு ஆரம்பக் கால மலாயா செய்திகள்" எனும் விழியப் பேட்டியினை 2015ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறந்த வெளியீடுகளில் ஒன்று எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் சிகரமாக விளங்கியவர் இவர். இவரது புகழ் மலேசிய தமிழர் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாதது!